Home Blog Page 105

தேச விரோத, ஹிந்து விரோத மாநாட்டுக்குத் துணை போன திமுக., அரசு: இந்து முன்னணி கண்டனம்!

hindumunnani
hindumunnani

தேசவிரோத மற்றும் இந்து விரோத கம்யூனிஸ்ட் (மார்க்ஸிஸ்ட்) மாநாடுக்குத் துணைபோன திமுக அரசை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது என, இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அவரது அறிக்கையில்,

கடந்த 02/04/2025 முதல் 06/04/2025 வரை மதுரையில் கம்யூனிஸ்ட் (மார்க்ஸிஸ்ட்) கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு நடைபெற்றது. அதில் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

தொழிலாளர்களுக்கான கட்சி என்று அடையாளப்படுத்தி கொள்ளும் கம்யூனிஸ்ட்கள் அந்த மாநாட்டில் தொழிலாளர்கள் பற்றி எதையும் பேசவில்லை.

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வியாபாரிகள் முதல் கடைநிலை கூலித் தொழிலாளர்கள் வரை தாக்குதலுக்குள்ளவது பற்றி பேசவில்லை. கேரள மாநிலத்தில் தொடர்ந்து பெருகிவரும் பயங்கரவாதம் , போதை கலாச்சாரம்பற்றி பேசவில்லை.

ஆனால் பேசியது அனைத்தும் இந்து விரோத மற்றும் தேச விரோத கருத்துக்கள் மட்டுமே.

மாநாட்டில் ஏராளமான தட்டிகள் வைத்து கம்யூனிஸ்ட்கள் சுயதம்பட்டம் அடித்துக்கொண்டனர். அதில் குறிப்பாக கீழ் வெண்மணி படுகொலை குறித்தும், மதுரை கவுன்ஸிலர் லீலாவதி கொலை குறித்தும் தட்டிகள் வைத்திருந்தனர்.

ஆனால் கீழ் வெண்மணி படுகொலையில் சம்பந்தபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்காமல் நீர்த்து போகச்செய்தது, அப்போதைய முதல்வர் கருணாநிதி அவர்கள் என்பதை கம்யூனிஸ்ட்கள் துளியும் வெளி காட்டவில்லை.

அதே போல கவுன்ஸிலர் லீலாவதி கொலை செய்யப்பட்டதற்குக் காரணம் அப்போதைய ஆளுங்கட்சியான திமுகவினர் என்பதையும் மறைத்தார்கள்.

தற்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களை சிறப்பு விருந்தினராக அழைத்து மேடையேற்றியதில் இருந்தே கம்யூனிஸ்ட்கள் எந்தளவுக்கு உண்மைகளை மூடி மறைக்க துணை போகிறார்கள் என்பதை அறிய முடிகிறது.

கீழடி, சிந்துசமவெளி நாகரிகத்தை RSS சொந்தம் கொண்டாடுகிறது என்று பேசியுள்ளனர். கீழடியும், சிந்து சமவெளியும் இந்த தேசத்தின் தொன்மையை,இந்து சமய கலாச்சாரத்தை பிரதிபலிப்பவை.

ஆனால் கம்யூனிஸ்ட்களின் கொள்கையே இறக்குமதி செய்யபட்டதுதான். அவ்வளவு ஏன் இந்திய கம்யூனிஸ கட்சியே ரஷ்யாவின் தாஷ்கண்டில்தான் துவக்கப்பட்டது. அந்த வகையில் இறக்குமதி கொள்கை, இறக்குமதி கட்சிகாரர்கள் இந்த தேசத்துக்கு சம்பந்தமில்லாத ஓட்டுண்ணியாக இருக்கும் நிலையில் கலாச்சார அபகரிப்பு நடத்துகிறார்கள் என்று பேசுவது நகைப்புக்குரியதாக உள்ளது.

கனடா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகளில் இந்து கோயில்களும் இந்துக்களும் தாக்கப்பட்டபோது வாய்மூடி மவுனமாக இருந்த கம்யூனிஸ்ட்கள். தற்போது மதுரையில் மாநாடு நடத்தி பாலஸ்தீனியர்களுக்காக கண்ணீர் வடித்துள்ளார்கள்,

அதே சமயத்தில் சமீபத்தில் நடந்த பங்களாதேஷ் உள்நாட்டு கலவரத்தில் அந்நாட்டு சிறுபான்மையினரான இந்துகள் தாக்கபட்டதையும் , அவர்களின் சொத்துகள் சூறையாடப்பட்டதைப் பற்றியும் அப்போதும் சரி இப்போதும் சரி பாதிக்கபட்ட இந்துகளுக்கு குரல் கொடுக்க முன்வரவில்லை.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இந்துகள் பாதிக்கப்படும்போது மவுனமாக இருந்தவர்கள் மதுரையில் மாநாடு நடத்தி பாலஸ்தீனத்துக்கும் , ரஷ்யாவுக்குமாக ஒப்பாரி வைத்துள்ளார்கள்.

மாநாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியின் பாலகிருஷ்ணன் பேசும்போது கார்ப்பரேட்களுக்கு எதிராகவும் ஆதிக்கவாதத்துக்கு எதிராகவும் தொடர்ந்து போரிடுவோம் என்று அறைகூவல் விடுத்துள்ளார. ஆனால் ஆளும் திமுகவிடம் நிதி பெற்று , கட்சி அலுவலகம் கட்டி அதில் கார்ப்பரேட்களுக்கு வாடகைக்கு விட்டு வயிறு வளர்க்கிறார்கள்.

அந்த வகையில் கம்யூனிஸ சித்தாந்தத்தை குழிதோண்டி புதைத்துவிட்டு திமுக, திராவிடர் கழகத்தின் ஊதுகுழல் போல இந்து விரோதம் தேசிய விரோதம் பேசி மாநாட்டை நடத்தியுள்ளது கம்யூனிஸ்ட் கட்சி. இத்தகைய செயலுக்கு திமுக அரசு துணைபோனதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது – என குறிப்பிட்டுள்ளார்.

IPL 2024: அதிரடி காட்டிய சாய் சுதர்ஷன்

ipl 2025 games - 2026

ஐ.பி.எல் 2025 – ராஜஸ்தான் vs குஜராத் – 09.04.2025

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

குஜராத் ஜெயண்ட்ஸ் அணி (217/6, சாய் சுதர்ஷன் 82, ஜாஸ் பட்லர் 36, எம். ஷாருக் கான் 36, ராகுல் தெவாத்தியா 24, துஷார் தேஷ்பாண்டே 2/53, மஹீஷ் தீக்ஷணா 2/54, ஆர்ச்சர், சந்தீப் ஷர்மா தலா ஒரு விக்கட்) ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை (19.2 ஓவர்களில் 159, சஞ்சு சாம்சன் 41, ஷிம்ரன் ஹெட்மயர் 52, ரியான் பராக் 26, பிரசித் கிருஷ்ணா 3/24, ரஷீத் கான் 2/37, சாய் கிஷோர் 2/20, முகம்மது சிராஜ், அர்ஷத் கான், குல்வந்த் கிகிஜோரிலியா தலா ஒரு விக்கட்) 58 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் முதலில் மட்டையாட வந்த குஜராத் அணியின் அணித்தலைவர் ஷுப்மன் கில் ( 2 ரன்) மூன்றாவது ஓவரில் ஆட்டமிழந்துவிட்டர். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான, தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்ஷன் (53 பந்துகளில் 82 ரன், 8 ஃபோர், 3 சிக்சர்) சிறப்பாக ஆடினார். அவருடன் இணைந்து ஜாஸ் பட்லர் (25 பந்துகளில் 36 ரன்) மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த மற்றொரு வீரரான ஷாருக் கான் (20 பந்துகளில் 36 ரன்) இருவரும் சிறப்பாக ஆடினர். ரூதர்ஃபோர்டு (7 ரன்) இன்று சரியாக ஆடவில்லை. ராகுல் திவாத்தியா (12 பந்துகளில் 24 ரன்) மற்றும் ரஷீத் கான் (4 பந்துகளில் 12 ரன்) இருவரும் இறுதிக்கட்டத்தில் அதிரடியாக ரன் சேத்தனர். 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 6 விக்கட் இழப்பிற்கு 217 ரன் எடுத்தது.

          218 ரன் என்ற கடினமான இலக்கை எதிர்கொண்ட ராஜஸ்தான் அணியின் தொடக்க வீர யசஷ்வீ ஜெய்ஸ்வால் (6 ரன்) இரண்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார். அவரை அடுத்து மூன்றாவது ஓவரில் நிதீஷ் ராணா (1 ரன்) ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான சஞ்சு சாம்சன் (28 பந்துகளில் 41 ரன்) ரியன் பராக் (14 பந்துகளில் 26) உடன் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

அதற்குப் பின்னால் வந்த ஷிம்ரோன் ஹெட்மயர் (32 பந்துகளில் 52 ரன்) மட்டும் பொறுப்புடன் ஆடினார். பிற வீரர்களான துருவ் ஜுரல் (5 ரன்), சுபம் துபே (1 ரன்), ஆர்ச்சர் (4 ரன்), மஹீஷ் தீக்ஷணா (5 ரன்), துஷார் தேஷ்பாண்டே (3 ரன்) சந்தீப் ஷர்மா (ஆட்டமிழக்காமல் 6 ரன்) ஆகியோர் சின்று சரிவர ஆடவில்லை.

அதனால் ராஜஸ்தான் அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 58 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

          குஜராத் அணியின் மட்டையாளர் சாய் சுதர்ஷன் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

குமரி அனந்தன் என்ற தேசபக்தர்!

senkottai sriram in gandhi study centre - 2026

20 வருடம் முன்னர் கலந்து கொண்ட நிகழ்ச்சி இது. ஆனால் மறக்க முடியாத நிகழ்ச்சி..!

காந்தி ஸ்டடீ செண்டர் நடத்தி வந்த நண்பர் அண்ணாமலையின் அழைப்பின் பேரில் அங்கே ஒரு நிகழ்ச்சியில் பேசுவதற்காகச் சென்றிருந்தேன். (சென்னை, தி.நகர், வெங்கடநாராயணா சாலை, தக்கர் பாபா வித்யாலயாவில்)

எனது பேச்சில் ஒரு விஷயத்தை கொஞ்சம் சுவாரஸ்யமாகச் சொன்னேன். அடியேன் வைணவன். எங்களுக்கு திருமால் உறையும் 108 திருத்தலங்கள் மிக முக்கியம். அவற்றை திவ்ய தேசங்கள் என்று சொல்லி நாங்கள் வழிபடுவதுண்டு. ஒரு முறையேனும் அந்தத் தலங்களுக்குச் சென்று அந்தத் தலத்தின் பெருமானை வணங்கி வழிபடுவது வாழ்நாள் பயனெனக் கொள்வோம்.

இப்போது இங்கே இருக்கும் நாம் அனைவரும் தேசபக்தர்கள். தேசபக்தர்களாயிருக்கையினாலே தான் இந்த நிகழ்ச்சிக்குக் கூடியிருக்கிறோம். நமக்கும் திவ்யதேசங்கள் உண்டு. எங்கள் ஊர் செங்கோட்டை தேசபக்தர்களாகிய நமக்கு ஒரு திவ்யதேசம். அங்கேதான் நூறாண்டுகளுக்கு முன் பாரதமாதா சங்கம் அமைத்து தேசபக்த இளைய திலகங்கள் தங்கள் ரத்தத் திலகங்களால் உறுதி எடுத்தார்கள். அவர்கள் காலடி பட்ட மண் நமக்கு திவ்யதேச மண் – என்ற ரீதியில் நெல்லை மண்ணின் சுதந்திர எழுச்சியை தொட்டுக்காட்டி சொல்லிக் கொண்டிருந்தேன்.

முதல் வரிசையில் கீழே அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த அந்தப் பெரியவரின் கண்களில் நீர் பெருகி ஓடியது. அதை நான் மேடையில் பேசிக் கொண்டிருந்த படியே கவனித்தேன். தன் கண்களை அடிக்கடி துடைத்து தன் மெய்சிலிர்ப்பை வெளிப்படுத்தினார்!

பேசி முடித்து கீழே இறங்கிய எனக்கு வணக்கமிட்டார்… கை கொடுத்தார்… ஆரத் தழுவிக் கொண்டார். இப்போது தான் நான் தேசபக்தர்களின் திவ்யதேசம் என்ற வார்த்தையைக் காதில் கேட்கிறேன்… என்றார் நாத் தழுதழுக்க!

அந்தப் பெரியவர் – குமரி அனந்தன்.

பலமுறை செங்கோட்டைக்கு வந்திருக்கிறார். வாஞ்சிநாதன் குறித்த நிகழ்ச்சிகளில் பங்கெடுத்திருக்கிறார். வாஞ்சி மணியாச்சி என்ற ரயில் நிலையம் பெயர் வருவதற்குக் காரணம் குமரி அனந்தனே! அன்னார் ஏப்.8 செவ்வாய் அன்று காலமாகிவிட்டார். அவருடைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு, அவர் செய்த பணிகளைப் போற்றுகிறோம்!

குமரி அனந்தன் மறைவுக்கு இந்து முன்னணி இரங்கல்!

kumari ananthan - 2026

மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் மறைவுக்கு இந்து முன்னணி இரங்கல் தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கையில்,

தேசியவாதி திரு. குமரி அனந்தன் அவர்களின் மறைவிற்கு இந்து முன்னணி சார்பில் இரங்கல் தெரிவிக்கிறோம். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திரு. குமரி அனந்தன் அவர்கள் இளைஞராக இருந்தபோது கர்மவீரர் காமராஜர் அவர்களின் தொண்டராக தேசியத்தை வளர்க்க பெரும் தொண்டாற்றியவர். இந்து முன்னணி நிறுவனர் வீரத் துறவி ராமகோபாலன் அவர்களோடு நெருங்கிய நட்புடன் இருந்தவர்.

தியாகி சுப்பிரமணிய சிவாவின் பாரதமாதா கோவில் அமைக்கப்பட வேண்டும் என்று பாதயாத்திரை நடத்தியவர். அதற்காக இந்து முன்னணி நிறுவனர் வீரத்துறவி இராம. கோபாலன் அவர்களோடு இணைந்து பெரு முயற்சி எடுத்தவர்.

அரசியலுக்கு அப்பாற்பட்டு இளைஞர்களிடம் தேசிய சிந்தனை ஏற்படுத்த செயல்பட்டவர். திரு. குமரி அனந்தன் அவர்களின் மறைவிற்கு இந்து முன்னணி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

அவரது பிரிவால் வாடும் அவரது மகளும் பாஜக மூத்த தலைவருமான டாக்டர் திருமதி தமிழிசை சௌந்தராஜன் உட்பட அன்னாரது குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறோம். திரு. குமரி அனந்தன் அவர்களின் ஆன்மா நற்கதி அடைய பிரார்த்திக்கிறோம். – என்று குறிப்பிட்டுள்ளார்.

எல்.முருகன் இரங்கல்

தமிழ் மொழியில் சிறந்த இலக்கியவாதியாகவும், காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவராகவும் பொறுப்புகள் வகித்த அய்யா குமரி அனந்தன் அவர்கள் காலமானார் என்ற செய்தி மிகுந்த மன வருத்தமளிக்கிறது.

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரும், தெலுங்கானா மாநில முன்னாள் ஆளுநருமான திருமதி. தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களது தந்தையான ஐயா திரு.குமரி அனந்தன் அவர்கள், பெருந்தலைவர் காமராசர் அவர்களுடன் இணைந்து பணியாற்றிய பெருமைக்குரியவர். மேலும், தமிழ் மொழியின் மீது மட்டற்ற பற்று கொண்டிருந்தமையால், தமிழக அரசின் ‘தகைசால் தமிழர் விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இன்று அவர் மறைந்த இந்த துயரமான சமயத்தில், முன்னாள் ஆளுநர் திருமதி.தமிழிசை செளந்தரராஜன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தார் மற்றும் உறவினர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி.. – என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குறிப்பிட்டுள்ளார்.

விஜய் வசந்த் இரங்கல்

அரசியலிலும், இலக்கியத்திலும் செல்வராக திகழ்ந்த காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவரும், தமிழுக்கும் தமிழ் இனத்திற்கும் சேவைகள் பல செய்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் எனது பெரியப்பாவுமான திரு. குமரி அனந்தன் அவர்கள் மறைவு குறித்த செய்தி அறிந்து வேதனையால் வருந்துகிறேன். பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் உண்மை தொண்டனாக உழைத்து, எனக்கும் எனது தந்தைக்கும் அரசியல் வழிகாட்டியாக திகழ்ந்து, காங்கிரஸ் பேரியக்கத்தின் பல தலைவர்களை உருவாக்கிய பெருமை அவரை சேரும். இறுதி மூச்சு வரை தமிழ், காங்கிரஸ் என்று வாழ்ந்து மறைந்த அன்னாரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்… – என்று, குமரி அனந்தனின் சகோதரர் அமரர் வசந்தின் மகனும் எம்.பி.யுமான விஜய் வசந்த் குறிப்பிட்டுள்ளார்.

‘நீட்’ நாடகம்: இனியாவது மாணவர்களை நிம்மதியா படிக்க விடுங்க முதல் அமைச்சரே!

annamalai in trichy meeting - 2026

போதும் முதலமைச்சர் அவர்களே! நீட் எதிர்ப்பு என்ற பெயரில், நீங்கள் ஆடும் சுயநல நாடகம். எனவே, இனியாவது உங்கள் நாடகங்களை நிறுத்தி விட்டு, தமிழக மாணவர்களை நிம்மதியாகப் படிக்க விடுங்கள் என்று மனம் நொந்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார் பாஜக., மாநிலத் தலைவர் கு.அண்ணாமலை. அவர் வெளியிட்ட அறிக்கை:

நீட் தேர்வு வந்த பிறகே, தமிழகத்தில் சாமானிய குடும்பப் பின்னணி கொண்ட மாணவர்களும், அரசுப் பள்ளி மாணவர்களும், மருத்துவக் கல்வி படிக்கும் வாய்ப்பு பெற்றிருக்கிறார்கள். ஆனால், தங்கள் கட்சிக்காரர்கள் நடத்தும் மருத்துவக் கல்லூரிகளின் வருமானத்துக்காக, நீட் தேர்வை எதிர்த்துக் கொண்டிருக்கிறது திமுக.

திமுகவின் முன்னாள் அமைச்சர் திரு. ஆற்காடு வீராசாமி, தாங்கள் நடத்தும் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் எப்படி பணம் விளையாடுகிறது என்று வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டிருக்கிறார்.

ஆனால், இன்னும் நீட் எதிர்ப்பு என்று பல நாடகங்கள் நடத்தி, பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் திரு. ஸ்டாலின். அப்படி ஒரு நாடகமான இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், தமிழக பாஜக பங்கேற்கவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஏற்கனவே நீட் தேர்வு தொடர்பாக, தமிழக மக்கள் சார்பில், தமிழக பாஜக கேட்டிருந்த பல கேள்விகளுக்கு, திமுக அரசு இதுவரை பதிலளிக்கவில்லை. அந்தக் கேள்விகளை மீண்டும் இன்று முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள் முன்வைக்க விரும்புகிறேன்.

நீட் தேர்வை நாடு முழுவதும் அமல்படுத்தியது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. நீட் தேர்வு வேண்டாம் என்று திமுக அரசுக்கு எண்ணம் இருக்குமேயானால், நீங்கள் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றிருக்க வேண்டும்.

டாஸ்மாக் ஊழல் விசாரணைக்குத் தடை கேட்டும், கள்ளச்சாராய மரணம் குறித்த விசாரணையைத் தடுக்கவும் நீதிமன்றம் செல்லும் உங்கள் அரசு, ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளில், நீட் தேர்வுக்காக நீதிமன்றம் செல்லாமல், தீர்மானம், அனைத்துக் கட்சிக் கூட்டம் என்று ஏன் நாடகமாடுகிறீர்கள்? நீட் தேர்வு குறித்து திமுக கூறுவது உண்மை நிலவரத்துக்கு நேர்மாறாக இருக்கிறது.

நீட் தேர்வுக்கு எதிராக வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கான எந்த ஆதாரங்களையும் இதுவரை முன்வைத்திருக்கிறீர்கள்? நீட் தேர்வு வந்த பிறகே, மருத்துவக் கல்வி பயிலும் அரசுப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

நீட் தேர்வினால், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாதிப்பு என்று பொய் சொல்லும் முதலமைச்சர் திரு. ஸ்டாலின், தமிழகத்தில், நீட் தேர்வு இல்லாத, 2007 – 2016 காலகட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக, 38 அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டுமே, மருத்துவக் கல்வி பெறும் வாய்ப்பு பெற்றனர் என்ற உண்மையை மறைப்பது ஏன்?

அறிவாலயத்தில் இருந்து தயார் செய்து கொடுத்த முன்னாள் நீதிபதி திரு. ஏ.கே.ராஜன் கமிட்டி அறிக்கையில், நீட் தேர்வுக்கு முன்பாக, கடந்த 2010 – 2014 ஆண்டுகளில், மருத்துவக் கல்வியில் சேர்ந்த தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை என்ன என்பதை ஏன் குறிப்பிடவில்லை?

நீட் தேர்வில், தமிழக மாணவர்கள் தேர்ச்சி, ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. கடந்த 2024 நீட் தேர்வில், தமிழக மாணவர்கள் 8 பேர், தேசிய அளவில் முதலிடம் பிடித்தார்கள். தமிழகத் தேர்ச்சி விகிதம், தேசிய சராசரியை விட அதிகம் என்பது முதலமைச்சருக்குத் தெரியாதா?

யாரை ஏமாற்ற இன்னும் நீட் பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கிறார்? ஒவ்வொரு மாவட்டம் தோறும் ஒரு மருத்துவக் கல்லூரி என்ற நோக்கத்தோடு, நமது பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த பத்து ஆண்டுகளில், தமிழகத்தில் 14 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

மருத்துவக் கல்வி இடங்கள், கடந்த பத்து ஆண்டுகளில் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் மேலும் பல மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஆனால், அரசு மருத்துவக் கல்லூரிகளின் தரத்தைப் பராமரிக்காமல், புகழ்பெற்ற ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி உட்பட மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து என்ற நிலைக்குக் கொண்டு சென்றதோடு, புதிய மருத்துவக் கல்லூரிகளுக்குக் குறித்த காலத்தில் விண்ணப்பிக்காமல் அலட்சியமாக இருந்தது திமுக அரசு.

திமுகவினர் நடத்தும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் வருமானத்துக்காக, தமிழக மாணவர்கள் எதிர்காலத்தைக் குழி தோண்டிப் புதைக்க முயற்சி செய்கிறது திமுக என்பதை, முதலமைச்சரால் மறுக்க முடியுமா?

நீட் தேர்வு மட்டுமல்ல, எந்தத் தேர்வானாலும் நமது மாணவர்கள் சாதனை படைக்கும் திறமை வாய்ந்தவர்கள். ஆண்டுதோறும் நீட் தேர்ச்சி விகிதமே இதற்கு சாட்சி.

போதும் முதலமைச்சர் அவர்களே நீட் எதிர்ப்பு என்ற பெயரில், நீங்கள் ஆடும் சுயநல நாடகம். எனவே, இனியாவது உங்கள் நாடகங்களை நிறுத்தி விட்டு, தமிழக மாணவர்களை நிம்மதியாகப் படிக்க விடுங்கள்.

பல்கலைக்கழக வேந்தர் மசோதா விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு தவறானது; மிக ஆபத்தானது!

supreme court of india - 2026

பல்கலைக்கழக வேந்தர் மசோதா விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு தவறானது; மிக ஆபத்தானது.!

நீதிமன்றங்களின் எல்லையை மீறி வழங்கப்பட்ட தீர்ப்பு.!

நேற்று வெளியிட்ட காணொளியின் முக்கிய சாராம்சங்கள்:

தமிழ்நாடு அரசு சார்பாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட பல்வேறு மசோதாக்களுக்கு ஆளுநர் அவர்கள் ஒப்புதல் வழங்காத காரணத்தினால், அவற்றிற்கெல்லாம் ஒப்புதல் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பாக ஒரு வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த பத்து மசோதாக்களில் தமிழ்நாடு மாநிலத்தில் இருக்கக்கூடிய பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக இருக்கக்கூடிய ஆளுநர்களை நீக்கி தமிழ்நாடு முதலமைச்சர் வேந்தர்களாக இருப்பார்கள் என்பதுதான் பெரும்பாலான மசோதாக்களாக இருக்கின்றன.

தமிழகத்தில் இருக்கக்கூடிய பிற துறைகள் அனைத்தும் தமிழக அரசின் கீழ் வந்து விடுகிறது. ஒன்றே ஒன்று பல்கலைக்கழகங்கள் மட்டும் ஆளுநர் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது. இப்பொழுது ஆளுநர்களை முற்றாக நீக்கி விட்டு அவர்களுடைய அதிகாரத்தை எடுத்து, அதிலிருந்து நீக்கிவிட்டால் ஆளுநர்கள் தற்போது வெறும் பொம்மை அளவிற்கு செயல்படும் நிலை ஏற்படும். தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கும், ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட சென்னை பல்கலைக்கழகங்களுக்கும் ஒரே விதமான சட்டம் எப்படிப் பொருந்தும்? இது போன்ற சிக்கல்களை உச்ச நீதிமன்றம் கணக்கில் கொள்ளவில்லை.

பல மசோதாக்களுக்கு கால தாமதம் ஆகிறது என்பது உண்மைதான். காலதாமதத்தை ஆளுநர்கள் தவிர்க்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால், மாநில அரசால் நிறைவேற்றக்கூடிய அனைத்து விதமான மசோதாக்களுக்கும் ஆளுநர் கண்டிப்பாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதைப் போன்ற ஓர் உத்தரவை உச்சநீதிமன்றம் விதித்திருப்பது சரியானது அல்ல; மிகவும் விசித்திரமானது.

இந்தியா என்ற ஒரு நாடு. இந்தியத் தேசத்தை முன்னிறுத்தித் தான் இந்திய அரசியல் சாசனம் இருக்கிறது. இந்தியத் தேசத்தை நிர்வகிப்பதற்காகத்தான் மாநில அரசுகள் உருவாக்கப்பட்டன. மாநிலங்களால் இந்திய அரசு உருவாக்கப்படவில்லை. அதைப் புரியாமல் தான் பலர் தமிழகத்தில் பேசி வருகிறார்கள். அதாவது மாநிலத்தில் இருக்கக்கூடிய ஆட்சியாளர்கள் தாங்கள் நிறைவேற்றக்கூடிய தீர்மானங்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் கொடுக்க மறுக்கிறார் என்பதற்காக பல மாநில அரசுகள் இத்தீர்ப்பை வரவேற்கலாம். ஆனால், எதார்த்தத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வழங்கி இருக்கக் கூடிய தீர்ப்பு சட்டத்திற்கு உட்பட்டதாகத் தெரியவில்லை. இந்திய அரசியல் சாசனத்தின் அனைத்து அதிகாரங்களையும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கையில் எடுத்திருப்பதாகத் தெரிகிறது. இது சரியானதாகத் தெரியவில்லை. இந்திய அரசியல் சாசனத்திற்கு ஆபத்தாக முடியும்.

ஒவ்வொரு மாநிலத்திலும் ஆட்சியில் இருக்கக் கூடியவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப தீர்மானங்களை நிறைவேற்றி ஆளுநரைக் கையெழுத்திட வலியுறுத்துவார்கள் அல்லது சட்டம் தானாக அமலுக்கு வந்ததாகக் கருதப்படும். ஆளுநர் ஒப்புதல் தரவில்லையென்றால் இரண்டு நீதிபதிகள் அமர்ந்து கொண்டு அதற்கு நாங்கள் ஒப்புதல் தருகிறோம் என்று கூறுவது தவறான நடைமுறை.

இன்று வழங்கி இருக்கக்கூடிய தீர்ப்பு அப்படியே அமலுக்கு வரும் என்று கருதவில்லை. மத்திய அரசு உடனடியாக மேல்முறையீட்டுக்குச் செல்லும். மூன்று அல்லது ஐந்து நீதிபதிகள் சேர்ந்து அரசியல் சாசனத்தின் படி ஆளுநருக்கான அதிகாரங்களை மறுவரையறை செய்வார்கள். அதற்கான ஏற்பாடுகளை செய்தபின் தான் இது அமலுக்கு வரும். இது மிக மிக ஆபத்தான போக்கு. ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றால் அவைகள் எல்லாம் எந்தத் தேதியிலிருந்து அனுப்பப்பட்டதோ அந்தத் தேதியிலிருந்து அதை அமலுக்கு வரும் என்பதெல்லாம் மிக மிகத் தவறானது; நீதிமன்றங்கள் தங்களுடைய எல்லையைத் தாண்டி ஒரு தீர்ப்பைக் கொடுத்துள்ளது.

  • டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்க மறுத்த 10 மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. முன்னதாக டெல்லி ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த போது, புதிய சட்டம் இயற்றி மத்திய அரசு பாதுகாத்தது. அதேபோல் இப்போது செய்யுமா?

இந்தியாவின் தலைநகரான டெல்லி யூனியன் பிரதேசம் ஆகும். தற்போது பாஜக ஆட்சி நடந்து வருகிறது. ஆனால் கடந்த 2023ம் ஆண்டு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மியின் ஆட்சி நடந்தது. டெல்லியை பொறுத்தமட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமை பணிகள் அதிகாரிகள் நியமனம், கண்காணிப்பு அதிகாரம் மத்திய அரசின் பிரதிநிதியாக உள்ள துணை நிலை ஆளுநரிடம் இருந்து வந்தது.

இதனை எதிர்த்து ஆம் ஆத்மி சார்பில் உச்சநீதிமன்றத்தில் அப்போது வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் குடிமை பணி அதிகாரிகள் நியமனம், இடமாற்றம் தொடர்பான அதிகாரம் என்பது டெல்லி அரசுக்கு தான் உள்ளது. இதில் ஆளுநர் மூலம் மத்திய அரசு தலையிட முடியாது என கடந்த 2023ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பின் காரணமாக டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமன அதிகாரம் மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசுக்கு கிடைத்தது. இதற்கிடையே தான் டெல்லி உச்சநீதிமன்ற தீர்ப்பை நீர்த்து போகும் வகையில் மத்திய அரசு அவசர சட்ட திருத்தம் அப்போது உடனடியாக கொண்டு வந்தது. இதற்கான மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் மத்திய அரசு டெல்லி அரசிடம் இருந்து அதிகாரத்தை ஆளுநர் மூலம் பறித்ததாக குற்றச்சாட்டுகளை ஆம் ஆத்மி அப்போது முன் வைத்தது.

இந்நிலையில் டெல்லியில் நடந்தது போலவே தமிழக ஆளுநர் விவகாரத்தில் மத்திய அரசு முடிவெடுக்குமா? அப்படியே மத்திய அரசு முடிவெடுக்க முடியுமா? ஆளுநர்களுக்கு போதிய அதிகாரங்களை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசால் சட்டத்தை நிறைவேற்ற முடியுமா என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளது. ஏனெனில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பு, மத்திய அரசுக்கும், தமிழக ஆளுநருக்கும் மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஆளுநர்கள் விவகாரத்தில் மிகப்பெரிய திருப்பு முனையாக பார்க்கப்படுகிறது.

தீர்ப்பு விவரம் என்ன: தமிழக அரசு அனுப்பிய 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவது தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பர்திவாலா மற்றும் மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று முக்கியமான தீர்ப்பளித்தது.

தீர்ப்பின் படி, அரசியலைமைப்பு சட்டப் பிரிவு 200-ன் கீழ், மசோதாக்கள் ஒப்புதலுக்காக மாநில ஆளுநருக்கு அனுப்பப்படும்போது அவருக்கு மூன்று வாய்ப்புகள் உள்ளன. ஒன்று அவர், ஒப்புதல் வழங்குவது, இரண்டாவது ஒப்புதலை நிறுத்தி வைப்பது மூன்றாவது குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்புவது ஆகியவை தான்.

அதேநேரம் அரசியல் அமைப்பின் பிரிவு 200-ன்படி, முதல் முறையாக சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு மசோதா அனுப்பப்படும்போது அந்த மசோதாவை நிறுத்தி வைக்க ஆளுநர் விரும்பினால், மசோதாவில் உள்ள அம்சங்களை மறுபரிசீலனை செய்ய அல்லது திருத்தங்களை மேற்கொள்ள பரிந்துரைக்கலாம். அவ்வாறு பரிந்துரைத்து மீண்டும் சட்டசபைக்கு திருப்பி அனுப்பி வைக்க வேண்டும். சட்டசபை மீண்டும் மசோதாவை நிறைவேற்றி ஆளுநரிடம் சமர்ப்பித்தால், ஆளுநர் அதன் பிறகு ஒப்புதலை நிறுத்தி வைக்க முடியாது. அவர் ஒப்புதலை வழங்கியதாக வேண்டும்.

அரசியலமைப்பில் ஆளுநருக்கு வீட்டோ (Veto) அதிகாரம் இல்லை.. மசோதாக்கள் மீது முடிவெடுப்பதில் தேவையற்ற தாமதம் ஏற்படக்கூடாது. இரண்டாவது முறையாக மசோதா அனுப்பப்படும் போது அதனை குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்கும் வாய்ப்பு ஆளுநருக்கு கிடையாது. ஆளுநர் தனது ஒப்புதலை வழங்க வேண்டும் என்பது சட்டத்தில் தெளிவாக இருக்கிறது.

எனவே குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக தமிழக ஆளுநர் 10 மசோதாக்களை நிறுத்திவைத்தது சட்டவிரோதமானது, சட்டப்படி தவறானது. எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கைகளும் சட்டவிரோதமானவை என்று இந்த உச்சநீதிமன்றம் கருதுகிறது. ஆளுநரின் ஒப்புதலுக்கான காலக்கெடு இல்லாத போதிலும், அவர் மசோதாக்களை காலவரையின்றி வைத்திருக்க முடியும் என்று அர்த்தமல்ல. அரசியலமைப்பில் நேரம் நிர்ணயிக்கப்படாத சந்தர்ப்பங்களில், முடிவு ஒரு நியாயமான காலத்திற்குள் எடுக்கப்பட வேண்டும் என்பதுதான் அர்த்தம் ஆகும்.

ஆளுநர் மசோதாக்களை நிறுத்தி வைக்க / ஒப்புதல் அளிக்க ஒன்று முதல் மூன்று மாதங்கள் வரை காலக்கெடுவை உச்ச நீதிமன்றம் நிர்ணயிக்கிறது பொது விதியாக, ஆளுநர் அமைச்சரவையின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும். மாநில அமைச்சரவையின் ஆலோசனைக்கு எதிராக குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு மசோதாக்கள் ஒதுக்கப்பட்டால், மூன்று மாதங்கள் . ஆளுநர்களால் மறு பரிசீலனைக்காக சமர்ப்பிக்கப்படும் மசோதாக்கள் விஷயத்தில், ஒரு மாதம். இவை அதிகபட்ச காலக்கெடு ஆகும். ஆளுநர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆளுநர்களின் அதிகாரம் என்ன என்பதும், ஆளுநர் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்தும் உச்ச நீதிமன்றம் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு என்பது மத்திய அரசுக்கும், தமிழக ஆளுநருக்கும் மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் பல்கலைக்கழகங்களின் வேந்தராக இனி முதல்வராவார்.

மாநில அரசுகள் தங்கள் வரம்பிற்கு உட்பட்ட சட்டங்களை எந்த தடையும் இன்றி இனி நிறைவேற்ற முடியும். ஆளுநர் மத்திய அரசின் விருப்பப்படி இனி செயல்படவே முடியாது. எந்த முடிவாக இருந்தாலும் மாநில அரசின் ஆலோசனைப்படியே செயல்பட்டாக வேண்டும். எனவே இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்யுமா அல்லது டெல்லி பாணியில் அவசர சட்டம் இயற்றுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

  • சமூகத் தளத்தில் …

அலங்காநல்லூர் – கோவிலூரில் உச்சி மாகாளியம்மன் உத்ஸவ விழா!

alankanallur uchimakaliamman temple utsav - 2026

அலங்காநல்லூர் அருகே கோவிலூரில் அருள்மிகு ஸ்ரீ உச்சி மாகாளியம்மன் உற்சவ விழா

மதுரைமாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் கோவிலூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ உச்சி மாகாளியம்மன் திருக்கோவில் பங்குனி மாத உற்சவ விழா வெகு சிறப்பாக நடந்தது முதல் நிகழ்ச்சியாக கம்பத்தடியான் கோவிலில் சிறப்பு பூஜையும் அன்னதானம் நடந்தது.

அதனைத் தொடர்ந்து அம்மன் புறப்பாடாகி பெரிய இலந்தைகுளம் சென்று கரகம் ஜோடிக்கு தீவட்டி பரிகாரங்களுடன் கோயில் வந்து சேர்ந்தது அதிகாலை மாவிளக்கு எடுத்தல் பொங்கல் வைத்தால் கிடா வெட்டுதல் அக்கினி சட்டி எடுத்தல் உருண்டு கொடுத்தல் போன்ற நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது.

மந்தை திடலில் 200 க்கும் மேற்பட்ட பெண் பொங்கல் வைத்து கோவில் முன்பாக வைத்து சிறப்பு அபிஷேகம் செய்து தங்களது வீட்டிற்கு எடுத்துச் சென்றனர் அன்று இரவு கலை நிகழ்ச்சி நடந்தது.

தொடர்ந்து பல்லயம்பிரித்து மஞ்சள் நீராடத்துடன் திருவிழா நிறைவு பெற்றது விழா ஏற்பாடுகளை கோவிலூர் கிராம பொதுமக்கள் மற்றும் கிராம மரியாதைக்காரர்கள் கிராம இளைஞர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை அலங்காநல்லூர் போலீசார் செய்திருந்தனர்.

சிந்தாமணி சின்ன அனுப்பானடி மகாகாளியம்மன் திருக்கோவில் பங்குனி உத்ஸவ பெருவிழா

சிந்தாமணி சின்ன அனுப்பானடி மகாகாளியம்மன் திருக்கோவில் பங்குனி உற்சவ பெருவிழா – பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பால்குடம் எடுத்தும் அலகு குத்தியும் தரிசனம்!

மதுரை மாவட்டம், சிந்தாமணி சின்ன அனுப்பானடி பகுதியில் அமைந்துள்ள மிகவும் புகழ்பெற்ற பழமையான ஸ்ரீ மகா காளியம்மன் திருக்கோவில் பங்குனி உற்சவ விழா கடந்த 1ந் தேதி கொடியேற்றத்துடன் பக்தர்கள் காப்பு கட்டுதல் நிகழ்வுடன் துவங்கியது.

அதனைத் தொடர்ந்து, திருக்கோவில் முன்பாக கும்மி பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் முக்கிய நிகழ்வான பால்குடம் எடுத்தும் அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி மிக விமர்சியாக சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில், சிந்தாமணி சின்ன அனுப்பாணடி பகுதியை சேர்ந்த சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் வைகை ஆற்றுக்கு சென்று பால்குடம் எடுத்தும் அலகு குத்தியும் ஊர்வலமாக பக்தி பரவசத்துடன் சாமியாடியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய பால் அம்மனுக்கு மனம் குளிர பாலபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, முளைப்பாரி ஊர்வலம் மஞ்சள் நீராட்டு விழா நிகழ்வு திருவிளக்கு பூஜை உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற உள்ளன. நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்களுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் சாஸ்தா அப்பளம் உரிமையாளர் மணிகண்டன் நீர் மோர் தண்ணீர் பழம் வழங்கினார். விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

திருவிளக்கு பூஜை

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், தாதகவுண்டன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீமுத்துக்கருப்பணசாமி, ஸ்ரீகன்னிமார்
சுவாமி பங்குனி திருவிழாவையொட்டி, திருவிளக்குபூஜை நடந்தது. அலங்காநல்லூர் தர்மசாஸ்தா கோவில் நிறுவனர் ஏ.எல்.சீனிவாசன் தலமையில் நடைபெற்றது. தொடர்ந்து, அன்னதானம் நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை, கிராம மரியாதைக்காரர்கள் கிராம விழா கமிட்டி நண்பர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கிராம இளைஞர்கள் செய்திருந்தனர்.

ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு; சில கருத்துகள்!

1794213 supremecourt - 2026

ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து சமூகத் தளங்களில் வெளியான சில கருத்துகள்!


கவர்னருக்கு எதிரான நேற்றைய தீர்ப்பு மத்திய அரசுக்கு Temporary Setback தான். சர்வ நிச்சயமாக இந்த விஷயத்தை மத்திய அரசும், காங்கிரசும் விடாது.

நீதி மன்றத் தீர்ப்பில் ஏற்றுக் கொள்ள இயலாத பகுதி இதுதான்.

1. நீதிபதிகளே பத்து மசோதாக்களையும் அவர்களே தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒப்புதல் அளித்ததுதான்.

காலக்கெடு நிர்ணயிக்கப்பட வேண்டுமா என்றால் நிச்சயம் காலக்கெடு அவசியம் என்று தான் நான் சொல்வேன். அதையும் நீதி மன்றம் Guide Line ஆக மட்டுமே கொடுக்கலாம்.

மற்றபடி காலக்கெடுவை தீர்மானிக்க வேண்டிய இடம் பாராளுமன்றம். காரணம் ஏற்கனவே அவருக்கான காலக்கெடு குறிப்பிடாமல் As soon as Possible என்று இருப்பதைக் கால வரையறையுடன் பாராளுமன்ற சட்டத் திருத்தம் மூலமாகவே மாற்ற வேண்டும். நீதிபதிக்கு அந்த வேலை கிடையாது என்பதே எனது கருத்து.

இட ஒதுக்கீடு விஷயத்தில் உச்ச நீதி மன்றத் தீர்ப்புகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்பதற்கு என்னால் இரு உதாரணங்களை மேற்கோள் காட்ட இயலும்.

இந்திரா ஷானி அளித்த பிற்படுத்தப் பட்டோருக்கான இட ஒதுக்கீடு தீர்ப்பில் மூன்று விஷயங்கள் சட்ட மன்றம், பாராளுமன்றம் மூலமாக நிராகரிக்கப்பட்டது. ஆனால் அப்போது அதை ஒரு Land mark Judgement என்றும், இனி இதைப் பின்பற்றியே இட ஒதுக்கீடு இருக்கும் என்று கொண்டாடித் தீர்த்தனர்.

ஆனால் நடந்தது என்ன?

1. ஷானி தீர்ப்பின் படி, 50% க்கும் மேலாக இட ஒதுக்கீடு இருக்கக் கூடாது. மீதி 50% பொது என்று அளித்தார்.

ஆனால் தமிழகம் 69% வழங்கி வருகிறது. தமிழக சட்டமன்றம் சட்டம் நிறைவேற்றி பாராளுமன்ற ஒப்புதலுடன் நடைமுறையில் உள்ளது. This case is challenged in court and SC is sleeping on this case.

2. ஷானி தீர்ப்பின் படி SC/ST இட ஒதுக்கீடு பதவி உயர்வில் வழங்கப்படக் கூடாது.

இதை மன்மோகன் அரசாங்கம் பதவி உயர்வு வழங்கும் வகையில் சட்டம் கொண்டு வந்தது.

3. ஷானி தீர்ப்பின் படி, இட ஒதுக்கீட்டில் பொருளாதாரம் ஒரு Consideration ஆக இருக்கக் கூடாது என்றது.

ஆனால் மோடி அரசு பொதுப் பிரிவில் உள்ள 50% லிருந்து 10% EWS மூலமாக வழங்கப்படும் சட்டத்தைக் கொண்டு வந்தது. அதை எதிர்த்து போட்ட வழக்கில் மோடி அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.

இட ஒதுக்கீடு தீர்ப்பு வந்த போது ஆ… ஊன்னு ஒவ்வொரு தரப்பும் கொண்டாடியது. நான் மேலே குறிப்பிட்ட சட்டத் திருத்தங்களை வைத்துப் பார்க்கும் போது ஷானி தீர்ப்பு இன்று எந்த நிலையில் உள்ளது என்று பாருங்க.

ஆகையால் நேற்றைய தீர்ப்புக்காக நாம் தேவைப்படாமல் குழம்பிக் கொள்ள வேண்டாம். நிச்சயமாக இந்தத் தீர்ப்பு மத்திய அரசால் நீதி மன்றம் மூலமாக Challenge செய்யப்படும் அல்லது காங்கிரசின் உதவியுடன் பாராளுமன்றத்தில் சில திருத்தங்களுடன் சட்டமாக்கப்படும்.(உச்ச நீதி மன்ற வழிகாட்டுதலைக் கணக்கில் கொண்டோ… கொள்ளாமலோ) .

இந்தத் தீர்ப்பை காங்கிரசின் மத்திய தலைமை வரவேற்றுள்ளதா என்று தெரியவில்லை.

நடைமுறையில் இந்தத் தீர்ப்பால் எதிர்காலத்தில் அதிகம் குழப்பமும் மத்திய் அரசுக்கும் மாநில அரசுக்கும் பிரச்சினை வரும் சட்டமாக நான் பார்ப்பது, Con currrent List ல் உள்ள ஏரியா தான். ஏனெனில் மத்திய அரசு நீட் போல ஒரு சட்டத்தைக் கொண்டு வரும். மாநில அரசு இதுபோல சட்டமியற்றும். சட்டத்தில் பாராளுமன்றம் கொண்டு வரும் சட்டமே Prevail ஆகும் என்று சொன்னாலும் மாநில அரசுகள் நீதி மன்ற படிக்கட்டுக்கள் ஏறும்.

நாட்டை பெரியண்ணன் போல அதாவது இந்தத் தீர்ப்பில் நடந்து கொண்டது போல உச்ச நீதிமன்றம் நடந்து கொள்ளும். அதை நாம் அனுமதிக்கலாகாது.

பி.கு: நான் எப்போதும் சொல்வது போல நீதிபதிகள் மீது எனக்கு பெரிய அபிப்பிராயம் எல்லாம் கிடையாது, அது நமக்கு சாதகமான தீர்ப்புகளை வழங்கினாலும், வழங்காவிட்டாலும். நாம் வேண்டுமானால் நமக்கு சாதகமாக வந்தால் கொண்டாடலாம். பாதகமாக வந்தால் திட்டலாம். நீதிபதிகளின் இலட்சணத்தை வெளியே சொல்ல முடியாது, அவ்வளவுதான் நம்மால் சொல்ல முடியும்.

  • லக்‌ஷ்மண பெருமாள்

கவர்னருக்கு காரியம் தத்திக்கு வீரியம்?!

நேற்று உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பில் ஆட்டுக்கு இனிமேல் தாடி தேவையில்லை என்பதை உறுதி செய்துவிட்டார்கள், கவர்னர் பதவிக்கு காரியம் செய்துவிட்டது தளபதியின் திமுக என்றளவிற்கு புரோக்கர் மீடியாவும், உபிஸ்களும் கொண்டாடினார்கள்.

ஆனால் அதே நேரம் இரண்டு வேறு வழக்குகளில் தத்தி அரசுக்கு விழுந்த செருப்படியை, அது அடிடாஸ் ஷீவில், திமுகவின் முதுகில் இருந்த பூச்சியைத்தான் அடித்தார்கள் என்று சத்தியம் செய்தார்கள் கொத்தடிமைகள்.

அது சரி, ஆனால் சங்கிகள் எல்லாம் முடிந்துவிட்டது போல அதற்கு இணையாக முட்டுக் கொடுக்க முடியாமல் தின்றினார்கள். ஏனென்றால் எமோஷனல் ஆகிவிட்டால், சங்கிகள் Angry Bird ஆகி தங்களைத்தானே அழித்து கொள்வதில் வல்லவர்கள்.

நாம் அதைக்கொஞ்சம் உடனே நீ ஜெர்க் ரியக்‌ஷன் செய்யாமல், நியாயமாக அலசினால், அது இந்த கறை ஜனநாயகத்துக்கு நல்லது என்பது புரியும்.

அண்ணல் அம்பேத்கார் சட்டத்தை பிரிடிஷ் சட்டத்தின் அடிப்படையில் வடிவமைத்தபோது ஆட்சியில் இருப்பவர்கள் நல்லவர்கள், சேவை செய்ய வந்தவர்கள், தவறு செய்ய மாட்டார்கள் என்று அன்றைய காலகட்டத்துக்கு ஏற்ப வடிவமைத்தனர்.

ஆனால் கேடுகெட்ட கிரிமினல்களும், இத்தாலி மாஃபியாவும், அடிப்படை புரியாத தத்திகளும், ஆட்சியில் அமர்வார்கள் என்று அன்று யோசிக்கவில்லை. இன்று இந்த கிரிமினல் திராவிஷ அரசு ஏற்படுத்தும் ஒவ்வொரு முன்மாதிரியும், சட்டத்தை ஆட்சியாளர்கள் தவறானவர்களும் இருப்பார்கள் என்பதை கணக்கில் கொண்டு வடிமவைக்க வேண்டும் என்பதற்கு தத்தி, மமதா போன்றவர்கள் நல் உதாரணத்தை ஏற்படுத்துகிறார்கள்.

அதனால் அதற்காக அசிங்கப்படவோ, பயப்படவோ தேவையில்லை. 2027 ல் தொடங்கும் அடுத்த 30 ஆண்டுகள் பாரதத்திற்கு மிகவும் நல்லது என்பதை இன்று நடக்கும் நிகழ்வுகள் எவ்வளவு நல்லது என்பதை அடுத்த 10 ஆண்டுகளில் உணரும் இந்த பாரதம்.

அதாவது இத்தாலி மாஃபியாவால் மத்தியில் ஒரு கேடுகெட்ட ஆட்சி அமைந்ததால்தான், இந்தியாவிற்கு மோடி என்ற பெரிய தலைவர் கிடைத்தார். அதே போல இங்கே கோல்மால்புரம் செய்கிற அறிவில்லாத செயல்களால், தமிழகத்திற்கு ஒரு நல்விடியல் கிடைக்கும் என்பதால் நாம் தத்திகளுக்கு நன்றி சொல்ல கடமைப் பட்டவர்களாகிறோம்..

இனி விஷயத்திற்கு வருவோம்.

🔥 தமிழகத்தில் இருக்கும் பல்கலைக்கழ(ல)கங்களுக்கு சான்சிலர் கவர்னர். அதன் வைஸ் சான்சிலரை நியமிப்பபதில் கவர்னருக்கு அதிகாரம் இருப்பதால், அந்த 10 பல்கலைக்கழகங்களுக்கு முதல்வர்தான் சான்சிலர் என்றும், அவர்தான் வைஸ் சான்சிலரை நியமிப்பார் என்ற ஒரு சட்டத்தை தமிழக தத்தி அரசு இயற்றியது. அதற்கு காரணம் அது பணம் காய்க்கும் மரம் என்பதே!

Note: அது எவ்வளவு தவறானது என்று அன்றே விரிவாக எழுதியிருக்கிறேன், படிக்கவும்

அதை கவர்னர் ஏற்க மறுக்க, அதே சட்டத்தை மீண்டும் சட்டசபையில் பாஸ் செய்து, கவர்னருக்கு மீண்டும் அனுப்பியது. அப்படி அனுப்பினால் அதை கவர்னர் ஏற்றுத்தான ஆகவேண்டும் என்பது நடைமுறைச்சட்டம்!

அப்படி ஏற்றிருந்தால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பல சார்கள் பல்கழைகக்ழக வேந்தர்களாக நியமிக்கப் பட்டிருக்கலாம் என்பதால் அதை கவர்னர் தாமதபடுத்தினார். இன்று அது கவர்னரின் நடவடிக்குக்கு எதிராக போனலும், அந்த தாமதத்தால் தவறு தடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் காவ்ர்னர் அப்படி எல்லையின்றி தாமதப்படுத்தி அதற்கென கால அளவு என்ற ஒரு வரையரை இல்லாததால், அந்த வழியை கவர்னர் பயன்படுத்தினார், நோக்கம் சரியாக இருந்தாலும், நடமுறைப்படி அது கவர்னரின் தவறுதான்!

அது தவறு என்று சொல்லும் தீயசக்தி திமுகவின் வாதமும் ஏற்கப்பட வேண்டும், ஏனெனில் ஒரு நல்ல அரசால் கொண்டுவரப்பட்ட ஒரு சட்டத்தை, ஒரு மோசமான கவர்னர் அப்படி செய்திருந்தால், அப்போது அது தவறாகுமல்லவா? அது போல மோடியின் குஜராத் அரசுக்கும், பாஜக அரசுகளுக்கும், கர்நாடகாவில் ஹெக்டே அரசுக்கும் காங்கிரஸ் அரசால் பல முறை நேர்ந்தது உண்டு.

அதனால் தத்தி அரசு அதை சுப்ரீம் கோர்ட்டுக்கு கொண்டு சென்றது. அதன் காரணமாக கவர்னர் அதை தன்னிடம் வைத்துக் கொள்ளாமல், ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார். அவரும் அதை ஏற்கவோ, மறுக்கவோ இல்லை.

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் இந்த வழக்கை விசாரித்து, கவர்னர் காலவரையின்று தாமதிக்க முடியாது, அந்த சட்டம் இரண்டாவது முறை இயற்றி அனுப்பியதால், அதை கவர்னர் ஏற்றிருக்க வேண்டும் என்று தீர்ப்பளித்து அந்த சட்டம் அதன்படி அமுலுக்கு வருகிறது என்று சொல்லி இருக்கிறது.

உடனே எல்லாம் முடிந்துவிட்டது, நாடே நாசமாகிவிட்டது என்பது போல சங்கிகள் கோபக்கணைகளால் தற்கொலை செய்துகொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் அந்த கோபத்தில் கவனிக்கத்தவறிய சில விஷயங்கள், இது முடிவல்ல, ஒரு நல்ல மாற்றத்திற்கான ஆரம்பம் என்பதைத்தான்.

ஏனெனில் இது சட்டமாக சட்டசபையில் ஒப்புதல் தந்தாலும், மீண்டும் அதை கவர்னர் கையெழுத்து போட்டுத்தான் அனுமதிக்க வேண்டும். மணி பில் போன்றவை எப்படி கவர்னர் அதை ஏற்றுத்தான் ஆக வேண்டுமோ, அதுபோல இதையும் ஏற்கத்தான் வேண்டும்.

ஆனால் இந்த மாற்றம் அடிப்படை நிர்வாகத்தில் ஏற்படுத்தப்பட்ட மாற்றம் என்பதால் இதை எதிர்த்து கவர்னர் தடை வாங்கலாம். அதாவது சுப்ரீம் கோர்ட் கொடுத்த தீர்ப்பு நடைமுறை சம்பந்தப்பட்டதுதானே தவிர அந்த சட்டத்தின் உள் இருக்கும் விஷயம் சரி அல்லது தவறு என்று சொல்லவில்லை என்பதால் அதை எதிர்த்து கோர்ட்டுக்கு போகலாம்.

ஏனென்றால், தத்தி அரசு, மமதை அரசு போன்ற கேடுகெட்டு அரசுகள் எதை வேண்டுமானாலும் சட்டமாக இயற்றினால் அதை கவர்னர் ஏற்றுத்தான் ஆகவேண்டுமா என்பதுதான் உங்கள் கேள்வியல்லவா?

உதாரணமாக, தமிழக அரசை தனி நாடாக பிரகனப்படுத்தியோ அல்லது தமிழக அரசில் இன்றுமுதல் மன்னராட்சி நடைமுறை படுத்துகிறோம், அதன்படி தேர்தல் இனிமேல் நடக்காது. கோல்மால்புர வாரிசுகளே ஆளும் என்பது போன்ற ஒரு சட்டத்தை தத்தி அரசு இயற்றினால், அதை கவர்னர் அப்படியே ஏற்றுத்தானே ஆக வேண்டுமா என்றால், ஆம் இந்த தற்போது இருக்கும் நடை முறையின்படி ஏற்றாக வேண்டும்.

ஆனால் அதற்கெதிராக சுப்ரீம் கோர்டில் வழக்கு தொடர்ந்து அல்லது மாநிலத்தின் அதிகாரத்தை மத்திய அரசின் கீழ் குறைத்து மத்திய அரசு சட்டம் இயற்றி தடுக்கலாம். அதாவது கல்வியை மத்திய அரசின் கீழ் இந்திரா காந்தி கொண்டு சென்றதுபோல.

எனவே இது எல்லாம் முடிவடையவில்லை என்பது மட்டுமல்ல, இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நடைமுறையை மட்டும் பார்க்காமல், மேற்சொன்னதுபோல சூழல்களையும் கருத்தில் கொண்டு அதை பெரிய பெஞ்சுக்கு சிபாரிசு செய்து, அதை முழுவதுமாக ஆராய்ந்து தீர்ப்பு சொல்லி இருக்க வேண்டும். அதை செய்யவில்லை என்பது நமது கோர்ட்டுகளின் தீர்ப்புகள் மேம்போக்காக அமைந்துவிட்டது என்பதையும் நினைவில் கொள்ளல் வேண்டும்.

அது ஏதோ இங்கே மட்டும் நடப்பதாக நினைக்க வேண்டாம், வக்ஃப் வாரிய சட்டம் இயற்றியபோது, அது அடிப்படை மனித உரிமை மீறல் கொண்ட ட்ராகானியன் ஏக்ட் என்று அதை ஏன் சுப்ரீம் கோர்ட் அன்று தடுக்கவில்லை?

சமீபத்தில் ஒரு நீதிபதியின் வீட்டில் கட்டுக்கட்டாக பண மூட்டை சிக்கியபோது அவருக்கு எதிராக எதையும் செய்ய முடியவில்லை என்பது போல பல கேள்விகளுக்கு விடை மத்திய அரசின் சட்ட திட்டங்களிலும், நம்மிடமும் இல்லை.

ஆனால் இதுபோன்ற தவறான சூழல்களே சட்டத்தை திருத்த இந்திய அரசுக்கு கிடைத்த நல்வாய்ப்பு என்று நாம் புரிந்துகொண்டால், இது தவறான குறுக்கு வழியில் நடந்த ஒரு நல்ல மாற்றத்திற்கான விதை என்பதை புரிந்தால் சங்கிகளும், திராவிஷ அரசுக்கு எதிரான மக்களும் Angry Bird ஆகி மாய்ந்து கொண்டிருக்க வேண்டியதில்லை. தவறான வழியில் ஒரு நல்ல மாற்றமே!

அடுத்த சனி பெயர்ச்சி 2027 ஆண்டு மேஷத்தில் தொடங்கும்போது அடுத்த 30 ஆண்டுகள் சனியின் ஆதிக்கம் கடகம் என்ற தாயுள்ளம் கொண்ட ஒரு நடப்பில் ஒரு பெரிய மாற்றம் நிகழும். அதற்கான நல்ல மாற்றத்திற்கான அறிகுறிகளே இந்த அடிப்படை அறிவில்லாத தத்திகளின் ஆட்சியும், அது இயற்றும் கேடுகெட்ட சட்டங்களும் என்றுதான் பார்க்க வேண்டும்.

அதே சமயம் காங்கிரஸ் ஆட்சியில் இதுபோன்ற விஷயங்களை எந்த மாநில அரசும் செய்யவில்லையே என்ற கேள்வி உங்களுக்கு எழுவது நியாயம்தான். அன்று இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில் இதை ஒரு முதல்வர் செய்திருந்தால், அடுத்த கனமே ஆட்சியை கலைத்து, ஆட்சியாளர்களை உள்ளே தள்ளியிருப்பார். ஆனால் மோடி அரசு அதை செய்யாது என்பதால் இவர்கள் ஆட்டம் எல்லையில்லாமல் போகிறது.

ஆனால் இவர்களின் லகான் வேறு வகையில் அதை சரி செய்ய முடியும். அதை இன்னும் மோடி அரசு செய்யாமல் காலம் கடத்தினால், கோபம் தத்தி அரசின் மீது வருவதைவிட, அது கைலாகத மோடி அரசின் மீதுதான் திரும்பும் என்பதையும் உணர்வார் அமித்ஷா!?

மேலும் இந்த சட்டத்தின்படி ஒவ்வொரு பல்கலைக்கழகத்தில் வைஸ் சான்சிலர் பதவியை தீயசக்தி திமுக ஏலத்தில் விடும் எனும்போது அது இன்னும் மோசமான ஒரு அடியை எடுத்து வைக்கிறது என்பதை மக்கள் உணரவேண்டும்.

அதற்கு காரணம் தமிழக மாக்கள் ஓட்டை ₹200 க்கு விற்பதாலும், எல்லை மீறும் திமுகவின் ஆட்சியை நிரந்தர அழிக்கும் இவை பெருமளவில் உதவும் என்று மக்கள் உணராதவரையில், இதுபோன்றவைகள் நிகழ்வதை தடுக்க முடியாது!

கவர்னர் மீது விழுந்த இந்த கறை நல்லதற்கே! 

🐶 Indhea

காலமானார் மூத்த தேசபக்தர் குமரி அனந்தன்! தலைவர்கள் இரங்கல்!

kumari ananthan - 2026

காங்கிரஸின் மூத்த தலைவர் குமரி அனந்தன் தமது 93ம் வயதில் காலமானார். வயது மூப்பு மற்றும் சிறுநீரக பிரச்னை காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி ஏப்.8ம் தேதி செவ்வாய்க் கிழமை இரவு காலமானார்.

மிகச் சிறந்த தேசியவாதி, தேசபக்தர். தமிழகத்தின் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு முக்கியத்துவம் தந்து, அவர்களின் நினைவுகளை மாணவர்கள் மத்தியிலும் தமிழகத்தின் மக்கள் மத்தியிலும் பதியச் செய்ய தம் கடைசிக் காலம் வரை தளராது பாடு பட்டவர். மிகச் சிறந்த சொற்பொழிவாளராகவும் திகழ்ந்தவர். இலக்கியச் செல்வர் என அனைவராலும் அழைக்கப்பட்டார். தமிழில் இலக்கியப் புலமை பெற்றவர். அரசியலோடு கூட, இலக்கியப் பேச்சாற்றல் மிக்க இலக்கியவாதியாகவும் போற்றப்பட்டார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தவர் குமரி அனந்தன். 5 முறை எம்எல்ஏ.,வாகவும், ஒரு முறை எம்பி.,யாகவும் இருந்துள்ளார். மறைந்த குமரி அனந்தனுக்கு ஒரு மகன், நான்கு மகள்கள். இவரது மகள் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் பாஜக.,வில் மாநிலத் தலைவராகவும், பின்னர் தெலங்கானா, புதுவை மாநில ஆளுநராகவும் செயல்பட்டவர். மறைந்த காங்கிரஸ் எம்.பி., வசந்தகுமார் இவரது சகோதரர்.

சாத்தான் குளம் ராதாபுரம், திருவெற்றியூர் தொகுதிகளில் எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1977 ம் ஆண்டில் நடைபெற்ற லோக்சபா தேர்லிலில் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். மணியாச்சி ரயில் நிலையத்திற்கு வாஞ்சி மணியாச்சி என பெயர் வர காரணமாக இருந்தவர்.

விமானங்களில் தமிழில் அறிவிப்பு வெளியிட வேண்டும் என வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் தமிழில் கேள்வி எழுப்பும் உரிமையைப் பெற்றுத் தந்தவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. தமிழில் தந்தி விண்ணப்பங்கள், பணவிடை அஞ்சல் போன்றவற்றில் தமிழ் இடம் பெற வேண்டும் என போராடி பெற்றுத் தந்தவர்.

பல முறை யாத்திரைகளை மேற்கொண்டவர். இவரது பாத யாத்திரைகள் மூலம் தேசியத்தை கிராமங்களிலும் பட்டிதொட்டிகளிலும் பரப்ப முயன்று வந்தார். பாரத மாதா சங்கம் என்ற சங்கம் அமைத்து சுதந்திரப் போரில் ஈடுபட்ட செங்கோட்டை வாஞ்சிநாதனின் நினைவாக, மணியாச்சி ரயில் நிலையத்தை ‘வாஞ்சி மணியாச்சி’ ரயில் நிலையம் என அழைக்கப்படக் காரணமாக அமைந்தவர் குமரி அனந்தன். அதுபோல், தியாகி சுப்பிரமணிய சிவா கனவு கண்ட பாரதமாதா ஆலயம், பாப்பாரப்பட்டியில் அமைய வேண்டும் என்பதில் பெருமுயற்சி எடுத்து வந்தவர்.

மறைந்த குமரி அனந்தனுக்கு , 2024ம் ஆண்டு தமிழக அரசால் தகைசால் விருது வழங்கப்பட்டது. மறைந்த குமரி அனந்தன் உடல் சென்னை சாலி கிராமத்தில் உள்ள டாக்டர் தமிழிசையின் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கே தலைவர்கள் அவரது உடலுக்கு இறுதி மரியாதை செய்கின்றனர்.

தனது தந்தையின் மறைவு குறித்து தமிழிசை சௌந்தர்ராஜன் வெளியிட்ட பதிவு:

தமிழ் கற்றதனால் நான் தமிழ் பேசவில்லை… தமிழ் என்னைப் பெற்றதனால் நான் தமிழ் பேசுகிறேன் என்று…. பெருமையாக. பேச வைத்த என் தந்தை திரு.குமரி அனந்தன் அவர்கள்… இன்று என் அம்மாவோடு.. இரண்டர கலந்து விட்டார்… குமரியில்.. ஒரு கிராமத்தில் பிறந்து.. தன் முழு முயற்சியினால்… அப்பழுக்கற்ற அரசியல்வாதியாக… தமிழ் மீது.. தீராத பற்று கொண்டு… தமிழிசை என்ற பெயர் வைத்து… இசை இசை… என்று கூப்பிடும் என் அப்பாவின்… கணீர் குரல்… இன்று காற்றில்.. இசையோடு கலந்து விட்டது…. வாழ்க்கை இப்படித்தான் வாழ வேண்டும் என்று… சீரான வாழ்க்கை வாழ்ந்தவர்…

இன்று தான் வளர்த்தவர்கள் எல்லாம்… சீராக வாழ்வதைக் கண்டு… பெருமைப்பட்டு.. வாழ்த்திவிட்டு.. எங்களை விட்டு மறைந்திருக்கிறார்… என்றும். .. அவர் பெயர் நிலைத்திருக்கும். தமிழக அரசியலில்.. பாராளுமன்றத்தில் முதன் முதலில் தமிழில் பேசியவர் இன்று தமிழோடு காற்றில் கலந்துவிட்டார் என்று சொல்ல வேண்டும்…. மகிழ்ச்சியோடு போய் வாருங்கள் அப்பா… நீங்கள் மக்களுக்கு என்ன எல்லாம் செய்ய வேண்டும் என்று நினைத்தீர்களோ… அதை மனதில் கொண்டு… உங்கள் பெயரில்… நாங்கள் செய்வோம் என்று… உறுதியோடு… உங்களை வழி அனுப்புகிறோம்…

உங்கள் வழி உங்கள் வழியில்…… நீங்கள் எப்பொழுதும் சொல்வதைப் போல… நாமும் மகிழ்ச்சியாக இருந்து.. மற்றவர்களின் மகிழ்விக்க வேண்டும்.. என்று உங்கள் ஆசை ஆசையை.. எப்போதும் நிறைவேற்றுவோம்… போய் வாருங்கள் அப்பா தமிழ் கற்றதனால் நான் தமிழ் பேசவில்லை தமிழ் என்னைப் பெற்றதனால் நான் தமிழ் பேசுகிறேன்… நன்றி அப்பா.. மகிழ்ச்சியோடு போய் வாருங்கள்….

பாஜக., மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை வெளியிட்ட இரங்கல் பதிவு!

தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், பெருந்தலைவர் காமராஜர் அவர்களுடன் இணைந்து பணியாற்றிய பெருமைக்குரியவரும், அக்கா திருமதி தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களின் தந்தையாருமாகிய, இலக்கியச் செல்வர், ஐயா திரு. குமரி அனந்தன் அவர்கள், இன்று நம்மிடையே இல்லை என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், அப்பழுக்கின்றி பணியாற்றியவர். பல்வேறு தமிழ் இலக்கியங்கள் சார்ந்த நூல்களை எழுதியவர்.

பனைமரங்கள் பாதுகாப்புக்காவும், நதிகள் இணைப்புக்காகவும், பாரதமாதா கோவில் அமைக்கவும், பாதயாத்திரைகள் மேற்கொண்டவர். தலைசிறந்த தேசியவாதியான ஐயா திரு. குமரி அனந்தன் அவர்களது மறைவு, தமிழகத்துக்கும், இலக்கிய உலகுக்கும் பேரிழப்பு.

தகப்பனாரை இழந்து வாடும் அக்கா திருமதி தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா, இறைவன் திருவடிகளை அடைய வேண்டிக் கொள்கிறேன். ஓம் சாந்தி!

IPL 2025: அதிக ரன்; ஃபீல்டிங்கிலும் சேஸிங்கிலும் கோட்டை விட்ட அணிகள்!

ipl 2025 games - 2026

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் – 08.04.2025

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

லக்னோ vs கொல்கொத்தா

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி (238/3, நிக்கோலஸ் பூரன் 87, மிட்சல் மார்ஷ் 81, எஉடன் மர்க்ரம் 47, ஹர்ஷித் ராணா 2/51, ரசல் 1/32) கொல்கொத்தா நட் ரைடர்ஸ் அணியை (234/7, அஜிங்க்யா ரஹானே 61, வெங்கடேஷ் ஐயர் 45, ரிங்கு சிங் ஆட்டமிழக்காமல் 38, சுனில் நரேன் 30, ஆகாஷ் தீப் 2/55, ஷர்துல் தாகூர் 2/52, ஆவேஷ் கான், திக்வேஷ் ரதி, ரவி பிஷ்னோய் தலா ஒரு விக்கட்) 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற கொல்கொத்தா அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் முதலில் மட்டையாட வந்த லக்னோ அனி தொடக்க வீரர்கள் எய்டன் மர்க்ரம் (28 பந்துகளில் 47 ரன், 4 ஃபோர், 2 சிக்சர்) மற்றும் மிட்சல் மார்ஷ் (48 பந்துகளில் 81 ரன், 6 ஃபோர், 5 சிக்சர்) சிறப்பாக ஆடினர்.

11ஆவது ஓவரில் எய்டன் மர்க்ரம் ஆட்டமிழந்த பின்னர் விளையாட வந்த நிக்கோலஸ் பூரன் (36 பந்துகளில் 87 ரன், 7 ஃபோர், 8 சிக்சர்) தனது அதிரடி ஆட்டத்தில் ஆட்டத்தின் போக்கையே மாற்றினர். 20 ஓவர் முடிவில் லக்னோ அணி 3 விக்கட் இழப்பிற்கு 238 ரன் எடுத்தது.

          239 என்ற கடினமான இலக்கை அடைய இரண்டாவதாகக் களமிறங்கிய கொல்கொத்தா அணி முதல் நான்கு விக்கட் விழும் வரை மிகச் சிறப்பாக விளையாடியது. க்விண்டன் டி காக் (9 பந்துகளில் 15 ரன், 2 சிக்சர்), சுனில் நரேன் (13 பந்துகளில் 30 ரன், 4 ஃபோர், 2 சிக்சர்), அஜிங்க்யா ரஹானே (35 பந்துகளில் 61 ரன், 8 ஃபோர், 2 சிக்சர்), வெங்கடேஷ் ஐயர் (29 பந்துகளில் 45 ரன், 6 ஃபோர், 1 சிக்சர்) என முதன் நான்கு மட்டையாளர்களும் சிறப்பாக ஆடினர்.

ஆனால் 13ஆவது ஓவரில் ரஹானே, 14ஆவது ஓவரில் ரமன்தீப் சிங் (1 ரன்), 15ஆவது ஓவரில் ரகுவன்ஷி (5 ரன்), 17ஆவது ஓவரில் ஆண்ட்ரூ ரசல் (7 ரன்) ஆகியோர் ஆட்டமிழந்ததால் கொல்கொத்தா அணியின் ரன் சேர்க்கும் வேகம் திடீரெனக் குறைந்தது.  அதன் பின்னர் ரிங்கு சிங் (15 பந்துகளில் 38 ரன், 6 ஃபோர், 2 சிக்சர்), ஹர்ஷித் ராணா (9 பந்துகளில் 10 ரன்) வெற்றி இலக்கை அடைய முயற்சித்தும் கொல்கொத்தா அணி 20 ஓவர் முடிவில் ஏழு விக்கட் இழப்பிற்கு 234 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 4 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணி தோல்வியைச் சந்தித்தது.

          ஆட்ட நாயகனாக லக்னோ அணியின் மட்டையாளர் நிக்கோலஸ் பூரன் அறிவிக்கப்பட்டார்.    

பஞ்சாப் vs சென்னை

பஞ்சாப் கிங்க்ஸ் அணி (219/6, பிரியான்ஷ் ஆர்யா 103, ஷஷாங்க் சிங் ஆட்டமிழக்காமல் 52, மார்கோ ஜேன்சன் ஆட்டமிழக்காமல் 34, கலீல் அகமது 2/45, அஷ்வின் 2/48, முகேஷ் சௌத்ரி, நூர் அகமது தலா ஒரு விக்கட்) சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை (201/5, ரச்சின் ரவீந்திரா 36, டேவன் கான்வே 69, ஷிவம் துபே 42, எம்.எஸ். தோனி 27, லாக்கி ஃபெர்கூசன் 2/27, கிளன் மேக்ஸ்வெல் 1/11, யஷ் தாகூர் 1/39) 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற பஞ்சாப் அணி முதலில் மட்டையாட முடிவு செய்தது. ஆனால் முதல் எட்டு ஓவர் முடிவதற்குள் பிரப்சிம்ரன் சிங் (பூஜ்யம் ரன்), ஷ்ரேயாஸ் ஐயர் (9 ரன்), மார்கஸ் ஸ்டோனிஸ் (4 ரன்), நெஹல் வதேரா (9 ரன்), கிளன் மேக்ஸ்வெல் (1 ரன்) ஆகியோர் ஆட்டமிழந்தனர். இவர்கள் எடுத்த மொத்த ரன் 23 ரன். மேக்ஸ்வெல் ஆட்டமிழக்கும்போது அணியின் ஸ்கோர் 83/5. மீதமுள்ள 60 ரன் களை பிரியன்ஷ் ஆர்யா அடித்தார். 42 பந்துகளில், 7 ஃபோர், 9 சிக்சர்களுடன், 103 ரன்கள் அவர் அடித்தார்.

13.4 ஓவரில் அவர் ஆட்டமிழக்காமல் 20 ஓவர் வரை அவர் ஆடியிருந்தால் கிரிஸ் கெயில் போல 175 ரன் எடுத்திருக்க வாய்ப்பிருந்தது. ஆர்யா ஆட்டமிழக்கும்போது அணியின் ஸ்கோர் 154/6. அடுத்த ஆறு ஓவர்களில் ஷஷாங்க் சிங் (36 பந்துகளில் 52 ரன், 2 ஃபோர், 3 சிக்சர்) மற்றும் மார்கோ ஜேன்சன் (19 பந்துகளில் 34 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்) இருவரும் அதிரடியாக அடி அணியின் ஸ்கோரை 20 ஓவர்களில் 219/6 என உயர்த்தினர்.   

          20 ஓவர்களில் 220 ரன் என்ற வெற்றி இலக்கை அடைய இரண்டாவதாக ஆட வந்த சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ரச்சின் ரவீந்த்ரா (23 பந்துகளில் 36 ரன், 6 ஃபோர்) மற்றும் டேவன் கான்வே (49 பந்துகளில் 69 ரன், 6 ஃபோர், 2 சிக்சர்) இருவரும் சிறப்பான தொடக்கம் தந்தனர். இன்று ருதுராஜ் கெய்க்வாட் (ஓரு ரன்) சோபிக்கவில்லை.

டேவன் கான்வே உடன் இணைந்து ஷிவம் துபே (27 பந்துகளில் 42 ரன், 3 ஃபோர், 2 சிக்சர்) சிறப்பாக ஆடினார். ஆனால் அவர் ஆட்டமிழக்கும்போது மீதமுள்ள நான்கு ஓவர்களில் வெற்றிக்கு இன்னமும் 69 ரன்கள் தேவைப்பட்டன. அந்த சமயத்தில் 17.5ஆவது ஓவரில் டேவன் கான்வே ரிடயர்ட் ஹர்ட் முறையில் ஆட்டமிழந்தார்.

துபே ஆட்டமிழந்தபோது தோனி (12 பந்துகளில் 27 ரன், 1 ஃபோர், 3 சிக்சர்) ஆடவந்தார். கான்வே ஆட்டமிழந்தபோது ரவீந்திர ஜதேஜா (ஆட்டமிழக்காமல் 9 ரன்) ஆடவந்தார். தோனி 20ஆவது ஓவரில் முதல் பந்தில் அவுட் ஆனார். அப்போது விஜய் ஷங்கர் (2 ரன்) ஆடவந்தார். இந்த மூவராலும் வெற்றி இலக்கை அடைய முடியவில்லை. அதனால் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கட் இழப்பிற்கு 201 ரன் மட்டுமே எடுத்தது. எனவே 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

          ஆட்ட நாயகனாக பஞ்சாப் அணியின் மட்டையாளர் பிரியான்ஷ் ஆர்யா அறிவிக்கப்பட்டார்.

          இன்று நடந்த இரண்டு ஆட்டங்களும் அதிக ரன் அடிக்கப்பட்ட ஆட்டங்கள். இரண்டு ஆட்டங்களிலும் இரண்டாவதாக ஆடிய அணிகள் சிறப்பாக ஆடியபோதிலும் கடைசியில் ரன் ரேட்டை அதிகப்படுத்த முடியாததால் சொற்ப ரன்களில் தோல்வியைத் தழுவின. சென்னை அணி பந்து வீசியபோது கையில் வந்து விழுந்த பந்துகளைக்கூடத் தவறவிட்டு கேட்ச் பிடிக்காமல் விட்டனர்.