Home Blog Page 186

சின்னஞ் சிறு பதங்கள் சிலம்பொலித்திடுமே!

oothukkadu sri krishnar - 2026
#image_title

— ராமலிங்கம் கிருஷ்ணா —

உனைக் காணவரும் அடியார் எவராயினும் கனகமணி அசையும் உனது திருநடனம் கண்பட்டுப் போனால் மனம் புண்பட்டுப் போகுமே… ஆடாது அசங்காது வா கண்ணா…. என்று ஊத்துக்காடு வேங்கடகவி கண்ணனை ஸ்மரணம் செய்து கொண்டு இருக்கிறார், ஆம்… இன்று வரை அது தொடர்கிறது.

காலங்கள் உருண்டோடின. கண்ணனை பார்க்காமல் அன்னம் ஆகாரம் உண்ண மாட்டேன் என்றும் சில காலங்களாகவே ஆகாரம் உண்பதையே அவர் முற்றுலுமாக தவிர்த்து வந்தார். இதன் காரணமாக உடல் மெலிந்து கண்கள் சொருகி பார்வை மங்க ஆரம்பித்தது. தினமும் பிரதக்ஷ்ணம் செய்யக் கூட அவரால் முடியவில்லை. தன் முழங்கால் வாயிலாகவே மிகவும் சிரமப்பட்டு ஒரு பிரதக்ஷ்ணம் செய்து முடித்தார். அடுத்த பிரதிக்க்ஷனம் செய்ய முடியவில்லை. தன் பிராணனன் இன்றுடன் பிரியப் போவதை உணர்ந்தார்.

இன்று எப்படியாவது பாடி கண்ணனை வரவழைத்துவிடலாம் என்றெண்ணி என்ன பாடலாம் என சிறிது யோசித்து பின் தாமதமில்லாமல் ‘அலைபாயுதே கண்ணா!’ என்று பாட ஆரம்பித்து விட்டார். அந்த பாடல் நிறைவுறும் தருவாய் நெருங்கிவிட்டது. ஆனாலும் கண்ணன் காணமுடியவில்லை.

தன்னை மறந்து தனது தொடைகளில் தாளம் போட்டுக்கொண்டே பாடிக் கொண்டு இருந்த வேங்கடகவிக்கு திடீரென்று ஜவ்வாது மணமும், நாகலிங்க பூ வாசனையும், குளிர்ந்த காற்றும் அவர் மேனியில் பட ஆரம்பித்து சிலிர்ப்பூட்டும் அந்த நேரத்தில் அவர் கண்பார்வை முற்றிலுமாக போய்விடவே அந்த சுகந்த மணத்தைத் தான் உணர முடிந்ததே தவிர அவரால் கண்ணனைக் கண்ணாரக் காண முடியவில்லை.

ஆனாலும் பாடுவதை அவர் நிறுத்தவில்லை. முழு பலத்தையும் கூட்டி அந்த பாடலைக் கூட பாட முடியவில்லை, தொடையில் தாளம் போட முடியாமல் கை இடறியது. எதோ ஒரு குழந்தை மடியில் படுத்திருப்பது போன்று உணர்வு தோன்ற, அப்பா யாரது? கண்ணனை காண வேண்டுமென்ற வேகத்தில் நான் பாடிக்கொண்டு இருக்கின்றேன், அப்பா யாரது?

அந்தக் குழந்தையிடமிருந்து பதிலே இல்லை, மீண்டும் மீண்டும் கேட்டார், பதில் இல்லாத காரணத்தினால் சற்றே சினம் வந்து அந்தக் குழந்தையைக் கீழே தள்ளிவிட்டார். உடனே அந்தக் குழந்தை முகமலர்ந்து பேசத்தொடங்கியது.

வேங்கடசுப்பையரே! யாரைக் காண வேண்டுமென இத்துணைக் காலம் பாடினாயோ! அது நான் தான் என்னை நன்றாகப் பார்! என்றதும். கண்ணா! என்று எழுந்திருக்கவும் சேவிக்கவும் சக்தியில்லாமல் கண்ணனைப் பார்த்து, என்னுடைய உடலுறுப்புகள் அனைத்தும் சரியாக இயங்கக் கூடிய காலகட்டத்தில் நீ காட்சி தரவில்லையே, இப்பொழுது என் தேகபலமும் மனபலமும் சோர்ந்து போன பிறகு வந்திருக்கிறாயே கண்ணா! என்னால் உன்னை கையெடுத்துக் கூட கும்பிட முடியவில்லையே என்று கூறிக் கொண்டு இருக்கும் போதே வேங்கடகவியின் உடலிலிருந்து உயிர் கொஞ்சம் கொஞ்சமாகப் பிரிந்து கொண்டிருந்தது.

அந்த உயிரை முழுவதும் பிரியவிடாமல் கிருஷ்ணன் அனுக்கிரகித்து, பக்தா! உன் வாழ்நாள் முழுவதையும் நான் வருவேன் என்று என்னைக் காணும் பொருட்டு உன் காலங்களைக் கழித்தாய். அப்படிப்பட்ட உயர்ந்த பக்தனாகிய உன்னை பூலோகத்தில் அவ்வளவு சீக்கிரம் இறக்கவிடமட்டேன் என்று தன்னுடன் வேங்கடகவியை அழைத்து தன் இருப்பிடமான பிருந்தாவனத்திற்கு கொண்டு சென்றார்.

எப்படி குசேலருக்கு நடந்ததை போலவே பன்மடங்கு உபசாரம் செய்து, எப்பொழுதும் இவன் என் பக்தன் என் பக்தன் என்று ருக்மணியிடம் கூறிக் கொண்டே இருந்தார் கிருஷ்ணர்.

பக்தரே…. உமக்கு என்ன வரம் வேண்டும் என்று கண்ணன் கேட்க, “மறுபடியும் நீ இந்த ஊத்துக்காட்டில் நான் பாட வேண்டும் அதற்கேற்ப நீ ஆடவேண்டும் கண்ணா” என்றதும், அப்படியே

இருவரும் ஊத்துக்காட்டிற்கு வந்ததும், வேங்கட கவியே, எந்த ரூபத்தில் நான் உமக்கு காட்சி தர வேண்டும் எனக் கேட்க வேங்கடகவி, கண்ணா உன்னை காளிங்க நர்த்தனாக நடனம் செய்யும் கோலத்தில் காணவேண்டும் எனவே அந்த ரூபத்தில் வா கண்ணா என்றார்.

வேங்கடகவி சிரேஷ்டரே, நான் உமது விருப்பப்படி அவ்வாறாகவே வந்து உமது பாடலுக்கு ஆடுகிறேன், ஆனால் எப்போது உமது வாயால் எனது நர்த்தனத்திற்கு ஏற்றவாறு பாட முடியாது போகுமோ, அந்த ஷண நேரத்தில் இதே இடத்தில் மீண்டும் நான் விக்கிரகமாக மாறிவிடுவேன் என்று கூறினார்.

வேங்கடகவி அப்பொழுது ‘தாம்தீம் தரநதாம்…………’ என்று தொடங்கும் பல்லவியை பாடினார். பாடல் முடியும் வரை கிருஷ்ணனும் நர்த்தனம் செய்ய, அந்த நர்த்தனத்திற்கு ஏற்றாற் போல் வேங்கடகவியும் பாடினார். இருப்பினும், ஒரு சில நர்த்தன பாவனைகளுக்கு ஏற்ற மாதிரி வேங்கடகவியால் பாட முடியாமல் குரலில் தடுமாற்றம் வெளிப்படவே, அந்த கண்ணன் சொன்னது போலவே உடனே அதே இடத்தில் மீண்டும் விக்ரகமாக மாறினார்.

வேங்கடகவியும் தனது தோல்வியை ஒப்பு கொண்டார், அவரது அவதார நோக்கத்தை அறிந்திருந்த பரந்தாமன் அவரைப் பார்த்து நீர் இனி நாரதராக சஞ்சரிப்பீராக என்று அனுக்கிரகம் செய்தார். பதிலுக்கு வேங்கடசுப்பையர், கண்ணனைப் நோக்கி, சுவாமி நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என்று கேட்க நான் என் பக்தர்களாகிய நந்தினி பட்டிக்கு கொடுத்த வரத்தில் கலியுகம் முழுவதும் இங்கயே இருக்க போகிறேன் என்றார்.

அதற்கு நாரதர் வைகுண்ட வாசனே வைகுண்டத்தில் இல்லாத போது பக்தனாகிய எனக்கு வைகுண்டத்தில் என்ன வேலை என்று கேட்டு கலியுகம் முழுவதும் நானும் உங்களுடன் இருந்து நான் தற்போது செய்து கொண்டிருக்கும் கைங்கரியத்தையே தொடர்ந்து செய்து வருவதோடு மற்றுமல்லாமல் கலியுகத்தில் யாரும் தேடி கிடைக்காத பக்தியுடன் யார் வந்து உங்களிடம் பிராத்திக்க வருகிறாரோ அவர்களின் குறைகளை கேட்டு உங்களிடம் கூறும் பெறும் பாக்கியத்தை தாருங்கள் என கூறினார்.

இனி நான் தேவலோகத்துக்கோ வைகுண்டதுக்கோ சென்றால் உம்மோடு தான் செல்வேன் என்று கூற அவ்வாறாக ஆகட்டும் என்று கிருஷ்ணன் அனுகிரகம் செய்தார்.

இன்னும் கூட இரவு நேரங்களில் கண்ணனின் மீது பாடல்களை பாடிகொண்டிருக்கிறார். பாடல்களுக்கு ஏற்றார் போல் கோபிகா ஸ்திரிகளுடன் கிருஷ்ணன் நர்த்தனம் செய்து கொண்டு இருக்கிறார். கிருஷ்ணனின் சலங்கை (கொலுசு) சத்தம் இன்னும் இரவு நேரங்களில் கேட்டு கொண்டிருக்கிறது. அதை இந்த ஊரில் பலரும் கேட்டு கொண்டு தான் இருக்கின்றனர்.

நாரதர் இங்கயே இருப்பதை கண்டு அத்தனை தேவர்களும் நாங்களும் கலியுகம் முழுவதும் நாங்களும் இங்கயே இருப்பதாக இறங்கி வந்தனர். கிருஷ்ணனும் இங்கயே இருக்கும் படி அனுகிரகித்தார். இத்திருக்கோவிலின் பிரகாரத்தை சுற்றி இன்னும் அத்தனை தேவர்களும் காவல் காத்து கொண்டிருகின்றனர். கிபி 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஸ்ரீ வேங்கட கவியின் அதீத பக்தியின் காரணமாக, கிராமத்தில் இறைவனின் நடனத்தைக் கண்ட அவர் நாரத முனிவரின் அவதாரம் தான் என்றால் அது தான் உண்மை. .

“இன்று நான் பிறந்தேன்” என்று வெங்கடகவி ஒரு பாடல் பாடியுள்ளார். கண்ணனால் அவர் பெருமை பெற்றதும் அவரால் ஊத்துக்காடு பெருமை பெற்றதும் உலகறிந்த செய்தியாகும்.

நாள் தோறும் கோவில் அர்ச்சகர், வெங்கடகவி துளசி மாடத்தருகே அமர்ந்து கண்ணனிடம் பாடங்கேட்டு வந்ததை நேரில் கண்டு வியப்பில் ஆழ்ந்து நிற்க நேரிட்டது. இறையருள் பெற்று வேங்கடகவி பாடிய பாடல்களைப் பக்தியோடு கேட்டு இன்புற்று மகிழ்கிறார் அர்ச்சகர்.

தன் சுகனுபாவங்களைப் பிறர்க்கும் கூறி அவர்களும் அந்த பேரின்பம் பெற உதவி செய்கிறார். இவரால், வேங்கடகவியின் செயல்களைக் கண்டு வியந்து பாராட்ட இன்னும் அவர் பாடிய பாடல்களைக் கேட்டு எல்லோரும் இன்புறும் நிலையும் ஏற்படுகின்றது.

ஊத்துக்காடு கிராமத்தின் முக்கிய தெய்வம் வேத நாராயணர் இருபுறமும் ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் காட்சியளிக்கிறார். கோயில் குளத்தில் இருந்து காளிங்க நர்த்தனப் பெருமாளின் பஞ்சலோக சிலை கண்டுபிடிக்கப்பட்ட பிறகு கோயில் பிரபலமடைந்தது. காமதேனுவின் குழந்தைகளான நந்தினி மற்றும் பட்டி ஆகிய தெய்வீக பசுக்களுக்கு முன்னால் கிருஷ்ணர் நிகழ்த்திய காளிங்க நர்த்தனத்தை நாரதமுனிவர் நேரில் பார்த்ததாகவும், இந்த கோவில் காளிங்கன் விக்ரகத்தின் அழகு சிரத்தின் மீது இடது காலை ஊன்றி, வலது கையில் அபயஹஸ்தத்துடன் தரிசனம் கொடுத்துக் கொண்டு இருக்கும் கண்ணனைக் காணப் புண்ணியம் செய்திருக்க வேண்டும். மொழு மொழுவென்ற கால்களும் பளபளவென்ற கன்னங்களும், கையை நீட்டியிருக்கும் லாவகமும், தூக்கிக் கட்டிய கொண்டையும், சுருண்டு சுருண்டு நெற்றி வரைத் தொங்கும் மோதிரச் சுருட்டையான கேசமும், பாதங்களின் பிஞ்சு விரல்களும் மாயப் புன்னகையுமான நர்த்தனமாடுகிற கண்ணனின் வடிவத்தைப் பார்த்தவுடன் இது சிற்பியால் செய்யப்படாத விக்கிரகம் போலவே தெரிகிறது

இறைவனின் இடது காலுக்கும் பாம்பின் தலைக்கும் இடையில் ஒரு மெல்லிய தாளைச் செருகக்கூடிய அளவுக்கு நுணுக்கமாகச் செதுக்கப்பட்டுள்ளது. இறைவனின் உடல் எடை பாம்பின் வாலைப்பிடித்து இருக்கும் இடது கையில் இருப்பது தான் தனியழகு. கிருஷ்ணரின் வலது காலில் காளிங்கரின் வாலினால் அழுத்தி பலத்த அடிபட்ட தழும்புகளையும் காணலாம்.

இக்கோயில் கும்பகோணத்திற்கு அருகில் உள்ளது . கும்பகோணத்தில் இருந்து ஆவூர் செல்லும் வழியில் மெயின் ரோட்டில் இருந்து 1 கி.மீ. தூரத்திலும் கும்பகோணம்-ஆவூர்- திருக்கருகாவூர் சாலையில் கோயிலுக்கு செல்லும் திசைகள் தெளிவாக உள்ளன. கோயிலின் நேரம் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் ஒவ்வொரு மாதமும் கிருஷ்ணரின் பிறந்த நட்சத்திரமான ரோகிணி நாளில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு வருகிறது. மேலும் இத்தலம், “ராகு தோஷம்” மற்றும் “சர்ப்ப தோஷம்” ஆகியவற்றுக்கான சிறந்த “பரிகார ஸ்தலம்” என்றும் திருமணத்தடைகள் போன்றவைகள் தீர்க்கப்படுவதற்கும், சந்ததிகள் பிறப்பதற்கும் பக்தர்கள் இந்த ஆலயத்திற்கு வருகை தந்து கண்ணனின் நட்சத்திரமான ரோகிணி நட்சத்திர நந்நாளில் கலந்து இறைவனை வேண்டிக் கொண்டால் கைமேல் பலனை அடையலாம்.

பின் குறிப்பு : வேங்கடகவி 65 ஆண்டு காலம் வாழ்ந்தார். இசை மூவருக்கும் முற்பட்ட வேங்கடகவியின் பாடல்கள் அமரத் தன்மை கொண்டவை. கண்ணன் ஆடலை நேரில் தரிசித்த கவியின் வாக்கில் வெளிப்படும் பாடல்கள் கண்ணன் ஆடும் நடனத்தின் தாளத்திற்கு ஏற்ப அமைபவை. “பால் வடியும் முகம்” எனத் தொடங்கும் பாடலுக்கு பொருள் புரியவேண்டுமா? நேரே வாருங்கள் ஊத்துக்காடுக்கு, அந்த காளிங்க நர்த்தன பெருமாளை கண்டு களியுங்கள். அப்பாடல் முழுவதும் உண்மையே என்பது அப்போது புரியும். அவரது அற்புதக் கீர்த்தனைகளில் மேலும் சில.

1. ஸ்ரீவிக்ன ராஜம் பஜே (கம்பீர நாட்டை) 2. நீரதஸமா நீல கிருஷ்ணா (ஜயந்தஸ்ரீ) 3. அசைந்தாடும் மயில் ஒன்று (சிம்மேந்த்ர மத்திமம்) 4. அலை பாயுதே கண்ணா (கானடா) 5. ஆடாது அசங்காது வா கண்ணா (மத்யமாவதி) 6. பார்வை ஒன்றே போதுமே (சுருட்டி) 7. நீல வானம் தனில் (புன்னாகவராளி) 8. யாரென்ன சொன்னாலும் (மணிரங்கு) 9. நீதான் மெச்சிக்கொள்ள வேண்டு (ஸ்ரீரஞ்சனி) 10. தாயே யசோதே உந்தன் (தோடி) 11. பால் வடியும் முகம் (நாட்டைக்குறிஞ்சி) 12. ஸ்வாகதம் கிருஷ்ணா (மோகனம்) 13. குழலூதி மனமெல்லாம் (காம்போதி)

எனவே, பக்தர்களே! வாழ்வில் ஒரு முறையாவது ஊத்துக்காடு சென்று கண்ணனைத் தரிசிக்க வேண்டும். கட்டாயம் சென்று பாருங்கள்.

கிருஷ்ணம் சரணம் – சர்வம் கிருஷ்ணாய சரணம்

ராஜபாளையம் அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

rajapalayam ration rice - 2026
#image_title

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தளவாய்புரம் விலக்கு பகுதியில் 8 லட்சம் மதிப்பிலான 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; 3 பேர் கைது: மாவட்ட வட்ட வழங்க அலுவலர் நடவடிக்கை

விருதுநகர் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் அனிதா விற்கு  ராஜபாளையம் வழியாக கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலின் அடிப்படையில் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் அனிதா தலைமையில் ராஜபாளையம் தனி வட்டாட்சியர் தன்ராஜ், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்ட வழங்க அலுவலர் அப்பாதுரை, சிவகாசி வட்ட வழங்க அலுவலர் கோதண்டராமன் ஆகியோர் கொண்ட குழு ராஜபாளையம் அருகே தளவாய்புரம் செல்லும் சாலை விலக்கில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்பொழுது அந்த வழியாக சென்ற TN 21 AZ 0605 என்ற பதிவு எண் கொண்ட அசோக் லைலாண்ட் லாரி நிற்காமல் சென்றுள்ளது. உடனே சுதாரித்துக் கொண்ட அதிகாரிகள்  ஜீப்பில் ஏறி லாரியை ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு துரத்தி சென்று மடக்கி  பிடித்தனர.

லாரியை சோதனை செய்த பொழுது கேரளா மாநிலம் எர்ணாகுளத்திற்கு மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து கோழி தீவனம் கொண்டு செல்வதாக போலி பில் தயார் செய்து ரேஷன் அரிசி கடத்தியது  தெரியவந்தது.

ரேஷன் அரிசி கடத்தல் ஈடுபட்ட லாரியை ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்து விசாரணை செய்ததில்  திருநெல்வேலி சங்கர் நகர் பகுதியைச் சேர்ந்த தங்கதுரை வயது 41 என்பதும் லாரி உரிமையாளர் மற்றும் டிரைவரும் அவர் தான் என தெரிமவந்தது. அவர் கேரளாவிற்கு  ரேஷன் அரிசி கடத்தியதை ஒப்புக்கொண்டார் .

மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் அனிதா குழுவினர் தீவிரமாக விசாரணை செய்த பொழுது, ராஜபாளையம் அருகே உள்ள எஸ் .ராமலிங்கபுரத்தில் இருந்து ரேஷன் அரிசியை கடத்தியது மட்டுமல்லாமல் போலியான பில் மூலம் திருமங்கலத்தில் இருந்து கடத்தி வந்ததாக பொய்யான வாக்கு மூலம் அளித்தது கண்டறியப்பட்டது.

இவருக்கு உடத்தையாக செயல்பட்ட வேல்முருகன் மற்றும் காளிமுத்து ஆகியோரையும் மடக்கி பிடித்து மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் அனிதா தலைமையிலான குழுவினர் விருதுநகர் குடிமை பொருள் குற்ற பிரிவு ஆய்வு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

சிப்காட் அமைக்க எதிர்ப்பு; திருச்சுழியில் கண்டன ஆர்பாட்டம்!

thiruchuzi sipcot - 2026
#image_title

திருச்சுழி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அகத்தாகுளம் பகுதியில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து‌ தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்*

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே அகத்தாகுளம் பகுதியில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் புதிதாக அரசு சிப்காட் தொழிற் பூங்கா அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இதற்கு அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று திருச்சுழி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகளின் கருத்தை கேட்காமல் சிப்காட் துவங்க நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அகத்தாகுளம், நத்தக்குளம், முத்தனேரி, குழலிக்குளம், நல்லதரை மற்றும் குருந்தங்குளம் கிராம விவசாயிகளின் வாழ்வாதாரமாக இருக்கும் விளைநிலங்களை எடுத்து சிப்காட் தொழிற் பூங்கா துவங்க கூடாது எனவும், விவசாயிகளின் கருத்தை கேட்காமல் எந்த தொழிற்சாலையும் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது என வலியுறுத்தியும் மற்றும் நிலங்களை கையகப்படுத்தும் அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் தமிழக அரசை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

இதனையடுத்து, திருச்சுழி வட்டாட்சியர் சிவக்குமார் அவர்களிடம் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அகத்தாகுளம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.‌

மதுரையில் எஸ்.பி.பி., 4ம் ஆண்டு நினைவஞ்சலி!

spb memories in madurai - 2026
#image_title

மதுரையில் மறைந்த இசை மேதை எஸ்.பி.பாலசுப்பிரமணியன் 4ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி: பாடல்கள் பாடி, மலர் தூவி அஞ்சலி

இசை மேதை மறைந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியன் அவர்களின் நான்காவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை எஸ் எஸ் காலனி பகுதியில் உள்ள ஸ்ரீ மகா பெரியவா கோவிலில் வைத்து அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பின் தலைவர் நெல்லை பாலு தலைமையில் ஆடிட்டர் சேதுமாதவா, வாசுதேவன் உள்ளிட்டோர் அவரின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து எம்எஸ்கே இன்னிசை குழுவை சேர்ந்த பாடகர்கள் ஜோசப், சிந்து உள்ளிட்டோர் எஸ்பிபி பாடிய ஆயர் பாடி, இதோ.. இதோ… என் பல்லவி, சங்கீத மேகம், உன்னை நினைச்சேன் பாட்டுப் பாடிச்சேன் உள்ளிட்ட பாடல்கள் பாடி பாடல்கள் மூலம் அஞ்சலி செலுத்தினர்.

இந்தப் நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் இரண்டு நிமிட அஞ்சலி செலுத்திய பிறகு புஷ்பா அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து அவரது சேவை, பாடல்கள் உள்ளிட்டவை குறித்து நெல்லை பாலு பேசும் போது:

இசை மேதை எஸ்பிபி அவர்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உட்பட 16 இந்திய மொழிகளில், சுமார் 40 ஆயிரம் பாடல்களை பாடிய பெருமைக்குரியவர். இதற்காக கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றவர் என்றும், தனது பரம்பரை வீட்டை பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் ஆந்திர மாநிலம், நெல்லூரில் உள்ள தனது பரம்பரை வீட்டைக் காஞ்சி மடத்தைச் சேர்ந்த ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளிடம் ஒப்படைத்து அதில் ஒரு சமஸ்கிருத வேதப் பாடசாலையை ஆரம்பிக்கவே இந்த தானத்தைச் செய்துள்ளதாகக் கூறியதை நினைவு கூர்ந்தார்.

சட்டவிரோத குடியேறிகளால் தமிழகத்தை சூழ்ந்து இருக்கும் ஆபத்து!

hindumunnani - 2026

சட்டவிரோத குடியேறிகளால் தமிழகத்தை சூழ்ந்து இருக்கும் ஆபத்து குறித்து இந்து முன்னணி எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது…

தொழில் நகரமாம் திருப்பூரில் பங்களாதேஷில் இருந்து வந்த சுற்றிய ஊடுருவல்காரர்களை திருப்பூர் மாநகர் காவல்துறையினர் கைது செய்திருப்பது மிகவும் பாராட்டக்கூடிய ஒன்று திருப்பூர் காவல் ஆணையர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள் .

ஆனால் அதே சமயம் இவர்களை மட்டும் ஊடுருவவில்லை தமிழக முழுவதும் பல்லாயிரக்கணக்கான வங்கதேசத்தவர்கள் சட்ட விரோதமாக ஊடுருவியுள்ளனர். மேலும் தா தனிநபர்களாகவோ குழுக்களாகவோ ஊடுருவ வாய்ப்பே இல்லை திட்டமிட்டு பல்வேறு ஏஜென்ட்கள் மூலம் ஊடுருவவே வாய்ப்புகள் அதிகம்.

ஏனெனில் சில நாட்கள் முன்பு வங்கதேச பெண்களை சென்னை அழைத்து வந்து சமூக வலைதளங்கள் வாயிலாக பாலியல் தொழில் செய்த பங்களாதேஷை சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்தோடு கடந்த வாரம் அஸ்ஸாம் முதல்வர் அவர்கள் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் தமிழகத்தின் திருப்பூர் கோயமுத்தூர் வரை ஊடுருவல் செய்கின்றனர். இது தொழில் நகரங்களுக்கு மிகப்பெரிய ஆபத்து என எச்சரிக்கை செய்திருந்த நிலையில், பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த ஊடுருவல்காரர்கள் திருப்பூரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பங்களாதேஷில் இருந்து ஊடுருவி தமிழகம் வரை வருவதற்கு பலர் உதவி செய்யாமல் வர முடியாது.

இப்படி சட்டவிரோதமாக வருபவர்களால், பெரிய அளவில் பாதுகாப்பிலோ பொருளாதாரத்திலோ தமிழகத்திற்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
சட்டவிரோதமாக குடியேறியவர்களால் பல்வேறு ஐரோப்பிய நாடுகளே பயங்கரமாக பாதிக்கப்பட்டிருப்பது கண்கூடு.

எனவே தமிழக அரசும் மத்திய அரசும் இணைந்து இவர்களின் பின்புலத்தை தீர ஆராய வேண்டும்.

எல்லைகளை தாண்டி ஆயிரம் கிலோமீட்டர் கடந்து தமிழகம் வரையில் வருபவர்களுக்கு திட்டம் போட்டு கொடுப்பது யாரென கண்டுபிடிக்க வேண்டியது கட்டாயம்..

இவர்களுக்கு உதவி செய்து அழைத்து வரும் ஏஜண்ட்களை கண்டுபிடித்தால் மட்டுமே இதுவரையில் குடியேறியவர்கள் எத்தனை பேர், எங்கெல்லாம் குடியேறி உள்ளனர், குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்களா? என்பதை பற்றிய தகவல் கிடைத்திடும்.

ஆகவே தமிழக காவல்துறையும் மத்திய புலனாய்வு அமைப்புகளும் இணைந்து பங்களாதேஷ் ஊடுருவலை முற்றிலுமாக தடுக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் தற்போது பண்டிகை காலம் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு திருப்பூர் காவல்துறை போல துரித நடவடிக்கை எடுத்து
தமிழக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

.

திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழாவுக்கான பந்தல்கால் நடல்!

tiruvannamalai deepa function pandalkal nadal - 2026
#Thiruvannamalai Karthigai deepa pandalkal muhurtham

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீப விழாவிற்காக பந்தக்கால் முகூர்த்தம் இன்று காலை நடைபெற்றது.

நீர், நெருப்பு, ஆகாயம், காற்று, நிலம் ஆகிய பஞ்ச பூத ஸ்தலங்களில் நெருப்பு தலமாக போற்றப்படுவது திருவண்ணாமலை. இங்கே சிவனே மலையாக நிற்பதாக ஐதீகம். இந்தக் கோவிலில் ஒவ்வொருநாளும் திருநாள் தான் என்றாலும், கார்த்திகை மாதத்தில் நடைபெறும் தீபத்திருநாளும், அதையொட்டி 10ஆம் நாள் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் நிகழ்வும் தான் அனைத்திற்கும் சிகரம் வைத்தது போல் சிறப்பானதாக நடைபெறும். இந்த மகா தீப தரிசனத்தை காண்பதற்கே லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை கோயிலுக்கும் வந்து, கிரிவலமும் வருவதுண்டு.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் இந்த 2024 ஆம் ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

மூலவர் சந்நிதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் வரும் டிசம்பர் 4-ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றதும், 10 நாள் உத்ஸவம் ஆரம்பமாகும். தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவின் நிறைவாக டிசம்பர் 13ம் தேதி மகா தீபப் பெருவிழா நடைபெறும். அன்று மாலை கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ‘மலையே மகேசன்’ என போற்றப்படும் 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றப்படும்.

அன்றைய நாளில் ஜோதி வடிவில் அண்ணாமலையார் காட்சி கொடுப்பார். வருடத்திற்கு ஒருமுறை குறிப்பிட்ட சில நிமிடங்கள் மட்டுமே காட்சி தருகின்ற அர்த்தநாரீஸ்வரர், தீப மண்டபத்திற்கு எழுந்தருளி காட்சி தருவார். தொடர்ந்து, 11 நாட்களுக்கு மகா தீப தரிசனத்தை பக்தர்கள் காணலாம்.

இந்நிலையில், ஒவ்வோர் ஆண்டும் தீபத் திருவிழா தொடங்கும் முன், கோவிலில் இவ்விழாவுக்கான பூர்வாங்கப் பணிகளான, வாகனங்கள் புதுப்பித்தல், பழுது பார்த்தல், அழைப்பிதழ் அச்சிடுதல், தீபம் ஏற்ற நெய் கொள்முதல், வர்ணம் பூசுதல், என, பல்வேறு பணிகள் தொடங்க விநாயகர், அண்ணாமலையார் மற்றும் பராசக்தி அம்மன், பரிவார தேவதைகள் ஆகியவற்றை வழிபடுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு கோவிலில், பந்தக்கால் முகூர்த்த விழா, இன்று காலை நடைபெற்றது.

பந்தக்கால் நடும் நிகழ்ச்சியை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள சம்பந்த விநாயகர் சந்நிதியில் பந்தக்காலுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. பின்னர் தேரடி முனீஸ்வரர் கோவில் மற்றும் பஞ்சமூர்த்திகளின் திருத்தேர்களுக்கு முன்பு வைத்து பூஜை செய்யப்பட்டது. இன்று அதிகாலை 5.45 மணி மேல் 7 மணிக்குள் அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் எதிரில் பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது.

தொடர்ந்து, அண்ணாமலையார் திருக்கோயில் மூன்றாம் பிராகாரத்தில் அமைந்துள்ள சம்மந்த விநாயகர் சந்நிதியில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து ராஜகோபுரம் முன்பு காலை 6.50 மணிக்கு பூர்வாங்கப் பணிகளை செய்வதற்கான பந்தக்கால் நடப்பட்டது. அப்போது, “அண்ணாமலையாருக்கு அரோகரா” என்ற பக்தர்கள் பக்தி முழக்கத்துடன் கோஷமிட்டனர்.

இதைத் தொடர்ந்து, கார்த்திகை தீபத்திருவிழா உத்ஸவத்தில் வலம் வரும் வாகனங்கள் சீரமைத்தல், திருக்கோயில் பிராகாரங்கள் சீரமைப்பு பணி உள்ளிட்ட பூர்வாங்க பணிகள் நடைபெறும்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகரன், மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே.கம்பன், மாவட்ட வருவாய் அலுவலர் ராமதீபன், திருக்கோயில் பிச்சகர்கள் ரகுராமன், விஜயகுமார், சிவாச்சாரியார்கள் , திருவண்ணாமலை திமுக நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன், நகர மன்ற உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள், திருவண்ணாமலை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் அலுவலர்கள் ,திருக்கோயில் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம், உறுப்பினர்கள் டிவிஎஸ் ராஜாராம், கோமதி குணசேகரன், சினம் பெருமாள், டாக்டர் மீனாட்சி சுந்தரம் , திருக்கோயில் ஊழியர்கள், அண்ணாமலையார் திருக்கோயில் மேலாளர் செந்தில், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

Ind Vs Ban Test: சேப்பாக்கத்தில் இந்திய அணி வெற்றி; ஆட்டநாயகன் அஷ்வின்!

ind vs ban test - 2026
#image_title

நாலாம் நாளில், சேப்பாக்கத்தில் இந்திய அணி வெற்றி – ஆட்டநாயகன் அஷ்வின்

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

இந்தியா-வங்கதேசம் முதல் டெஸ்ட் போட்டி – சென்னை- 22.09.2024

          இந்தியஅணி முதல் இன்னிங்க்ஸ் 376 (அஷ்வின் 113, ஜதேஜா 86, மகமுது 5/83, டஸ்கின் 3/81), இரண்டாவதுஇன்னிங்க்ஸ் 287/4 டிக்ளேர்டு (கில் ஆட்டமிழக்காமல் 119, ரிஷப் பந்த் 109) வங்கதேசம் முதல் இன்னிங்க்ஸ் 149 (பும்ரா 4/50, ஆகாஷ்தீப் 2/19, ஜதேஜா 2/19); இரண்டாவது இன்னிங்க்ஸில்234 ஆல் அவுட் (சண்டோ 82, ஷட்மன் 35, சாகிர் 33, ஷாகிப் 25, அஷ்வின் 6/88, ஜதேஜா3/58, பும்ரா 1/18)  இந்திய அணி 280 ரன்கள்வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

          இந்தியமற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம்செய்து 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளைக் கொண்டதொடர்களில் விளையாட இருக்கிறது. இந்த சுற்றுப் பயணத்தின்முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில்கடந்த வியாழக்கிழமை தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசஅணி பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தது.

இந்திய அணியின் முதல் இன்னிங்க்ஸ்

          இதனைத்தொடர்ந்து பேட்டிங் செய்ய களம் இறங்கிய இந்தியஅணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் முன்னணி வீரர்களான கில், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டம் இழக்க இந்தியா 34 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது. இதனைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த ஜெய்ஸ்வால்மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டனர். அணியின் ஸ்கோர் 96 ரன்களாக இருந்தபோது 39 ரன்கள் எடுத்திருந்த ரிஷப் பண்ட் ஆட்டம் இழந்தார். இவரைத் தொடர்ந்து களம் இறங்கிய ராகுல்18 ரன்களிலும் சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் 56 ரன்களிலும்ஆட்டம் இழக்க 144 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது.

ரவி இந்திரனும் ரவி சந்திரனும் செய்தமாயம்

          இந்நிலையில்ஜோடி சேர்ந்த ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் அதிரடியாக விளையாடி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டனர். இவர்கள் இருவரும் ஏழாவது விக்கெட்டுக்கு ஜோடியாக 199 ரன்கள் சேர்த்தனர். இந்த ஜோடியின் அபாரமானஆட்டத்தால் இந்தியா சரிவிலிருந்து மீண்டதோடு டெஸ்ட் போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் நிலைக்கு முன்னேறியது. சிறப்பாக ஆடிய அஸ்வின் டெஸ்ட்போட்டிகளில் தனது ஆறாவது சதத்தைபதிவு செய்தார். ரவீந்திர ஜடேஜா அபாரமாக விளையாடி அரை சதம் எடுத்தார்.இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா முதல் நாள் ஆட்ட நேரமுடிவில் 339 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் இழந்திருந்தது.

          இதனைத்தொடர்ந்து இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தஇந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா 86 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். இவரைத் தொடர்ந்து ஆகாஷ் தீப் 17 ரன்களில் அவுட் ஆனார். சிறப்பாக விளையாடிய அஸ்வின் 133 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 113 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதனைத் தொடர்ந்து இந்திய அணி முதல் இன்னிங்ஸில்376 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.வங்கதேச அணியின் பந்துவீச்சில் ஹசன் மக்மூத் 5 விக்கெட்டுகளும்தஸ்கின் அகமது 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

          இதனையடுத்துஇரண்டாம் நாள் உணவு இடைவேளைக்குமுன்பாக வங்கதேச அணி தனது பேட்டிங்கைதொடங்கியது. அந்த அணிக்கு ஆரம்பமேஅதிர்ச்சி காத்திருந்தது வங்கதேச அணியின் தொடக்க வீரர் சத்மான் இஸ்லாம் முதல் ஓவரிலேயே 2 ரன்கள் எடுத்த நிலையில் ஜஸ்பிரீத் பும்ரா பந்துவீச்சில் கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார். இவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான ஜாகிர் ஹசன் 3 ரன்னிலும், முமீனுல் ஹக் ரன் எதுவும் எடுக்காமலும்ஆகாஷ் தீப் பந்து வீச்சில்கிளீன் போல்ட் ஆகி வெளியேறினர். இதனால்இரண்டாம் நாள் உணவு இடைவேளையின்போது வங்கதேச அணி 22 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது.

          உணவுஇடைவேளைக்குப் பின் இந்திய அணியின்நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா பந்துவீச்சில் வங்கதேச அணி அடுத்தடுத்து விக்கெட்டுகள்இழந்து இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது. அந்த அணியின் அனுபவவீரர் ஷகீப் அல் ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் ஆகிய இருவரும் ஓரளவுதாக்குப்பிடித்து ஆடினர். எனினும் வங்கதேச அணியால் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியவில்லை. லிட்டன் தாஸ் 22 ரன்னிலும் ஷகீப் 32 ரன்னிலும் ஆட்டம் இழக்க வங்கதேச அணியால் சரிவிலிருந்து மீள முடியவில்லை. இதனைத்தொடர்ந்து அந்த அணி தங்களதுமுதல் இன்னிங்சில் 149 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.சிறப்பாக பந்து வீசிய பும்ரா 50 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். மேலும் முகமது சிராஜ், ஆகாஷ் தீப் மற்றும் ரவீந்திரஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

          வங்கதேசஅணி ஃபாலோ ஆன் செய்யச்சொல்லியிருக்கலாம் ஆனாலும் சென்னையில் நிலவிய கடும் வெப்பம் காரணமாக இந்தியா மீண்டும் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸில் சொதப்பிய ரோஹித் சர்மா இரண்டாவது இன்னிங்ஸிலும் 5 ரன்களில் அவுட் ஆனார். இவரைத் தொடர்ந்து ஜெய்ஸ்வால் 10 ரன்களிலும் விராட் கோலி 17 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். இவர்களுக்குப் பிறகு ஜோடி சேர்ந்த ரிஷப்பண்ட் மற்றும் ஷுப்மன் கில் இருவரும் சிறப்பாக விளையாடி இந்திய அணியை ஆரம்ப சரிவிலிருந்து மீட்டனர். இதனால் இரண்டாம் நாள் ஆட்ட நேரமுடிவில் இந்தியா 81 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் இழந்திருந்தது.

          இதனைத்தொடர்ந்து தங்களது மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடங்கியஇந்திய அணி ஆரம்பத்தில் நிதானமாகவிளையாடினாலும் அதன் பிறகு அதிரடிபாணியை கடைப்பிடித்தது. இதனால் இந்திய அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. கில் மற்றும் ரிஷப்பண்ட் ஆகிய இருவரும் தங்களதுஅரை சதத்தை கடந்தனர். சுமார் 2 வருடங்களுக்குப் பிறகு டெஸ்ட் போட்டிக்கு மீண்டும் திரும்பிய ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி டெஸ்ட் போட்டிகளில் தனது ஐந்தாவது சதத்தைபூர்த்தி செய்தார். இவர் 128 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 13 பவுண்டரிகளுடன் 109 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதனைத் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் டெஸ்ட் போட்டிகளில்மற்றொரு சதத்தை பதிவு செய்தார். இந்நிலையில் இந்தியா 287 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் இழந்திருந்த போது டிக்ளேர் செய்தது.சுப்மன் கில் 119 ரன்களிலும் கேஎல் ராகுல் 22 ரன்களிலும் களத்தில் இருந்தனர்.

          இதனைத்தொடர்ந்து வங்கதேச அணிக்கு வெற்றி இலக்காக 515 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் தங்களது இரண்டாவது இன்னிங்ஸை வங்கதேச அணி சிறப்பாக தொடங்கியது.அந்த அணியின் தொடக்க வீரர்கள் சிறப்பாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்தனர். அப்போது 32 ரன்களில் ஆடிக்கொண்டிருந்த ஜாகிர் ஹசன் அவுட் ஆனார். இவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் சத்மான் இஸ்லாம் 35 ரன்னிலும் முமீனுல் ஹக் 13 ரன்னிலும் அவுட் ஆகினர். மேலும் அனுபவ வீரர் முஸ்பிகுர் ரஹீம் 13 ரன்னிலும் அஸ்வின் சுழலில் ஆட்டம் இழந்தனர். இதனால் வங்கதேச அணி மூன்றாம் நாள்ஆட்ட நேரம் முடிவில் 158 ரண்களுக்கு 4 விக்கெட்டுகள் இழந்திருந்தது.

          இதனைத்தொடர்ந்து இன்று தொடங்கிய நான்காம் நாள் ஆட்டத்தில் வங்கதேசஅணியின் கேப்டன் நஜ்முல் ஹுசைன் சாண்டோ சிறப்பாக விளையாடி அரை சதம் எடுத்தார்.எனினும் அந்த அணியின் மற்றவீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். அனுபவ வீரர் ஷகீப் அல் ஹசன் 25 ரன்னிலும், லிட்டன் தாஸ் 1 ரன்னிலும் மெஹதி ஹசன் 8 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இறுதியில் சிறப்பாக ஆடிவந்த சான்டோ 82 ரன்களில் அவுட் ஆனார். மேலும் பின் வரிசை ஆட்டக்காரர்கள்ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டம் இழந்ததால் வங்கதேச அணி 234 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

          இன்றுபோட்டி தொடங்கிய நேரம் முதல் வங்கதேச அணி வீரர்கள் சிறப்பானஆட்டத்தை வெளிப்படுத்தினர். கேப்டன் சான்டோ அதிரடியாக ஆட அனுபவ வீரர்ஷகிப் அல் ஹசன் நிதானமாகவிளையாடி வந்தார். இவர்கள் இருவரும் ஐந்தாவது விக்கெட்டுக்கு ஜோடியாக 52 ரன்கள் சேர்த்தனர். இந்த ஜோடியின் ஆட்டம்இந்திய அணிக்கு சற்று தலைவலியாக அமைந்தது. எனினும் ஷகீப் அல் ஹசன் விக்கெட்டைஅஸ்வின் கைப்பற்றியதை தொடர்ந்து வங்கதேச அணியினர் இந்தியாவின் சுழற் பந்து ஜோடி அஸ்வின் மற்றும்ரவீந்திர ஜடேஜாவின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஆட்டம் இழந்தனர். ஒரு கட்டத்தில் 196 ரன்களுக்கு4 விக்கெட் இழந்திருந்த வங்கதேச அணி அடுத்த 30 நிமிடங்களில்மீதமுள்ள 6 விக்கெட்டுகள் இழந்து ஆல் அவுட் ஆனது.இதனைத் தொடர்ந்து இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலைபெற்றிருக்கிறது.

          இந்தப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி சதம் எடுத்த தமிழகவீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக பந்துவீசி 88 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகள் கைப்பற்றினார். மேலும் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளும் ஜஸ்ப்ரீத் பும்ரா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம்இந்திய அணி உலக டெஸ்ட்சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிகள் பட்டியலில் தங்களது முதல் இடத்தை தக்க வைத்திருக்கிறது. இந்தப்போட்டியில் சிறப்பாக சதம் அடித்ததோடு இரண்டாவதுஇன்னிங்ஸில் 6 விக்கெட் கைப்பற்றிய ரவிச்சந்திரன் அஸ்வின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

          ரோஹித்ஷர்மா மற்றும் விராட் கோலியின் ஃபார்ம் தற்போது கவலை அளிக்கிறது. வருகின்ற 27ஆம் தேதிகான்பூரில் இரண்டாவது டெஸ்ட் தொடங்க உள்ளது.

Ind Vs Ban Test: சேப்பாக்கத்தில் கில், பந்த், அஷ்வினின் அசத்தல் ஆட்டம்!

ind vs ban test - 2026
#image_title

இந்தியா-வங்கதேசம்முதல் டெஸ்ட் போட்டி – சென்னை- 21.09.2024

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

மூன்றாம் நாளில், சேப்பாக்கத்தில் கில், பந்த் மற்றும் அஷ்வினின் அசத்தல் ஆட்டம்

இந்திய அணி முதல் இன்னிங்க்ஸ் 376 (அஷ்வின்113, ஜதேஜா 86, மகமுது 5/83, டஸ்கின் 3/81), இரண்டாவது இன்னிங்க்ஸ் 287/4 (கில் ஆட்டமிழக்காமல் 119, ரிஷப் பந்த் 109, ) வங்கதேசம் முதல் இன்னிங்க்ஸ் 149 (பும்ரா 4/50, ஆகாஷ்தீப்2/19, ஜதேஜா 2/19); இரண்டாவது இன்னிங்க்ஸில் 158/4 (ஶண்டோ ஆட்டமிழக்காமல் 51, ஷட்மன்35, சாகிர் 33, அஷ்வின் 3/63, பும்ரா 1/18)  இந்திய அணி 357 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

          இந்தியஅணியின் ரிஷப் பண்ட்உணர்ச்சிமயமான தனது ஆறாவது டெஸ்ட் சதத்தையும், ஷுப்மான் கில் ஐந்தாவது சதத்தையும் இன்று அடித்தனர். மேலும் இந்திய பந்து வீச்சாளர்கள் மற்றும் பீல்டர்கள் கள நிலவரங்களை நன்று புரிந்துகொண்டு சென்னையில்மூன்றாவது நாளில் நான்கு வங்கதேச இரண்டாவது இன்னிங்ஸ் விக்கெட்டுகளை வீழ்த்தினர். டெஸ்டில் இன்னும் இரண்டரை நாட்கள் மீதமுள்ள நிலையில், ரோஹித் ஆக்ரோஷமான டிக்ளேர் அறிவிப்பு மூலம் 515 என்ற இலக்கில் வங்கதேசம்357 ரன்கள் பின்தங்கியுள்ளது.

          ஆடுகளம்இன்னும் உடைந்து போகாததாலும், சராசரி வேகப்பந்தின் திசை மாற்றம் முதல்நாளில் இருந்ததைவிட  மூன்றாம்நாளில் சரிந்ததாலும், இன்றைய நாள் போட்டி சிறந்த பேட்டிங்கிற்கு உகந்ததாக இருந்தது. டிக்ளரேஷனைஅறிவிக்க இந்தியாவின் தாக்குதல் அணுகுமுறை இருந்தபோதிலும், அவர்கள் மூன்றாம் நாளில் 41 ஓவர்களில் 16 தவறான ஷாட்களை மட்டுமே விளையாடினர், அதே நேரத்தில் 206 ரன்கள்எடுத்தனர். பங்களாதேஷ் பேட்டிங் செய்யும் போது நிலைமை சீராகஇருந்தது, ஆனால் ஆர் அஷ்வினின் மராத்தான்ஸ்பெல் போட்டியில் இந்தியாவின் உயர்வைத் தக்க வைத்துக் கொண்டது.பந்து வீச்சாளர்கள் சற்றே கடினமான மூன்று குறைந்த உயர கேட்சுகள் பிடித்ததற்காக பீல்டர்களுக்குநன்றி சொல்ல வேண்டும்.

          காலையில்இருந்த நிலைமைக்கு, நன் கு அடித்து ஆடக்கூடிய கில் மற்றும் பந்த்,தாங்களால் தவறு செய்தால்  மட்டுமேஅவுட் ஆக முடியும் என்பதைப் புரிந்துகொண்டனர், மேலும் பெரிய ஸ்கோருக்கு தயாராக இருந்தார்கள். அவர்கள்நல்ல பந்துகளை மதித்து ஆடினர். இந்தியாவின் 64 இரண்டாவது இன்னிங்ஸ் ஓவர்களில் 25 ஓவர்களை வீசிய மெஹிதி ஹசன் மிராஸை கில்நாலு சிக்சர்கள் அடித்தார்.ஷாகிப் அல் ஹசனின் இடதுகை சுழற்பந்து வீச்சைப் பார்த்து பந்த், நான்கு சிக்ஸர்களை அடித்து 59 ரன்களை எட்டினார், இது 34 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் ஏழாவது அதிகபட்சமாக இருந்தது.

          இருவரும்சிக்ஸர்கள் அடித்தார்கள், ஆயினும்யஷஸ்வி ஜெய்ஸ்வால்மற்றும் ரோஹித் ஷர்மா போல் அல்லாமல், பந்துவீச்சாளர்களைமரியாதையுடன் அணுகினர். மேலும் அவர்கள்பேட்டின் விளிம்பில் பட்டு பந்துபறந்ததையோ அல்லது நெருக்கமான பீல்டர்களைப்பற்றியோ  கவலைப்படாமல்சிறிது நேரம் டிஃபன்ஸ் ஆடினர். நாளின் ஏழாவது ஓவரில் முதல் சிக்சரை அடித்தனர். கில்அதை வைட் லாங்-ஆன்திசையில் இரண்டுசிக்ஸர்களுடன் அழகாகச் செய்தார்.

          பந்த்,முதல் இன்னிங்ஸில் மென்மையான ஆட்டமிழப்பிற்குப் பிறகு அதை போல ஆட்டமிழக்கமல் இருக்கஅதிக நேரம் எடுத்துக் கொண்டார். கில் மதிய உணவுக்குமுன் பேட்டிங் வேகத்தை முடுக்கிவிட்டார். அறிவிப்புவிரைவில் வரலாம் என்று பரிந்துரைத்தார். வேகமான ரன்கள் அடிக்கவேண்டும் என்ற உந்துதலுடன்,இடைவேளைக்கு ஏழு நிமிடங்களுக்கு முன்பந்திலிருந்து ஒரு கேட்ச் வாய்ப்பு வழங்கினார். ஆனால் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ அதைத் தவறவிட்டார். இடைவேளைக்குமுந்தைய இறுதி ஓவரில் பந்த் இன்னும் இரண்டு பவுண்டரிகளை அடித்தார்.

          மதியஉணவிற்குப் பிறகு, 118 பந்துகளில் தனது சதத்தை எட்டுவதற்காகவேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஸ்பின்னர்கள் இருவரையும் தனது முத்திரை ஷாட்டான ஃபிளிக்கை பந்த் வெளிப்படுத்தினார். கில் மிகவும் நிதானமாகசதம் அடித்தார். அவர் சதம் அடிக்க161 பந்துகள் எடுத்துக்கொண்டார்.கே.எல். ராகுல் சில கம்பீரமான இன்சைட்-அவுட் டிரைவ்களை விளையாடினார், அதற்கு முன் பங்களாதேஷை தேநீர்வரை பேட் செய்ய ஒருமணி நேரம் கொடுத்து ரோஹித் டிக்ளேர் செய்தார்.

          ஜாகிர்ஹசன் அவுட் ஆகக்கூடாது என்ற முழு நோக்கத்துடன் உள்ளே வந்தார். முன் மற்றும் பின் கால் இரண்டையும்ஓட்டி, முகமது சிராஜை ஒரு சிக்ஸருக்கு அடித்தார்.பந்து அதிகம் ஸ்விங் ஆகாததால், அவரும் ஷாட்மான் இஸ்லாமும் ரன்களைத் தேடிக்கொண்டே இருந்தனர், ஒவ்வொரு லென்த் தவறுக்கும் தண்டனை அளித்தனர்.

          அஷ்வின்பந்துவீச வந்தவுடன், அவர் சில வித்தைகள்செய்தார். இங்கே பேட்டின்ஸ்டிக்கரை அடித்தார், பந்தை உள்ளே எட்ஜ் ஆக வைத்தார். தேநீருக்குப்பிறகு, அவரும் ஜஸ்பிரித் பும்ராவும் மூன்று இறுக்கமான ஓவர்களை வீசினார். நான்காவது ஓவரில் ஜாகர்ஒரு பந்தில் டிரைவ் செய்ய முயன்று ஆட்டமிழந்தார்.

நிலைமைகள் அஸ்வினை தனது விக்கெட்டுக்காக கடுமையாகஉழைக்க வைத்தது. அவர் நான்கு சிக்ஸர்களுக்குகூட கொடுத்தார். ஒரு இன்னிங்ஸில் அவர் விட்டுக்கொடுத்த அதிகபட்சம்ஐந்து சிக்சர்கள்.

          சரியாகவிளையாடாத மொமினுல் ஹக்கைவெளியேற்ற அஸ்வின் பின்னர் ஒரு அழகுப் பந்தை வீசினார். அந்தச் சமயத்தில் பந்து நன்கு திரும்பத்தொடங்கியது.மேலும் டர்ன் எட்ஜைத் தவறவிட போதுமானதாக இருந்தது ஆனால் ஆஃப் ஸ்டம்பை தகர்த்தது. முஷ்பிகுர் ரஹீம், “கொதிக்கும் தகரக்கூரையில் ஒருபூனையாக இருந்தார், மிட்-ஆனில் ராகுலிடம்ஒரு லோ கேட்ச் அடிப்பதற்கு முன்பு அஷ்வினை ஒரு சிக்ஸருக்கு ஸ்லாக்-ஸ்வீப் செய்தார். ஷாகிப் அல் ஹசன் இன்னும்குறைவாகவே செட்டில் ஆனார், ஆனால் மோசமான வெளிச்சத்தால் காப்பாற்றப்பட்டார், இதனால் நாடகம் சீக்கிரமே முடிந்தது. இவை அனைத்திற்கும் மத்தியில்,கேப்டன் நஜ்முல் நிதானமாக பேட்டிங் செய்தார், ஆனால் 60 பந்தில் 51 ரன்கள் எடுத்தார்.

ரயில் பயணங்களில் ஓர் அனுபவம்!

train - 2026
#image_title

ரயில் பயணங்களில்…


கடந்த செவ்வாய் அன்று திருச்சியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தேன். அன்று 2.25க்கு வரவேண்டிய மயிலாடுதுறை விரைவு வண்டி 3.40க்கு திருச்சி வந்து, இரவு 9.15க்கு செங்கோட்டை சேர்ந்தது. வழக்கமாக ராஜபாளையம் ரயில் நிலையத்தில் பொதிகை கிராஸிங்க்காக காத்திருக்கும் நேரம் மிச்சம். அனேகமாக ரயில்வே துறை இந்த நேரத்தையே இந்த வண்டிக்கு நிரந்தரமாக்கலாம். காத்திருப்பு அலுப்பு இல்லாமல் இருக்கும். மதுரையில் 6.15க்கு எடுப்பதால் அலுவலகம் சென்று திரும்புபவர்களுக்கும் வசதியாக இருக்கும்.

நிற்க..

ரயிலில், என் எதிரில் வயதான பெண்மணி ஒருவர் அமர்ந்திருந்தார். மதுரை வரை கூட்ட நெரிசல். எதுவும் பேசவில்லை. மதுரையில் இரு பெண்மணிகள், ஒரு பெண்ணின் மகன், மகள் என நால்வர் அருகில் அமர்ந்தார்கள். சங்கரன்கோயிலில் இறங்க வேண்டிய அந்த வயதான பெண்மணி என்னிடம் பேச்சுக் கொடுத்தார்.

இது நல்ல ருத்ராட்சமா என்று கையில் இருந்த ஒரு மாலையைக் காட்டி கேள்வி எழுப்பினார். அவருக்கு ருத்ராட்ச மாலைகள் குறித்த தகவல்களைச் சொன்னேன். பிறகு பேச்சு மகாளயம் பற்றி வந்தது. தாம் சைவப் பிள்ளை வகுப்பைச் சேர்ந்தவர் என்று சொல்லிவிட்டு, கடந்த மூன்று வருடங்களாக தமது கணவரின் நினைவாக கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் நடுவில் எள் வைத்து நீர் இறைத்து, கணவர் பேரைச் சொல்லி தர்ப்பணம் செய்து வருவதாகவும், மேலும் என்ன செய்தால் சிறப்பு என்றும் கேள்வி கேட்டார். அப்படியே பேச்சு வளர்ந்து கொண்டே போனது.

“ஏன் உங்களுக்கு மகன்கள் இல்லையா?”

“இருக்கிறார்கள். இரண்டு பேர். ஆனால் அவர்களுக்கு நேரம் கிடையாது… சாப்பாடும் ஏதாவது சாப்பிட்டு விடுவான் அதனால் அவனை கட்டாயப்படுத்த முடியாது எனவே நானே என் கணவருக்கு தர்ப்பணம் கொடுக்கிறேன். அப்படி கொடுக்கலாம் இல்லையா?

ஓ! இப்படி நீங்கள் தர்ப்பணம் கொடுக்கலாம் என்று யார் உங்களுக்கு சொன்னார்கள்? உங்கள் குடும்ப புரோகிதர் அல்லது கோயிலில் யாராவது ஒரு வைதீக அந்தணரிடம் கேட்டால் சொல்லுவாரே யார் உங்களுக்கு சொன்னது ?

நான் யூடியூபில் பார்த்து தெரிந்து கொண்டேன். தேச மங்கையர்க்கரசி இது பற்றி சொல்லியிருக்கிறார் பெண்களும் தர்ப்பை வைத்து கட்டைவிரல் வழியாக எள்ளும் தண்ணீரும் விடலாம் என்று சொன்னதை கேட்டு தான் செய்கிறேன்…

ஆனால் அம்மா… இப்படி எல்லாம் பெண்கள் செய்யக் கூடாது. உங்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள் அல்லவா? அவர்கள் தான் செய்ய வேண்டும். மகன்கள் இருக்க உங்கள் கணவருக்கு நீங்கள் செய்யக்கூடாது. பித்ரு கடன், மகாளய பட்சம் என்பதெல்லாம் மரபு வழி உறவை காட்டும், தந்தை மகன் கடமையைச் சொல்லும் ஒரு ஏற்பாடு. கட்டாயம் இந்த மகாலய பட்சத்தில் உங்கள் கணவருக்கு நீங்கள் செய்ய வேண்டும் என்று நினைத்தால் இந்த 15 நாளில், உங்கள் கணவர் காலமான திதி வரக்கூடிய நாள் அல்லது ஏதாவது ஒரு நாள் உங்கள் மகனை காலை நேரம் விரதம் இருக்கச் செய்து இவ்வாறு தர்ப்பணம் செய்யலாம். வருடம் தோறும் நீங்கள் படையலிடும் திதியைப் போன்று ஒரு நாள் படையலும் செய்யலாம் அது உங்கள் மனசைப் பொருத்தது…

அப்படி என்றால் நான் அவ்வாறு செய்யவே கூடாதா? என் கணவரை நினைத்துக் கொண்டு தர்ப்பணம் செய்து, காகத்துக்கு சாதம் வைப்பேன். அப்படி செய்வது தவறா?

வேண்டுமானால் நீங்கள் நாளை அதே சங்கரன்கோயில் கோவிலுக்கு செல்லுங்கள் அங்கிருக்கும் பூஜாரிகள் எவரிடமாவது இந்த விஷயத்தை கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டு அதன் பிறகு செய்யுங்கள்…. நான் சொல்வதில் நம்பிக்கை இல்லை என்றால்…

இல்லை… நீங்களே சொல்லி விட்டீர்கள் அதன் பிறகு நான் யோசிக்கவில்லை.

நீங்கள் ஒரு நாள் படையல் போடும்போது உங்கள் கணவரை நினைத்துக் கொண்டு அவருக்கு விருப்பமானதை சமைத்துக் கொடுக்கலாம் அது அவசியம் மனைவிகள் தான் சமைக்க வேண்டும்

ஆனால் என் மருமகள் அன்று சமையல் கட்டுக்குள் விடமாட்டாளே…

பரவாயில்லை அவரிடம் கேட்டு கொஞ்சம் கெஞ்சிக் கூத்தாடி… இந்த ஒரு பதார்த்தத்தை மட்டுமாவது நான் செய்கிறேனே என்று மாமியார் மருமகள் சண்டை எதுவும் வந்துவிடாமல் அமைதியாக கேட்டு நீங்கள் செய்யுங்கள் அது உங்களுக்கு மன திருப்தியை அளிக்கும் அல்லவா?!

இல்லை என் மருமகள் சண்டை போட மாட்டாள் என்றாலும் தானே அனைத்தையும் சமைப்பேன் என்று அடம் பிடிப்பாள் அதனால் தான் சொன்னேன்….

பரவாயில்லை சமைப்பது, காகத்துக்கு சாதம் இடுவது, உங்கள் மகன்கள் சரியாக இந்த கடமையை செய்கிறார்களா என்பதை கவனித்து வழிப்படுத்துவது, அவர்களது இந்த பித்ரு கடனுக்கு கூட இருந்து உதவி செய்வது … இதுதான் உங்கள் பணியாகவும் பொறுப்பாகவும் இருக்க முடியும். அதை விட்டு யாரெல்லாமோ யூட்யூபில் சொல்கிறார்கள் என்பதைக் கேட்டு குடும்ப வழக்கத்தை மாற்றாதீர்கள்… என்று சொல்லி வைத்தேன்..!

செங்கோட்டை ஶ்ரீராம்

செங்கோட்டையில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு 21வது பிறந்தநாள்!

DSC 0593 scaled e1727065726597 - 2026


செங்கோட்டையில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு 21வது பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாட்டம்.

செங்கோட்டை இரயில் நிலைய வளாகத்தில் வைத்து பொதிகை
எக்ஸ்பிரஸ் இரயிலுக்கு 21வது பிறந்தநாள் செங்கோட்டை இரயில் பயணிகள் சங்கம் மற்றும் வர்த்தக சங்கம் சார்பில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

தென்மாவட்ட பயணிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த 20ஆண்டுகளுக்கு முன்பு பொதிகை எக்ஸ்பிரஸ் இரயில் சேவை துவங்கப்பட்டது. இந்த இரயிலானது செங்கோட்டையிலிருந்து பொதிகை எஸ்பிரஸ் இரயில் தென்காசி, கடையநல்லுார் சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், சிவகாசி, விருதுநகர், மதுரை வழியாக சென்னை வரை
நாள்தோறும் இயக்கப்படுகிறது.

இதேபோல் சென்னையிலிருந்து செங்கோட்டைக்கு இந்த இரயில் வந்து செல்கிறது. இந்நிலையில் பொதிகை எக்ஸ்பிரஸ் நேற்று செப்-20ஆம் தேதியில் 20வது ஆண்டு நிறைவு பெற்று 21வது ஆண்டு துவக்க நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியில் செங்கோட்டை இரயில் பயணிகள் சங்கம் மற்றும் வர்த்தக சங்கம் சார்பில் இரயில் நிலைய வளாகத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இரயில் ஓட்டுநர்கள் அனில்குமார், அஸ்லாம்ஹனீப் ஆகியோருக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டது.

பின்னா் கேக் வெட்டி ஓட்டுநர்கள், மற்றும் இரயில் பயணிகளுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் செங்கோட்டை இரயில் பயணிகள் சங்க பொருளாளா் கேகே.சுந்தரம், உறுப்பினா்கள் சங்கரபாண்டியன், நவநீதகிருஷ்ணன், மீனாட்சிசுந்தரம் மற்றும் சமூக ஆர்வலா்கள் பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.