உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா சாம்பியன் – கிரிக்கெட் மைதானம் போன்ற கேக் வெட்டி கொண்டாடிய மதுரை ரசிகர்கள்!
டி. 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா சாம்பியன் பட்டம் வென்றதை ஒட்டி, மதுரை ஏ.ஆர்.சிட்டி கிரிக்கெட் கிளப் வீரர்கள் கிரிக்கெட் ஸ்டேடியம் போல தயாரிக்கப்பட்ட கேக் வெட்டி கொண்டாடினர்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்திய 9வது டி20 உலக கோப்பை தொடரின் பரபரப்பான இறுதிப் போட்டியில், தென் ஆப்ரிக்க அணியுடன் மோதிய இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2007க்கு பிறகு, 2வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
இரு அணிகளும் நடப்பு தொடரில் ஒரு போட்டியில் கூட தோற்காமல் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்ததால், இப்போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
கடந்த முறை ஒருநாள் உலககோப்பை போட்டியில் பைனல் வரை வந்து தோற்றதால், ஏக்கத்தில் இருந்த இந்திய ரசிகர்களுக்கு இந்த வெற்றி பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. இந்த வெற்றியை இந்தியா முழுதும் உள்ள ரசிகர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டில் உள்ள இந்தியர்களும் கொண்டாடி வருகின்றனர்.
மதுரை கோவில் பாப்பாகுடி, ஏ.ஆர்.சிட்டி கிரிக்கெட் கிளப் சார்பில் பட்டாசு வெடித்து உற்சாகமாகக் கொண்டாடினர். மேலும், கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணியின் வெற்றியை கொண்டாடும் விதமாக, நட்புறவு கிரிக்கெட் போட்டியும் நடத்தினர். பின்பு, கிரிக்கெட் மைதானம், பேட் ஸ்டம்ப், பந்து மற்றும் நீல நிற ஜெர்சி உடன் வித்தியாசமாக உருவாக்கப்பட்ட கேக் வெட்டி சக வீரர்கள் தங்களுக்குள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இந்தியாவுக்கு அவசியமா? அது தேவை என்று பாஜக-வை எதிர்க்கும் 26 கட்சிகள் ஒன்றாகச் சேர்ந்து ஒரு வருடம் முன்பு கோரிக்கை வைத்தன. அந்தக் கோரிக்கை குப்பையானது. அதற்கான வாதங்கள் சப்பையானவை.
அண்மையில் முதல்வர் மு. க. ஸ்டாலின் முன்மொழிய, தமிழக சட்டசபையும் ஒரு தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. ஜாதிவாரிக் கணக்கெடுப்பு ஏன் அவசியம் என்று குறிப்பிட்டு, அந்தப் பணியை மத்திய அரசு செய்துதர வேண்டும் என்று வலியுறுத்துகிறது அந்தத் தீர்மானம். அது அர்த்தமற்றது. தீர்மானத்தின் முக்கியப் பகுதி இங்கே:
இந்திய மக்கள் அனைவருக்கும் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகிய அனைத்திலும் சம உரிமை, சம வாய்ப்பை உறுதிசெய்யும் வகையில், திட்டங்கள் தீட்டி சட்டங்கள் இயற்ற வழிவகை செய்ய, ஜாதிரீதியான மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம்.
ஐம்பத்தி ஐந்து ஆண்டுகளாகத் தமிழகத்தை திராவிடக் கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. இப்போது திமுக ஆட்சி. ஆனால் முந்தைய காங்கிரஸ் அரசு மாநிலத்தில் இட்ட அடித்தளத்தின் தொடர் பயனையும், காலம் தானாகத் தரும் வளர்ச்சியை மட்டும் தமிழகம் கண்டிருக்கிறது. சாதாரண மக்கள் வேறு பெரிய முன்னேற்றத்தைப் பார்க்கவில்லை. என்ன காரணம்?
மாநிலத்தில் என்ன ஜாதியில் எத்தனை மக்கள் இருக்கிறார்கள் என்ற விவரம் அரசிடம் இல்லை என்பதால்தான், ஸ்டாலின் ஆசைப்படுகிற முன்னேற்றத்தைத் தமிழக மக்கள் இதுவரை அடையவில்லையா? அவர் முன்மொழிந்த சட்டசபைத் தீர்மானம், அதைத்தானே சொல்ல வருகிறது?
சட்டசபைத் தீர்மானம் குறிப்பிடும் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு, ஆகிய மூன்று விஷயங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.
“ஆறிலிருந்து பதினான்கு வயதுள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் ராஜ்ஜியம் கட்டாய இலவசக் கல்வியை அளிக்கவேண்டும், அதற்கு வழிமுறையான சட்டத்தை இயற்ற வேண்டும்” என்று நமது அரசியல் சட்டம் விதிக்கிறது. இதற்கான சட்ட திருத்தம் 2010-ஆம் வருடம் அமலுக்கு வந்தது.
குழந்தைகளுக்கான கட்டாய இலவசக் கல்வி என்பது எல்லா ஜாதி மத மக்களுக்கும் கிடைக்கச் செய்யவேண்டும், அது ராஜ்ஜியத்தின் பொறுப்பு, என்று அரசியல் சட்டம் சொல்கிறது. காலம் காலமாகப் பள்ளிக் கல்வியை மாநில அரசு நிர்வகிக்கிறது, மேற்பார்வை பார்க்கிறது. ஆகையால் தமிழகக் குழந்தைகளின் பதினான்கு வயது வரையிலான பள்ளிக் கல்வி, தமிழக அரசின் கடமை.
பதினான்கு வயது என்பதோடு நிறுத்தாமல், மாநிலத்திலுள்ள சிறுவர்களின் பத்தாம் வகுப்பு முடியும்வரை – ஏன் பன்னிரெண்டாம் வகுப்பு முடியும் வரை கூட – தமிழக அரசு எல்லா ஜாதி மதத்தவருக்கும் தரமான கட்டாய இலவசக் கல்வியை அளிக்கலாம். அரசியல் சட்டம் நிர்பந்திக்காமல் கூட ஒரு அரசு இப்படியான கட்டாய இலவசக் கல்வியை அளிக்க முடியும்.
தமிழகத்தில் எல்லாக் குழந்தைகளுக்கும் பதினான்கு வயது வரையிலாவது தரமான கட்டாய இலவசக் கல்வி கிடைத்தால் என்னாகும்? சட்டசபைத் தீர்மானத்தில் சொல்லப்பட்ட கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் என்ற மூன்று நோக்கங்களும் அடுத்தடுத்து மக்கள் வாழ்வில் தாமாகப் பெரிதளவு நிறைவேறுமே? இதைச் செய்து முடிக்க ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வேண்டாம். முதலமைச்சரிடம் முனைப்பு இருந்தால் போதும்.
ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடந்தால், அரசு “திட்டங்கள் தீட்டி சட்டங்கள் இயற்றும்” என்கிறது சட்டசபைத் தீர்மானம். தனக்கு ஏற்கனவே அரசியல் சட்டம் அதிகாரங்கள் தரும் விஷயங்களில், தமிழக அரசு – அதுவும் திமுக அரசு – திட்டங்கள் தீட்டி மக்களுக்கான சேவைகளைக் குறை இல்லாமல் அளித்திருக்கிறதா?
அரசியல் சட்டத்தின் கீழ், ஆதியிலிருந்து ஒரு மாநில அரசின் தனியான கட்டுப்பாட்டிலும் பொறுப்பிலும் இருக்கும் சில துறைகள் இவை: சட்டம் ஒழுங்கு, பொது சுகாதாரம், ஆஸ்பத்திரிகள், சாலைகள், நீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்தல், பாதாள சாக்கடைகள், நிலம், நில அளவை, பட்டா போன்ற நில ரிகார்டுகள். இவை மாநிலத்தின் அனைத்து மக்களின் வாழ்வோடு, பெரிதும் அன்றாட வாழ்வோடு, தொடர்புடையவை.
மேலே சொன்ன துறைகள் ஏதாவது ஒன்றின் செயல்பாட்டில், தமிழக அரசுக்கு – ஒரு திராவிடக் கட்சியின் ஆட்சிக்கு – நாம் பாஸ் மார்க்காவது தர முடியுமா? சட்டம் ஒழுங்கு பல இடங்களில் பல்லைக் காட்டுகிறது. சாலைகள் வாய் பிளக்கின்றன. அரசு ஆஸ்பத்திரிகள் அழுகின்றன. குடிநீர் நமக்குத் தண்ணி காட்டுகிறது. பாதாள சாக்கடை நீர் சந்திக்கு வருகிறது. பட்டா கேட்டால் பர்ஸைப் பிடுங்குகிறார்கள்.
அரசு நடத்தும் திமுக-வுக்கு, அரசியல் சட்டம் ஏற்கனவே கொடுத்திருக்கும் அதிகாரங்களை மக்கள் நலனில் பிரயோகித்து அவர்களுக்கு நல்லது செய்ய வக்கில்லை. இந்த லட்சணத்தில், மத்திய அரசு ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எடுத்துக் கொடுத்தால், அதன் பிறகு ஸ்டாலின் அரசு திட்டங்கள் தீட்டுமா? சட்டங்கள் இயற்றுமா? அதன் வழியே “மக்கள் அனைவருக்கும் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகிய அனைத்திலும் சம உரிமை, சம வாய்ப்பை” உறுதி செய்யுமா? வெற்று வார்த்தைகள்.
இன்னொன்று. மாநிலத்தில் யார் என்ன ஜாதி என்று அரசு தெரிந்துக்கொண்ட பின், சட்டசபைத் தீர்மானத்தின் படி மக்களுக்கு “சம உரிமை, சம வாய்ப்பை” அரசு உறுதி செய்யுமா – வேலைவாய்ப்பு உட்பட? அதாவது, தமிழகத்தில் தனியார் துறையில் தொழில்வளமும் வேலைவாய்ப்பும் விரைவாகப் பெருகாமல் பார்த்துக் கொண்டு, சொற்ப அரசுப் பணி இடங்களுக்காகப் பல லட்சம் மக்களை ஜாதி அடிப்படையில் ஏங்க வைத்துக் கொண்டே இருக்குமா மாநில அரசு? எல்லா ஜாதி மக்களுக்கும் இது எப்போதும் துரோகம் அல்லவா?
அரசியலை ஜாதி ரீதியாக, ஒரு ஜம்பத்துக்காக, வருமானம் பார்க்கும் ஒரு தொழிலாக, செய்யும் சில ஜாதித் தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் சங்கதியை அந்தந்த ஜாதிகளில் சிலர் உணர்வார்கள், பலர் உணரமாட்டார்கள். அந்த மாதிரித் தலைவர்களைத் தங்கள் கையில் போட்டுக் கொண்டு, அவர்களோடு பேரம் செய்துகொண்டு, தங்களின் வளத்தை, தங்கள் குடும்பத்தின் செழிப்பை, தங்கள் கட்சியின் நலனை, பாதுகாக்கும் பெரிய கட்சித் தலைவர்கள் உண்டு.
அரசியல் விளையாட்டுக்கள் மூலம் கொழிக்கும் சில பெரிய கட்சிகளின் தலைவர்களுக்கும், அவர்களுடன் அணி சேர்ந்து பயன் பெறும் சில சிறிய கட்சிகளின் தலைவர்களுக்கும் ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு லாபம் தரும். மற்றபடி, அரசுமுறையாக இப்படி ஒரு கணக்கெடுப்பு நடந்து அதன் விவரங்கள் வெளியானால், அதன் மூலம் தமிழக மக்கள் – அல்லது தேச அளவில் எல்லா மக்களும் – ஒன்றுபட மாட்டார்கள். மாறாக, அரசியல்வாதிகளின் குயுக்தியால் மக்கள் மேலும் பிளவுபடலாம்.
ஸ்டாலினிடம், அவருடன் உடன்படும் பிற அரசியல்வாதிகளிடம், நாம் கேட்டுக் கொள்ளலாம்: ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடந்து, நீங்கள் “திட்டங்கள் தீட்ட” வேண்டாம். பாவம் மக்கள். முடிந்தவரை அவர்கள் நலமாக இருக்கட்டுமே!
Author: R Veera Raghavan, Advocate, Chennai (veera.rvr@gmail.com)
https://rvr-india.blogspot.com
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது பற்றி எதிர்க்கட்சிகள் எழுந்து நின்று விளக்கம் அளிக்க வேண்டும் என பாஜக., எம்.பி., அனுராக் தாக்கூர் மக்களவையில் வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து பாஜக., எம்பி.,க்கள் ‘வெட்கக்கேடு வெட்கக்கேடு..’ என முழக்கமிட்டார்கள்!
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் மக்களவையில் திங்கள்கிழமை இன்று நடைபெற்றது. அப்போது பாஜக., எம்.பி., அனுராக் தாக்கூர், ஆளும்கட்சியின் பல்வேறு சாதனைகளைப் பற்றியும், எதிர்க்கட்சிகளின் மீதான குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துப் பேசினார்.
அப்போது அவர், “தேர்தல் முடிவு வெளியான ஜூன் 4ல் இருந்து 99 இடங்களை பெற்ற கட்சி, 240 இடங்களை விட அதிகம் வெற்றி பெற்றது போல் சித்திரிக்க முயல்கிறது. பிரதமர் மோடியின் ஆட்சியில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டது; ஆனால் எதிர்க்கட்சியை சேர்ந்த உதயநிதி சநாதன தர்மத்தை இழிவுபடுத்துகிறார்!” என்றார்.
அனுராக் தாக்கூரின் இந்தப் பேச்சுக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. குறுக்கிட்டுப் பேசிய திமுக எம்பி., தயாநிதி, ”சனாதன விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. நாடாளுமன்ற விதி எண் 352ன் படி, அனுராக் தாக்கூரின் கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்” என்றார்.
அதற்கு பதிலளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, ”அப்படியென்றால் நீங்கள் அனைவரும் விதி எண் 352ன்கீழ் பேசத் தயாராக இருக்க வேண்டும். நீட் விவகாரம் கூட நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அதுபற்றி ஏன் மக்களவையில் பேசுகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.
அதன் பின்னர் பேசிய அனுராக் தாக்கூர், ”தமிழகத்தின் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து எதிர்க்கட்சிகள் எழுந்து நின்று விளக்கம் அளிக்க வேண்டும்” என்று கூறினார். அப்போது, ‘வெட்கக்கேடு.. வெட்கக்கேடு..’ என ஆளும் பாஜக., எம்பி.,க்கள் முழக்கமிட்டனர். இவ்வகையில், நாடாளுமன்றத்தில் இன்று தொடக்கத்தில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் ஒரு புயலைக் கிளப்பி விட்டது.
முதல் பத்திரிக்கையாளர் தேவரிஷி நாரதரின் பிறந்த நாளான நாரதர் ஜயந்தியை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் பஞ்சகுலாவில் ஜூன் 30 ஞாயிறு அன்று ஹரியானா மாநில விஸ்வ சம்வத் கேந்திரா அறக்கட்டளை ஒரு விழாவுக்கு ஏற்பாடு செய்தது.
9வது மாநில அளவிலான பத்திரிகையாளர் விருது வழங்கும் இந்த விழாவில் ஹரியானா முதல்வர் கலந்து கொண்டார். இதில், 12 பிரிவுகளில் 12 பத்திரிகையாளர்களுக்கு சிறந்த பங்களிப்பிற்காக தேவரிஷி நாரதர் விருது வழங்கி, அவர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்.
இந்த நிகழ்ச்சிக்கு விஸ்வ சம்வத் கேந்திரா தலைவர் மார்கண்டேய அஹுஜா தலைமை வகித்தார். ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் அகில பாரத ஊடகத்துறை பொறுப்பாளர் சுனில் அம்பேகர் சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் அவர் பேசிய போது, “இதழியல் துறை எண்ணிக்கையில் மிகச் சிறியதாக இருக்கலாம், ஆனால் அது மிக முக்கியமான துறை. ஒரு பத்திரிக்கையாளர் 24 மணி நேரமும் சுறுசுறுப்பாக இருந்து தன்னைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
கொரோனா போன்ற தொற்றுநோய்களின் போது அனைவரும் தங்கள் வீடுகளுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த போதும், பத்திரிகையாளர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றினர்.
சமுதாயம் மற்றும் தேசத்தின் நலன் கருதி ஊடகவியலாளர்கள் உண்மையான தகவல்களை வெளியிட வேண்டும். ஊடகவியலாளர்கள் ஜனநாயகத்தின் விழிப்புடன் இருக்கும் காவலர்கள், இதன் காரணமாக ஜனநாயகம் வலுவடைகிறது.
பத்திரிக்கையாளர்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி, சுயநலம் இல்லாமல் செய்தி தருகிறார்கள், அதன் மூலம்தான் நமது சமூகம் ஒன்றுபடுகிறது.
இந்த மாதம் 25ஆம் தேதி நாடு முழுதும் அவசரநிலையின் இருண்ட அத்தியாயத்தை நினைவு கூர்ந்துள்ளது. இது போன்ற ஒரு அடி தேசத்திற்கு மீண்டும் ஏற்படாத வகையில் மோசமான சம்பவங்களையும் நினைவில் கொள்ள வேண்டும்.
செய்திகளை சுவாரஸ்யமாக மாற்றும் வகையில் உண்மையை மறைக்கக் கூடாது. செய்திகளை வெளியிடும் போது, சமூகம் மற்றும் தேச நலன்களை மனதில் கொள்ள வேண்டும்” என்று பேசினார் சுனில் அம்பேகர்.
மதுரையில் விஸ்வ சம்வாத் கேந்திரா தக்ஷிண தமிழ்நாடு சார்பில், நாரதர் ஜயந்தி மற்றும் சிறந்த பத்திரிகையாளர், எழுத்தாளர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மதுரையில் தென்தமிழக விஸ்வ சம்வாத் கேந்திரம் அமைப்பு சார்பில் ஊடகத்துறை மூலம் தேசிய, தெய்வீக சிந்தனையை மக்களுக்கு கொண்டு சென்ற இருவருக்கு நாரதர் விருது வழங்கப்பட்டது.
தென்தமிழக விஸ்வ சம்வாத் கேந்திரம் அமைப்பு சார்பில் இந்த ஆண்டுக்கான நாரதர் விருது வழங்கும் விழா மதுரையில் நடைபெற்றது. ஊடகத்துறை மூலம் தேசிய, தெய்வீக சிந்தனையை மக்கள் மத்தியில் கொண்டு செல்பவர்களை கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டது.
விழாவிற்கு மதுரை மாணிக்கம் ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லுாரி ஊடகவியல் துறைத்தலைவர் பேராசிரியர் பாபு சஜன் கெவின் தலைமை வகித்தார். கேசவன் இறைவணக்கம் பாடினார். ஆர்.எஸ்.எஸ்., செய்தித் தொடர்பாளர் வக்கீல் முத்துராமலிங்கம் வரவேற்றார்.
மதுரையைச் சேர்ந்த எழுத்தாளர் வரலொட்டி ரங்கசாமி, நெல்லை தினமலர் நிருபர் வெங்கடசுப்பிரமணியன் ஆகியோருக்கு சிறந்த எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளருக்கான நாரதர் விருது வழங்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ்., ஊடகப்பிரிவு பொறுப்பாளர் மோகன் விருதை வழங்கினார்.
தியாகபூமி மாத இதழ் ஆசிரியர் கிருஷ்ண முத்துசாமி பேசினார். விருது பெற்ற வரலொட்டி ரங்கசாமி, வெங்கட சுப்பிரமணியன் இருவரும் ஏற்புரை ஆற்றினர். மூத்த பத்திரிகையாளர் செங்கோட்டை ஸ்ரீராம், ஆர்.எஸ்.எஸ்., மாநிலப் பொறுப்பாளர் ராஜமுருகானந்தம், ஆலயப் பாதுகாப்புக்குழு மாநில அமைப்பாளர் கிருஷ்ண ராஜ், வக்கீல் அமைப்பு மாநில அலுவலக செயலாளர் செல்வகுமார், ஆர்.எஸ்.எஸ்., கோட்டச் செயலாளர் சேகர் மற்றும் ஊடகவியலாளர்கள், வக்கீல்கள், எழுத்தாளர்கள், சமூக வலைதள செயற்பாட்டாளர்கள், குறும்பட இயக்குனர்கள், முக்கிய பிரமுகர்கள், பல்வேறு இயக்கத்தினர் கலந்து கொண்டனர். பாலகுருசாமி நன்றி கூறினார்.
தேஜஸ் பவுண்டேஷன் அமைப்பு சென்னையில் சிறப்பான இலக்கிய நிகழ்வுகளைக் கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வருகிறது.
நேற்று ஜூன் மாதம் 30 – ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, மாலையில் தேஜஸ் பவுண்டேஷன் சார்பாக மயிலையில் இலக்கியக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வில் சாஸ்திரா பல்கலைக்கழகத்தின் முன்னாள் டீன் திரு.கே.ஜி ரகுநாதன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.
விருந்தினர்களைத் தேஜஸ் பவுண்டேஷன் நிர்வாக அறங்காவலர் திரு. பி.டி.டி ராஜன் அவர்கள் கௌரவித்தார்.
தலைமையேற்ற டாக்டர் பாஸ்கரன் அவர்களை எழுத்தாளர், சமூக சேவகர் என்பதுடன் தன்னடக்கத்தின் வடிவம் என்றும் சொல்லலாம். ‘பணியுமாம் என்றும் பெருமை’ என்ற குறளுக்குப் பொருத்தமானவர் அவர். டாக்டர் பாஸ்கரன் குருவின் பெருமைகளைக் குறித்துச் சிறப்பாகச் சுமார் 30 நிமிடங்கள் வைணவத்தின் வழியில் நின்று உரையாற்றினார்.
கலைமகள் ஆசிரியர் திரு. கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் அவர்கள் ‘குரு அருளும், திருக்குறளும்’ என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு ஆற்றினார். கீழாம்பூரார் திருக்குறளில் ஆழங்கால் பட்டவர். இரண்டு தடவைகள் திருக்குறளைக் குறித்து ஏழு மணி நேரம் (ஒவ்வொரு முறையும்) சொற்பொழிவு ஆற்றிய பெருமையும் அவருக்கு உண்டு. அவரது உரையில் இருந்து சில முக்கியக் குறிப்புகள்.
1. திருக்குறளைக் காப்பாற்றிக் கொடுத்த பெருமை மூன்று சைவ ஆதினங்களுக்கு உண்டு.
1.திருப்பனந்தாள் காசி மடம்.
2.மயிலாடுதுறையில் அமைந்துள்ள தருமை ஆதீனம்.
3. திருவாலங்காட்டில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள திருவாவடுதுறை ஆதீனம்.
2. குரு ஸ்தானத்தில் இருப்பவர் வணங்கத் தக்கவராக மட்டுமல்ல. நல்ல நண்பனாகவும் இருக்க வேண்டும். உதாரணமாகக் கிருஷ்ணனைச் சொல்லலாம். குந்தியின் சகோதரனின் மகனான கிருஷ்ணன் பஞ்சபாண்டவர்களுக்குக் குரு ஸ்தானத்தில் இருந்ததுடன் நல்ல நண்பனாகவும் இருந்தான்.
3.நான் யார்? என்பது அனைவரும் அறிந்த மெய்ஞ்ஞானக் கேள்வி. நீ யார்? என்ற ஞானக் கேள்வியானது யாரால் யாரை நோக்கி கேட்கப்பட்டது? என்பதற்கான விடைகளையும் கீழாம்பூரார் சிறப்பாக விளக்கினார்.
4. யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல் என்ற திருக்குறளையும், பிறவிப் பெருங்கடல் நீந்துவர் என்ற திருக்குறளையும் அவர் விளக்கினார். அத்துடன் அவற்றின் ஆழத்தையும் தொட்டுச் சென்றார்.
5. சமய நல்லிணக்கம் அவசியம் தான். அதே சமயத்தில் திருக்குறளானது சைவம், வைணவத்தின் தத்துவங்களின் அடிப்படையில் அமைந்த நூல் என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் குறிப்பிட்டார்.
6. திருவள்ளுவருக்குத் தெய்வப்புலவர் என்ற பட்டப் பெயருடன் ஞானவெட்டியான் என்ற பெயரும் உண்டு என்பதையும் கீழாம்பூரார் சுட்டினார்.
7. திருவள்ளுவரின் தனிச்சிறப்பாக அவருக்குத் தனியாகக் கோவில் இருப்பதைக் கூறலாம். சென்னை மயிலாப்பூரில் இது இருக்கிறது.
8. தமிழ்நாட்டில் முதன் முதலாகத் திருக்குறள் நூலை வகுப்பின் மூலமாகக் கற்பித்தவர்கள் இருவர். முதலாமவர் அருட்பெரும் ஜோதி வள்ளலார் என்ற இராமலிங்க அடிகளார். இரண்டாமவர் சென்னை சிந்தாதிரிப் பேட்டைத் தமிழறிஞர் திரு.வடிவேலு செட்டியார்.
9. அகர முதல எழுத்தெல்லாம் என்ற முதல் திருக்குறளில் ஆதி, பகவன் ஆகிய இரண்டு சமஸ்கிருத வார்த்தைகளைத் திருவள்ளுவர் பயன்படுத்தியுள்ளார். பிற மொழிச் சொற்களைத் தமிழில் பயன்படுத்துவதில் அவருக்கு ஒவ்வாமை இல்லை என்பதும் இதனால் தெரிகிறது.
10. தமிழ்நாட்டில் உள்ள கல்வெட்டுகளில் திருநெல்வேலிக்கு அருகில் உள்ள மானூரில் கண்டு எடுக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் தான் மிகவும் பழமையானது. உத்திரமேரூர் கல்வெட்டுகளுக்கு எல்லாம் முந்தையது . அமைச்சு, அதன் நலம் குறித்தெல்லாம் அந்தக் கல்வெட்டுகள் பேசுகின்றன.
***
ஆகக் குருவைக் குறித்தும், திருக்குறளைக் குறித்தும் பல்வேறு தகவல்களை ஆராய்ச்சி நோக்குடனும், கருத்தாழத்துடனும் கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் அருமையான முறையில் உரை ஆற்றினார்.
நிகழ்வைச் சிறப்பான முறையில் திரு.ஜெயராமன் மணியன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.
நிகழ்வைச் சிறப்பான முறையில் தேஜஸ் பவுண்டேஷன் அறங்காவலர் திரு பி.டி.டி ராஜன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.
இனிய நண்பர் என்று சொல்லவா! இல்லை, எனக்குக் குரு கவிஞர் இசைக்கவி ரமணன், ஜே.பி ஃபவுண்டேஷன் ஜே.பாலசுப்ரமணியன், எழுத்தாளர் கே.ஜி. ஜவஹர், நண்பர்கள் உரத்த சிந்தனை உதயம்ராம், சங்கர நேத்ராலயா இருங்கோவேள், உமா பாரதி, கலாவதி பாஸ்கரன் உள்ளிட்டோர் பலரையும் நிகழ்வில் சந்திக்க முடிந்தது.
சற்று நேரம் அரசியல் பார்வையை ஒதுக்கிவிட்டு, தர்மத்தோடும் பாரபட்சமின்றியும் சிந்திப்போம்.
ஒருபுறம் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள். அதிலும் ஊர் ஊராகச் சுற்றிய சிரமம், அலைச்சல். எல்லாம் நிறைவடைந்து, தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்னர், ஏகாந்தமாக, தெய்வீகமான ஒரு ஆன்மீக சக்தி நிலையத்தில், மௌன தியானத்தில் நாற்பத்தைந்து மணி நேரம் இருப்பது என்பதெல்லாம் சாதாரண விஷயம் அல்ல.
ஏறக்குறைய எல்லா தலைவர்களும் ‘எக்ஸிட் போல்’ பற்றிய ஆர்வமும் ஆவேசமுமாக மதிப்பீடுகளில் ஆழ்ந்திருக்கையில் முதன்மையான தலைவராக இருந்தும் அவற்றில் மனதைச் செலுத்தாமல், தன் கடமையை முடித்து விட்டு, அமைதியான அந்தர்முக தியானத்தில் ஈடுபடுவதற்கு எத்தகைய மனக் கட்டுப்பாடு இருக்க வேண்டும்!
ஊழல் இன்றி, ஆட்சிப் பொறுப்பை அரசியல் அமைப்புக்கு உட்பட்டு, சமமான பார்வையோடு முன்னேற்றத்தையும் நலத் திட்டங்களையும் மட்டுமே நோக்கமாகக் கொண்டு தன் ஸ்தானத்திற்கு ஏற்ப நடந்து கொள்வது என்பது பகவத்கீதை போதிக்கும் ஆதர்சம். கர்மயோகிக்கு இதைவிடக் கண்கூடான உதாரணம் கூற இயலாது.
தேச பக்தியையும் தெய்வ பக்தியையும் உடலிலும் உள்ளத்திலும் நிரப்பி, தியானத்தை பரமத்மாவிடமும், லட்சியத்தை தேசத்தின் மீதும் நிறுத்தி, தன் இருப்பை உய்வித்துக் கொண்டு வரும் தலைமை எந்த நாட்டுக்குக் கிடைக்கும்? பாரத தேசம் பத்தாண்டுகளாக அப்படிப்பட்ட தலைமையைப் பெற்றுள்ளது.
பதவி மோகம் கொண்ட எதிர்க்கட்சிகள் பொய்ப் பிரச்சாரம் செய்து கூச்சலிட்டாலும், பாரத தேசத்தின் முன்னேற்றத்தையும் பொருளாதார மேம்பாட்டையும் சகிக்க இயலாத வெளிநாடுகள் வியூகங்களைக் குவித்தாலும், தன்னலமற்ற நேர்மையோடும் அர்ப்பணிப்போடும் தேசத்தை முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்வதை அறிந்துகொள்ளத் தவறியவர்களாக கணக்கற்ற இளைஞர்கள் இருந்த போதிலும், தன் லட்சியத்திலிருந்தும் தர்மம், செயலூக்கம், நியம நிஷ்டை எதுவும் சிதறாமல் முன்னேறுவது என்பது அசாதாரணமான யோக சக்தி.
மீண்டும் வெற்றி பெறுவோமோ இல்லையோ, மக்களை ஈர்க்கும் திட்டங்கள் என்ன என்ற சிந்தனை எதுவுமின்றி, ஐந்நூறு ஆண்டு காலமாக நடைபெற்று வரும் மோதல்களுக்கு நியாயத்தோடும் சட்டத்துக்கு உட்பட்டும், அமைதியாகத் தீர்ப்பு வந்த பின்னர், அயோத்தியில் ராமர் கோயில் பிரதிஷ்டைக்காக, ராமன் நடந்த வழிகளில் எல்லாம் அலைந்து ராமர் தொடர்பான தலங்களை தரிசித்து, தரையில் படுத்து, உபவாசம் இருந்து கடின தீட்சையைக் மேற்கொண்டு, திவ்ய பால ராமரின் விக்ரகத்தைப் பிரதிஷ்டை செய்து கண்ணாரக் கண்டு களித்த பக்தி யோகத்தைப் பாராட்டாமல் இருக்க இயலுமா!
யுக யுகங்களாக பாரத தேச நாகரிகத்தில் முக்கிய இடம் பிடித்த புண்ணிய நதிகளில் மூழ்கி நீராடி, புண்ணிய க்ஷேத்திரங்களை தரிசித்து, தர்மத்தைப் பின்பற்றுபவர்களிடம் உற்சாகத்தை நிரப்பிய திடமான இத்தகு ஆளுமையைக் காணும் சம கால மனிதர்கள் எத்தகு பாக்கியம் செய்தவர்கள்!
பாதுகாப்பு அமைப்பை வலிமையுறச் செய்து, தீவிரவாதிகளையும் பயங்கரவாதிகளையும் அடக்கி, ஜாதி, மத பேதமின்றி ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் அமைதியும் பாதுகாப்பும் கிடைக்கும்படி செய்து, வெளிநாட்டு கண்காணிப்பாளர்களும் வியக்கும்படி ஏழ்மையை நிர்மூலம் செய்து, ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல், ஓய்வின்றி நாள் முழுவதும் தன் அலுவலகத்தில் இருந்து, அதிகாரத்தோடோ, அகங்காரதோடோ இன்றி, புனிதமான பொறுப்பாகத் தலையில் தாங்கி நடக்கும் ஆதர்சம், நம் கண் முன்னால் காணக்கிடைத்திருப்பது மிகவும் அபூர்வம்
உலக நாடுகள் அனைத்தும், ‘தலைவர் என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும்!’ என்று வாயாரப் புகழ்ந்தாலும், உள்நாட்டில் ஊழல்வாதிகளான அதிகாரத் தாகம் கொண்டவர்கள் பொய்ப் பிரசாரம் செய்து இகழ்ந்தாலும், நிலையான சித்தத்தோடு இருப்பது என்பது யோக சாத்திரங்கள் வர்ணிக்கும் உத்தம யோக குணங்கள். இவை எல்லாவற்றையும் இந்தத் தலைவனிடம் தரிசிப்பது அற்புதம் அல்லவா?
பத்தாண்டு ஆட்சிக்குப் பிறகும், சதித் திட்டங்களும் வஞ்சனை வியூகங்களும் கும்பல் கும்பலாக எழுந்தாலும், மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைப்பது ஒரு அற்புதம். வாழ்க்கை முழுவதும் பல அற்புத சம்பவங்ககளால் நிறைத்து, மக்களின் பேராதரவோடு மூன்றாவது முறையாக பிரதமராகத் தலைமை ஏற்பது இந்த பெருந்தலைவனுக்கு முக்கியம் அல்ல. அது பாரத தேசத்திற்கு முக்கியமான் தேவை.
கர்ம யோகம், பக்தி யோகம் இவற்றோடு பரமாத்மாவின் மீது பார்வையை நிறுத்தி வாழ்க்கை நடத்திய ராஜரிஷிகளின் உள்ளத் தூய்மையை இன்றைய காலகட்டத்திலும் பார்க்கிறோம் என்றால், பரமாத்மாவின் ஏதோ ஒரு தெய்வீகத் திட்டம் இந்த தேசத்தைப் பாதுகாக்கிறது என்பது தெளிவாகிறது
கும்பல் கூடி வம்புக்கிழுக்கும் எதிரிகளின் ஆர்ப்பாட்டம் விரைவில் அடங்கிப் போகும் என்றும், விஸ்வகுருவாக, மகா சக்தியாக, ருஷிகளின் பூமியான பாரத தேசம் விளங்கும் என்றும் கொண்ட நம்பிக்கை வலுவடைகிறது.
எத்தனை மகநீயர்களின் யோகபலம் இந்தத் தலைமைக்குத் துணையாக உள்ளதோ! எத்தனை ருஷிகளின் தவ வலிமையும் தேவதைகளின் ஆசிகளும் இந்தத் தலைவனுக்கு உடன் நின்று உதவுகிறதோ!
விவேகத்தோடும் அறிவுக் கூர்மையோடும் இந்த ஆட்சியை பாரத தேசத்தவர் அனைவரும் நீண்ட நெடுங்காலம் காப்பாற்றிப் பாதுகாக்க வேண்டும் என்று விரும்புவோம்!
தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் எஸ்.வைத்யசுப்ரமணியம், ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் எழுதிய கட்டுரையை, மயிலாடுதுறை ஜி.எஸ்.பாலமுருகன் தமிழாக்கம் செய்திருக்கிறார்.
சுதந்திர இந்தியாவிற்கு அதிகாரத்தை மாற்றியதன் அடையாளமாக நேருவுக்கு புனித செங்கோல் வழங்கப்பட்டது. 1947 ஆகஸ்ட் 14ஆம் தேதி இரவு, திருஞானசம்பந்தரின் கோளறு பதிகத்தில், ‘அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே’ என்ற வரிகள், அதிகாரப் பரிமாற்றத்தின் அடையாளமாக செங்கோல் ஒப்படைக்கப்பட்டபோது முழங்கியது.
இந்தியாவின் சுதந்திரத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த நிலையில், அதிகாரத்தை மாற்றுவது தொடர்பான ஆலோசனைக்காக அறிஞர்-அரசியலாளரான சி.ராஜகோபாலச்சாரியார் (ராஜாஜி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார்) பக்கம் திரும்பினார் நேரு. ராஜாஜி தனது கூர்மையான அறிவுத்திறனை பயன்படுத்தி, திருவாவடுதுறை ஆதீனத்தால் (தமிழ்நாட்டின் புகழ்பெற்ற சைவ மடம்) சிறப்பாக உருவாக்கப்பட்ட செங்கோலை நேருவிடம் ஒப்படைக்கும் யோசனையை முன்மொழிந்தார். இந்த வரலாற்று மைல்கல் பின்னணியில், ‘நாடாளுமன்றம் நோக்கி செங்கோல்’ என்ற செயல் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி முன்னெடுத்தார்.
நாட்டின் ஜனநாயகக் கோயிலின் மைய மண்டபத்தில் புனிதமான செங்கோல் நிறுவப்பட்டிருப்பது வரலாற்று நிகழ்வு. இது தமிழர் பெருமையின் புதிய உணர்வை நம் உடலில் ஏற்படுத்துகிறது. செங்கோல் நிறுவப்பட்டதன் விழா, ஆகஸ்ட் 14/15, 1947க்கு நம் மனதை பின்னோக்கி நகர்த்துகிறது. 75வது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவை கொண்டாடும் வேளையில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் செங்கோல் உள்ளது அனைத்து இந்தியர்களுக்கும், குறிப்பாக தமிழக மக்களுக்கும் பெருமை சேர்க்கும் தருணமாகும். வரலாற்று உண்மைகளில் இந்த செங்கோல் நிகழ்வு தமிழர்கள் மட்டுமல்லாது, ஆட்சியின் மீது நம்பிக்கை கொண்ட அனைவரின் மனதையும் தொடுகிறது.
இந்தியாவின் நாகரிகச் சொத்தான செங்கோல், இப்போது நம் நாடு மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கானவர்களின் பேசுபொருளாக இருக்கிறது. இந்தியாவின் செங்கோல் ஜனநாயக ஆட்சியின் இரு கண்களான சட்டம் மற்றும் தர்மத்தை நாடாளுமன்றத்தில் நிலைநிறுத்தும். சங்க இலக்கியம், பண்பாடு, கலைகள் முதலியன அனைத்தும் சேர, சோழ, பாண்டிய அரச ராஜ்ஜியங்களால் மற்ற சமூக நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களால் வளர்க்கப்பட்டு ஊக்குவிக்கப்பட்டுள்ளன. அரச தமிழ் மன்னர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் உருவாக்கிய நிறுவனங்களும் அடையாளங்களும் இன்னும் உண்மை, நீதி, அன்பு மற்றும் அகிம்சையை பேசும் நித்திய விழுமியங்களின் அடையாளங்களாகவே இருக்கின்றன.
மன்னர்கள் மட்டுமன்றி அவர்களின் ராஜகுருக்கள், கவிஞர்கள், அறிஞர்கள், இசைக்கலைஞர்கள் போன்றோரும் உலக அளவில் தமிழ் அறிவின் வற்றாத ஊற்றுக்கண்களாக இருந்தனர். உலக அளவில் போற்றப்படும் திருவள்ளுவரின் திருக்குறள், மேலிருந்து கீழாக அனைத்தையும் உள்ளடக்கிய நித்திய மதிப்புகளின் தொகுப்பாகும்.
இந்தியா போன்ற ஒரு நாகரிகத் தொடர்ச்சியான நாட்டில் மட்டுமல்ல, உலகின் பல்வேறு பகுதிகளிலும் பின்பற்றப்படும் பாரம்பரிய நடைமுறைகள் மற்றும் பழக்கவழக்கங்கள் ஒருபோதும் இழக்கப்படவில்லை. அத்தகைய பொக்கிஷமான சொத்துகளில் ஒன்று செங்கோல் ஆகும். இது உலகளாவிய ஏற்றுக்கொள்ளல் மற்றும் உலகின் பல பகுதிகளில் இன்னும் மதிக்கப்படுகிறது.
பண்டைய நாகரிகங்களான எகிப்து, மெசபடோமியா, கிரேக்க-ரோமன் போன்ற பல்வேறு நாடுகளில் மத நம்பிக்கைகள் தவிர, செங்கோலுக்கு எப்போதும் முக்கிய இடம் உண்டு. இலங்கை நாடாளுமன்றத்தில் உள்ள செங்கோல், 1949ஆம் ஆண்டு பிரிட்டனிடமிருந்து சுதந்திரமடைந்த போது ஆட்சி மாற்றத்தின் அடையாளமாக வழங்கப்பட்டது.
இலங்கையில் அதற்கு ‘செம்கோலாயா’ என்று பெயர். இந்திய நாகரிகம் விதிவிலக்கல்ல. ஒருமுறை விஷ்வகுருவாக இருந்த அது மீண்டும் அந்த நிலையை நோக்கி நகர்கிறது. அரசனையும், அரசையும் பிணைத்தது செங்கோல் தான். ஈட்டியோ வாளோ அல்ல என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டியது.
திருக்குறளின் செங்கோன்மை என்ற அத்தியாயம், ‘வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோல்நோக்கி வாழுங் குடி’ (542வது குறள்) என்று கூறுகிறது. இதன் பொருள், ‘மழைக்காக உலகம் வானத்தை நோக்குவது போல், மக்கள் ஆட்சியாளரையும் அவர் செங்கோலையும் பார்க்கிறார்கள்’.
செங்கோலின் ஆழம் தான் தமிழ் நிலத்தின் ஒரு அங்கமாக ஆக்கியது. இது ஒரு மன்னரின் சட்டம் மற்றும் நீதிக்கான ஆதாரமாக மட்டுமல்லாமல், அதிகாரத்தில் உள்ள பல்வேறு அதிகாரிகளிடமிருந்து சாதாரண மனிதனின் எதிர்பார்ப்புக்கான உத்வேகமாகவும் உள்ளது. இது நியாயமான நிர்வாக செயல்முறைகளை நிறுவுகிறது.
உலகளாவிய மதிப்பின் அடையாளமாக, செங்கோல் பழங்காலத்திலிருந்தே ஒரு சிறப்பு இடத்தைப் பெற்றுள்ளது. இந்த வார்த்தையின் உள்ளர்த்தம் அதை எப்போதும் சிறப்பு செய்கிறது.
செங்கோல் என்பது செம்மை + கோல் என்பதன் கலவையாகும். இது சட்டத்தின் ஆட்சி மற்றும் ஆளுமையின் ஒரு சின்னமான பிரதிநிதித்துவமாகும். மேலும் அரச கருவூலத்திற்கு ஒரு அலங்கார சேர்க்கை அல்ல. தமிழ் மன்னர்களும் அவர்களின் ராஜ்ஜியங்களும் எப்போதும் நாம் கொண்டாட வேண்டிய பெருமைக்குரியவை.
முடிசூட்டு விழாவின் போது (6 மே 2023) பிரிட்டன் மன்னர் சார்லஸ் செங்கோலைப் பிடித்திருந்ததை நாம் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், இப்போது நாடாளுமன்றத்தில் செங்கோலை மோடி நிறுவியதை (28 மே 2023) நமது சொந்த விழா போன்று பார்ப்பதற்கான சரியான அறிகுறியாகும்.
அதிகாரங்கள் மாறினாலும் செங்கோல் மாறாமல் உள்ளது. புதிய மன்னரிடம் ஒப்படைக்கப்படுகிறது; முக்கியத்துவம் வாய்ந்த பிற நிகழ்வுகளிலும் இன்றும் நடைமுறையில் உள்ளது. செங்கோலின் இந்த வரலாற்று முக்கியத்துவத்தைத்தான் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தில் ஒரு நாடகமில்லாமல் சரியான இடத்தில் வைத்து பலரது விருப்பங்களை நிறைவேற்றியுள்ளார்.
1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதிக்கு பிறகு நிச்சயமான உண்மைகளுடன் கூடிய நிகழ்வை பிரதமர் மோடி மீண்டும் அரங்கேற்றியிருப்பது சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு ஒரு வரலாறே. சுருக்கமாக சொன்னால் செங்கோல் ஒரு காவிய நிகழ்வின் மையமாக உள்ளது.
பாரதிய நியாய சன்ஹிதா என்ற பெயரில் புதிய சட்டங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. இதில் முதல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பழங்கால ஆங்கில ஆட்சியில் உருவாக்கப்பட்ட பழம் பெரும் கிரிமினில் சட்டங்கள் நீக்கப்பட்டு புதிய 3 கிரிமினல் சட்டங்கள் இன்று (ஜூலை-1) முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. பாதிக்கப்பட்டோருக்கு விரைவில் உரிய நீதி கிடைக்க வழிவகை செய்யும் இந்த புதிய சட்டங்கள்.
பெண்கள் மீதான தாக்குதல், குழந்தைகள் தொடர்பான குற்றப்புகார்கள், வயது மூத்தவர்கள் பாதிப்புக்கு உரிய நீதி கிடைக்க வழி செய்யும் வகையில் கடந்த டிச-21 ல் பாரதிய நியாய சன்ஹிதா (பி.என்.எஸ்.), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பி.என்.எஸ்.எஸ்.), பாரதிய சாட்சிய அதினியம் (பி.எஸ்.ஏ.,) ஆகியன உருவாக்கப்பட்டன.
இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆர்பிசி), இந்திய சாட்சியங்கள் சட்டம் உட்பட ஆங்கிலேயர் கால சட்டங்களுக்குப் பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்), பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன.
இந்த சட்டங்கள் கடந்தாண்டு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவை ஜனாதிபதியின் ஒப்புதலுக்குப் பிறகு மத்திய அரசின் அரசிதழில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
3 புதிய குற்றவியல் சட்டங்களும் இன்று ஜூலை 1 ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. புதிய குற்றவியல் சட்டங்களின் விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளில் தொழில்நுட்பத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்தியாவிலுள்ள ஒவ்வொரு காவல் நிலையத்திலும் குற்ற வழக்குகளைப் பதிவு செய்யும் தற்போதைய குற்றவியல் கண்காணிப்பு அமைப்புகளின் (சிசிடிஎன்எஸ்) பயன்பாட்டில் 23 செயல்பாட்டு புதுப்பிப்புகளை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆர்பி) அறிமுகம் செய்துள்ளது.
புதிய வழிமுறைகளுக்கு தடையின்றி மாறுவதற்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தொழில்நுட்ப உதவியையும் என்சிஆர்பி வழங்கியுள்ளது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 5,65,746 காவலர்கள், சிறை, தடயவியல், நீதித் துறை அதிகாரிகள் உட்பட 5,84,174 பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் மூலம் 40 லட்சம் தன்னார்வலர்களுக்கு, 3 புதிய சட்டங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
அதே போல் புதிய சட்டங்களின்கீழ் மின்னணு முறையில் சம்மன் நோட்டீஸ்களை பதிவிறக்கம் செய்து கொள்ள வசதியாக, இ-சாக்ஷியா, நியாயஷ்ருதி, இ-சம்மன் ஆகிய 3 செயலிகளை தேசிய தகவல் மையம் (என்ஐசி) உருவாக்கியுள்ளது. அதே நேரத்தில் நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் 3 புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளதாக கூறி எதிர்கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்குவங்க முதல்வர் மம்தா ஆகியோர் இந்த சட்டங்களை அவசரகதியில் அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். மேலும் உச்ச நீதிமன்றத்திலும் இது குறித்த வழக்கு நிலுகையில் உள்ளது. பல மாநிலங்களில் இதற்கு கண்டனம் தெரிவித்து வழக்கறிஞர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
விரைவான தீர்வு
இந்த சட்டத்தின் மூலம் மின்னஞ்சல் மூலம் புகார் பதிய முடியும். மேலும் இதற்கான எப்ஐஆர் நகல் பாதிக்கப்பட்டோர் டிஜிட்டல் மூலம் பெற்று கொள்ள வழி செய்யும். பாதிப்புக்குள்ளானவர்கள் போலீஸ் ஸ்டேஷன் போக வேண்டியது இருக்காது. தேவைப்படும் போது சென்றால் போதுமானது. பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை அதிகாரி விரைந்து நேரில் சென்று உரிய காலத்திற்குள் அறிக்கை மற்றும் குற்றச்சாட்டுக்களை பதிய வேண்டும். மின்அஞ்சல் மூலம் சம்மன் அனுப்ப முடியும். கைது செய்யப்பட்டவர்கள் குறித்த விவரம் உடனுக்குடன் நெருங்கி உறவினர்களுக்கு தெரிவிக்கப்படும். பாதிக்கபட்டோருக்கு உரிய விரைவான சிகிச்சை அளிக்கப்படும்.
வீண் வாய்தாக்கள் இல்லை
வீண் வாய்தாக்கள் இருக்காது, 14 நாட்களுக்குள் எப்ஐஆர், 2 மாதங்களில் விசாரணை முடிப்பு, 90 நாட்களில் பாதிக்கப்பட்டோருக்கு முழு விவரம் தெரிவிக்கப்பட வேண்டும். வீடியோ கான்பரன்ஸ் மூலம் வாக்குமூலம் பெற முடியும்.
60 நாட்களுக்குள் குற்றச்சாட்டுக்கள் வரையப்பட வேண்டும், விசாரணை முடிந்து 45 நாட்களுக்கு மிகாமல் தீர்ப்பு அளிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டோருக்கு கூடுதல் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்
பாதிக்கப்படுவோர் எந்த போலீஸ் ஸ்டேஷனிலும் புகார் மின்னணு அளிக்கலாம் . போலீஸ் எல்லை பிரச்சனை குறையும். காகித ஆவணங்கள் குறையும். வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரிக்கப்படலாம்.
பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு, மரண தண்டனை
நாடு முழுதும், ஜூலை 1 முதல் புதிய குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வரவுள்ள நிலையில் அதில் உள்ள முக்கிய அம்சங்கள்
புதிய சட்டங்களின் கீழ், போலீஸ் ஸ்டேஷனுக்கு நேரடியாக செல்லாமலேயே, மின்னணு தகவல் தொடர்பு வாயிலாக புகாரளிக்கலாம்.
பூஜ்ய எப்.ஐ.ஆர்., அறிமுகப்படுத்தப்பட்டதன் வாயிலாக, ஒருவர் அதிகார வரம்பைப் பொருட்படுத்தாமல் எந்த போலீஸ் ஸ்டேஷனிலும், எப்.ஐ.ஆர்., எனப்படும், முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யலாம்
வழக்குகளில் 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும்.
போலீஸ் விசாரணை, 180 நாட்களுக்குள் முடிக்கப்பட்டு நீதிமன்ற விசாரணையை துவங்க வேண்டும். விசாரணை முடிந்த 30 நாட்களுக்குள் இறுதி தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்
சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு, மரண தண்டனை விதிக்கப்படும்
புதிய சட்டங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான விசாரணைகளுக்கு முன்னுரிமை அளித்து, தகவல்களை பதிவு செய்த இரு மாதங்களுக்குள் வழக்கு முடிக்கப்படுவதை உறுதி செய்கிறது
சம்மன்களை மின்னணு முறையில் வழங்கலாம்.
வழக்கு விசாரணைகளில் தேவையற்ற தாமதத்தைத் தவிர்க்க, சரியான நேரத்தில் நீதி வழங்கப்படுவதை உறுதி செய்ய, அதிகபட்சம் இரு முறை வழக்குகளை நீதிமன்றம் ஒத்தி வைக்கலாம்
பாலினம் என்பதன் வரையறை தற்போது திருநங்கையரை உள்ளடக்கியது
பெண்கள், 15 வயதுக்குட்பட்டவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அல்லது கடுமையான நோய் உள்ளவர்கள் போலீஸ் ஸ்டேஷனுக்குச் செல்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, அவர்கள் வசிக்கும் இடத்தில் காவல் உதவியைப் பெறலாம்.
புதிய சட்டத்தில் முதல் வழக்கு!
புதிய குற்றவியல் சட்டத்தின்படி இந்தியாவின் எந்த பகுதியிலிருந்தும் குற்றம் இழைத்தவர்கள், இடையூறு செய்பவர்கள், சட்டத்திற்கு புறம்பானவர்கள் மீது ஆன்லைன் மூலம் வழக்குப்பதிவு செய்யலாம்.
அதன்படி 24 மணி நேரத்தில் எந்த நேரத்தில் எங்கிருந்து வேண்டுமானாலும் வழக்கு தொடரமுடியும். இதில் பதிவாகும் வழக்குகள் அதிகபட்சமாக 90 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளிடம் சென்று தீர்வு காணலாம் எனத் தெரிவித்துள்ளது. இச்சட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
அந்த வகையில் இன்று சாலையோர வியாபாரி மீது முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாரதிய நியாய சம்ஹிதா சட்டத்தின்படி , சாலையோர வியாபாரி மீது டெல்லியில் முதல் வழக்கு பதியப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு இடையூறாக சாலையோரத்தில் கடை அமைத்திருப்பதாக புதிய சட்டத்தின் கீழ் முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் அந்நாட்டின் எம்.பியுமான இரா.சம்பந்தன் இன்று (ஜூலை-1) அதிகாலை காலமானார். அவருக்கு வயது 91.
இராஜவரோதயம் சம்பந்தன் 1933 பிப்.5ல் பிறந்தவர். இலங்கைத் தமிழ் அரசியல்வாதி. இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர். இலங்கைத் தமிழரசுக் கட்சி முன்னாள் தலைவர். 1977 முதல் 1983 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். பின் 2001 முதல் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். 2015 செப்டம்பர் 3 முதல் 2018 டிசம்பர் 18 வரை இவர் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்தார்.
வயது மூப்பு காரணமாக இரா.சம்பந்தன் சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது. இதனால் கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலன் அளிக்காமல், இன்று காலமானார். சம்பந்தன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழரசுக் கட்சி உள்ளிட்டவைகளின் தலைவராக இருந்தார்.
இவர் 1977 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் திரிகோணமலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி ஆனார். இலங்கையில் தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுத்த முதுபெரும் தலைவராக திகழ்ந்து வந்தார். மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக 50 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியவர்.
அவரது மறைவிற்கு கிழக்கு மாகாண கவர்னர் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதியும் வழக்கறிஞருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன், 1980 முதல் அவர் தன் தொடர்பில் இருந்ததாகவும், அவர் ஆற்றிய பணிகள் குறித்தும் நினைவு கூர்ந்து இரங்கல் செய்தியைப் பதிவு செய்துள்ளார். (படம்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன், இரா. சம்பந்தனுடன்)