Home Blog Page 215

மயிலாடுதுறை பகுதியில் நிலஅதிர்வா? காவல் துறை அளித்த விளக்கம் என்ன?

mayiladuthurai thirulokki - 2026

மயிலாடுதுறை பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக பொதுமக்களிடம் செய்தி பரவியது. இப்பகுதி மக்கள் திடீரென பெரும் நில அதிர்வை உணர்ந்தனர். இதனால் பொது மக்கள் மத்தியில் இது குறித்த செய்திகளும் அதிகம் பகிரப்பட்டன. 

இது குறித்து மயிலாடுதுறை மாவட்டம் திருலோக்கி பகுதியில் வசிக்கும் ஒருவர் கூறியபோது, இன்று காலை சுமார் பதினோரு மணி அளவில் மயிலாடுதுறை பகுதியில் அதிபயங்கர வெடி சத்தம்போல் பெரும் சத்தம் கேட்டது. அப்பொழுது சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எல்லா ஊர்களிலும் நிலம் அதிர்ந்துள்ளதாகத் தெரியவந்தது. நண்பர்கள் இது குறித்து தகவல்கள் பரிமாறிக் கொண்டனர். இப்பொழுது எங்களுக்கு, மயிலாடுதுறை, குத்தாலம் பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் வந்திருக்கின்றன. 

அந்நேரம், பல பகுதிகளில் கண்ணாடிகள் சிதறி விழுந்தன. ஓட்டு வீடுகளில் ஓடுகள் சரிந்தன. சிமெண்ட் ஷீட் போட்ட இடங்களில் அதிரும் சப்தம் அதிகமாகக் கேட்டது. தீவிரமான நிலநடுக்கம் என்றுதான் மக்கள் பேசிக் கொள்கிறார்கள். குறிப்பாக மயிலாடுதுறை, குத்தாலம் பகுதியில்  இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

இந்த அதிபயங்கர சப்தத்தால், சுற்றுப் பகுதியில் உள்ள கிராம மக்கள் என்ன ஏது என்று தெரியாமல் குழம்பிப் போய் திணறினார்கள். இது குறித்து உடனடியாக அரசு அதிகாரிகளிடம் கேட்டோம். அவர்களும் உரிய பதில் ஏதும் சொல்லவில்லை. எனினும் போலீஸார் நில அதிர்வு குறித்து தங்களுக்கும் பொதுமக்களின் புகார்கள் வந்ததாகக் கூறினார்கள். உறுதியான தகவல் தெரியவில்லை…” என்றார்.  

நில அதிர்வு ஏற்பட்டதா என்பது குறித்த கூடுதல் தகவல்களுக்காக அரசுத் தரப்பில் இருந்து வரும் செய்திகளுக்காகக் காத்திருக்கிறோம் என்று செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே, ஜெட் விமானம் பறந்ததால் ஏற்பட்ட நில அதிர்வு தான் அது என்று காவல் துறை தகவல் தெரிவித்தது.

தஞ்சாவூர் விமானப்படை ஏவுதளத்தில் இருந்து மயிலாடுதுறை வழியாக ஜெட் விமானத்தின் சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது. இதனால் மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டது போன்று உணரப்பட்டது. இது குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று மாவட்ட காவல்துறை தகவல் வெளியிட்டது. மேலும் ஜெட் விமானங்கள் தாழ்வாகப் பறக்கும் போது சில நேரம் நிலம் அதிரும் என்று அவர்கள் விளக்கம் அளித்தனர்.

திடீரென ஏற்பட்ட இந்த பலத்த சத்தம் மற்றும் அதிர்வால் மயிலாடுதுறை மாவட்டத்தின் சில பகுதிகளில் மக்கள் மனதில் கலவரமடைந்தனர்!

ராகுல், காங். கட்சியின் ஹிந்து மத வெறுப்பு அரசியல்; மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்!

kadeswara subramaniam hindu munnani - 2026

ராகுல் மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஹிந்து மத வெறுப்பு அரசியல். ஹிந்துக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்த அவரது அறிக்கை:

பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தன்னை ஹிந்து என்று கூறிக் கொள்பவர்கள் வன்முறையாளர்கள், பிறரை வெறுப்பவர்கள் , பொய் பேசுபவர்கள் என ஒட்டுமொத்த ஹிந்து சமுதாயத்தை இழிவுபடுத்தி பேசி உள்ளார்.

உலக வரலாற்றிலேயே மதத்தின் பெயரில் போர் செய்யாத, தன் மதத்திற்கு தீங்கு செய்பவர்களுக்கு கூட நன்மை செய்யக்கூடிய மதம் சனாதன ஹிந்து தர்மம் (மதம்).

ஹிந்துக்கள் அனைத்து மத கடவுள் படங்களை கூட தனது வணிக நிறுவனங்களில் வைத்து வணங்கக்கூடிய அளவில் நல்லிணக்கத்தோடு இருக்கக்கூடியவர்கள்.

உலகின் பல நாடுகளில் வசிக்கக் கூடிய ஹிந்துக்களால் அந்த நாட்டில் எந்தவிதமான பிரச்சனைகளும் இல்லை. அந்த நாட்டில் உள்ள மக்களோடு இணக்கமாக வாழ்ந்து வருகிறார்கள்.

அதனால் தான் உலகத் தலைவர்கள் ஹிந்து இதிகாச புராணங்கள் மற்றும் கடவுள்களை போற்றி பெருமைப்படும் வகையில் பேசி வருகிறார்கள்.

ஹிந்துமத நூல்கள் அனைத்தும் உண்மை,சத்தியம் போன்ற உயர்ந்த தத்துவங்களையே வலியுறுத்துகிறது. காந்தியடிகள் கூட ஹிந்து மதத்தில் உள்ள அஹிம்சை ,சத்தியம் போன்றவற்றையே அனைவருக்கும் வலியுறுத்தி வந்தார்.

தற்போது அந்த காந்தி பெயரை பொய்யாக தன் பெயருக்கு பின்னால் பொருத்தியிருக்கும் ராகுல் ஹிந்து மத தத்துவங்கள், பண்பாடு, கலாச்சாரம், பழக்க வழக்கம் ஏதும் அறியாமல் இழிவுபடுத்தி பாராளுமன்றத்தில் பேசி இருப்பது வேதனைக்குரியது.

ஆயிரக்கணக்கான சீக்கியர்களை கொன்று வன்முறை வெறியாட்டம் ஆடிய காங்கிரஸ் தலைவர் இந்துக்களை வன்முறையாளர்கள் என்று கூறுவது வெட்கம்.

கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மத சிறுபான்மையினரை தாஜா செய்து அதன் மூலம் அவர்களின் ஓட்டுக்களை பெற வேண்டும் என்பதற்காக பாரத தேசத்தில் பெரும்பான்மையாக வசித்து வரும் ஹிந்துக்களை வன்முறையாளராகவும், வெறுப்பு உணர்வாளர்களாகவும், பொய்யர்களாகவும் சித்தரித்து இழிவு படுத்திய ராகுல்காந்தியை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. ஹிந்துக்களிடம் அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறது.

மதமாற்றங்கள் தொடர அனுமதித்தால் நாட்டின் பெரும்பான்மையினர் சிறுபான்மையினர் ஆகிவிடுவர்: நீதிமன்றம்

allahabad high court judges agarwal - 2026

மதக் கூட்டங்களின் போது, மதமாற்றம் செய்யும் தற்போதைய போக்கு தொடர அனுமதித்தால், நாட்டின் பெரும்பான்மை மக்கள் ஒரு நாள் சிறுபான்மையினராக மாறிவிடுவார்கள் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

நீதிபதி ரோஹித் ரஞ்சன் அகர்வால் பெஞ்ச், மதமாற்றங்கள் நடக்கும் இடங்களிலும், இந்திய குடிமக்களின் மதங்கள் மாற்றப்படும் மதக் கூட்டங்களையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கூறியது.

“இந்த செயல்முறையை தொடர்ந்து செயல்படுத்த அனுமதித்தால், இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் ஒரு நாள் சிறுபான்மையினராக இருப்பார்கள். மேலும் மதமாற்றம் மற்றும் இந்தியக் குடிமகனின் மதத்தை மாற்றும் இடங்களில் இதுபோன்ற மதக் கூட்டங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்” என்று நீதிமன்றம் கூறியது.

அரசியல் அமைப்பின் 25வது சட்டப்பிரிவின்படி, ஒரு மதத்தை பின்பற்றவும், அதனை பரப்பவும் உரிமை உள்ளது. ஆனால், ஒரு மத நம்பிக்கையில் இருந்து மற்றொரு மத நம்பிக்கைக்கு மாற்ற உரிமை வழங்கப்படவில்லை. ‛ புரோபோகேசன்’ – பிரசாரம் என்ற வார்த்தைக்கு, ஊக்குவிக்கலாம் என அர்த்தம் கூறலாம். ஆனால், ஒரு மதத்தில் இருந்து வேறு மதத்திற்கு மாற்றலாம் என அர்த்தம் இல்லை. எனவே இதுபோன்ற மதமாற்றங்கள் இந்திய அரசியலமைப்பின் 25வது பிரிவின் அரசியலமைப்பு ஆணைக்கு எதிரானது. 

முக்கியமாக, உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதும் எஸ்சி/எஸ்டி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற பிரிவினரை சட்டவிரோதமாக கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவது “அதிகமான வேகத்தில்” நடப்பது பல வழக்குகளில் தனது கவனத்திற்கு வந்துள்ளது என்றும் பெஞ்ச் குறிப்பிட்டது.

ஐபிசி பிரிவு 365 & உ.பி.யின் பிரிவு 3/5(1) ஆகியவற்றின் கீழ் உ.பி காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட கைலாஷ் என்பவர் முன்வைத்த ஜாமீன் மனுவை நிராகரிக்கும் போது நீதிமன்றத்தால் இந்த கருத்துகள் முன்வைக்கப்பட்டன. 

உ.பி., மாநிலத்தைச் சேர்ந்த ராம்காலி பிரஜாபதி என்பவர் போலீசில் அளித்த புகாரில், ‛‛எனது சகோதரர் ராம்பால் மனநிலை பாதிக்கப்பட்டவர். அவரை கைலாஷ் என்பவர் தில்லிக்கு அழைத்துச் சென்றார். சகோதரர் வீடு திரும்பவில்லை. கைலாஷிடம் கேட்டதற்கு, அவர் உரிய பதில் தரவில்லை. எங்கள் கிராமத்தைச் சேர்ந்த பலரை தில்லிக்கு அழைத்துச் சென்று கிறிஸ்தவ மதத்திற்கு கைலாஷ் மாற்றி உள்ளார் ” எனக்கூறி இருந்தார். 

இதனையடுத்து, ஆள்கடத்தல் மற்றும் உ.பி., மாநில மதமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் கைலாஷ் கைது செய்யப்பட்டார். மனநலம் பாதிக்கப்பட்டுள்ள தனது சகோதரருக்கு சிகிச்சை அளித்து, ஒரு வாரத்தில் அவரது சொந்த கிராமத்திற்குத் திரும்புவதாகத் தகவல் அளித்தவருக்கு உறுதியளித்துள்ளார். ஆனால், அதற்கு பதிலாக அவர் கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். இவ்வகையில் விண்ணப்பதாரர் பலரை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றியதாக கைலாஷ் எஃப்.ஐ.ஆர். பதிவானது. 

இதை அடுத்து, கைலாஷ் ஜாமின் கேட்டு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மதக்கூட்டங்களில் பங்கேற்கும் ஏராளமானோர் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றப்படுகின்றனர். இதற்காக கைலாஷ் பணம் வாங்கி வருகிறார் என்றார்.

இதனையடுத்தே நீதிபதி ரோகித் ரஞ்சன் அகர்வால் தனது உத்தரவில் இந்தக் கருத்துகளை முன்வைத்தார். மேலும், இந்த வழக்கில் ராம்பால் வீடு திரும்பவில்லை. பலர் மதமாற்றத்திற்காக அழைத்துச் செல்லப்படுகின்றனர். இதனைத் தொடர அனுமதித்தால், நாட்டின் பெரும்பான்மை மக்கள், சிறுபான்மையினராக மாறி விடுவர். மதமாற்றம் நடப்பதற்குக் காரணமாக அமையும் மதக்கூட்டங்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று, அந்த உத்தரவில் நீதிபதி கூறினார்.

முருகன் கோயில்களில் ஆனி கிருத்திகை வழிபாடு!

sivagiri kuuduparai murugan temple - 2026

தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் இன்று ஆனி கார்த்திகை வழிபாடு விமர்சையாக நடைபெற்றது. .திரளான பக்தர்கள் பல்வேறு நேர்ச்சைகள் செலுத்தி முருகப்பெருமானை வழிபாடு செய்து சென்றனர் .

தென்காசி மாவட்டம் என்றாலே இயற்கை எழில் கொஞ்சும் மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் அருவிகள், ஆறுகள், அணைக்கட்டுகள், பச்சைப் பசேல் விவசாய விளை நிலங்கள் என பார்க்கப் பார்க்க ரம்மியமாக இருக்கும்.

அதுவும் இந்த தென்மேற்குப் பருவ மழைக்காலத்தில் தென்காசி மாவட்டம் முழுவதுமே இதமான தட்பவெப்ப நிலையும் சாரல் மழையும் தென்றல் காற்றும் வீசும்.

இந்த தென்காசி மாவட்டத்தில் இயற்கை வளங்கள் மட்டுமல்லாது, ஆன்மீகத் தலங்களும் அதிக அளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதுவும் இங்கு தமிழ்க் கடவுள் முருகனுக்கு பிரசித்தி பெற்ற பல வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயங்கள் உள்ளன. அவற்றில் பல குன்றும் மலையும் சூழந்த இயற்கைச் சூழலில் அமைந்திருக்கின்றன.

இந்த ஆலயங்களில் ஒவ்வொரு மாத கார்த்திகை தினத்திலும் சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெறும். பக்தர்கள் பால்குடம் எடுத்தும் பல்வேறு நேர்ச்சைகள் செலுத்தியும் ஆனி ஆடி மாத கார்த்திகை தினங்களில் வழிபாடு நடத்துவது சிறப்பம்சம் ஆகும்.

இன்று ஆனி கார்த்திகை நாளையொட்டி சிவகிரியில் பிரபலமான கூடாரப்பாறை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் அலங்கார பூஜை வழிபாடுகள் விமர்சையாக நடைபெற்றது .

மூலவர் பாலசுப்பிரமணியர் உத்ஸவர் ஆறுமுகக் கடவுள் ஆகியோருக்கு அபிஷேகம் சிறப்பு அலங்காரம் பூஜைகள் நடைபெற்றது. விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் இந்த பூஜை வழிபாட்டில் பங்கெடுத்தனர் .

இதுபோல் அருகில் உள்ள மிகப் பிரபலமான முருகன் கோயிலாக ராயகிரி கூடலூர் நாதகிரி முருகன் கோவில் உள்ளது. இதுவும் மலை மீது உள்ள கோவில்! இக்கோவிலிலும் பாலசுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் பூஜை வழிபாடுகள் அதி விமர்சையாக நடைபெற்றது.

சங்கரன்கோவில், சிவகிரி, தென்காசி, செங்கோட்டை தவிர கேரளாவிலிருந்தும் கோவிலுக்கு பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர்.

இதுபோல் புளியங்குடியில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், ஆய்குடி முருகன் கோவில் ஆகியவற்றில் பாலசுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

குற்றாலம் அருகில் உள்ள இலஞ்சி குமாரகோவில், செங்கோட்டை அருகே மலை மீது அமர்ந்துள்ள திருமலைக்கோவில் குமாரசாமிக்கும் சிறப்பு அபிஷேகங்கள் அதி விமர்சையாக ஆனி கார்த்திகையை ஒட்டி நடைபெற்றது.

மேலும் தென்காசி அருகில் உள்ள தோரணமாலை முருகன் கோவில், தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள பாலசுப்ரமணியருக்கும் ஆனி கார்த்திகை வழிபாடு விமர்சையாக நடைபெற்றது.

திரளான பக்தர்கள் விரதம் இருந்து முருகப் பெருமானுக்கு பல்வேறு நேர்ச்சைகள் செலுத்தி சிறப்பு வழிபாடுகள் நடத்தினர். பக்தர்களுக்கு பிரசாதங்கள் விநியோகிக்கப்பட்டன.

இந்திய ராணுவத்துக்கு உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கைபேசி நிலையம்!

signaltran cell - 2026

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘சிப்’ இணைக்கப்பட்ட 4ஜி கைபேசி நிலையத்தை முதல்முறையாக இந்திய ராணுவம் தனது பயன்பாட்டுக்குக் கொண்டுவந்துள்ளது. இந்த சாதனத்தை பெங்களூரைச் சோ்ந்த சிக்னல்ட்ரான் நிறுவனத்திடமிருந்து அரசின் இணைய வா்த்தக வலைதளம் மூலமாக ராணுவம் வாங்கியுள்ளது.

இது தொடா்பாக நிறுவனத்தின் தலைவா் ஹிமம்ஷு கஸ்னிஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘இந்திய ராணுவத்தின் சஹயாத்ரி தளத்தில் பயன்படுத்தப்படும் சிப்பானது ‘சிக்னல்சிப்’ என்ற நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டது. 4ஜி மற்றும் 5ஜி சேவைகளுக்காக உள்நாட்டிலேயே சிப்களைத் தயாரிக்கும் பணியில் சிக்னல்சிப் ஈடுபட்டுள்ளது. அதேபோல் சிக்கலான தொலைத்தொடா்பு சேவைகளை வழங்குவதற்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சிப் ஒன்று ராணுவத்துக்குப் பயன்படுத்தப்படுவதும் இதுவே முதல்முறையாகும். இதன்மூலம் நாட்டின் பாதுகாப்பு மேம்படுத்தப்படவுள்ளது.

இந்தச் சாதனத்தை தயாா் செய்வதற்கான ஏல விண்ணப்பத்தை அரசின் இணைய வா்த்தக வலைதளத்தில் ராணுவம் கடந்த ஆண்டு பதிவிட்டது. இதைத் தொடா்ந்து, இந்தப் பணியை வெற்றிகரமாக சிக்னல்டிரான் நிறுவனம் முடித்துவிட்டது. சஹயாத்ரிக்கு அனுப்பப்பட்டுள்ள இந்த வலைபின்னல் பெட்டி (என்ஐபி) 7 கிலோ எடை கொண்டது. இது உயா்தர ஆடியோ, விடியோக்களை வயா்லெஸ் சேவை மூலம் வழங்குகிறது. இது தங்குதடையற்ற தொலைதொடா்பு சேவைகளை வழங்கும் திறனுடையது.

இந்திய ராணுவத்துக்கு இதுபோன்ற 20 சாதனங்களை சிக்னல்டிரான் வழங்கியுள்ளது. இது மிகவும் குறைவான எடைகொண்ட சாதனம் என்பதால் தங்களின் வசதிக்கேற்ப தேவையான பகுதிகளுக்கு ராணுவத்தினா் இதை இடமாற்றம் செய்துகொள்ளலாம்.

பாதுகாப்புத் துறை, ரயில்வே போன்ற பல துறைகளை நவீனமயமாக்கும் முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. எனவே, வருங்காலத்தில் இந்தத் தொழில்நுட்ப சாதனங்களின் சந்தை மதிப்பு மிகப்பெரும் அளவில் உயா்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. உள்நாட்டிலேயே சிப்கள் தயாரிக்கப்படுவதால் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) அதிகரிக்க வழிவகுப்பதோடு அந்நியச் செலாவணி சேமிப்புக்கும் உதவுகிறது.

தொலைத்தொடா்பு சேவைகளை வழங்கும் இந்தக் கைப்பேசி நிலையத்தின் சந்தை மதிப்பு இந்தியாவில் 2029-க்குள் ரூ.2 லட்சம் கோடி வரை உயரும் என எதிா்பாா்க்கப்படுகிறது’ என்றாா்.

சிக்னல்சிப் நிறுவனத்தை கடந்த 2010-ஆம் ஆண்டு ஹிமம்ஷு கஸ்னிஸ் மற்றும் அவரது குழுவினா் நிறுவினா் என்பது குறிப்பிடத்தக்கது.

மகளிர் டெஸ்ட் போட்டி: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக இந்திய அணி அபார வெற்றி!

indian women cricket beaten south africa in chennai - 2026

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மகளிர் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்திய மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையினான மகளிர் டெஸ்ட் போட்டி கடந்த ஜூன் 28 ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கியது.

இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 603 ரன் சேர்த்து டிக்ளேர் செய்தது. அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷஃபாலி வர்மா இரட்டை சதம் விளாசி அசத்தினார். அவரைத் தொடர்ந்து, அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 149 ரன் எடுத்தார்.

இதன் பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி 266 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக மரிஷேன் கப் 74 ரன் எடுத்தார். இந்தியா தரப்பில் ஸ்நே ராணா 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

தென் ஆப்பிரிக்க அணி ஃபாலோ ஆன் ஆனதைத் தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடியது. அதில் தென்னாப்பிரிக்க அணி 373 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. கேப்டன் வோல்வர்ட் மற்றும் ஷுன் லூஸ் இருவரும் சதம் விளாசி அசத்தினார். வோல்வர்ட் 122 ரன், ஷுன் லூஸ் 109 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். இதில் ஸ்நே ராணா 2 விக்கெட் எடுத்தார்.

தென்னாப்பிரிக்க அணி 36 ரன் முன்னிலை பெற்றதால், இந்திய அணிக்கு 37 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 9.2 ஓவர்களில் இலக்கை எட்டி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஷஃபாலி வர்மா 24 ரன்களுடனும், சுபா சதீஷ் 13 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

போட்டியில் இரு இன்னிங்ஸிலும் சேர்த்து பத்து விக்கெட் எடுத்து, தனது அபார பந்து வீச்சால் தென் ஆப்பிரிக்க அணியை சுருட்டிய ஸ்நே ராணாவுக்கு ஆட்ட நாயகர் விருது வழங்கப்பட்டது.

மதுரை காமராஜர் பல்கலை.,மகளிர் விடுதியில் நள்ளிரவில் நுழைந்த மர்ம நபரால் பரபரப்பு!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள பெண்கள் விடுதியில் நள்ளிரவில் மர்ம நபர் நுழைந்ததால் பரபரப்பு – மர்ம நபர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்க மறுக்கும் பல்கலைக்கழக நிர்வாகம் – சர்ச்சைக்குரிய மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் தற்போது மாணவிகள் பாதுகாப்பு விஷயத்திலும் அலட்சியமாக உள்ளது  என மாணவிகள் வேதனை!

மதுரை மாவட்டம், நாகமலைப் புதுக்கோட்டை பகுதியில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.
பல்கலைக்கழக வளாகத்தில், விருந்தினர் மாளிகை மற்றும் துணை வேந்தர் மாளிகை அருகே மாணவிகள்  தங்குவதற்கான தங்கும் விடுதி உள்ளது.

மாணவிகள் தங்கும் விடுகியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளாவிலிருந்தும் ஏராளமான மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று இரவு, பல்கலைகழக வளாகத்தில் உள்ள பெண்கள் தங்கும் விடுதிக்குள் மர்ம நபர் ஒருவர் திடீரென உள்ளே புகுந்துள்ளார்.

இதனைப் பார்த்த, மாணவிகள் கூச்சலிட்ட நிலையில் அங்கிருந்த பாதுகாவலர் மற்றும் மாணவிகள் அவரை துரத்தி பிடித்துள்ளனர். மாணவிகளிடம் சிக்கிய நபர் மது போதையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. மது போதையில் இருந்த அந்த நபர் தான் தெரியாமல் வந்து விட்டதாகவும் , ஏற்கெனவே இதுபோல வந்துள்ளேன் என்றும் ஒப்புக் கொண்டுள்ளார்.
இதே பெண்கள் விடுதியில், சில நாட்களுக்கு முன்பாக மர்ம நபர்கள் வந்து செல்வதாக மாணவிகள் கூறிய பொழுது வெறும் பிரம்மை எனகா கூறி, பல்கலை கழக நிர்வாகம் அலட்சியப்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், தற்போது மர்ம நபரை மாணவிகளே பிடித்து அவர எண் 100 மூலம் அழைத்து காவல்
துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பாக, சம்பவ இடத்திற்கு வந்த நாகமலை புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் மர்ம நபரை அழைத்து சென்ற நிலையில் சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் காவல்  நிலையத்தில் புகார் ஏதும் தெரிவிக்காததால், முறையான விசாரணை மேற்கொள்ளாமல் காவல் நிலையத்திலிருந்து
அந்த நபரை விடுவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

பல்கலை கழக இரவு காவலர்கள் பாதுகாப்பை மீறி மாணவிகள் விடுதிக்குள் மர்ம நபர் புகுந்த சம்பவத்தில் முறையாக நடவடிக்கை எடுக்காத பல்கலைக்கழக நிர்வாகத்தின் அலட்சியத்தால் தங்களது பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாக, மாணவிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழுவாக…கூட்டுமுயற்சிக்குக் கிடைத்த வெற்றி!

IMG 20240630 WA0000 - 2026

பரபரப்பான வகையில் நடந்து முடிந்திருக்கிறது இந்த 2024ம் ஆண்டின் டி20 உலகக் கோப்பை தொடர். இறுதிப்போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி 176-7 ரன்களை எடுத்தது. இதையடுத்து இறங்கிய தென்னாபிரிக்கா திரில் ஆட்டத்தில் 169-8 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

இதன் இறுதிப் போட்டியில் இந்தியா வென்று உலகக் கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. இந்த வெற்றியின் பின்னே தனிப்பட்ட நபர்களின் தனிப்பட்ட சாதனைகள் என்று இல்லாமல், ஒட்டுமொத்த அணியின் கூட்டு முயற்சி இருக்கிறது என்பது உண்மையில் பெருமிதம் கொள்ளத்தக்க விஷயம்! இது போன்று குழுவாக கூட்டு முயற்சியில் கடினமாக உழைத்தால் எந்த வெற்றியும் சாத்தியமே என்பதை நிரூபித்த ஒரு போட்டியாக இந்தத் தொடரின் இறுதிப்போட்டி அமைந்தது! அதிலும் தோல்வியின் விளிம்பிலிருந்து மீண்டு வெற்றி பெறுவது என்பதெல்லாம் வரலாற்றில் அரிதாக நடக்கக்கூடிய சங்கதி!  அதை இந்திய அணி செய்து காட்டி இருக்கிறது! இதுவே உலகத்துக்கு இந்திய அணி அளித்த உன்னதமான செய்தி! 

இந்த இறுதிப் போட்டியில், தங்கள் பொறுப்புணர்ந்து கூட்டாக எல்லா வீரர்களும் சிறப்பாக ஆடியது அணிக்கு பெரிய அளவில் உதவியது. கடைசி 5 ஓவர்களில், உயிரைக் கொடுத்து, வெற்றியை எதிரணியின் பக்கம் சிறிதும் விட்டுக்கொடுக்காமல், ஆடியது இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தது.

கோலி பேட்டிங், ரோஹித் கேப்டன்சி, பும்ரா, அர்ஷிதீப், அக்சர், பாண்ட்யா பவுலிங், சூர்யகுமார் யாதவ் பீல்டிங் என்று, அனைத்து துறையிலும் ஒவ்வொரு வீரர்களின் சிறப்பான பங்களிப்பு காரணமாக இந்திய அணி வென்றது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, தொடக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தவித்தது. மிக அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா 9 ரன், பண்ட் டக் அவுட், அதிரடி காட்டும் சூரிய குமார் 3 ரன்னில் அவுட் என அதிர்ச்சி கொடுக்க, பெரிதும் எதிர்பார்க்கப்படாத கோலியும் அக்சர் படேலும் நம்பிக்கை கொடுத்தார்கள்.

ரோஹித் சர்மா இந்தத் தொடர் முழுதும் சிறப்பாக ஆடினார். இங்கிலாந்துக்கு எதிரான அவரது பேயாட்டத்தைக் கண்டவர்கள், அவர் இறுதிப் போட்டியில் 9 ரன்னில் மூட்டை கட்டியபோது, நம்பிக்கை இழந்துதான் போனார்கள். ஆனால் தொடர் முழுக்க இரட்டை இலக்க எண்ணைத் தாண்டாத விராட் கோலி, இறுதிப் போட்டியில் அணிக்கு நம்பிக்கை அளித்தார். எனினும், 3 விக்கெட் விரைவாக விழுந்துவிட்டதால் விரைவாக ரன் சேர்ப்பதில் ஈடுபடாமல் பொறுமையாக, மெதுவாக ஆடி 48 பந்துகளில் அரைசதம் அடித்தார். அதே நேரம், அக்சர் படேல் 31 பந்தில் 4 சிக்ஸ், 1 பவுண்டரி என்று 47 ரன் எடுத்து அசத்தினார்.

50 ரன்களைக் கடந்த பின், திடீரென வேகம் காட்டிய கோலி, 59 பந்தில் 76 ரன்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார். என்றாலும்,  ஒரு பேட்டிங் பிட்சில் அவரின் வேகம் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. இன்னும் கூடுதலாக 20 ரன்கள் வரை எடுத்து, 200க்குப் பக்கத்தில் ஸ்கோரை நிறுத்தியிருக்க வேண்டிய நிலையில், ஷிவம் துபே கடைசி நேரத்தில் 17 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து, 176க்கு 7 விக்கெட்கள் என்ற ஸ்கோரில் நிறுத்தினார்கள். இந்திய அணி கூடுதலாக 20 ரன்கள் வரை எடுத்திருந்தால், அடுத்து பேட்டிங் செய்யும் அணிக்கு கூடுதல் நெருக்கடியைக் கொடுத்திருக்கும்.  காரணம், அது பேட்டிங் பிட்ச். ஆனால் இந்திய அணி ஸ்லோ பிட்ச் போல் ஆடியது என்றே சொல்லலாம்! அதனால் தான் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் சுழற்பந்து வீச்சு, இந்த பிட்சில் எடுபடாமல் போய், அதிக ரன்களை விட்டுக் கொடுக்க வேண்டியதாயிற்று!

இந்த நிலையை உணர்ந்துதான் தென்னாப்பிரிக்க வீரர்களும் விளையாடினார்கள். தொடக்கத்தில் அந்த அணியின் ஹென்றிக்ஸ், மார்க்கரம் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, டி காக், ஸ்டப்ஸ் இணைந்து சிறப்பாக ஆடினர். ஸ்டப்ஸ் 31 ரன், டி காக் 39 ரன் என எடுத்து வலுவான நிலைக்குக் கொண்டு செல்ல, தென்னாப்பிரிக்க அணி வெற்றிப் பாதையில் சென்றது. குறிப்பாக, நேரத்தின் தேவை அறிந்து 27 பந்தில் 5 சிக்ஸ் உடன் 52 ரன் சேர்த்து கெல்சன் அதிரடி ஆட்டம் ஆட, தென்னாப்பிரிக்க அணி நிச்சயம் வென்று விடும், அதுவும், போட்டி முடிவதற்கு 2 ஓவர் முன்பாகவே வென்றுவிடும் என்ற எதிர்பார்ப்பைக் கொண்டு வந்தது.  

இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்ற ஆசையுடன் தொலைக்காட்சிகளில் ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்த வெறித்தனமான ரசிகர்கள் பலர்  டிவியை அணைத்துவிட்டு  உறக்கத்துக்கு சென்று விட்டதை  பலரின் சமூக வலைதள பதிவுகள் மூலம் உணர முடிந்தது.  ஆனால் முதலை வாயில் அகப்பட்ட இரையை தட்டிப்பறித்துக் கொண்டு வந்தது போல் கோப்பையை இந்திய அணி கைப்பற்றியது என்பதுதான் இந்த ஆட்டத்தின் சிறப்பு!

15 ஓவர்களின் முடிவில், அதாவது 90 பந்துகளில் 146 என்று இருந்து, 30 பந்துகளில் வெறும் 30 ரன் எடுத்தால் போதும் என்ற நிலையில் இருந்தது தென்னாப்பிரிக்க அணி. அந்த நேரத்தில்தான் ஒரு கேப்டனாக ரோகித் சர்மா எடுத்த முடிவு இந்திய அணிக்கு சாதகமாக மாறியது. வேறு கேப்டன்களாக இருந்தால் நன்றாக பவுலிங் செய்து எதிரணிக்கு பயத்தை காட்டக்கூடிய பூம்ராவை 18, 20 ஓவர்களில் பயன்படுத்தி இருப்பார்கள். ஆனால் 16-வது ஓவரிலேயே பூம்ராவைக் கொண்டு வந்து தனது கேப்டன்சியை நிரூபித்தார் ரோஹித். அவ்வளவு நேரம் அதிரடி காட்டிய கிளாஸனை கட்டுப்படுத்தும் விதமாக அந்த ஓவரில் வெறும் நான்கு ரன்களை மட்டுமே கொடுத்து பூம்ரா சிறப்பாக செய்தார்! அதனால் அடித்து ஆட வேண்டிய கட்டாயத்துக்கு  கிளாஸன் தள்ளப்பட்டார். எனவே தான் சந்தித்த பதினேழாவது ஓவரின் முதல் பந்தில் தூக்கி அடிக்க ஆசைப்பட்டு,  சாதாரண அவுட் சைடு பந்தாக இருந்தாலும் அதை தொட்டு ஆட்டம் இழந்தார் க்லாஸன். இது ஆட்டத்தின் ஒரு திருப்புமுனை ஆனது. 

அதன்பின் ஜான்சனை பும்ரா பதம் பார்க்க, கடைசி ஓவர்கள் ரன்கள் எடுக்க இயலாத படி, தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தினார்கள் இந்திய அணியின் ஃபீல்டர்கள். மிகச் சிறப்பான பீல்டிங் வியூகமும் அணியின் ஒருங்கிணைப்பும் கைகொடுக்க, கடைசி ஓவரில் 16 ரன் எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தென்னாப்பிரிக்க அணியைக் கொண்டு வந்தார்கள்! அதாவது மூன்று ஓவர்களில் வெறும் 10 ரன்கள் விட்டுக் கொடுத்து ஆறு பந்துகளில் 16 ரன் எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளினார்கள்  அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள்.

எனவேதான் ஆட்டத்தின் கடைசி ஓவரில் முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்து ரன் சேர்க்க வேண்டிய சூழலில்  சூரியகுமார் யாதவ் பவுண்டரி லைனில் பிடித்த  கேட்ச் மூலம் மில்லர் ஆட்டமிழந்தார்.  அது மட்டும் ஆறு ரன்கள் என்று ஆகி இருந்தால் அடுத்த ஐந்து பந்துகளில் எளிதாக 10 ரன்கள் சேர்த்திருக்க கூடும்.  காரணம் பாண்டியாவின் பந்தினை அதுவரை நன்றாகவே அனைவரும் அடித்துக் கொண்டிருந்தார்கள். மில்லர் ஆட்டமிழந்தது அடுத்த திருப்புமுனை. அதன் பின் மேலும் ரன்கள் போகாமல் கூடுதலாக ஒரு விக்கெட் எடுத்து தென்னாப்பிரிக்க அணியின் கடைசி வரிசை ஆட்டக்காரர்களை கட்டுப்படுத்தினார்கள் இந்திய அணியினர்.  இத்தகைய கூட்டு முயற்சியும்  வெற்றியின் மீது நம்பிக்கை இழக்காத போராட்ட குணமும் தன்னம்பிக்கையும் தான் அணிக்கு வெற்றிக் கோப்பையை பரிசாக அளித்துள்ளது. இதன் மூலம் கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடரில் சந்தித்த தோல்வியை உடைத்து இந்திய அணி சாதனை படைத்தது.

இதில், தென்னாப்பிரிக்க அணியின் திறமையையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். அந்த அணி, முதல் முறையாக ஃபைனலுக்கு தகுதி பெற்றது. கையில் வைத்திருந்த வெற்றியை கடைசி நேரத்தில் கோட்டை விட்டது. தென்னாப்பிரிக்கா கேப்டன் ஐடன் மார்க்ரம், கடினமாகப் போராடிய தங்களை நினைத்து பெருமைப்படுவதாக தெரிவிக்கும் அவர் வருங்காலத்தில் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவித்தார். அவர் கூறிய வார்த்தைகள் கவனத்தில் கொள்ள வேண்டியவை!

 “இது வெற்றியை நெருங்கிய ஒரு படி. இதுபோன்ற பெரிய கிரிக்கெட் தொடரில் கோப்பையை வெல்வது எளிதல்ல. அதில் கோப்பையை வென்ற இந்தியா போன்ற அணிக்கு நீங்கள் தலை வணங்க வேண்டும். ஏனெனில் அதில் கடினமான உழைப்பு இருக்கும். 

“நாங்களும் வெற்றியை ஒரு படி நெருங்கியுள்ளோம். கண்டிப்பாக வருங்காலங்களில் நாங்கள் முன்னோக்கிச் சென்று அந்த முதல் வெற்றியைப் பெறுவோம் என்று நம்புகிறேன். ஆனால் இம்முறை தோல்வியை சந்தித்ததால் மனமுடைந்துள்ளேன். ஒரு அணியாக நன்றாக விளையாடி வந்த நாங்கள் தோல்வியை சந்தித்ததால் அதிலிருந்து மீண்டு வர கொஞ்சம் நேரம் தேவைப்படும். இருப்பினும் வெளிப்படையாக சொல்ல வேண்டுமெனில் ஏற்கனவே சொன்னது போல் இது கொஞ்சம் வலிக்கிறது.

“எங்கள் வீரர்கள் மற்றும் அணிக்காக பெருமைப்படுகிறேன். எங்களுடைய பௌலர்கள் நன்றாகப் பந்து வீசினர். அதே போல பிட்ச்சில் நிறைய வேலை செய்ய வேண்டியிருந்தது என்றும் நினைக்கவில்லை. ஏனெனில் நாங்கள் இந்தியாவை ஓரளவு நன்றாகக் கட்டுப்படுத்தி சேசிங் செய்யக்கூடிய இலக்கைப் பெற்றோம். அதைத் தொடர்ந்து பேட்டிங்கிலும் நாங்கள் நன்றாகவே செயல்பட்டதாக நினைக்கிறேன். இருப்பினும் கடைசியில் அது தவறிச் சென்றது” என்றார். 

இந்தியர்கள் என்ற அடிப்படையில் இந்த வெற்றியை ஒரு புறம் இருந்து ரசிக்கும் நாம், வெற்றிக்காகக் கடுமையாகப் போராடிய, சொல்லப் போனால் முதல் முறை கோப்பை கனவுடன் இறுதிப் போட்டி வரை வந்த தென் ஆப்பிரிக்க அணி, தாங்கள் வெற்றி பெற்று விடுவோம் என்ற மகிழ்ச்சியில் இருந்த அணி, திடீரென ஏற்பட்ட தோல்வியின் சோகத்தால், மனமுடைந்ததைப் பற்றியும் யோசித்துப் பார்க்கலாம்! 

அதனை உணர்ந்து தான், இந்திய அணியின் தீவிர ரசிகர்கள், தென் ஆப்பிரிக்க அணி வீரர்களுக்கு வாழ்த்து சொல்லி, உற்சாகப் படுத்தி, அவர்களின் சோகத்தை விரட்ட முயற்சி செய்திருக்கிறார்கள். இணையத்தில் வைரலான வீடியோ ஒன்று, இந்திய ரசிகர்களின் நல்லுள்ளத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. தென் ஆப்பிரிக்க வீரர்களும், அணியின் பணியாளர்களும் மைதானத்தைவிட்டு மிகவும் வருத்தத்துடன் வெளியேறியபோது அங்கிருந்த இந்திய ரசிகர்கள் தென் ஆபிரிக்க வீரர்களை நோக்கி, நாங்கள் உங்களை நேசிக்கிறோம் [We love you] என்று கோரஸ் செய்து கைத்தட்டி அவர்களை உற்சாகப்படுத்தும் வீடியோவை சமூகத் தளங்களில் பலரும் பகிர்ந்து, விளையாட்டு என்பதன் உணர்வை வெளிப்படுத்தியுள்ளனர்.

இவை எல்லாம் இந்த டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் உலகத்துக்குக் கற்றுக் கொடுத்துள்ள பாடங்கள்!

சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும் (41): அவிவேக புரோஹித நியாயம்!

samskrita nyaya - 2026

தெலுங்கில் – பி எஸ் சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்

அவிவேக புரோஹித நியாயம்
அவிவேகம் – அறிவற்ற (இங்கிதமற்ற),
புரோஹிதர் – புரத்திற்கு ஹிதம் செய்பவர் (மதிப்பிற்குரிய மனிதர்)

பிறர் மனம் புண்படும்படி பேசுவது விவேகமற்றவர்களின் இயல்பு. சின்னக் குழந்தையானாலும் வளர்ப்பு மிருகமானாலும் சிரித்துக் கொண்டே பேசினால் அவை மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதைப் பார்க்கிறோம். விளையாட்டாகக் கூட பிறரை கேலி செய்து மனம் புண்படும்படி பேசக் கூடாது என்ற நீதியைக் கூறும் நியாயம் இது.

ப்ரியவாக்ய ப்ரதானேன சர்வே துஷ்யந்தி ஜந்துன: |
தஸ்மாத் ததேவ வக்தவ்யம் வசனே கா தரித்ரதா ||

(சாணக்ய நீதிசாஸ்திரம்)

பொருள் – இனிமையான சொல்லைக் கேட்டால் எல்லா உயிரினங்களும் மகிழ்ச்சியடையும். அதனால் அன்பாகவே பேச வேண்டும். சொற்களுக்குக் குறைவா என்ன? பேசுவதில் ஏனிந்த தரித்திரம்?

உடலில் ஏற்பட்ட காயம் ஆறிவிடும். ஆனால் பிறருடைய உள்ளத்தில் சூலம் போற்ற கூரான சொற்களால் ஏற்படுத்திய காயம் ஆறுவது கடினம் என்கிறார் விதுரர். பிறர் மனதைப் புண்படுத்தாமல் இனிமையாகப் பேசுவது ஒரு கலை.

சிலருக்கு நல்லவிதமாகப் பேசத் தெரியாததால் கௌரவம் மிக்க ஸ்தானத்தில் இருந்தாலும் மதிப்பை இழக்கிறார்கள். பேசும்போது நாவடக்கம் இல்லாவிடில் மதிப்பை இழக்க வேண்டி வரும் என்று தெரிவிக்கும் நியாயம் இது.

இந்த நியாயத்தில் புரோஹிதர் என்ற சொல்லைப் பயன்படுத்தியதில் உள்ள காரணத்தைப் பார்க்கையில், அறிஞர்களால் மதிக்கப்படும் மனிதர் என்றும், அப்படிப்பட்டவர் கூட நாவைக் கட்டுப்படுத்தாவிட்டால் அவமதிப்புக்கு உள்ளாவார் என்றும் நகைப்புக்கு இடமாவார் என்றும் இந்த நியாயம் தெரிவிப்பதை அறிய முடிகிறது.

இந்த நியாயத்தோடு தொடர்புடைய சில கதைகள் புகழ் பெற்றவையாக உள்ளன. இவை சிறுவர் கதைகளில் படித்தவையே. ஒரு ஊரில் ஒரு செல்வந்தர் இருந்தார். அவர் கட்டிய புது மாளிகையில் வாஸ்து பூஜை செய்வதற்காக ஒரு புரோஹிதரும் அவருடைய சீடரும் வந்தார்கள். வீட்டு உரிமையாளரின் மனைவி மிகவும் குண்டாக இருந்ததைப் பார்த்து புரோஹிதரும் அவருடைய சீடரும் அனைவரின் முன்பாக நகைத்தனர்.

“சுவாமி, இந்த வீட்டின் கதவுகள் இத்தனை சின்னதாகவும் குறுகியதாகவும் உள்ளதே. இந்த வீட்டின் யஜமானியம்மாவைப் பார்த்தால் இத்தனை குண்டாக இருக்கிறாரே. அவர் மரணமடைந்தால் எப்படி வெளியில் எடுத்துச் செல்வார்கள்?” என்று கேட்டான் சீடன்.

புரோஹிதர் இன்னும் அறிவிலி. சீடனைக் கண்டிக்காமல், “சீடனே, இதென்ன கேள்வி? உடலைத் துண்டு துண்டாக்கி எடுத்துச் செல்வார்களே தவிர, சுவரை உடைப்பார்களா, என்ன?” என்று கேட்டார். இந்த அரட்டையால் புரோஹிதர் அவமதிப்புக்கு உள்ளாகி விரட்டப்பட்டார். சொல்லுக்கு பாதிப்பு அதிகம் என்பது இந்தக் கதை கூறும் நீதி.

ஒரு அறிவுப்பூர்வமான சொல் எதிரியையும் நண்பனாக்கும். ஒரு அறிவற்ற சொல் நண்பனையும் எதிரியாக்கும். விவேகம் நிறைந்தவரான சுவாமி விவேகானந்தர் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் உரைத்த சொற்கள் இன்றளவும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

சைனாவோடு 1962 ல் நடந்த போரில் பாரத தேசம் 64,000 சதுர கி.மீ நிலப்பகுதியை இழந்தது. தேச பக்தரான ஒரு எதிர்க்கட்சித் தலைவர் அன்றைய பிரதமரை பார்லிமெண்டில் அது குறித்து வினவியபோது, அந்த நிலப்பகுதியை குறைத்து மதிப்பிட்டு, “போனால் போகட்டும். ஒரு புல் கூட முளைக்காத இடம் அது. இருந்தால் என்ன? போனால் என்ன? என்று பொருள்படும்படி, “Even a blade of grass won’t grow there” என்றாராம்.

பிரதமர் பதவியில் இருக்கும் மனிதர் கூறக் கூடிய சொற்களா அவை? அத்தகைய விவேகமற்ற நடத்தை அவருடைய கௌரவத்தைக் குறைத்தது. “அவிவேக புரோஹித” நியாயத்திற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி தன் விவேகமற்ற பேச்சின் காரணமாக இகழப்பட்டது வரலாற்றில் நிலைத்து விட்டது. இந்தியர்கள் மூன்று வேளையும் சாப்பிடுவதால்தான் உலகில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது என்றாராம் அவர். அந்த உளறல் அவருடைய கௌரவத்தைக் குறைத்தது.
இந்திரா காந்தியின் கொலைக்குப் பிறகு சீக்கியர்களின் மீது வன்முறையும் கலவரங்களும் கொலைகளும் நேர்ந்தன. அது குறித்துப் பேசிய இந்திராஜியின் மைந்தர், அதனை நியாயப்படுத்துவதுபோல, “பெரிய மரம் பெயர்ந்து விழுந்தால், அதன் தாக்ககம் நில அதிர்வாக வெளிப்படுவது இயல்புதான்” என்று விளக்கவுரை அளித்து, கௌரவத்தை இழந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் கேரளாவில் நடந்த ஒரு கொடூரமான கொலையைப் பற்றி மதிப்புள்ள உறுப்பினரான கட்சியைச் சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ. தன் வருத்தத்தை வெளிப்படுத்தி கொலையைக் கண்டித்து உரையாற்றுகையில், அப்போதைய முதல்வர், “இறந்தவர் நம் கட்சியைச் சேர்ந்தவர் அல்ல. எதற்காக தொண்டையைக் கிழித்துக் கொண்டு பேசுகிறாய்? உட்கார்” என்று ஆத்திரத்தோடு பேசியது அப்போது விமரிசனத்துக்கு உள்ளானது.

காங்கிரஸ் கட்சிக்கும், அதிலும் முக்கியமாக ராகுல் காந்திக்கும் குரு போன்றவரான சத்தியநாராயண கங்காராம் பிட்ரோடா (சாம் பிட்ரோடா), அண்மையில் இந்தியர்களின் உடல் நிறத்தைப் பற்றிப் பேசிய சொற்கள் அவரை இகழ்ச்சிக்கு உள்ளாக்கியதோடு, வகித்த பதவியையும் இழக்கச் செய்தது. அவருடைய சீடர் வெளிநாட்டு மேடைகளில் வாய்க்கு வந்தபடி சந்தர்ப்ப சூழ்நிலையை கவனிக்காமல் பேசுவதும், பாரத தேசம் ஒரு தேசமே இல்லை என்று உளறுவதும் இந்த அவிவேக புரோஹித நியாயத்திற்கு உதாரணங்கள்.

ஆனால் இவ்வாறு ஏன் சிலர் நடந்து கொள்கிறார்கள்? இது குறித்து மன தத்துவ நிபுணர்கள் ஆராய்ந்து விளக்கியுள்ளார்கள். அவர்கள் கூறிய கருத்துகளில் முதலாவது விவேகமின்மை. இந்த நியாயத்தில் புரோஹிதர் என்ற சொல்லை பயன்படுத்துவது, புகழ்பெற்றவர்கள் கூட விவேகமில்லாமல் நடந்து கொள்வார்கள் என்று கூறுவதற்காகவே. அடுத்தது, மனதில் ஆழத்தில் இருக்கும் அழுக்குகள் வெளிப்படுவது. இன்னொன்று, நாவடக்கமின்றிப் பேசும் சுபாவம் உள்ளவர்களிடம் கட்டுப்பாடற்ற பேச்சு இவ்விதமான விவேகமற்ற சொற்களை உதிர்க்கின்றன என்கின்றனர் நிபுணர்கள்.

“வாக்பூஷணம் சுபூஷணம்” – நல்லவிதமாகப் பேசுவது மனிதனுக்கு நகையலங்காரம் போன்றது என்று கூறும் நியாயம் இது.

சங்கரன்கோயில் ஆலயத்தில் வரும் ஆக.23ல் கும்பாபிஷேகம்!

sankarankoil kumbabishekam thirupani - 2026

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற இந்து சைவ-வைணவ ஒருமைப்பாட்டை விளக்கும் ஆலயங்களில் முக்கியமான ஸ்தலமாக விளங்கும் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில், வரும் ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் பிரபலமான தனித்துவமான சிவாலயங்கள் பல உள்ளன அதில் முக்கியமானது சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில் ஆகும் இங்கு இந்து மதத்தில் சைவமும் வைணவமும் ஒன்றே என்று உலகுக்கு காட்ட சிவனும் மகாவிஷ்ணுவும் சரி பாதி இணைந்த சங்கரநாராயணர் ஸ்தலம் உள்ளது.

மூலஸ்தானத்தில் சங்கரலிங்கசுவாமி அருள்பாலிக்கிறார் அருகில் பிரசித்தி பெற்ற அம்மன் கோமதி அம்மன் அருள் பாலிக்கின்றார்.

கோவில் சங்கரன்கோவில் நகரின் மையப் பகுதியில் உள்ளது. மிகப் பெரிய கோபுரம், மிகப்பெரிய கட்டிடக்கலை என பாண்டியர்களின் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இக்கோவில் ராகு கேது பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது. இங்கு நாகராஜர் சன்னிதி மிகவும் பிரபலமான தனித்துவமான சன்னிதியாகும்.

இக்கோவிலில் தினமும் பல்வேறு பூஜை வழிபாடுகள் நடந்தாலும், ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் நடைபெறும் கடைசி வெள்ளி சிறப்பு பூஜை வழிபாடு மிகப் பிரபலமானது.

ஆண்டு முழுவதும் கிட்டத்தட்ட உத்ஸவம் நடைபெறும் இக்கோவில் ஆடி தபசு திருவிழா பிரபலமானது.
இது பஞ்ச பூத ஸ்தலங்களில் நிலம் ஸ்தலமாகும். இங்கு புற்று மண் பிரசாதம் பிரபலம்.

இக் கோயிலில் கடந்த சில மாதங்களாக திருப்பணிகள் நடந்து வருகின்றன. தற்போது கோவிலில் திருப்பணிகள் முடியும் நிலையில், கும்பாபிஷேகம் வரும் ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவில் ராஜகோபுரம், சுற்றுப்பிராகாரங்கள், கல் தூண்கள் மற்றும் மூலவர் சன்னதிகள் அனைத்தும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.