Home Blog Page 232

CAA குடியுரிமை திருத்தச் சட்டம் இந்திய முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல!

india want caa act - 2026

இந்தியாவில் நேற்று முதல் அமல்படுத்தப் பட்ட குடியுரிமைச் சட்டம் இந்திய முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல என்பதை பலரும் தெளிவாக விளக்கி வருகின்றனர். இது குறித்து நன்கு சிந்தித்து, இச்சட்டத்தின் தன்மையை, நன்மையை இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்கின்றனர்.

குடியுரிமை (திருத்தம்) சட்டம் 2019 – CAA குடியுரிமைச் சட்டம், 1955 ஐ திருத்துகிறது. இந்தச் சட்டம் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளிலிருந்து மத ரீதியாக துன்புறுத்தப்பட்ட, அந்நாடுகளின் சிறுபான்மை சமூகத்தவரான இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜைனர்கள் மற்றும் பார்சிகளுக்கானது. 

டிசம்பர் 31, 2014 அல்லது அதற்கும் முன் இந்தியாவுக்குள் நுழைந்து இங்கே தங்கியுள்ள இந்த சமூகங்களைச் சேர்ந்த எந்தவொரு நபரும் சட்டவிரோதமாக குடியேறியவர்களாக கருதப்பட மாட்டார்கள் என்று இச்சட்டம்  கூறுகிறது.

தற்போது இந்தியாவில் உள்ள 18 கோடி இந்திய முஸ்லீம்களும், இந்தியர்களாகவே கருதப்பட்டு, அனைவருக்கும் சம உரிமை வழங்கப்படுகிறது. சொல்லப் போனால், இந்துக்களைக் காட்டிலும், சிறுபான்மை சமூகம் என்ற அளவில் பல்வேறு சலுகைகளும் உரிமைகளும் வழங்கப் படுகின்றன. எனவே, CAA க்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

முக்கியமாக, மக்களை பீதியில் தள்ளக் கூடிய சமூகவிரோதிகள் சிலரின் கூற்றுப்படி, இந்தச் சட்டத்திற்குப் பிறகு எந்தவொரு இந்தியக் குடிமகனும் தனது குடியுரிமையை நிரூபிக்க, எந்த ஆவணத்தையும் சமர்ப்பிக்கும்படி கேட்கப்பட மாட்டார்கள் என்பதே உண்மை!

மேலும், இச்சட்டம் இயற்கைமயமாக்கல் சட்டங்களை ரத்து செய்யவில்லை. எனவே, எந்தவொரு வெளிநாட்டிலிருந்தும் குடியேறிய முஸ்லீம்கள் உட்பட, இந்தியக் குடிமகனாக இருக்க விரும்பும் எந்தவொரு நபரும், தற்போதுள்ள சட்டங்களின் கீழ் விண்ணப்பிக்கலாம்.

குடியுரிமைச் சட்டத்தின் 6-வது பிரிவின் கீழ் இந்தியக் குடியுரிமையைப் பெற உலகில் எங்கிருந்தும் முஸ்லிம்களுக்கு எந்தத் தடையும் இல்லை. சட்ட விரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்துவதையும் இந்த சட்டம் கையாளவில்லை. எனவே CAA முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிரானது என்ற கவலையை முஸ்லிம்கள் மற்றும் மாணவர்கள் எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது.

மேற்கூறிய இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாத்தின் பதிப்பைப் பின்பற்றியதற்காக துன்புறுத்தப்படும் எந்தவொரு முஸ்லிமும், தற்போதுள்ள சட்டங்களின் கீழ் இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதை CAA தடுக்கவில்லை.

CAA-சட்டத்தின் பல்வேறு நோக்கங்களில் முக்கியமான ஒன்று, சட்ட விரோத குடியேறிகளின் ஊடுருவலை தடுத்து நிறுத்துவது என்பதே!

இது வரும் காலத்தில் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நன்மை பயக்கும். சிஏஏ மூன்று இஸ்லாமிய நாடுகளின் துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கு, இயற்கைமயமாக்கல் செயல்பாட்டில் ஒரு சிறப்பு அந்தஸ்தை வழங்கினாலும், மற்ற சமூகங்கள் பொது புகலிட நடைமுறையைப் பெறுவதைத் தடுக்காது.

முஸ்லீம் தலைவர்களில் சிலர், இந்தச் சட்டத்தின் நன்மை தரும் விளைவுகளைப் புரிந்துகொண்டு, CAA வை வைத்து முஸ்லிம்களை தவறாக வழிநடத்தும் பிரிவினைவாத சக்திகளிடமிருந்து முஸ்லிம்கள் விலகி இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பாஜக.,வில் கட்சியை இணைத்தார் சமக., தலைவர் சரத் குமார்!

sarath kumar in bjp - 2026

எதிர்பாராத நிகழ்வாக, தாம் நடத்தி வந்த சமத்துவ மக்கள் கட்சியை, பாஜக.,வுடன் இணைத்தார் நடிகரும் அர்சியல்வாதியுமான சரத் குமார்.

நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். இந்த நிலையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடந்தது. கட்சி தலைவர் சரத்குமார் தலைமையில் நடந்த கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் பாஜக.,வுடன் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை இணைப்பது குறித்து முடிவு செய்து, அதுகுறித்து நிர்வாகிகளிடம் கருத்து கேட்டார் சரத் குமார். அப்போது பெரும்பாலான நிர்வாகிகள் கட்சியை பாஜக.,வுடன் இணைக்கலாம் என்று கருத்து தெரிவித்தனர். பெரும்பாலான நிர்வாகிகளின் முடிவை ஏற்று கட்சியை பாஜக.,வுடன் இணைப்பதாக அவர்கள் மத்தியில் சரத்குமார் அறிவித்தார்.

இதுகுறித்து, தமிழக பாஜக., மாநில தலைவர் அண்ணாமலைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை, பொறுப்பாளர் அரவிந்த் மேனன், துணைத் தலைவர் சக்கரவர்த்தி, மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன், கரு.நாகராஜன் உள்ளிட்டோர், சமத்துவ மக்கள் கட்சி அலுவலகத்துக்கு வந்தார்கள். அங்கே, சமக., பாஜக.,வுடன் இணைப்பதாக அறிவிக்கப்பட்டு, இணைப்பு விழா நடந்தது.

இதை அடுத்து, சரத் குமாருக்கு பாஜக., நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். பாஜக.,வுடன் தன் கட்சியை இணைத்த சரத்குமாருக்கு நிர்வாகிகள் ஒவ்வொருவரும் சால்வை அணிவித்தனர். பாஜக.,வுடன் முன்னதாக கூட்டணி மட்டுமே அமைத்து இரு தொகுதிகளில் போட்டியிடப் போவதாகக் கருத்து தெரிவித்து வந்த சரத் குமார், திடீரென சமத்துவ மக்கள் கட்சியையே பாஜக.,வுடன் இணைத்தது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

காமராஜரைப் போல் மோடி ஆட்சி

இது குறித்து சரத்குமார் கூறியபோது, “பெருந்தலைவர் காமராஜரைப் போல பிரதமர் மோடி ஆட்சி நடத்தி வருகிறார். நாட்டின் வளர்ச்சிக்காகவும் இளைஞர்களின் நலன் கருதியும் சமத்துவ மக்கள் கட்சியை பாஜக.,வுடன் இன்று இணைத்துள்ளேன். இது மக்கள் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு. பாஜக.,வில் சமத்துவ மக்கள் கட்சியை இணைப்பது தொடர்பாக கட்சி நிர்வாகிகளின் கருத்துகளையும் பெற்றுள்ளேன். உங்களது விருப்பம் மற்றும் மக்கள் நலன் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதனால் பாஜக., மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் கட்சியை இணைத்துள்ளோம். இது நாளைய எழுச்சிக்காக எடுக்கப்பட்ட முடிவு. மக்கள் பணிக்கான தொடக்கமாகவும் இது அமைந்துள்ளது” என்றார்.

சரத்குமார் கடந்த 2007ல், சமத்துவ மக்கள் கட்சியைத் தொடங்கினார். திமுக., அதிமுக., என இரண்டு கழகங்களுடனும் கூட்டணி வைத்து தேர்தல்களை சந்தித்தார். ஒருமுறை தென்காசி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். கடந்த 17 ஆண்டுகளாக சமத்துவ மக்கள் கட்சியை நடத்தி வந்த அவர் தற்போது, பாரதிய ஜனதா கட்சியுடன் தனது 17 ஆண்டுக் காலம் நடத்தி வந்த கட்சியை இணைத்திருப்பது இன்றைய ஆச்சரியமான சம்பவமாகப் பேசப்பட்டது.

இந்நிலையில், தமிழக பாஜக., தலைவர் கே.அண்ணாமலை இது குறித்து கருத்து தெரிவித்த போது,

மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் தலைமைத்துவதால் ஈர்க்கப்பட்ட சிறந்த தேசியவாதியான திரு சரத்குமார் அவர்கள், இன்று, தமிழக பாஜக மூத்த தலைவர்கள் & பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளர் திரு அரவிந்த் மேனன் அவர்கள் முன்னிலையில் அனைத்திந்திய சமத்துவ மக்கள் கட்சியை, பாரதிய ஜனதா கட்சியுடன் இணைப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

தனது கலைத்திறன் மூலம் தேசிய உணர்வுக்கு குரல் கொடுத்த திரு சரத்குமார் அவர்கள், தமிழக மக்களுக்கு சேவை செய்வதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை மக்கள் எதிர்பார்த்திருக்கும் நேரத்தில், திரு சரத்குமார் அவர்கள் எடுத்துள்ள முடிவு சரியான நேரத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவாகும். தமிழக பாஜக சார்பில், பாஜக குடும்பத்திற்கு திரு சரத்குமார் அவர்களை மனதார வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்… என்று குறிப்பிட்டுள்ளார்.

கோவை காமாட்சிபுரி ஆதினம் முக்தி: அன்பர்களுக்கு தலைவர்கள் ஆறுதல்!

covai kamatchipuri adhinam - 2026

கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர ஸ்வாமிகள் இன்று முக்தி அடைந்தார். அவரது திருமடத்தின் அன்பர்களுக்கு தலைவர்கள் ஆறுதல் தெரிவித்துள்ளனர்.

இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கையில்…

கோவை காமாட்சிபுரி ஆதீனம் 51 சக்தி பீடம் மகா சன்னிதானம் ஞான குரு சாக்தஸ்ரீ சிவலிங்கேஸ்வர ஸ்வாமிகள் இன்று முக்தி அடைந்துள்ளார்.

ஆன்மீகத்திற்காகவும்இந்து சமுதாய ஒற்றுமைக்காகவும்
அரும்பாடுபட்டவர் சிவலிங்கேஸ்வர ஸ்வாமிகள். இந்துக்களுக்கு எங்கு பாதிப்பு ஏற்பட்டாலும் உடனடியாக களத்தில் இறங்கி குரல் கொடுப்பவர்.தமிழகத்தில் நாத்திக சக்திகளால் கந்த சஷ்டி கவசம் அவமதிக்கப்பட்ட போது, இந்துக் கடவுள்களை யார் இழிவாக பேசினாலும் அவர்களின் நாக்கை கூட அறுக்க தயங்க தேவையில்லை என்று பொதுவெளியில் பகிரங்கமாக பேசியவர்.

ஆதீனங்கள் என்றாலே பூஜை புனஸ்காரங்களோடு
தங்கள் பணியை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இல்லாமல் இந்து தர்ம போராளியாக ஏற்றத்தாழ்வுகளை களைந்திடும் புரட்சியாளராக வாழ்ந்தவர் சிவலிங்கேஸ்வரர் ஸ்வாமிகள்.

2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி இந்து முன்னணி கோவை மாவட்ட செய்தி தொடர்பாளர் C.சசிகுமார் அவர்கள் முஸ்லிம் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட செய்தி கேள்விப்பட்டவுடனே இந்து முன்னணி மாநில பொறுப்பாளர்களோடு தொடர்பு கொண்டு அன்று காலையிலேயே கோவை அரசு மருத்துவமனைக்கு வருகை தந்து சசிகுமார் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு மயானம் வரையில் வந்து அஞ்சலி செலுத்திய துறவி.

தமிழகத்தில் பல கோவில்களின் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்தியவர். கோவையில் பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளில் பல்வேறு விதமான சேவைப் பணிகளை செய்தவர். 2019 ஆம் ஆண்டு பொங்கலூர் பகுதியில் இந்து முன்னணி பேரியக்கம் சார்பாக 1008 கோமாதா பூஜை ஒரு லட்சம் குடும்பங்கள் பங்குபெற்ற சோடஷ மகாலட்சுமி பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. அந்த மாபெரும் நிகழ்ச்சிக்கு காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வரர் சாமிகள் இந்து முன்னணி பேரியக்கத்திற்கு உறுதுணையாக நின்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

இந்து முன்னணி பேரியக்கத்தின் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு இந்துக்களின் உரிமைக்காக குரல் கொடுத்திடுவார். விடுதலைப் போராட்ட வீரர்களின் மீது தீரா பக்தி கொண்டவர். இளைய தலைமுறையினருக்கு சுதந்திர போராட்ட வீரர்களின் தியாக வரலாற்றை எடுத்துக் கூறுவதில் பேரார்வம் உடையவர்.

புதிதாக திறக்கப்பட்ட பாராளுமன்ற கட்டிடத்தின் திறப்பு விழாவில் கலந்துகொண்ட ஆதீனங்களில் இவரும் ஒருவர்.
மிகச் சிறந்த பேச்சாளர். தேசியவாதி ஆன்மீகவாதி என்ற பல முகங்களைக் கொண்ட சிவலிங்கேஸ்வர ஸ்வாமிகளின் மறைவு இந்து சமுதாயத்திற்கு பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் சீடர்கள் மற்றும் பக்தர்களுக்கு இந்துமுன்னணி ஆறுதல் கூறுகிறது..

சிவலிங்கேஸ்வர ஸ்வாமிகளின் ஆன்மா எல்லாம் வல்ல ஈசனின் திருப்பாதங்களில் இளைப்பாற இந்துமுன்னணி வேண்டிக் கொள்கிறது.. – இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பாஜக., மூத்த தலைவர் ஹெச்.ராஜா வெளியிட்ட குறிப்பில்,

சிவ சிவ!!! சைவமும், தமிழும் இரு கண்கள் என்று வாழ்ந்த பெருமைக்குரியவர் காமாட்சிபுர ஆதீனம். தமிழ்த்தொண்டு, ஆன்மீக தொண்டு மற்றும் சமூக பணிகளில் ஈடுபட்டு வந்தார். என் மேல் நல்அன்பும் பாசமும் கொண்டவர். இன்று அவர் முக்தியடைந்தார் எனபதை கேள்விபட்டு வெறுமை அடைகிறேன். ஆன்மீகப் பெருமக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் – என்று குறிப்பிட்டுள்ளார்.

பாஜக., மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்ட குறிப்பில்,

வணக்கத்திற்குரிய கோவை காமாட்சிபுரி ஆதீனம், சாக்தஶ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் அவர்கள், இறைவன் திருவடிகள் அடைந்தார் என்ற செய்தி, மிகுந்த வருத்தமளிக்கிறது.

பொதுமக்களைப் பாதிக்கும் பிரச்சினைகளில், துணிச்சலுடன் குரல் கொடுத்தவர். ஏற்றத்தாழ்வின்றி, அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வலியுறுத்தியவர். புதிய பாராளுமன்றக் கட்டிடத் திறப்புவிழாவில் பங்கு கொண்டு, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு செங்கோல் வழங்கி ஆசி வழங்கியவர்.

ஶ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகளைப் பிரிந்து வாடும் பக்தர்கள் அனைவருக்கும், தமிழக பாஜக சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி ! – என்று குறிப்பிட்டுள்ளார்.

கோவை காமாட்சிபுரி ஆதீனம் சாக்த ஶ்ரீ சிவலிங்கேஸ்வர ஸ்வாமிகள் முக்தி அடைந்த நிலையில், விஸ்வ ஹிந்து பரிஷத் மாநிலத் தலைவர் ஸ்ரீராமகிருஷ்ணன் வெளியிட்ட குறிப்பு…

கோவை காமாட்சிபுரி ஆதீனம் சாக்த ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் சித்தி அடைந்தார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இளம் வயதிலேயே ஆன்மீகத்தில் ஈர்க்கப்பட்டு கோவையில் காமாட்சி புரி ஆதீனத்தை உருவாக்கி இறைப்பணியோடு சமூக பணியையும் மேற்கொண்டு வந்தவர். தவத்திரு காமாட்சிபுரி ஆதீனம் அவர்கள்

கோவை உள்ளிட்ட தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான திருக்கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தி வைத்துள்ளார் ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்பு இல்லங்களை நடத்தி வந்த சுவாமிகள் ஹிந்து சமுதாயத்திற்கு பிரச்சனை வரும்போது நேரடியாக களத்தில் இறங்கி போராடவும் தயங்காதவர், தீண்டாமையை போக்குவதில் பெரும் பங்காற்றியவர். ஹிந்து சமுதாயத்திற்கு எந்த பிரச்சனை வந்தாலும் தைரியமாக குரல் கொடுத்து வந்தவர்.

விசுவ ஹிந்து பரிஷத் பேரியக்கத்துடன் பணியாற்றி வந்த சாக்த ஸ்ரீ சிவலிங்கேஸ்வர ஸ்வாமிகள் திடீர் இழப்பு ஹிந்து சமுதாயத்திற்கு மிகப்பெரிய இழப்பாகும். அவரது பிரிவால் வாடும் பக்தர்கள் ஆதீனத்தை சேர்ந்த அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். பூஜ்ஜிய சுவாமிகள் ஆன்மா நம்மை தொடர்ந்து வழிநடத்த பிரார்த்தனை செய்கிறேன். – என்று குறிப்பிட்டுள்ளார்.

நாம் செய்யும் வளர்ச்சிப் பணிகள் – தேர்தலுக்காக அல்ல, தேசத்தின் முன்னேற்றத்துக்காக: பிரதமா் மோடி!

modi inaugurating vande bharat - 2026

நாடு முழுவதும் ரூ.85,000 கோடிக்கு அதிகமான ரயில்வே திட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி காணொலி வாயிலாக இன்று (மாா்ச் 12) காலை தொடக்கி வைத்தார்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை-மைசூரு இடையேயான 2-ஆவது வந்தே பாரத் ரயில் தொடக்க விழாவில் ஆளுநா் ஆா்.என்.ரவி, மத்திய இணையமைச்சா் எல்.முருகன் ஆகியோா் கலந்து கொண்டனர்.

வாரந்தோறும் புதன்கிழமை தவிர தினசரி காலை 6 மணிக்கு மைசூரிலிருந்து புறப்படும் இந்த வந்தே பாரத் ரயில்(எண்:20663), பிற்பகல் 12.25 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடையும். மீண்டும் மறுமாா்க்கமாக சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் இந்த ரயில் (எண்:20664), சென்ட்ரல், காட்பாடி, ஜோலாா்பேட்டை, கிருஷ்ணராஜபுரம், மாண்டியா வழியாக இரவு 11.20-க்கு மைசூரு சென்றடையும்.

சென்னை – மைசூரு வந்தே பாரத் ரயில் ஏப். 4 ஆம் தேதி வரை பெங்களூரு வரை இயக்கப்படும் என்றும், ஏப். 5 ஆம் முதல் மைசூரு வரை இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வேயில் சென்னை – மைசூரு இடையே கூடுதலாக ஒரு புதிய வந்தே பாரத் ரயில், லக்னெள-டேராடூன், கலபுா்கி-பெங்களூரு, ராஞ்சி-வாரணாசி, தில்லி (நிஜாமுதீன்)-கஜுரஹோ, செகந்திராபாத்-விசாகப்பட்டினம், நியூ ஜல்பைகுரி-பாட்னா, லக்னெள-பாட்னா, அகமதாபாத்-மும்பை, புரி-விசாகப்பட்டினம் என மொத்தம் 10 வழித்தடங்களில் புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் தொடக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியபோது, நாட்டின் இளைஞர்கள் தங்களுக்கு என்ன மாதிரியான நாடு வேண்டும் என்பதை முடிவு செய்வார்கள். இப்பொழுது ரயில்வே துறை சிறந்த வளர்ச்சி அடைந்துள்ளது. 2024ம் ஆண்டு துவங்கி இரண்டு மாதங்களில், நாங்கள் 11 லட்சம் கோடி ரூபாய் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளோம்.

எனது வாழ்க்கையே ரயில் நிலையத்தில் தான் துவங்கியது. இதனால் ரயில்வே துறை முன்பு எவ்வளவு மோசமாக இருந்தது என்று எனக்குத் தெரியும். ரயில்வே மேம்பாட்டிற்கு அரசுப் பணத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே தனி ரயில்வே பட்ஜெட்டை நிறுத்திவிட்டு மத்திய பட்ஜெட்டில் சேர்த்துள்ளேன்.

கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வே மேம்பாட்டுக்காக எனது அரசு அதிக பணம் செலவிட்டுள்ளது. முந்தைய அரசு ஆட்சியில் செலவிட்ட தொகையை விட 6 மடங்கு அதிகம் ஆகும். உலகில் எங்கு வேண்டுமானாலும் நாம் பார்க்கலாம். வளர்ந்த மற்றும் பொருளாதார சக்தியாக மாறிய நாடுகளில் ரயில்வே துறை முக்கியப் பங்காற்றியிருப்பதைக் காணலாம்.

நாங்கள் செய்து வரும் வளர்ச்சிப் பணிகள் தேர்தல் வெற்றிக்காக அல்ல. தேசத்தின் முன்னேற்றத்திற்காக! என்று பேசினார் பிரதமர் மோடி.

தமிழ் தினசரி இணையத்தின் பத்தாம் ஆண்டு: தெய்வத் தமிழர் விருது வழங்கும் விழா!

deivatamilar3 - 2026

தமிழ் தினசரி இணையத்தின் பத்தாம் ஆண்டில், ஆன்மிக, சமூகத் தொண்டாற்றியவர்களுக்கு  ’தெய்வத் தமிழர்’ விருது வழங்கும் விழா, சென்னை மயிலாப்பூரில் உள்ள கோகலே சாஸ்திரி ஹாலில் நடைபெற்றது. மார்ச் 10ம் தேதி ஞாயிறு அன்று மாலை 5 மணிக்குத் தொடங்கி நடைபெற்ற இந்த விழாவில், விளக்கு ஏற்றி, தமிழன்னை படத்துக்கும், தபோவனம் ஸ்ரீ ஞானானந்தகிரி ஸ்வாமிகளின் திருவுருவப் படத்துக்கும் மலர்களால் அர்ச்சித்து வழிபடப் பட்டது. 

deivatamilar2 - 2026

பின்னர், நம்மாழ்வாரின் தனியன் மற்றும் திருவாய்மொழி செந்தமிழ் வேதப் பாசுரத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. தமிழ் தினசரி தளத்தின் நிறுவுனரும் பத்திரிகையாளருமான செங்கோட்டை ஸ்ரீராம், தளத்தின் தொடக்கம், செயல்பாடு பற்றிக் குறிப்பிட்டு வரவேற்புரை நிகழ்த்தினார். அவர் தமது இணைப்புரையில், இந்த நிகழ்ச்சி ஏன் என்பது குறித்தும், ’தெய்வத் தமிழர்’ விருது குறித்தும் குறிப்பிட்டு, அதைப் பெறுபவர்கள் குறித்த சிறப்பான அறிமுகத்தையும் வழங்கினார். 

தொடர்ந்து தொடக்க உரை நிகழ்த்திய கலைமகள் இதழின் ஆசிரியர் திரு.கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன், தமிழ் தினசரி தளத்தைப் பற்றியும், ஸ்ரீ ஞானானந்த கிரி ஸ்வாமிகள் பற்றியும் ஓரிரு சம்பவங்களை எடுத்துரைத்தார். தலைமை உரை நிகழ்த்திய புதுச்சேரி ஹோட்டல் ஸற்குரு மேலாண் இயக்குனர் திரு. கே.அமர்நாத் அவர்கள், தபோவனத்தின் மகிமை பற்றியும், தமிழ் தினசரி போன்ற செய்தித் தளங்களின் தேவை குறித்தும் உரை ஆற்றினார். தொடர்ந்து விருந்தினர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது. 

deivatamilar1 - 2026

பின்னர் ஆன்மிக, சமூகப் பணிகளில் சிறப்பாக செயல்பட்ட ஐவருக்கு ‘தெய்வத் தமிழர்’ விருது வழங்கப்பட்டது. வானிலையாளரும் எழுத்தாளருமான முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன், பத்திரிகையாளர் டி.எஸ்.வேங்கடேசன், சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர் பி.ஜகந்நாதன், ஓவியரும் சமூக சேவகருமான ஜெ.பிரபாகர், ஆன்மிக சொற்பொழிவாளர் ஜெயந்தி ஐயங்கார் ஆகியோருக்கு தெய்வத் தமிழர் விருதுகள் வழங்கப்பட்டன. 

ஒரே நாடு பத்திரிகையின் ஆசிரியர் திரு. நம்பி நாராயணன், இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் துணை பொதுமேலாளராக இருந்த திரு. ஆர்வீயெஸ், எழுத்தாளர் சிவன் ஆகியோர்,  விருது பெற்றவர்களை வாழ்த்தியும் பாராட்டியும் பேசினார்கள்  பின்னர், விருது பெற்றவர்கள், ஏற்புரை நிகழ்த்த, விழாவின் முதல் பகுதி நிறைவடைந்தது. 

deivatamilar4 - 2026

தொடர்ந்து, தபோவனம் ஸ்ரீ ஞானானந்த கிரி ஸ்வாமிகள் குறித்த இசைச் சொற்பொழிவு நடைபெற்றது. ஹரிகதை சிந்துஜா இசைச் சொற்பொழிவு நிகழ்த்தினார். வந்திருந்த அன்பர்கள் ஆன்மிக அனுபவமும் இலக்கிய அனுபவமும் ஒருங்கே பெற்றார்கள்.

இளைஞர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வைத்த ‘அன்பு’ வேண்டுகோள்!

1766582 rn ravi - 2026

போதைப் பொருள் குறித்த விழிப்பு உணர்வுடன் சமுதாயத்தில் இருக்குமாறு இளைய சமுதாயத்துக்கு தமிழக ஆளுநர் ரவீந்திர் நாராயண் ரவி வேண்டுகோள் வைத்துள்ளார். இது குறித்து, ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியிடப்பட்ட செய்தி வெளியீடு:

ஆளுநரின் வேண்டுகோள்

சமீபத்தில் கணிசமான அளவில் போதைப் பொருட்கள் மற்றும் மனோவியல் பொருட்களின் பறிமுதல் நடவடிக்கைகள் மற்றும் அது தொடர்பாக தமிழ்நாட்டிலும் மற்ற இடங்களிலும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் மத்திய அமைப்புகளால் கைது செய்யப்பட்டுள்ளது நமது மாநிலத்தில் போதைப்பொருள்கள் புழக்கத்தில் உள்ளதாக நிலவிய நமது மோசமான அச்சங்களை உறுதிப்படுத்தியுள்ளது.

உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் தங்களின் பிள்ளைகளின் நிலை குறித்து கவலைப்படும் பெற்றோர்கள், கடந்த ஓராண்டாக மாநிலத்தில் உள்ள கல்வி வளாகங்கள், பொழுதுபோக்கு மன்றங்கள் போன்றவற்றில் போதைப்பொருள்கள் புழக்கத்தில் இருப்பது குறித்த தங்களுடைய தீவிர கவலையை கடந்த ஓராண்டுக்கும் மேலாக என்னிடம் பகிர்ந்து வந்தனர்

மத்திய உளவுத்துறை, புலனாய்வு மற்றும் சட்ட அமலாக்க அமைப்புகள், சர்வதேச கடத்தல் கும்பலைப் பிடிக்கும் நடவடிக்கையில், நமது மாநிலத்தில் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலில் முக்கிய மூளையாக ஈடுபட்டு வந்தவர்களை கண்டறிந்துள்ளன.

இந்த போதைப்பொருள்கள் மிகவும் அடிமையாக்கும் தன்மையையும் அழிவை ஏற்படுத்தவும் கூடியது. இதை பரிசோதிக்காமல் விட்டால் விரைவில் அது நமது எதிர்கால தலைமுறையையே அழித்துவிடும். போதைப்பொருளுக்கு அடிமையாவது பல கொடூரமான குற்றங்களுக்கும் வழிவகுக்கிறது. துல்லிய அவசர நடவடிக்கை உணர்வுடனும் மிகுந்த முன்னுரிமையுடனும் இந்த அச்சுறுத்தலைக் கையாள வேண்டும்.

மத்திய மற்றும் மாநில சட்ட அமலாக்க அமைப்புகள், தங்கள் பணிகளை செய்யும் அதே வேளையில், நம் மாநிலத்தில் உள்ள பெற்றோர் மற்றும் கல்வி நிறுவன நிர்வாகங்கள் இதுபோன்ற போதைப்பொருட்களுக்கு எதிராக எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

போதைப்பொருள் கடத்தல்காரர்களின் முதன்மை இலக்கு இளைஞர்கள் என்பதால், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் இதுபோன்ற துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகும் அறிகுறிகளைக் கொண்டிருக்கிறார்களா என்பதைக் கண்டறிய கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும்.

இந்த நேரத்தில் இளைஞர்களுக்கு எனது வேண்டுகோள்

இதுதான்: தயவு செய்து இதுபோன்ற சலனங்களில் இருந்து விலகி இருங்கள். ஏனெனில் இது உங்கள் வாழ்வையும் குடும்பத்தையும் சரிப்படுத்த முடியாத அளவுக்கு அழித்துவிடும்.

இத்தகைய போதைப்பொருள்கள் தங்களுடைய வளாகத்திலோ அருகிலோ நுழையாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதில் கல்வி நிறுவனங்களின் நிர்வாகங்களுக்கு சிறப்புப் பொறுப்பு உள்ளது.

நமது மக்களின் நலனுக்காகவும் மாநிலத்தின் எதிர்காலத்துக்காகவும் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிராக அனைவரும் முழு ஒத்துழைப்பை நல்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.

Deங்கு Maலேரியா Koசு மாதிரி போதைப் பொருளையும் ஒழிக்க வேண்டும் மகனே…!

stalin udhayanidhi - 2026

– ஆர். வி. ஆர்

ஜாபர் சாதிக் என்பவன் திமுக-வின் முக்கிய ஆள். அவன் பெரிய அளவில் போதைப் பொருட்களை வெளிநாடுகளுக்குக் கடத்திய குற்றச்சாட்டில் இப்போது டெல்லியில் கைதாகி இருக்கிறான். இது பற்றி மேலும் சொல்ல, தமிழக அமைச்சர் உதயநிதியின் ‘சனாதன ஒழிப்பு’ப் பேச்சில் இருந்து ஆரம்பிப்பது நல்லது.

ஆறு மாதங்கள் முன்பு சென்னையில் அமைச்சர் உதயநிதி பிதற்றிய வார்த்தைகள் நாடு முழுவதும் பிரசித்தம் ஆனது. “டெங்கு, மலேரியா, கொசு மாதிரி முற்றிலும் ஒழிக்கப் படவேண்டியது சனாதனம்” என்று எதையோ அரைகுறையாகப் புரிந்துகொண்டு தனது சொற்களின் விளைவும் தெரியாமல் அவர் மேடை ஏறிப் பேசினார்.

சனாதன தர்மம் என்பது என்ன? வாழ்வில் நாம் ஏற்கத் தக்க நல்லெண்ணங்களும் பின்பற்றத் தகுந்த நன்னெறிகளும் சனாதன தர்மம் என்ற பெயரோடு ஒரு வாழ்க்கை முறையாக ஹிந்து சமூகத்தில் பல நூற்றாண்டுகளாகக் கருதப்படுகின்றன. அவை எல்லாவற்றையும் இந்தக் காலத்தில் நாமும் நமது அரசாங்கமும் முழுமையாகப் பின்பற்றுகிறோமா என்றால் இல்லை. மதிக்கத் தக்க அளவில் நாம் அவற்றை வைத்திருக்கிறோம் – அதுவும் அது பற்றிப் படித்து அறிந்திருக்கும் சிலர் அப்படி வைத்திருக்கிறார்கள். சில சில அனுசரிப்புகள் உண்டு. சட்டத்தில் அவை ஏதும் கட்டாயம் இல்லை.

இன்னொரு பக்கத்துக்கு வருவோம்: சட்டம் எதிர்க்கின்ற, அரசு தீவிரமாகக் கட்டுப்படுத்த வேண்டிய, இக்காலத்துப் பெரும் தீமை ஒன்று நம் சமூகத்தில் இருக்கிறது. அதாவது, நமது இளைஞர்கள் மத்தியில், போதைப் பொருள் நுகர்தல் பரவி இருக்கிறது, வளர்ந்து வருகிறது. இளைஞர்களின் சித்தத்தை, அவர்களின் எதிர்காலத்தை, நாசம் செய்யும் அந்தத் தீய பழக்கத்திற்குத் தீனி போட்டு அவர்களைப் பாழாக்குபவர்கள் போதைப் பொருள் தயாரிப்பாளர்கள், கடத்தல்காரர்கள் மற்றும் சில்லறை வியாபாரிகள். அப்படியான ஒரு விஷமி, திமுக-வின் முக்கியஸ்தரான ஜாபர் சாதிக். கட்சியின் தலைமைக் குடும்பத்திடமும் அவன் நெருக்கம் காட்டியவன்.

சென்ற பிப்ரவரி மாத நடுவில் ஜாபர் சாதிக்கின் மூன்று தமிழகக் கையாட்கள், தில்லியில் ஒரு குடோன் வைத்து செயல்பட்டு ரசாயன போதைப் பொருட்கள் வைத்திருந்தபோது அங்கு கைதானார்கள். அவர்களை விசாரித்ததில் ஜாபர் சாதிக்தான் அவர்களுக்கு முதலாளி, அவன் ஒரு சர்வதேச போதைப் பொருள் கடத்தல்காரன் என்று வெளி உலகிற்குத் தெரிந்தது. அந்த சமயத்தில் ஜாபர் சாதிக் திமுக-வில் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணியின் துணைப் பொறுப்பாளராக இருந்தான். அவனது கையாட்கள் தில்லியில் கைதானவுடன் அவன் தலை மறைவானான்.

சில நாட்கள் கழித்து, பிப். 25-ம் தேதியன்று, திமுக-வின் பொதுச் செயலர் துரைமுருகன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலும் இருந்து ஜாபர் சாதிக் டிஸ்மிஸ் செய்யப்படுவதாக அறிக்கை கொடுத்தார். தற்போது மார்ச் 9-ம் தேதி ஜாபர் சாதிக் கைதாகி இருக்கிறான்.

ஜாபர் சாதிக்கைத் திமுக-விலிருந்து நிரந்தரமாக நீக்கி இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. இன்றுவரை அவனது படுபாதகச் செயலைக் கண்டித்து முதல்வர் மு. க. ஸ்டாலினோ அமைச்சர் உதயநிதி ஸ்டாலினோ ஒரு வார்த்தை பேசவில்லை. ஏன்? அப்படி அவர்கள் கண்டித்தால், திமுக-வின் முக்கியத் தலைவர்களைப் பற்றி ஜாபர் சாதிக் அதிகம் பேசிவிடுவான், அது நல்லதல்ல என்பதாலா?

ஜாபர் சாதிக்கின் போதைப் பொருள் விவகாரம் அம்பலம் ஆகும் வரை, அவன் திமுக-வின் முக்கியப் புள்ளியாக இருந்தவன். உதயநிதியின் மனைவி கிருத்திகா இயக்கிய ‘மங்கை’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக். அப்படி என்றால், ஒண்ணும் ஒண்ணும் ரண்டு என்று நமக்குப் பல கணக்குகள் டக்கென்று புரியும்.

போதைப் பொருள் தொழிலில் சம்பாதித்த பணத்தை ஜாபர் சாதிக் சினிமா, ரியல் எஸ்டேட், கட்டுமானத்துறை, குறிப்பாக ஒரு சொகுசு ஹோட்டல், என்று முதலீடு செய்ததாக மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி ஜாபரின் கைதுக்குப் பிறகு தெரிவிக்கிறார். மேலும் சில அதிர்ச்சி விவரங்கள் விசாரணையில் தெரிய வரலாம்.

கடந்த மூன்று வருட காலமாக ஜாபர் சாதிக் மூலம் இதுவரை 45 முறை ஆஸ்திரேலியா, நியூஜிலாந்து, மலேசியா என்று வெளிநாடுகளுக்கு சுமார் 3,500 கிலோ எடையுள்ள போதைப் பொருள் ஏற்றுமதி ஆகி இருக்கிறது, அதன் மதிப்பு சுமார் 2,000 கோடி ரூபாய் என்று செய்திகள் வந்திருக்கின்றன.

இதன் அடிப்படையில், ஜாபர் சாதிக்கின் பெயரைக் குறிப்பிடாமல், போதைப் பொருளுக்கு மட்டும் எதிராக ‘மலேரியா டெங்கு மாதிரி போதைப் பொருட்கள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்’ என்றாவது உதயநிதி பேசுவாரா? மாட்டார். அப்படிப் பேசினால் அது ஜாபர் சாதிக்குக்கு எதிராகப் பேசுவதாக ஜாபர் சாதிக்கே நினைத்துவிட்டால்? அதன் எதிரொலியாக ஜாபர் சாதிக் ஏதாவது பேசிவிட்டால்? திமுக-வில் செந்தில் பாலாஜி, ஜாபர் சாதிக் போன்றவர்கள் ஓரளவு சமமாக நடத்தப் படவேண்டுமே? அதுதானே கட்சிக்குள் எல்லோருக்கும் நல்லது?

ஜாபர் சாதிக் இந்தியாவில், அதுவும் தமிழகத்தில், போதைப் பொருள் சப்ளை செய்தானா, எங்கு, எவ்வளவு என்ற விவரங்கள் இனிமேல்தான் தெரியும். அவன் ஏற்றுமதிக் கடத்தல் மட்டும்தான் செய்தான் என்றாலும், அவன் இந்தியாவுக்கும் ஆபத்தானவன். எந்தப் பாம்பு, எங்கே யாரைக் கொத்துமோ? நம் வீட்டுப் பையன் ஒருவன் அடிக்கடி அடுத்த வீடுகளுக்கு மட்டும் போய் திருடிக் கொண்டிருந்தால் நாம் மெத்தனமாக இருக்க முடியாதே? நம் பேரை அடுத்த வீட்டிலும் கெடுக்கும் அவனை இன்னும் ஒரு போடு போடுவோமே?

ஜாபர் சாதிக் போதைப் பொருள் விற்பனையில் செய்ததற்கும், திமுக நெடுங்காலமாக அரசியலில் செய்து வருவதற்கும் ஒரு ஒற்றுமை உண்டு. சத்துணவு மற்றும் தேங்காய்ப் பொடி பொட்டலங்களை ஏற்றுமதி செய்யும் போர்வையில் அந்த உணவுப் பொருட்களில் ரசாயன போதைப் பொருளைக் கலந்துவைத்து, உண்மையில் போதைப் பொருளைத்தான் அவன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தான் – அதனால் கோடிகள் சம்பாதித்தான்.

திமுக நெடுங்காலமாக என்ன செய்கிறது? தமிழ் என்ற அமிர்தத்தில் சுயநல அரசியல் ஆதாயம் என்ற நச்சைக் கலந்து, “நாங்கள் அமிர்தம் வழங்குகிறோம்” என்று அதிகளவில் தொண்டர்களையும் சாதாரண மக்களையும் நம்பவைத்து அவர்களின் இயற்கையான மொழிப் பற்று என்பதை ஒரு போதை உணர்வாக மாற்றி அவர்களில் பலரைச் சித்தம் தடுமாற வைத்தது திமுக. அதனால் திமுக தலைவர்கள் சிலர் ஓட்டுகளிலும் மற்றதிலும் கோடி கோடி நன்மைகள் அடைந்தனர்.

ஜாபர் சாதிக்கின் போதைப் பொருள் வியாபாரத் தொடர்புகள் இப்போது வெளிவந்து அவன் யார், எத்தகையவன், என்று ஊருக்குத் தெரிகிறது. அது கோர்ட்டிலும் நிரூபணம் ஆகவேண்டும். அதே போல், திமுக-வின் சுயநலத்தை மறைக்க உதவும் காரண காரியமான தமிழ்ப் பற்றும் அக்கட்சியின் ஏமாற்று வேலைகளும் அம்பலமாகித் தமிழகம் சித்தம் தெளியும் நாள் விரைவில் வரவேண்டும். அது தேர்தலிலும் நிரூபணம் ஆகவேண்டும். ஒரு நாட்டில் எல்லாவித போதை சமாச்சாரங்களும் முற்றிலும் ஒழிவது அந்த நாட்டுக்கு, அதன் இளைஞர்களுக்கு, அதன் எதிர்காலத்துக்கு, நல்லதுதானே?

Author:R. Veera Raghavan, Advocate, Chennai
(veera.rvr@gmail.com)
Blog: https://rvr-india.blogspot.com

தமிழ் தினசரி இணைய இதழின் பத்தாம் ஆண்டு விழாவில்… கவனம் ஈர்த்த விஷயங்கள்!

deivatamilar2 - 2026

மார்ச் 10 அன்று மாலை 5.30 மணிக்கு மயிலை கோகுலே சாஸ்திரி அரங்கில் செங்கோட்டை ஶ்ரீராமின் இறைவணக்கமுடன் தொடங்கியது தமிழ் தினசரி மின்பத்திரிக்கையின் 10 ஆவது ஆண்டு விழா, தெய்வத் தமிழர் விருது வழங்கும் விழா.

செங்கோட்டை ஶ்ரீராம் அவர்களின் ஐம்பதாவது (நட்சத்திரம்) பிறந்த நாளும் இன்று. அவருக்குப் பல்லாண்டு பல்லாண்டு நல்வாழ்த்துகள்.

தேசத் தொண்டு, தெய்வத் தொண்டாற்றிய ஐந்து சான்றோர்களுக்கு விழாவில் “தெய்வத் தமிழர்” விருது வழங்கி கௌரவிக்கப் பட்டனர்.

விழாவில் உரையாற்றியவர்களின் உரையிலிருந்து சில வைரத்தெளிப்புகள்:

நிதானமாகவும், தெளிவாகவும் வரவேற்புரையும், இணைப்புரையும் வழங்கிய செங்கோட்டை ஶ்ரீராமின் உரையிலிருந்து:

: உடலும், உள்ளமும் சோர்ந்த போது என்னைத் தூக்கி நிறுத்தி, பழைய பலமான செங்கோட்டை ஶ்ரீராமாக மாற்றிய மகான் சுவாமி ஞானானந்தர்.

: பல பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவமும், நண்பர்கள் கொடுக்கும் ஊக்கமுமே எனது “தினசரி” மின்பத்திரிக்கையின் வளர்ச்சிக்குத் காரணம்.

நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்:

: தினமணியின் முதல் ஆசிரியர் T.S.சொக்கலிங்கம். அவர் தினமணியில் இருந்து வெளி வந்து தொடங்கிய பத்திரிக்கையின் பெயர் “தினசரி”. செங்கோட்டை ஶ்ரீராமும் தினமணியில் இருந்து வெளி வந்து தொடங்கிய மின் பத்திரிக்கையின் பெயரும் “தினசரி”.

: ஶ்ரீ ஞானானந்ந சுவாமிகள் துறவைக் கூடத் துறந்த துறவி என்றார். காரணம் ஆதிசங்கரரின் நான்கு பீடங்களில் ஒன்றான புரிக்கு பீடாதிபதியாக இருந்தவர். அதைத் துறந்து தென்னாட்டில் தபோவனத்தில் இருந்தார். (சிறு திருத்தம்: பீடாதிபத்யத்தைத்தான் துறந்தாரே அன்றி துறை அல்ல.)

:கலைமகள் ஆசிரியர் கி.வா.ஜ. ஞானானந்த சுவாமிகளை நேரில் தரிசனம் செய்தவர்.

: விருது வழங்கும் நோக்கமே அதைப் பெற்றுக் கொள்பவருக்கு புதிய தெம்பும், ஊக்கமும் தரும் என்ற உன்னத எண்ணம்தான்.

தலைமையுரையாற்றிய கே. அமர்நாத் உரையிலிருந்து:

: ஞானானந்த சுவாமிகள் நூற்றியிருபது வயதிற்கும் மேல் வாழ்ந்த மகான். பக்தர் ஒருவர் அவரது உண்மையான வயதை அறிய முயன்ற போது சுவாமிகள்,”வயசு ஆராய்ச்சி எதுக்கு? மரத்தில் காய்த்த பழத்தின் ருசியை அனுபவிக்க வேண்டுமே தவிர, அந்த மரத்தின் வயதை ஆராய்ச்சி பண்ணி என்ன பயன்” என்றாராம்.

நிறைவாக இசையோடு உரை செய்த திருமதி சிந்துஜா:

: சுவாமி ஞானானந்தரின் வாக்கில் எப்போதும் வருவது,”மகிழ்வித்து மகிழ்” என்பதே.

: சுவாமிகள் எளிய மக்களின் வார்த்தைகளிலேயே பேசுவார்.

: மகாகவி பாரதியார் சுவாமி ஞானானந்தரை தரிசனம் செய்திருக்கிறார். அவரே குள்ளச்சாமி என்ற குருநாதர்.

: ஒருமுறை சுவாமிகள் சமாதி அடைந்தார் என அவரது தலையில் நூற்றி ஏழு தேங்காய்களை உடைத்தார்களாம். நூற்றி எட்டாவது தேங்காயை உடைக்கும் பொழுது, தன் தலையைத் தடவிக் கொண்டே ,”இன்னும் கொஞ்ச நாள் இந்த தேகம் இருக்கட்டுமே என்றபடி எழுந்து வந்தாராம்”.

: தனது கடைசி நாளில் அவர் குளிருக்காக அணிந்திருந்த சட்டையைக் கழட்டுங்களேன் என்று ஒரு பக்தர் கேட்க ,”இனிமே இந்தச் சட்டையைக் கழட்ட வேண்டியதுதான் என்றவர் மறுநாள் அதிகாலை நான்கு மணிக்குக் குளிக்கப் சென்ற இடத்திலேயே முக்தி அடைந்து விட்டார்.”

:குருநாதர், சுவாமி ஞானானந்தரை எண்ணிப் பாடிய பாடலால் உள்ளம் அந்தக் குள்ளச்சாமியின் நினைவால் நிறைந்தது.

அற்புதமான, ஆர்ப்பாட்டமில்லாத, அமைதியான மற்றவரைப் போற்றும் நிகழ்ச்சி சுவையான லட்டு, போண்டா, காபி எனத் தொடங்கி
நாட்டுப் பண்ணுடன் நிறை வடைந்தது.

அன்பன்,
மீ.விசுவநாதன்
10.03.2024 11.59 pm


ஸ்ரீராமின் தினசரி இணையதளத்தின் பத்தாவது ஆண்டு விழா அதியற்புதமாக ஒரு ”குடும்ப” விழாவாக இன்று மாலை மயிலை கற்பகாம்பாள் நகர் கோகுலே ஹாலில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. தேசீயமும் தெய்வீகமும் தங்களது கொள்கைகளாகக் கொண்ட குடும்பத்தினரின் விழா இது. மதுரையிலிருந்து வழக்குரைஞர் பா.ஸ்ரீநிவாசனும், கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன் அவர்களும், பாண்டிச்சேரி ஹோட்டல் சற்குருவின் மானேஜிங் டைரக்டர் அமர்நாத் அவர்களும் தலைமையேற்று மேடையை அலங்கரித்தார்கள்.

எவன் அவன் என்று நம்மாழ்வார் பாசுரத்தை இறைவணக்கமாக்கி “எவனவன் நமக்கு எதிரா?” என்பது போல ஸ்ரீராம் துவக்கிவைத்தார். முன்னதாக சிறப்பு விருந்தினர்கள் குத்துவிளக்கேற்றி மங்களரமாக விழாவை ஆரம்பித்தார்கள். கீழாம்பூரார் தினமணியின் பெருமைகளையும் அதில் பணியாற்றிய ஏஎன் சிவராமன் மற்றும் சொக்கலிங்கம் போன்ற ஆசிரியர்களைப் பற்றிப் பேசப் பேச “நம்ம பேப்பர்டா” என்ற பெருமிதம் என்னைத் தொற்றிக்கொண்டது.

தெய்வத் தமிழர் விருதுக்கு முன்னால் வாழ்த்துரை வழங்கச் சென்ற எங்களுக்கும் ஒரு பொன்னாடை அணிவித்து ராம்லல்லா கட்டவுட் படமொன்றையும் தவயோகி ஞானானந்தாவின் புத்தகம் ஒன்றையும் பரிசளித்தார். நான் கையில் ஏந்தியவுடன் ராம்லல்லா சிரித்தார்.

தெய்வத் தமிழர் விருது வாங்கியவர்கள் அனைவருமே போற்றுதலுக்குரியவர்கள். கு.வை. பாலசுப்பிரமணியன் ஐயா அவர்களுக்கு அந்த புலிவால் மீசைக்கே பரிசு தரலாம். அவர் சிரிக்கும் போது மீசை பூவாய் மலர்கிறது. சென்னை உயர்நீதி மன்ற வழக்குரைஞர் பி. ஜகன்நாத் இடிமுழக்கம் போல சனாதன தர்மத்தைப் பற்றி பேசினார். பத்திரிகையாளர் டி.எஸ். வெங்கடேசன் தினமணியாளர். மீடியா எப்படி தரங்கெட்டுப் போய்விட்டது என்பதை அழகாகப் படம்பிடித்தார். விருதாளர் ஓவியர் ஜெ.பிரபாகர் தனது சமூகப் பணியில் குடிகார கிராமத்தை நலம்படச் செய்த சாதனையை ஒரே நாடு ஆசிரியர் நம்பி. நாராயணன் சொன்னபோது எனக்கு மெய் சிலிர்த்தது. “சனாதனப் புயல்” ஜெயந்தி ஐயங்கார் குழந்தை ஜெயந்தியாக இருந்த போதே தனது தந்தையார் சடகோபரின் வில்லிபாரதச் சொற்பொழிவின் இறுதியில் மைக்கைப் பிடிங்கிப் பேசியதைப் பகிர்ந்த போது அவரது இப்போதைய பேச்சின் அஸ்திவாரம் புரிந்தது.

வாழ்த்துரையாக நம்பி நாராயணன், நான், மற்றும் எழுத்தாளர் சிவன் ஆகியோர் பேசினோம். நம்பி நாராயணன் விருது பெற்ற ஒவ்வொருவரைப் பற்றியும் மிக அழகாகவும் ரத்தினச் சுருக்கமாகவும் அவர்களது முக்கியமான பங்களிப்பையும் பற்றிப் பேசினார். வாழ்த்துரைக்கான இலக்கண சுத்தமான பேச்சு அது. நான் வழக்கம் போல ஜல்லியடித்தேன். எனது பேச்சின் சாரத்தை இப்பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். படித்து மகிழவும். சிவன் சார் இரண்டே நிமிடத்தில் ஸ்ரீராமுக்கு கல்யாணம் நடக்காத குறையைப் பேசிவிட்டு முடித்துவிட்டார்.

இறுதியாக ஒரு சரவெடி. சிந்துஜாவின் ஞானானந்தா பற்றிய இசைச் சொற்பொழிவு நடந்தது. நிகழ்ச்சி நேரம் தப்பி நீளமாகச் சென்றுகொண்டிருந்த வேளையில் மைக்கைப் பிடித்த அம்மணி மிகவும் கேஷுவலாக “பதினஞ்சு நிமிஷத்துல முடிச்சுடுவேன்” என்று சொல்லி அபாரமாக சில ஞானானந்தா மகிமைகளையும் நடுநடுவே “விழி கிடைக்குமா அபயக் கரம் கிடைக்குமா?” மற்றும் சில பஜனைப் பாடல்களை பல பிருகாக்களோடு பாடி மொத்தக் கூட்டத்தையும் கட்டிப் போட்டார்.

விழாவிலிருந்து சில டிட்பிட்டுகள்:

  1. ஸ்ரீராம் என்னைப் போலவே தூய வெள்ளை & வெள்ளையில் மின்னினார். ஐம்பதாவது வயதில் அடியெடுத்து வைக்கும் அவருக்கு பலரிடமிருந்தும் வாழ்த்துகள் குவிந்தது.
  2. மோடிஜியின் தமிழக வெர்ஷன் Sudarsan அவர்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. அவர் மன்னார்குடி மாப்பிள்ளை என்று தெரிந்ததும் கூடுதல் சந்தோஷம்.
  3. “பாரேன்… ஆர்விஎஸ் பேசும்போது கரெக்டா வர்றார்..” என்று வல்லபா சொன்னபோது வீகேயெஸ் எண்ட்ரி கொடுத்தார். குடும்ப விழா அல்லவா!
  4. பெரியண்ணாவும் எங்கள் குருசியுமான ராஜகோபாலனும் எங்கள் பேட்டை ஸ்ரீதர் ஸ்வாமிநாத் அண்ணாவும் கலந்துகொண்டு, விழா முடிந்ததும் அரை மணி வெளியே நின்று பேசிக் கலைந்தது மனதுக்கு மதுரமான உரையாடல்.
  5. ”எங்க ஏரியாவுல நடக்குது.. நீங்கெல்லாம் வர்றீங்க.. நாங்க வராம இருப்போமா?” – என்று சங்கமேஸ்வரன் ராமன் ஜி என்னுடைய ஆச்சரியமானப் புருவத் தூக்கலுக்கு பதில் சொன்னார். ❤
  6. கீழாம்பூரார், ஜெயந்தி ஐயங்கார், ஸ்ரீராம் என்று எல்லோரும் தாமிரபரணி பற்றிப் பேசி புளகாங்கிதம் அடைந்த போது “நடத்தரோம்… நாமளும் காவிரிக்கரை ஆளுவளா சேர்ந்து இன்னொன்னு நடத்தரோம்..” என்று இந்த தேர்தலில் நிற்காக வேலு நாயக்கர் போல பேசிக்கொண்டோம்.
  7. ஹரிகதா சிந்துஜாவின் கணவர் மன்னார்குடி என்றதும் “இது மன்னார்குடி விழா” என்று அறிவித்துவிடலாமா என்று கூட தோன்றியது! ஏனென்றால் பச்சைப் புடவையில் மீனாக்ஷி அம்மன் போல வந்த இன்னொருவரும் “மன்னார்குடிக்காரால்லாம் வந்துட்டாளா’ன்னு கேட்டுட்டுதான் எங்க ஃபேமிலில ஃபக்ஷன்லாம் ஆரம்பிப்பா” என்று மன்னை ஜோதியில் கலந்துகொண்டார்.
  8. விழா ஆரம்பிக்கும் முன் விவேகானந்தா கேந்திராவின் விவி பாலாவிடம் Vvbala Bala சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தேன். என்றும் இளமையாக இருப்பது எப்படி என்ற ரகசியத்தை அவரிடம் கேட்க மறந்துவிட்டேன்.
  9. ஸ்ரீடிவி ராஜேஷ் ராவ்வை அடையாளம் கண்டுகொண்டு கைக்கூப்பினேன். பின்னர் சரித்திர முக்கியத்துவத்திற்காக படமும் பிடித்துக்கொண்டேன்.
  10. மன்னைக்கு அருகிலுள்ள திருமக்கோட்டையை சொந்த ஊராகக் கொண்ட ஸ்ரீதரன் அவர்களுடன் பேசினேன். ஃபைனான்ஷியல் எக்ஸ்பிரஸில் பணிபுரிந்ததாகவும் வணிகம் பற்றி ஃப்ரீலேன்ஸ் செய்வதாகவும் கூறினார். இங்கேயும் மன்னார்குடி எட்டிப் பார்த்தது.
  11. விழா முழுவதும் அமைதியாக பல ஏற்பாடுகளை கவனித்துக் கொண்ட கலைமகள் பதிப்பாளர் ThiruvenkataRajan P T அவர்களைக் குறிப்பிடாவிட்டால் இந்தப் பதிவு செல்லாது.
  12. தினமணியில் நண்பரான பத்திரிகையாளர் சரவண பாரதியுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தேன். பாலாறு பதிப்பகம் என்று ஆரம்பித்து நூறு புத்தகங்கள் வெளியிட்டுவிட்டார். “எப்படிப் போகுது?” என்றேன். “சூதாட்டம் மாதிரி ஒரு புக்ஃபேர்ல சம்பாதிச்சா இன்னொரு புக்ஃபேர்ல புட்டுக்குது” என்றார்.
  13. விழா முடிந்தததும் விருதாளர் பாலசுப்ரமணியன் அவர்களின் சன் இன் லா வந்து கைக்குலுக்கினார். “நல்லா பேசுனீங்க” என்றார். “என்னய்யா.. காசு கொடுத்து ஆள் செட் பண்ணியிருக்கியா?” என்று அவர் காது படவே கேட்டு கலாய்த்தார் வீகேயெஸ். ரசனையான கிண்டல்! 🙂 வீடியோ வந்ததும் பகிர்கிறேன். நீங்களும் சொல்லலாம்! 🙂 இப்போதைக்கு நான் பேசியதின் சாரத்தைத் தருகிறேன். வீடியோவில் இதைவிட இருபது இருபத்தைந்து வார்த்தைகள் பேசியிருக்கிறேன். 🙂

எனது சிற்றுரை:
//////

தெய்வத் தமிழர் விருதுகள் விழாவிற்கு வருகை புரிந்திருக்கும் அனைவருக்கும் இனிய மாலை வணக்கம். தெய்வத் தமிழர் விருது பெற்றவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளும் வந்தனங்களும். ஆழ்வார்களும் நாயன்மார்களும் நாளும் நாளும் நாம் நினைந்து போற்றும் தெய்வத் தமிழர்கள். இறைத் தமிழ் இந்நாட்டிற்கு அளித்த கொடைகள் ஏராளம். கடவுளை நினை என்று சொல்லும் அனைவரும் நமக்குத் தெய்வத் தமிழர்தாம்.

விருது பெற்றவர்களில் ஸ்ரீமதி ஜெயந்தி ஐயங்கார் அவர்களை ஃபேஸ்புக்கில் பின் தொடர்வதால் அவரது செயல்பாடுகளை அறிவேன். தீவிர தேசிய சிந்தனை கொண்டவர். பேச்சு மட்டுமல்லாமல் கோலத்தில் கூட பாரதத்தின் பெருமைகளை அலங்காரம் செய்கிறார். கு.வை. பாலசுப்பிரமணியன் ஐயாவை எங்கள் கிழக்கு நியூஸிலிருந்து வானிலை அறிக்கை ஒன்றிற்காக தொடர்பு கொண்டிருந்தார்கள். அதில் அவரது நிபுணத்துவம் நிறைய பேர் அறிந்ததுதான்.

செங்கோட்டை ஸ்ரீராம் ஒரு பழுத்த ஊடகவியலாளர். மூத்த பத்திரிகையாளர் என்ற சொல்லாடலை வேண்டுமென்றே தவிர்த்திருக்கிறேன். பல பத்திரிகைகளில் பல பொறுப்புகளில் திறம்பட செயலாற்றியவர். தினமணி இணையதளத்தை ஸ்ரீராம் நிர்வகித்த போது பழக்கமானார். இரவும் பகலும் ஸ்ரீராம் கண்படாமல் கைபடாமல் எந்த செய்தியும் வெளிவந்தவில்லை.

பல சமயங்களில் பல சப்ஜெக்ட்டுகளை நானும் ஸ்ரீராமும் பேசிக்கொண்டிருப்போம். அப்போது அவர் ஸ்ரீபெரும்புதூர் ஜீயரைக் காணச் சென்றபோது ஆண்டாளின் பக்தி இலக்கியத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தாராம். அப்போது வரத யதிராஜ ஜீயர் ஸ்வாமிகள் சொன்னதாக..

ஒரு நாள் மடத்து வாசலில் பசங்கள் விளையாடிக்கொண்டிருந்தார்களாம். என்னடா சத்தம்? என்று கேட்டதற்கு நாங்கள் ஒன் ஃபோர் த்ரீ விளையாடறோம் தாத்தா என்றார்களாம். என்னடா ஒன் ஃபோர் த்ரீ என்றால் ஐ லவ் யூ என்ற விளக்கத்தைக் கொடுத்தவுடன் ஜீயர் சினிமா பார்த்துக் கெட்டுப்போகிறார்களே என்று வருந்தி.. ஆண்டாளின் கதையைச் சொல்லி… முடிவில் ஆண்டாளின் வாழி திருநாமத்தைச் சொல்லி..

திருவாடிப் பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே…
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே…
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
பெரும்பூதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே…
ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே…

என்று சொல்லி.. நாச்சியார் திருமொழியாக நூற்று நாற்பத்து மூன்று… ஒன் ஃபோர் த்ரீ உரைத்தவள் ஆண்டாள் என்றாராம்.

சிலிர்ப்பான சிந்திக்க வைக்கும் செய்தி…

செய்தியாளர்கள் பலர் டெக்னாலஜியோடு கலப்பில்லாமல் தனியாக இருப்பார்கள். அந்த யூரெல்லை டெலீட் பண்ணனும்.. தப்பா இருக்கு என்றால் என்னது உரலை டெலீட் பண்ணுவீங்களா? என்று அப்பாவியாய்க் கேட்பாளர்கள். ஸ்ரீராமுக்கு டெக்னாலஜியும் தெரியும் என்பது கூடுதல் விசேஷம். தனியொருவனாக மீடியா வெப்சைட் ஆரம்பித்து அதில் நிலைத்து நிற்பது என்பது வானத்தை வில்லாய் வளைப்பதற்கு சமானம். ஸ்ரீராம் வளைத்தது மட்டுமில்லாமல் ஒரு இலக்கை நோக்கி அம்பெய்தி முன்னேறியிருக்கிறார். ஐம்பதில் நுழையும் ஸ்ரீராமுக்கு அன்பு நண்பனாக வாழ்த்துகள்.

இவ்விழாவிற்கு வந்து சிறப்பிக்கும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். அறிஞர்கள் அவையில் பேச வாய்ப்பளித்ததற்கும் நன்றிகள் பல.
//////

  • ஆர்வீயெஸ்

அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி: பிரதமர் மோடி பெருமிதம்!

agni5 - 2026

முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் அறிவித்தார்.

மிஷன் திவ்யாஸ்த்ரா திட்டத்தின் கீழ் அக்னி-5 ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. பல்வேறு இலக்குகளை துல்லியமாக தாக்கிவிட்டு, திரும்பி வரும் தொழில்நுட்பம் கொண்டது அக்னி-5 ஏவுகணை.

இந்நிலையில், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தரம் உயர்த்தரப்பட்ட அக்னி 5 ரக ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். நமது விஞ்ஞானிகளின் சாதனை பெருமையளிக்கிறது எனவும் மோடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டதாவது: மிஷன் திவ்யாஸ்திரா திட்டத்தில், MIRV தொழில்நுட்பத்துடன் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பல இலக்குகளை ஒரே நேரத்தில் தாக்கும் திறன் கொண்ட அக்னி-5 ஏவுகணையின் முதல் சோதனை வெற்றி அடைந்துள்ளது. இந்த சோதனையை வெற்றிகரமாக நடத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை விஞ்ஞானிகளை நினைத்து பெருமை கொள்கிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

CAA- குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்; அரசிதழில் வெளியீடு!

1723147 amith sha - 2026

குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தும் வகையில் உள்துறை அமைச்சகம் மார்ச் 11 இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்தது. 2014 டிசம்பர் 31-க்கு முன்னதாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேச நாடுகளில் இருந்து இந்தியாவில் புலம்பெயர்ந்த முஸ்லிம்கள் அல்லாத சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்த மதத்தினர், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க குடியுரிமை திருத்தச் சட்டம் வகை செய்கிறது.

இந்தச் சட்டத்தில், குறிப்பிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. நாடு முழுவதும் முஸ்லிம் அமைப்புகளும் போராட்டத்தில் இறங்கின.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் தூண்டிவிடப்பட்டன. இந்தப் போராட்டங்களின் பின்னணியில் பிரிவினைவாதிகள், எதிர்க்கட்சிகளின் கைகள் இருந்தன. குறிப்பாக, ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகிகள், எம்.பி., ஆகியோர் தில்லியில் இதன் பின்னணியில் இருந்து பெரும் கலவரங்களை கட்டவிழ்த்து விட்டனர். இதில் பலர் உயிரிழந்தனர்.

இதை அடுத்து அந்நேரத்தில் இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிமுறைகளை மத்திய அரசு வெளியிடவில்லை. கடும் எதிர்ப்பு கிளம்பியதாலும், புதிய விதிகள் வெளியிடப்படாததாலும் குடியுரிமை திருத்த சட்ட (சி.ஏ.ஏ.) மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகும் இந்தச் சட்டம் உடனடியாக அமலுக்கு வரவில்லை.

இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு இப்போது அமல்படுத்தியுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை அரசிதழில் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தும் வகையில் உள்துறை அமைச்சகம் இன்று (மார்ச் 11) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறும் முஸ்லிம்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க சி.ஏ.ஏ.,வில் வழிவகை இல்லை. அண்டை நாடுகளைச் சேர்ந்த சிறுபான்மை ஹிந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர், புத்த மதத்தினருக்கு மட்டுமே இந்தியக் குடியுரிமை அளிக்க இச்சட்டம் வழிவகை செய்கிறது.