Home Blog Page 235

தேர்தல் பத்திரங்களும் ஒளிவு மறைவற்ற தன்மையும்: பிரதமர் மோடி அளித்த பதில்!

electoral bonds modi - 2026
#image_title

தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்

தேர்தல் பத்திரங்களும் ஒளிவுமறைவற்ற தன்மையும்

கேள்வி – ஒரு வினா தேர்தல் பத்திரங்கள் தொடர்பானது.  ராகுல் காந்தி எங்கு சென்றாலும் சரி அனைத்து உரைகளிலும் கூறுகிறார், அதே போல மற்ற எதிரணித் தலைவர்களுமே சரி,  இது கோளாறாக இருக்கிறது என்கிறார்கள்.  உங்கள் கட்சிக்காரர்களுமே கூட இதில் தவறு ஏதும் இருப்பின் இதைச் சரி செய்து கொள்ளலாமே என்கிறார்கள்.  தேர்தல் பத்திரங்கள் தவறான முடிவா? 

பிரதமர் மோடியின் பதில் – முதல் விஷயம் என்னவென்றால் நீண்ட காலமாகவே நம் நாட்டில் விவாதிக்கப்பட்டு வந்தது, தேர்தல்களில் கருப்புப் பணம், என்ற மிகப்பெரிய, பயங்கரமான விளையாட்டு, நடைபெறுகிறது.   தேசத்தின் தேர்தல்களை கருப்புப் பணத்திலிருந்து விடுதலை அளிக்கும் விவாதம் பல காலமாகவே நடைபெற்று வருகிறது.  தேர்தல்களிலே… செலவு என்னவோ நடக்கத் தான் செய்கிறது.  யாரும் இதை மறுக்கவில்லையே!!  என் கட்சியும் செய்கிறது அனைத்துக் கட்சிகளும் செய்கின்றன வேட்பாளர்களும் செய்கின்றார்கள்.   

இந்தப் பணத்தை, மக்களிடமிருந்து தான் பெற வேண்டியிருக்கிறது.  அனைத்துக் கட்சிகளும் பெறுகின்றன.  நான் என்ன விரும்பினேன் என்றால் முயன்று பார்க்கலாமே.   அதாவது இந்தக் கருப்புப் பணத்திலிருந்து, நம்முடைய தேர்தல்களை எப்படி விடுவிப்பது?   ஒளிவுமறைவற்ற நிலையை ஏற்படுத்துவது.  அடிப்படையான பவித்திரமான ஒரு எண்ணம் என் மனதில் ஒலித்தது. 

வழிகளைத் தேடிக் கொண்டிருந்தோம்.  ஒரு எளிய வழி கிடைத்தது… இதுவே நிறைவான வழி என்று நான் அப்போதுமே கூறவில்லை.  நாடாளுமன்றத்திலே விவாதங்களின் போது பலர் இதைப் பாராட்டினார்கள்.  இன்று முன்னுக்குப்பின் முரணாகப் பேசுவோர் பலரும் மெச்சினார்கள்.  நீங்கள் நாடாளுமன்ற விவாதங்களை எடுத்துப் பாருங்கள். 

எங்கள் பணி எப்படி இருந்தது என்றால், நாங்கள் 1000-2000 ரூபாய்களுக்கு முடிவு கட்டினோம்.  தேர்தல்களிலே இவை தாம் பெரியபெரிய எண்ணிக்கையில், கைமாறுகிறது.  ஏன்?  இந்தக் கருப்புப் பணத்துக்கு முடிவு கட்ட வேண்டும்.   நாங்கள், உச்சநீதிமன்றத்திலும் கூறினோம், அதாவது 20000 ரூபாய் வரை, அரசியல் கட்சிகள் ரொக்கமாக பணம் பெறலாம். 

நாங்கள் சட்டமியற்றினோம், விதிமுறை அமைத்தோம், 20000த்தை 2500ஆக ஆக்கினோம்.  ஏன்?  ஏனென்றால் இந்த ரொக்கமாக வாங்குவதை நான் விரும்பவில்லை.   அதன் பிறகு தேர்தல் பத்திரம் பற்றிக் கூறினேன்.   அதாவது… எந்தக் கட்சி அதை, ரகசியமாக வைக்க விரும்புகிறதோ, ஆனால் என்ன நடந்தது என்றால், நாங்கள் முன்பெல்லாம் பாஜகவில், காசோலை மூலமாகப் பணம் பெற்று வந்தோம். 

அப்போது வியாபாரிகள் எல்லாம் வந்து எங்களால் காசோலையில் பணம் தரவே முடியாது என்றார்கள்.  ஏன் முடியாது என்று கேட்டோம்.  காசோலையில் அளித்தால் நாங்கல் எழுத வேண்டியிருக்கும்.  நாங்கள் எழுதினால் அரசாங்கம் அதை கவனிக்கும்.   அதாவது இவர்கள் எதிரணிக்கு இத்தனை பணம் தந்திருக்கிறார்கள் என்று.  எங்களுக்குப் பிறகு அவர்கள், நெருக்கடி தருவார்கள்.   நாங்கள் என்னவோ….. பணம் தரத் தயாராக இருக்கிறோம் ஆனால் காசோலை மூலம் அல்ல என்றார்கள்.   எனக்கு நினைவிருக்கிறது அப்போது, 90களில் நடந்த தேர்தலில் எங்களுக்குப் பெரிய சங்கடம் ஏற்பட்டது.  பணம் எங்களிடம் இல்லை.   நாங்களோ விதிமுறை ஏற்படுத்தி காத்திருந்தோம்,  நாங்கள் காசோலை மட்டுமே பெறுவோம் என்று.  அளிப்பவர் அளிக்கத் தயார் ஆனால் காசோலை மூலம் அல்ல தைரியம் இல்லை. 

இந்த விஷயங்கள் அனைத்தையும் நான் அறிவேன்.   எனக்கு தெரியும்.    என்ன செய்யலாம்னு யோசிச்சோம்.  இங்க பாருங்க, தேர்தல் பத்திரம் இல்லைன்னு சொன்னா, பணத்தோட ஆதாரத்தைக் கண்டுபிடிக்க எந்த அமைப்பால முடியும்?       அதாவது எங்கிருந்து பணம் வந்திச்சு எங்க போச்சுன்னு?   இது தான் தேர்தல் பத்திரத்தோட வெற்றிக் கதை.  அதாவது தேர்தல் பத்திரம் இருக்கறதால, பணத்துக்கான ஆதாரம் கிடைக்குது.   

எந்தக் கம்பெனி கொடுத்தது, எப்படிக் கொடுத்தார்கள் எங்கே கொடுத்தார்கள்?   அது சரியா தவறா என்பது விவாதப் பொருளாக ஆகலாம்.  இதைப் பற்றி விவாதிக்கலாம்.  என் கவலையெல்லாம், நான், நான் எப்போதுமே கூறுவதில்லை, தீர்மானத்திலே குறைபாடு உள்ளதென்று.  தீர்மானிக்கிறோம், அனுபவத்திலிருந்து கற்றுக் கொள்கிறோம், மேம்படுத்துகிறோம்.   இதிலும் கூட மேம்பாட்டுக்கான பல வாய்ப்புகள் இருக்கின்றது.   ஆனால், நாம் இன்று கருப்புப்பணத்தின் பால் தேசத்தைத் தள்ளியிருக்கிறோம்.   

ஆகையால் தான் கூறுகிறேன் அனைவரும் வருத்தப்படுவார்கள்.  நேர்மையாக நாம் நினைத்தோம் என்றால் அனைவருக்கும் வருத்தம் தான் மிஞ்சும்.   இன்னொரு விஷயம்.  தேர்தல் பத்திரம் தொடர்பாக பேசப்பட்டு வரும் இன்னொரு பொய்யுரை.  தேசத்திலே மொத்தம் 3000 கம்பெனிகள், தேர்தல் பத்திரங்கள் அளித்திருக்கின்றன.   அந்த 3000த்திலே, 26 கம்பெனிகள் எப்படிப்பட்டவை என்றால், இவை மீது நடவடிக்கை உள்ளது.   ஈடி போன்ற அமைப்புகள் என்கிறார்கள் இல்லையா?   3000 கொடையாளிகளில் வெறும் 26.   மேலும் அவற்றிலே, 16 கம்பெனிகள் எப்படிப்பட்டவை?   சோதனை நடந்த போது, அப்போது பத்திரங்களை வாங்கினார்கள்.   இதை இணைத்துப் பார்க்கலாம். 

பத்திரங்களை வாங்கினார்கள் என்றால்,  இதை இணைத்துப் பார்க்கிறார்கள்.  இதன் சிறப்புத்தன்மை என்னவென்றால், இதிலே பத்திரங்களை வாங்கிய 16 கம்பெனிகள்,  அதிலே 37 பைசா அளவு தொகை, பாஜகவிற்கு கொடையாகக் கிடைத்திருக்கிறது.   37.  63 சதவீதம், பாஜகவின் எதிரணிக் கட்சிகளுக்குக் கிடைத்திருக்கிறது. 

வினா –  அதாவது முழுவதுமாக இணைத்துப் பார்த்தால்?

விடை – அதாவது, இந்த 16 கம்பெனிகள் இவற்றின் மேல்,  ஈடி சிபிஐ ஆகியவற்றின் நடவடிக்கைகளும் நடந்தன பத்திரங்களும் வாங்கின.  37 சதவீதம் பாஜகவிற்கும் 63 சதவீதம் எதிர்க்கட்சிகளுக்கும்.  

ஆமாம், ஈடி சோதனை நடத்தும், ஆனால் எதிர்க்கட்சிகளுக்கு தொடர்ந்து நன்கொடை அளிக்கும்?   இப்படி பாஜக செய்யுமா?   இதன் அர்த்தம் என்னவென்றால், 63 சதவீதம் தொகை எதிர்க்கட்சிகளுக்குச் சென்றது, ஆனால் குற்றச்சாட்டை எங்கள் மீது வீசுகிறார்கள்.   அவர்களுக்கென்ன தூற்றிவிட்டு ஓடிவிட வேண்டும் அவ்வளவு தானே?

IPL 2024: சென்னையில் சென்னை அணி பெற்ற தோல்வி!

ipl 2024 - 2026
  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

33ம் நாள் – ஐபிஎல் 2024 – 23.04.2024

சென்னை சூப்பர் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

சென்னை அணியை (210/4, ருதுராஜ் கெய்க்வாட் 108*, ஷிவம் துபே 66) லக்னோ அணி (19.3 ஓவரில் 213/4, மார்கஸ் ஸ்டோயினிஸ் 124*, நிக்கோலஸ் பூரன் 34, தீபக் ஹூடா 17*, கே.எல். ராகுல் 16, பதிரனா 2/35) 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

இன்று சென்னையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. சென்னை அணியின் தொடக்க வீரர்களாக அஜிங்க்யா ரஹானெ (1 ரன்) மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் (ஆட்டமிழக்காமல்108 ரன்) இருவரும் களமிறங்கினர். ரஹானே முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார்.

அவருக்குப் பின்னர் ஆடவந்த டாரில் மிட்சல் (11 ரன்) மற்றும் ரவீந்தர் ஜதேஜா (16 ரன்) இன்று சோபிக்கவில்லை. அதன் பின்னர் ஷிவம் துபே (27 பந்துகளில் 66 ரன், 3 ஃபோர், 7 சிக்சர்) ருதுராஜுடன் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

தோனி கடைசி இரண்ட்டு பந்துகள் இருக்கும்போது ஆடவந்தார், கடைசி பந்தில் ஒரு ஃபோர் அடித்தார். 20 ஓவர் முடிவில் சென்னை அணி 4 விக்கட் இழப்பிற்கு 210 ரன் எடுத்திருந்தது.

211 ரன் என்ற அடையக்கூடிய இலக்கை எட்ட இரண்டாவதாக ஆட வந்த லக்னோ அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான க்விண்டன் டி காக் (பூஜ்யம் ரன்) முதல் ஓவரின் மூன்றாவது பந்தில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான கே.எல் ராகுல் 4.4ஆவது ஓவர் வரை ஆடி 16 ரன் சேர்த்தார்.

அதன் பின்னர் ஆடவந்த மார்கஸ் ஸ்டோயினிஸ் கடைசி வரை விளையாடி 124 ரன்கள் (13 ஃபோர், 6 சிக்சர்) அடித்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். அவருக்கு தேவதத் படிக்கல் (13 ரன்), நிக்கோலஸ் பூரன் (34 ரன்) மற்றும் தீபக் ஹூடா (17 ரன்) மூவரும் துணைநின்றனர். இதனால் லக்னோ அணி 19.3 ஓவரில் 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணியை வெற்றி கொண்டது.

லக்னோ அணியின் மட்டையாளர் மார்கஸ் ஸ்டோயினிஸ் தனது சிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார். நாளை டெல்லியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் குஜராத் டைடன்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.

23.04.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல்

அணிவெதோபுள்ளிநெட் ரன் ரேட்
ராஜஸ்தான்871140.698
கொல்கொத்தா752101.206
ஹைதராபாத்752100.914
லக்னோ853100.148
சென்னை84480.415
குஜராத்8448-1.055
மும்பை8346-0.227
டெல்லி8356-0.477
பஞ்சாப்8264-0.292
பெங்களூரு8172-1.046

IPL 2024: ஜெய்ஸ்வால் அதிரடியில் தில் காட்டிய ராஜஸ்தான்

ipl 2024 - 2026
  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

32ம் நாள்: ஐபிஎல் 2024 – 22.04.2024 

மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்

மும்பை அணியை (176/9, திலக் வர்மா 65, நெஹல் வதேரா 49, முகம்மது நபி 23, சந்தீப் ஷர்மா 5/18) ராஜஸ்தான் அணி (18.4 ஓவரில் 183/1, யஸஷ்வீ ஜெய்ஸ்வால் 104*, ஜாஸ் பட்லர் 35, சஞ்சு சாம்சன் 38) 9 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

பூவாதலையா வென்ற மும்பை அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் ஷர்மா (5 பந்துகளில் 6 ரன்) மற்றும் இஷான் கிஷன் (பூஜ்யம் ரன்) இருவரும் இரண்டாவது ஓவருக்குள் ஆட்டமிழந்து ஒரு மோசமான தொடக்கத்தைத் தந்தனர். அவர்களுக்குப் பின்னர் அதிரட் ஆட்டக்காரரான சூர்ய குமார் யாதவ் (10 ரன்) 3.1ஆவது ஓவரில் அவுட்டாகி மேலும் அதிர்ச்சி தந்தார். பவர் பிளே முடிவில் மும்பை அணி மூன்று விக்கட் இழப்பிற்கு 45 ரன் எடுத்திருந்தது. 

பத்தாவது ஓவர் முடிவில் அணியின் ஸ்கோர் 72/4 ஆக இருந்தது. ஆனால் அதற்குப் பின்னர் திலக் வர்மா (45 பந்துகளில் 65 ரன், 5 ஃபோர், 3 சிக்சர்), முகம்மது நபி (17 பந்துகளில் 23 ரன், 2 ஃபோர், 1 சிக்சர்), நெஹல் வதேர (24 பந்துகளில் 49 ரன், 3 ஃபோர், 4 சிக்சர்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் மும்பை அணி சற்று நல்ல நிலைக்கு வந்தது. ஆனால், ஹார்திக் பாண்ட்யா (10 ரன்), டிம் டேவிட் (5 பந்துகளில் 3 ரன்), கோயட்சி (பூஜ்யம் ரன்), பியுஷ் சாவ்லா (1 ரன்), பும்ரா (1 ரன்) என மீதமுள்ள அனைத்து பேட்டர்களும் சிறப்பாக ஆடாததால் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கட் இழப்பிற்கு 179 ரன் எடுத்தது. 

180 ரன் என்ற அடையக்கூடிய இலக்கை எட்ட இரண்டாவதாக ஆட வந்த ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான யஸஷ்வி ஜெய்ஸ்வால் (60 பந்துகளில் 104 ரன், 9 ஃபோர், 7 சிக்சர்) ஆட்டமிழக்காமல் 18.1ஆவது ஓவர் வரை ஆடினார்.  மற்றொரு தொடக்க வீரரான ஜாஸ் பட்லர் 7.6ஆவது ஓவர் வரை ஆடி 35 ரன் சேர்த்தார்.  அதன் பின்னர் ஜெய்ஸ்வாலுடன் இணைந்த அணித்தலைவர் சஞ்சு சாம்சன் (28 பந்துகளில் 38 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்) சிறப்பாக ஆடி ராஜஸ்தான் அணிக்கு 18.4 ஓவரில் ஒரு விக்கட் இழப்பிற்கு 183 ரன் எடுக்க உதவினார். இதனால் ராஜஸ்தான் அணி 9 விக்கட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணியை வெற்றி கொண்டது. 

ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சாளர் சந்தீப் ஷர்மா தனது சிறப்பான பந்துவீச்சிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார். நாளை சென்னையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும். 

22.04.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல் 

அணிவெதோபுள்ளிநெட் ரன் ரேட்
ராஜஸ்தான் 871140.698
கொல்கொத்தா752101.206
ஹைதராபாத்752100.914
சென்னை74380.529
லக்னோ74380.123
குஜராத்8448-1.055
மும்பை8346-0.227
டெல்லி8356-0.477
பஞ்சாப்8264-0.292
பெங்களூரு8172-1.046

தமிழகத்தில் வாக்குப் பதிவு சதவீத குளறுபடிகள்! தேர்தல் ஆணையர் ‘புதிய’ விளக்கம்!

tn election commissioner satyaprada sahu - 2026
#image_title

தமிழகத்தில் ஏப்.19 அன்று நடைபெற்ற முதல்கட்ட மக்களவைக்கான தேர்தலில் ஓட்டுப்பதிவு சதவீதத்தில் 3 முறை மாற்றம் செய்யப்பட்டது அரசியல் கட்சியினரிடமும் ஊடகத்தினரிடமும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையம் மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபட்ட தமிழக அரசுப் பணியாளர்கள் மீது பலரும் சந்தேகம் தெரிவித்து வருகின்றனர். தமிழக அரசு ஊழியர்கள் திமுக.,வுக்கு ஊழியம் பார்த்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இந்தக் குளறுபடிக்கு, ‘ஓட்டுப்பதிவு சதவீதத்தை ஒருசிலரே செயலியில் பதிவிட்டதுதான் காரணம்’ என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ புதிதாக ஒரு விளக்கம் கொடுத்துள்ளார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், தேர்தல் முடிந்த அதே நாள் மாலை, முதலில் 72 சதவீதம் ஓட்டுகள் பதிவானதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ அறிவித்தார். இதனால் வாக்குகள் அதிகம் பதிவானதாக ஊடகங்களில் விவாதங்கள் களை கட்டின. இதனால் அது மாநிலத்தில் ஆளும் கட்சி கூட்டணிக்கு பாதகமாக இருக்கக் கூடும் என்றும், மாநில ஆளும் கட்சியான திமுக.,வுக்கு எதிரான அதிருப்தி வாக்குகள் அதிக அளவில் விழுந்ததுதான் காரணம் என்றும் கூறப்பட்டது. ஆனால் அடுத்த சில மணி நேரங்களில் 69.46 சதவீதம் ஓட்டுகளே பதிவானதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த இரு வேறு தகவல்களால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இந்தக் குழப்பம் அடங்குவதற்குள் ஏப்.21 நேற்று மதியம், 69.72 சதவீதம் ஓட்டுப்பதிவு நடைபெற்றதாக 3வது முறையாக தேர்தல் ஆணையம் மாற்றி அறிவித்தது. பொதுவாக, முதலில் அறிவிக்கப்பட்ட வாக்கு சதவீதத்தில் இருந்து 2 சதவீதத்துக்கும் குறைவாகவே பிழைகள் இருக்கும் என்பது நியதி. அவ்வாறு 2 சதத்துக்கும் அதிகமாக பிழை இருக்குமானால் வாக்குப் பதிவு குளறுபடியானதாகவே பார்க்கப்படும்.

இந்நிலையில், தேர்தல் வாக்குப்பதிவில் இவ்வளவு குளறுபடிகள் நிகழ்ந்ததற்கான காரணம் குறித்து சத்ய பிரதா சாஹூ செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார்.

அப்போது அவர் கூறியவை: வாக்குப்பதிவு சதவீதத்தில் ஏற்பட்ட வேறுபாடுக்கு செயலியே காரணம். செயலியில் கிடைத்த தகவல் அடிப்படையில் சதவீதம் கணக்கிட்டதால் குளறுபடி ஏற்பட்டுள்ளது. செயலியில் வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குப்பதிவை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.

இதனால் சிலர் மட்டுமே அப்டேட் செய்தனர். தேர்தல் அதிகாரி கையொப்பமிட்ட தகவல் வர தாமதமாகும் என்பதால் செயலி மூலம் கிடைத்த தகவல்களை ஊடகங்களுக்கு அப்டேட் செய்தோம்… என்று சத்ய பிரதா சாஹூ விளக்கமளித்தார்.

அப்படி என்றால், செயலியில் வாக்குப்பதிவு சதவீதத்தைப் பதிவும் முன்னரே, அதாவது ஒருசிலர் வாக்குபதிவு சதவீதத்தை செயலியில் அப்டேட் செய்யும் முன்னரே பெற்ற தகவல்களின் அடிப்படையில் முதலில் அறிவிக்கப்பட்டதென்றால், அது முதலில் குறைவாகவும், செயலியில் அனைத்து வாக்குச்சாவடி தகவல்களும் அப்டேட் செய்யப்பட்ட பின்னர் வாக்குப் பதிவு சதவீதம் அதிகரித்தும் இருப்பதுதானே நியாயமானது என்ற கேள்விக்கு பதில் இல்லை.

தேர்தல் முடியும் நேரத்தில் மாலை 5 முதல் 6 மணி வரையிலாக கடைசி ஒரு மணி நேரத்தில், அதிக அளவில் வாக்குப் பதிவு நடந்தது பெரும் சந்தேகத்தை கிளப்பியது. திமுக.,வினர் கள்ள வாக்குகள் பதிவு செய்ததாக பலரும் சந்தேகம் எழுப்பினர். இதனால் வாக்குப் பதிவு சதவீதம் உயர்ந்ததாகவும் கூறப்பட்டது.


தமிழக வாக்குப்பதிவு 69.72% 3வது முறையாக மாறியது!


3வது முறையாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளி விவரப்படி, அதிகபட்சமாக தர்மபுரியில் 81.20%, குறைந்தபட்சம் மத்திய சென்னையில்53.96 % வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் 69.72% வாக்குகள் பதிவாகியுள்ளன என இந்திய தேர்தல் ஆணையம் மாற்றி வெளியிட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வாக்கு சதவீதம் தொகுதி வாரியாக…

தொகுதி- வாக்குப்பதிவு சதவீதம்

* திருவள்ளூர் – 68.59
* வடசென்னை – 60.11
* தென்சென்னை- 54.17
* மத்திய சென்னை – 53.96
* ஸ்ரீபெரும்புதூர் – 60.25
* காஞ்சிபுரம்- 71.68
* அரக்கோணம் – 74.19
* வேலூர் – 73.53
* கிருஷ்ணகிரி – 71.50
* தர்மபுரி – 81.20
* திருவண்ணாமலை – 73.24
* ஆரணி – 75.76
* விழுப்புரம் – 76.52
* கள்ளக்குறிச்சி – 79.21
* சேலம் – 78.16
* நாமக்கல் – 78.21
* ஈரோடு – 70.59
* திருப்பூர் – 70.62
* நீலகிரி – 70.95
* கோவை – 64.89
* பொள்ளாச்சி – 70.41
* திண்டுக்கல் – 71.14
* கரூர் – 78.70
* திருச்சி – 67.51
* பெரம்பலூர் – 77.43
* கடலூர் – 72.57
* சிதம்பரம் – 76.37
* மயிலாடுதுறை – 70.09
* நாகப்பட்டினம் – 71.94
* தஞ்சாவூர் – 68.27
* சிவகங்கை – 64.26
* மதுரை – 62.04
* தேனி – 69.84
* விருதுநகர்- 70.22
* ராமநாதபுரம் – 68.19
* துாத்துக்குடி – 66.88
* தென்காசி – 67.65
* திருநெல்வேலி – 64.10
*கன்னியாகுமரி- 65.44

தேர்தலுக்கு முன்பே வெற்றி! 2024 மக்களவையின் முதல் பாஜக., எம்.பி.,!

mukesh of surat bjp - 2026
#image_title

குஜராத் மாநிலம் சூரத் தொகுதி பாஜக., வேட்பாளர் முகேஷ் தலாக் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சூரத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் தகுதி நீக்கம் ஆன நிலையில், மற்ற அனைத்து சுயேட்சை வேட்பாளர்களும் வாபஸ் பெற்றதால் முகேஷ் தலாக் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.

குஜராத்தில் மொத்தம் உள்ள 26 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளுக்கும் வரும் மே மாதம் 7ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த 19ம் தேதியுடன் நிறைவடைந்தது.

மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. அப்போது சூரத் தொகுதியில் போட்டியிட மனுத்தாக்கல் செய்திருந்த காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியை முன்மொழிந்திருந்த 5 பேரில், மூன்று பேர், அது தங்களது கையெழுத்து இல்லை எனத் தெரிவித்தனர். இதனால் வேட்புமனுவை முன்மொழிந்த நபர்களின் முரண்பாடான தகவல்களால் காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.

இதனால், சூரத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் களமிறங்க முடியாத நிலை ஏற்பட்டது. அதே நேரம், சூரத் தொகுதியில் மற்ற அனைத்து வேட்பாளர்களும் வாபஸ் பெற்றனர். இதை அடுத்து பாஜக., வேட்பாளர் முகேஷ் தலாக் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் முடியும் முன்பே முதல் எம்.பி.,யை பாஜக., பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளியங்கிரி மலையில் சீர்கேடுகள்; உண்டியலில் மட்டுமே கண்ணாக இருக்கும் ‘மாடல்’ அரசு!

kadeswara subramaniam hindu munnani - 2026
  • பழமையான பூண்டி வெள்ளியங்கிரி மலையில் சுகாதார சீர்கேடு !
  • குப்பைக்கிடங்காக மாறிப்போன அடிவாரம்.
    அலட்சியப் போக்கில் அதிகாரிகள் !
  • மாலை 6:00 மணிக்கே கோவிலுக்கு பூட்டு.!
  • உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் !

இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் வெளியிட்ட அறிக்கை :

தென் கைலாயம் என அழைக்கப்படும் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோவிலுக்கு பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை லட்சக்கணக்கான மக்கள் மலையேறுகிறார்கள். பூண்டி அடிவாரத்திற்கும் தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
அப்படிப்பட்ட இத்திருக்கோவிலில் அடிப்படை வசதிகள்
ஏதுமின்றி பக்தர்கள் சிரமப்படுகின்றனர்.

வாகன நிறுத்துமிடம் ,கழிப்பிட வசதி என ஏதும் கிடையாது. போதாக்குறைக்கு குப்பைகள் அள்ளப் படாமல் கால் படும் இடமெல்லாம் சாப்பிட்டு போட்ட இலைகளும் வாட்டர் பாட்டில்களும் குப்பைகளும் என குப்பைக் கிடங்காகவே காட்சியளிக்கிறது.

இதுபற்றி பணியாளர்களிடம் கேட்டால் காலை 6:00 மணிக்கு வர வேண்டிய சுகாதாரப் பணியாளர்கள் 10 மணிக்கு மேல் தான் வருவதாக சொல்கிறார்கள். ஆனால் வந்தபாடில்லை என அலட்சியமாக பதில் சொல்கிறார்கள்.
கடந்த ஆறு மாதத்திற்கு முன்பே இந்துமுன்னணி பேரியக்கம் சார்பில் கோவில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும் என மனு தந்த போதிலும் அதிகாரிகள் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

திருவிழா காலங்களில் மலையேறும் பக்தர்களுக்கு எந்த விதமான மருத்துவ வசதியும் செய்து தராமல் அலட்சியம் காட்டியதால் கடந்த மூன்று மாதத்திற்குள் மட்டும் மூன்று பக்தர்கள் உயிரிழந்துள்ளனர் .

பக்தர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி இல்லை நிர்வாகம் சார்பாக எந்த ஒரு ஏற்பாடும் இல்லை,
பக்தர்கள் கொண்டுவரும் உடமைகளை வைப்பதற்கான பாதுகாப்பு அறைகள் ஏதும் இல்லை.

பக்தர்கள் தங்கள் காலணிகளை விடுவதற்கு கூட போதிய இடம் ஒதுக்கப்படவில்லை. கோவிலை பராமரிக்க ஆட்கள் பற்றாக்குறை தன்னார்வலர்கள் உழவாரப்பணி செய்ய நினைத்தாலும் ஆயிரம் விதிமுறைகளை அடுக்குகின்றனராம்.

வெள்ளிங்கிரி கிரி மலையேறினால் மூச்சு திணறாது ஆனால் அடிவார கோவில் பக்கம் வந்தாலே மலைபோல் குவிந்து குப்பை கிடங்கின் துர்நாற்றத்தால் மூச்சு திணறல் ஏற்படும் நிலையுள்ளது. குறிப்பாக பெண்கள் மலை ஏறுவதற்கு அனுமதி இல்லை இருப்பினும் பல நூறு பெண்கள் இப்போதுவரை ஏறி உள்ளனர் அதை கண்டும்காணாமல் நிர்வாகம் செயல்படுகிறது.

மலையேறிய பக்தர்கள் ஓய்வெடுக்க எந்தஒரு ஏற்பாடும் செய்து தரப்படுவதில்லை. மலை ஏறிய பக்தர்கள் ஓய்வின்றி தங்கள் வாகனங்களை ஒட்டிச் செல்வதால் விபத்துகள் ஏற்பட்டு பல நபர்கள் உயிரிழந்துள்ளனர். தனியார் நிறுவனங்கள் பூண்டி அடிவாரத்தில் தினம் தோறும் மூன்று வேளை அன்னதானம் கொடுக்கிறார்கள்.

பூண்டி கோவில் நிர்வாகமும் தினமும் 100 நபர்களுக்கு அன்னதானம் கொடுப்பதாக சொல்கிறார்கள் ஆனால் முறையாக பக்தர்களுக்கு வழங்கப்படுவதில்லை. இது தவிர இருசக்கர வாகனம் திருட்டு பெட்ரோல் திருட்டு தொடர்ந்து குற்றச் செயல்களும் நடைபெற்று வருகிறது.

இப்படி பூண்டி கோவில் முழுக்க அறநிலையத் துறையின் அலட்சியப் போக்கு தொடர்கிறது . பக்தர்களை கண்டு கொள்ளாத கோவில் நிர்வாகம் உண்டியலை மட்டும்
பெரிய அளவில் வைத்திருக்கிறது.

பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோவிலில் நடைபெறும் இந்த நிர்வாக சீர்கேட்டை இந்து முன்னணி பேரியக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

மலையேறும் பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் அனைத்து விதமான வசதிகளையும் உடனடியாக செய்து தர வேண்டும். இல்லையேல் பொதுமக்களையும் பக்தர்களையும் திரட்டி இந்து முன்னணி பேரியக்கம் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தும்.

காங்கிரஸின் அபாயகர கொள்கை; பிரதமர் மோடியின் எச்சரிக்கையும் பின்னணியும்!

jugalbandi rahul yatra - 2026

“நாட்டு மக்களை நான் எச்சரிக்க விரும்புகிறேன். காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் நாட்டு மக்களின் சேமிப்பு மற்றும் சொத்துக்களை குறி வைத்துள்ளன. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், யார் எவ்வளவு வருவாய் ஈட்டுகிறார்கள், யாருக்கு எவ்வளவு சொத்து உள்ளது என்பதை விசாரணை செய்வோம் என்று காங்கிரஸ் இளவரசர் சொல்கிறார்.

நம் தாய்மார்களிடமும், சகோதரிகளிடமும் தங்கம் உள்ளது. திருமணத்திற்கு முன்னர் தன் தாய் வீட்டிலிருந்து எடுத்து வந்த ‘ஸ்ரீதனம்’ புனிதமாக கருதப்படுவதோடு, சட்டத்திற்கு உட்பட்ட ஒன்றும் கூட. இப்போது சிலரின் கண்கள் திருமாங்கல்யத்தின் மீது உள்ளது. தாய்மார்களிடமிருந்தும், சகோதரிகளிடமிருந்தும் தங்கத்தை கொள்ளையடிப்பதே அவர்களின் நோக்கம்.

உங்கள் ஊரில் பூர்வீக சொத்து இருந்து, நீங்கள் தற்போது வாழும் இடத்தில் சொந்தமாக ஒரு வீடும் இருந்தால், இரண்டில் ஒன்றை பறித்து கொண்டு விடுவார்கள். இது தான் மாவோயிஸ சிந்தனை, இது தான் கம்யூனிஸ்டுகளின் சிந்தனை. இப்படி செயல்பட்டே பல நாடுகளை அழித்து விட்டார்கள். இதே சிந்தனையை, செயல்பாட்டை இந்தியாவிலும் அமல்படுத்த காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணியும் விரும்புகிறது” என்று கூறியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்.

அப்படி கூறியதை தவறு என்கிறார்கள் சில நடுநிலையாளர்கள்(?) மற்றும் எதிர்க்கட்சியினர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இந்த நாட்டில் உள்ள ஒவ்வொருவரின் சொத்துக்களை மதிப்பீடு செய்து அதை சமமாக எல்லோருக்கும் பிரித்துக் கொடுப்போம் என்று காங்கிரஸ் கட்சி குறிப்பிட்டுள்ளதோடு, அக்கட்சியின் இளவரசர் ராகுல் காந்தி அவர்கள் சில நாட்களுக்கு முன்னர் பேசும் போது, நாடு முழுதும் ஜாதி ரிதியான கணக்கெடுப்பு நடத்தி, சிறுபான்மையினர் குறித்த விவரங்களை அறிந்த பின்பு, யாரிடம், எந்த நிறுவனத்திடம் அதிக நிதி மற்றும் சொத்துக்கள் உள்ளது, எங்கு வைத்திருக்கிறார்கள் என்று பல்வேறு ஆய்வுகளை செய்து சொத்துக்களை அனைவருக்கும் பிரித்துக் கொடுப்போம் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

இப்படி ஒரு மூர்க்கத்தனமான கொள்கை இந்தியாவை அழித்து விடும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் தினம் ரூபாய் 400 கொடுப்போம் என்று கூறும் காங்கிரஸ் கட்சி, ஒரு நாளைக்கு 1000 ரூபாய் வருவாய் ஈட்டுபவர்களிடமிருந்து ரூபாய் 600 ஐ அடித்து பிடுங்குவோம் என்றே இந்த கொள்கையின் மூலம் சொல்கிறது.

தொழிற்சாலைகளை அழித்து தொழில் முன்னேற்றத்தை தடுக்கும் கோர அரசியல் கொள்கையை கடைபிடித்தால், வேலை வாய்ப்புகள் பறிபோகும், வசதி வாய்ப்புகள் பறிபோகும், வறுமை நம் நாட்டை வாட்டும், பஞ்சம் தலைவிரித்தாடும். மீண்டும் கற்கால நிலைக்கு நம்மை தள்ளி விடும் அபாயத்தை அரங்கேற்றப் போவதாக காங்கிரஸ் கூட்டணி சொல்வது அராஜகத்தின் உச்சக்கட்டம். இருப்பவர்களிடத்திலிருந்து எடுத்து இல்லாதவர்களுக்கு கொடுப்போம் என்ற கொள்கை, ‘வழிப்பறி’ கொள்கை. பல நாடுகளை வீழ்ச்சியில் தள்ளிய அலங்கோல சிந்தனை.

ஆனால், இயற்கை வளங்களை பயன்படுத்தி, கட்டமைப்புகளை பெருக்கி, நிதி முதலீட்டை அதிகரித்து, தொழில் முன்னேற்றத்தை அடைய வைத்து, தனி மனித வருவாயை அதிகரிக்க வைக்கும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி தான் ஒரு நாட்டை முன்னேற வைக்கும். எல்லோரையும் வருவாய் ஈட்ட வைப்போம், அனைவரையும் முன்னேற்றுவோம், எல்லோருக்கும் எல்லாம் என்று சொல்வது தான் வளர்ச்சி. அதை தான் பாரதிய ஜனதா கட்சியின் பத்து ஆண்டு கால அரசு செய்து வருகிறது.

காங்கிரஸ் கட்சியின் இந்த தேர்தல் அறிக்கை INDI கூட்டணியின் கொள்கை முடக்குவாதத்தை உணர்த்துவதோடு, இந்தியாவின் பொருளாதாரத்தை நாசமாக்கும் எண்ணம் என்பதால் தான் தெளிவாக மக்களிடத்தில் காங்கிரஸ் கட்சியின் தீய எண்ணத்தை, அபாயகரமான கொள்கைகளின் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை தான் பிரதமர் தெளிவாக கூறியுள்ளார்.

  • நாராயணன் திருப்பதி.

அழகர்மலையில் இருந்து மதுரை நோக்கி… கள்ளழகர்!

kallalagar in alagar malai - 2026
#image_title

மதுரை:  சித்திரை திருவிழா முன்னிட்டு, கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அதற்காக கள்ளழகர் அழகர், மலையிலிருந்து   புறப்பட்டார்.

 அவர் , மதுரை தல்லாகுளத்தில் திங்கள் இரவு எதிர் சேர்வை நடைபெறும். அதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை காலை  மதுரை வைகை ஆற்றில் அலை இறங்குகிறார். இதற்காக, மதுரை வைகை ஆற்றில்  அழகர் இறங்கும் இடத்தில், பலத்த போலீஸ் பாதுகாப்பும், பந்தல்களம் அமைக்கப் பட்டுள்ளது. பக்தர்கள் வசதிக்காக, வைகை ஆற்றில் தண்ணீர் திறந்த பட்டுள்ளது. 

விழாவினை ஒட்டி, மதுரை நகரம் விழா கோலம் பூண்டுள்ளது. கள்ளழகரை வரவேற்க மதுரை மக்கள் தயாராகிவிட்டனர்.

இதே போல மதுரை மாவட்டம் சோழவந்தானில் வைகை ஆற்றில் ஜனநாராயணப் பெருமாள் கள்ளழகர் திருக்கோவில் இறங்குகிறார். மற்றும் அணைப்பட்டி கிராமத்தில் அழகர் இறங்கி பக்தருக்கு காட்சி அளிக்கிறார். இதை ஒட்டி கிராமங்கள், விழாக்கோலம் பூண்டுள்ளது.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர், திருத்தோராட்டம்:

முன்னதாக இன்று காலை மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய தேரோட்டம் நடைபெற்றது.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில், சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. அதையடுத்து, மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள், மீனாட்சியம்மன் தேராட்டத்தை கண்டு தரிசித்தனர். விழாவையொட்டி, பக்தர்கள் நீர் மோர், பானகம் வழங்கினர்.

அழகர் திருவிழாவுக்கு, துருத்தி விற்பனை:

மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு கள்ளழகர் வைகை ஆற்றல் இறங்கும் பொழுது சாமி மீது தண்ணீரை பீச்சி அடிப்பதற்காக பயன்படுத்தப்படும் ஆட்டு தோலால் செய்யப்பட்ட துருத்தி விற்பனை தொடங்கப்பட்டது.

மதுரை சித்திரை திருவிழா கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி நேற்று மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது இதனைத் தொடர்ந்து இன்று மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் மற்றும் நாளை காலை தேரோட்டமும் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது . அதனைத் தொடர்ந்து நாளை இரவு எதிர்சேவை நடைபெற உள்ளது. பின்னர் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நாளை மறுநாள் காலை நடைபெற உள்ளது. அப்போது கள்ளழகர் சுவாமிக்கு விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் கள்ளழகர் வைகை ஆற்றில் தங்கக் குதிரையில் இறங்கும் பொழுது ஆட்டு தோலால் செய்யப்பட்ட துருத்தியை வைத்து தண்ணீரை சுவாமி மீது பீய்ச்சி அடிப்பார்கள்.

துருத்தி என்பது ஆட்டு தோலால் செய்யப்பட்ட தண்ணீர் பை, இந்த துருத்தி தற்போது மதுரை அவனியாபுரம் பகுதியில் ரூபாய் 500 முதல் 600 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. ஏராளமான கள்ளழகர் பக்தர்கள், விரதம் இருப்பவர்கள் ஆவலுடன் இந்த ஆட்டு தோலால் செய்யப்பட்ட துருத்தியை வாங்கி செல்கின்றனர். ஒருபுறம் சித்திரை திருவிழாவையொட்டி மதுரையே களைகட்டி உள்ள நிலையில் மறுபுறம் இந்த துருத்தி வியாபாரம் சூடு பிடித்து வருகிறது.

திமுக., ஆட்சியில் சீர்கெட்டுப் போன சட்டம் ஒழுங்கு; அரசுப் பணியாளருக்கே பாதுகாப்பில்லை!

1746440 mkstalin - 2026

கஞ்சா வணிகரை பிடிக்கச் சென்ற காவலர்கள் மீது கொலைவெறி தாக்குதல்: சீரழிவின் உச்சிக்கு செல்லும் தமிழ்நாடு – விழிக்குமா திமுக அரசு? என்று கேள்வி எழுப்பி, பாமக., தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையில்…

சென்னை கண்ணகி நகரில் உமாபதி என்ற கஞ்சா வணிகரை கைது செய்வதற்காக சென்ற இரு காவலர்களை கஞ்சா போதையில் இருந்த உமாபதியும், அவரது நண்பரும் இணைந்து கண்மூடித்தனமாக தாக்கியதில் இரு காவலர்களும் அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மருத்துவம் பெற்று வருகின்றனர்.

அதேபோல், கும்பகோணம் பாலக்கரையில் கஞ்சா போதையில் இருந்த 8 பேர் கொண்ட கும்பல் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரையும், அதை படம் பிடித்த இரு செய்தியாளர்களையும்  கொடூரமாகத் தாக்கியுள்ளனர். கஞ்சா அடிமைகளால் காவல்துறையினர்,  போக்குவரத்துத் தொழிலாளர்கள், செய்தியாளர்கள், பொதுமக்கள் என எந்தத் தரப்பினருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை  ஏற்பட்டிருப்பது பெரும் கவலையும், அதிர்ச்சியும் அளிக்கிறது.

கண்ணகி நகரைச்  சேர்ந்த உமாபதி கஞ்சா வணிகம் செய்வதையே முழு நேரத் தொழிலாகக் கொண்டவர். இதற்காக பல முறை கைது செய்யப்பட்ட போதிலும் உடனடியாக விடுதலை செய்யப்பட்டு விடுவதால் அவருக்கு சட்டத்தின்  மீது எந்த அச்சமும் இல்லை.  அவர் கஞ்சா வணிகம் செய்வது குறித்து காவல்துறையினருக்கு புகார் அளித்த இருவரைப் பற்றிய விவரங்களை காவல்துறையினரிடமிருந்து பெற்ற உமாபதி அவர்கள் இருவரையும் அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சித்துள்ளார். அவர்களும் ஆபத்தான நிலையில் மருத்துவம் பெற்று வருகின்றனர். இது குறித்த வழக்கில் கைது செய்யச் சென்ற போது தான் காவலர்களை அவர் தாக்கியுள்ளார்.

உமாபதி உள்ளிட்ட கஞ்சா வணிகர்கள், கஞ்சா போதைக்கு அடிமையானவர்களைக் கண்டு அஞ்சி நடுங்குவதாக கண்ணகி நகர் மக்கள் தெரிவித்துள்ளனர். கண்ணகி நகர் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் இதே நிலை தான் காணப்படுகிறது. மது போதையைக் கடந்து கஞ்சா போதைக்கு சிறுவர்கள் கூட அடிமையாகிக் கிடக்கின்றனர். பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் கூட கஞ்சா போதையில் செல்வதும், அதைக் கண்டித்து எச்சரிக்கும் ஆசிரியர்களைத் தாக்குவதும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன.  கஞ்சா போதைக்கு செல்லாமல் இளைய தலைமுறையினரைத் தடுப்பதும், போதைக்கு அடிமையாவதைத் தடுப்பதும் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன.

சென்னை உட்பட  தமிழ்நாடு  முழுவதும் கஞ்சா, அபின், ஹெராயின், கோகைன், எல்எஸ்டி என, அனைத்து வகையான போதைப் பொருட்களும் கிடைக்கின்றன. 24 மணி நேரம் வரை போதையில் மிதக்க வைக்கும் போதைப்பொருட்கள் கூட சென்னையில் தாராளமாகக் கிடைக்கின்றன. தமிழகத்தில் போதைப் பொருட்கள் நடமாட்டமும், கடத்தலும் கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்து வருகின்றன. உலக அளவிலான போதைப் பொருட்கள் பயன்பாடு மற்றும் கடத்தல் மையமாக தமிழகம் மாறி வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

 தமிழகத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டமும், பயன்பாடும் அதிகரித்து வருவது குறித்தும், அவற்றை ஒழிக்க வேண்டியதன் தேவை குறித்தும் பல ஆண்டுகளாகவே வலியுறுத்தி வருகிறேன். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்த போதும் போதைப் பொருட்களை கட்டுப்படுத்தும்படி வலியுறுத்தினேன். ஆனால், போதைப் பொருட்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த அரசும், காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. அதன் விளைவு தான் தமிழகத்தில் போதைப்பொருட்கள் தலைவிரித்தாடுகின்றன.

தமிழ்நாட்டில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகரிக்கும் போதெல்லாம் கஞ்சா வேட்டை என்ற பெயரில் காவல்துறையினர் சில ஆயிரம் பேரை கைது செய்வார்கள். ஆனால், அடுத்த நாளே அவர்கள் வெளியில் வந்து மீண்டும் கஞ்சா வணிகத்தைத் தொடங்கி விடுவார்கள். ஆட்சியாளர்கள் மற்றும் காவல்துறையினரின் மறைமுக ஆதரவுடன் தான் தமிழ்நாட்டில் கஞ்சா வணிகம் நடைபெறுகிறது என்று வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டுகிறேன். தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படா விட்டால், இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது என்பதே உண்மை.

தமிழ்நாடு இன்று எதிர்கொள்ளும் மிக முக்கிய பிரச்சினையே போதைப் பொருட்கள் நடமாட்டமும், அதனால் இளைஞர்கள் சீரழிவதும் தான். தமிழ்நாடு அரசு இனியாவது விழித்துக் கொண்டு போதைப் பொருட்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்; தமிழகத்தை போதையில்லாத மாநிலமாக மாற்ற வேண்டும்.


சீர்கெட்டுப் போயிருக்கும் சட்டம் ஒழுங்கு – எடப்பாடி பழனிசாமி காட்டம்

இபிஎஸ் X தளப் பதிவு: கும்பகோணத்தில் இளைஞர்கள் கஞ்சா போதையில் அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கியதாகவும், சென்னை கண்ணகி நகர் பகுதியில் விசாரணைக்கு சென்ற காவலர்கள் இருவரை போதை ஆசாமிகள் இருவர் தாக்கியதாகவும் வருகின்ற செய்திகள் கவலையளிக்கின்றன.

அரசு ஊழியர்களுக்கும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய காவல்துறையினருக்குமே பாதுகாப்பற்ற நிலையில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிற்கான முக்கிய காரணமாக போதைப்பொருள் புழக்கம் அமைந்துள்ளது.

நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, மளிகைப் பொருட்களைப் போன்று மிகச் சாதாரணமாக கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கிடைப்பதாக பத்திரிக்கையாளர்களும் பொதுமக்களும் என்னிடத்தில் மிகவும் வருத்தத்துடன் தெரிவித்தனர்.

இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே இந்த போதைப்பொருட்கள் புழங்குவது மிகுந்த கவலையளிப்பதும், கண்டணத்துக்கு உரியதாகும், சீர்கெட்டு போயிருக்கும் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை நிர்வகிக்க தக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துகிறேன்.

கோணல் பேச்சு, கோமாளி வாக்குறுதி: பிள்ளை பிடிக்கும் ராகுல் காந்தி!

jugalbandi rahul yatra - 2026

— ஆர். வி. ஆர்

“ஏழைக் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு வருடம் லட்ச ரூபாய் தருவோம்” – பிள்ளை பிடிக்கும் ராகுல் காந்தி!

கோணல் பேச்சு, கோமாளி வாக்குறுதி – இவற்றின் அடையாளம், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. ஒரு உதாரணம்: நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக, காங்கிரஸ் கட்சியின் சார்பில் அவர் பொதுவெளியில் அறிவித்த ஒரு வாக்குறுதி.

“மத்தியில் அமையும் காங்கிரஸ் அரசு, இந்தியாவின் ஒவ்வொரு ஏழ்மைக் குடும்பத்திலும் ஒரு பெண்ணுக்கு வருடம் தோறும் அவரது வங்கிக் கணக்கில் லட்ச ரூபாய் செலுத்தும். மாதம் அது கிட்டதட்ட எட்டாயிரத்து ஐநூறு ரூபாய் ஆகிறது.”

“நீங்கள் ஒரு வேலை பார்க்கலாம். இருந்தாலும் உங்கள் குடும்பம் ஏழ்மைக் குடும்பமாக இருந்தால், உங்கள் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு மாதம் எட்டாயிரத்து ஐநூறு ரூபாய் என்ற வகையில் வருடம் தோறும் லட்ச ரூபாயை வங்கிக் கணக்கில் அரசு செலுத்தும். வறுமைக் கோட்டிற்குக் கீழ் நீங்கள் எந்த நாள் வரை இருக்கிறீர்களோ, அந்த நாள் வரை உங்கள் வங்கிக் கணக்கில் மாதம் எட்டாயிரத்து ஐநூறு ரூபாய், அதாவது வருடத்திற்கு லட்ச ரூபாய், டாண் டாணென்று வந்து கொண்டிருக்கும். இப்படியாக ஒரே வீச்சில் நாங்கள் நாட்டின் வறுமையை ஒழித்துவிடுவோம்.”

சமீபத்தில் ராஜஸ்தானில் நடந்த ஒரு பெரிய காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி இந்த வார்த்தைகளை ஹிந்தியில் பேசினார். அதன் வீடியோ இன்டர்நெட்டில் இருக்கிறது. முன்னதாகக் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை டெல்லியில் வெளியிட்டது. அதில் இந்த ‘ஒரு லட்ச ரூபாய்’ வாக்குறுதியும் சொல்லப்பட்டிருந்தது.

ராகுல் காந்தியைத் தவிர, இந்த வாக்குறுதியை இப்படித் தம்பட்டமாக, தடபுடலாக, ஜிகினா அலங்காரங்கள் செய்து, மற்ற காங்கிரஸ் தலைவர்கள் சொல்லக் காணோம். இந்த வாக்குறுதியை ராகுல் விளக்கிய விதத்தில் உள்ள பைத்தியக் காரத்தனமும் அரசியல் பிராடும் ராகுல் காந்திக்கு விசேஷமாக உரித்தானவை.

ஒரு நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்புகள் எப்போது அதிகரிக்கும்? அவர்களின் வருமானம் நிஜத்தில் எப்போது கூடும், அவர்களின் பொருளாதார நிலை எப்போது உயரும்? ஒரு நாடு சிறந்த பொருளாதாரத் திட்டங்களை வகுத்து, அவற்றை முறையாகச் செயல்படுத்தி, நாட்டில் தொழில் பெருகி உற்பத்தியும் சேவைகளும் அதிகரித்தால் தவிர – அரசு மட்டத்தில் லஞ்ச ஊழலைக் கட்டுப் படுத்தி, பொதுச் சொத்து விரயம் ஆவதையும் தடுத்தால் ஒழிய – மக்களுக்கு அந்தப் பயன்கள் கிடைக்காது.

ராஜஸ்தானில் பேசிவிட்டு மறுநாள் இன்னொரு மாநிலத்தில் மேடை ஏறிய ராகுல் காந்தி, இந்தியாவில் வேலை இல்லாமல் இருப்பவர்களில் 83 சதவிகிதம் பேர் இளைஞர்கள் என்று சொன்னார். அப்படியானால், திருமண வயதை அடைந்தவுடன், ஏதோ வேலை இருக்கிறதோ இல்லையோ, எல்லா ஆண்களும் டும்டும் செய்து கொள்ள வேண்டியதுதான், புதுப்புது குடும்பங்களுக்கு மாதம் சுமார் 8,500 ரூபாய் கிடைக்கும் என்கிறார் ராகுல் காந்தி. இந்த வாக்குறுதி அரசைப் போண்டி ஆக்குவது மட்டுமல்ல, வேறு வகைகளிலும் விபரீதம் செய்யும்.

ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் பிரதமர்களாக இருந்த வருடங்கள் கூட்டாக 38. ஒரு பிரதமரின் சிண்டைப் பிடித்து அவர் கையைக் கட்டி மத்தியில் சோனியா காந்தி அதிகாரம் செலுத்திய வருடங்கள் 10. ஆக மொத்தம் 48 ஆண்டுகள் நேரு குடும்பம் மத்திய அரசில் கோலோச்சியது. ராகுல் காந்தி சொல்லும் மிக எளிய வறுமை ஒழிப்புத் திட்டத்தை சிந்திக்காத மண்டூகங்களா அவரது அம்மா, அப்பா, பாட்டி, கொள்ளுத் தாத்தா?

இந்த லட்ச ரூபாய்ப் பணத்தை உத்தேசமாக எத்தனை குடும்பங்களுக்கு மத்திய அரசு இனாமாக அளிக்க வேண்டி இருக்கும், எத்தனை வருடங்கள் தரவேண்டி இருக்கும், அதற்கான ஆண்டுச் செலவு எவ்வளவு, அந்தப் பணத்திற்கான மூல ஆதாரம் என்ன, என்று ஒரு விவரமும் காங்கிரஸ் கட்சியோ ராகுல் காந்தியோ தரவில்லை.

உலகில் பல நாடுகளில் பெரும்பான்மை மக்கள் ஏழ்மையில் தவிக்கின்றன. அவை எல்லாம் தங்கள் குடிமக்களுக்கு ஒரு லட்சம், ரண்டு லட்சம் என்று ஒவ்வொரு வருடமும் பணம் கொடுத்து வந்தால் உலகத்தின் எல்லா மூலைகளிலும் ஏழ்மை விரட்டி அடிக்கப் படுமே?

கடந்த 45 வருடங்களாகச் சீனா அந்நிய முதலீடுகளை ஈர்த்து, உற்பத்தியைப் பெருக்கி, ஏற்றுமதியை அதிகரித்து, பொதுக் கட்டமைப்புகளை விரிவாக்கம் செய்து, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி வருகிறது. அந்த நாடு ஏன் ராகுல் காந்தி பார்மூலவைப் பின்பற்றாமல் திடமான கடின வழியில் முன்னேறுகிறது?

எப்படிப் பார்த்தாலும் ராகுல் பேசியது குப்பை என்பதை சாதாரண மக்களும் புரிந்து கொள்ள முடியும். இது நிஜத்தில் நடக்காது என்று அவர்களும் நினைப்பார்கள். இருந்தாலும், தலைக்கனம் ஏறிய ஒரு பணக்காரன் ஒரு பிச்சைக்காரனிடம், “அடுத்த மாதம் உன் திருவோட்டில் ஆயிரம் ரூபாய் போடுகிறேன்” என்று சொன்னால், அதை நம்ப முடிக்கிறதோ இல்லையோ அதைத் தேமே என்று கேட்டுப் போவான் அந்தப் பிச்சைக்காரன். அப்படித்தான் ராகுல் பேச்சைக் கேட்ட சாதாரண மக்கள் இருப்பார்கள். அந்த நிலையில்தான் அவர்களை நீடித்து வைத்திருக்கிறார்கள் எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள்.

ராகுலின் ராஜஸ்தான் பேச்சு டுபாக்கூர் பேச்சு என்பது எல்லா காங்கிரஸ் தலைவர்களுக்கும் தெரியும். அவர்களின் முதல் பெரிய பிரச்சனை ராகுல் காந்தியும், பிள்ளைப் பாசம் மிக்க சோனியா காந்தியும்தான்.

திறமையும் தேசப் பற்றும் சுய மரியாதையும் உள்ள இளைஞர்கள் எவரும் காங்கிரஸுக்கு வரமுடியாமல், கட்சிக்குள் வளர முடியாமல், ஒதுங்கிப் போகிறார்கள். அதற்குக் காரணம், இந்த இருவரின் ராஜ தோரணை, எதேச்சாதிகாரம், மற்றும் தீராத பதவி மோகம். இந்த இருவருக்குச் சாமரம் வீசி, சலாம் போட்டு, கைகளும் தட்டி, தங்களின் ஆதாயத்தைக் கவனித்துச் சுகிக்கிறார்கள் கட்சியின் அடுத்த கட்ட சீனியர் தலைவர்கள்.

சரி, காங்கிரஸ் கட்சியின் தலைவிதியை அந்தக் கட்சி பார்த்துக் கொள்ளட்டும். ஆனால் ராகுல் காந்தியின் ராஜஸ்தான் பேச்சின் போது அவர் நெஞ்சோடு நெஞ்சாக வைத்திருந்த துருப்புச்சீட்டைக் கவனித்தீர்களா?

ராகுல் காந்தி அறிவித்த லட்ச ரூபாய் வாக்குறுதியை, மத்தியில் அமையும் ‘காங்கிரஸ்’ அரசு நிறைவேற்றும் என்றார் அவர். ஆனால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மைக்குத் தேவையான 272 இடங்களில் வென்று மத்தியில் ‘காங்கிரஸ்’ அரசை நிச்சயம் அமைக்கப் போவதில்லை. அந்தக் கட்சி போட்டியிடப் போவதே மொத்தம் சுமார் 330 இடங்கள்தான் என்றும் செய்திகள் வருகின்றன.

சமீபத்தில் பேசிய காங்கிரஸ் முன்னணித் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், உ. பி ஆகிய மூன்று மாநிலங்களில் நாங்கள் போட்டியிடும் இடங்களைக் குறைத்துக் கொண்டோம். காரணம், நாங்கள் வலுவான ‘இண்டி’ கூட்டணி அமைக்க விரும்பினோம். காங்கிரஸும் இண்டி கூட்டணியும் மக்களின் தெளிவான தீர்ப்பைப் பெறும்” என்று, மத்தியில் அமையப் போகும் ஆட்சி இண்டி கூட்டணியின் ஆட்சிதான், காங்கிரஸ் ஆட்சி அல்ல, என்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் திட்டத்தை அவர் அறிவித்துவிட்டார்.

காங்கிரஸ் கட்சியே தனது ஆட்சி அமையாது என்று அறிந்து, இண்டி கூட்டணி ஆட்சிக்கு ஆசைப்பட்டுக் காத்திருக்கிறது. அப்படி இருக்கும்போது, “காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வந்தால், ஏழைக் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு வருஷா வருஷம் லட்ச ரூபாயைக் காங்கிரஸ் அரசு செலுத்தும். இவ்விதமாக வறுமையை ஒழிப்போம்” என்று ஓட்டுக்காகப் பொது மக்களிடம் ராகுல் காந்தி பேசினால் என்ன அர்த்தம்? பிள்ளை பிடிக்க அலைபவன், கிடைக்கிற சிறுவர்களிடம் பேசும் ஆசை வாரத்தைதானே இது?

Author: R Veera Raghavan, Advocate, Chennai
email: veera.rvr@gmail.com
blog: https://rvr-india.blogspot.com