Home Blog Page 282

பிரதமர் மோடியின் மனதின் குரல்; 106வது பகுதி: பண்டிகையில் உள்ளூர் பொருள்களை வாங்க அழைப்பு!

manadhinkural - 2026
#image_title

மனதின் குரல், 106ஆவது பகுதி
ஒலிபரப்பு நாள்:  29.10.2023
ஒலிபரப்பு: சென்னை வானொலி நிலையம்


தமிழில் : ராமஸ்வாமி சுதர்ஸன்

எனதருமை குடும்பச் சொந்தங்களே, வணக்கம்.  மனதின் குரலில் மீண்டும் உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்தப் பகுதி வெளியாகும் வேளையில், நாடு முழுவதிலும் பண்டிகைக்காலக் கொண்டாட்டம் நடந்து கொண்டிருக்கிறது, வரவிருக்கும் அனைத்துப் பண்டிகைகளுக்கும் உங்கள் அனைவருமே கூட பலப்பல நல்வாழ்த்துக்கள்.

          நண்பர்களே, பண்டிகைகளின் இந்தக் கோலாகலத்திற்கு இடையே, தில்லியின் ஒரு செய்தியோடு நான் மனதின் குரலைத் தொடங்குகிறேன்.  இந்த மாதத் தொடக்கத்தில், காந்தி ஜயந்தியை ஒட்டி, தில்லியில் காதிக்கடை வரலாறு காணாத விற்பனையைச் செய்திருக்கிறது.  இங்கே கனாட் ப்ளேஸிலே, ஒரே ஒரு காதி அங்காடியில், ஒரே நாளில் மட்டும், ஒண்ணரை கோடி ரூபாய்க்கும் அதிகமான பொருட்களை மக்கள் வாங்கியிருக்கிறார்கள்.  இந்த மாதம் நடைபெற்று வரும் காதி மஹோத்சவம், மீண்டும் ஒருமுறை வியாபாரத்தில் தனது பழைய சாதனைகள் அனைத்தையும் முறியடித்து புதிய சாதனையைப் படைத்திருக்கிறது.  உங்களுக்கு மேலும் ஒரு விஷயம் மகிழ்ச்சியை அளிக்கலாம், பத்தாண்டுகளுக்கு முன்பாக, தேசத்தில் காதிப் பொருட்களின் விற்பனை 30,000 கோடி ரூபாய்க்கும் குறைவாக இருந்தது; இப்போது இது பெருகி, ஒண்ணேகால் இலட்சம் கோடி ரூபாயை எட்டியிருக்கிறது.  காதிப் பொருட்களின் விற்பனை அதிகரித்திருப்பதன் பொருள் என்னவென்றால், இதனால் ஆதாயம் நகரங்கள் தொடங்கி கிராமங்கள் வரை, பல்வேறு மட்டத்தினருக்கும் சென்றடைந்திருக்கிறது என்பது தான்.  இந்த விற்பனையால் இலாபம், நமது நெசவாளர்கள், கைவினைக் கலைஞர்கள், நமது விவசாயிகள், ஆயுர்வேதத் தாவரங்களை நடுவோர், குடிசைத் தொழில்கள் என அனைவருக்கும் கிடைத்திருக்கிறது, மேலும் உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் இயக்கத்தின் பலமே இதில் தானே அடங்கியிருக்கிறது!!  மெல்லமெல்ல, நாட்டுமக்களான உங்களனைவரின் ஆதரவும் பெருகிக் கொண்டே வருகிறது. 

          நண்பர்களே, இன்று மீண்டுமொரு முறை உங்களிடத்திலே ஒரு வேண்டுகோளை முன்வைக்க விரும்புகிறேன், மிகவும் பணிவோடு மறுபடி இதை சமர்ப்பிக்க விழைகிறேன்.  நீங்கள் எப்போதெல்லாம் சுற்றுலா செல்கிறீர்களோ, புனித யாத்திரை மேற்கொள்கிறீர்களோ, அப்போதெல்லாம் அங்கே அந்த வட்டாரக் கலைஞர்கள் வாயிலாக உருவாக்கப்படும் பொருட்களை அவசியம் வாங்குங்கள்.   உங்களுடைய பயணத்தின் மொத்த வரவுசெலவுகளில் வட்டாரத்தில் இந்த உற்பத்தியாகும் பொருட்களுக்கு ஒரு முக்கியமான முதன்மை அளிப்பது என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள்.  அது பத்து சதவீதமாகட்டும், 20 சதவீதமாகட்டும், உங்கள் வரவுசெலவினத்தில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு, உள்ளூர் பொருட்களை வாங்குவதில் செலவு செய்யுங்கள், அங்கே, அந்த இடத்திலேயே செலவு செய்யுங்கள்.

          நண்பர்களே, ஒவ்வொரு முறையைப் போலவும், இந்த முறையும் நமது பண்டிகைகளில், நமது முதன்மையானது உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்பது என்பதாக இருக்க வேண்டும், நாமனைவரும் இணைந்து நமது கனவை நிறைவேற்றுவோம்; நமது அந்தக் கனவு தற்சார்பு பாரதம்.  இந்த முறை நம் வீட்டில் ஒளியேற்றும் பொருட்களில், நமது நாட்டுமக்களின் வியர்வையின் மணம் இருக்க வேண்டும், நமது இளைஞர்களின் திறன் இருக்க வேண்டும், அதைத் தயாரிப்பதில் நமது நாட்டுமக்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுவதாக இருக்க வேண்டும், அன்றாட வாழ்க்கையின் எந்த ஒரு தேவையாக இருந்தாலும் சரி, நாம் உள்ளூர் பொருட்களையே வாங்க வேண்டும்.  ஆனால், உங்களிடத்திலே மேலும் ஒரு விஷயம் குறித்து கவனத்தைச் செலுத்த வேண்டுகிறேன்.  உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுத்தல் என்ற இந்த உணர்வு, பண்டிகைகளின் போது வாங்கும் பொருட்களோடு நின்று போய் விடக் கூடாது, சில இடங்களில் நானே பார்த்திருக்கிறேன், தீபாவளிக்கு விளக்குகள் வாங்குகிறோம், அல்லது சமூக ஊடகங்களில் இதை உள்ளூர் பொருட்களுக்கு ஊக்கம் கொடுப்போம் என்று பதிவிடுகிறோம்.   இது மட்டும் அல்ல ஐயா, இது வெறும் தொடக்கம் மட்டுமே.  நாம் மேலும், இன்னும் முன்னேற வேண்டும், வாழ்க்கையின் அனைத்துத் தேவைகள் – நமது தேசத்திலே இப்போது அனைத்துமே கிடைக்கின்றன.  இந்தப் பார்வை சிறிய கடைக்காரர்களிடம், தள்ளுவண்டியில் பொருட்களை விற்பனை செய்வோரிடம் வாங்குவதோடு மட்டும் குறுகிப் போய் விடக் கூடாது.  பாரதம் இன்று, உலகின் பெரிய தயாரிப்பு மையமாக ஆகி வருகிறது.  பல பெரிய ப்ராண்டுகள், இங்கே தமது பொருட்களைத் தயாரித்து வருகின்றார்கள்.  நாம் அந்தப் பொருட்களை வாங்கும் போது, இந்தியாவில் தயாரிப்போம் என்பதற்கும் ஊக்கம் அளிக்கப்படுகிறது, மேலும், இதுவுமே கூட உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுத்தல் என்றே ஆகிறது.  மேலும் ஒரு விஷயம், இப்படிப்பட்ட பொருட்களை வாங்கும் வேளையில் நமது தேசத்தின் பெருமிதமான யுபிஐ டிஜிட்டல் பணம் செலுத்தும் முறை வாயிலாகச் செலுத்துங்கள் என்றும் வேண்டிக் கொள்கிறேன், இதை வாழ்க்கையில் ஒரு பழக்கமாக்கிக் கொள்ளுங்கள், மேலும் அந்தப் பொருளோடு கூடவே, அல்லது, அந்தக் கைவினைஞரோடு எடுக்கப்பட்ட சுயபுகைப்படத்தை நமோ செயலியில், என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள், அதுவும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட் ஃபோன் வாயிலாக.  நான் அவற்றில் சில பதிவுகளை சமூக ஊடகத்தில் பகிர்வேன், இதன் வாயிலாக மற்றவர்களுக்கும் கூட உள்ளூர் பொருட்களுக்கு ஊக்கம் அளிக்கும் உத்வேகம் உண்டாகும்.

           நண்பர்களே, நீங்கள், பாரதத்தில் உருவாக்கப்பட்ட, பாரத நாட்டவரால் உருவாக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு தீபாவளியை ஒளிமயமாக்கும் போது, உங்களுடைய குடும்பத்தின் அனைத்துச் சிறிய-பெரிய தேவைகளும் உள்ளூரிலேயே நிறைவடையும் போது, தீபாவளியின் ஒளிவெள்ளம் கண்டிப்பாக மேலும் அதிகரிக்கும், அதே வேளையில், அந்தக் கைவினைஞர்களின் வாழ்க்கையில், ஒரு புதிய தீபாவளி ஒளிவிடும், வாழ்க்கையில் ஒரு புது விடியல் புலரும், அவர்களுடைய வாழ்க்கை வளம் பெறும். பாரதத்தை தற்சார்புடையதாக ஆக்குங்கள், இந்தியாவில் தயாரிப்பதையே தேர்ந்தெடுங்கள், இதனால் உங்களோடு கூடவே மேலும் கோடிக்கணக்கான நாட்டுமக்களின் தீபாவளி பிரமாதமாக ஆகும், ஜீவனுள்ளதாக ஆகும், ஒளிமயமானதாக ஆகும், சுவாரசியமாகவும் ஆகும்.

          எனதருமை நாட்டுமக்களே, அக்டோபர் 31 என்பது நம்மனைவருக்கும் மிகவும் சிறப்பான ஒன்றாகும்.  இந்த நாளன்று தான் நமது இரும்பு மனிதரான சர்தார் வல்லப்பாய் படேல் அவர்களின் பிறந்த நாள் ஆகும்.  பாரதநாட்டவரான நாமனைவரும் அவரை பல காரணங்களுக்காக நினைவு கூர்கிறோம், மிகுந்த சிரத்தையுடன் வணங்குகிறோம்.  மிகப்பெரிய காரணம் என்னவென்றால், தேசத்தின் 580க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை இணைப்பதில் அவருடைய ஈடிணையில்லாத பங்களிப்பு.  ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் 31ஆம் தேதியன்று, குஜராத்தில் அமைந்திருக்கும் ஒற்றுமை நினைவுச் சின்னத்தில் ஒருமைப்பாட்டு தினத்தோடு தொடர்புடைய முக்கியமான விழா நடக்கும் என்பதை நாமறிவோம்.  இந்த முறை, இதைத் தவிர, தில்லியில் கர்த்தவ்ய பாதையில், ஒரு மிகவும் சிறப்பான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.  கடந்த  சில நாட்களுக்கு முன்பாக, தேசத்தின் அனைத்து கிராமங்களிலிருந்தும், அனைத்து வீடுகளிலிருந்தும் மண்ணைத் திரட்டுங்கள் என்று நான் வேண்டுகோள் விடுத்திருந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம்.   அனைத்து இல்லங்களிலிருந்தும் மண்ணை சேகரித்த பிறகு, அதைக் கலசத்தில் வைத்து, அவை அமுத கலச யாத்திரையாகப் பயணப்பட்டு விட்டது.  தேசத்தின் பல்வேறு இடங்களிலிருந்தும் ஒன்று திரட்டப்பட்ட இந்த மண்ணைத் தாங்கிய ஆயிரக்கணக்கான கலசங்கள் அடங்கிய அமுத கலச யாத்திரை இப்போது தில்லி வந்தடைந்திருக்கிறது.  இங்கே தில்லியில் அந்த மண்ணை ஒரு விசாலமான பாரதக் கலசத்தில் இட்டு, இந்த பவித்திரமான மண்ணைக் கொண்டு தில்லியில் அமுத வனம் நிர்மாணிக்கப்படும்.   இது தேசத்தின் தலைநகரின் மையப்பகுதியில், அமுத மஹோத்சவத்தின் நேர்த்தியான மரபாக மிளிரும்.  நாடெங்கிலும், கடந்த இரண்டரை ஆண்டுகளாக நடைபெற்று வரும் சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவின் நிறைவு அக்டோபர் 31 அன்று தான் அரங்கேறும். நீங்கள் அனைவரும் இணைந்து இந்த உலகின் மிக நீண்ட காலம் வரை நடைபெற்ற பெருவிழாவினை சாதித்திருக்கிறீர்கள்.  நமது சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்துவதாகட்டும், அல்லது அனைத்து இல்லங்களிலும் மூவண்ணக் கொடி பறக்க விடுவதாகட்டும், சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவிலே, மக்கள் தங்களுடைய பகுதியின் வரலாற்றுக்கு ஒரு புதிய அடையாளத்தை அளித்திருக்கின்றார்கள்.  இதன் வாயிலாக சமூகசேவைக்குமான அற்புதமான எடுத்துக்காட்டும் காணக் கிடைத்திருக்கிறது.

          நண்பர்களே, நான் இன்று உங்களுக்கு மேலும் ஒரு சந்தோஷமான செய்தியை அளிக்க இருக்கிறேன். குறிப்பாக எனது இளைய சமுதாயச் செல்வங்களுக்கு.  இவர்களுடைய இதயங்களில் தேசத்திற்காக எதையாவது சாதித்துக் காட்ட வேண்டும் என்ற தாகம் இருக்கிறது, கனவு இருக்கிறது, உறுதிப்பாடு இருக்கிறது. இந்தச் சந்தோஷமான செய்தி, நாட்டுமக்கள் அனைவருக்கும் உரியது தான் என்றாலும், எனது இளைய நண்பர்களே, உங்களுக்குத் தான் இது அதிக விசேஷமானது.   இரண்டு நாட்கள் கழித்துத் தான் அக்டோபர் 31 அன்று ஒரு மிகப்பெரிய நாடு தழுவிய அமைப்புக்கான அடித்தளம் போடப்பட இருக்கிறது, அதுவும் சர்தார் ஐயாவின் பிறந்த நாளன்று.  இந்த அமைப்பின் பெயர் – மேரா யுவா பாரத், அதாவது MYBharat.  இந்த மைபாரத் அமைப்பானது, பாரதத்தின் இளைஞர்களை தேச நிர்மாணத்தின் பல்வேறு திட்டங்களில் தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பைத் தரக்கூடிய சந்தர்ப்பத்தை அளிக்கும்.  இது வளர்ந்த பாரதத்தை நிர்மாணிப்பதில் பாரதத்தின் இளைஞர் சக்தியை ஒன்று திரட்டும் ஒரு ஒப்பற்ற முயற்சியாகும்.  என்னுடைய இளைய பாரதத்தின் இணையதளமான MYBharatம் தொடங்கப்பட இருக்கிறது.   நான் இளைஞர்களிடத்திலே வேண்டுகோள் விடுக்கிறேன், மீண்டும்மீண்டும் வேண்டிக் கொள்கிறேன், என் தேசத்தின் இளைஞர்களே, நமது தேசத்தின் செல்வங்களே, MYBharat.Gov.inஇல் பதிவு செய்து கொண்டு, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுங்கள்.  அக்டோபர் மாதம் 31ஆம் தேதியன்று முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் காலமான நாளும் ஆகும்.  நான் அவர்களுக்கும் கூட, உணர்வுபூர்வமான நினைவாஞ்சலிகளை அர்ப்பணம் செய்கிறேன். 

          எனது குடும்பச் சொந்தங்களே, நமது இலக்கியம், ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வினை முரசறிவித்துச் சொல்லும் மிகச் சிறப்பான ஊடகங்களில் ஒன்றாகும்.  தமிழ்நாட்டின் பெருமைமிகு மரபோடு தொடர்புடைய இரண்டு மிகவும் உத்வேகமளிக்கும் முயற்சிகளை முன்வைக்க விரும்புகிறேன்.   தமிழ்மொழியின் புகழ்மிக்க எழுத்தாளரான சகோதரி சிவசங்கரி அவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது.  அவர் ஒரு செயல்திட்டத்தை புரிந்திருக்கிறார் – Knit India, Through Literature. இதன் பொருள் என்னவென்றால், இலக்கியம் வாயிலாக தேசத்தை ஓரிழையில் கோர்ப்பது என்பது தான்.  இவர் இந்தச் செயல்திட்டம் தொடர்பாக கடந்த 16 ஆண்டுகளாகச் செயலாற்றி வருகிறார்.   இந்தச் செயல்திட்டம் வாயிலாக இவர் பாரதநாட்டு மொழிகள் 18இல் எழுதப்பட்ட இலக்கியங்களை மொழியாக்கம் செய்திருக்கிறார்.  இவர் பலமுறை கன்யாகுமாரி தொடங்கி கஷ்மீரம் வரையும், இம்ஃபால் தொடங்கி ஜைசால்மேர் வரையும், தேசம் நெடுக, பல்வேறு மாநிலங்களின் எழுத்தாளர்கள்-கவிஞர்களை நேர்முகம் காண்பதற்காக சிவசங்கரி அவர்கள் பல பயணங்களை மேற்கொண்டிருக்கிறார், பயணக் கட்டுரைகளோடு கூட இவற்றைப் பதிப்பித்தும் இருக்கிறார்.  இது தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் இருக்கிறது.  இந்தச் செயல்திட்டத்தின் நான்கு பெரிய தொகுதிகள் வெளிவந்திருக்கின்றன, ஒவ்வொரு தொகுதியும் பாரதத்தின் தனித்தனி பாகத்திற்கு என அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது.  இவருடைய இந்த உறுதிப்பாட்டு சக்தி குறித்து எனக்குப் பெருமையாக இருக்கிறது.

          நண்பர்களே, கன்னியாகுமாரியின் ஏ.கே. பெருமாள் அவர்களுடைய பணியும் மிகவும் கருத்தூக்கம் அளிக்கவல்லதாக இருக்கிறது.  இவர் தமிழ்நாட்டின் கதை சொல்லும் பாரம்பரியத்தைக் கட்டிக்காக்கும் போற்றத்தக்க பணியைச் செய்திருக்கிறார். இவர் தனது இந்தக் குறிக்கோளோடு, கடந்த 40 ஆண்டுகளாக இணைந்திருக்கிறார்.   இதன் பொருட்டு இவர் தமிழ்நாட்டின் பல்வேறு பாகங்களுக்கும் பயணிக்கிறார், நாட்டுப்புற கலை வடிவங்களைத் தேடித்தேடி, அவற்றைத் தனது புத்தகத்தில் இடம்பெறச் செய்கிறார்.  இவர் இதுவரை, கிட்டத்தட்ட 100 புத்தகங்களை எழுதியிருக்கிறார் என்ற செய்தி உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கலாம்.  இதைத் தவிர பெருமாள் அவர்களுக்கு மேலும் ஒரு பேரார்வமும் உண்டு.  தமிழ்நாட்டின் கோயில் கலாச்சாரம் பற்றி ஆய்வு செய்வது இவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.  இவர் தோல்பாவைக் கூத்து பற்றியும் நிறைய ஆய்வுகளைச் செய்திருக்கிறார், இதனால் ஆதாயம் வட்டார நாட்டுப்புற கலைஞர்களுக்கும் கிடைத்து வருகிறது. சிவசங்கரி அவர்கள், ஏ.கே. பெருமாள் அவர்கள் – இவர்கள் இருவரின் முயற்சிகள் ஒவ்வொருவருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குவன. பாரதம் தனது கலாச்சாரத்தைப் பாதுகாக்கக்கூடிய அனைத்து முயற்சிகள் குறித்தும் பெருமிதம் அடைகிறது, இது நமது தேச ஒற்றுமையை மேலும் பலப்படுத்துவதோடு, தேசத்தின் பெயரையும், தேசத்தின் கௌரவத்தையும், அனைத்தையும் ஓங்கச் செய்யும்.

          எனது குடும்பச் சொந்தங்களே, வரவிருக்கும் நவம்பர் மாதம் 15ஆம் தேதின்று நாடெங்கிலும் பழங்குடி மக்களின் பெருமித தினம் கொண்டாடப்படும்.  இந்தச் சிறப்பான நாளோடு தான் பகவான் பிர்ஸா முண்டா அவர்களின் பிறந்த நாளும் இணைந்திருக்கிறது.  பகவான் பிர்ஸா முண்டா நம்மனைவரின் இதயங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவர்.  மெய்யான நெஞ்சுரம் என்றால் என்ன? தனது மனவுறுதிப்பாட்டில் அசையாமல் ஆணித்தரமாக இருப்பது என்று எதைச் சொல்கிறார்கள்? என்பதையெல்லாம் அவருடைய வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள முடியும்.  அவர் அந்நிய ஆட்சியை ஒருபோதும் ஏற்கவில்லை.  அவர் கற்பனை செய்த சமுதாயத்தில் அநீதிக்கு எந்த ஒரு இடமும் கிடையாது.  அனைவருக்கும் சமமான, சமத்துவமான வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்பதே அவருடைய விருப்பமாக இருந்தது.  பகவான் பிர்ஸா முண்டா அவர்கள், இயற்கையோடு இணக்கமாக வாழ்வதற்கு மிகவும் உரம் சேர்த்தார்.   இன்றும் கூட, நமது பழங்குடியின சகோதர-சகோதரிகள், இயற்கையை எப்படிப் பாதுகாக்கிறார்கள், அதைப் பராமரிப்பதில் எத்தனை அர்ப்பணிப்போடு இருக்கிறார்கள் என்பது கண்கூடு.  நம்மனைவருக்கும், நமது பழங்குடியின சகோதர சகோதரிகளின் இந்தப் பணி மிகவும் உத்வேகம் அளிக்க வல்லது.

          நண்பர்களே, நாளை, அதாவது அக்டோபர் 30ஆம் தேதி குரு கோவிந்த சிம்மன் காலமான தினம்.  நமது குஜராத் மற்றும், ராஜஸ்தானத்துப் பழங்குடியினத்தவர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் வாழ்க்கையில் கோவிந்த குருவிற்கு மிகவுயர்வான மகத்துவம் உள்ளது.  கோவிந்த குருவுக்கும் நான் எனது சிரத்தாஞ்சலிகளை அர்ப்பணம் செய்கிறேன்.  மான்கட் படுகொலையின் நினைவு ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் அனுசரிக்கப்படுகிறது.  அந்தப் படுகொலையில் உயிர்த்தியாகம் புரிந்த, பாரத அன்னையின் அனைத்துப் புதல்வர்களுக்கும் என் நினைவாஞ்சலிகளைக் காணிக்கையாக்குகிறேன். 

          நண்பர்களே, பாரதநாட்டிலே பழங்குடியினச் சுதந்திரப் போராட்ட வீரர்களின் நிறைவான வரலாறு உண்டு.  இதே பாரத பூமியில் தான் பெருமைமிகு திலகா மாஞ்ஜீ அவர்கள், அநீதிக்கு எதிராக சங்கநாதம் முழக்கினார்.  இதே மண்ணிலிருந்து தான் சித்தோ-கான்ஹூவும் சமத்துவத்திற்கான குரலை ஒலிக்கச் செய்தார்கள்.  மக்கள் போராளியான டண்ட்யா பீல் நமது மண்ணிலே பிறந்தார் என்பதில் நமக்குப் பெருமிதம் உண்டு.  உயிர்த்தியாகியான வீர் நாராயண் சிம்மனை மிகுந்த சிரத்தையோடு நாம் நினைவில் கொள்கிறோம், இவர் கடினமான சூழ்நிலைகளிலும் தனது மக்களுக்குத் துணை நின்றார்.  வீர் ராம்ஜி கோண்ட் ஆகட்டும், வீர் குண்டாதுர் ஆகட்டும், பீமா நாயக் ஆகட்டும், இவர்களுடைய நெஞ்சுரம் இன்றும் நமக்கு உத்வேகத்தை அளித்து வருகின்றது.  அல்லூரி சீதாராம் ராஜூ அவர்கள், பழங்குடி சகோதர சகோதரிகளின் மனதிலே சுதந்திரத் தீயைக் கொழுந்து விட்டெரியச் செய்தமைக்கு, தேசம் அவரை இன்றும் நினைவில் ஏத்துகிறது.  வடகிழக்கில் கியாங்க் நோபாங்க், ராணி கைதின்யூ போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களிடமிருந்தும் நாம் வேண்டுமளவு உத்வேகம் பெறுகிறோம்.  பழங்குடியின சமூகத்திலிருந்து தான் தேசத்தின் ராஜமோஹினி தேவியும், ராணி கமலாபதி போன்ற வீராங்கனைகளும் நமக்குக் கிடைக்கப் பெற்றார்கள்.  பழங்குடியின சமூகத்திற்கு உத்வேகம் அளிக்கவல்ல ராணி துர்க்காவதி அவர்களின் 500ஆவது பிறந்த நாளை இந்த வேளையில் தேசம் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.   தேசத்தின் அதிகமான இளைஞர்கள், தங்கள் பகுதிகளைச் சேர்ந்த பழங்குடியின ஆளுமைகளைப் பற்றித் தெரிந்து கொண்டால், அவர்களிடமிருந்து உத்வேகம் அடையலாம் என்பதே என் விருப்பம்.  தனது பழங்குடியின சமூகத்திற்கு தேசம் நன்றிக்கடன்பட்டிருக்கிறது, இவர்கள் தாம் தேசத்தின் சுயமரியாதை மற்றும் மேன்மையை எப்போதுமே மிகவுயர்வாகக் கொண்டு வந்துள்ளார்கள்.

          எனதருமை நாட்டுமக்களே, பண்டிகைகளின் இந்தக் காலத்தில், இப்போது தேசத்திலே, விளையாட்டுக்களும் கொடிகட்டிப் பறக்கின்றன. கடந்த தினங்களிலே ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்குப் பிறகு மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் கூட பாரத நாட்டு விளையாட்டு வீரர்கள் மிகச் சிறப்பான வெற்றியை ஈட்டியிருக்கிறார்கள்.  இந்த விளையாட்டுப் போட்டிகளில் பாரதம் 111 பதக்கங்களை வென்று, ஒரு புதிய சரித்திரத்தைப் படைத்திருக்கிறது.  நான் மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கெடுத்துக் கொண்ட அனைத்து வீரர்களுக்கும் பலப்பல வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

          நண்பர்களே, சிறப்பு ஒலிம்பிக்ஸ் உலக கோடைக்கால விளையாட்டுப் போட்டிகள் மீது உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன்.  இதற்கான ஏற்பாடுகள் பெர்லினில் நடைபெற்றன.  இந்தப் போட்டிகள், Intellectual Disabilities, அறிவுசார் குறைபாடுகள் உடைய நமது விளையாட்டு வீரர்களின் அற்புதமான திறமையை வெளிப்படுத்துகிறது.  இந்தப் போட்டிகளில் பாரத நாட்டு அணியானது 75 தங்கப் பதக்கங்கள் உட்பட 200 பதக்கங்களை வென்றிருக்கிறது.  Roller skating, உருளைச் சறுக்குப் போட்டி ஆகட்டும், பீச் வாலிபால் ஆகட்டும், கால்பந்தாட்டம் ஆகட்டும், அல்லது லான் டென்னிஸ் ஆகட்டும், பாரத நாட்டு விளையாட்டு வீரர்கள் பதக்கங்களை சரமாரியாக வென்றார்கள்.  பதக்கங்கள் வென்ற இந்த வீரர்களின் வாழ்க்கைப் பயணம் மிகவும் கருத்தூக்கம் அளிப்பதாக இருந்திருக்கிறது.  ஹரியாணாவின் ரண்வீர் சைனி, கோல்ஃப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றிருக்கிறார்.  சிறுவயது முதற்கொண்டே Autism – மதியிறுக்கத்தால் பாதிக்கப்பட்ட ரண்வீருக்கு, கால்ஃப் விளையாட்டுத் தொடர்பான எந்த ஒரு சவாலாலும் அவருடைய பேரார்வத்துக்குத் தடை போட முடியவில்லை.  இவருடைய குடும்பத்தார் அனைவரும் இன்று கால்ஃப் விளையாட்டு வீரர்களாக ஆகி விட்டார்கள் என்ற அளவுக்கு இவருடைய தாயார் கூறுகிறார்.  புதுச்சேரியைச் சேர்ந்த 16 வயது நிரம்பிய டி. விஷால், நான்கு பதக்கங்களை வென்றிருக்கிறார்.  கோவாவின் சியா சரோதே, பவர்லிஃப்டிங் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்கள் உட்பட, நான்கு பதக்கங்களை வென்றிருக்கிறார்.  9 வயதிலே தனது தாயைப் பறிகொடுத்த பிறகு, இவர் தன்னை ஏமாற்றத்தில் மூழ்கிப் போக அனுமதிக்கவில்லை.  சத்தீஸ்கட்டைச் சேர்ந்த துர்க்கிலே வசிக்கும் அனுராக் பிரசாத், பவர்லிஃப்டிங்க் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களும், ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்றிருக்கிறார்.  இதைப்ழ் போலவே மேலும் ஒரு உத்வேகமளிக்கும் கதை ஜார்க்கண்டின் இந்து பிரகாஷுடையது, இவர் சைக்கில் ஓட்டும் பந்தயத்தில் இரண்டு பதக்கங்களை வென்றிருக்கிறார். மிகவும் எளிமையான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றாலும், இந்து, தனது வெற்றிக்கு எதிராக எழுப்பப்பட்ட சுவராகத் தனது ஏழ்மையை அவர் கருதவில்லை.  இந்த விளையாட்டுக்களில் பாரத நாட்டு விளையாட்டு வீரர்களின் வெற்றி, அறிவுசார் குறைபாடுகளை எதிர்கொள்ளும் பிற மாற்றுத் திறனாளிக் குழந்தைகளுக்கும், குடும்பத்தாருக்கும் கருத்தூக்கம் அளிக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.  உங்கள் கிராமத்திலே, உங்கள் கிராமத்தின் அருகிலே, இப்படிப்பட்ட குழந்தைகள் இந்த விளையாட்டுப் போட்டிகளில் பங்கெடுத்திருந்தார்கள், அல்லது வெற்றி பெற்றிருந்தார்கள் என்றால், நீங்கள் உங்கள் குடும்பத்தாரோடு அவர்களிடம் செல்லுங்கள், அவர்களுக்குப் பாராட்டுத் தெரிவியுங்கள், சில கணங்கள் அந்தக் குழந்தைகளோடு கழியுங்கள் என்பதே நான் உங்கள் முன்பாக வைக்கும் வேண்டுகோள்.  உங்களுக்கு ஒரு புதிய அனுபவம் ஏற்படும்.  இறைவன் அவர்களிடத்திலே நிரப்பியிருக்கும் சக்தியைக் காணும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கும், கண்டிப்பாகச் சென்று வாருங்கள்.

          என் குடும்பச் சொந்தங்களே, நீங்கள் அனைவரும் புனிதத் தலமான குஜராத்தின் அம்பாஜி கோயிலைப் பற்றி அவசியம் கேள்விப்பட்டிருப்பீர்கள். இது மிகவும் மகத்துவமான சக்திபீடமாகும், இங்கே தாய் அம்பாவை தரிசனம் செய்ய நம் நாட்டிலிருந்தும், அயல்நாடுகளிலிருந்தும் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருகிறார்கள். இங்கே கப்பர் மலையின் வழியில் பல்வேறு வகையான யோக முத்ரைகளையும், ஆசனங்களையும் வெளிப்படுத்தும் சிற்பங்கள் காணப்படும்.  இந்தச் சிற்பங்களின் விசேஷம் என்ன என்பதை நீங்கள் அறிவீர்களா? உண்மையில், இவை ஓட்டை உடைசல்களிலிருந்து உருவாக்கப்பட்டவை, மிகவும் அற்புதமானவை. அதாவது இந்த வடிவங்கள், கழித்துக் கட்டப்பட்ட காயலான் பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டவை. அம்பாஜி சக்திபீடத்தில் தேவி அன்னையை தரிசனம் செய்வதோடு, இந்த உருவச்சிலைகளும் கூட பக்தர்களை ஈர்க்கும் மையமாக ஆகி விட்டன.  இந்த முயற்சியின் வெற்றியைக் கண்டு, என் மனதிலே ஒரு எண்ணம் உதிக்கிறது.  பயனற்றவை என்று கழித்துக் கட்டப்பட்ட பொருட்களிலிருந்து இப்படிப்பட்ட கலைப்படைப்புக்களை உருவாக்குவோர் நமது தேசத்திலே பலர் இருக்கிறார்கள். அந்த வகையில் குஜராத் அரசிடம் நான் முன்வைக்கும் வேண்டுகோள் என்னவென்றால், அவர்கள் போட்டி ஒன்று நடத்தி, இப்படிப்பட்ட நபர்களை அதிலே பங்கெடுக்கச் செய்ய வேண்டும் என்பதே.  இந்த முயற்சியால் கப்பர் மலையின் ஈர்ப்பினை அதிகரிப்பதோடு கூடவே, நாடு முழுவதிலும் கழிவிலிருந்து செல்வம் இயக்கத்தில் ஈடுபட மக்களுக்கு உத்வேகம் அளிக்கும். 

          நண்பர்களே, தூய்மை பாரதம், கழிவிலிருந்து செல்வம் பற்றி எப்போதெல்லாம் பேச்சு வருகிறதோ, அப்போதெல்லாம் தேசத்தின் அனைத்து இடங்களிலும் கணக்கேயில்லாத எடுத்துக்காட்டுகள் தேசத்தில் கிடைக்கின்றன.  அசாமின் காமரூபம் பெருநகர மாவட்டத்தில் அக்ஷர் ஃபோரம் என்ற பெயர் கொண்ட ஒரு பள்ளி, குழந்தைகளிடத்திலே நீடித்த வளர்ச்சி என்ற உணர்வினை ஏற்படுத்த, பழக்கமாகவே அதை ஆக்க, ஒரு நீடித்த பணியை ஆற்றி வருகிறது.  இங்கே படிக்கும் மாணவர்கள் ஒவ்வொரு வாரமும், நெகிழிக் கழிவைச் சேகரிக்கிறார்கள், இவை சூழலுக்கு நேசமான செங்கற்கள், சாவிக்கொத்தை போன்ற பொருட்களைத் தயாரிக்கப் பயனாகிறது.  இங்கே மறுசுழற்சி மற்றும் நெகிழிக் கழிவுகளிலிருந்து பொருட்களைத் தயாரிப்பது மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறது.   சிறிய வயதிலேயே சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு, தேசத்தின் கடமையுணர்வுள்ள குடிமக்களாக இந்தக் குழந்தைகளை ஆக்குவதில் மிகவும் உதவிகரமாக விளங்கும்.

          எனது குடும்பச் சொந்தங்களே, பெண்சக்தியின் வல்லமை காணப்பெறாத எந்த ஒரு துறையும் இன்று வாழ்க்கையில் இல்லை.   அந்த வகையிலே, அனைத்து இடங்களிலும் அவர்களுடைய சாதனைகள் போற்றப்பட்டு வருகின்றன எனும் வேளையிலே, பக்தியையும் சக்தியையும் வெளிப்படுத்தும் ஒரு பெண் புனிதையையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும், இவருடைய பெயர் வரலாற்றின் பொன்னான பக்கங்களில் பொறிக்கப்பட்டிருக்கிறது.   மாபெரும் புனிதை மீராபாயின் 525ஆவது பிறந்த நாளை தேசம் இந்த ஆண்டு கொண்டாடி வருகிறது. இவர் நாடு முழுவதிலும் இருக்கும் மக்களுக்கு, பல்வேறு காரணங்களுக்காக ஒரு உத்வேக சக்தியாக இருந்திருக்கிறார்.  ஒருவருக்கு இசையில் நாட்டம் இருந்தால், அவர் இசைக்கே தம்மை அர்ப்பணித்த பெரிய எடுத்துக்காட்டாக இருக்கிறார், ஒருவர் கவிதைகளை விரும்புபவர் என்றால், பக்திரசத்திலே தோய்ந்த மீராபாயின் பஜனைப் பாடல்கள், அவர்களுக்கு அலாதியான ஆனந்தத்தை அளிக்க வல்லவை, ஒருவர் இறைசக்தியில் நம்பிக்கை உள்ளவர் என்றால், மீராபாயின் ஸ்ரீ கிருஷ்ணனிடம் கலந்து கரைதல் என்பது அவருக்கு ஒரு பெரிய உத்வேக காரணியாக ஆகக்கூடும்.  மீராபாய், புனிதர் ரவிதாசைத் தனது குருவாக வரித்தவர். 

गुरु मिलिया रैदास, दीन्ही ज्ञान की गुटकी |

குரு மிலியா ரைதாஸ், தீன்ஹீ ஞான் கீ குட்கீ

அதாவது ரைதாஸர் எனக்கு குருவாகக் கிடைத்தது என்பது, பிரசாத வடிவில் ஞானம் கிடைத்தது போல என்று அவர் கூறியிருக்கிறார். 

          தேசத்தின் தாய்மார்கள்-சகோதரிகள், புதல்விகளுக்கு மீராபாய், இன்றும் கூட உத்வேகத்தின் ஊற்று.  அந்தக் காலகட்டத்திலும் கூட, அவர் தனக்குள்ளே ஒலித்த குரலுக்குச் செவி மடுத்தார், பழமைவாத, மூடப் பழக்கங்களுக்கு எதிராக நின்றார்.  ஒரு புனிதை என்ற வகையிலும் கூட அவர் நம்மனைவருக்கும் கருத்துக்கக் காரணியாக மிளிர்கிறார்.  தேசம் பலவகையான தாக்குதல்களை எதிர்கொண்ட அந்தக் காலத்திலே, அவர் பாரதநாட்டு சமூகம் மற்றும் கலாச்சாரத்துக்கு வலுக்கூட்ட முன்வந்தார்.  எளிமையிலும், பணிவிலும் எத்தனை சக்தி நிறைந்திருக்கிறது என்பது, நமக்கு மீராபாயின் வாழ்க்கையிலிருந்து தெரிய வருகிறது.  நான் புனிதை மீராபாயிக்குத் தலைவணங்குகிறேன். 

         என் நெஞ்சம் நிறை குடும்பச் சொந்தங்களே, இந்த முறை மனதின் குரலில் இம்மட்டே.  உங்களனைவரோடும் நடைபெறும் ஒவ்வொரு உரையாடலும், என்னுள்ளே புதிய சக்தியை நிரப்புகிறது.  உங்களுடைய தகவல்களில் நம்பிக்கையும், நேர்மறை எண்ணங்களும் நிரம்பிய ஏராளமான தரவுகள் தொடர்ந்து என்னை வந்தடைகின்றன.  நான் மீண்டும் உங்களிடத்திலே வேண்டிக் கொள்கிறேன் – தற்சார்பு பாரதம் இயக்கத்திற்கு பலம் கூட்டுங்கள்.  வட்டாரத்தில் உற்பத்தியாகும் பொருட்களை வாங்குங்கள், உள்ளூர் பொருட்களுக்குக் குரல் தாருங்கள்.  எப்படி நீங்கள் உங்கள் இல்லங்களைத் தூய்மையாக வைத்துக் கொள்கிறீர்களோ, அப்படியே உங்கள் சுற்றுப்புறத்தையும், நகரையும் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள்.  அக்டோபர் மாதம் 31ஆம் தேதியன்று சர்தார் ஐயாவின் பிறந்த நாள் என்பது உங்களுக்குத் தெரியும், ஒருமைப்பாட்டு தினம் என்ற வகையிலே இந்த நாளை தேசம் கொண்டாடுகிறது, தேசத்தின் பல இடங்களில் ஒற்றுமைக்கான ஓட்டம் நிகழ்ச்சிகள் நடக்கின்றன.  நீங்களும் அக்டோபர் 31ஆம் தேதி இந்த ஒற்றுமைக்கான ஓட்டத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்.  மிகப்பெரிய எண்ணிக்கையில் நீங்களும் இதிலே உங்களை இணைத்துக் கொள்ளுங்கள், ஒற்றுமைக்கான உறுதிப்பாட்டை மேலும் பலப்படுத்துங்கள்.  மீண்டும் ஒரு முறை, வரவிருக்கும் பண்டிகைகளுக்காக பலப்பல நல்வாழ்த்துக்களை அளிக்கிறேன். நீங்கள் அனைவரும் குடும்பத்தாரோடு சந்தோஷமாகக் கொண்டாடுங்கள், ஆரோக்கியமாக இருங்கள், ஆனந்தமாக இருங்கள், இதுவே என் விருப்பம்.  மேலும் தீபாவளி சமயத்தில், தவறுதலாகக் கூட தீ விபத்து ஏதும் ஏற்படாமல் இருப்பதில் கவனமாக இருங்கள்.  யாருடைய உயிருக்கும் எந்த பங்கமும் ஏற்படாமல் இருக்கட்டும், நீங்களும் கவனமாக இருங்கள், மொத்த பகுதியையும் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.  பலப்பல நல்வாழ்த்துக்கள்.  பலப்பல நன்றிகள்.   

ஐப்பசி பௌர்ணமி: கோயில்களில் அன்னாபிஷேகம் சிறப்பு பூஜைகள்!

மதுரை: திருப்பரங்குன்றம் அருகே தென்பரங்குன்றத்தில் உள்ள பால் சுனை சிவன் கோவிலில் ஐப்பசி மாத பௌர்ணமி சிறப்பு பூஜை நடைபெற்றது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள தென்பரங்குன்றம் அருள்மிகு பால் சுனை சிவன் கோவிலில் ஐப்பசி மாத பௌர்ணமி பூஜை நடைபெற்றது. சிவனுக்கு 16 வாசனை திரவியங்கள் அபிஷேகத்துடன் அன்ன அபிஷேகமும் நடைபெற்றது . இதனைத் தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

அவர்களுக்கு, பிரசாதமாக சாமிக்கு நெய்வேத்தியம் செய்யப்பட்ட அன்னம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

இதே போல், மதுரை அருகே சோழவந்தான் பிரளயநாத சிவன் ஆலயத்தில், ஐப்பசி பௌர்ணமி முன்னிட்டு, சுவாமிக்கு பக்தர்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அன்னாபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து, பக்தர்களுக்கு, சிறப்பு அர்ச்சனை வழிபாடு நடந்தது. இந்நிகழ்ச்சியில், கோவில் செயல் அலுவலர் இளமதி, கணக்கர் சி பூபதி, எழுத்தர் வசந்த், கவிதா மற்றும் பேரூராட்சி கவுன்சிலர் வள்ளி மயில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதே போல, சோழவந்தான் வட்டப் பிள்ளையார் ப கோவில் அருகே உள்ள, புட்டு விநாயகர் ஆலயத்தில் வரதராஜப் பண்டிட் தலைமையில் சிவனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து, அன்னாபிஷேகம் நடந்தது. பக்தர்கள் பலர் சிவனை வழிபட்டு பிரசாதங்களை பெற்றுச் சென்றனர். மேலும், சோழவந்தான் அருகே தென்கரை மூலநாதசுவாமி துவரிமான் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம், கீழமாத்தூர் மணிகண்டேஸ்வரர் ஆலயம், திருமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் உள்ளிட்ட கோயில்களிலும் ஐப்பசி பௌர்ணமி முன்னிட்டு, சிவனுக்கு அண்ணாபிஷேகம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.

சிவனுக்கு அன்னாபிஷேகம்:

மதுரை தாசில்தார் நகர் அருள்மிகு சித்தி விநாயகர் ஆலயத்தில் ஐப்பசி பவுர்ணமி முன்னிட்டு, சிவபெருமானுக்கு பக்தர்களால் அன்னாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, பால், இளநீர், சந்தனம் போன்ற அபிஷேக திரவியங்களால், சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அன்னத்தால் சிவ பெருமான் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதை அடுத்து, அர்ச்சனை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் போன்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
இதே போல, மதுரை வைகை காலனி வைகை விநாயகர் ஆலயத்திலும், மதுரை மேலமடை சௌபாக்யா விநாயகர் ஆலயத்திலும் ,ஐப்பசி பவுர்ணமி முன்னிட்டு சிவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது.

மேலும், மதுரை ஆவின் சாத்தமங்கலம் அருள்மிகு பால விநாயகர் ஆலயத்தில், அமிர்தகடேஸ்வரர் சுவாமிக்கு, ஈஸ்வர பட்டர் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது
இதில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு, சிவபெருமானை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர் .

என்ன செய்யப் போகிறது கத்தார்?!

india and qatar news - 2026
#image_title

கட்டுரை: பி.எஸ். நரேந்திரன்

இந்திய, கத்தாரிய பிரச்சினை சிக்கலானது….


இந்திய, கத்தாரிய பிரச்சினை சிக்கலானது. இதன் பின்னனியில் இந்தியாவிற்கு எதிரான, இந்தியாவின் வளர்ச்சியில் வயிறெரிகிற அத்தனை நாடுகளும் இணைந்திருக்கிறார்கள் என்பதினைப் புரிந்து கொள்வது அவசியம். சீனா, கனடா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் ஈரானும் இணைந்திருக்கிறது. அதற்கெல்லாம் மேலாக அமெரிக்காவிலிருக்கும் இந்திய எதிர்ப்புக் குழுவும் அதில் உண்டு. கனடாவுடனான பிரச்சினையும், கத்தார் துவக்கியிருக்கும் பிரச்சினையும் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவை. அதில் உள்நாட்டு துரோகிகளும் ஒன்றிணைந்திருக்கிறார்கள். அவர்களின் ஒரே நோக்கம் எப்படியாவது மோடியைப் பதவியிலிருந்து நீக்குவது. இந்தியாவின் வளர்ச்சியைத் தடுப்பது போன்றவைதான்.

வளைகுடா பணக்கார இஸ்லாமிய நாடுகள் தீவிரவாதிகளை ஆதரிப்பது குறைந்துவிட்ட அதேவேளையில் இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு அடைகலமும் கொடுத்து, அவர்களுக்குத் தேவையான பணத்தையும் கத்தார் அள்ளிக் கொடுக்கிறது. இன்றைக்கு இஸ்ரேலில் நடக்கும் பிரச்சினையிலும் கத்தாரின் பங்கு மிக அதிகம். இஸ்ரேலில் படுகொலைகள் புரிந்த ஹமாஸ் அமைப்பிற்கு கத்தார் பல பில்லியன் டாலர்களைக் கொடுத்திருக்கிறது. இது அத்தனையையும் கத்தார் வெளிப்படையாகவே செய்கிறது. அதனை எந்த நாடும், அமெரிக்கா உட்பட, தட்டிக் கேட்கப் போவதில்லை என்பது கத்தாருக்கு நன்றாகவே தெரியும். ஏனென்றால் கத்தாரில்தான் அமெரிக்காவின் மிகப்பெரிய ராணுவதளம் அமைந்திருக்கிறது. அமெரிக்கா வாயைத் திறந்தால் கத்தார் அவர்களை அங்கிருந்து வெளியேற்றிவிட்டு சீனாவை உட்காரவைத்துவிடும்.

உலக நாடுகள் சின்னஞ்சிறிய கத்தாரை எதிர்க்க அஞ்சுவதற்குக் காரணம் கத்தாரில் நிறைந்துகிடைக்கும் இயற்கை எரிவாயுதான். இன்றைய உலகிற்குத் தேவையான 70 சதவீத இயற்கை எரிவாயுவை கத்தார்தான் ஏற்றுமதி செய்கிறது. அந்த எரிவாயு ஏற்றுமதி நின்றுபோனால் பல நாடுகளில், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் வாழுவதே சிரமமான காரியமாக முடிந்துவிடும். கடுமையான குளிர்காலங்களையும், உறைபனிக் காலங்களையும் கொண்ட ஐரோப்பிய நாடுகள் தங்களின் வீடுகளையும், அலுவலகங்களையும் இயற்கை எரிவாயுவின் உதவியால் சூடுபடுத்திக் கொண்டாகவேண்டும், இல்லாவிட்டால் விறைத்துச் செத்துப்போவார்கள்.

உக்ரேனிய, ரஷ்யப் போர் துவங்குவதற்கு முன்னால் ஐரோப்பா தனக்குத் தேவையான இயற்கை எரிவாயுவின் பெரும்பகுதியை ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்து கொண்டிருந்தது. கடலின் அடியில் போடப்பட்ட ராட்சத குழாய்களின் மூலமாக எரிவாயுவை ரஷ்யா ஐரோப்பிய நாடுகளுக்கு சப்ளை செய்து கொண்டிருந்தது. அந்தக் குழாய்களை “யாரோ(!)” வெடிவைத்துத் தகர்த்துவிட்டார்கள். எனவே ஐரோப்பாவிற்குக் கத்தாரை விட்டால் வேறு வழியில்லை. கத்தார் என்ன செய்தாலும் ஐரோப்பாவிலிருந்து ஒரு முக்கல் முனகல் கூட எழும்பாது.

அதற்கும் மேலாக நேற்றுவரையில் தாங்கள் சொல்வதனைக் கேட்டு வாய்மூடிக் கிடந்த இந்தியாவின் வளர்ச்சி அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா போன்ற, வெள்ளையின வெறிகொண்ட ஆங்கிலோ சாக்ஸன் நாடுகளை எரிச்சலடைய வைத்திருக்கிறது. இந்தியாவிற்குப் பலவழிகளிலும் தொல்லை கொடுக்க இந்த நாடுகள் முயன்றுகொண்டே இருக்கின்றன. எனவே கத்தார், இந்திய மோதலைத் தூண்டிவிட்டுக் கொண்டும் இருக்கிறார்கள்.

இந்தியாக்குத் தேவையான இயற்கை எரிவாயுவில் 40 சதவீதம் கத்தாரில் இருந்துமட்டுமே இறக்குமதி செய்யப்படுகிறது. கத்தாரின் போக்கு பிடிக்காத இந்தியா அதனைக் குறைக்க பலவழிகளிலும் முயன்று கொண்டிருக்கிறது. சமீபத்தில் தான்ஸானியா போன்ற நாடுகளில் இருந்து இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்யும் ஒப்பந்தம் ஒன்றை இந்தியா செய்திருக்கிறது. இதன் மூலமாக கத்தாரிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிற இயற்கை வாயுவின் அளவு 20 சதவீதமாகக் குறையும் என்பதால் கத்தார் எரிச்சலில் இருக்கிறது. அனேகமாக அடுத்த பத்தாண்டுகளில் எரிவாயுவிற்காக கத்தாரை சார்ந்திருப்பதனை முற்றிலுமாக இந்தியா நிறுத்திவிடுவதற்கான வாய்ப்பிருக்கிறது.

வெறும் 60 இலட்சம் மக்கள்தொகை கொண்ட கத்தாரிடம் இயற்கை எரிவாயு ஏற்றுமதி மூலமாகப் பல நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்கள் குவிந்துகிடக்கிறது. அதன் தினப்படி வருமானமே பல மில்லியன் டாலர்கள் என்கிற நிலையில் கத்தாரிகளின் தலைக்கனம் புரிந்துகொள்ளக் கூடியதுதான். இதன் காரணமாகவே சாதாரண கத்தாரி தலைக்கனம் கொண்டவனாக இருக்கிறான். சாதாரண கத்தாரியே அப்படியென்றால் அவனை ஆள்பவனின் தலைக்கனம் எப்படி இருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

கத்தாரிகளினுடன் எனக்கே கசப்பான அனுபவங்கள் உண்டு. கத்தார் ஏர்லைன்ஸில் பயணம் செய்கைகள் அவர்களுடன் மோதிய அனுபவத்தை ஆங்கிலத்தில் பதிவு செய்தது நினைவுக்கு வருகிறது (The retards of Qatar Airways). வேலைவெட்டி இல்லாதவர்கள் அதனைத் தேடிப்படிக்கலாம்!

இப்போது வெடித்திருக்கும் முன்னாள் இந்திய கப்பல்படையினரின் பிரச்சினைக்கு வருவோம்.

கத்தாரின் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த முன்னால் கப்பல்படையினர் 8 பேர்கள் தங்களை உளவு பார்த்ததாகவும், அதன் காரணமாக அவர்களுக்கு மரண தண்டனை அளிப்பதாகவும் கத்தார் அரசு சொல்லியிருக்கிறது. அது முற்றிலும் பொய்யானது என்பதனை அந்த விவரங்களைப் படிக்கிற எவராலாலும் எளிதாகப் புரிந்துகொள்ள இயலும். முதலில் அந்த 8 இந்திய கப்பல்படையினரும் கத்தாரில் பணிபுரியவில்லை. அவர்கள் மேற்படி நிறுவனத்திற்காக சிங்கப்பூரில் இருந்து வேலை செய்து கொண்டிருந்தார்கள். திடீரென அவர்களைக் கத்தாருக்கு வரவழைத்துக் கைது செய்திருக்கிறார்கள் என்று பார்க்கையில் இது எத்தனைபெரிய ஃப்ராடுத்தனம் என்பது புரியும்.

அதன் பின்னனியில் பாகிஸ்தானியர்கள் இருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. வளைகுடா நாடுகள் அனைத்திலும் பாகிஸ்தானிய முன்னால் ராணுவத்தினரும், ஐ.எஸ்.ஐ.யும் நிறைந்து கிடக்கிறார்கள். சவூதி அரச குடும்பத்துப் பாதுகாவலர்களும் பாகிஸ்தானிகள்தான். கத்தாரின் அத்தனை பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கையாள்பவர்களும் பாகிஸ்தானிகள்தான். அதுவேதான் பிற வளைகுடா நாடுகளிலும். எனவே இந்தியக் கப்பல்படையினர் கைதில் பாகிஸ்தானியர்களின் தூண்டுதல் இருக்கிறது. இதுபோலவே கனடாவிலும் முன்னாள் பாகிஸ்தானிய ராணுவத்தினர் குவிந்து கிடக்கிறார்கள். கனடாவை மறைமுகமாக ஆட்டுவிப்பதும், காலிஸ்தானிகளை வளர்த்துவிடுவதும் அவர்கள்தான்.

இப்படிப் பொய்யான குற்றச்சாட்டுகளை வைத்து இந்திய கப்பல்படையினரைக் கத்தாரிகள் கொல்வார்களா? அப்படிக் கொன்றால் என்ன நடக்கும்?

எனக்கென்னவோ கத்தாரிகள் அப்படிச் செய்யமாட்டார்கள் என்றே நினைக்கிறேன். அப்படிச் செய்தால் அதுவொரு மாபெரும் வரலாற்றுத் தவறாக இருக்கும். தேசப்பற்றுள்ள எந்த இந்தியனும், இந்திய ஆட்சியாளனும் இதனை மன்னிக்கவே மாட்டான் என்பது கத்தாரிகளுக்கும் நன்றாகவே தெரியும். இந்தியா இஸ்ரேலிகளுக்கு அளிக்கும் ஆதரவை விலக்கிக் கொள்ளவேண்டும், பிற நாடுகளில் இருந்து இயற்கை எரிவாயு வாங்குவதனை செய்யக்கூடாது என மறைமுகமாக மிரட்டுவதற்காக கத்தாரிகள் இதனைச் செய்கிறார்கள் என்று எண்ண இடமிருக்கிறது. முன்பே சொன்ன சீன, பாகிஸ்தானிய, கனேடிய, அமெரிக்க நாடுகளும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.

இந்தியாவின் வேண்டுகோளை உதாசீனப்படுத்திவிட்டு கத்தாரிகள் மேற்படி இந்தியர்களைக் கொன்றால் என்ன நடக்கும்?

கத்தார் தனது அன்றாடச் செயல்பாடுகளுக்காக, உணவுக்காக இந்தியாவை எதிர்பார்த்து இருக்கும் ஒரு நாடு. அவர்களிடம் பணம் இருக்கலாம். ஆனால் தின்பதற்குச் சோறு வெளியில் இருந்துதான் வந்தாகவேண்டும். அதுவும் இந்தியாவிலிருந்துதான் வந்தாகவேண்டும் என்பதனை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். கத்தாரிகளுக்குத் தேவையான அரிசியும், கோதுமையும், காய்கறிகளும், இறைச்சியும் இந்தியாவிலிருந்தே இறக்குமதியாகிறது. அதை நிறுத்தினால் கத்தாரி கதற ஆரம்பித்துவிடுவான். இன்றைய நிலைமையில் வேறெந்த நாட்டிலிருந்தும் இத்தகைய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வது கடினம். சீனாவிலும் உணவுக்குப் பற்றாக்குறை, பாகிஸ்தானோ பட்டினி கிடக்கிறது, அமெரிக்காவுக்கும் இந்தியாதான் அரிசி கொடுத்தாக வேண்டும் என்கிற நிலைமையில் கத்தாரிகளின் அன்றாடப் பிழைப்பு நாறிவிடும்.

அதற்கும் மேலாக கத்தாரில் 6 இலட்சம் இந்தியர்கள் பணிபுரிகிறார்கள். கத்தாரின் ஒவ்வொரு அலுவலகமும் இந்தியர்களை நம்பி இருக்கிறது. ஏறக்குறைய 500 இந்திய நிறுவனங்கள் கத்தாரில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவர்கள் அனைவரும் இந்தியாவிற்குத் திரும்பினால் கத்தாரின் நிலை என்னவாகும் என்பதை நீங்களே யோசித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.

WC 2023: ரவுண்டு கட்டிய ரச்சின் ரவீந்திரா!

world cup cricket 2023 - 2026
#image_title

ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
24ஆம் நாள் – இரண்டு ஆட்டங்கள் – 27.10.2023

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

          இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டம் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையே தர்மசலாவில் பகல்நேர ஆட்டமாக நடைபெற்றது. இரண்டாவது ஆட்டம் நெதர்லாந்து, வங்கதேச அணிகளுக்கிடையே கொல்கொத்தாவில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது.

ஆஸ்திரேலியா vs நியூசிலாந்து

          ஆஸ்திரேலிய அணி (49.2 ஓவரில் 388, ட்ராவிஸ் ஹெட் 109, வார்னர் 81, கிளன் மேக்ஸ்வெல் 41, இங்கிலிஸ் 38, பேட் கம்மின்ஸ் 37, மிட்சல் மார்ஷ் 36, போல்ட் 3/77, கிளன் பிலிப்ஸ் 3/37, சாண்ட்னர் 2/80) நியூசிலாந்து அணியை (383/9, ரச்சின் ரவீந்த்ரா 116, டேரில் மிட்சல் 54, ஜேம்ஸ் நிஷம் 58, வில் யங் 32, ஆடம் சாம்பா 3/74, பேட் கம்மின்ஸ் 2/66, ஜோஷ் ஹேசல்வுட் 2/70, மேக்ஸ்வெல் 1/62) 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற நியூசிலாந்து ஆஸ்திரேலிய அணியை மட்டையாடச் சொன்னது. ஆஸ்திரேலியா தனது 50 ஓவர்களில் 388 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர்களே 19 ஓவர்களில் 175 ரன்கள் எடுத்தனர். டிராவிஸ் ஹெட் தனது முதல் உலகக் கோப்பை ஆட்டத்தில் தனது நாட்டின் மூன்றாவது வேகமான உலகக் கோப்பை சதத்தைப் பெற்றார். அவர் கை உடைந்த நிலையில் இருந்து மீண்டு வந்ததால், உலகக் கோப்பை போட்டிகளுக்கான எந்தவித தயாரிப்பும் இல்லாமல் இன்று ஆடவந்தார்.

          உலகக் கோப்பையில் அனைவரும் எதிர்பார்த்த ஆஸ்திரேலியா இதுதான். அவர்கள் உலகக் கோப்பை ஆட்டங்களில் ஆடி வருகிறார்கள் என்ற செய்தி மற்ற அணிகளுக்கு இன்று அனுப்பப்பட்டிருக்கிறது. நல்ல வேளை இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்த்து ஏற்கனவே ஆடிவிட்டது.

          ஹெட் தனது இன்னிங்ஸின் பின் பகுதியில் ஆடுகளம் சுழற்பந்துக்குச் சாதகமாக மாறிக் கொண்டிருப்பதைக் கண்டதாகக் கூறினார். அதனால் நியூசிலாந்து மீண்டும் எழுச்சி பெற்றது. க்ளென் பிலிப்ஸ் தொடந்து 10 பந்துகள் ரன் ஏதும் கொடுக்காமல் வீசினார். மேலும் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இன்னிங்ஸ் முடிந்ததும் ஹெட் மற்றும் க்ளென் மேக்ஸ்வெல் ஆகியோர் பந்து வீசும்போது ஆஸ்திரேலிய அணியின் மொத்த ஸ்கோரை தரும் அழுத்தத்தைவிட அழுத்தம் அதிகமாகி இவரிகளை எதிர்கொள்ள கடினமாக இருப்பார்கள் என ஆடம் சம்பா  கூறினார். 49ஆவது ஓவரில் போல்ட் மூன்று விக்கட்டுகள் எடுத்தார். 48ஆவது ஓவரில் கம்மின்ஸ் நாலு சிக்சர் அடித்தார். இரண்டுமுறை அவரது கேட்ச் தவற விடப்பட்டது. அதற்கு முன்னர் ட்ராவிஸ் ஹெட் தந்த இரண்டு கேட்சுகளையும் நியூசிலாந்து அணி தவறவிட்டது.

          பதிலுக்கு நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் விளையாடி 9 விக்கட் இழப்பிற்கு 383 ரன் எடுத்து 5 ரன்னில் தோல்வியைச் சந்தித்தது. என்ன ஒரு விளையாட்டு! இந்த விளையாட்டைப் பார்த்த அனைவருக்கும் (என்னையும் சேர்த்து) இதயத்துடிப்பு எகிறியிருக்கும். ஆட்டத்தில் நியூசிலாந்து அணி வெற்றிக்காக கடைசி பந்து வரை முயன்றது. 389 ரன்களை எடுக்க அவர்கள் போராடியதே ஒரு கதையைச் சொல்கிறது. இருப்பினும், அவர்கள் வெற்றியைப் பெறத் தயாராக இருந்தபோதும், கூட்டாண்மை வலுவாக இருந்தபோதும் அவர்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்த விதம்தான் அவர்களைத் தோல்விக்குத் தள்ளியது. இதற்கான அத்தனை பெருமையும் ரச்சின் ரவீந்திரா-வைச் சேர்ந்தது. அவர் கிட்டத்தட்ட தனித்து நின்று நியூசிலாந்தை ஒரு அசாத்தியமான வெற்றியின் விளிம்பிற்கு கொண்டு வந்தார். மிட்செலும் அரைசதம் அடித்தார். மற்ற பேட்டர்கள் எவரும் விரும்பிய அளவுக்கு ரவீந்திராவை ஆதரிக்கவில்லை என்ற உண்மையை நியூசிலாந்து அணி வீரர்கள் ஒப்புக்கொள்வார்கள்.

          மறுபுறம், ஆஸ்திரேலியா, எல்லோரையும் விட நிம்மதியாக இருக்கும். குறிப்பாக முதல் இன்னிங்ஸில் 388 ரன்கள் எடுத்தது; ஹேசில்வுட் மற்றும் சாம்பா ஆகியோர் நன்றாகப் பந்துசியது; ஆகியவை அவர்களுக்கு நல்ல பலனைக் கொடுத்தன.  ட்ராவிஸ் ஹெட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

நெதர்லாந்து vs வங்கதேசம்

          நெதர்லாந்து அணி (229, ஸ்காட் எட்வர்ட்ஸ் 68, வெஸ்ஸி பாரேஸி 41, எங்கல்ப்ரக்ட் 35, ஷோரிஃபுல் இஸ்லாம் 2/51, டஸ்கின் அகமது 2/43, முஸ்தஃபிசுர் ரஹ்மான் 2/36, மெஹதி ஹசன் 2/40) வங்கதேச அணியை (42.2 ஓவர்களில் 142, மிராஸ் 35, மகமதுல்லா 20, ரஹ்மான் 20, பால் வான் மீகிரன் 4/23, லீட் 2/25) 87 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற நெதர்லாந்து அணி முதலில் மட்டையாட முடிவுசெய்தது. அந்த அணி 50 ஓவர் முடிவில் 229 ரன்கள் எடுத்தது. ஆரம்ப விக்கெட்டுகளை நெதர்லாந்து அணி இழந்த பிறகு, ஸ்காட் எட்வர்ட்ஸ் மீட்பு பணியை வழிநடத்தினார். வெஸ்லி பாரேசி மற்றும் சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் ஆகியோரும் சிறப்பாகச் செயல்பட்டனர்.. பங்களாதேஷுக்கு அதிகப் பயன்தரும் வகையில் பந்துவீசியவர்கள் வேகப்பந்து வீச்சாளர்கள் தான். தஸ்கின் அகமது மற்றும் ஷோரிஃபுல் இஸ்லாம் ஆகியோர் மீண்டும் பவர்பிளே விக்கெட்டுகளைப் பெற்றனர். அவர்கள் தலா இருவரையும், முஸ்தாபிசுர் ரஹ்மானும் இருவரையும் ஆட்டமிழக்கச் செய்தனர். லோகன் வான் பீக் நெதர்லாந்தின் இன்னிங்ஸை வேகத்துடன் ஆடியபோதிலும் மஹேதி ஹசன் இரண்டு தாமதமான விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

          230 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடதொடங்கிய வங்கதேச அணி ஒரு மோசமான சரிவைச் சந்தித்தது. தொடக்க வீரர்கள் லிட்டன் தாஸ் (3 ரன்), தன்சிட் ஹசன் (15 ரன்) முதல் 6 ஓவருக்குள் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் வந்த ஷண்டோ (9 ரன்), ஷாகிப் (5 ரன்), ரஹீம் (1 ரன்) சொற்ப ரன்னில் ஆட்ட்மிழக்க, அவர்களுடன் நன்றாக ஆடிக்கொண்டிருந்த மிராஸும் (35 ரன்) ஆட்டமிழந்தார். அந்நிலையில் வங்கதேச அணி 6 விக்கட் இழப்பிற்கு 70 ரன் எடுத்திருந்தது. அப்போதே அந்த அணியின் தோல்வி முடிவாகிவிட்டது. அதன் பின்னர் வந்த வீரர்கள் தோல்வியை 43ஆவது ஓவர் வரை தள்ளிப் போட்டனர். இறுதியில் வங்கதேச அணி 142 ரன்னுக்கு ஆடமிழந்து 87 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

          பால் வான் மீகிரன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். புள்ளிப்பட்டியலில் பெரிய மாற்றம் இல்லை. தென் ஆப்பிரிக்கா முதலிடம்; இந்தியா இரண்டாமிடம்; நியூசிலாந்து 3; ஆஸ்திரேலியா 4. நாளை இந்தியா இங்கிலாந்து அணிகள் லக்னோவில் மோதுகின்றன.

கரூர் பசுபதீசுவரர் ஆலயத்தில் அன்னாபிஷேகம்!

தென் தமிழகத்தில், புகழ்பெற்ற, அருள்மிகு அலங்காரவல்லி, சௌந்தரநாயகி உடனுறையும், கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில், அன்னாபிஷேக விழா இன்று நடைபெற்றது. இந்த ஆலயத்தில் உள்ள நாகேஸ்வரர், கரியமாலீஸ்வரர் சுவாமிக்கு, எண்ணெய்க் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேகப் பொடி, விபூதி, பன்னீர் உள்ளிட்ட வாசனைத் திரவியங்களால், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து, கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் வீற்றிருக்கும், நாகேஸ்வரர் கரியமாலீஸ்வரர் சுவாமிகளுக்கு, காய்கறிகள்,பழங்கள், மற்றும் அன்னத்தால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அர்ச்சனையும், கற்பூர ஹாரத்தி, கும்ப ஆரத்தி, நட்சத்திர ஆரத்தி, மகா தீபாராதனை ஆகியவை செய்விக்கப்பட்டன. கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற அன்னாபிஷேக விழாவைக் காண, கரூர், திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பகுதியிகளில் இருந்து, ஏராளமான பக்தர்கள், ஆலயம் வருகை தந்து, சுவாமியை தரிசித்தார்கள்.

தஞ்சை பெருவுடையாருக்கு 1,000 கிலோ அரிசியில் அன்னாபிஷேகம்!

tanjore big temple annabhishekam - 2026
#image_title

தஞ்சாவூர் பெரிய கோவிலில் பெருவுடையாருக்கு 1000கிலோ அரிசியில் அன்னாபிஷேகம்; 900 கிலோ காய், கனியில் அலங்காரம் செய்விக்கப்பட்டது.

உலக பிரசித்தி பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில், லிங்கம் 12 அடி உயரமும், ஆவுடையார் 54 அடி சுற்றளவும் கொண்ட ஒரே கல்லால் உருவாக்கப்பட்ட பிரமாண்டத் திருமேனியாகத் மூலவரான பெருவுடையார் திகழ்கிறார்.

பெருவுடையாருக்கு ஐப்பசி பெளர்ணமி தினத்தில் அன்னாபிஷேகம் நடைபெறும். இந்தாண்டு பக்தர்களால், 1,000 கிலோ பச்சரிசி, 900 கிலோ காய்,கனி வழங்கப்பட்டன. பக்தர்கள் வழங்கிய அரிசியை சாதமாக தயார் செய்து, பெருவுடையார் திருமேனி முழுவதும் சாத்தப்பட்டு, காய்கறிகள், பழங்கள், வகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு, அன்னாபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து, லிங்கத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட அன்னம் பக்தர்களுக்கும், கால்நடைகளுக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தானம், ஹிந்து சமய அறநிலையத்துறையினர் செய்து இருந்தனர். மேலும், இரவு சந்திரகிரஹனம் என்பதால், இரவு 7:00 மணி வரை பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு, பின்னர் இரவு 8:00 மணிக்கு நடை சாத்தப்பட்டது.

சபரிமலை: 2024ம் ஆண்டு கோயில் நடை திறப்பு அடைப்பு நாட்கள் விவரம்!

sabarimala new year eve - 2026
#image_title

2024 ஆம் ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கும், அடைக்கும் நாட்கள்
எண் – விழாவின் பெயர் – கோயில் நடை திறப்பு மாலை 5.30 மணி – கோயில் நடை அடைப்பு இரவு 10.30 மணி

1.மண்டல கால பூஜை — 16.11.2023 — 27.12.2023
2.மகர விளக்கு விழா — 30.12.2023 — 20.01.2024
3.மகர விளக்கு நாள் — 15.01.2024 —
4.மாசி மாத பூஜை – கும்பம் (பிப்ரவரி) 13.02.2024 — 18.02.2024
5.பங்குனி மாத பூஜை – மீனம் (மார்ச்) — 13.03.2024 — 18.03.2024
6.உத்திர விழா — 15.03.2024 — 25.03.2024
7.கொடியேற்றம் — 16.03.2024
8.பங்குனி உத்திரம் & ஆராட்டு — 25.03.2024
9.சித்திரை மாத பூஜை -மேடம் (ஏப்ரல்) — 10.04.2024– 18.04.2024
10.சித்திரை விஷூ — 14.04.2024
11.வைகாசி மாத பூஜை – ஏடவம் (மே) — 14.05.2024 — 19.05.2024
12.பிரதிஷ்டை தின விழா — 18.05.2024 — 19.05.2024
13.ஆனி மாத பூஜை – மிதுனம் (ஜுன்) — 14.06.2024 — 19.06.2024
14.ஆடி மாத பூஜை – கற்காடகம் (ஜூலை) — 15.07.2024 — 20.07.2024
15.ஆவணி மாத பூஜை – சிங்கம் (ஆகஸ்டு) — 16.08.2024 — 21.08.2024
16.திருவோண பூஜை (ஓணம் பண்டிகை) — 13.09.2024 — 17.09.2024
17.புரட்டாசி மாத பூஜை – கன்னி (செப்டம்பர்) — 16.09.2024 21.09.2024
18.ஐப்பசி மாத பூஜை – துலாம் (அக்டோபர்) — 16.10.2024 — 21.10.2024
19.சித்திரை ஆட்ட திருநாள் — 30.10.2024 — 31.10.2024
20.மண்டல கால பூஜை – விருச்சிகம் (நவம்பர்) — 15.11.2024 26.12.2024
21.மண்டல பூஜை (டிசம்பர்) — 26.12.2024
22.மண்டல பூஜை முடிந்து நடை திறப்பு — 30.12.2024
23.அடுத்த மகர விளக்கு –14.01.2025

கங்கைகொண்ட சோழபுரத்தில் அன்னாபிஷேகம்! பக்தர்கள் பெருமளவில் பங்கேற்பு!

gangaikondachozhapuram annabhishekam
#image_title

கங்கைகொண்ட சோழபுரத்தில் கோவில்கொண்டு அருள்பாலிக்கும், அருள்மிகு, பிரஹந் நாயகி அம்பாள் உடனுறை அருள்மிகு பிரஹதீஸ்வர ஸ்வாமிக்கும், மேலும் சில சிறு கிராம சிவன்கோவில்களுக்கும், காஞ்சி மஹா பெரியவர்களின் அனுக்கிரஹம் மற்றும் வழிகாட்டுதலின்படி அன்னாபிஷேகத் தொண்டு நடைபெற்று வருகிறது. 

1985ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்புனித அன்னாபிஷேகக் கைங்கர்யம் உலகம் முழுவதும் உள்ள காஞ்சி காமகோடி மடத்தின் பக்தர்களாலும், எங்கும் நிறைந்துள்ள சிவனடியார்களாலும், உள்ளூர் மற்றும் அருகிலுள்ள கிராம மக்களாலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது . இளைய தலைமுறை உறுப்பினர்களையும் சேர்த்து, குழு ஒன்று அமைக்கப்பட்டு, கடந்த 38 வருடங்களாக இந்த அன்னாபிஷேகக் கைங்கர்யம், பக்தி சிரத்தையுடன் நடத்தப்பட்டு வருகிறது.

அன்பர்களிடம் இருந்து தேவையான உதவிகளைப் பெற்று, 62 அடி சுற்றளவும் பதிமூன்றரை அடி உயரமும் கொண்டு, ஒரே கல்லில் செதுக்கப்பட்ட இந்தப் புனித மஹா சிவலிங்கத்திற்கு முழுவதுமாக அன்னாபிஷேகம் செய்யப் படுகிறது. மேலும் ஆண்டு முழுவதும் நடக்க வேண்டிய ஸ்வாமி நைவேத்தியம், மற்றும் சிவ கைங்கர்யங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  கங்கை கொண்ட சோழபுரத்தில் பெரியவர்களின் கட்டளைப்படி நடைபெறும் வேதாகம பாடசாலை பராமரிப்பு அன்னாபிஷேகத்தை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு உணவிடுதல் ஆகியவையும் இந்த அன்னாபிஷேகக் கமிட்டியின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. 

சோபக்ருது வருஷம், ஐப்பசி மாதம் 11ம்  நாள், சனிக்கிழமை, அக்.28ம் தேதி, அஸ்வினி நட்சத்திரம் கூடிய பௌர்ணமியில், 39ம் வருஷ அன்னாபிஷேகம்  நடைபெறுகிறது.  அக்.28,29 ஆம் தேதிகளில், அதாவது வரும் சனி, ஞாயிறு இரவு சந்திர கிரஹணம் 1 மணி 5 நிமிடத்திற்கு ஆரம்பிப்பதால் , ஆகம விதிகளின்படி மஹா தீபாராதனை மாலை 5 மணிக்கு இந்த வருடம் மாற்றப்பட்டுள்ளது. இந்த சோபக்ருது  வருட பூஜை ஏற்பாடுகளின்படி, அக்.26ம் தேதி, வியாழக்கிழமை காலை 8 மணிக்கு  ஸ்ரீ கணக்கு விநாயக ஸ்வாமிக்கு ஹோமம் , அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. 

அக்.27, வெள்ளி, காலை 9 மணிக்கு பிரஹந்நாயகி அம்பாளுக்கும் ப்ரஹதீஸ்வர ஸ்வாமிக்கும், துர்கை மங்களசண்டி தேவிக்கும், மஹா அபிஷேகம் நடைபெற்றது. மதியம் 1 மணி அளவில், நைவேத்திய பிரசாத விநியோகம் நடைபெற்றது.  மாலை, குபேர லட்சுமி திருவிளக்கு பூஜை, நவாவரண பூஜை நடைபெற்றது. 

அக்.28 இன்று காலை 9 மணிக்கு முன் தொடங்கி,  ப்ரஹதீஸ்வர ஸ்வாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது.  இன்று மாலை 5 மணிக்கு மஹா தீபாராதனையும் இரவு ஸ்வாமி அன்னத்தைக் கலைத்து பக்தர்களுக்கு அன்னப் பிரசாதமும் வழங்கப்பட்டது.

அக்.29 ஞாயிறு நாளை, உத்ராபிஷேகம் காலை 9 மணி அளவில், ஸ்வாமிக்கு நடைபெறும். பின்  சண்டிகேஸ்வர பூஜையுடன் பிரசாத விநியோகம் நடைபெறும்.

சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடத்தப் படுவது ஏன்?

gangaikondachozhapuram annabhishekam
#image_title

அன்னாபிஷேகம் நடத்துவது ஏன்?


கல்லினுள் தேரை முதல் கருப்பை உயிர்வரை எண்ணாயிரம் கோடி உயிர்களுக்கு உணவு அளிப்பவன் ஈசன். அதனை நினைவுகூர்ந்து நன்றி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஐப்பசி மாத பௌர்ணமி நாளில் எல்லா சிவாலயங்களிலம் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. சிவலிங்கத்தை அன்னத்தினால் முழுமையாக மூடி ஆராதனைகள் செய்வதையே அன்னாபிஷேகம் என்கிறோம். அதை ஏன் ஐப்பசி மாத பௌர்ணமியில் செய்ய வேண்டும்? மற்ற மாதங்களில் செய்யலாமே?

ஐப்பசி மாதப் பௌர்ணமிக்கு ஒரு சிறப்பு உண்டு. அன்றுதான் சந்திரன் தனது சாபம் முழுமையாகத் தீர்ந்து பதினாறு கலைகளுடன் முழுப் பொலிவுடன் திகழ்கிறான்.

ஐப்பசி பௌர்ணமி நாளன்று அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் எனப்படும் சிறப்பு வழிபாடு லிங்க மூர்த்திக்கு நடத்தப்படுகிறது. அனைத்து உயிர்களுக்கும் அன்னமான உணவை அளித்துப் பாதுகாக்கும் சிவபெருமானுக்கு சுத்தமாக சமைக்கப்பட்ட சாதத்தால் இறைவனை அலங்கரிப்பது இதன் சிறப்பம்சமாகும்.
“அன்னம் பரப்பிரம்மம்” என்பர். உணவை இறைவனாகப் பார்க்கிறது ஆன்மிகம். உடலை வளர்ப்பதுடன், உள்ளத்தையும் வளர்ப்பது அன்னம் தான். இதனால் தான், ஐப்பசி பவுர்ணமி அன்று, சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடத்தப் படுகிறது.

திங்கள் முடிசூடியவருக்கு, மதி முழுமையான ஒளியுடன் இருக்கும் நாளில் சிறப்பு வழிபாடு செய்வதுதானே சிறப்பு!
ஆன்மிக ரீதியாக மட்டுமன்றி அறிவியல் ரீதியாகவும் இதற்கு ஆதாரம் இருக்கிறது. ஐப்பசி மாதத்தில்தான் நிலவு, பூமிக்கு மிக அருகில் வந்து தனது முழு ஒளியையும் பூமியை நோக்கி வீசுகிறது என்கிறது வானவியல். நவகிரகங்களில் சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி. இதை உணர்ந்த நமது ரிஷிகள் அந்த மாதத்தில் அன்னாபிஷேகம் செய்வது சிறப்பு என்று கண்டறிந்து அதனை நடைமுறைப்படுத்தினார்கள்.


அன்னாபிஷேகத்தின் சிறப்புகள்:


அம்பிகை பாகன் சதா அபிஷேகப் பிரியர். அதனால் அவருக்குப் பதினொரு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்வது வழக்கம். அவை தூய நீர், பசும்பால், இளநீர், கருப்பஞ்சாறு, சந்தனம், விபூதி, தயிர், பஞ்சாமிர்தம், மாப்பொடி, மஞ்சள், அன்னம் ஆகியன. இவற்றுள் மிகச் சிறப்பானது அன்னாபிஷேகமே.

அன்னம் பிராணன் என்றும், அஹமன்னம் எனவும் வேதங்கள் போற்றுகின்றன. ஒருவன் எத்தகைய உணவு உண்கிறானோ அதைப் பொறுத்தே அவனது மனம் இருக்கும் என்கின்றன நமது உபநிடதங்கள்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த அன்னத்தை கொஞ்சம் கூட வீணாக்கலாகாது என்பதை உணர்த்தவும், அன்னத்தின் தெய்வீகத் தன்மையை எடுத்துக் காட்டவுமே அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

அது மட்டுமல்ல, நமது பேரண்டம் நிலம், நீர், ஆகாயம், காற்று, நெருப்பு என்னும் பஞ்ச பூதங்களால் ஆனது. அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் என்ற திருமூலர் வாக்குப்படி நமது உடலும் பஞ்சபூதங்களுக்கும் தலைவன் சிவபிரான்.

அந்தப் பஞ்சபூதங்களை சரியான வகையில் செயல்படச் செய்து, உயிர்களுக்கு உணவும் நீரும் குறைவின்றிகிட்ட அருள் செய்த ஈசனுக்கு நன்றி சொல்லும் வகையிலும், நாட்டிலும் வீட்டிலம் எக்காலத்திலும் உணவுப் பஞ்சம் வராமல் இருக்கவும் இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்தினர்.

அன்னம் என்பது பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் உண்டாவது நிலத்தில் விழும் நெல், ஆகாயத்திலிருந்து பெய்யும் மழை நீரின் உதவியால் வளர்ந்து, காற்றினால் கதிர்பிடித்து, சூரியனின் வெப்பத்தீயினால் பால் இறுகி விளைச்சலைத் தருகிறது.

காற்றின் உதவியுடன் கதிரடித்து எடுக்கப்படும் நெல், உமி நீக்கப்பட்டு அரிசியானபின் மண்ணால் ஆன பானையில் நீரில் இடப்பட்டு, காற்றின் துணையால் எரியும் நெருப்பில் வெந்து, அன்னமாகி ஆகாயத்தின் கீழுள்ள அனைத்து உயிர்களுக்கும் உணவாகிறது. அந்த அன்னத்தினால் செய்யப் படுவதால் தான், அன்னாபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகப் போற்றப்படுகிறது.


ஐப்பசி மாத முழுநிலவு நாளில் முதலில் ஐந்து வகைப் பொருட்களால் இறைவனுக்க அபிஷேகம் செய்து, பின்னர் நன்கு வடித்து ஆறவைத்த அன்னத்தைக் கொண்டு (தேவையானால் சற்று நீர் கலந்து) அன்னாபிஷேகம் செய்யப்படும். சமீபகாலமாக அன்னாபிஷேகத்தின் போது அப்பம், வடை உள்ளிட்ட பலகாரங்களையும் காய்கறி, கனி வகைகளையும் கொண்டு அலங்காரம் செய்வது வழக்கமாயிருக்கிறது.

சிவலிங்கத் திருமேனியின் மேலிருந்து அன்னத்தை வைத்துக் கொண்டே வருவார்கள். சிவலிங்கத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்கிறார்கள். கீழ்ப்பகுதி, பிரம்ம பாகம். நடுப்பகுதி, விஷ்ணு பாகம். இதுவே ஆவுடை. மேற்பகுதி பாணம், சிவபாகம். அன்னாபிஷேகம் சிவலிங்கத் திருமேனியின் எல்லா பாகங்களுக்குமாக முழுமையாகவே செய்யப்படும்.

இந்த அபிஷேகம் மட்டும்தான் இரண்டு நாழிகை நேரம், அதாவது கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் அப்படியே வைக்கப்பட்டிருக்கும். அந்தச் சமயத்தில் யஜுர் வேத பாராயணமும், ருத்ரம், சமகம் போன்ற மந்திரங்களின் பாராயணமும் நடைபெறும்.

நாழிகை நேரம் முடிந்த உடன் அன்னத்தை அகற்றி விடுவார்கள். பின்னர் மீதமிருக்கும் ஐந்து வகைப் பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடைபெறும்.
லிங்கத்தின் ஆவுடையிலும் பாணத்தின் மீதும் சாத்தப்பட்ட அன்னம் மிகவும் கதிர்வீச்சுடன் இருக்கும். எனவே அதனை எவரும் உண்ணாமல் அப்படியே எடுத்துச் சென்று கோயில் குளத்திலோ இல்லை ஆற்றிலோ கொண்டு கரைப்பார்கள். நீர்வாழ் உயிர்களுக்கு உணவு!

நமது இந்து மதம் எப்போதும் மனிதனை மட்டுமே முன்னிறுத்தி எதையும் இறைவனிடம் வேண்டுவதில்லை. எல்லா உயிரினங்களும் வாழ வேண்டும். அவ்வாறு வாழ்ந்தால் தான் மனிதனுக்குத் தேவையான உணவு தடையின்றிக் கிடைக்கும் என்பதை இயற்கையின் சமன்பாட்டு விதியை நன்கு அறிந்திருந்தனர் நம் முன்னோர்.
அதனால்தான் அன்னாபிஷேகப் பிரசாதம் நீரில் வாம் புழு, பூச்சிகள், மீன்கள், மற்ற நீர் வாழ் உயிரினங்கள் எல்லாமும் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கம் கொண்டு நீரில் கரைக்கப்படுகிறது.

நல்ல அதிர்வுகளும், உடலுக்குத் தேவையான கதிர் வீச்சுகளும் நிறைந்திருக்கும் பிரும்ம பாகத்தில் சாத்தப்பட்ட அன்னம் மனிதர்களுக்கே அளிக்கப்படுகிறது. ஏனெனில் அவற்றைத் தாங்க சிறு உயிர்களால் முடியாது என்ற ஜீவகாருண்யமே காரணம்.

பக்தர்களுக்கு பிரசாதமாக வினியோகிக்கப்படும் அன்னத்தில் சில கோயில்களில் தயிர் சேர்த்துக் கொடுக்கப்படுகிறது. இந்தப் பிரசாதத்தை உண்டால் நோய் நொடிகள் வராது, குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதிகம்.


சோற்றுக்குள் சொக்கன்


‘சோறுதான் சொக்கநாதர்’ ‘சோறுகண்ட இடம் சொர்க்கம்’ என்று இன்றும் மக்கள் சொல்வதுண்டு. நாம் உண்ணும் அன்னமே ஆண்டவன். அவனே இதில் இருக்கிறான். நமக்கு படியளப்பவன். சிவலிங்கத்தின் மீது வடித்த சாதத்தை அப்பிவைத்து, பல வித காய்கள் கனிகள் எல்லாம் அலங்காரம் செய்து வைப்பார்கள். ருத்ரம் சமகம் பாராயணம் செய்தபின், தீபாராதனைக் காட்டுவார்கள்.
சிவலிங்கத்தின் மேல் பகுதியில் இருக்கும் அன்னத்தைப் பிரித்து குளத்தில் மீன்களுக்கும், பட்சிகளுக்கும், பசுவுக்கும் கொடுத்தபின், எஞ்சிய அடிபாக அன்னத்தை நமக்கு பிரசாதமாக விநியோகம் செய்வார்கள்!

ஈசனை அன்னாபிஷேகத்தில் வழிபட்டால் உணவுக்கு குறைவின்றி படியளப்பான். நேரில் தரிசிக்க முடியாதவர்கள் அன்னாபிஷேக ஈசனை மனதில் எண்ணிக்கொள்ளுங்கள். (பிட்சாண்டார்) ஈசனுக்கே படியளந்த அன்னபூரணியின் ஆசிகள் கிட்டும்.

மாமன்னன் ராஜராஜ சோழன் தஞ்சை பெரியகோயிலைக் கட்டியபோது அன்னாபிஷேகத்தைத் தொடங்கி வைத்தான் என்பது கல்வெட்டில் உள்ளது.


ஐப்பசி பௌர்ணமி: இன்று சிவாலயங்களில் அன்னாபிஷேகம்!

annabhishekam
#image_title

மதுரை கோயில்களில் அக். 28 இன்று ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.

மதுரை மாவட்டத்தில் உள்ள கோயில்களில், அக்டோபர் 28-ஆம் தேதி சனிக்கிழமை ஐப்பசி பௌர்ணமி முன்னிட்டு, அன்ன அபிஷேகம் நடைபெறும். இன்று சந்திரகிரகணம் இருப்பதால், மாலை 6 மணிக்கு பெரும்பாலான கோயில்களில் திருநடை சாற்றப்படும். எனவே முன்னதாகவே தீபாராதனை நடைபெறும்.

ஆண்டுதோறும் ஐப்பசி பௌர்ணமி அன்று, கோயில்களில் சிவபெருமானுக்கு பக்தர்கள் அன்னாபிஷேகம் செய்வது வழக்கம்.

அதன்படி, மதுரை மாவட்டத்தில் உள்ள மீனாட்சி சுந்தரேச திருக்கோவில், தெப்பக்குளம் முத்தீஸ்வரர், இம்மையில் நன்மை தருவார் ,பழைய சொக்கநாதர் ,மதுரை அருகே சோழவந்தானில் விசாக நட்சத்திரமாக விளங்கும் சிவன் ஆலயம், திருவேடகம் ஏடகநாதர் சுவாமி ஆலயம், தென்கரை மூலநாத சுவாமி ஆலயம், அவனியாபுரம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம், திருமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம், மதுரை தாசில்தார் நகர் சித்தி விநாயகர் ஆலயம், சௌபாக்கிய விநாயகர் ஆலயம், அண்ணா நகர் சர்வேஸ்வர ஆலயம், வைகை காலனி வைகை விநாயகர் ஆலயம், மதுரை சாத்தமங்கலம் ஆவின் பால விநாயகர் ஆலயம் உள்ளிட்ட கோயில்களில் சிவபெருமானுக்கு , பால் , இளநீர் போன்ற அபிஷேக திரவியங்களால், சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு , அதைத் தொடர்ந்து அன்னாபிஷேகம் நடைபெறும் .

இதை அடுத்து பக்தர்களுக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதம் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகிகள் மற்றும் ஆன்மீக மகளிர் குழுவினர் செய்து வருகின்றனர்.