Home Blog Page 5608

10 பேரை மணந்த பெண் மண மேடையில் கைது

temple marriage - 2026

திருவனந்தபுரம்:

மணமேடையில் வைத்து மணப்பெண் கைது செய்யப்பட்டதும், அவர் 10 பேரை திருமணம்
செய்து ஏமாற்றியது தெரியவந்ததும் கேரளாவில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், கொட்டாரக்கரைப்பகுதியை சேர்ந்தவர் ஷாலினி
(வயது 32). இவர், சமீபத்தில் கணவனை இழந்த பெண்ணுக்கு மணமகன் தேவை என்று
விளம்பரம் செய்து இருந்தார். இந்த விளம்பரத்தை பந்தளத்தை சேர்ந்த இளைஞர்
ஒருவர் பார்த்து ஷாலினியை தொடர்புகொண்டு பேசினார்.

அப்போது தான் பெங்களூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து
வருவதாகவும், முதல் கணவர் இறந்து விட்டதால் மறுமணம் செய்துகொள்ள
முடிவெடுத்திருப்பதாகவும் விரைவில் கேரள ஐகோர்ட்டில் வேலை கிடைக்க
இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் தனக்கு உறவினர்கள் மிகக் குறைவு என்றும் தெரிவித்துள்ளார்.
ஷாலினியை மணமுடிக்க எண்ணிய அந்த இளைஞர் திருமணத்துக்கான ஏற்பாடுகளை செய்தார்.

நேற்று காலை பந்தளம் அருகே ஒருகோயிலில் திருமணத்திற்கான ஏற்பாடுகள்
செய்யப்பட்டிருந்தன. மணமக்களின் நெருங்கிய உறவினர்கள் வந்திருந்தனர். மணப்பெண் அலங்காரத்தில் ஷாலினி கோயிலுக்கு வந்தார்.

மணமகன் சார்பில் திருமணத்துக்கு வந்திருந்த ஒருவருக்கு ஷாலினியைப் பார்த்ததும்
அதிர்ச்சியானது. தனது நண்பரை திருமணம் செய்துகொண்டு சில நாட்களிலேயே
தலைமறைவாகிவிட்ட பெண்மணி இவர் என்று சந்தேகித்திருக்கிறார்.
உடனே நண்பரை செல்போனில் தொடர்பு கொண்டு விவரத்தைக் கூறினார். நண்பரும் அங்கு விரைந்து வந்தார். மணக்கோலத்தில் ஷாலினி, தன்னை திருமணம் செய்துகொண்டு தலைமறைவானவர்தான் என்பதை உறுதிப்படுத்தினார். உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

விரைந்து வந்த போலீசார், மண மேடையில் இருந்த ஷாலினியை கைது செய்தனர்.
அவரிடம் காவல்துறையினர் விசாரித்தபோது, இதுவரை 10 பேரை ஏமாற்றி திருமணம்
செய்துகொண்டிருப்பதாகவும், திருமணம் முடிந்த சில நாட்களில் நகைகளுடன்
தலைமறைவாவது வழக்கம் என்றும் தெரிவித்தார். ஒரு பெண், பத்து ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்துகொண்ட சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

குடியரசுத் தலைவர் வேட்பாளர்: போட்டியில் எதிர்க்கட்சிகள்!

ramnath govind modi - 2026

புது தில்லி:

வரும் ஜூலை 17 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் தே.ஜ.கூட்டணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த். அவரது பெயரை பாஜக.,வின் உயர்நிலைக் கூட்டத்தில் அறிவித்தார் பிரதமர் மோடி. பின்னர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார் அமித் ஷா.

வேட்பாளர் அறிவிப்புக்குப் பிறகு காங்கிரஸ் தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது, குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று அவர்களிடம் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில், பாஜக., தன்னிச்சையாக வேட்பாளரை அறிவித்துள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. குடியரசுத் தலைவர் வேட்பாளர் யார் என்று கூறாமலேயே ஒப்புக்கு பாஜக., தரப்பு எதிர்க்கட்சிகளுடன் பேசியதாக விமர்சித்துள்ளன. எனவே, கருத்து ஒற்றுமை அடிப்படையில் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது.

பாஜக அறிவித்துள்ள குடியரசுத் தலைவர் வேட்பாளர் விவகாரத்தில் கருத்தொற்றுமை ஏற்பட வாய்ப்பில்லை என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், “
குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளர் குறித்து அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் விரும்பியது. ஆனால், பாஜக தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளது. ஆளும் கட்சியாக இருப்பவர்கள் முதலில் பிற கட்சிகளுடன் வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசித்திருக்க வேண்டும். ஆனால், பாஜக தங்கள் கட்சிக் கூட்டத்தை நடத்தி வேட்பாளரை அறிவித்துவிட்டது. அவர்கள் இப்படி செயல்படுவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எனவே, வேட்பாளர் குறித்த முடிவில் கருத்தொற்றுமை ஏற்பட வாய்ப்பு இல்லை.

அனைத்து எதிர்க்கட்சிகளும் பங்கேற்கும் கூட்டம் வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இதில் இறுதி முடிவு எடுக்கப்படும்” என்று கூறினார்.

இத்தகைய சூழலில், குடியரசுத் தலைவர் வேட்பாளர் விவகாரத்தில் போட்டி ஏற்படும் என்று தெரிகிறது. போட்டி உறுதி எனத் தீர்மானம் செய்யப்பட்ட நிலையில், எதிர்க்கட்சியினர் தரப்பில் இருந்து யாரைத் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள் என்பது, வரும் 22ஆம் தேதி வியாழக்கிழமை கூட்டத்துக்குப் பின் தெரியவரும். இருப்பினும், அக்கட்சியின் சார்பில் மக்களவை முன்னாள் சபாநாயகர் மீராகுமாரை காங்கிரஸ் கட்சி களம் இறக்கலாம் எனக் கூறப்படுகிறது.

தலித் சமூகத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவர் வேட்பாளராகத் பாஜக., வால் முன்னிறுத்தப் பட்டதன் மூலம், தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை ராம்நாத்துக்கு போட்டியாக களம் இறக்க வேண்டிய சூழல் காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தலித் சமூகத்தை சேர்ந்த மக்களவை முன்னாள் சபாநாயகர் மீரா குமார் எதிர்க்கட்சிகள் சார்பில் களம் இறக்கப்படலாம் என்று தெரிகிறது.

ராம்நாத் கோவிந்த்தை பாஜக வேட்பாளராக அறிவித்தது குறித்து கருத்து தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, “தன்னிச்சையாக வேட்பாளரை அறிவித்ததன் மூலம் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக., ஒரு போட்டியை ஏற்படுத்திவிட்டது” என்று கூறினார்.

எதிர்க்கட்சிகள் ஆதரவைக் கோருவேன்: ராம்நாத் கோவிந்த்

ram nath kovind - 2026

புது தில்லி:

பாஜக., சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராமநாத் கோவிந்த், எதிர்க்கட்சிகளின் ஆதரவைக் கோருவேன் என்று கூறியுள்ளார்.

பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோரை சந்திக்க திங்கள்கிழமை தில்லி சென்ற ராம்நாத் கோவிந்த், செய்தியாளர்களிடம் பேசியபோது, “குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து ஆதரவு கோருவேன். எனக்கு அனைவரும் ஆதரவளிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என்று கூறினார்.

குடியரசுத் தலைவர் வேட்பாளராக தம்மை பாஜக தலைமை அறிவித்த சில நிமிடங்களில் ராம்நாத் கோவிந்த் தில்லிக்கு விரைந்தார். பிரதமர் மோடியை சந்தித்து, நன்றி தெரிவித்த அவர், பின்னர் அமித் ஷாவின் இல்லத்துக்கும் சென்றார்.

சுமார் ஒரு மணி நேரம் அவரிடம் பேசிக் கொண்டிருந்த ராம்நாத் கோவிந்த், பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதித்தார்.

அதன் பின்னர், ராம்நாத் கோவிந்த் செய்தியாளர்களிடம் பேசியபோது, “சாமானிய மனிதனான நான் தற்போது மிகப் பெரிய பொறுப்புக்கு முன்னிறுத்தப் பட்டுள்ளேன். இந்த வாய்ப்பை வழங்கியதற்காக அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மக்கள் பிரதிநிதிகள், முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், என அனைவரையும் சந்தித்துப் பேசி, அனைவரிடமும் ஆதரவு கோரத் திட்டமிட்டுள்ளேன்.நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களும் குடியரசுத் தலைவர் தேர்தலில் எனக்கு ஆதரவாக இருப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என்று கூறினார்.

பாஜக., குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்: வாழ்க்கைக் குறிப்பு

புது தில்லி:

வரும் ஜூலை 17 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் தே.ஜ.கூட்டணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த். இவர், 12 ஆண்டுகள் எம்.பி.யாக பதவி வகித்தவர்.

1945 அக்டோபர் 1ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம், தேராபூர் தாலுகா பராங்க் கிராமத்தில் ஹரிஜனக்(தலித்) குடும்பத்தில் பிறந்தார். பள்ளி, கல்லூரி நாட்களில் பிற்படுத்தப்பட்டோர், தலித் மற்றும் பழங்குடியினர், சிறுபான்மையினர் மேம்பாட்டுக்காகக் குரல் எழுப்பியவர். இது தொடர்பான போராட்டங்கள் பலவற்றில் ஈடுபட்டவர். அவரது தொய்வற்ற போராட்டங்களினால், ’நலிவடைந்தோரின் காப்பாளர்’ என்றே அவரை இங்குள்ளவர்கள் அழைத்தனர்.

கான்பூர் பல்கலைக்கழகத்தில் பி.காம்., எல்.எல்.பி.(வக்கீல்) பட்டம் பெற்றவர். 1971ல் தில்லி பார் கவுன்சிலில் வழக்குரைஞராகப் பதிவு செய்தார். இதனிடையே சிவில் சர்வீஸ் தேர்வில் 3வது முறையாக எழுதி தேர்ச்சி பெற்றார்.

1977ம் ஆண்டு முதல் 1979ம் ஆண்டு வரை தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றினார். 1980 முதல் 1993 வரை மத்திய அரசின் வழக்குரைஞராக உச்ச நீதிமன்றத்தில் பணி புரிந்தார். எஸ்.சி., எஸ்.டி.யினர் நலனுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு, சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் நாடாளுமன்ற நிலைக்குழு உள்ளிட்ட பல நிலைக்குழுக்களில் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

1977ல் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தொழிலாளர் நலன்களுக்கு எதிராக மத்திய அரசு சில கடுமையான உத்தரவுகளை பிறப்பித்தபோது, அதை எதிர்த்து தீவிர போராட்டத்தில் ஈடுபட்டார்.

லக்னோ டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழக நிர்வாக வாரிய உறுப்பினர், கொல்கத்தா ஐ.ஐ.எம். நிறுவன அரசு நிர்வாகக் குழு உறுப்பினர் என பொறுப்புகளை வகித்தவர் இவர்.

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக, உத்தரப் பிரதேசத்தில் இருந்து தொடர்ச்சியாக இரு முறை 1994-2000 மற்றும் 2000-2006 ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டு 12 ஆண்டுகள் எம்.பி.யாக பணியாற்றினார். தன் எம்.பி. பதவி காலத்தில் உத்தரப் பிரதேசம், ஜார்கண்ட் மாநில கிராமப்புற கல்வி வளர்ச்சிக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியை முழுமையாகப் பயன்படுத்தியுள்ளார்.

தலித், பழங்குடியினர், நலிவடைந்தோர், பெண்களுக்கு தில்லி இலவச சட்ட உதவி மையத்தின் மூலம் சட்ட உதவிகளையும், ஆலோசனைகளையும் வழங்கி வரும் இவர், ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர். தடாலடி அரசியலில் ஈடுபடாதவர். பா.ஜ.க., தலித் மோர்ச்சா அமைப்பு தலைவராக 1998 முதல் 2002ம் ஆண்டு வரை பணியாற்றியவர். அகில இந்திய கோலி சமாஜ் தலைவராகவும், பா.ஜ.க.,வின் தேசிய செய்தி தொடர்பாளராகவும் பதவி வகித்தவர்.

2002ல் இந்திய பிரதிநிதியாக ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். எம்.பி.யாகப் பதவி வகித்த காலத்தில் தாய்லாந்து, நேபாளம், பாகிஸ்தான், சிங்கப்பூர், ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்த், பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா முதலிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டவர். கடந்த 2015 ஆகஸ்டு 8ல் பீகார் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார்.

71 வயதாகும் ராம்நாத் கோவிந்த்துடன் மனைவி சவீதா, மகன் பிரசாந்த் குமார், மகள் சுவாதி ஆகியோர் உள்ளனர்.

குடியரசுத் தலைவர் தேர்தல்: பாஜக., வேட்பாளராக பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்தை அறிவித்தார் மோடி!

ramnath govind modi amit sha - 2026

புது தில்லி:

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக., வேட்பாளராக பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்தை அறிவித்தார் பிரதமர் மோடி. தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக முன்னிறுத்தியதன் மூலம், அந்த சமூகத்தின் ஆதரவைப் பெற பாஜக., மேலும் குறியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

வரும் ஜூலை 17ம் தேதி இந்திய குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் போட்டியிட பாஜக., வேட்பாளராக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், ஜார்கண்ட் மாநில ஆளுநர் திரவுபதி முர்மு, கேரள மாநில ஆளுநர் பி.சதாசிவம் ஆகியோருடைய பெயர்கள் அக்கட்சியின் சார்பில் பரிசீலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் எவரும் எதிர்பாராதபடி, பீகார் மாநில ஆளுநராகப் பதவி வகித்து வரும் ராம்நாத் கோவிந்த்(வயது 71) பெயரை அறிவித்தார் பிரதமர் மோடி.

தில்லியில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தலைமையில் அக்கட்சியின் ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் திங்கள்கிழமை காலை 2 மணி நேரம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, மூத்த அமைச்சர்கள், கட்சியின் மூத்த தலைவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் ராம்நாத் கோவிந்த் பெயர் முடிவு செய்யப்பட்டது. இதனை பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமித் ஷா தெரிவித்தார்.

ராம்நாத் கோவிந்த், வரும் 23 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனுவைத் தாக்கல் செய்வார் என்று கூறப்படுகிறது.

முன்னதாக, நாட்டின் மிக உயரிய குடியரசுத் தலைவர் பதவியில், 1997 முதல் 2002 வரை தலித் சமூகத்தைச் சேர்ந்த கே.ஆர்.நாராயணன் பதவி வகித்தார். அவருக்குப் பிறகு, தலித் சமூகத்தைச் சேர்ந்த இரண்டாவது நபராக ராம்நாத் கோவிந்த் பதவி வகிப்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

எதிர்க்கட்சியினர் விமர்சனங்களுக்கு முற்றுப் புள்ளி!

பாஜக வேட்பாளராக ஆர்.எஸ்.எஸ்., அமைப்பைச் சேர்ந்த தீவிர இந்துத்துவப் பின்னணி கொண்டவர் யாரேனும் நிறுத்தப் பட்டால், அதனை எதிர்த்து வலுவான தலைவரை எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னிறுத்த வேண்டும் என காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பல்வேறு கட்சித் தலைவர்களும் ஆலோசித்து வந்தனர். இந்நிலையில், தலித் சமூகத்தைச் சேர்ந்த தலைவரை பாஜக முன்னிறுத்தியுள்ளதன் மூலம் அந்த விமர்சனங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒரு போராளியை முன்னிறுத்தியதன் மூலம், கட்சி வேறுபாடுகளைக் கடந்து மாநிலக் கட்சிகள் ஆதரவும் கிடைக்கும் என்று பாஜக எதிர்பார்க்கிறது.

ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக இருப்பார்!

வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் பெயரை அறிவித்த மோடி, அவர் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக இருப்பார் என்று கூறியுள்ளார்.

மோடி தமது டிவிட்டர் பதிவில், நமது நாட்டில் உள்ள ஒடுக்கப்பட்ட, சமூகத்தின் விளிம்பு நிலையிலுள்ள, ஏழை, எளிய மக்களின் வலுவான குரலாக ராம்நாத் கோவிந்த் இருப்பார். நமது நாட்டின் அரசமைப்புச் சட்டம் குறித்த முழுமையான ஞானம் கொண்ட அவரால் நாட்டுக்கு நல்ல விஷயங்கள் பல கிடைக்கும். எளிமையான விவசாயக் குடும்பத்தில் பிறந்த ராம்நாத் கோவிந்த், தனது அறிவாலும், முயற்சியாலும், உழைப்பாலும் உயர்ந்தவர். பொதுவாழ்க்கையின் பெரும் பகுதியை ஏழை, எளிய மக்களின் நலன் காக்கவே உழைத்தவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலை 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அடுத்த குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூலை 17ஆம் தேதி நடத்தப்படுகிறது. ஜூலை 20ஆம் தேதி அத் தேர்தலின் முடிவு அறிவிக்கப்படும்.

“வெள்ளத்தை கட்டுப்படுத்திய ஒரு பரோபகாரியாக”-பெரியவா

1507603 10202994818654217 4035239553088867808 n - 2026

“வெள்ளத்தை கட்டுப்படுத்திய ஒரு பரோபகாரியாக”-பெரியவா

“சந்தோஷத்துல தலைகால் தெரியாம குதிக்கக்கூடாது.
துக்கத்துல துவண்டு போயிடவும் கூடாது.நிதானம்
மனுஷ லட்சணம். அது வந்துட்டா சமாதானம் வந்துடும்.
சமாதானம் வந்துட்டா எல்லா தானமும் வந்து மனுஷன்
பரோபகாரியா ஆயிடுவான்.பரோபகாரியை
பஞ்ச பூதங்கள் எப்பவுமே பாதுகாக்கும்.கஷ்டப்படுத்தாது”

கட்டுரை ஆசிரியர்-இந்திரா சௌந்தர்ராஜன்.
புத்தகம் மகாபெரியவர் பாகம்-1 ..(46)
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

பெரியவா பண்டரிபுரத்தில் தங்கி இருந்த சமயத்துல
அந்த இடத்திற்கு அருகிலேயே சந்திரபாகா என்னும்
நதி ஓடிக்கொண்டிருந்தது.நமக்கு காவேரி போல
பண்டரிபுரத்துக்கு சந்திரபாகா நதி விளங்குகிறது.
இதில் சில சமயங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.
நதிகளில் வெள்ளம் பெருகலாம். அது ஊருக்குள்
புகுந்து நாசம் ஏற்படுத்தும் அபாயமும் உண்டு.

அன்று பெரியவர் தங்கி இருந்த கோசாலைக்குள்ளேயும்
வெள்ளம் புகுந்து விட்டது.

படிப்படியாக அது உயர்ந்து கொண்டும் சென்றது.
எல்லாரும் அச்சப்பட தொடங்கிவிட்டனர்.

நிச்சயம் அழிவு நேரப்போகிறது என்றும் கருதினர்.
பெரியவா முன்னால் எல்லாரும் பரிதாபமாக நின்றனர்.

பெரியவர் சிரித்தார்,

“மழை பெய்யலைன்னா பெய்யலங்கிற வருத்தம்.
பெஞ்சா இப்படி பெய்யறதேகிற வருத்தம்…
அப்படித்தானே?” என்று கேட்டார். எல்லாரிடமும் மவுனம்.

“நாம எப்படி இருக்கோம்கிறதைதான் இந்த வெள்ளம் சொல்றது.
நாம் ஒண்ணு வருத்தப்படுறோம்.இல்லைன்னா ரொம்ப
சந்தோஷமா ஒரே கூத்தும் பாட்டுமா இருக்கோம்.நிதானமா
அளவா நாம நடந்துக்கிறதேயில்லை.அதைத்தான் இயற்கை
ரூபத்துல இந்த மழை சொல்றது” என்ற பெரியவரை எல்லாரும்
மவுனமாக வெறித்தனர்.

மழை வெள்ளத்தை வைத்து மனித மனதோடு அதை
தொடர்புபடுத்தி பெரியவர் ஒரு பக்கம் உபதேசம் செய்த
போதிலும் அவர் கைகள் இரண்டும் வெள்ள நீரை
தள்ளிவிட்டபடியே, ‘போயிடு…போயிடு’ என்றன அவ்வப்போது.

சில மணிநேரங்களில் வெள்ளம் வடிந்து சந்திரபாகா நதி
அமைதியாக ஓடத்தொடங்கியது.

பெரியவரும்,”இது என் பேச்சை கேட்டுடுத்து….
நீங்களும் கேட்கணும்.

“சந்தோஷத்துல தலைகால் தெரியாம குதிக்கக்கூடாது.
துக்கத்துல துவண்டு போயிடவும் கூடாது.நிதானம்
மனுஷ லட்சணம். அது வந்துட்டா சமாதானம் வந்துடும்.
சமாதானம் வந்துட்டா எல்லா தானமும் வந்து மனுஷன்
பரோபகாரியா ஆயிடுவான்.பரோபகாரியை
பஞ்ச பூதங்கள் எப்பவுமே பாதுகாக்கும்.கஷ்டப்படுத்தாது”

என்ன ஒரு அரிய உபதேசம்! இதை அவர் வார்த்தைகளால்
மட்டும் கூறவில்லை. வெள்ளத்தை கட்டுப்படுத்திய
ஒரு பரோபகாரியாக அவரே முன் உதாரணமாக திகழ்ந்து
கொண்டு கூறினார்.

அதுதான் பெரியவரின் பெரும் சிறப்பு.

சென்னை ஐ.ஜி. அலுவலகம் அருகே வழக்குரைஞருக்கு அரிவாள் வெட்டு!

ig office chennai

சென்னை:

சென்னை ஐ.ஜி. அலுவலகம் அருகே வழக்குரைஞர் கேசவன் என்பவரை மர்ம நபர்கள் சராமரியாக அரிவாளால் வெட்டினர். இதில் அவர் படுகாயமடைந்தார்.

சென்னை கடற்கரை ஐ.ஜி. அலுவலகம் அருகே கலங்கரை விளக்கம் ரயில் நிலையம் அருகில், இன்று காலை சுமார் 8.30 மணி அளவில் வழக்குரைஞர் கேசவன் வந்து கொண்டிருந்தார்.  அப்போது, இரு சக்கர வாகனங்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், கேசவனை சராமரியாக அரிவாளால் வெட்டி விட்டு  வந்த வாகனங்களில் தப்பியோடியது.

மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தால், மக்கள் மற்றும் ரயில் பயணிகள் அலறியடித்துக் கொண்டு  ஓடினர். பட்டப்பகலில் வழக்குரைஞர் ஒருவரை அரிவாளால் ஒரு கும்பல் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து அருகில் இருந்தவர்கள் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.

தகவலறிந்து வந்த போலீசார், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த கேசவனை, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்விரோதம் காரணமாக இந்தச் சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் போலீஸார் தெரிவித்தனர்.

திருப்பதி லட்டுவுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு!

Laddu prasadam for Vaikunta Ekadashi 2015, Enarada.com
Laddu prasadam for Vaikunta Ekadashi 2015, Enarada.com

திருப்பதி:

திருப்பதி திருமலை வேங்கடாசலபதி திருக்கோயிலில் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவுக்கு, ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பாக, சரக்கு மற்றும் சேவை வரி ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதனை அமல் படுத்துவதற்கான முழு வீச்சில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. சுமார் 1200 பொருட்கள், 500 சேவைகளுக்கான வரிகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள திருமலை திருப்பதி திருக்கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டு, செய்யப் பயன்படும் மூலப்பொருட்கள் ஆகியவற்றுக்கும் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப் பட்டிருந்தது. இதனால், லட்டு விற்பனை விலை அதிகரிக்கும் என்றும், அவ்வளவு பக்தர்களுக்கு லட்டு வழங்க இதனால் இயலாது என்றும் தேவஸ்தானம் தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப் பட்டது. மேலும், லட்டு தயாரிப்பை குறைப்பது அல்லது நிறுத்துவது என்று முடிவுகள் எடுக்கப் பட்டன. மேலும், ஏழை எளியவர்கள் அதிகம் வந்து செல்லும் திருப்பதியில் உள்ள விடுதிகளுக்கான கட்டணமும் அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்  பட்டிருந்தது.

இதை அடுத்து, திருப்பதி லட்டுவுக்கு வழங்கப்படும் இடு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு அளிக்க தேவஸ்தானம் சார்பில் ஆந்திர மாநில நிதி அமைச்சர் யனமாலா ராமகிருஷ்ணடுக்கு கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் திருப்பதி லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களுக்கு, ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பு, திருப்பதி தேவஸ்தான நிர்வாகிகள் மற்றும் பக்தர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. அவர்கள், திருப்பதி கோயில் நடைமுறைகள் தொய்வின்றி தொடரும் என்று நம்பிக்கையும் மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளனர்.

மணல் குவாரிகளை மூட ராமதாஸ் கோரிக்கை!

ramadoss - 2026

சென்னை:

மக்கள் போராட்டத்தை ஒடுக்கக் கூடாது என்றும், மணல் குவாரிகளை மூட வேண்டும் என்றும் பாமக நிறுவுனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு முழுவதும் புதிதாக திறக்கப்படும் மணல் குவாரிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் பொதுமக்கள்மீது தமிழக அரசு ஒடுக்குமுறையை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. மக்களின் உணர்வுகளை மதிக்காமல் ஒடுக்குமுறைமூலம் சாதிக்கத் துடிக்கும் தமிழக அரசின் அணுகுமுறை கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் செயல்பட்டு வந்த 38 மணல் குவாரிகளில் பெரும்பாலானவற்றுக்கு வழங்கப்பட்டிருந்த சுற்றுச்சூழல்அனுமதி காலாவதியானதைத் தொடர்ந்து அவை சில வாரங்களுக்கு முன்பு மூடப்பட்டன.  இதனால் அப்பகுதியில்உள்ள மக்கள் நிம்மதி அடைந்திருந்த நிலையில், மூடப்பட்ட மணல் குவாரிகள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாகதிறக்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி, ஏற்கனவே செயல்பட்டு வந்த மணல் குவாரிகள் தவிர புதிதாக 70 இடங்களில் மணல் குவாரிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்திருக்கிறது. மணல் தட்டுப்பாட்டைப் போக்க புதியமணல் குவாரிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சரும் அறிவித்துள்ள நிலையில், புதிய மணல் குவாரிகள்அமைக்கப்படவுள்ள பகுதிகளில்  வாழும் பொதுமக்கள் அரசின் முடிவுக்கு எதிராக அறவழிப் போராட்டங்களில்ஈடுபட்டு வருகின்றனர்.

மக்களின் கோரிக்கைகள் குறித்து அவர்களுடன் பேச்சு நடத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாகபொதுமக்களை அச்சுறுத்தும் முயற்சிகளில் தமிழக அரசு ஈடுபட்டிருக்கிறது. உதாரணமாக நாமக்கல் மாவட்டம்மோகனூரை அடுத்த ஒருவந்தூரில் காவிரி ஆற்றில் மணல் எடுக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்குஎதிராக அப்பகுதி மக்களும், உழவர்களும் மணல் குவாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்தை ஒடுக்க நினைத்த அரசு, போராட்டத்தில் ஈடுபட்ட 450 பேர் மீது அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தாகக் கூறி வழக்குப் பதிவு செய்துள்ளது. அதுமட்டுமின்றி, மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது என்றும், அவ்வாறு எதிர்ப்பு தெரிவித்தால் அனைவரையும் கைது செய்து எதிர்காலமே இல்லாமல்ஆக்கிவிடுவோம் என  காவல்துறையினர் மூலம் மிரட்டல் விடுத்து வருகிறது. ஆனாலும், அதற்கு பணியாதபொதுமக்கள் தங்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் நிறுத்தி வைக்கும் போராட்டம், கால்நடைகளையும், குடும்ப அட்டைகளையும் அரசிடம் ஒப்படைக்கும் போராட்டம் ஆகியவற்றை நடத்த தீர்மானித்துள்ளனர்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகில் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்கப்பட்டிருப்பதை எதிர்த்தும்தொடர்போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, கரூர் உட்பட தமிழகத்தின்பெரும்பாலான மாவட்டங்களில் மணல் குவாரிகளுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. அவ்வாறுபோராட்டம் நடத்தும் மக்களை தனிப்பட்ட முறையில் அச்சுறுத்துவது, பொய்வழக்குப் பதிவு செய்வது உட்படபலவழிகளில் அடக்குமுறைகளை எடப்பாடி  பழனிச்சாமி தலைமையிலான பினாமி அரசு ஏவி வருகிறது. இது மனிதஉரிமை மீறிய செயலாகும்.

மணல் குவாரிகள் விஷயத்தில் தமிழக அரசின் சொல் ஒன்றாகவும், செயல் ஒன்றாகவும் உள்ளது. தமிழ்நாட்டில்இப்போதுள்ள மணல் குவாரிகள் அனைத்தும் அடுத்த 3 ஆண்டுகளில் மூடப்படும் என்றும், அதன்பின் தமிழகத்தில்உள்ள ஆறுகளில் மணல் எடுக்க தடை விதிக்கப்படும் என்றும் சில வாரங்களுக்கு முன் மதுரையில் நடந்த அரசுவிழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.  அடுத்த 3 ஆண்டுகளில் ஆறுகளில் மணல் எடுக்கத்தடை விதிக்கப்படும் என்றால் இப்போதுள்ள  மணல் குவாரிகள் படிப்படியாக மூடப்பட வேண்டும். ஆனால், புதிதுபுதிதாக மணல் குவாரிகளை திறப்பது இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கும் செயலாகவே அமையும். மணல்குவாரிகள் உள்ள இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைதல், கடல்நீர் உட்புகுதல் உள்ளிட்ட ஏராளமான பாதிப்புகள்ஏற்பட்டு வரும் நிலையில், புதிய குவாரிகளைத் திறந்து தமிழகத்தை பாலைவனமாக்கிவிடக் கூடாது.

பணத்தை வாரி இறைத்து ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ள பினாமி அரசு, மணல் குவாரிகள், ஹைட்ரோகார்பன் திட்டங்கள் ஆகியவற்றுக்கு எதிராக அறவழியில் போராட்டம் நடத்தும் மக்களை அடக்குமுறை மூலம் முடக்கிவிடலாம் என நினைக்கிறது. இந்திய வரலாற்றில் மக்கள் போராட்டத்தை ஒடுக்க முயன்ற சர்வாதிகாரிகள் தான்மண்ணை கவ்வியிருக்கிறார்களே தவிர, மக்கள் போராட்டம் ஒருபோதும் வீழ்ந்ததில்லை. இவ்வரலாற்றை உணர்ந்துதமிழகம் முழுவதும் புதிதாக திறக்கப்பட்ட மணல் குவாரிகளை மூட வேண்டும்; மக்கள் மீது தொடரப்பட்டவழக்குகளை அரசு திரும்பப்பெற வேண்டும்.

நில ஆவணங்களுக்கு கட்டாயமாகிறது ஆதார்: இணைக்காவிடில் பினாமி சட்டத்தில் நடவடிக்கை!

aadhaar - 2026
AADHAAR

புது தில்லி:
நில ஆவணங்களுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும்; அவ்வாறு ஆதார் எண் இணைக்காதவர்கள் மீது பினாமி பணபரிவர்த்தனை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
இது தொடர்பாக மாநில தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
• நில ஆவணங்களோடு ஆதார் எண்ணை உரிமையாளர்கள் கட்டாயம் இணைக்க வேண்டும்
• ஆதார் எண் இணைக்காவிடில் பினாமி பண பரிவர்த்தனையின் கீழ் சட்டப்படி நடவடிக்கை
• 1950ம் ஆண்டு முதலான ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்க வேண்டும்
• ஆகஸ்ட் 14ம் தேதிக்குள் நில ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்க வேண்டும்
• மத்திய அரசின் மானியங்களை பெற ஆதார் எண் அவசியம்
• மதிய உணவு முதல் வங்கிக் கணக்கு வரை ஆதார் எண் இணைக்கப் பட வேண்டும்.
• ரியல்எஸ்டேட் துறையில் அதிக கறுப்பு பணப் புழக்கத்தை கருத்தில் கொண்டு, நிலம் வாங்குபவர்கள், விற்பனை செய்பவர்கள் தங்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்
இவ்வாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.