Home Blog Page 5664

தமிழக அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது 60 ஆகிறது!? ஏற்பாடு தடபுடல்!

தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு  பெறும் வயதை 60 ஆக்கப் போராடுகிறாராம் ஒரு அரசு உயர் அதிகாரி.
தலைமைச் செயலக வட்டாரத்தில் பேசிக் கொண்டார்கள்!

சூரியனின் பெயரை முதலாவதாகக் கொண்ட  அந்த பினான்ஷியல் அடிஷனல் செக்ரடரி… பினான்ஷியல் செக்ரட்ரி சண்முகத்துக்கு ஹை ப்ரஷர் கொடுத்து லெட்டர் போட்டுக்கிறாராம்.

இந்த மாதத்தில் ஐயா ரிட்டயர்ட் ஆவப் போறாராம்… அதுக்குள் முடிச்சிடணும்னு ஏற்பாடு! அதுவும் இந்த பட்ஜெட் செஷனில், இப்போதே அறிவிக்க ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்… இன்னும் நாலைந்து நாளுக்குள் பட்ஜெட் தயாரிப்பில் இதைத்  திணிக்க ஏற்பாடு  நடந்து கொண்டிருக்கிறது… அனேகமாக இந்த பட்ஜெட்டில் இது அறிவிக்கப்படலாம்….

இந்த வருடம் பணி ஓய்வு பெறும் ஒவ்வொருவருக்கும் பணிஓய்வுக் கொடை, இதர பண பலன்கள் என சுமார் 40 லகரத்துக்கு மேல் கொடுக்கவேண்டியிருக்கும் என்று கணக்கெல்லாம் காட்டி…

இப்போதைய நிலையில் அரசு கஜானா நிலை சரியாக இல்லை என்று சாக்கு சொல்லி…

இந்த பணி ஓய்வு வயதை 60ஆக மாற்ற அரசுக்கு பினான்ஷியல் டிபார்ட்மெண்ட் அதிகாரிகள் தரப்பில் இருந்து நெருக்கடிகள் கொடுக்கப்படுகிறதாம்…

இதனால் பாதிக்கப்படப் போவது, வேலைவாய்ப்பை எதிர்நோக்கியுள்ள இளைஞர்கள்,

ஏற்கெனவே வேலை பார்க்கும் நடுத்தர வயது நபர்கள்… எல்லாம்தான்!

பார்ப்போம்… என்ன நடக்கிறது என்று!

எல்லாம் அந்த நாராயணனுக்கே வெளிச்சம்!

– தினசரியின் கருடார்

சசிகலாவை அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்: ஓ.பி.எஸ் பேச்சு

ஆர்.கே.நகர் இடைதேர்தலோடு சசிகலா தரப்பினரை அரசியில் இருந்தே அப்புறப்படுத்த வேண்டும் என்று முன்னால் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைதேர்தலை முன்னிட்டு ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறனர். இந்நிலையில், இன்று தனது ஆதரவு நிர்வாகிகளிடையே பேசிய ஓபிஎஸ், 
"கடந்த 24 ஆம் தேதி ஆர்.கே.நகரில் நடைபெற்ற ஜெயலலிதாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது கூடிய கூட்டம் அ.தி.மு.க.,வின் பெரும்பாலான தொண்டர்கள் நம்மிடம்தான் உள்ளனர் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்திருந்தது என கூறினார். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு தொகுதிக்குள் இருக்கும் கட்சி நிர்வாகிகள் பலரையும், தங்கள் பக்கம் கொண்டு செல்ல, பல லட்சங்களை அலட்சியமாக சசிகலா தரப்பினர் செலவு செய்ததாகவும் ,பணம் வாங்கிச் சென்ற யாராலும், அதை செய்ய முடியவில்லை. 
ஆர்,கே.நகர் தொகுதியில் 32 அமைச்சர்களையும், களம் இறக்கி, அதிகார துஷ்பிரயோகம் செய்து, மக்களை விலைக்கு வாங்க சசிகலா தரப்பினர் திட்டம் போடுவார்கள். சசிகலா தரப்பின் அத்தகைய முயற்சிகளை முறியடிப்பதோடு மட்டுமல்லாமல் தி.மு.க.,வையும் சேர்த்து முறியடிக்க வேண்டும். 
ஜெ.வின் அண்ணன் மகள் தீபா தேர்தலில் நின்றால் அவரை விமர்சிக்க வேண்டாம் என தெரிவித்த ஓபிஎஸ் முடிந்த வரையில், அவரை இணைத்துக் கொண்டே தேர்தலை சந்திக்க முயற்சிக்க வேண்டும் என தெரிவித்தார். 
நமது ஒரே இலக்கு இந்த இடைத் தேர்தலோடு சசிகலா தரப்பை, அரசியலில் இருந்தே அப்புறப்படுத்த வேண்டும். 
 அதிமுக வின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவித்து விட்டால் இரட்டை இலைச் சின்னம் நம் கைக்கு வந்துவிடும் என்றும் ஓபிஎஸ் நம்பிக்கை தெரிவித்தார்.

ஆளும் கட்சிகளுக்கு அடி: 4 மாநில நிலவரம்! இழுபறியில் மணிப்பூர்


4 மாநிலத்தில் ஆட்சியை பறிகொடுக்கின்றன அந்த அந்த மாநிலங்களை  ஆளும் கட்சிகள் : மணிப்பூரில் மட்டும் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது

சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற 5 மாநிலத்தில் 4 மாநிலங்களில் ஆளும் கட்சி ஆட்சியை பறிகொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது உத்திரபிரதேசம், பஞ்சாப், கோவா, உத்திரகாண்ட் ஆகிய 4 மாநிலங்களிலும் ஆளுங்கட்சி ஆட்சியை பறிகொடுத்துள்ளது. மேலும் மணிப்பூரில் மட்டும் பாஜக – காங்கிரஸ் இடையே இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. 

உத்திரபிரதேசம்: உத்திரபிரதேசத்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சியை பிடிக்கிறது. 300 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்று தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கிறது. உத்திரபிரதேசத்தில் ஆளும் கட்சியாக இருந்த சமாஜ்வாதி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. ஆனால் அங்கு வெறும் 71 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.


பாஜக 307 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதனால் சமாஜ்வாதி கட்சி ஆட்சியை பறிகொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

பஞ்சாப்: பஞ்சாப்பில் சிரோன்மணி அகாலிதளம் – பாஜ கூட்டணி ஆளும் கட்சியாக உள்ளது. ஆனால் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் இந்த கூட்டணி வெற்றி பெறவாய்ப்பில்லை என கருத்து கணிப்புகள் கூறி உள்ளன. அதே நேரத்தில், டெல்லியை தாண்டி முதல் முறையாக களமிறங்கியிருக்கும் ஆம் ஆத்மிக்கும், காங்கிரசுக்கும் கடும் போட்டி இருக்கும் என கூறப்பட்டது. அதே போல் காங்கிரஸ் கட்சி 117 இடங்களில் 76 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. 

கோவா: கோவாவில் ஆளும் கட்சியாக பாஜக உள்ளது. ஆனால் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. மேலும் கோவா முதலமைச்சர் லட்சுமிகாந்த் பர்சேகர் தாம் போட்டியிட்ட தொகுதியில் தோல்வியை சந்தித்துள்ளார். கோவா 40 தொகுதிகளை கொண்டது. 17 தொகுதிகளில் இதுவரை காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. இதனால் ஆளும் கட்சியான பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை. 

உத்திரகாண்ட்: உத்திரகண்ட்டில் ஹரீஷ் ராவத் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆளும் கட்சியாக உள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் பாஜக 55 தொகுதிகளில் முன்னிலை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. இங்கும் ஆளும் கட்சிக்கு ஆட்சி பறிபோகும் நிலை உருவாகியுள்ளது. 

மணிப்பூர்: மணிப்பூரில் பாஜக – காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. மேலும் அங்கு தொங்கு சட்டசபை அமையவும் வாய்ப்புகள் உள்ளனர். மற்ற கட்சிகளின் ஆதரவு பொறுத்தே ஆட்சி அமைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. மணிப்பூரில் மொத்தம் 60 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. மணிப்பூரில் பாஜக 24 இடங்களிரும், காங்கிரஸ் 19 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.

உ.பி.யில் மீண்டும் தேர்தல்!: மாயாவதி விரக்தியில் உளறல்

லக்னோ: ஓட்டுச்சீட்டு மூலம் மீண்டும் தேர்தலை சந்திக்க பா.ஜ., தலைவர் அமித்ஷா தயாராக உள்ளாரா என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.
பத்திரிகையாளர்களிடம் அவர் கூறியதாவது: 
தேர்தல் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. நம்ப முடியவில்லை. முடிவை ஏற்க கடினமாக உள்ளது. ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் கோளாறு உள்ளது. பா.ஜ. ஓட்டு மட்டும் தான் பதிவாகியது. 
எந்த கட்சிக்கு ஓட்டுப்போட்டாலும், அந்த ஓட்டுகள் பா.ஜ.,விற்கு மட்டும் தான் சென்றது. முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது. முஸ்லிம்கள் ஓட்டு பா.ஜ.,விற்கு எப்படி சென்றது.
ஓட்டுச்சீட்டு மூலம் மீண்டும் தேர்தலை சந்திக்க அமித்ஷா தயாராக உள்ளாரா.
பா.ஜ., ஜனநாயகத்தை கொலை செய்துள்ளது. அக்கட்சியின் வெற்றி ஜனநாயகத்திற்கு ஆபத்தானது. தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது என என்னிடம் பத்திரிகையாளர்கள் உட்பட பலர் முன்னர் கூறினார். ஆனால் அப்போது அதனை நான் ஏற்கவில்லை.
இந்த முடிவு தொடர்பாக தேர்தல் கமிஷனில் புகார் அளிப்போம். தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜ., கொள்கைக்கு கிடைத்த வெற்றி: அமித்ஷா


புதுடில்லி: சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து அகில இந்திய பா.ஜ., தலைவர் அமித்ஷா கூறியிருப்பதாவது: பிரதமர் மோடியின் வளர்ச்சி கொள்கைக்கு கிடைத்த வெற்றி ஆகும். உத்தரகண்டில் எதிர்பாராத வெற்றி கிட்டியுள்ளது. பா.ஜ., கொள்கைக்கு மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார். பிரகாஷ்சிங்பாதல்: பஞ்சாபில் தோல்வியை தழுவிய அகாலிதள் பா.ஜ., கூட்டணி முதல்வராக பிரகாஷ்சிங்பாதல் கூறுகையில்; தோல்வி குறித்து ஆராய்வோம். வெற்றி பெற்ற காங்கிரசுக்கு வாழ்த்துக்கள் . இவ்வாறு அவர் கூறியுள்ளார். மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வெளியிட்டுள்ள கருத்தில்; மோடியின் நல்ல நிர்வாகத்திற்கு கிடைத்த வெற்றி என கூறியுள்ளார்.

மணிப்பூர் போராளி ஐரோம் ஷர்மிளா 85 வாக்குகளே பெற்று தோல்வி

நாற்காலி கனவோடு தேர்தலில் போட்டியிட்ட ஐரோம் ஷர்மிளா வெறும் 85 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்துள்ளார்.
மணிப்பூரில் பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்டு உள்ள சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி, சமூக ஆர்வலர் ஐரோம் ஷர்மிளா கடந்த 16 ஆண்டுகளாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வந்தார். கடந்த 2000-ம் ஆண்டு உண்ணாவிரதத்தை தொடங்கியது முதல் பல்வேறு முறை தற்கொலைக்கு முயற்சித்ததாக கைது செய்யப்படுவதும் பின்னர் விடுதலை ஆவதுமாக இருந்தார்.
இந்நிலையில், உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக்கொள்வதாக ஐரோம் ஷர்மிளா கடந்த ஆகஸ்ட் மாதம் தெரிவித்தார். பின்னர் அவருக்கு இம்பால் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஜாமீனில் விடுதலையான ஐரோம் ஷர்மிளா, அரசியலில் இணைந்து மணிப்பூர் முதல் அமைச்சராக விரும்புவதாகவும், அதன்பிறகு ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்வதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், தற்கொலை முயற்சி வழக்கில் இருந்து அவரை முற்றிலுமாக விடுவித்து இம்பால் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இனி ஐரோம் ஷர்மிளா சுதந்திரமாக செயல்படலாம் என்று நீதிமன்றம் கூறியது.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஐரோம் ஷர்மிளா, புதிய அரசியல் கட்சியை தொடங்க உள்ளதாகவும் கூறினார்.
அதன்படி, மக்கள் எழுச்சி நீதி கூட்டணி என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார் ஐரோம் ஷர்மிளா. ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்வதற்கு தனது கட்சி தீவிரமாக போராடும் என அறிவித்ததுடன் மணிப்பூர் சட்டசபை தேர்தலில் தவ்பால் தொகுதியில் முதல் மந்திரி ஒக்ரம் ஐபோபி சிங்கை எதிர்த்து போட்டியிட்டார்.
தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகிவரும் நிலையில், தவ்பால் தொகுதியில் முதல் மந்திரி ஒக்ரம் இபோபி சிங் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளரை விட 8 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் கூடுதலாக வாங்கி வெற்றி பெற்றுள்ளார்.
இந்த தேர்தலில் வெற்றி பெறாமல் போனாலும் இரண்டாம் இடத்தையாவது பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஐரோம் ஷர்மிளா, வெறும் 85 வாக்குகளை மட்டுமே பெற்று, டெபாசிட் பறிபோகும் அளவுக்கு படுதோல்வி அடைந்துள்ளார்.
தேர்தல் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஐரோம் ஷர்மிளா, பண பலமும் அதிகார பலமும் தன்னை வீழ்த்தி விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

தந்தைக்கு துரோகம்; அகிலேசை தண்டித்த மக்கள்


லக்னோ: பெருந்தன்மையுடன் முதல்வர் அரியணையில் வைத்து அழகு பார்த்த தந்தைக்கு துரோகம் செய்ததை அவர் மன்னிக்கலாம். மக்கள் தண்டிக்காமல் விடுவார்களா என்ன? இந்த உண்மை பாடத்தை உத்திரபிரதேச மக்கள் கற்பித்துள்ளனர்.

கடந்த 2012 ல் நடந்த சட்டசபை தேர்தலில் முலாயம்சிங்கின் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி பெருவாரியான வெற்றியை கண்டது. முலாயம்சிங் முதல்வராகி இருக்கலாம். இருப்பினும் தனது மகனை முதல்வர் மகுடம் சூட்டி மகிழ்ந்தார். தள்ளாத வயதிலும் பதவியை விட்டுக்கொடுக்க தயங்கும் அரசியல்வாதிகள் இருக்கும் வேளையில் முலாயம்சிங் மகனுக்கு தாமாக வழிவிட்ட நிலை வெகுவாக பாராட்டை பெற்றது.

சட்டம் ஒழுங்கு சீர்குலைவு:

இளம் வயதில் முதல்வர் பொறுப்புக்கு வந்த அகிலேஷசுக்கு பாராட்டுக்கள் குவிந்தன. ஸ்திரமான ஆட்சி தருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போக, போக அவரது நிர்வாக திறமின்மை வெளியே வர துவங்கியது. முக்கியமான சட்டம் ஒழுங்கு நிலை மோசமானது. முஷாபர்நகர் கலவரம் , 60க்கும் மேற்பட்டோர் பலி, இங்கு தொடர்ந்து பல நாட்கள் ஊரடங்கு, முகாம்களில் மக்கள்தங்க வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மதுரா மற்றும் பதேபூர் கலவரம், சாதி,மத மோதல்கள், கொலை, கொள்ளை, பலாத்காரம் தலைவிரித்தாடியது. மேலும் அமைச்சர்கள் பொறுப்பில்லாமல் நடந்து கொள்வது , தொலைந்து போன அமைச்சர் அசாம்கானின் எருமையை தேடுவது என அகிலேஷ் பல விமர்சனங்களுக்கு ஆளானார்.

குடும்பச்சண்டை;

இறுதிக்கட்டத்தில் தந்தை முலாயம்சிங்குடனான மோதல்கள், சித்தப்பா சிவபால் உடன் குடும்பச்சண்டை ஆகியன மூலம் மக்கள் மத்தியில் அகிலேஷ் மீது இருந்த மதிப்பை அவரே தானே குழி தோண்டி புதைத்து கொண்டார். குறிப்பாக சமாஜ்வாடி கட்சியே எனக்குத்தான் சொந்தம். தானே தலைவர் என அவர் கூட்டிய கூட்டத்தில் தனக்கு தானே மகுடம் சூட்டிக்கொண்டார். இந்த நேரத்தில் முலாயம், அகிலேஷ் ஆதரவாளர்கள் இருதரப்பாக மோதிக்கொள்ளும் வகையில் பதட்டம் உருவானது. மாறி, மாறி அவரவர் ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கும் படலமும் அரங்கேறியது. தந்தை வீட்டுக்கும், மகன் வீட்டுக்கு பாதுகாப்பாக இருப்பதே போலீசாரின் தலையாய பணியாக இருந்தது.

தேர்தல் அறிவித்த பின்னர் சைக்கிள் சின்னம் முலாயமுக்கா ? அகிலேசுக்கா ? என்ற குழப்பம் ஏற்பட்டது. தேர்தல் கமிஷன் வரை சென்றது உ.பி.,யில் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் தற்போது நடந்த தேர்தலில் முஸ்லிம் ஓட்டுக்களை நம்பிய சமாஜ்வாடியும், மாயாவதியின் பகுஜன்சமாஜ்வாடியும் ஓட்டுக்களை பங்கு போட்டு பிரித்து கொண்டது. பா.ஜ.,வுக்கு விழ வேண்டிய ஓட்டுக்களும், அகிலேஷ் மீதான வெறுப்பு ஓட்டுகளும், மோடியின் நம்பிக்கையான பேச்சு, சமீபத்திய ரூபாய் நோட்டு வாபஸ், மோடியின் பிரசார சக்தி மூலம் கிடைத்த ஓட்டுகளும் பா.ஜ.,வை வெற்றி உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

அமைதி காத்த முலாயம்:

குறிப்பாக தந்தையை மகன் எதிர்த்து அரசியல் செய்த போதும், காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்த போதும் முலாயம்சிங் தனது கோபத்தையும், வெறுப்பையும் வெளிப்படையாக முலாயம்சிங் காட்டவில்லை. பெரும் அமைதி காத்தார். அத்துடன் அகிலேஷ்சுடன் முலாயம்சிங் இணைந்து எந்தவொரு பிரசாரமும் செய்யவில்லை. இதுவும் அகிலேசுக்கு மைனசாக அமைந்தது.

மொத்தத்தில் முலாயம்சிங் கட்சியில் நடந்த குடும்பச்சண்டை, தந்தையை எதிர்த்து மகன் அரசியல் செய்தது அந்த கட்சிக்கு பெரும் வீழ்ச்சியை தந்தது. இதுவே பா.ஜ.,வுக்கு பெரும் வெற்றிக்கு துணையாக அமைந்தது. ஆட்சி அமைக்க 202 தொகுதிகள் போதுமானது. முலாயம்சிங், மாயாவதி கட்சிக்கு பெரும் தோல்வியை கொடுத்து 300 க்கும் மேற்பட்ட தொகுதிகளை பா.ஜ., பெற்றுள்ளது.

எது எப்படியோ இந்தியாவின் பெரும் மாநிலமான உ.பி.,யில் பா.ஜ., செல்வாக்கு பெற்றிருப்பது இந்திய பொருளதார வளர்ச்சிக்கு பெரும் துணையாக அமையும் என்பது நிசப்தமான உண்மை. மேலும் ராஜ்யசபாவில் எம்.பி.,க்களின் எண்ணிக்கை, ஜனாதிபதி தேர்தலில் ஓட்டு போடும் அதிகாரம் ஆகியன பா.ஜ.,வுக்கு பலம் சேர்த்துள்ளது.

பாஜக வெற்றி அதிர்ச்சி அளிக்கிறது! திருமாவளவன்

உத்தரபிரதேசம் உள்ளிட்ட தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன்,' பாஜக வெற்றி பெற்றிருப்பதை வைத்து பணமதிப்பு நீக்க நடவடிக்கையை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்று கருத முடியாது. அனைத்து தரப்பு மக்களும் பாஜக ஏற்றுக் கொண்டதாகவும் கருத முடியாது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் சேர்ந்து ஆலோசனை செய்து முடிவு எடுப்போம். இடைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி போட்டியிடும் எண்ணத்தில் உள்ளது' என்றும் தெரிவித்தார்.

நான் ‘தலித்’ என்பதால் என்மீது நடவடிக்கை : நீதிபதி கர்ணன் ஆவேசம்!

  
சென்னை ஐகோர்ட் நீதிபதியாக இருந்த கர்ணன், கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டார். 
அவர், பிரதமர் அலுவலகம், சட்டத்துறை அமைச்சகம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டோருக்கு புகார் கடிதங்களை அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தினார் . 
இதனை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து கோர்ட் அவமதிப்பு வழக்காக பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது . இந்த வழக்கில் ஆஜராக கர்ணனுக்கு 2 முறை உத்தரவிடப்பட்டது. 
ஆனால், அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில், இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி கேஹர் மற்றும் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, செலமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி லோகூர், பினாகி சந்திரகோஸ், குரியன் ஜோசப் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. 
அப்போது கர்ணனுக்கு எதிராக ஜாமினில் வெளிவரக்கூடிய வாரன்ட் பிறப்பித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். கர்ணன் 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஆவணத்தை செலுத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர். 
இதுகுறித்து பத்திரிகையாளர்களிடம் கர்ணன் கூறியதாவது:"
பிடிவாரன்ட் தொடர்பாக ஜனாதிபதியிடம் முறையிடுவேன். வாரன்ட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுப்பேன். வாரன்ட் பிறப்பித்த உச்ச நீதிமன்றதிற்கு எதிராக உத்தரவு பிறப்பிப்பேன். சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக பிரதமரிடம் புகார் தெரிவித்தேன். முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னை தொடர்பாக சென்னை ஐகோர்ட் நீதிபதிகளுக்கு எதிராக பிரதமரிடம் புகார் தெரிவித்தேன். புகார் தொடர்பாக எந்தவித ஆலோசனை, விசாரணை யில்லாமல் எனக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது. நான் தலித்தாக இருப்பதால் எனக்கு நெருக்கடி ஏற்படுகிறது. எனது வாழ்க்கையையும், பதவியையும் கெடுக்கவே தன்னிச்சையாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது." என்று அவர் கூறினார்.

செங்கல்பட்டு பெருமாள்மலை கிறிஸ்துவ ஆக்கிரமிப்பாளர் மீது நடவடிக்கை தேவை: ராம.கோபாலன்

சென்னை:

செங்கல்பட்டு பெருமாள் மலை ஆக்கிரமிக்கும் கிறிஸ்தவ பாதிரிகளின் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்கக் கேட்டுக்கொள்கிறோம் என்று இந்துமுன்னணியின் நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே உள்ள அழகு சமுத்திரம் பஞ்சாயத்திற்குட்பட்ட மகா சக்தி பொன்னியம்மன்1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்குள்ள பெருமாள் மலை மீது ஆண்டுதோறும் கண்ணபிரான் உற்சவம் நடைபெற்று வருகிறது. மலை மீது பெருமாளின் திருமண் இட்டு இன்றளவும் பாதுகாத்து வருகின்றனர் இவ்வூர் மக்கள்.

இக்கோயில் மலை அழகுசமுத்திரம் பஞ்சாயத்திற்கு சொந்தமானதென செங்கல்பட்டு நீதிமன்றத்தால் 18.10.1996இல் தீர்ப்பு வழங்கப்பட்டது. 2000ஆம் ஆண்டில் கிறிஸ்தவர்கள் இம்மலையில் சிலுவையை நட்டனர். உடனடியாக கிராம நிர்வாகத்தால் நடவடிக்கை எடுக்குப்பட்டு, அது அகற்றப்பட்டது. 2006இல் மலையில் திடீரென்று சர்ச் கட்ட ஊரில் கலவரம் ஏற்பட்டது. இதற்குக் காரணமான ஏழு கிறிஸ்தவர்கள் கைது செய்யப்பட்டனர். பாதிரி எச்சரிக்கை செய்து விடுவிக்கப்பட்டார்.

அச்சிரபாக்கம் பாதிரி ஜேக்கப், ஜாதி கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் பொதுப் பணித்துறைக்குச் சொந்தமான நீர்வழியை கால்வாயை மூடி அதன் மீது சர்ச்க்கு அடிக்கல் நாட்டினார். திடீரென்று, 24.12.2016 இரவு பெருமாள் மலை முழுவதையும் ஆக்கிரமித்து வனத்துறையால் வளர்க்கப்பட்டு வந்த மரங்களை ஜெ.சி.பி. இயந்திரம் கொண்டு வேரோடு அகற்றினர். பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் பல்வேறு வடிவங்களான பொம்மைகளை அமைத்தனர். இதனைக் கண்டித்து பொதுமக்கள், இந்து முன்னணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை அடுத்து மாவட்ட கலெக்டர் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார். ஆர்.டி.ஓ. ஜெயசீலன், கடைசி பொம்மையை அகற்றவிடாமல் தடுத்துவிட்டார்.

இதனை எதிர்த்து தொடர்ந்து கிராம மக்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் 4.3.2017 வழக்கமாக நடைபெறும் சனிக்கிழமை பஜனை ஊர்வலத்தின் போது சோகண்டியை சார்ந்த கிறிஸ்தவர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து பக்தர்கள் மீது மோதியதுடன், ஆயுதங்களால் தாக்கியும், சாமியை அவதூறாக பேசியும், மிரட்டினர். ஊர் மக்கள் அவர்களை மடக்கிப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இதற்குக் காரணமான மத மோதல்களை உருவாக்கி கலவரத்தை நடத்த திட்டமிட்ட ஜேக்கப் பாதிரியை விட்டுவிட்டது.

இதுபோன்ற தேசவிரோத, மதவெறி செயலைக் கண்டித்து இந்துக்கள் 6.3.2017 முதல் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். 7.3.2017 பேச்சு வார்த்தைக்கு அழைத்த ஆர்.டி.ஓ. ஜெயசீலன், கிராம மக்களிடம் தான் எழுதி வைத்திருந்த பேப்பரில் கையெழுத்திட நிர்பந்தித்துள்ளார். மீறினால், 35 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் குடியிருப்புகளை அகற்றிவிடுவேன் என மிரட்டியுள்ளார்.

இந்த ஜனநாயக விரோத, சட்டவிரோதமாக செயல்படும் ஆர்.டி.ஓ. ஜெயசீலன் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கவும், கைது செய்யப்பட்ட பொதுமக்களை விடுதலை செய்யவும், அவர்கள் மீதான வழக்குகளை அரசு வாபஸ் பெற வேண்டும் என்றும், சிலுவையை நட்டு மலைகளை ஆக்கிரமிக்கும் கிறிஸ்தவ சதியை முறியடிக்க உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசை, மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறோம்.