Home Blog Page 5702

பழைய ரூ.500, 1000 வைத்திருந்தால் அபராதம்: சட்டமாக்க முயற்சி

*பழைய ரூ.500, ரூ,1000 நோட்டுகள் வைத்திருந்தால் அபராதம்* விதிக்கப்படும் என்ற அவசர சட்டத்தை, நாடாளுமன்றம் மூலம் சட்டமாக்க மத்திய அரசு திட்டம்…
-நடப்பு பட்ஜெட் கூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்*

3 நாளில் அவசரச் சட்டம் இயற்ற முடிந்தது எப்படி?: முதல்வர் விளக்கம்

சென்னை:

3 நாட்களில் அவசரச் சட்டம் இயற்ற முடிந்தது எப்படி என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேள்விக்கு பதிலளித்தார் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.

3 ஆண்டுகளாக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டதால் தான் 3நாளில் ஜல்லிக்கட்டு அவசரசட்டம் இயற்ற முடிந்தது என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், ஜல்லிகட்டிற்கு அனுமதி வழங்கும் தமிழக அரசின் சட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க விழாக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளதாகவும் கூறினார்.

ஜல்லிக்கட்டு தொடர்பாக நடைபெற்ற போராட்டத்தில் ஒசாமா பின்லேடன் படம் வைத்திருந்த நபர் பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் பதில் அளித்தார்.

ஜல்லிக்கட்டு கலவரத்தில் ஆட்டோ எரித்த பெண் போலீஸ் அடையாளம் தெரிந்தது!

சென்னை:

சென்னை, தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த 17-ந்தேதி மாணவர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனை தொடர்ந்து தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டிக்கான தடையை நீக்கும் வகையில் அவசர சட்டத்தை கடந்த 23-ந்தேதி கொண்டு வந்தது. அதன் பின்னரும் மாணவர்கள் நடத்திய போராட்டம் முடிவுக்கு வரவில்லை. இதனால் மெரினாவில் குவிந்திருந்த மாணவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் ஐஸ் அவுஸ், திருவல்லிக்கேணி, அரும்பாக்கம், கோயம்பேடு, வியாசர்பாடி உள்ளிட்ட இடங்களில் கலவரம் வெடித்தது. இந்த போராட்டத்தின் உச்சக்கட்டமாக ஐஸ்அவுஸ் போலீஸ் நிலையம் தீ வைத்து கொளுத்தப்பட்டது.

மெரினாவில் நடந்த மாணவர்கள் போராட்டத்தில் எந்தவித வன்முறை சம்பவங்களும நடைபெறாத நிலையில், அவர்களுக்கு ஆதரவாக நடந்த போராட்டங்களிலேயே சமூக விரோத கும்பல் ஊடுருவி பெரும் கலவரத்தை ஏற்படுத்தியது. போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. போலீஸ் வாகனங்கள் நொறுக்கப்பட்டதுடன் தீ வைப்பு சம்பவங்களும் அரங்கேறின. இதனால் கடந்த திங்கட்கிழமை சென்னை மாநகரில் பல இடங்கள் போர்க்களம் போல காட்சி அளித்தன.

இதனிடையே கலவரத்தை பயன்படுத்தி போலீசாரே வாகனங்களுக்கு தீ வைத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் பெண் போலீஸ் ஒருவர் ஆட்டோவுக்கு தீ வைக்கும் காட்சியும், போலீஸ்காரர் ஒருவர் வாகனங்களை லத்தியால் அடித்து நொறுக்கும் காட்சிகளும் வீடியோ பதிவுகளாக பரவின. வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவிய இது போன்ற வீடியோக்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

இது தொடர்பாக பேட்டி அளித்த சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், போலீசார் தவறு செய்திருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தார். இதைத் தொடர்ந்து சென்னையில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். கலவரத்தில் ஈடுபட்ட 300 பேர் வரை இதுவரைகைது செய் யப்பட்டுள்ளனர். மேலும் பலரைத் தேடி வருகிறார்கள்.

கலவரத்தை பயன்படுத்தி தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட பெண் போலீஸ் மீதும், வாகனங்களை சேதப்படுத்திய போலீஸ்காரர் மீதும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதில் இவர்கள் இருவரும் அடையாளம் காணப்பட்டனர்.

இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் பெண் போலீசும், போலீஸ்காரரும், யார் என்பதை உயர் போலீஸ் அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர். இவர்கள் 2 பேர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. பெண் போலீஸாரும், போலீஸ்காரரும் சஸ்பெண்டு செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.

தனியார் பால் விலை மீண்டும் உயர்வு: தடுத்து நிறுத்துமா தமிழக அரசு?

சென்னை:

தனியார் பால் விலை மீண்டும் உயர்ந்துள்ளதை தடுத்து நிறுத்துமா தமிழக அரசு என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனர் & மாநில தலைவர் சு.ஆ.பொன்னுசாமி அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் பாலுக்கான கொள்முதல் விலை மற்றும் வாகன எரிபொருள் விலையில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படாத சூழ்நிலையில் ஆந்திராவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தனியார் பால் நிறுவனமான ஹெரிடேஜ் நிறுவனம் வரும் புதன்கிழமை  (01.02.2017) முதல் தங்களுடைய பால் மற்றும் தயிருக்கான விற்பனை விலையை லிட்டருக்கு 2.00ரூபாய் முதல் 5.00ரூபாய் வரை உயர்த்துவதாக எங்களது பால் முகவர்களுக்கு சில தினங்களுக்கு முன் சுற்றறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது.

ஏழை, எளிய, நடுத்தர மக்களை பாதிக்கின்ற வகையில் தன்னிச்சையாக ஹெரிடேஜ் நிறுவனம் அறிவித்துள்ள பால் மற்றும் தயிருக்கான விற்பனை விலை உயர்வு அறிவிப்பினைத் தொடர்ந்து இதர தனியார் பால் நிறுவனங்களும் தங்களின் பால் மற்றும் தயிருக்கான விற்பனை விலையை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிகிறது.

அதுமட்டுமன்றி தமிழகத்தில் நாளொன்றுக்கு தேவையான பாலில் 83.4% பால் தேவைகளுக்கு தனியார் நிறுவனங்களையே பொதுமக்கள் சார்ந்திருப்பதாலும், சுமார் 95% தேனீர் கடைகள், உணவகங்கள் போன்றவை தனியார் பாலினையே உபயோகப்படுத்தி வருவதாலும் இந்த தன்னிச்சையான பால் விற்பனை விலை உயர்வின் காரணமாக தேனீர், காபி மற்றும் பால் சார்ந்த உணவுப் பொருட்களின் விற்பனை விலையும் கடுமையாக உயரும் ஆபத்து இருக்கிறது. எனவே மேற்கண்ட தனியார் பால் நிறுவனத்தின் பால் மற்றும் தயிருக்கான விற்பனை விலை உயர்வு விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு அதனை தடுத்து நிறுத்திட வேண்டும் என மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம்.

மேலும் “ஆவின் நிறுவனம்” கொள்முதல் மற்றும் விற்பனை செய்கின்ற பாலுக்கான விலையை மட்டுமே தமிழக அரசு நிர்ணயம் செய்வதால் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் பால் வணிகத்தில் ஈடுபட்டு வரும் அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் தங்களின் சுயநலத்திற்காக, சுயலாபத்திற்காக பொதுமக்கள் மீது பாரத்தை சுமத்துகின்ற வகையில் குறைந்தபட்சம் ஆண்டுக்கு இரண்டு முதல் மூன்று முறை வரை பால் விற்பனை விலையை தன்னிச்சையாக உயர்த்துவதையும், தங்களின் பால் விற்பனை குறையும் போதெல்லாம் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்கின்ற பாலுக்கான விலையை தன்னிச்சையாக குறைப்பதையும் வாடிக்கையாக கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக பால் விற்பனை விலை உயரும் போதெல்லாம் பொதுமக்களும், பால் கொள்முதல் விலை குறையும் போதெல்லாம் பால் உற்பத்தியாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அதுமட்டுமன்றி தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வறட்சி காரணமாக பால் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக தமிழகத்தில் கடுமையான பால் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலையும் உருவாகி வருவதால் இதை பயன்படுத்திக் கொண்டு அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் இந்த  (2017) ஆண்டில் பால் விற்பனை விலையை அடிக்கடி உயர்த்துகின்ற தன்னிச்சையான முடிவினை எடுப்பார்கள்.

எனவே தமிழர்களின் கலாச்சாரமான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்திட “அவசர சட்டம்” இயற்றியதைப் போன்றும், ஆட்டோ, பேருந்து கட்டணங்களை வரன்முறைபடுத்தி தொடர்ந்து அதற்கான கட்டணங்களை நிர்ணயம் செய்து வருவதைப் போன்றும், தமிழகத்தில் நாளொன்றுக்கு தேவையான பாலில் 16.6% (சுமார் 25லட்சம் லிட்டர்) பால் தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்கின்ற “ஆவின் நிறுவனம்” கொள்முதல் மற்றும் விற்பனை செய்கின்ற பாலுக்கான விலையை நிர்ணயம் செய்வதைப் போன்றும், அத்தியாவசியமான, உயிர் காக்கும் பொருளாக விளங்கி வரும் பால் வணிகத்தில் தமிழகத்தில் தினமும் 83.4% (சுமார் 1கோடியே 25லட்சம் லிட்டர்) பால் தேவைகளை பூர்த்தி செய்து வரும் தனியார் பால் நிறுவனங்களை வரன்முறைபடுத்தி, அவை கொள்முதல் மற்றும் விற்பனை செய்கின்ற பாலுக்கான விலையை தமிழக அரசே நிர்ணயம் செய்கின்ற வகையில் உடனடியாக “கொள்கை ரீதியில் முடிவெடுத்து” அதற்கான “அவசர சட்டம்” இயற்றி கோடிக்கணக்கான ஏழை, எளிய மக்களையும், பால் உற்பத்தியாளர்களான லட்சக்கணக்கான விவசாயிகளையும் காத்திட வேண்டுமாய் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை “தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்” சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம்.

மேற்கண்ட கோரிக்கை மனுவை இன்று  (30.01.2017) காலை 11.00மணியளவில் சென்னை தலைமை செயலகத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் தனிப்பிரிவிலும், மாண்புமிகு தமிழக பால் வளத்துறை அமைச்சர் மற்றும் பால் வளத்துறை செயலாளர் ஆகியோரிடமும் எங்களது சங்கத்தின் சார்பில் வழங்கி வந்துள்ளதுடன் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை நேரில் சந்திக்க அனுமதி கேட்டும் முதல்வர் அலுவலகத்தில் மனு அளித்து வந்திருக்கிறோம்.

புனே ஐ.டி. பெண் கொலை: காவலாளி கைது

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் ஹிஞ்சேவாடியில் உள்ள ஐடி தொழிற் பூங்காவில் பணியாற்றி வந்த கேரளைவைச் சேர்ந்த பெண் ஊழியர் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக காவலாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக காவல்துறை உயரதிகாரி ஒருவர் கூறியபோது,

“புனே ஹிஞ்சேவாடியில் உள்ள ஐடி தொழிற்பூங்காவில் இன்போசிஸ் மென்பொருள் நிறுவன வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் 9-வது தளத்தில் பெண் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக எக்களுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்றோம். அந்தப் பெண்ணின் கழுத்தை கணினி கேபிளைக் கொண்டு இறுக்கி கொலை செய்திருந்தனர். அவரது முகத்திலும் காயங்கள் இருந்தன. இந்த கொலைக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. மாலை 5 மணியிலிருந்து 6.30 மணிக்குள் இந்தக் கொலை நடந்திருக்க வேண்டும். கொலை சம்பவம் நடந்த நாள் ஞாயிற்றுக்கிழமை. அவசர வேலை காரணமாக விடுமுறை நாளன்று அந்தப் பெண் அங்கு பணி புரிந்து கொண்டிருந்துள்ளார்.

அந்தப் பகுதிக்கு காவலாளியைத் தவிர வேறு யாரும் செல்ல வாய்ப்பில்லை. எனவே, சந்தேகத்தின் அடிப்படையில் அசாமைச் சேர்ந்த அந்த காவலாளியை கைது செய்துள்ளோம். அந்த நபரும் கொலை நடந்த அன்று மாலையே தனது சொந்த ஊரான அசாமுக்கு செல்ல முயற்சித்தது எங்களது சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியது. அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கொலை செய்யப்பட்ட பெண் கேரளாவைச் சேர்ந்தவர். அவருக்கு வயது 23” என்றார்.

கடந்த ஒரு மாதத்தில் புனேவில் படுகொலை செய்யப்படும் இரண்டாவது பெண் ஐடி ஊழியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் மாதத்துக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்த இயலாது: பேரவையில் மசோதா தாக்கல்

சென்னை:
வரும் ஏப்ரல் மாதத்துக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த இயலாது என்று பேரவையில் இன்று மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

தமிழ்நாடு சட்டப் பேரவையில் இன்று தமிழ்நாடு ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி திருத்த சட்ட முன் வடிவுகளை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தாக்கல் செய்தார்.

அந்த சட்ட மசோதாவில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகள் ஆகியவற்றின் வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம ஊராட்சிகளின் தலைவர்களின் பதவிகளில் உள்ள சாதாரணமான காலியிடங்களை நிரப்பும் நோக்கத்திற்காக அறிவிக்கை வெளியிட்டது.

இதற்கிடையில் மேற்சொன்ன அறிவிக்கையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிப் பேராணை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அதனுடைய ஆணையில், மற்றவற்றுக்கிடையில் 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 31-க்கு முன்னதாக தேர்தலை நடத்தவும் மற்றும் அத்தேர்தல் பணியை செய்து முடிப்பதற்கு புதிய அறிவிக்கையை வெளியிடுமாறு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கு அறிவுறுத்தியிருக்கிறது.

தற்போது உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதிநிதிகளின் பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ளதாலும் அவற்றை ஐந்தாண்டு காலத்திற்கு மேல் நீட்டிக்க முடியாது என்பதாலும் தேர்தல் நடத்தப்படுகின்ற வரை உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அலுவலர்களை அமர்த்துமாறு அரசுக்கு அறிவுறுத்தியிருக்கிறது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் மேற்கண்ட அறிவுறுத்தல்களின் அடிப்படையில் கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகளின் அதிகாரங்களை செயல்படுத்துவதற்கு மற்றும் செயற்பணிகளை செய்து முடிப்பதற்கு 1994-ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 21/1994), 2016-ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் (மூன்றாம் திருத்தம்) அவசரச் சட்டத்தால் (தமிழ்நாடு அவசரச் சட்ட எண் 1/2016) திருத்தம் செய்யப்பட்டது.

மேற்சொன்ன தமிழ்நாடு அவசரச் சட்டம் 1/2016 தொடங்கிய தேதிக்குப் பிறகு மேற்சொன்ன ஊராட்சிகளுக்கு சாதாரண தேர்தல் நடைபெற்று ஊராட்சிகளின் முதற்கூட்டம் நடைபெறும் நாள் வரை அல்லது 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி வரை இதில் எது முந்தியதோ அதுவரை மேற்கண்ட 1/2016 தமிழ்நாடு அவசரச் சட்டத்திற்கிணங்க கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகளை நிர்வகிப்பதற்கு தனி அலுவலர்கள் அமர்த்தப்பட்டனர்.

அப்போது இம்மாநிலத்தின் சட்டமன்றப் பேரவையின் கூட்டத்தொடர் நடை பெறாததால் மேற்சொன்ன முடிவிற்கு செயல்வடிவம் கொடுப்பதற்காக அவசரச் சட்டமொன்றைப் பிறப்பிப்பது தேவையானதாக ஆயிற்று.

அதன்படி 2016-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் அவசர சட்டம் (மூன்றாம் திருத்தம்) அவசரச் சட்டமானது (தமிழ்நாடு அவசரச் சட்டம் 1/2016) ஆளுநரால் 2016 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 17-ம் நாளன்று பிறப்பிக்கப்பட்டு அது 2016-ம் ஆண்டு அக்டோபர் திங்கள் 17 ஆம் தேதியிட்ட நாளில் தமிழ்நாடு அரசு சிறப்பிதழ் வெளியிடப்பட்டது.

1995 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் (தேர்தல்) விதிகளின் 14 ஆம் விதியின்படி ஊராட்சி வாக்காளர் பட்டியலுக்கு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் வாக்காளர் பட்டியல் அடிப்படையாக இருக்கின்றது.

தமிழ்நாடு சட்டமன்ற பேரவைக்கான வாக்காளர் பட்டியலின் சிறப்பு சுருக்க சீராய்வு 2017- ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மட்டுமே இந்திய தேர்தல் ஆணையத்திடமிருந்து பெறக்கூடியதாக இருக்கும்.

சட்டமன்றப் பேரவையின் வாக்காளர் பட்டியல்கள் பெறப்பட்டதன் பேரில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், சாதாரணமான தேர்தல்களை நடத்தும் நோக்கத்திற்காக இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட இயலும்.

2017-ஆம் ஆண்டு மார்ச் 2-ம் நாள் மற்றும் 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கிடையில் பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வு 12-ம் வகுப்பு (எச்.எஸ்.சி.) மற்றும் 10-ம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி. ) உள்ளடங்கலாக நடைபெறும் பெரும்பாலான வாக்குப்பதிவு அலுவலர்கள் பள்ளிக்கல்வி துறையின் தேர்வு பணியினை பார்த்துக் கொண்டிருப்பர்.

அதன் காரணமாக அவர்களை ஊரக உள்ளாட்சி அமைப்புக்கான தேர்தல்களை நடத்துவதற்காக தேர்தல் பணிகளுக்காக அமர்த்த முடியாது மிகப் பெரும்பாலான பள்ளிக் கட்டிடங்கள் கணக்குச் சாவடியாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதாலும் அவைகள் ஆண்டுத் தேர்வுக்குப் பிறகு 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி முடிவடைந்த பின்னரே கிடைக்கக் கூடியதாக இருக்கும் என்றும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

எனவே தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் 2016-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதியன்று தனி அலுவலர்களின் பதவி காலம் முடிவதை கருத்தில் கொண்டு ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் அலுவல்களை நிர்வகிக்க பொருத்தமான ஏற்பாடுகளை செய்வதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கலாம் என கேட்டுக்கொண்டுள்ளது.

இதேபோல் நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி வரம்பிற்குட்பட்ட பகுதிகளுக்கு மாவட்ட தேர்தல் ஆணையராக இருக்கும் அதிகாரிகளும் இதே கருத்தை தெரிவித்துள்ளனர்.

தனி அதிகாரிகளின் பதவி காலத்தை 2016-ம் ஆண்டு டிசம்பர் 31-க்கு அப்பால் 2017-ம் ஆண்டு ஜுன் 30-ந்தேதி வரை 6 மாத காலத்திற்கு தனி அதிகாரிகளின் பதவி காலத்தை நீடிப்பதென அரசு முடிவு செய்துள்ளது.

இந்த சட்டம் பிறப்பிக்கப்பட்டபோது சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறாததால் அதற்கு செயல்வடிவம் கொடுப்பதற்காக அவசர சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டியதாயிற்று.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதே காரணத்துக்காக மாநகராட்சி, நகராட்சி திருத்த சட்ட மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டது. சட்ட மசோதாவை தி.மு.க.-காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சியினர் ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பதாக தெரிவித்தனர்.

ஜல்லிக்கட்டு சட்டம் நிறைவேற்றம்: குடியரசுத் தலைவர் ஒப்புதல்

சென்னை:

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வசதியாக தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.

காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளுக்கு விலக்கு அளித்து மத்திய அரசு கொண்டு வந்த அறிவிப்பாணையை உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளிப்பதும் ஒத்திப் போடப்பட்டே வந்தது. இதனால், தமிழக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் சென்னை மெரினா, மதுரை அலங்காநல்லூர் உள்ளிட்ட பல இடங்களில் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தது. ஜன.,23ல் இதற்கான சட்டமுன்வடிவு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு நிரந்த சட்டமாக நிறைவேற்றப்பட்டது.

இதன்பின்னர், இந்தச் சட்டத்தை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்தியாசாகர் ராவ் அனுப்பி வைத்தார். மிருகவதை தடுப்பு சட்டம் – 217( தமிழ்நாடு திருத்தம்) என்ற சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி திங்கள் கிழமை இன்று ஒப்புதல் அளித்தார். இந்நிலையில், ஜல்லிக்கட்டு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன.

ஜல்லிக்கட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
இது குறித்து அவர் தமது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது…

 

இது முஸ்லிம்கள் மீதான தடையல்ல: டிரம்ப் விளக்கம்

உலகின் ஏழு பெரும்பான்மையான முஸ்லிம் நாடுகளிலிருந்து அமெரிக்காவில் குடியேற வருவோருக்கு டிரம்ப் நிர்வாகம் விதித்த தடைக்கு எதிராக நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடந்துவரும் நிலையிலும், டிரம்ப் நிர்வாகம் அந்த உத்தரவை அமல்படுத்துவதில் கண்டிப்புடன் செயல்படுகிறது. டிரம்ப் வெள்ளிக்கிழமை இதற்கான நிர்வாக நடைமுறை உத்தரவில் கையெழுத்திட்டார்.

இந்நிலையில், இது முஸ்லிம்கள் மீதான தடை அல்ல என்று கூறிய அதிபர் டிரம்ப், இது குறித்து விடுத்துள்ள அறிக்கையில், ” மிகவும் பாதுகாப்பான கொள்கைகள்” கொண்டு வரப்பட்ட உடன், விசாக்கள் மீண்டும் கொடுக்கப்படும் என்று கூறினார்.

இருப்பினும் அமெரிக்க அதிபரின் இந்த நடவடிக்கை உலகம் முழுதும் பரவலாக கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. இந்த உத்தரவு அமெரிக்க அரசியல் சட்டத்துக்கு முரணானது என்று 16 மாநிலங்களின் தலைமை அரச வழக்குரைஞர்கள் கூறியுள்ளனர்.

இந்த உத்தரவு, அமெரிக்காவின் அகதிகள் திட்டத்தை ஒட்டுமொத்தமாக நிறுத்தியதுடன், சிரியாவிலிருந்து அகதிகள் வருவதை காலவரையறையின்றி தடை செய்துள்ளது. மேலும் ஏழு முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளிலிருந்து, எந்த மதத்தைச் சேர்ந்த மக்களும் வருவதை இது தாற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

இந்த உத்தரவு பிறப்பிக்கப்படும்போது, அமெரிக்காவுக்கு விமானம் மூலம் வந்து கொண்டிருந்தவர்கள், அமெரிக்கா வந்திறங்கியவுடன் தடுக்கப்பட்டனர். அவர்களுக்கு செல்லுபடியாகும் விசா அல்லது குடியேற்ற அனுமதிப் பத்திரங்கள் இருந்த போதிலும், அவர்கள் தடுத்து வைக்கப்பட்டனர். வெளிநாடுகளில் விமான நிலையங்களில் இருந்து அமெரிக்காவுக்கு விமானம் மூலம் செல்லவிருந்த நிலையில், மேலும் எத்தனை பேர் இவ்வாறு திருப்பியனுப்பட்டனர் என்பது குறித்து தகவல் இல்லை.

கடந்த சனிக்கிழமை அதிபரின் இந்த உத்தரவுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் அமெரிக்காவில் உள்ள விமான நிலையங்களில் கூடி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழக்கறிஞர்கள் பலர் இலவச சட்ட உதவி செய்தனர். மேலும், ஞாயிற்றுக்கிழமை வெள்ளை மாளிகைக்கு முன்பாகவும், நியூயார்க்கில் உள்ள டிரம்ப் டவருக்கு வெளியேயும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

அமெரிக்க கிரீன் கார்ட் வைத்திருப்பவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று வெள்ளை மாளிகை தலைமை அதிகாரி ரெயின்ஸ் ப்ரீபஸ் கூறினார். ஆனால் இந்த உத்தரவு அமலுக்கு வந்ததில் இருந்து சிலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த உத்தரவு மிகவும் குழப்பமான நிலையில் அமல்படுத்தப்பட்டிருப்பதாக வரும் விமர்சனங்களை ப்ரீபஸ் நிராகரித்தார். அமெரிக்காவுக்கு பயணம் செய்து கொண்டிருந்த 3.25 லட்சம் பேரில் 109 பேர் மட்டுமே தடுத்து வைக்கப்பட்டதாக அவர் கூறினார்.

ஆனால் ப்ரீபஸின் இந்தக் கருத்து குடியரசுக் கட்சியினர் சிலர் மத்தியில் எழுந்துள்ள கவலைகளைப் போக்கவில்லை. இந்த உத்தரவு, குறிப்பாக கிரீன் கார்ட் பெற்றிருப்பவர்கள் விஷயத்தில், மிகவும் மோசமாக அமல்படுத்தப்பட்டிருப்பதாக அமெரிக்க செனட் வெளியுறவு கமிட்டியின் குடியரசுக் கட்சித் தலைவர் செனட்டர் பாப் கார்க்கர் கூறினார். இதை சரிப்படுத்த நிர்வாகம் பொருத்தமான திருத்தங்களைச் செய்யவேண்டும் என்று அவர் கூறினார்.

அமெரிக்கா இப்போது, மனித நேயக் குறைவான தன்மை உள்ள நாடாகத் தோன்றுகிறது என்று கூறிய ஜனநாயக கட்சியின், செனட் எதிர்கட்சித் தலைவர் , சுக் ஷூமர், ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த உத்தரவை ரத்து செய்ய புதிய மசோதா ஒன்றை அறிமுகப்படுத்துவர் என்று கூறினார்.

ரூபெல்லா தடுப்பூசி குறித்து வாட்ஸ்அப் மூலம் வதந்தி பரப்பினால் நடவடிக்கை! எச்சரிக்கை!

சென்னை:
ஆதாரம் எதுவும் இல்லாமல் ரூபெல்லா தடுப்பூசி குறித்து வாட்ஸ்-அப் மூலம் தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜய பாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காந்திஜி நினைவு நாளான இன்று தொழுநோய் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபாய் காந்தி பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் நடந்தது. இதில் பங்கேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தலைமையில் உறுதி மொழி எடுக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியபோது,

தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி முகாம் பிப்ரவரி 6 மற்றும் 28-ந்தேதியில் நடைபெற உள்ளது. ஒரு கோடியே 80 லட்சம் சிறுவர்களுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. திட்டமிட்டப்படி இந்த தடுப்பூசி முகாம் நடைபெறும். அடிப்படை ஆதாரம் இல்லாமல் ரூபெல்லா தடுப்பூசி குறித்து வாட்ஸ்-அப் மூலம் தவறான தகவல்களை பரப்புவோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

தொழுநோயை ஒழிப்பதற்காக 1983 முதல் கூட்டு மருந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆரம்ப நிலையிலேயே தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களை கண்டுபிடித்து சிகிச்சை அளிக்கும்போது குறைபாடற்ற சமுதாயத்தை உருவாக்கலாம். இதற்கான முயற்சி தான் ‘ஸ்பர்ஷ்’ தொழுநோய் விழிப்புணர்வு முகாம். இன்று முதல் பிப்ரவரி 13-ந்தேதி வரை தொடர்ச்சியாக பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள் தமிழகம் முழுவதும் நடைபெறும். தமிழகத்தில் கடந்த வருடத்தில் 4925 தொழு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து ஊனம் ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது. எனவே அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு கொடுத்து தொழுநோய் அறிகுறி உள்ளவர்களை பொது சுகாதார ஊழியர்களுக்கு தெரியப்படுத்தி தொடர் கூட்டு மருந்து சிகிச்சை வழங்கி தொழுநோயற்ற சமுதாயத்தை உருவாக்குவோம் – என்றார்.

பீட்ஸாவைக் காதலித்து திருமணம்!: இங்கிலாந்து பெண் விநோதம்

லண்டன்:
பீட்சாவை காதலித்து அதையே ஒரு பெண் திருமணம் செய்த வினோத நிகழ்ச்சி நடந்துள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு ‘பீட்சா’ என்றால் கொள்ளை பிரியம். பல வகையான ‘பீட்சா’க்களை சாப்பிட்டு ருசி பார்த்த அவர் அதையே திருமணமும் செய்து கொண்டார். அந்த இளம் பெண்ணின் பெயர் கிறிஸ்டினா வாக்னர் (18).

‘பீட்சா’ மீது அளவுக்கு அதிகமாக பிரியம் கொண்ட கிறிஸ்டினாவுக்கு அதன் மீது காதல் ஏற்பட்டது. எனவே பீட்சாவையே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த அவர் தனது பாட்டியின் திருமண உடையை எடுத்தார். அதனை அணிந்து தன்னை புது மணப்பெண் ஆக்கி கொண்டார். இந்த விவரத்தை தனது நெருங்கிய நண்பரும், புகைப்பட கலைஞருமான மெர்சி ஹாரிசிடம் தெரிவித்தார்.

அவர் கிறிஸ்டினா வீட்டிற்கு விரைந்தார். பின் திருமண உடையுடன் பீட்சாவை கையில் ஏந்தி, அதனைக் கடித்து சுவைத்தபடி போட்டோவுக்கு ‘போஸ்’ கொடுத்தார். பீட்சாவை தான் திருமணம் செய்து கொண்டதாகவும் அதை கணவராக ஏற்றுக் கொண்டதாகவும் ‘பேஸ்புக்’ கில் தகவல் வெளியிட்டார். அது தொடர்பான போட்டோக்களையும் வெளியிட்டு விநோத அலைகளை ஏற்படுத்திவிட்டார்.