Home Blog Page 5846

தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த முயன்ற சீமான் கைது

மதுரை:

தடையை மீறி ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த முயன்ற நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டார்.

ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்தால், இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு இல்லாமல் பொங்கல் பண்டிகை நடந்து முடிந்தது. இருப்பினும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரை மாவட்டத்தில் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் தடையை மீறி மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என அக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார்.

இதை அடுத்து மதுரை மாவட்டத்தில் இன்று, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பாலமேட்டில் காளைகளை அவிழ்த்து விடும் வாடிவாசல் பகுதியிலும் ஆயுதம் தாங்கிய போலீசார் நிறுத்தப்பட்டனர். முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சிலர் இரவோடு இரவாக கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரை வந்தார். இன்று காலை அவர் தங்கியிருந்த பைபாஸ் ரோடு விடுதிக்குச் சென்ற போலீசார், அங்கிருந்து வெளியே வந்த சீமானை தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாரிடம், தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினால்தான் எங்களை கைது செய்ய வேண்டும். இப்போது நான் பாலமேடு செல்கிறேன் எனக் கூறினார் சீமான்.

இதை அடுத்து, அங்கிருந்த புறப்பட்ட சீமான், செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்கள் அமைப்பின் புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் 20 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். எந்தத் தடையையும் மீறி ஜல்லிக்கட்டை நடத்துவோம் என்றார். இந்நிலையில் மதுரை அருகே உள்ள பாசிங்காபுரம் பகுதியில் அவரது காரை தடுத்து நிறுத்திய போலீசார் சீமானைக் கைது செய்தனர். அவருடன் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சுமார் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

செங்கோல் ஆதீனம் மகாசமாதி அடைந்தார்: இந்துமுன்னணி இரங்கல்

சென்னை:
தூத்துக்குடி மாவட்டம் பெருங்குளம் செங்கோல் ஆதினத்தின் 102வது குரு மகா சந்நிதானம் மகா சமாதி அடைந்தமைக்கு இந்து முன்னணி சார்பில் அஞ்சலி தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஷ்ரீவைகுண்டம் தாலுகா பெருங்குளம் பகுதியில் எழுந்தருளியிருந்த திருக்கயிலாயப் பரம்பரை செங்கோல் ஆதினத்தின் 102வது குரு மகா சந்நிதானம் சீர்வளர் சீர் கல்யாண சுந்தர தேசிக சத்தியஞான சுவாமிகள் நேற்று மாலை முக்தி அடைந்தார். அவருக்கு இந்து முன்னணி சார்பில் மாநிலத் துணைத் தலைவர் வி.பி. ஜெயகுமார் அவர்கள் இறுதி மரியாதை செலுத்தினார்.

குருமகா சந்நிதானத்திற்கு இந்து முன்னணி சிரம் தாழ்த்தி அஞ்சலியைச் செலுத்துகிறது. தமிழகம் ஆன்மீக பூமியாக விளங்க, தமிழ் தழைத்தோங்கு  ஆதினங்களும், திருமடங்களுமே அஸ்திவாரமாக இருந்து தொண்டாற்றி வருகின்றன. இதில் மிகவும் பழமையான ஆதினங்களில் ஒன்றான செங்கோல் ஆதினத்தின் கர்த்தராக இருந்த சுவாமிகள் ஆன்மிகத்திற்கு பெரும் பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குருமகா சந்நிதானம் மகா சமாதி அடைந்ததற்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
– என்று அந்த அஞ்சலிக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஜல்லிக்கட்டு கருத்து: ‘நாம் தமிழர்’ சீமான் கைதாகிறார்?

 

மதுரை:
ஜல்லிக்கட்டுக் கருத்துக்காக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை போலீசார் கைது செய்யவுள்ளனர்.

ஜல்லிக்கட்டை நடத்த உச்ச நீதிமன்றம் விதித்துள்ள தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்துவோம் என்று சீமான் கூறியிருந்தார்.

அதைத் தொடர்ந்து மதுரை புறநகர் பகுதியில் சீமானின் ஆதரவாளர்கள் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜல்லிக்கட்டை நடத்த பாலமேடு செல்ல இருப்பதாக சீமான் அறிவித்துள்ளதால், சீமானைக் கைது செய்ய தற்போது மதுரையில் அவர் தங்கியுள்ள விடுதியில் போலீசார் தயார் நிலையில் உள்ளனர்.

இனி வாட்ஸ் அப் அப்ளிகேஷன் இலவசமாகவே கிடைக்கும்

இனி வாட்ஸ் அப் அப்ளிகேஷனை இலவசமாகவே இறக்கி பயன்படுத்திக் கொள்ளலாம். சந்தா கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு வாட்ஸ் அப் அப்ளிகேஷனை, ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியது. உலகம் முழுவதும் சுமார் 100 கோடி பேர் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ் அப் சேவை முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வாட்ஸ் அப் வாடிக்கையாளர்களுக்கு, ஒரு வருட இலவச பயன்பாட்டுக்கு பிறகு, சந்தா முறை அறிமுகம் செய்யப்பட்டது.  மேலும், வாட்ஸ் அப் அப்ளிகேஷனை இலவசமாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்தது. இதையடுத்து,  இனி வரும் காலத்தில், ஆண்டு சந்தா இன்றி, இலவசமாக பயன்படுத்தலாம் என வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நீர்நிலைகளில் கட்டுமானங்கள்; பிப். 9 வரை நீதிமன்ற தடை நீட்டிப்பு

சென்னை:

தமிழ்நாடு முழுவதும் உள்ள நீர் நிலைகள் மீது எவ்வித கட்டுமானங்களும் கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்திருந்த இடைக்காலத் தடை வரும் பிப்.9-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நீர் நிலைகளில் எவ்வித கட்டுமானமும் கட்டப்படவில்லை என்பது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் இயற்கை வளம் மற்றும் பெரும்பள்ள ஓடை பாதுகாப்பு நல சங்கத் தலைவர் கே.சண்முகசுந்தரம் தாக்கல் செய்த மனு:

ஈரோடு மாவட்டம், கதிரம்பட்டி கிராமத்தில் இருக்கும் பெரும் பள்ள ஓடையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி கடந்த 2009-ம் ஆண்டு தொடர்ந்த வழக்கில், ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் படி ஈரோடு வட்டாட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நீர் நிலைகளைப் பாதுக்காக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றமும் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. ஆனால், ஈரோடு மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை பொறியாளர் ஆகியோர் பெரும்பள்ள ஓடையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரி, ஓடையை மீட்டு பழைய நிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த விஷயத்தில் கடமையைச் செய்ய அவர்கள் தவறிவிட்டனர். எனவே, பெரும்பள்ள ஓடையை தூர்வாரி மீட்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ் கே.அக்னிகோத்ரி, பி.தேவதாஸ் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, குளம் போன்ற நீர் நிலைகளில் எவ்வித கட்டுமானமும் கட்டப்படவில்லை என்பது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், இவ்வழக்கு விசாரணையை பிப்.9-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

மக்கள் குறை தீர்க்க அம்மா அழைப்பு மையம்: இன்று தொடங்குகிறது

 

பொதுமக்களின் குறைகளைக் கேட்கும் வகையில், தமிழக அரசு மற்றொரு திட்டமாக ‘‘அம்மா அழைப்பு மையம்’’ என்ற திட்டத்தை செயல்படுத்தவுள்ளது.

இந்த மையத்திற்கு 1100 என்ற இலவச எண் தரப்பட்டுள்ளது. எந்த குறையாக இருந்தாலும் எந்த இடத்தில் இருந்தும் இந்த எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். அந்தக் குறை, சம்பந்தப்பட்ட துறைக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும்.

அதற்கு உடனடியாகத் தீர்வு காணப்பட்டு, குறை கூறியவருக்கு பதிலளிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்தப் புதிய திட்டத்தை இன்று பிற்பகல் 12.30 தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்.

லோக் அயுக்தா சட்டம், முழு மதுவிலக்கு அறிவிப்புகளை வெளியிட வேண்டும்: ராமதாஸ்

சென்னை:
லோக் அயுக்தா சட்டம், முழு மதுவிலக்கு அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்று பாமக., நிறுவுனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்,.

இது  குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாட்டின் 14-ஆவது சட்டப்பேரவையின் கடைசிக் கூட்டத்தொடர் நாளை மறுநாள் ஆளுனர் ரோசய்யா உரையுடன் தொடங்குகிறது. பேரவைத் தலைவர் தொடங்கி ஆளுனர் வரை ஜெயலலிதாவை புகழப்போவதைத் தவிர ஆக்கப்பூர்வமாக வேறு எதுவும் இக்கூட்டத் தொடரில் நடைபெறப் போவதில்லை. ஆனாலும், ஆட்சியாளர்கள் நினைத்தால் கடந்த 5 ஆண்டுகளாக செய்த பாவங்களுக்கு பரிகாரமாக  சில நல்ல அறிவிப்புகளை வெளியிட்டு, சில சிறந்த சட்டங்களை இயற்ற வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

2011&ஆம் ஆண்டு முதலமைச்சராக பதவியேற்ற ஜெயலலிதா மக்கள் நன்மைக்காக செயல்படுத்திய திட்டம் என்று பெருமிதத்துடன் சொல்லிக்கொள்ள ஒன்று கூட இல்லாதது மிகப்பெரிய சோகம் தான். ஆனால், மக்களை பாதிக்கும் வகையிலான செயல்பாடுகளை பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். குறிப்பாக ஊழலும், மதுவும் கடந்த 5 ஆண்டுகளில் தமிழக மக்களை பாடாய்படுத்தி உருக்குலைத்து விட்டன. சத்துணவுக்கு முட்டை வாங்குவதில் தொடங்கி நியாயவிலைக் கடைகளுக்கு துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்புகளை கொள்முதல் செய்வது, தனியாரிடம் மின்சாரம் வாங்குவது, கிரானைட், ஆற்று மணல் மற்றும் தாதுமணல் குவாரிகளை அனுமதிப்பது வரை அனைத்திலும் ஊழல் தலைவிரித்து ஆடியது. அ.தி.மு.க. அரசின் ஊழல்கள் குறித்து ஆளுனரிடம் ஆதாரங்களுடன் புகார் கொடுத்து அடுத்த மாதத்துடன் ஓராண்டு நிறைவடையும் நிலையில், இதுவரை அதன் மீது விசாரணை நடத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், ஊழல்கள் மட்டும் தடையின்றி தொடர்கின்றன.

மற்றொரு பக்கம் மது மக்களை அழித்துக் கொண்டிருக்கிறது. அதை ஒழிக்க வேண்டிய தமிழக அரசு இலக்கு நிர்ணயித்து மது விற்பனை செய்வதன் மூலம் மக்களிடமிருந்து பணத்தை பறித்துக் கொண்டே இருக்கிறது. 5 ஆண்டுகளில் அரசு மதுக்கடைகள் மூலம் விற்பனை செய்யப்பட்ட மது வகைகளின் மதிப்பு சுமார் ரூ.1.90 லட்சம் கோடி ஆகும். இதில் அரசுக்கு வரி வருவாயாக கிடைத்த ரூ.1.20 லட்சம் கோடி தவிர மீதமுள்ள ரூ.70 ஆயிரம் கோடி அ.தி.மு.க.வினரும், தி.மு.க.வினரும் நடத்தும் மது ஆலைகளுக்குத் தான் வருமானமாக கிடைத்திருக்கிறது. அரசின் மொத்த வருவாயில் மூன்றில் ஒரு பங்கு மது விற்பனை மூலம் தான் கிடைக்கிறது என்பது மிகப்பெரிய அவமானமாகும். ஆனால், அதைப் பற்றியெல்லாம் ஜெயலலிதா அரசு கவலைப்படவில்லை. அனைத்து விதிமுறைகளையும் மீறி தெருவுக்குத் தெரு மதுக்கடைகளை திறப்பது, 4 வயது குழந்தைக்கு கூட மது புகட்டப்படுவதற்கு காரணமாக இருப்பது என அனைத்து சீரழிவுகளுக்கும் தமிழக அரசு உற்ற துணையாக இருக்கிறது.

தமிழகத்தின் மிக மோசமான இந்த இரு தீமைகளையும் ஒழிக்க வேண்டும் என்பதற்காகத் தான் பாட்டாளி மக்கள் கட்சி, தொடங்கப்பட்ட நாளில் இருந்தே போராடி வருகிறது. இரு தீமைகளையும் ஒழிப்பதற்கான செயல்திட்டங்களையும் பா.ம.க. வகுத்துத் தந்திருக்கிறது. ஆனால், இந்த தீமைகளை ஒழிப்பதை விட வளர்ப்பதில் தான் தமிழகத்தை ஆளும் கட்சியும், ஆண்ட கட்சியும் தீவிரம் காட்டி வருகின்றன. ஊழலை ஒழிப்பதற்காக 20 மாநிலங்களில் லோக்அயுக்தா அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் ஆந்திரா, தெலுங்கானா, கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் லோக்அயுக்தா  ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் அத்தகைய லோக்அயுக்தா ஏற்படுத்தப்படவில்லை. அதேபோல், கேரளத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் முதலும், பிகாரில் வரும் ஏப்ரல் முதலும் படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் அதற்கான அறிகுறியே தென்படவில்லை.

எந்த தவறு செய்தவர்களுக்கும் பாவமன்னிப்பு உண்டு என்பதைப் போல ஊழலுக்கும், மதுவுக்கும்  துணை போன அ.தி.மு.க. அரசு அந்த பாவத்திலிருந்து விடுபட்டு பரிகாரம் தேடிக்கொள்ள கடைசி வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த இரு தீமைகளையும் நிரந்தரமாக ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது தான் அந்த பரிகாரம் ஆகும். அதன்படி, தமிழகத்தில் முழு மதுவிலக்கு நடைமுறைப் படுத்தப்படும் என்று ஆளுனர் உரையில் அறிவிக்க வேண்டும்; இதே கூட்டத்தொடரில் லோக்அயுக்தா அமைப்பை ஏற்படுத்துவதற்கான சட்ட முன்வடிவை கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு செய்தால் பதவியிலிருந்து விலகும் போது பாவத்தின் சுமையில் ஓரளவையாவது இறக்கி வைத்துவிட்டு செல்லலாம். இல்லாவிட்டால் மக்களின் கோபத்திற்கு ஆளாகி விரட்டியடிக்கப்படுவது உறுதியாகிவிடும்.

ஒருவேளை இந்த ஆட்சியில் மது விலக்கு அறிவிப்பும், லோக்அயுக்தா அமைப்பை ஏற்படுத்துவதும்  சாத்தியமாகவில்லை என்றால், இவற்றை பா.ம.க. சாத்தியமாக்கும். ஏற்கனவே உறுதியளித்தவாறு பா.ம.க. ஆட்சியில் முதல் கையெழுத்து மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்காகவும், முதல் சட்டம் ஊழல் ஒழிப்புக்கான லோக்அயுக்தா அமைப்பை ஏற்படுத்துவதற்காகவும் தான் இருக்கும் என்பதுஉறுதி!

மதுகுடிப்பது தமிழன் கலாசாரம்; அதியமானும் ஔவையும் மது குடித்திருக்கிறார்கள்: வைரமுத்து

சென்னை:

மதுகுடிப்பது தமிழனின் பழைய கலாச்சாரம்; ஔவையும் அதியமானும்கூட மது அருந்திய குறிப்புகள் உண்டு என்று கவிஞர் வைரமுத்து பேசினார்.

திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகரிலுள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு விழாவில் கூடியிருந்தவர்களிடம் கவிஞர் வைரமுத்து உரையாற்றினார்.

அப்போது அவர், ஜல்லிக்கட்டு குறித்தும், தமிழகத்தில் நிகழ்ந்த மது ஒழிப்பு குறித்தும் சில கருத்துகளைச் சொன்னார்.

அவர் பேசியதிலிருந்து…

“ஜல்லிக்கட்டில் மாடுகளுக்கு எந்தக் காயமும் இல்லை. சட்டம் என்பது காட்சிப்பட்டியலில் காளைகளை சேர்த்ததால் தடை செய்யப் பட்டிருக்கிறது. சட்டத்தை திருத்தினால் ஒழிய காளைகளுக்கு விடுதலை இல்லை. வாடிவாசலில் தேங்கி நிற்கிற காளைகள் வெளிவரவேண்டும் என்றால் சட்டத்திருத்தம்தான் தெளிவான தீர்க்கமான தீர்வாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

ஏறு தழுவுதல் என்பது ஈராயிரம் ஆண்டுக் கலாச்சாரம். அந்த ஈராயிரம் ஆண்டுக் கலாச்சாரத்தை ஒரு சட்டம் முடக்குகிறது என்பதை தமிழினம் ஏற்றுக் கொள்ளாது. ஏறுதழுவுதலில் காளைகளுக்கு எந்தக் காயமும் இல்லை. அது ஒரு வீர விளையாட்டு மனிதர்கள் தங்கள் வீர விளையாட்டை எருதுகளோடு விளையாடிக் கொண்டாடுகிறார்கள் அது ஒரு விளையாட்டு என்று கருத வேண்டுமே தவிர விலங்குவதை என்று கருதக் கூடாது.

திருவள்ளுவரை உயர்த்திப் பிடிக்கிற போது தமிழர்கள் தங்களையே உயர்த்திப் பிடிக்கிறார்கள் என்று பொருள். திருக்குறள் தமிழில் எழுதப்பட்ட நூல் என்ற போதிலும் அது எல்லா மொழிகளுக்கும் பொதுவானது.

திருக்குறள் தமிழர்களுக்குச் சொல்லப்பட்ட போதிலும் அது எல்லா மாநிலத்திற்கும் பொதுவானது. இங்கே ‘உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு’ என்று ஒரு குறள் பாடப்பட்டது. திருவள்ளுவர் உடுக்கை இழந்தவன் கைபோல  என்றுதான் எழுதியிருக்கிறார்.

சட்டை இழந்தவன் கைபோல, வேட்டி இழந்தவன் கைபோல, சேலைஇழந்தவள் கைபோல,  ஜீன்ஸ்இழந்தவன் கைபோல என்று எழுதவில்லை.காரணம் ஆடைகள் மாறலாம். உடுத்தல் என்கிற கலாச்சாரம் என்றும் மாறாது. எனவே காலம் கடந்து  நிலைக்கவே திருவள்ளுவர்  ‘உடுக்கை’ என்று எழுதினார்.

முதலில் திருவள்ளுவரை இன்று நிரம்பவே நினைக்க வேண்டிய சூழலில் தமிழ்ச் சமூகம் இருக்கிறது. மது அருந்துதல் என்பது தமிழர்களின் பழைய கலாச்சாரம் தமிழன் மது அருந்தவில்லை என்பது பொய். அதியமான் அருந்தியிருக்கிறான்; ஔவை கூட மது அருந்தியிருக்கிறாள் என்று குறிப்பு இருக்கிறது. ஆனால் அந்த மது ,வாழ்வுக்கு எதிராக, கலாச்சாரத்துக்கு எதிராக, மனிதகுல மேன்மைக்கு எதிராகஆகிற போது அதை எதிர்த்து முதலில் குரல் கொடுத்தவர் திருவள்ளுவர் என்கிற பெருங்கவிஞர்தான்  என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

மதுவுக்கு எதிராக எழுந்த முதல்  திருக்குரல் திருக்குறள்தான். கள்ளுக்கு எதிராக, போதைக்கு எதிராக, மயக்கத்துக்கு எதிராக அந்த கருத்தை தமிழகம் அமல் படுத்த வேண்டிய கட்டாயத்தில் இப்போது நிற்கிறது.

தமிழ்ச் சமூகம் மனித வளம் மிக்கது இம்மண்ணின் மிகப்பெரிய சொத்து மனித வளம்தான். அந்த மனித வளத்தை பாழ்படுத்துகிற ,பின்னுக்குத் தள்ளுகிற மனித வள மேம்பாட்டைக் குலைக்கிற மதுவை முற்றிலும் எதிர்த்து போராடினால் ஒழிய தமிழ்ச் சமூகம் மேம்பட வழியில்லை என்றே தோன்றுகிறது.

மதுவற்ற தமிழகம், மதுவற்ற தமிழன்,வள்ளுவன் கனவு கண்ட தமிழகம் உருவாக வேண்டும் என்பதே இந்தத் திருவள்ளுவர் திருநாளில்  நாம் அறிந்து கொள்ள வேண்டிய செய்தியாக  இருக்கிறது. இந்த நேரத்தில் மேலும் ஒரு செய்தி ,தமிழர்களின் வீர விளையாட்டு ஏறுதழுவுதல் .அது இப்போது தடைசெய்யப் பட்டிருக்கிறது .அந்தத் தடையை யார் செய்தார்கள் என்பது இரண்டாம் பட்சம். நீதிமன்றத்தைக் குறை சொல்லி ஒரு பயனும் இல்லை. சட்டத்தைத்தான் குறை சொல்ல வேண்டும்…” என்று பேசினார்.

செய்தி: ஆர்.கே.அருள்செல்வன்

நோயாளிகள் தொடர் மரணம் எதிரொலி : இந்திய மனநல மருத்துவர் அமெரிக்காவில் கைது

 
இந்திய வம்சாவளியை சேர்ந்த நரேந்திர நாகரெட்டி அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்துக்கு உட்பட்ட கிளேட்டன் கவுண்டியில் உள்ள ஜோன்ஸ்போரா பகுதியில் மனநல மருத்துவராக பணியாற்றி வருபவர் .மேலும் நரேந்திர நாகரெட்டி அமெரிக்காவில் மருந்து ஆலை ஒன்றும் நடத்தி வருக்கிறார் . இவரிடம் சிகிச்சை பெற்ற 36 நோயாளிகள் தொடர்ந்து மரணம் அடைந்தனர்.
 
இதைத்தொடர்ந்து டாக்டர் நரேந்திர நாகரெட்டிக்கு எதிராக புகார்கள் குவிந்தன. புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டதில் வலி நிவாரணி மருந்துகளை நோயாளிகளுக்கு நியாயமற்ற காரணங்களுக்காக வழங்கியிருப்பதும் வழங்கியது கண்டறியப்பட்டது.
 
மேலும் இறந்த 12 நோயாளிகளின் பிரேத பரிசோதனை அறிக்கைப்படி, இவர் அவர்களுக்கு அளவுக்கு அதிகமான மருந்துகளை வழங்கியிருந்ததும் கண்டறியப்பட்டது. மேலும் ஒபியேட், பென்சோடியாசெபைன் போன்ற மருந்துகளை கடந்த சில ஆண்டுகளாக இவர் தனது நோயாளிகளுக்கு அளவுக்கு அதிகமாக வழங்கியதும் தெரியவந்தது.
 
இதனால் டாக்டர் நாகரெட்டிக்கு எதிராக கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி அவரது வீடு மற்றும் அலுவலகங்களை சோதனையிட்ட அதிகாரிகள், நாகரெட்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரது சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இவர்

இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்த ரஷ்ய அரசு !

 
சென்னை விமான நிலையத்துக்கு நேற்று காலை 9.30 மணிக்கு அபுதாபியிலிருந்து ஒரு விமானத்தில் வந்து இறங்கிய ரஷ்யாவைச் சேர்ந்த பாதிரியார் திருப்பி அனுப்பப்பட்ட சம்பவத்துக்கு அந்நாட்டு அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.பாதிரியார் சேராபிஹிம், இந்திய குடியுரிமை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். பல மணி நேர விசாரணைக்குப் பின்பு இரவு 10 மணிக்கு அவர் திருப்பி அனுப்பப்பட்டார்.
 
இச்சம்பவம் குறித்து தில்லியில் உள்ள ரஷ்ய தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளதாவது :-
 
ரஷ்ய நாட்டைச் சேர்ந்த பாதிரியார் சேராபிஹிம் திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் கண்டனத்துக்குரியது. மேலும், அவரை சந்தித்து பேசுவதற்கு ரஷ்ய அதிகாரிகளும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதை ஏற்றுக் கொள்ள முடியாது. மேலும், பாதிரியாருக்கு தேவையான அடிப்படை வசதிகளான உணவு உள்ளிட்டவை வழங்குவதற்கு ரஷ்ய தூதரகம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டது. இது இந்தியா ரஷ்யா இடையே உள்ள பரஸ்பர உறவுக்கு எதிராகும் என்று கூறப்பட்டுள்ளது.