Home Blog Page 5876

ஜன.7ல் சென்னையில் உலகளாவிய முதல் தண்ணீர் மேலாண்மைக் கண்காட்சி

மதுரை:

சென்னையில் 2016 வருடத்தின் உலகளாவிய முதல் தண்ணீர் மேலாண்மைக் கண்காட்சி SRW WATER EXPO 2016 ஜனவரி 7 ஆம் தேதி தொடங்குகிறது. .
இதுகுறித்து ஆதித்யா செல்வராஜ் கூறியது…
வாட்டர் ப்யூரிஃபையர் தொழில் முனையும் நிறுவனங்களில் முன்னணியில் உள்ள மதுரையைச் சேர்ந்த ஆதித்யா சுவிட் வாட்டர் டெக்னாலஜிஸ் இந்தியா. நிறுவனமானது முதல் தென்னிந்திய RO உதிரி பாகங்கள் உற்பத்தி நிறுவனம் என்ற பெருமையை பெற்றது, சீனா, தைவான் மற்றும் அமெரிக்கா நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் உதிரி பாகங்கள் தூத்துக்குடி துறைமுகம் வாயிலாக இறக்குமதி செய்யப்பட்டு தண்ணீர் சுத்திகரிப்பு உபகரங்களின் உதிரி பாகங்களை மொத்த வினியோகம் செய்து வருகிறோம். நாங்கள் உற்பத்தி செய்யும் பொருள்கள் மத்திய கிழக்கு நாடுகளில் கிடைக்கின்றது.

சென்னையில் தண்ணீர் மேலாண்மைக் கண்காட்சியில் வழக்கம்போல் எங்கள் நிறுவனமும் பங்கு பெறுகிறது. இந்த வருடமும் கே-1 மற்றும் கே-2 என்ற இரண்டு இலக்க தனி அமைப்புகளில் பங்கு பெற்று புதிய பொருள்களை அறிமுகம் செய்கிறோம்.

இந்த முறை தமிழகம், கேரளா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள தண்ணீர் சுத்திகரிப்பு தொழில் முனைவோர் நலனுக்காக உருவாக்கப்பட்ட தென்பிராந்திய தண்ணீர் சுத்திகரிப்புக் கருவிகள் உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்கம் நடத்துவது தனிச்சிறப்பு.

இந்தக் கண்காட்சியை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பார்வையிடலாம். இதற்கான பணியை சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் இரவு பகலாகத் தொடர்ந்து செய்து வருகின்றனர், முக்கியமான சந்திப்புகளில் பதாகைகள், தினசரி நாளேடுகள், அலைபேசி குறுந்தகவல்கள், பேருந்துகளில் பின்புறம சிறிய பதாகைகள், பண்பலை வானொலி, சமூக வலைதளம் போன்றவை மூலம் விளம்பரம் செய்து வருகின்றனர்,

தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய அளவில், இந்தத் தண்ணீர்க் கண்காட்சி நடத்தப்படுகிறது. மூன்று நாள்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் உள்நாடு, வெளிநாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளைக் காட்சிக்கு வைப்பார்கள். ஜப்பான், சீனா, அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்களும் கண்காட்சியில் பங்கேற்க உள்ளன. இதில் சுமார் 10 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 190 க்கும் அதிகமான நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

தண்ணீர், கழிவுநீர் மேலாண்மை, மறுசுழற்சி, தண்ணீர் வினியோகம், போக்குவரத்து, குடிநீர் சுத்திகரிப்பு, மேலாண்மை, கடல் நீரைக் குடிநீராக மாற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் உள்ள நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களின் இயந்திரங்கள், உற்பத்திப் பொருள்களை காட்சிக்கு வைக்க உள்ளனர்.

தண்ணீர் ஆதாரம், பயன்பாடு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கும் நடைபெறும். இதில் தண்ணீர் துறையில் கடைபிடிக்க வேண்டிய சர்வதேச தொழில்நுட்பங்கள், மேம்பாடுகள் குறித்து விவாதிக்கப்படும். பல்வேறு தலைப்புகளில், தண்ணீர் துறைச் சார்ந்த வல்லுனர்கள் உரையாற்றுவர். அடுத்த 10 ஆண்டுகளில் தண்ணீர் நிர்வாகத்தில் ஏற்படும் சவால்களை எப்படி சமாளிப்பது என்பதும் குறித்தும் விவாதிக்கப்படும். பிரான்ஸ், சிங்கப்பூர், கனடா, சீனா உள்ளிட்ட 12 நாடுகளிலிருந்து, தண்ணீர், கழிவுநீர் மேலாண்மை நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் பங்கேற்க உள்ளனர்” என்றார் .

ஏ.பி. பரதன் மறைவு: ராமதாஸ், ஜி.கே.வாசன் இரங்கல்

சென்னை:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் ஏ.பி.பரதன் மறைவுக்கு பாமக., நிறுவுனர் ராமதாஸ், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ராமதாஸ் வெளியிட்ட இரங்கல் குறிப்பில்,

பொதுவுடமை இயக்கத்தின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்தவருமான ஏ.பி.பரதன் அவர்கள் உடல் நலக்குறைவால் தில்லியில் இன்று இரவு காலமானார் என்ற செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும், வேதனையும் துயரமும் அடைந்தேன்.
இப்போதைய வங்கதேசத்தில் உள்ள ஷிலெட் கிராமத்தில் பிறந்த பரதன் நீண்ட நெடிய வரலாற்றுக்கு சொந்தக்காரர் ஆவார். கடந்த 75 ஆண்டுகளாக பொதுவாழ்க்கையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர். 4.5 ஆண்டு காலம் சிறையிலும், இரண்டு ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கையிலும் இருந்த பரதன் அடித்தட்டு மக்களுக்காகவே தமது வாழ்க்கையின் பெரும்பகுதியை செலவழித்தார். ரயில்வே தொழிலாளர்கள், ஜவுளித் தொழிலாளர்கள், மின்சாரத் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் ஆகியோரின் நலனுக்காக போராடி ஏராளமான உரிமைகளை பெற்றுக் கொடுத்தவர்.

பரதனின் மறைவு பொதுவுடைமை இயக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், பொதுவுடைமைத் தோழர்களுக்கும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். என்று கூறியுள்ளார்.

இதேபோல், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஏ.பி.பரதன் மறைவு: கருணாநிதி இரங்கல்

சென்னை:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஏ.பி.பரதன் சனிக்கிழமை நேற்று காலமானார். அவரது மறைவுக்கு திமுக., தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட இரங்கல் குறிப்பில்,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரான ஏ.பி.பரதன், மறைந்துவிட்ட செய்தியறிந்து அதிர்ச்சி அடைந்தேன். ஆழ்ந்த ஈடுபாட்டால், இளம் வயதிலேயே தம்மை கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைத்துக் கொண்டவர். சாதாரண மக்களுக்கான போராட்டங்களில் தம்மை ஒரு போராளியாக முன்னிறுத்திப் போராடியவர். தன்னலம் கருதாத உழைப்பினால் கம்யூனிஸ்ட் பேரியக்கத்தின் மூத்த தலைவராக உயர்ந்தவர். அவரது குடும்பத்தினருக்கும், கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

ஏ.பி.பரதன் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு: முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

சென்னை:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி.பரதனின் மறைவு இந்திய அரசியலில் ஈடுசெய்ய முடியாத இழப்பு என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை அவர் வெளியிட்ட இரங்கல் குறிப்பு:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி.பரதனின் மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. அவரது நீண்ட அரசியல் வாழ்க்கையில், உழைக்கும் வர்க்கத்தினர், ஏழைகள், பின்தங்கிய மக்களின் நலனுக்காக சுயநலமில்லா சேவையாற்றியுள்ளார்.

இந்திய அரசியல் வரலாற்றில் பல்வேறு திருப்பு முனை தருணங்களில் பேச்சுவார்த்தை நடத்தி, பல்வேறு அரசியல் கட்சிகளை ஒன்று சேர்த்ததில் அவரது பங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும், அரசியல் நாகரிகத்துக்கும், தன்னலமில்லா சேவைக்கும் முன்னுதாரணமாக அவர் திகழ்கிறார். அவரது மறைவு இந்திய அரசியலில் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.

இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.பி. பரதன் காலமானார்

புது தில்லி:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி. பரதன், சனிக்கிழமை காலமானார். உடல் நலக் குறைவு காரணமாக இவர் தில்லி மருத்துவமனையில் கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்தார். இவரது முழுப் பெயர் அர்தேந்து பூஷண் பரதன்.

92 வயதான ஏ.பி. பரதனுக்கு, கடந்த 7ஆம் தேதி திடீரென பக்கவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, தில்லியில் உள்ள ஜி.பி. பந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அவரது உடல்நிலை சனிக்கிழமை மிகவும் மோசமடைந்தது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சனிக்கிழமை இரவு 8.20 மணி அளவில் அவர் மரணமடைந்ததாக ஜி.பி.பந்த் மருத்துவமனையின் நரம்பியல் துறை இயக்குநர் வினோத் புரி தெரிவித்தார்.

திங்கள்கிழமை நாளை அவரது இறுதிச் சடங்கு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

ஏ.பி.பரதன், தேசிய அரசியலில் வருவதற்கு முன்பு மகாராஷ்டிரத்தில் வியாபாரிகள் சங்கத்தின் முக்கியத் தலைவராகவும், அந்த மாநில இடதுசாரித் தலைவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தார். மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் கடந்த 1957-ஆம் ஆண்டு சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர், ஏஐடியூசி அமைப்பின் பொதுச் செயலாளராகவும், தலைவராகவும் உருவெடுத்தார்.

தேசிய அரசியலுக்கு கடந்த 1990-ஆம் ஆண்டுகளில் வந்த ஏ.பி. பரதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணை பொதுச் செயலாளராக பதவி வகித்தார். மேலும், இந்திரஜித் குப்தாவைத் தொடர்ந்து, அக்கட்சியின் பொதுச் செயலாளர் பதவியையும் வகித்தார்.

மறைந்த ஏ.பி.பரதனுக்கு அசோக் என்ற மகனும், அல்கா என்ற மகளும் உள்ளனர். இவரது மனைவி, கடந்த 1986-ஆம் ஆண்டில் மரணமடைந்துவிட்டார்.

சோழ ஸபையில் “அடைப்பைக்கார”ச் சேரன்

தெய்வத்தின் குரல் (நான்காம் பாகம்) 248

சோழ ஸபையில் “அடைப்பைக்கார”ச் சேரன்

நாடு திரும்பிய கம்பரைக் குலோத்துங்க சோழன் மிகவும் மரியாதை செய்து வரவேற்றான். பழையபடி கம்பர் அவனுடைய ஸதஸில் ஆஸ்தான கவியானார்.

ஆனால், கொஞ்ச காலத்துக்கப்புறம் அவர் தன்னிடம் விட்ட ஸவாலை நிறைவேற்றக் காணோமே என்கிற மாதிரி ‘ஹின்ட்’ பண்ணிச் சோழன் என்னவோ சொன்னான்.

கம்பர், தாம் சேரனிடம் சொன்ன ‘அத்யாவச்யம்’ வந்தவிட்டது என்று கருதினார். ஸ்வய மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளத்தான் வேண்டுமென்று நினைத்தார்.

சேரனுக்கு ஓலை அனுப்பினார்.

சேர மஹாராஜாவும் உடனே புறப்பட்டு சோழ மஹாராஜாவின் ஸதஸுக்கு அடைப்பைக்காரக் கோலத்தில் வந்துவிட்டான்.

அப்போது சோழனும் கம்பரும் ஸம்பாஷித்துக் கொண்டிருந்தார்கள். அடைப்பைக்கார வேஷத்தில் சேரனைப் பார்த்ததும் கம்பருக்கு மனஸ் கேட்கவில்லை. ஆனாலும், ‘சபதம் பண்ணியிருக்கிறோமே! சோழன் இன்னொரு தரமும் அதை நினைவுப்படுத்திக் குத்திக் காட்டும்படி விடப்படாது!’ என்று நினைத்தார்.

அதனால் வேஷ – அடைப்பைக்காரனை லக்ஷ்யம் பண்ணி வரவேற்கக்கூட இல்லை.

சோழனுக்கோ, அத்தனை பணிவுடன் காளாஞ்சியும் கையுமாக நிற்கிறவன் சேர மஹராஜன் என்று கொஞ்சங் கூட ஊஹிக்க முடியவில்லை. புதுசாகச் சேர தேசத்தில் கம்பர் வேலைக்குப் போட்டுக்கொண்ட எவனோ ஒருத்தன் என்றே நினைத்துவிட்டான்.

கம்பர் என்ன பண்ணினாரென்றால், சோழனோடு நடத்திக் கொண்டிருந்த ஸம்பாஷணைக்கு நடுவிலேயே அலக்ஷ்யமாகச் சேரன் பக்கம் கையை நீட்டினார். உடனே அவன் அடக்கவொடுக்கமாக வெற்றிலை மடித்து அவரிடம் நீட்ட, அதை அவனைத் திரும்பிக்கூடப் பார்ககாமல் வாங்கி, இரண்டு விரலுக்கு நடுவில் இடுக்கிக்கொண்டார். வாயில் போட்டுக் கொள்ளவில்லை.

இப்படி ஸம்பாஷணைக்கு நடுவிலேயே இரண்டு மூன்று தரம் தாம்பூலச் சுருளை வாங்கிக்கொண்டு, அவற்றை விரல்களிலேயே இடுக்கிக்கொண்டார்.

அப்புறம், “போகலாம்” என்று அவர் சேரனுக்கு ஜாடை செய்தார். உடனே அவன் புறப்பட்டுவிட்டான்.

வாசலுக்குப் போய் அவன் குதிரையைத் தட்டிவிட, அது காற்றாகப் பறந்து போய்விட்டது. அப்போதுதான், வந்தது சேரன் என்று சோழனுக்குப் பளிச்சென்று புரிந்தது.

அடையாளம் தெரிவிப்பதற்காக சேரனும் போகிற போக்கில் தன்னுடைய முத்திரை மோதிரம் ஒன்றைப் போட்டுவிட்டுப் போயிருந்தான்!

“கம்பரே! என்ன இப்படிப் பண்ணிவிட்டீர்கள்? வந்திருந்தது சேர ராஜா என்று சொல்லாமலே இருந்து விட்டீர்களே! அச்வ ஸாரத்யத்தில் ரொம்பவும் வல்லவனான அவனை இனிமேல் பிடிக்க முடியாதே!” என்றான் சோழன்.

கம்பரின் உயர் பண்பு

அதற்குக் கம்பர் “அப்பா குலோத்துங்கா! சேரன் என்னுடைய அழைப்புக்காகத்தான் இங்கே வந்தானேயொழிய, உன்னுடைய அழைப்பு அவனுக்கு இல்லை. என்னுடைய மானத்தைக் காப்பாற்றுவதற்காக அவன் அழையா வீட்டுக்கு வந்தபோது, அவனுடைய மானத்தை நான் காப்பாற்ற வேண்டுமல்லவா? அவன் சேரன் என்று தெரிந்தால் நீ அவனை எந்த தினுஸில் வரவேற்றிருப்பாயோ. எனக்காக வந்தவன் என் காரியத்தை முடித்துத் தந்துவிட்டுப் போக விட வேண்டுமென்றுதான், உனக்கு அவனை அறிமுகம் பண்ணாமலே விட்டேன்” என்றார்.

மறுபடியும் கம்பரின் பண்பு தெரிகிறதல்லவா?

“அப்படியா? அது ஸரி. ஆனால் அவன் கொடுத்த வெற்றிலைச் சுருள்களை ஏன் வாயில் போட்டுக்கொள்ளாமல் விரலிலேயே இடுக்கிக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று குலோத்துங்கன் கேட்டான்.

அதற்குக் கம்பர் சொன்ன பதிலில்தான் அவருடைய உயர்ந்த குணத்தின் உச்சியைப் பார்க்கிறோம்.

“ஒரு ராஜாவாக இருக்கப்பட்டவன் இன்னொருத்தனுக்கு ‘அடைப்பை தூக்குகிறேன்’ என்றால் அது அவனுடைய விநயத்தைக் காட்டுகிறது. அப்போது, அவனுடைய பணியைப் பெருகிறவன் மட்டும் ஒரேயடியாக விரைத்துக் கொள்வதா? இவனும் விநயத்தைத்தானே காட்ட வேண்டும்? என்னவோ வேளை பொல்லாப்பு, ஆதியில் நீ ஒன்று சொல்ல, நான் ஒன்று சொல்ல இப்படிச் சபதம் பண்ணி, அப்புறம் என் ஸ்வய மரியாதைக்காக அதை நிறைவேற்றும்படி ஆயிற்று. அதற்காக, மூவேந்தர்களில் ஒருத்தனாக இருக்கப்பட்டவனை அடைப்பைக்காரனாக வரவழைக்க வேண்யடிதாயிற்றறு. நீ அவனை அடையாளம் கண்டு கொள்ளக்கூடாது என்பதற்காகவும், நான் நிஜமாகவே அவனுக்கு யஜமானனைப் போல நடக்கவேண்டும் என்பதற்காகவும் அலக்ஷ்யமாகவே அவனிடமிருந்து தாம்பூலம் வாங்கிக்கொள்ள வேண்டியதாகவும் ஆயிற்று. இதெல்லாம் போதாது என்று அதை நான் வாயிலேயே போட்டுக்கொண்டு சாப்பிட்டிருந்தேனானால் அவனிடம் நன்றாகவே ஊழிய லாபம் பெற்று, நிஜ யஜமானனாகவே என்னை நிலைநாட்டிக் கொண்டதாக ஆகியிருக்கும்.

“நான் பண்ணின சபதம் என்ன? சேர ராஜாவை அடைப்பைக்காரனாக்கிக் கொண்டு வருகிறேன் என்பதுதான். அடைப்பை தாங்குவதும், தாம்பூலம் எடுத்துக் கொடுப்பதுந்தான் அவன் கார்யம். அதற்கு மேலே, அந்தத் தாம்பூலத்தை வாங்கிக் கொண்டவன் அதைச் சாப்பிடும்படிப் பண்ணுவது அவன் கார்யமல்ல. அதனால் சேர ராஜாவை அடைப்பைக்கார வேலை முழுசாகப் பண்ண வைத்து என் சபதத்தை நிறைவேற்றிக் கொண்டாலும் அதை நான் தின்று எனக்கு யஜமானத்வத்தை உண்டாக்கிக் கொள்ளவில்லை” என்றார்.

தன்மானம் ஸ்வய மரியாதையைக் காப்பாற்றிக் கொண்டது மட்டுமில்லாமல் இப்படி சேரனுடைய மான, மரியாதைகளையும் கம்பர் காப்பாற்றிக் கொடுத்தார்.

ஒட்டக்கூத்தர், புகழேந்திப் புலவர் முதலானவர்கள் அரசவைக் கவிஞர்களாக இருந்திருக்க, கம்பர் மட்டும் சடையப்ப வள்ளல் என்ற ஒரு ப்ரபுவையே தம் ஆதரவாளராகக் கொண்டிருந்தததிலிருந்து அவர் ரொம்பவும் ஸ்வதந்த்ர உணர்ச்சியுள்ளவராகயிருந்திருப்பாரென்று ஊஹிக்கலாம்.

“பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு”

(பொருளாதாரம் மட்டும் ஒரு வாழ்க்கைக்குப் பூர்ணத்வம் தந்துவிடுமா என்ன? ஒரு நாளும் இல்லை. அருளாதாரத்தைப் பிடித்து அதனால் இதை அளவுபடுத்தினால்தான் பூர்ண வாழ்வின் நிறைவு ஏற்படும். அந்த அருளாதாரத்தைப் பிடிக்க வழி விநயந்தான்)

கல்கியில் வந்த அருள் வாக்கு

‘நமஸ்கார மாஹாத்ம்யம்’ ஸவிஸ்தாரமாகச் சொல்லிவிட்டேன். இந்த ‘டாபிக்’ எதற்காக எடுத்துக் கொண்டேனென்றால், வர வர ஜனங்களிடம் விநய குணம், பணிவு, பவ்யம் என்பது குறைந்து கொண்டே வருகிறது. அப்படி ரொம்ப வருத்தப்படும்படியாக இன்றைக்கு ஒருத்தர் ஒன்று சொன்னார். அதைப் பற்றியும், அதற்கு மாற்று மருந்து பற்றியும் யோஜனை போயிற்று. அதைத்தான் தெரிவிக்க நினைத்துப் பேசினேன்.

என்னவென்றால்: ஸமத்வம், ஸ்வதந்திரம், ஸ்வய மரியாதை என்றெல்லாம் ரொம்பவும் முழக்க ஆரம்பித்த நாளாகவே விநய ஸம்பத்துக்கு ஹானி ஏற்பட ஆரம்பித்து இப்போது ஒரே முரட்டுத்தனத்திலும் அடங்காமையிலும் கொண்டுவிட்டிருக்கிறது. Right, right என்று கிளம்பியதில் ஒரே fight ஆகியிருக்கிறது! ஸமூஹ வாழ்க்கை, பொருளாதாரம் என்று பார்த்தால் இந்தப் புதுக் கொள்கைகளிலும் ஓரளவு ந்யாயம் இல்லாமலில்லை. இதை ஆகே்ஷபிக்காமல் ஒப்புக் கொள்கிறேன். ஆனாலும், எதற்கும் ஒரு அளவு, வரம்பு இல்லையா? அந்த அளவு மீறாமல் வரம்பு கட்டிப் புதுக் கொள்கைகளை அமல்படுத்தினால் எல்லாம் அதனதன் இடத்தில் சீராக இருந்து, இப்போதுள்ள ஓயாத வர்க்கப் போராட்டங்கள் ஓய்ந்து லோகத்தில் சாந்தியும் ஸௌஜன்யமும் ஐக்கியமும் ஏற்படும்.

எப்படி அளவுபடுத்துவது, வரம்பு கட்டுவது என்றால் ஸமூஹம் முழுவதிலும் மறுபடி விநயஸம்பத்தை விருத்தி பண்ணுவதால்தான். பொருளாதாரம் மட்டும் ஒரு வாழ்க்கைக்குப் பூர்ணத்வம் தந்துவிடுமா என்ன? ஒரு நாளும் இல்லை. அருளாதாரத்தைப் பிடித்து அதனால் இதை அளவுபடுத்தினால்தான் பூர்ண வாழ்வின் நிறைவு ஏற்படும். அந்த அருளாதாரத்தைப் பிடிக்க வழி விநயந்தான். விநயத்தை வர வழைக்க வழி? அது வேண்டும் என்ற ‘பேஸிக்’ எண்ணத்தோடு பெரியவர்களாக இருக்கப்பட்டவர்களைத் தேடிப் போய் விழுந்து நமஸ்காரம் பண்ணுவதுதான். இந்த க்ரியையே ‘பேஸிக்’காக, பேஸ்மென்டாக அடிமட்டத்தில் இருந்ததைப் பெரிய மாளிகையாக எழுப்பிக் கொடுத்து விடும்.

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

காஞ்சி மாமுனி திருவடி போற்றி

அத்வைத குருவின் வடிவாய் அவனியில் வந்த ஈஸ்வரனே 
அத்வைத திருவுருவாக சந்நிதி அமர்ந்த சர்வேஸ்வரனே….

அத்வைத தத்துவத்தை உலகறிய செய்ய உதித்திட்ட தெய்வமாம் ஸ்ரீ மஹா பெரியவா பாஷ்ய பாடம் சொல்லிக் கொண்டிருந்த நேரம் பார்த்து, நம்மை தேடுவாரென்று தெரிந்து பேரிச்சம்பழக்காரனுடன் வந்திருக்குமோ ?
ஸ்ரீ கும்பகோணத்தை மையமாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருந்த காலம், ஸ்ரீ மஹா பெரியவா பிரம்மசூத்ர பாஷ்ய பாடம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். நிறைய வித்வான்களும் சன்யாசிகளும் கேட்டு பரவசப்பட்டுக் கொண்டிருந்தனர்.

ஒரு வித்வான் இடையில் ஒரு சந்தேகம் கேட்டார். ஸ்ரீ மஹா பெரியவா அதற்கான பதிலை சுமார் ஐந்து நிமிடங்கள் சுருக்கமாக விவரித்தார். பின் தான் சொன்னதற்கு ஆதாரமாக காண்பிக்க சில நூல்களின் பெயர்களை சொன்னார்.

” பாமதி என்ற புத்தகத்திலோ ‘ பரிமள” த்திலோ இதற்கு விஸ்தாரமான பதில் இருக்கு. அதைப் படிச்சா போதும்……. மடத்து லைப்ரரியிலே அந்த புஸ்தகம் இருக்குமே பார்த்துடலாமே ” என்றார்.

புத்தகசாலைக்கு பொறுப்பாளர் ராமமூர்த்தி சாஸ்திரிகள் உடனே ” அந்த புஸ்தகத்தை யாரோ எடுத்துண்டு போயிருக்கா …. இப்போ லைப்ரரியிலே இல்லே ” என்றார்.

அப்போது தெருவில் ஒரு பேரிச்சம்பழம் விற்பவன் குரல் கொடுத்துக் கொண்டே போய்க் கொண்டிருந்தான். அவன் பழைய புத்தகங்களுக்கு பேரிச்சம்பழம் கொடுப்பவன்.

” பழைய புஸ்தகங்களை போட்டுட்டு சிலபேர் பேரிச்சம்பழம் வாங்கியிருப்பா ” என்று ஸ்ரீ பெரியவா அப்போது கூறினார். ஏதோ அவன் பிழைப்பைப்பற்றி கூறுகிறார் என்று நினைத்த பண்டிதர்களுக்கு ஸ்ரீ மஹா பெரியவா அந்த பேரிச்சப்பழம், காரன்கிட்டே அவன் வெச்சிண்டு இருக்கின்ற புஸ்தகத்தையெல்லாம் விலை பேசி வாங்கிண்டு வா ” என்று தொண்டரிடம் கூறியபோது வேடிக்கை செய்கிறாரோ என்றிருந்தது.

எதற்கு இப்படி ஒரு கட்டளையை பிறக்கிறார் என்று புரியாது நின்றனர். மடத்து சிப்பந்தி போய் அத்தனை புத்தகங்களையும் ஒரு கட்டாய் வாங்கிவந்தார்.

முதல் அதிசயமாக அவை அனைத்தும் தமிழோ ஆங்கில புத்தகங்களோ அல்ல ! எல்லாம் சமஸ்கிரத புத்தகங்கள் அத்தனையும் பக்கங்கள் பழுப்படைந்து மிக பழயபுத்தகங்கள் அபூர்வமான புத்தகங்கள்.

” என்னென்ன புத்தகங்கள் இருக்குன்னு பாருங்க” என்றார். ஸ்ரீ மஹா பெரியவா ஒவ்வொரு புத்தகமாக எடுத்து பெயரை படித்துக்கொண்டே வந்தனர். இரண்டாவது பேரதிசயமாக அந்த புத்தககட்டின் நடுவே ஸ்ரீ பெரியவா கேட்ட ‘ பாமதி ‘ யும் ‘ பரிமள ‘ மும் இருந்தன. அந்த அத்வைத விளக்க நூல்கள், அத்வைத தத்துவத்தை உலகறிய செய்ய உதித்திட்ட தெய்வமாம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவா பாஷ்ய பாடம் சொல்லிக் கொண்டிருந்த நேரம் பார்த்து, நம்மை தேடுவாரென்று தெரிந்து பேரிச்சம்பழக்காரனுடன் வந்திருக்குமோ ?

பதில் கிடைக்காத இது போன்ற அபூர்வமான அதிசயங்களில் லேசாக தன்னை தெய்வமென்று காட்டியருளிய கருணை தெய்வம், ஸ்ரீ மஹா பெரியவா தன்னை சரண்புகுந்தோரை என்றென்றும் கைவிடாமல் காப்பாற்றி சகல ஐஸ்வர்யங்களோடும் சர்வ மங்களங்களோடும் இன்பமாக வாழவைக்கும் என்பது சத்தியம் !

அத்வைத குருவின் வடிவாய் அவனியில் வந்த ஈஸ்வரனே 
அத்வைத திருவுருவாக சந்நிதி அமர்ந்த சர்வேஸ்வரனே….

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!!!

 

எழுத்தாக்கம்: கி.பாலசுப்பிரமணியன்

காஞ்சி மாமுனி போற்றி

மலை போல் துயரம் வந்திடும் போது வந்தங்கு காக்க வரும் நம் காஞ்சி ஸ்ரீமத் மாமுனி சங்கரர்

ஒரு முறை நினைத்தாலும் மனமுருகி நினைப்பவரை 
காத்திடும் தெய்வமன்றோ நம் காஞ்சி மாமுனி சங்கரர் !
ஒரு முறை மனதார தாயே என்றழைக்க 
வரமழை தந்திடுவார் நம் காஞ்சி மாமுனி சங்கரர்!

ஒரு மனதாய் வேண்டி நிற்க இருகரத்தால் தாங்குகின்ற 
இறைவனன்றோ நம் காஞ்சி மாமுனி சங்கரர் !
பகவானே என்றழைக்க பரிவுடனே பார்த்து நம்
பிறவிப் பயன் தீர்த்திடுவார் காஞ்சி மாமுனி சங்கரர்!

தன் பதம் சேர்த்து நம்மை தூயதாய் ஆக்குகின்ற 
துறவியன்றோ நம் காஞ்சி மாமுனி சங்கரர்!
தலை வணங்கி அழைப்பவரின் நிலை உயரச் 
செய்கின்ற தாயானவர் நம் காஞ்சி மாமுனி சங்கரர்!
எளிமையை உணர்த்திடவே காஞ்சி மாமுனிகளின் ஆண்டிக்கோலம் 
ஞானத்தை தந்திடவே காஞ்சி மாமுனிகளின் மெய்ஞானி கோலம் 
தூயமனம் படைத்தவரை ஆட்க்கொள்ள காஞ்சி மாமுனிகளின் துறவிக்கோலம் 
பிணி தீர்க்க துயர் துடைக்க அற்புதமான காஞ்சி மாமுனிகளின் தாய்க்கோலம் 
நல்ல வழி காட்டிடவே தண்டம் ஏந்திய காஞ்சி மாமுனிகளின் திருக்கோலம் 
நல்லதையே தந்திடவே துளசி அணிந்த காஞ்சி மாமுனிகளின் அருட்கோலம் 
தவக்கோலம் கொண்ட காஞ்சி மாமுனிகளின் திருக்கோலம் 
அந்த காஞ்சி மாமுனிகளின் பெருங்கோலம் காணும் கண்ணில் நீர்க்கோலம்
புனிதமான துளசி மாலை காஞ்சி மாமுனிகளின் சிரசிலே 
மனிதம் காக்க தண்டமதோ காஞ்சி மாமுனிகளின் கையிலே 
அனுதினமும் அருளாசி காஞ்சி மாமுனிகளின் நாவிலே 
குறை உண்டோ இனிமேல் நம் வாழ்விலே !
சந்தனம் பொலிவாய் துலங்கும் நெற்றியிலே 
சௌபாக்கியம் அழகாய் மலரும் நம் வழியிலே 
மெருகிடும் காவி உடை காஞ்சி மாமுனிகளின் மேலிலே 
செருக்கினை அழித்திருக்கும் முதலிலே 
உருகிடும் காஞ்சி மாமுனிகளின் பக்தர்களின் மனதிலே 
வழிந்திடும் தாயின் ஆசி காஞ்சி மாமுனிகளின் உள்ளிலே
தாயாய் வந்த ஆதிசிவ காஞ்சி ஸ்ரீமத் மாமுனி சங்கரர் …
தவமாய் நின்ற பரமசிவ காஞ்சி ஸ்ரீமத் மாமுனி சங்கரர் …
நீரோடையாய் நடந்த காஞ்சி ஸ்ரீமத் மாமுனி சங்கரர்
பார் முழுவதும் கலந்த காஞ்சி ஸ்ரீமத் மாமுனி சங்கரர்
ஞானஒளி ஏற்றின காஞ்சி ஸ்ரீமத் மாமுனி சங்கரர்
கார்மேகமாய் படர்ந்த காஞ்சி ஸ்ரீமத் மாமுனி சங்கரர்
கருணை மழையென பொழிந்த காஞ்சி ஸ்ரீமத் மாமுனி சங்கரர்
தூயவர் காஞ்சி ஸ்ரீமத் மாமுனி சங்கரர்
மலை போல் துயரம் வந்திடும் போது வந்திங்கு காக்க வரும் நம் காஞ்சி ஸ்ரீமத் மாமுனி சங்கரர்
காஞ்சியிலே அமர்ந்து கருணை மழை பொழியும் காமகோடி ரூப பீடனே – காலமெல்லாம் சதா சர்வ காலமெல்லாம் காஞ்சி ஸ்ரீமத் மாமுனி சங்கரர் உமைப் பணிந்து பாடுகின்ற பாக்கியம் தந்தருளவேண்டும்!
ஹரஹரசங்கர ஜெயஜெயசங்கர!ஜய ஜய சங்கர ! ஹர ஹர சங்கர !

***

எழுத்தாக்கம்: 
ஸ்ரீ காஞ்சி காமகோடி மஹா பெரியவா தாஸன் 
டாக்டர். கி.பாலசுப்ரமணியன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி. பரதன் காலமானார்

 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அர்தேந்து பூஷண் (ஏ.பி.)பரதன் (வயது 92 ) தில்லி ஜி.பி.பந்த் மருத்துவமனையில் கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று 02-12-2016 உடல்நிலை மிகவும் மோசமடைந்தது காலமானார்.
ஏ.பி. பரதனுக்கு, கடந்த 7ஆம் தேதி திடீரென பக்கவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, தில்லியில் உள்ள ஜி.பி. பந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஏ.பி.பரதனுக்கு அசோக் என்ற மகனும், அல்கா என்ற மகளும் உள்ளனர். இவரது மனைவி, கடந்த 1986-ஆம் ஆண்டில் மரணமடைந்து விட்டார்.
ஏ.பி.பரதன், தேசிய அரசியலில் வருவதற்கு முன்பு மகாராஷ்டிரத்தில் வியாபாரிகள் சங்கத்தின் முக்கியத் தலைவராகவும், அந்த மாநில இடதுசாரித் தலைவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தார்.
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் கடந்த 1957-ஆம் ஆண்டு சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
பின்னர், ஏஐடியூசி அமைப்பின் பொதுச் செயலாளராகவும், தலைவராகவும் உருவெடுத்தார்.
தேசிய அரசியலுக்கு கடந்த 1990-ஆம் ஆண்டுகளில் வந்த ஏ.பி. பரதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணை பொதுச் செயலாளராக பதவி வகித்தார். மேலும், இந்திரஜித் குப்தாவைத் தொடர்ந்து, அக்கட்சியின் பொதுச் செயலாளர் பதவியையும் வகித்தார்.
ஏ.பி.பரதனின் உடல் தகனம், திங்கள்கிழமை (ஜன.4) நடைபெறும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.