Home Blog Page 5958

தமிழக வட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

 

 

 தமிழகத்தின் வட மாவட்டங்களில் தெற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வடக்கு நோக்கி நகர்ந்துள்ளதால், அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் கூறிய  வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன், தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்ததன் காரணமாகவும், வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகவும்,தமிழகத்தில் பெரும் பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் மழை பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் தெற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வடக்கு நோக்கி நகர்ந்துள்ளதால், அடுத்த 24 மணி நேரத்தில் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் எனவும் தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், ரமணன் செய்தியாளர்களிடம் கூறியு ள்ளார்.

பஞ்சாங்கம் சொல்லும்  புயல் தாக்க செய்தி  

 

பண்டைய காலத்தில் நவீன வானியல் ஆய்வுக்கருவிகள் இல்லாத சூழ்நிலையில் முனிவர்கள் நவ கிரகங்களின் இயக்கத்தை துல்லியமாக கணித்தனர். தங்களது கணிப்புகளை வாக்கிய சுலோக குறிப்புகளாக எழுதியும் வைத்துள்ளனர். இதன் அடிப்படையில் ஆண்டுதோறும் தமிழ் ஆண்டு பிறப்பை அடிப்படையாக வைத்து பஞ்சாங்கம் கணிக்கப்படுகிறது. 

முன்னோர்கள் கண்டறிந்த பஞ்சாங்கத்தில் தமிழகத்தில் பெய்த மழையையை பற்றியும், காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் எனவும் ஏற்கனவே பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. புயல்கள் பற்றிய பகீர் தகவல்கள் அடங்கியுள்ளதாக செய்தி வாட்ஸப்பில் வைரலாக பரவி வருகிறது.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முனிவர்கள் எழுதிய சுலோகங்களின் அடிப்படையில் எழுதப்படுவதுவாக்கிய பஞ்சாங்கத்தில், அக்டோபர் 14 ஆம் தேதி அன்று புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி தற்போது காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டு தமிழகம் முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.     
 
மேலும் அந்த பஞ்சாங்கத்தில் வருகிற 21-11-2015 சனிக்கிழைமை அன்று மழை தொடங்கி ஒரு வாரம் பெய்யும் எனவும்,22-11-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு புயல் பலமாக சென்னையை தாக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று புயல் பலமாக சென்னையை தாக்குமா ? பஞ்சாங்கம் சொல்லும்  புயல் தாக்க செய்தி  உண்மையா ? அனைவரும்  பொறுத்திருந்து பார்ப்போம். 

   

மேயர், கணவருடன் துப்பாக்கியால் சுட்டுக் கொலை : காவல்நிலையத்தில் இருவர் சரன்

 

ஆந்திர மாநிலம் சித்தூர் மேயர் கட்டாரி அனுராதா மற்றும் அவரது கணவர் கட்டாரி மோகன் ஆகியோரை மர்ம கும்பல் ஒன்று சுட்டுக் கொலை செய்ப்பட்ட சம்பவம்  பரபரப்பாகியுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் நகராட்சி மேயர் அனுராதா. இவரது கணவர் கட்டாரி மோகன் தெலுங்கு தேச கட்சியைச் சேர்ந்தவர். இந்நிலையில், இன்று 17-11-2015 மேயர் அனுராதா அலுவலகத்தில் நுழைந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் அனுராதா மற்றும் அவரது கணவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதோடு கத்தியாலும் குத்திவிட்டுத் தப்பிச் சென்றனர்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த மேயர் அனுராதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கணவர் கட்டாரி மோகன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

முதலில் சித்தூர் பொதுமருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டனர், இதில் அனுராதா ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் கணவர் மோகன் கட்டாரியின் நிலை மோசமடைய அவரை வேலூரில் உள்ள கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில் அனுமதித்தனர். இங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடர்பாக காவல் துறையினர் கூறியதாவது :-

முதற்கட்ட தகவலின்படி, இன்று 17-11-2015 மதியம் சித்தூர் நகராட்சி அலுவலகத்துக்குள் நுழைந்த மர்ம நபர்கள் மூவர் அனுராதாவை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளனர். கத்தியாலும் குத்தியுள்ளனர். இதில் அனுராதாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதனால் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். 

பின்னர் அவரது கணவர் கட்டாரி மோகனையும் கத்தியால் குத்தியுள்ளனர். ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி காயத்துக்கு பலியானார்.

சம்பவ இடத்திலிருந்து குற்றவாளிகள் தப்பினர். சிறிது நேரத்துக்குப் பின்னர் சித்தூர் ஐ டவுன்  காவல்நிலையத்தில் இருவர் சரணடைந்தனர். ஆனால், அவர்கள் இருவரும் கொலையாளிகளா என்பது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை சம்பவம் நடந்ததா என்பது குறித்து விசாரித்து வருகிறோம். 

மேலும் பதற்றமான பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் துறையினர்  குவிக்கப்பட்டுள்ளனர். படுகொலையில் ஈடுபட்டவர்களில் இருவர் பர்தா அணிந்திருந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்” என்றனர்.

கொலை செய்யப்பட்ட மேயர் அனுராதாவின் கணவர், சித்தூர் முன்னாள் சட்ட உறுப்பினர் சி.கே.ஜெயச்சந்திர ரெட்டியை கொலை செய்ய நடந்த முயற்சி தொடர்பான வழக்கில் பிரதான குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது. அந்த கொலை முயற்சி சம்பவத்திலிருந்து சி.கே.பாபு தப்பித்தபோதும் அவரது மெய்க்காப்பாளர்கள் இருவர் பலியாகினர்.

இந்நிலையில், கடந்த சட்டமன்ற தேர்தலில் சித்தூர் தொகுதியில் தெலுங்கு தேச வேட்பாளராக களமிறங்கிய கட்டாரி மோகன் தோல்வியடைந்தார். ஆனால், அவரது மனைவி அனுராதா மாநகராட்சித் தேர்தலில் அமோக வெற்றி பெற்று மேயரானார்.

அனுராதாவை கொலை செய்த கும்பல் கர்நாடகத்தைச் சேர்ந்த கூலிப்படையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மொத்த 7 பேர் கொண்ட கும்பல் மேயர் அலுவலகத்துக்கு வந்துள்ளது. அதில் பர்தா அணிந்த இருவர் உட்பட மூவர் மட்டும் மேயர் அறைக்குள் செல்ல மற்ற 4 பேர் வெளியில் காத்திருந்துள்ளனர். அவர்களிடம் பயங்கர ஆயுதங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

குற்றவாளிகள் தப்பிச் செல்லாமல் இருக்க கர்நாடகா, தமிழக எல்லையில் சித்தூர் காவல் நிலையத்தினர்  கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர் என கூறினர். 

பிரபல பக்திப் பாடகர் பித்துக்குளி முருகதாஸ் காலமானார்

சென்னை:

பிரபல பக்திப்பாடகர் பித்துக்குளி முருகதாஸ்(95) உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.

பாலசுப்ரமணியம் என்ற இயற்பெயருடன் கோவையில் 1920-ம் ஆண்டு பிறந்த பித்துக்குளி முருகதாஸ், தமிழ்க் கடவுளான முருகன் மீது நெஞ்சை உருக்கும் ஆயிரக்கணக்கான பக்திப் பாடல்களை இயற்றி, இசையமைத்துப் பாடியுள்ளார்.

தலையில் காவித்தலைப்பாகை உடுத்தி, முகத்தில் கூலிங்கிளாஸ் கண்ணாடி அணிந்து சற்றே வித்தியாசமான முருக பக்தராக காட்சியளித்த பித்துக்குளி முருகதாஸ், கந்தர் அனுபூதி உள்பட முருகன் மீது பல பக்திப்பாடல்களை இயற்றியுள்ளார். கண்ணன் மீதான பாடல்களையும் இயற்றி இசையமைத்துள்ளார். அவர் பாடிய ‘அலைபாயுதே கண்ணா’ மற்றும் தெய்வம் திரைப்படத்தில் வரும் ‘நாடறியும் நூறு மலை’ பாடல்கள் மிகவும் பிரபலமானவை.

சிறுவயதில், தனது ஊரின் தெருவில் விளையாடும் போது, வழியே சென்ற ஒருவர் மீது இவர் வீசிய கல் பட்டு காயமடைந்த பெருமாள் பக்தரும், மகா ஞானியுமான பிரம்மானந்த பரதேசியார், தனது நெற்றியில் இருந்து இரத்தம் வடிய… ‘அடேய்…நீ என்ன பித்துக்குளியா? (பைத்தியமா)? ஒருநாள் இல்லை ஒருநாள், என்னைப் போலவே நீயும் ஆகப் போகிறாய்’ என்று வேடிக்கையாக கூறவே, அதுவே பித்துக்குளி முருகதாஸ் ஆக நிலைத்துவிட்டது. முருகனுக்கு தாசனாய், முருகன் மீது பைத்தியமாய் இருப்பதால் தனது பெயருக்கு முன்னால் ‘பித்துக்குளி’யை இவர் சேர்த்துக்கொண்டார்.

சிறு வயதிலேயே வீட்டை விட்டு ஓடித் துறவறத்தில் மூழ்கினார். இந்தியாவில் வெள்ளையருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற இவர்மீது 1936-ம் ஆண்டு போலீசார் நடத்திய முரட்டுத்தனமான தாக்குதலில் பித்துக்குளி முருகதாசின் இடதுகண் பார்வை பறிபோனது. அதிலிருந்து இவர் கருப்பு கண்ணாடி அணியத் தொடங்கினார்.

தன்னுடன் கச்சேரிகளில் பக்திப்பாடல்களை பாடிய தேவி சரோஜா என்பவரை தனது அறுபதாவது வயதில் மணந்து கொண்டார். இந்த தம்பதியர் ராதா கல்யாணம் பாடல்களை எல்லாம் பாடிப் பிரபலம் ஆக்கினர்!

தென்னாப்பிரிக்கா, இலங்கை, அமெரிக்கா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இசைக்கச்சேரிகளை நடத்திய பித்துக்குளி முருகதாஸ் தியாகராஜர் விருது, தமிழக அரசின் கலைமாமணி, சங்கீத சாம்ராட், தியாகராஜர் விருது உள்ளிட்ட பல இசை விருதுகளை பெற்றுள்ளார்.

சிறந்த முருகபக்தராக கருதப்படும் பித்துக்குளி முருகதாஸ், சென்னையை தலைமையிடமாக கொண்டு ஸ்ரீ ஜோதிர் மாயா தேவி அறக்கட்டளையை தொடங்கினார். தனது பக்தி பாடல் கச்சேரிகளின் மூலம் கிடைக்கும் தொகையை வைத்து பல ஏழை, எளிய மக்களின் பசிப்பிணியைப் போக்கும் மிக உயரிய சமூகத்தொண்டாற்றி வந்தார்.

வெகுநாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த தீவிர முருகபக்தரான பித்துக்குளி முருகதாஸ், சூரசம்ஹார தினமான இன்று சென்னையில் உள்ள தனது இல்லத்தில் அதிகாலை மரணமடைந்தார்.

இந்தியாவுக்கு பாரத் என்று பெயர் சூட்ட தேவையில்லை: மத்திய அரசு பதில்

புதுதில்லி:

இந்தியாவுக்கு, ‘பாரத்’ என்ற பெயரை சூட்ட வேண்டும் எனக்கூறி, நிரஞ்ஜன் பட்வால் என்ற சமூக ஆர்வலர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது:-

இந்திய அரசு சட்டம் 1935-ஐ ரத்து செய்து இந்திய சுதந்திர சட்டம் 1947-ஐ அமல்படுத்தியதும், நமது நாட்டுக்கு ‘இண்டியா’ என்று பெயரிடப்பட்டு உள்ளது. ஆனால் இந்திய நாட்டுக்கு ‘பாரத்’, ‘இந்துஸ்தான்’, ‘இந்த்’ அல்லது ‘பரத்வருஷ்’ என்பது போலத்தான் பெயரிடப்பட வேண்டும் என்பது இந்திய அரசியல் நிர்ணய சபையின் பரிந்துரையாக இருந்தது. எனவே, தற்போது சூட்டப்பட்டு உள்ள ‘இண்டியா’ என்ற பெயருக்கு பதிலாக, மேற்குறிப்பிட்ட ஏதாவது ஒரு பெயரையே இந்திய நாட்டின் பெயராக பயன்படுத்த வேண்டும். அரசு மற்றும் ஆட்சி பணிகளுக்காக ‘இண்டியா’ என்ற பெயரை பயன்படுத்துவதை நிறுத்துமாறு மத்திய அரசுக்கு அறிவுறுத்த வேண்டும்.

மத்திய-மாநில அரசுகள் மட்டுமல்லாது, அரசு சாராத நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் இந்திய நாட்டுக்கு ‘பாரத்’ என்ற பெயரையே உபயோகிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து மற்றும் நீதிபதி அருண் மிஸ்ரா ஆகியோர் அடங்கி அமர்வு முன்பு, கடந்த ஏப்ரல் 25-ந் தேதி இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த பொதுநல மனு குறித்து பதில் அளிக்குமாறு மத்திய அரசு, அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டது.

அதன்படி மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், ‘இந்தியாவின் பெயரை ‘பாரத்’ என்று மாற்றுவதற்கான சூழ்நிலை எதுவும் தற்போது நிலவவில்லை. இதுபோன்ற கோரிக்கைகள் தேவையற்ற ஒன்று. எனவே இது தள்ளுபடி செய்யப்பட வேண்டியதாகும்’ என்று கூறப்பட்டுள்ளது.

தில்லியில் மூத்த போலீஸ் அதிகாரி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

நொய்டா:

தில்லியில் மூத்த போலீஸ் அதிகாரி துப்பாக்கியால் தன்னை சுட்டு கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

தில்லியில் நொய்டா பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த அமித் சிங் தில்லி காவல் துறையின் சிறப்பு சிறை துறை உதவி ஆணையராக பதவி வகித்து வந்தார். அவரது மனைவி குடியிருப்பு கட்டடத்தின் 6வது மாடியில் இருந்து குதித்துள்ளார். இதையடுத்து அமித் சிங் தன் கைத் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுள்ளார். இதுகுறித்து குடியிருப்புவாசிகள் காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அவர்கள் தம்பதியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு சிங் இறந்து விட்டார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவரது மனைவி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் கூறியுள்ளனர். இந்த முடிவை தம்பதி எடுத்ததற்கான காரணம் குறித்து இன்னும் தெளிவாக தெரியவில்லை. அவர்களுக்கு 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது.

 

 

 

 

 

 

காய்கறி விலைகளைக் கட்டுப்படுத்த முதல்வர் நடவடிக்கை

சென்னை:
காய்கறி விலைகளைக் கட்டுப்படுத்த முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் பெய்து வரும் கன மழையின் காரணமாக சென்னை நகருக்கு காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது.

எனவே, காய்கறிகளின் விலை உயர்ந்து வருகிறது. காய்கறிகளின் விலைகளை கட்டுப்படுத்தும் வகையில், சென்னை நகரில் 50 கூடுதல் காய்கறி விற்பனை மையங்களை தற்காலிகமாக திறக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, தற்போது சென்னை மாநகரில் செயல்பட்டு வரும் 42 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளுடன் தற்காலிகமாக கூடுதலாக 50 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் துவங்கப்படும். எனவே, சென்னை மாநகரில், 92 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் காய்கறிகள் விற்பனை செய்யப்படும். பொது மக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் காய்கறிகளான வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, கத்திரிக்காய், பீட்ரூட் மற்றும் புடலங்காய் ஆகிய காய்கறிகள் இந்தக் கடைகளில் விற்பனை செய்யப்படும்.

சென்னை நகரில் தற்காலிகமாக துவங்கப்படவுள்ள 50 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் விவரம் பின்வருமாறு:-

துரைப்பாக்கம் மற்றும் மீனம்பாக்கம் டீயூசிஸ் அங்காடிகள், தாடண்டன் நகர், சாஸ்திரி நகர், விருகம்பாக்கம், சின்மயா நகர், திருநகர் (வடபழனி), மன்னார் முதலியார் தெரு (வடபழனி), பேரூர்-காரப்பாக்கம், கணேஷ் நகர் (கிழக்கு தாம்பரம்), கௌரிவாக்கம் (கிழக்கு தாம்பரம்), சந்தோஷபுரம் (கிழக்கு தாம்பரம்), இராமகிருஷ்ணன் தெரு (மேற்கு தாம்பரம்), வசந்தம் காலனி (வில்லிவாக்கம்), திருமங்கலம் (அண்ணாநகர் மேற்கு), ஏ.கே.சாமி நகர் (அயனாவரம்), பி.பி. கார்டன் (அமைந்தகரை), கிருஷ்ணாபுரம் (அம்பத்தூர்), புரசைவாக்கம், மணலி, எத்ராஜ்சாமி தெரு (எருக்கன்சேரி), முத்தமிழ் நகர் (கொடுங்கையூர்), பஜனைகோயில் தெரு (எர்ணாவூர்), பாரதியார் தெரு (எர்ணாவூர்), பழைய வண்ணாரப்பேட்டை, ராயபுரம், அருணாசலேஸ்வரர் தெரு (புது வண்ணாரப்பேட்டை), பூண்டி தங்கம்மாள் தெரு (புது வண்ணாரப்பேட்டை), தண்டையார் நகர், சௌகார்பேட்டை, தண்டையார் பேட்டை, கும்மாளம்மன் கோயில் தெரு (தண்டையார் பேட்டை), ஐசிஎப் பேருந்து நிலையம், சைதாப்பேட்டை, நங்கநல்லூர், ஆதம்பாக்கம், மேற்கு மாம்பலம், ரங்கைய்யா கார்டன் தெரு (மைலாப்பூர்), கிழக்கு அபிராமபுரம் (மைலாப்பூர்) ஆகிய இடங்களில் உள்ள கூட்டுறவு நியாய விலைக் கடைகள் மற்றும் அண்ணா நகர் மேற்கு, அசோக் நகர், ஆர்.கே.மடம் சாலை, இந்திரா நகர், ஆழ்வார்பேட்டை, தாம்பரம், கே.கே.நகர் மேற்கு, ராயப்பேட்டை, திருவான்மியூர், ஆற்காடு சாலை, போரூர் ஆகிய இடங்களில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் காய்கறிகள் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் வேலைவாய்ப்பு இழந்த குடும்பங்களுக்கு ரூ.5,000 நிதியுதவி: ராமதாஸ் கோரிக்கை

சென்னை:
வெள்ளத்தால் வேலை வாய்ப்பினை இழந்துள்ள குடும்பங்களுக்கு ரூ. 5 ஆயிரம் நிதி உதவி வழங்க வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியிருந்த தீவிரக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஆந்திரத்தை நோக்கி நகரத் தொடங்கியிருப்பதால் சென்னை உள்ளிட்ட தமிழக மாவட்டங்களில் மழையின் தீவிரம் குறையத் தொடங்கியிருக்கிறது. ஆனால், மழை, வெள்ளத்தின் பாதிப்புகள் சற்றும் குறையவில்லை.

சென்னை மாநகர மக்கள் கடந்த காலங்களில் அனுபவிக்காத கொடுமைகளை கடந்த ஒருவாரமாக அனுபவித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் சென்னை இன்னும் வெள்ளக்காடாகத் தான் காட்சியளிக்கிறது. சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள சிறிய ஏரிகள் உடைந்ததால் அவற்றிலிருந்து வெளியேறிய நீர் சூழ்ந்ததால் சென்னை அம்பத்தூர், கொரட்டூர், கொளத்தூர், வேளச்சேரி, மேடவாக்கம், பல்லாவரம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகள் தனித்தீவாக காட்சியளிக்கின்றன. வேளச்சேரியில் சில பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளின் முதல் தளம் மூழ்கும் அளவுக்கு மழை நீரும், ஏரிகளில் இருந்து வெளியேறிய தண்ணீரும் சூழ்ந்திருக்கின்றன.

அங்குள்ள வீடுகளில் சிக்கித்தவிக்கும் மக்களை படகுகள் மூலமாகக் கூட வெளியேற்ற முடியவில்லை. சில இடங்களில் தவித்த மக்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கபட்ட நிலையில், மீதமுள்ள மக்களை மீட்பதற்காக இந்திய ராணுவத்தினரை அழைக்கும் அளவுக்கு வெள்ளத்தின் தீவிரம் அதிகரித்துள்ளது.

பேரிடர் ஏற்படும் போது அதை எதிர்கொள்வதற்கான குறைந்த அளவு கூட தயார்நிலை கூட தமிழக அரசிடம் இல்லை என்பதைத் தான் கடந்த சில நாட்களாக நடக்கும் நிகழ்வுகள் காட்டுகின்றன. பருவமழை தொடங்குவதற்கு முன்புவரை சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 5% அளவுக்கு கூட தண்ணீர் இல்லை. இதனால் சென்னை மாநகரின் பெரும்பாலான பகுதிகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க முடியாத நிலை தான் காணப்பட்டது. ஆனால், திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம், பூண்டி ஆகிய ஏரிகள் நிரம்பி வழிகின்றன. அவற்றுக்கு தொடர்ந்து நீர்வரத்து வந்து கொண்டிருப்பதால் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து மட்டும் வினாடிக்கு 10,000 கன அடி வீதம் அடையாற்றில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இதனால் விலை மதிப்பற்ற குடிநீர் வீணாவதுடன் அடையாற்றின் கரைகளில் வாழ்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதேபோல் பூண்டி ஏரியிலிருந்தும் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

சென்னையில் அளவுக்கு அதிகமாக மழை பெய்யும்போது கூடுதலாக கிடைக்கும் தண்ணீரை சேமித்து வைத்து பயன்படுத்தும் வகையில் கட்டுமான வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்து வருகிறேன். ஆனால், தமிழகத்தை தொடர்ந்து ஆட்சி செய்துவரும் கட்சிகளுக்கு மக்கள் நலனில் அக்கறையோ அல்லது தொலைநோக்குப் பார்வையோ இல்லை. அதனால் தான் கூடுதலாக பெய்யும் மழைநீரை சேமித்து வைக்கும் கட்டமைப்புகள் கடந்த 50 ஆண்டுகளில் ஏற்படுத்தப் படவில்லை. அதன்விளைவு மழை இல்லாத காலங்களில் வறட்சியையும், மழைக் காலங்களில் வெள்ளத்தையும் அனுபவிக்க வேண்டிய அவல நிலைக்கு சென்னை மாநகர மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காகச் சென்ற முதலமைச்சர் ஜெயலலிதா, வேனில் இருந்தபடியே,‘‘ வாக்களப் பெருங்குடி மக்களே என்பதில் தொடங்கி எம்.ஜி.ஆர். நாமம் வாழ்க!’’ என்பது வரை பேசி தேர்தல் பிரச்சாரம் செய்து திரும்பியிருக்கிறார். இராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், கொளத்தூர் என 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குச் சென்ற ஜெயலலிதா ஒட்டுமொத்தமாக மூன்று பேரிடம் கூட வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறியவில்லை. பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க திரண்டு வந்த போதிலும் முதலமைச்சர் ஜெயலலிதாவை நெருங்க விடாமல் அவர்களை அதிகாரிகள், காவலர்கள் மற்றும் ஆளுங்கட்சியினர் விரட்டியடித்தனர்.

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வந்த மழையால் லட்சக்கணக்கான ஏழை மக்கள் வேலைவாய்ப்பை இழந்து தவிக்கின்றனர். அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உண்டு. எனவே, மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்த அனைத்து குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக ரூ.5,000 வழங்க வேண்டும்

ஐதராபாத்: லிஃப்ட் கதவில் தலை சிக்கி 3 வயது குழந்தை பலி

lift boy - 2026

ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் லிஃப்ட் கதவில் தலை சிக்கி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

அந்தக் குழந்தையின் ஆசிரியர், குழந்தைகளை முதல் மாடியில் இருந்து 3வது மாடிக்கு அழைத்துச் சென்ற போது இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது.

ஹைதராபாத் தில்சுக் நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ சைதன்யா பள்ளியில் படித்து வந்தவர் சயீதா ஜெயினப்(வயது 3). இன்று காலை பள்ளியில் முதல் தளத்தில் இருந்து மூன்றாவது தளத்திற்கு மாணவ மாணவியரை ஆசிரியர் லிப்டில் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது லிப்டின் கதவில் ஜெயினப் தலை சிக்கி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திராவிடக் கட்சிகளை வங்கக் கடலில் வீசியெறிய முடிவு எடுக்கவேண்டும்: தமிழருவி மணியன்

சென்னை:
இரு திராவிடக் கட்சிகளையும் வங்கக் கடலில் வீசியெறிய முடிவு எடுக்க வேண்டும் என்று காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.
இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:

சென்னை மாநகரத்தைச் சிங்கப்பூராக்குவோம் என்று கடந்த 48 ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி பீடத்தை அலங்கரித்து வரும் இரண்டு திராவிடக் கட்சிகளும் வாய் கூசாமல் வசீகரமான வார்த்தைகளில் வாக்குறுதி வழங்கின. ஆனால், 5 நாட்கள் பெய்த சாதாரண மழையைக் கூடத் தாங்க முடியாமல் இன்று ஒட்டுமொத்த சென்னையும் தத்தளிக்கிறது. 2005ல் பெய்த பெருமழையில் விளைந்த கடும் சேதங்களைக் கண்ட பின்பும் கடந்த 10 ஆண்டுகளில் இரண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியிலும் முறையாக மழைநீரைச் சேகரிக்கவும், பழுதடைந்த கால்வாய்களைக் கட்டமைக்கவும், நீர்நிலைகளைத் தூர் வாரவும் உருப்படியாக எந்தப் பணியும் செய்யப்படவில்லை .

நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்ட 40 ஆயிரம் நீர்நிலைகளில் பெரும்பாலானவை இந்த இரண்டு திராவிட கட்சிகளின் ஆட்சிக்காலங்களில் தீவிர ஆக்கிரமிப்புக்குள்ளாயின. தண்ணீர் தேங்கும் வாய்ப்புள்ள தாழ் நிலங்களெல்லாம் வீடுகட்டும் இடங்களாக மாற்றப்பட்டன. தமிழகத்தில் பாயும் 17 சிறிய, பெரிய ஆறுகள் ஒன்றிணைக்கப்படுவதற்கான எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. தாமிரபரணி, கருமேனி, நம்பியாறு இணைப்புத் திட்டம் இன்றுவரை முழுமைப்பெறாமல் முடங்கிக்கிடக்கிறது. சரியான திட்டமிடல் இன்மையால் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 177 டி.எம்.சி. தண்ணீர் பயன்பாடின்றி வீணாகிறது. இந்த நிலையில் வெள்ள நிவாரணப் பணிகளால் மட்டும் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினை தீர்ந்து விடப்போவதில்லை. புதிது புதிதாய் இலவசத் திட்டங்களை அறிவித்து வாக்கு வங்கியை வளர்த்தெடுப்பதைத் தவிர இந்த இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் மக்கள் நலன் காக்கும் திட்டங்களைத் தீட்டுவதில் எந்த அறிவியல் பார்வையும் இல்லை. சீரழிந்து கிடக்கும் சென்னை சீர்பட, தண்ணீரில் மிதக்கும் கடலூர் இயற்கைப் பேரிடரிலிருந்து நிரந்தரமாக விடுபட, மழை நீர் வீணாகாமல் மக்களுக்கும் விவசாயிகளுக்கும் பயன்பட தமிழகத்து வாக்காளர்கள் இந்த இரண்டு திராவிடக் கட்சிகளையும் வங்கக்கடலில் வீசியெறிவதற்கு முதலில் முடிவெடுக்க வேண்டும்.

ஊழலற்ற, சமூக நேயத்துடன் சத்தியம் சார்ந்து செயற்படுபவர்களை தேர்தல் களத்தில் தேடிக் கண்டுபிடித்து மாற்று அரசியலை மலரச் செய்ய வேண்டும். ஆயிரம் தவறுகள் இருந்த போதிலும் அரசியல் கருத்து வேற்றுமைகளை மீறி, நிவாரணப் பணிகளில் அனைவரும் ஒன்றினைந்து ஈடுபடுவது தான் இன்றைய அவசரத் தேவை. காந்திய மக்கள் இயக்கத் தொண்டர்களும் தங்களால் இயன்ற அளவு விளம்பர வெளிச்சமின்றி நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.