பாவூர்சத்திரம் முருகன் கோவிலில் சூரசம்ஹாரம்
பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் மாலை சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது
பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா கடந்த 12ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது, இன்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், மதியம் உச்சிகால பூஜை மற்றும் சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்றது
காலை 10 மணி முதல் 12.30 மணி வரை சஷ்டி ஹோமம், தீபாராதனை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரனை முருக பெருமான் வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் பாவூர்சத்திரம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டு கழித்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினருடன் இணைந்து பக்தர்கள் செய்திருந்தனர்.
வென்னிமலையில் சூரசம்ஹாரம்
தீவிரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் ராணுவ அதிகாரி பலி
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பிரிவினைவாதிகளுடன் ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில், இந்திய ராணுவத்தில் ராணுவ கர்ணலாக பணியாற்றும் அதிகாரி ஒருவர் பலியானார் .
இந்திய ராணுவத்தின் 41-வது ராஷ்டீரிய ரைபிள் படையினருக்கும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இயங்கி வரும் பிரிவினைவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை ஏற்பட்டது.
நடைபெற்ற சண்டையில் முன்னின்று நடத்திய கர்ணல் சந்தோஷ்குமார் படுகாயமடைந்தார்.
அவர் உடனடியாக குப்புவாரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டடார். அவருக்கு தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
பிரிவினைவாதிகள் குப்புவாரா மாவட்டத்தின் காட்டு பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து இந்த சண்டை நடைபெற்றதாக கூறப்படுகின்றது
ரஷ்ய விமான தாக்குதலை நடத்தியது தீவிரவாத அமைப்பே : பாதுகாப்புத் துறை
224 பயணிகளுடன் ரஷ்ய விமானம்கடந்த மாதம் வெடித்துச் சிதறியதற்கு தீவிரவாத தாக்குதலே காரணம் என ரஷ்ய பாதுகாப்புத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.
சம்பவத்துக்குக் காரணமானவர்களைக் கண்டறிந்து, கடும் தண்டனை அளிக்க ரஷ்ய அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளார்.எகிப்தின் சினாய் அருகே கடந்த அக்டோபர் 31-ம் தேதி 224 பேருடன் பறந்த ரஷ்யாவின் ஏ 231 விமானம் வெடித்துச் சிதறியது. இதில் 224 பேரும் உயிரிழந்தனர். இது விபத்தா, தீவிரவாத தாக்குதலா என விசாரணை தீவிரமாக நடந்து வந்தது.
இதுதொடர்பாக ரஷ்ய பாதுகாப்புத் துறை செயலாளர் அலெக்ஸாண்டர் போர்ட்னிகோவ் கூறும்போது, “எங்கள் நிபுணர்களின் கூற்றுப்படி, ஒரு கிலோ டிஎன்டி வெடிப்பொருளுக்கு இணையான உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வெடிப்பொருள் விமானத்தில் இருந்திருக்கிறது.
அதுதான் விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியதற்குக் காரணம். இது தீவிரவாத தாக்குதல்தான் எனத் கூறியுள்ளார். விமானம் வெடித்துச் சிதறியதற்கு தீவிரவாத தாக்குதல் காரணம் என தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்படுவர் என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். இதற்கு சட்ட வரையறை எல்லாம் கிடையாது. குற்றவாளிகள் அனைவரின் பெயரும் தெரிய வேண்டும். அவர்கள் பூமியில் எங்கிருந்தாலும் கண்டுபிடித்து, தண்டனை அளிப்போம்” என புதின் கூறியுள்ளார்.முன்னதாக இத்தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றிருந்தது. ஆனால், கூடுதல் விவரங்கள் எதையும் அளிக்கவில்லை.
இதனிடையே, விமான தாக்குதலுக்கு காரணமானவர்கள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு சுமார் ரூ.330 கோடி பரிசாக அளிக்கப்படும் என ரஷ்ய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தேசத்தை அவமானப்படுத்திய மணிசங்கர் அய்யர் : பிரகாஷ் ஜவடேகர் கடும் தாக்கு
பாகிஸ்தான் இந்தியா இடையே மீண்டும் பேச்சுவார்த்தை துவங்க வேண்டும் என்றால் பிரதமர் மோடியை நீக்க வேண்டும் என்று பாகிஸ்தான் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்ததன் மூலம் மணிசங்கர் அய்யர் கூறி தேசத்தை அவமதித்துவிட்டார் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.
செய்தியாளர்களுக்கு கவுகாத்தில்பேட்டி அளித்த வனம் மற்றும் சுற்றுச்சூழல் மத்திய துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது :
பாகிஸ்தான் தொலைக்காட்சிக்கு பேட்டி அளிக்கையில் தனது மன சம நிலையை மணி சங்கர் இழந்துவிட்டார் என்று நான் கருதுகிறேன். மணி சங்கர் அய்யரின் பிரதமர் மோடியை மட்டுமல்லாது ஒட்டு மொத்த தேசத்தையும் அவமானப்படுத்திவிட்டார்.
பாரீஸில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு சமாஜ்வடி கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஆசம் கான் ஆதரவு தெரிவிக்கிறார். குற்றமற்றவர்களை முதலில் கொன்றதற்காக பழிவாங்கும் நோக்கில் நடத்தப்பட்டது இந்த தாக்குதல் என ஆசம் கான் தெரிவித்துள்ளார் ஆனால், இவரது கருத்துக்கு சமாஜ்வாடி கட்சி கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. பயங்கரவாதத்தை நியாயப்படுத்தும் ஆசம் கானின் மற்றொரு வழியில் மணிசங்கர் அய்யர் உள்ளார்.இந்தியாபாகிஸ்தான் பிரச்சினையை தீர்க்க கூடாது என்பது பாகிஸ்தானின் வழியாகும். ஆனால், பாகிஸ்தான் உட்பட பிறநாடுகளுடன் நல்லுறவை தொடங்கும் நடவடிக்கைகளில் இறங்கியது பிரதமர் மோடிதான் என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான மணி சங்கர் அய்யர், இருநாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை மீண்டும் துவங்கப்பட வேண்டுமானால் பிரதமர் மோடியை நீக்க வேண்டும் என்று பேசியதாக சொல்லப்படுகிறது.
17 ஆண்டுகளாக இரட்டைக் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது
கோவை மாவட்டத்திலுள்ள , பெரியநாயக்கன்பாளையம் சாமிசெட்டிபாளையத்தை சேர்ந்த பெரியகருப்பன் என்பவரின் 70 வயதான மகன் மாகாளி. கூலித் தொழிலாளியான அவர் தனது தம்பி பழனிச்சாமி (37) என்பவருடன் கூட்டு குடும்பமாக வசித்து வந்துள்ளார்.
மாகாளியின் மனைவி பழனாத்தாள்( 42) மற்றும் பழனிச்சாமி ஆகியோரிடையே கள்ள உறவு இருப்பதாக சந்தேகமடைந்தார். இதனால், ஏற்ப்பட்ட குடும்ப தகராறில், 1998-ம் ஆண்டு ஜூலை, 19-ம் தேதி இரவு, 2:00 மணிக்கு பழனிசாமியையும், மனைவி பழனாத்தாளையும் அரிவாளால் வெட்டி கொடூரமாக கொலை செய்தார்.
நடைபெற்ற இரட்டைக் கொலை தொடர்பாக, பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்து மாகாளியை தேடி வந்தனர்.தமிழகத்தைவிட்டு 17-ஆண்டுகளாக தலைமறைவாக பெங்களூருவில் தங்கி, கூலி வேலை செய்து கொண்டு கடந்த தீபாவளிக்கு முன்வரை இருந்துள்ளார்.
இந்நிலையில் கோவை மாவட்ம்ட அன்னுார் அருகிலுள்ள, காரனுார் கிராமத்தில் தீபாவளி கொண்டாட அவரது உறவினர் வீட்டுக்கு வந்திருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத் ஆய்வாளர் வெற்றிவேந்தன், உதவி ஆய்வாளர்
செந்தில்குமார் ஆகியோர் காரனூர் சென்று 17 ஆண்டுகளாக இரட்டைக் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த மாகாளியை கைது செய்து,கோவை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மாகாளியை கோவை மாவட்ட சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன்: நடிகை ரோஜா
காங்கிரஸ் கட்சியில் இருந்து என்னை மிரட்டி கட்சியில் இருந்து விலகச் செய்ய நினைக்கிறார்கள், நான் மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன் என நடிகை ரோஜா கூறியுள்ளார்.
ஆந்திர மாநிலம் நகரி தொகுதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான நடிகை ரோஜா அவரது 46–வது பிறந்தநாளை கொண்டாடினார்.
மேலும் அவர் நகரியில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் ஏற்பாடு செய்த இலவச மருத்துவ முகாம் நிகழ்ச்சியில் பேசிய நடிகை ரோஜா, முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. தொகுதிகளுக்குத் தான் அரசு கொடுத்த நிதியை ஒதுக்கிறார்.
அதனால் நான் எனது தொகுதி மக்களுக்கு என்னால் முடிந்த சேவையை செய்து வருகிறேன்.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்களை தெலுங்கு தேச கட்சியினர் மிரட்டி தங்களுக்கு பணிய வைக்க முயற்சிக்கிறார்கள்.
என்னையும் மிரட்டி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகச் செய்ய நினைக்கிறார்கள்.அவர்களது கனவு பலிக்காது. அவர்களது மிரட்டலுக்கும் நான் பயப்பட மாட்டேன்.
மேலும், எனது உயிர் மூச்சு வரை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில்தான் இருப்பேன் என்று நடிகை ரோஜா கூறியுள்ளார்.
தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரியாக ராகேஷ் லக்கானி ?
தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரியாக ராகேஷ் லக்கானி நியமிக்கப்பட்டுள்ளதாக நம்பதகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் கூறுகிறது.
மேலும் இதற்கான அறிவிப்பு இன்னும் சில நாட்களுக்குள் வெளியாகும் என்று தகவல்கள் அந்த கூறுகிறது.
வெள்ள நீரில் தத்தளிக்கும் சென்னை மக்களை மீட்க்க இலவச படகு சேவை
சென்னையில் ’ஓலா கேப்ஸ்’ தனது படகுகளையும், பயிற்சி பெற்ற நீச்சல் வீரர்களையும் களத்தில் இறக்கி பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு வருகிறது.
’ஓலா கேப்ஸ்’ என்ற டாக்ஸி நிறுவனம், சென்னையில் மழை நீரால் சூழப்பட்டுள்ள பகுதிகளில் தனது படகுகளை அனுப்பி வெள்ள நீரில் தத்தளித்தவர்களை மீட்டு வர உதவி செய்து வருகிறது.
இதுகுறித்து ஓலா வெளியிட்டுள்ள அறிக்கையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எங்களது படகுகளையும், பயிற்சி பெற்ற நீச்சல் வீரர்களையும் அனுப்பி மக்களை மீட்டுள்ளோம்.
தீயணைப்புத் துறையினர் எங்களுக்குத் தந்த தகவல் அடிப்படையில் இதைச் செய்தோம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த படகுகளை பயிற்சி பெற்ற படகோட்டிகள் செலுத்தினர்.
மேலும் மீனவர்களையும் ஈடுபடுத்திய இந்த நிறுவனம், உணவு, குடிநீர் ஆகியவற்றையும் இலவசமாக கொடுத்து உதவியுள்ளது.
ஒவ்வொரு படகிலும் 2 படகோட்டிகள், குடைகள் உள்ளிட்டவையும் என ஒரு படகுக்கு 5 முதல் 9 பேர் வரை மீட்டு வந்துள்ளனர்.
இன்னும் சென்னையில் பல இடங்களில் வெள்ள நீர் தேங்கியிருப்பதால், அடுத்த 3 நாட்களுக்கு இந்தப் படகு சேவையை நடத்தப் போவதாகவும்’ ஓலா கேப்ஸ் டாக்ஸி நிறுவனம்அறிவித்துள்ளது
தமிழகத்தில் கனமழை காரணமாக 50 இடங்களில் கூடுதல் காய்கறி விற்பனை மையங்கள் : ஜெயலலிதா
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது :-.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் பெய்து வரும் கன மழையின் காரணமாக சென்னை நகருக்கு காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. இதனால் காய்கறிகளின் விலை தற்போது உயர்ந்து வருகிறது. காய்கறிகளின் விலைகளை கட்டுப்படுத்தும் வகையில், சென்னை நகரில் 50 கூடுதல் காய்கறி பசுமை நுகர்வோர் கடைகள் விற்பனை மையங்களை தற்காலிகமாக திறக்க நான் உத்தரவிடுகிறேன் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
சென்னை நகரில் தற்காலிகமாக அமையவுள்ள 50 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளின் விவரங்கள் :-
துரைப்பாக்கம் மற்றும் மீனம்பாக்கம் டீயூசிஸ் அங்காடிகள், தாடண்டன் நகர், சாஸ்திரி நகர், விருகம்பாக்கம், சின்மயா நகர், திருநகர் (வடபழனி), மன்னார் முதலியார் தெரு (வடபழனி), பேரூர்-காரப்பாக்கம், கணேஷ் நகர் (கிழக்கு தாம்பரம்), கௌரிவாக்கம் (கிழக்கு தாம்பரம்), சந்தோஷபுரம் (கிழக்கு தாம்பரம்), இராமகிருஷ்ணன் தெரு (மேற்கு தாம்பரம்), வசந்தம் காலனி (வில்லிவாக்கம்), திருமங்கலம் (அண்ணாநகர் மேற்கு), ஏ.கே.சாமி நகர் (அயனாவரம்), பி.பி. கார்டன் (அமைந்தகரை), கிருஷ்ணாபுரம் (அம்பத்தூர்), புரசைவாக்கம், மணலி, எத்ராஜ்சாமி தெரு (எருக்கன்சேரி), முத்தமிழ் நகர் (கொடுங்கையூர்), பஜனைகோயில் தெரு (எர்ணாவூர்), பாரதியார் தெரு (எர்ணாவூர்), பழைய வண்ணாரப்பேட்டை, ராயபுரம், அருணாசலேஸ்வரர் தெரு (புது வண்ணாரப்பேட்டை), பூண்டி தங்கம்மாள் தெரு (புது வண்ணாரப்பேட்டை), தண்டையார் நகர், சௌகார்பேட்டை, தண்டையார் பேட்டை, கும்மாளம்மன் கோயில் தெரு (தண்டையார் பேட்டை), ஐசிஎப் பேருந்து நிலையம், சைதாப்பேட்டை, நங்கநல்லூர், ஆதம்பாக்கம், மேற்கு மாம்பலம், ரங்கைய்யா கார்டன் தெரு (மைலாப்பூர்), கிழக்கு அபிராமபுரம் (மைலாப்பூர்) ஆகிய இடங்களில் உள்ள கூட்டுறவு நியாய விலைக் கடைகள் மற்றும் அண்ணா நகர் மேற்கு, அசோக் நகர், ஆர்.கே.மடம் சாலை, இந்திரா நகர், ஆழ்வார்பேட்டை, தாம்பரம், கே.கே.நகர் மேற்கு, ராயப்பேட்டை, திருவான்மியூர், ஆற்காடு சாலை, போரூர் ஆகிய இடங்களில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் காய்கறிகள் விற்பனை செய்யப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
வெள்ள நிவாரண நிதியாக தமிழக அரசுக்கு திமுக சார்பில் சார்பில் ரூ.1 கோடி : கருணாநிதி அறிவிப்பு
தமிழகத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக பொதுமக்களின் துயரில் பங்கேற்கின்ற விதமாக திமுக சார்பில் துயர் துடைப்பு நிதியாக ஒரு கோடி ரூபாய் தமிழக அரசிடம் வழங்கப்படும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்
தெரிவித்துள்ளதாவது :-
தமிழகத்தில் கடந்த பத்து நாட்களாகதொடர்ந்து பெய்துவரும் பெரு மழை மற்றும் வெள்ளம் காரணமாக அனைத்துப் பிரிவு மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு, பலர் வீடிழந்து, வாழ்வாதாரம் உள்ளிட்ட உடைமைகளை இழந்து வருந்தி நிற்கின்ற நிலையில்அவர்களின் துயரில் பங்கேற்கின்ற விதமாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் துயர் துடைப்பு நிதியாக ஒரு கோடி ரூபாய் தமிழக அரசிடம் வழங்கப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் தமிழக அரசின் சார்பில் துயர் துடைப்பு நிதியாக அறிவிக்கப்பட்டிருக்கும் 500 கோடி ரூபாய் என்பது ஏற்பட்டிருக்கும் இழப்பின் அளவோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, மிகவும் குறைவாகவே உள்ளதால், தமிழக அரசு மத்திய அரசின் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து பெரும் அளவுக்கு நிதியினை தமிழக அர சு பெற வேண்டும் ,
மேலும் தமிழகத்தில் உள்ள வசதி படைத்தோரிடமிருந்து நிவாரண நிதி திரட்டிடவும் உடனடியாக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் பொது மக்களுக்கு நிவாரண உதவிகளை போதிய அளவுக்கு வழங்குவதற்கு மாவட்டந்தோறும் அனைத்துக் கட்சிக் குழுக்களை அமைத்து, அந்தக் குழுவினர் முன்னிலையில் நிவாரண உதவிகளை வழங்கிட வேண்டுமென்றும் திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்துவதாக கருணாநிதி தெரிவித்துள்ளார்.

