Home Blog Page 5956

ரூ.500 கோடி நிதி ஒதுக்கியது போதாது : விஜயகாந்த்

தமிழகத்தில் மழை வெள்ளதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு நிவாரண நிதியாக ரூ.500 கோடி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஒதுக்கியது போதாது என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்தாவது:-

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா 16-11-2015 அன்றுஅவருடைய ஆர்.கே.நகர் தொகுதியில் ஒன்றிரண்டு இடங்களை பார்வையிட்டு சென்ற பிறகு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மழையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்கள் குறித்தும், அவர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கியதும், மழைநீர் வெளியேற்றப்பட்டது குறித்துமான பூசி, மெழுகும் புள்ளிவிவரங்கள்தான் உள்ளன.

ஒரே நாளில் 27 செ.மீ. முதல் 33 செ.மீ. வரை மழை பெய்துள்ளது. அதனால் பாதிப்பையும், சேதத்தையும் தவிர்க்க இயலவில்லை என்று முதல்-அமைச்சர் கூறியுள்ளார். இதையேதான் 2005-ல் 28 செ.மீ. மழை பெய்தபோதும் கூறினார். கடந்த பத்தாண்டுகளாக மழைநீர் வடிவதற்கு தேவையான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையா? சென்னையில் மழைநீர் வடிகால்கள் கட்டுமானத்திற்காக சுமார் 5 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டதாக சொல்லப்பட்டது என்னவானது?

சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம், கடலூர் மற்றும் பிற மாவட்டங்கள் கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளன. சுமார் 5 ஆயிரம் கோடிக்கு மேல் சேதம் ஏற்பட்டிருக்கும் என சொல்லப்படுகிறது. ஆனால் நிவாரண உதவிக்கும், மறு சீரமைப்பிற்கும் 500 கோடி ரூபாயை ஒதுக்கி இருப்பதாக வந்துள்ள அறிவிப்பு, பாதிக்கப்பட்ட மக்களிடையே பெருத்த ஏமாற்றத்தையும், கண்துடைப்பிற்காக இது அறிவிக்கப்பட்டுள்ளதோ என்ற ஐயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே, அதிக நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

சென்னையில் மழைநீர் செல்லும் பெரும்பாலான நீர்வழிப்பாதைகள் அடைக்கப்பட்டுள்ளது. அதைக்கண்டும் காணாமல், நீர்வழிப்பாதையில் கட்டிடங்கள் கட்டுவதற்கு அரசு நிர்வாகம் அனுமதி அளித்ததும், மழைநீர் வடிகால்கள் முறையாக அமைக்கப்படாமல், தூர்வாரப்படாமல் இருப்பதும், சென்னையை சுற்றியுள்ள ஆறுகள், ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் தூர்வாரி, கரைகள் உயர்த்தப்படாமல் இருந்ததுமே இந்த பாதிப்புகளுக்கும், சேதங்களுக்கும் முழுமுதற்காரணமாகும்.

முதலமைச்சர் ஜெயலலிதா, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கும் வகையில், போர்க்கால நடவடிக்கைகள் எடுத்து, பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு விரைவில் திரும்பும் வகையில் நிவாரண பணிகளை துரிதப்படுத்தவேண்டும் என கேட்டுக்கொள்வதாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழக புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக ராஜேஷ் லக்கானி நியமனம்

images tamilnadu rajesh lakhani - 2026தமிழகத்தின் புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக ராஜேஷ் லக்கானி நியமிக்கப்பட்டுள்ளார்.
 
சந்தீப் சக்சேனா தமிழகத்தின் புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக கடந்த ஆண்டு அக்டோபர் 27 ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.
 
இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த சந்தீப் சக்சேனா, டெல்லி தலைமை தேர்தல் துணை ஆணையராக நியமிக்கப்பட்டார்.
 
இதைத் தொடர்ந்து தமிழகத்திற்கு புதிய தலைமை தேர்தல் அதிகாரி நியமிக்க வேண்டியிருந்தது.

அதன்படி தமிழக அரசு அனுப்பிய பட்டியலின்படி தமிழக புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக ராஜேஷ் லக்கானி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 
ராஜேஷ் லக்கானி தற்போது, தமிழக அரசின் எரிசக்தி துறை முதன்மை செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஐயப்பப் பக்தர்கள் மாலை அணிந்தனர்

கிருஷ்ணகிரி மாவட்ட ஐயப்பப் பக்தர்கள் கார்த்திகை மாதம் பிறப்பையொட்டி துளசி மாலை அணிந்து செவ்வாய்க்கிழமை விரதத்தைத் தொடங்கினர்.

சபரிமலைக்கு செல்லும் ஐயப்பப் பக்தர்கள் துளசி மாலை அணிந்து விரதத்தைத் தொடங்குவது வழக்கம்

முக்கியமாக கார்த்திகை மாதம் 1-ஆம் தேதி மாலை அணிவது வழக்கம். அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஐயப்பன் கோயிலில் அதிகாலை முதல் சபரிமலைக்குச் செல்லும் ஐயப்பப் பக்தர்கள் துளசி மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினர்.

ஐயப்பன் கோயில் குருசாமி சிவதாஸ், பக்தர்களுக்கு மாலை அணிவித்தார். சுவாமிக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, ஐயப்பன் கோயிலில் 45 நாள்கள் நடைபெறும் மண்டல பூஜையும் தொடங்கியது.

ஏ.டி.எம் இயந்திரத்தில் தீ விபத்து

 

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து, ஜெயங்கொண்டம், விருத்தாசலம் செல்லும் பேருந்துகள் புறப்படும் இடத்தில், சிட்டி யூனியன் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது.அந்த மையத்தில் காவலாளியாக சுவாமிநாதன் என்பவர் பணியில் இருந்துள்ளார்.

காலை, 6.50 மணிக்கு ஏ.டி.எம்.மையத்தில் இருந்த குளிரூட்டி இயந்திரத்தில் தீ விபத்து ஏற்பட்டது. மேலும், இயந்திரத்தில் கதவும் தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்த காவலாளி மற்றும் பேருந்து பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து பொதுமக்கள் கும்பகோணம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறை அலுவலர் வெங்கடேசன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால், ஏ.டி.எம். இயந்திரத்தில் தீப்பிடிக்காததால் அதில் வைக்கப்பட்டு இருந்த ஆயிரக்கணக்கான பணம் தப்பியது.

நடைபெற்ற சம்பவ இடத்தை கும்பகோணம் காவல்நிலைய உயர் அதிகாரிகள்பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

குளங்கள் ஏரிகள் குட்டைகள் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி

தமிழகத்தில் பரவலாக பல மாவட்டங்களில் பரவலாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. இந்த நிலையில் வெண்ணந்தூர் பகுதியில் உள்ள ஏரிகள், குளம், குட்டைகள் நிரம்பியதால், அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சேலம் ராசிபுரம் மாவட்டம் அடுத்த வெண்ணந்தூர் பகுதியில் உள்ள, சோமூர் ஏரி, 360 ஏக்கர் பரப்பளவு கொண்டது.
ஆண்டுதோறும் பெய்யும் மழையால் இந்த ஏரிக்கு அளவிற்கு மேல் மழைநீர் வருவது வழக்கம். தற்போது பெய்த மழையால்ஏரியில் முழு கொள்ளளவையும் ஈட்டி நிரம்பி உபரி நீர் வழிந்தோடுகிறது.

அதனால், அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து நெல் மற்றும் கரும்பு பயிர்களை பயிரிட்டு வருகிறார்கள். ஏரியின் கொள்ளளவிற்கு ஏற்ப அந்த பகுதியில், 300க்கும் மேற்பட்ட ஏக்கரில் பாசன விவசாயம் தொடர்ந்து நடைபெறும். இங்கிருந்து வெளியேறும் நீர் ராமபுரம், பருத்திப்பள்ளி பகுதிகளில் உள்ள ஏரி, குளம், குட்டைகளில் தேங்கி வருகிறது.

மேலும் அக்கரைப்பட்டி ஏரி, மதியம்பட்டி ஏரியும், நிரம்பியுள்ளது. இந்த ஏரிகளுக்கும், சோமூர் ஏரிக்கும் திருமணிமுத்தாற்று பகுதிகளில் இருந்தும் வரும் நீரினால், இந்த இரண்டு ஏரியும் நிரம்பி வருதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மழை வெள்ளத்தில் சிக்கி தவித்த 18 ஆயிரம் பேர் மீட்பு

 

 காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று ஒரேநாளில், மழை வெள்ளத்தில் சிக்கி தவித்த 18 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு உள்ளதாக காஞ்சீபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார் .

காஞ்சீபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது :–

அரசுத்துறை அலுவலர்கள் நான்கு குழுக்களாக பிரிந்து உடனடியாக போர்க்கால அடிப்படையில் வெள்ளத்தினால் நீர்சூழ்ந்த பகுதிகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளை துரிதப்படுத்தி, வெள்ளத்தில் சிக்கி உள்ள பொதுமக்களை மீட்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தாம்பரம் டாக்டர் அம்பேத்கர் திருமண மண்டபத்தில் பேரிடர் மீட்பு குழுவினருக்காக தயாரிக்கப்பட்டு வரும் உணவு தரமாக உள்ளதா? என்றும் தமிழக அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.

கடந்த 2 நாட்களாக தாம்பரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழையினால் பாதிக்கப்பட்டு அவதியுற்ற பொதுமக்களை நகராட்சி நிர்வாகம், கடலோர காவல் படை, தேசிய இடர்பாடுகள் மீட்புப்படை, மாநில இடர்பாடுகள் மீட்புத்துறை, காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், இந்திய ராணுவ மீட்புத்துறை, கடற்படையினர், விமானப்படையினர், மீன் வளத் துறையினர் மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

90 படகுகளைக் கொண்டு 553 மீட்புக்குழு பணியாளர்கள் மூலம் 10 ஆயிரத்து 67 நபர்கள் மிகவும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.

காஞ்சீபுரம் மாவட்டம் முழுவதும் இதுவரை 34 ஆயிரத்து 426 பேர் மழை வெள்ள பாதிப்பிலிருந்து மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அரசு பாதுகாப்பு முகாம்களில் அமைக்கப்பட்டுள்ள 116 முகாம்களில் மருத்துவ உதவிகள் மற்றும் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

மேற்கண்ட ஆய்வுகளின் போது தமிழக முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து பலியான 7 நபர்களுக்கு தலா ரூ.4 லட்சம் வீதம் ரூ.28 லட்சம் நிவாரண உதவியாக அமைச்சர்களால் வழங்கப்பட்டுள்ளது.
என காஞ்சீபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில்
கூறியுள்ளார்.

 திருவள்ளூர் மாவட்டஆட்சியர் வீரராகவ ராவ் நேற்று மாலை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது :–

திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையான உதவிகள் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் துரிதமாக எடுக்கப்பட்டுள்ளன.

இதில் அனைத்து துறை அதிகாரிகள், ஊழியர்கள் இணைந்து இந்த பணியை மேற்கொண்டு வருகிறோம். கடந்த ஆண்டில் இதே நவம்பர் மாதத்தில் 14.2 செ.மீ. மழை அளவு பதிவாகி இருந்தது. ஆனால் இந்த ஆண்டு அதை விட 4 மடங்கு கூடுதலாக மழை பெய்துள்ளது.

இதனால், திருவள்ளூர் மாவட்டத்தை சுற்றியுள்ள ஏரிகள் அனைத்தும் நிரம்பி வருகின்றன. கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளும் கிடைக்கும் விதத்தில் 22 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த குழுவில் ஒரு துணை ஆட்சியர் , 4 வட்டாட்சியர்கள் இருக்கிறார்கள். 11 தாலுகாக்களில் இந்த 22 குழுக்களும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 111 மீட்பு முகாம்களில் 8 ஆயிரத்து 423 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 18 ஆயிரம் பேர் வெளி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு 3 வேளைகளிலும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, இந்த முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பவர்களில் 5 வயதுக்கு கீழ் இருக்கும் குழந்தைகளுக்கு பால் வழங்கப்படுகிறது.

முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பவர்களுக்காக 22 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஏரிகளில் இருந்து உபரிநீர் வெளியேறி வருவதால், அதை தடுப்பதற்காக ஒரு குழுவில் 4 மாவட்ட அலுவலர்கள் அடிப்படையில், 22 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருவள்ளூர் மாவட்டஆட்சியர் வீரராகவ ராவ் நேற்று மாலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மாற்று அரசியலை தமிழகத்தில் மலர செய்ய வேண்டும் : தமிழருவி மணியன்

 

தமிழகத்தில், ஊழலற்ற, சமூக நேயத்துடன் சத்தியம் சார்ந்து செயல்படுபவர்களை தேர்தல் களத்தில் தேடி கண்டுபிடித்து மாற்று அரசியலை மலர செய்ய வேண்டும் என தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது :–

தமிழகத்தின் தலைநகரான சென்னையை சிங்கப்பூராக மாற்றிக் காட்டுவோம் என கடந்த, கடந்த 48 ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி அதிகார பீடத்தை அலங்கரித்து வரும் இரண்டு திராவிடக் கட்சிகளும் வாய் கூசாமல் வசீகரமான வார்த்தைகளில் வாக்குறுதிகளை வழங்கின. ஆனால், சாதாரணமாக 5 நாட்கள் பெய்த மழையைக் கூட தாங்க முடியாத அளவு சென்னையும் தத்தளிக்கிறது.

கடந்த 2005 ஆம் ஆண்டு பெய்த பெருமழையில் விளைந்த கடும் சேதங்களை கண்ட பின்பும் கடந்த 10 ஆண்டுகளில் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் முறையாக மழைநீரை சேகரிக்கவும், பழுதடைந்த கால்வாய்களை சீரமைக்கவும், நீர்நிலைகளை தூர்வாரவும் எந்த முயற்சியும் செய்யவில்லை.

நமது முன்னோர்களால் உருவாக்கப்பட்ட 40 ஆயிரம் நீர் நிலைகளில் பெரும்பாலானவைகளை திமுக மற்றும் அதிமுக திராவிட கட்சிகளின் ஆட்சி காலங்களில் தான் பலரும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டன. தண்ணீர் தேங்கும் தாழ்வான இடம் எல்லாம் மாடிவீடுகளாக மாறியது.

தமிழகத்தில் பாயும் 17 சிறிய, பெரிய ஆறுகள் ஒன்றிணைக்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. தாமிரபரணி, கருமேனி, நம்பியாறு இணைப்பு திட்டம் இன்று வரை முழுமைப் பெறவில்லை.

தமிழக அரசின் முறையான திட்டமிடல் இல்லாத காரணத்தினால், ஒவ்வொரு வருடமும் குறைந்தது 177 டி.எம்.சி. தண்ணீர் பயன்படுத்த முடியாமல் வீணாகப் போகிறது.

வெள்ள நிவாரண பணிகளால் மட்டும் மக்களின் பிரச்சினை தீர்ந்துவிடாது.இது புதிய இலவச திட்டங்களை அறிவிக்க உதவும்.

ஊழலற்ற, சமூக நேயத்துடன் சத்தியம் சார்ந்து செயல்படுபவர்களை தேர்தல் களத்தில் தேடி கண்டுபிடித்து மாற்று அரசியலை மலர செய்ய வேண்டும்.

ஆயிரம் தவறுகள் இருந்த போதிலும் அரசியல் கருத்து வேற்றுமைகளை மீறி, நிவாரண பணிகளில் அனைவரும் ஒன்றிணைந்து ஈடுபடுவது தான் இன்றைய அவசர தேவையாகும் என தமிழருவி மணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

கூலியை குறைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய தொழிலாளர்கள் திடீர் சாலை மறியல்

விவசாய தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் கூலித்தொகையை குறைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பழனி அருகே கூலியை விவசாய தொழிலாளர்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகேயுள்ள புதுஆயக்குடியில் இருந்து வரதமாபட்டிணம் செல்லும் சாலையில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நன்செய் நிலம் உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்தது.

தொடர் மழைகாரணமாக பழனி பகுதிகளில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து குளங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

பழனி பகுதியில் விவசாய பணிகள் தீவிரமாக தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அங்கு வரதமாநதி நீர்ப்பாசன அமைப்பில் பெரியவாய்க்கால் – பெரியகுளம் நீர்பாசனம் பயன்படுத்துவோர் சங்கம் உள்ளது. இந்த சங்கத்தில் பெரிய வாய்க்கால் தலைவராக மதிமுகவும் , ஆட்சிமன்ற குழுவினராக 5 பேர் உள்ளனர். இதேபோல் பெரியகுளம் பகுதிக்கு தலைவராக கருப்பசாமியும், ஆட்சி மன்ற குழுவினராக 6 பேரும் உள்ளனர். இவர்களில் சிலர் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள்.

சங்க அமைப்பினர் வயல்வெளி உள்ள பகுதிகளில் ஆங்காங்கே அறிவிப்பு பலகைகளை வைத்தனர். அதில் விவசாய கூலி விவர பட்டியலை வெளியிட்டு இருந்தனர். அதில் விவசாய தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் கூலித்தொகை குறைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலையில் 5 மணிக்கு விவசாய தொழிலாளர்கள் வழக்கம் போல் வேலைக்கு வந்தனர்.

அப்போது வயல் பகுதிகளில் ஆங்காங்கே வைக்கப்பட்டு இருந்த கூலி விவர பட்டியல்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயக்குடியில் இருந்து வரதமாபட்டிணம் செல்லும் சாலையில் அவர்கள் திடீரென்று மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 2½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த ஆயக்குடி காவல் நிலையத்தினர், கிராம நிர்வாக அதிகாரி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விவசாய தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் தங்களுக்கு ஏற்கனவே கூலி குறைத்து வழங்கப்படுகிறது. மேலும் கூலியை குறைத்து நிர்ணயம் செய்து உள்ளனர். இது சம்பந்தமாக தொழிலாளர்களை அழைத்து சம்பந்தப்பட்டவர்கள் பேசவில்லை. இவர்கள் எங்களுக்கு கூலியை நிர்ணயிக்க கூடாது. எனவே அறிவிக்கப்பட்ட கூலியை ஏற்றுக்கொள்ளமாட்டோம். மேலும் அறிவிப்பு பலகைகளை உடனே அகற்றவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

வயல்வெளிகளில் உள்ள அறிவிப்பு பலகைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கூலி பிரச்சினை குறித்து பழனி வருவாய் கோட்டஆட்சியரிடம் மனு கொடுத்தால் தீர்வு காணலாம் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் கூறினர்.

அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து விவசாய தொழிலாளர்கள்மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். திடீர் சாலை மறியல் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது : கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு

தமிழ்நாட்டுக்கான தண்ணீரை உடனடியாக திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்தது. அதற்கு

தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில்தமிழ்நாட்டுக்கு தற்போது தண்ணீர் திறந்துவிட முடியாது கூறியுள்ளது.

காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக தமிழக அரசு சார்பில் 17.10.2015 அன்று உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில் தெரிவித்துள்ளதாவது:-

காவிரி நதிநீர் தீர்ப்பாயத்தின் உத்தரவை நிறைவேற்றும் வகையில், 30.9.2015 க்குள் தமிழகத்துக்கு சேரவேண்டிய 45.327 டி.எம்.சி. தண்ணீரையும், தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி 11.2.2015க்குள் தமிழகத்துக்கு சேர்ந்திருக்க வேண்டிய உரிய அளவு தண்ணீரையும் தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும்.

இதுதொடர்பாக காவிரி மேற்பார்வை குழுவை உடனடியாக கூட்டி, காவிரி நதிநீர் தீர்ப்பாயத்தின் உத்தரவில் குறிப்பிட்டுள்ள தண்ணீர் அளவை உடனடியாக தமிழகத்துக்கு திறந்துவிட உத்தரவிட வேண்டும். மேலும் நதிநீர் தீர்ப்பாயம் குறிப்பிட்ட அளவு மட்டுமே கர்நாடக பகுதியில் பயிர் சாகுபடி செய்வதை காவிரி மேற்பார்வை குழு உறுதி செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசு தாக்கல் செய்யப்பட்ட கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த இடைக்கால மனு மீது கர்நாடக அரசு நேற்று உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தது.
அந்த மனுவில் கர்நாடக அரசு அளித்த பதில் விவரமாவது :-

தமிழக அரசின் இடைக்கால மனுவில் கூறப்பட்டுள்ள அனைத்து குறைபாடுகளும் மறுக்கப்படுகிறது. அந்த மனுவில் எதுவும் குறிப்பிட்டு தெரிவிக்கப்படவில்லை. 22.5.2013 அன்று மத்திய அரசு காவிரி மேற்பார்வை குழுவை அமைத்தது. 28.9.2015 அன்று நடைபெற்ற காவிரி மேற்பார்வைக்குழு கூட்டத்தில் இரு பகுதிகளிலும் மழைநீர் அளவு, நீராதார நிலைமை மற்றும் தேக்கி வைக்கப்பட்ட நீரின் அளவு ஆகியவை குறித்து ஆய்வு செய்ய துணைக்குழு அமைக்கப்பட்டது.

தற்போது கர்நாடக மாநிலத்தின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவுவதால், தமிழகத்திற்கு தற்போது தண்ணீர் திறந்துவிட முடியாது. தமிழ்நாட்டில் இப்போது மழை பெய்ய தொடங்கி உள்ளது. கர்நாடக மாநிலத்தின் நீர் தேவைகள் பூர்த்தியாகும் பட்சத்தில், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறப்பது குறித்து பரிசீலிக்கப்படும். எனவே தமிழக அரசின் இடைக்கால மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு கர்நாடக அரசின் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

மாண்புமிகு அம்மா உத்தரவால் தமிழகத்தில் அதிக அளவு மழை : மாவட்ட ஆட்சியர் சம்பத்

மழை தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் சம்பத் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் மாண்புமிகு அம்மா அவர்களின் உத்தரவு படி சேலம் மாவட்டத்தில் அதிக அளவு மழை பெய்துள்ளது என கூறினார்.

தமிழகத்தில் கடந்த பத்து நாட்களாகதொடர்ந்து பெய்துவரும் பெரு மழை மற்றும் வெள்ளம் காரணமாக அனைத்துப் பிரிவு மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு, பலர் வீடிழந்து, வாழ்வாதாரம் உள்ளிட்ட உடைமைகளை இழந்து வருந்தி நிற்கின்றனர்.

இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் சம்பத் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்
காணொளியுடன் திரைப்பட கமெடி ஒலி இணைக்கப்பட்ட காணொளி வாட்ஸ்ஆப்பில் வைரலாக
பரவிவருகிறது .

அந்த காணொளி இந்த செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

COURTESY & VIDEO SOURCE : DINAMALAR