Home Blog Page 5974

பிளஸ் 2 படிக்கும்போதே மாணவர்களுக்கு மடிக் கணினி: இந்த ஆண்டு முதல் அமல்

சென்னை:

மாணவர்களுக்கு அரசு வழங்கி வரும் விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தில், இம்முறை பிளஸ் 2 படிக்கும் போதே வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

மாணவ மாணவியர் நலன் கருதி விலை இல்லா பாடப் புத்தகங்கள், விலை இல்லா நோட்டுப் புத்தகங்கள், புத்தகப் பைகள், மடிக் கணினி உள்பட 14 வகை விலையில்லாப் பொருட்களை தமிழக அரசு வழங்கி வருகிறது.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் உயர் கல்வி படிக்கும்போதுதான் மடிக்கணினி பயன்படுகிறது என்பதால், ஏராளமான ஏழை மாணவர்கள் பயன் அடைகிறார்கள். இந்த மடிக்கணினி பிளஸ் 2 முடித்த பிறகு, அவர்கள் உயர்கல்வியில் சேர்ந்த பிறகுதான் அந்தந்த பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களால் வழங்கப்பட்டு வந்தது.

அந்த மடிக்கணினி முன்கூட்டியே கொடுக்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதன் காரணமாக பள்ளிக்கல்வித்துறை இந்த வருடம் முதல், மடிக்கணினியை மாணவ-மாணவிகளுக்கு வழங்கும் பணியை நேற்று தொடங்கியது.

இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் கூறுகையில் 2015-2016ம் ஆண்டு கல்வி ஆண்டுக்கு உரிய 5 லட்சத்து 8 ஆயிரத்து 72 மடிக்கணினிகள் கொடுக்கும் பணி தொடங்கி உள்ளது. இந்த வருடம் மடிக்கணினிகள் அனைத்தும் வந்துவிட்டன. எனவே உடனே கொடுக்கும் பணியை அந்தந்த பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்கள் செய்ய உள்ளனர் என்று தெரிவித்தார். எனவே மாணவ-மாணவிகளுக்கு இந்த ஆண்டே பயன்படும். அவர்கள் உயர்கல்வியில் படிக்கும்போதும் பயன்பெறுவார்கள் என்றார்.

நிதிஷ், லாலு கட்சிகள் இணைய முடிவு: பேச்சுவார்த்தை தொடக்கம்

பாட்னா:

பீகார் சட்டசபைத் தேர்தலில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும், லாலுபிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதா தளமும் மெகா கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. விரோதிகளாக இருந்த இரு தரப்பும் பொது எதிரியான பா.ஜ.க.,வை வீழ்த்த பீகார் சட்டசபை தேர்தலில் ஒன்று சேர்ந்து கை கோத்துள்ளன. பீகாரில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் இரு கட்சிகளும் தலா 100 தொகுதிகளில் போட்டி போடுகின்றன.

பீகார் சட்டசபை தேர்தல் முடிவு வருகிற 8ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சிகளுக்கு எத்தனை இடங்களில் வெற்றி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தக் கூட்டணி வெற்றி பெறும் பட்சத்தில் இரு கட்சிகளின் கூட்டணி அரசே அமையும் என்றும் கூட்டணி அமைச்சரவையே அமையும் என்றும் கூறப்படுகிறது. இந்தக் கூட்டணி தோல்வியைத் தழுவினால் தொடர்ந்து ஒன்றிணைந்து செயல்படுவர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஐக்கிய ஜனதா தளமும், ராஷ்டீரிய ஜனதா தளமும் ஒரே கட்சியாக இணைய முடிவு செய்துள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மெகா கூட்டணி வெற்றி பெற்றால் நிதிஷ் மீண்டும் முதல்வராவார். அவர் ஆட்சிக்கு லாலுபிரசாத் கட்சியால் பின்னாளில் பிரச்னைகள் வந்து விடக்கூடாது என்று கருதும் ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர்கள் ராஷ்ட்டீரிய ஜனதா தளத்தை தங்கள் கட்சி உடன் இணைத்துக் கொள்ளும் யோசனையை முன்வைத்துள்ளனர்.

கடந்த 2 மாதமாக இரு கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் ஒருங்கிணைந்து தேர்தல் பிரசாரம் செய்ததால் அவர்களுக்குள் நல்ல புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளது. எனவே இரு கட்சிகளும் இணைவதில் பெரிய அளவில் தடை எதுவும் இல்லை. ஆகையால் நாங்கள் இதுதொடர்பாக பேச்சு வார்த்தையை தொடங்கியுள்ளோம் என்று ஐக்கிய ஜனதா தளம் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

கட்சிகளை இணைப்பது குறித்து சமீபத்தில் ஐக்கிய ஜனதா தளம் மூத்த தலைவர் ஒருவரும், ராஷ்டீரிய ஜனதா தளம் மூத்த தலைவர் ஒருவரும் சந்தித்து பேசினார்கள். ராஷ்டீரிய ஜனதா தளம் தலைவர்கள் சிலரும் இந்த இணைப்பை விரும்புவதால் லாலுபிரசாத் யாதவும் சம்மதம் தெரிவிப்பார் என்று கூறப்படுகிறது.

67 வயதாகும் லாலுபிரசாத் யாதவ் குற்றவழக்கில் தண்டனை பெற்றுள்ளதால் மீண்டும் முதல்வராக இயலாத நிலை உள்ளது. எனவே அவர் தில்லி அரசியலில் அதிக ஆர்வம் காட்டுகிறார். ஐக்கிய ஜனதா தளமும், ராஷ்டீரிய ஜனதா தளமும் இணையும் பட்சத்தில் தில்லியில் தனக்கு வலுவான நிலை கிடைக்கும் என்று லாலு நம்புகிறார். மேலும் பீகாரில் தன் மகன்கள் அரசியலுக்கும் நல்ல எதிர்காலத்தை உருவாக்கி கொடுக்க முடியும் என்று நினைக்கிறார். எனவே, ஐக்கிய ஜனதா தளமும், ராஷ்டீரிய ஜனதா தளமும் இன்னும் சில மாதங்களில் இணைந்து ஒரே கட்சியாக மாறிவிடும் என்று கூறப்படுகிறது.

கூகுள் இளவரசன்

ன்றைய இண்டர்நெட்டின் மந்திரச் சொல் கூகுள்தான். இதனிடம் நீங்கள் எதையும் கேட்கலாம்…. எதையும் தேடலாம்… எதையும் பகிரலாம்… இவை எல்லாவற்றையும் கூகுள் உங்களுக்காக செய்யும்.

 

2006-ம் ஆண்டு ஆக்ஸ்போர்ட் டிக்ஷ்னரியில் கூகுள் என்ற வார்த்தை சேர்க்கப்பட்டபோது அது இவ்வளவு பெரிய வளர்ச்சி கண்டிருக்கவில்லை. ஆனால் அதன்பின் விண்ணைத் தொடும் விஸ்வரூப வளர்ச்சிதான். இந்த வளர்ச்சிக்குப் பின்னால் ஒரு தமிழர் இருந்திருக்கிறார் என்பது சமீப காலம் வரை யாருக்கும் தெரியாது. 2013-ல் தான் அவர் பெயர் முதன் முதலாக வெளியுலகில் கசியத் தொடங்கியது.

 

https%3A 2.bp.blogspot.com Z5OoRRKaDNA VG9NpX6bRrI AAAAAAAACek PxjKLU8RYmM s1600 heres what our google sources are saying about sundar pichais sudden rise - 2026

 

 

 

மைக்ரோ சாஃப்டின் CEO-வாக முதலில் அறிவிக்கப்பட்டவர் இவர்தான். அதன் பின்னர்தான் சத்யா நாதெள்ளா வந்தார். மைக்ரோ சாஃப்டிற்கு அடுத்தபடியாக டிவிட்டர்  தனது தலைவராக இவரை நியமித்ததாக டிவிட்டரிலேயே வதந்திப் பரவியது. 

 

யார் இவர்? எதற்காக ஒவ்வொரு நிறுவனமும் இவரைப் போட்டி போட்டுக் கொண்டு பதவி கொடுக்கத் துடிக்கிறது. இந்த துடிப்புக்குப் பின் அந்த நபரின் வெற்றி ரகசியம் ஒளிந்திருக்கிறது.

அவரின் பெயர் பிச்சை சுந்தர்ராஜன், வயது 42. சென்னையில் பிறந்து சென்னையிலேயே பள்ளிப் படிப்பை முடித்தவர். 

 

அவர் படித்த  அசோக் நகர் ஜவஹர் வித்யாலயா இன்று சந்தோ­த்தில் தலைகால் புரியாமல் குதிக்கிறது. பள்ளி படிப்பை முடித்தப்பின் கோரக்பூர் ஐஐடியில் பி.இ.மெட்டலர்ஜி படித்தார். படித்தது உலோகங்களைப் பற்றித்தான் என்றாலும் அவர் மனம் முழுவதும் எலக்ட்ரானிக்ஸ் பக்கமே இருந்தது. உலோக தொழில் நுட்பத்தில் முதல் மாணவனாக தேறினார்.

அமெரிக்காவில் உள்ள ஸ்டேன்ட்போர்டு பல்கலைக்கழகத்தில் எம்.எஸ். முடித்தார். அதன்பின் பென்ஸில்வேனியா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டம் பெற்ற கையோடு  மெக்கன்ஸி கம்பெனியில் சாப்ட்வேர் கன்சல்டன்டாக வேலைக்குச் சேர்ந்தார்.

 

2004-ல் தான் கூகுள் நிறுவனத்திற்குள் நுழைந்தார். அப்போதுதான் கூகுளும் சக நிறுவனங்களோடு போட்டிப் போட்டுக் கொண்டு வளர்ந்து கொண்டிருந்தது. மைக்ரோசாஃப்டின் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ப்ரவுசரை தொடர்ந்து உபயோகித்த கம்ப்யூட்டர் பணியாளர்கள் சலித்து போயிருந்த நேரத்தில், (மைக்ரோசாஃப்ட் கடைசியாக வெளியிட்ட விண்டோஸ் 8 வாடிக்கையாளர்களை ஈர்க்கவில்லை) பல மடங்கு வேகம் நிறைந்த குரோம் ப்ரவுசரை அறிமுகப்படுத்தினார். இன்று உலகின் அதிகவேக ப்ரவுசராக குரோம் இருக்கிறது.

 

கூகுள் டிரைவ் வளர்ச்சிக்கும் சுந்தர் பிச்சை பெரும் பங்கு வகித்திருக்கிறார். அதன்பின் கூகுள் அறிமுகப்படுத்திய ஆண்ட்ராய்ட் சிறப்பான வளர்ச்சி பெற உறுதுணையாக இருந்தார். இந்திய சந்தையை மனதில் வைத்தே ‘ஆண்ட்ராய்ட் ஒன்’ என்ற திட்டத்தை தொடங்கினார். 50 லட்சம் வாடிக்கையாளர்களைச் சேர்த்தார்.

இன்றைய இன்டர்நெட் உலகில் அசைக்க முடியாத சாம்ராஜ்யத்தை கூகுள் நிறுவியுள்ளது. உலகம் முழுவதும் 10 லட்சத்திற்கும் அதிகமான ‘பேசிக் இன்ஃபர்மே­ன் சென்டர்’களை வைத்துள்ளது. அமெரிக்காவை மையமாக வைத்து உலகின் பல நாடுகளில் கூகுள் செயல்படுகிறது. இதில் 52,000 பேருக்கு மேல் பணியாற்றுகிறார்கள். அத்தனை பேருக்கும் சுந்தர் பிச்சைதான் தலைவர். கூகுளின் இரண்டாவது தலைவர். அதாவது  இளவரசர்.

அப்படிப்பட்ட பெரும் சாம்ராஜ்யத்தில் முதுநிலை துணைத்தலைவராக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 2011-ல் கூகுள் குரோம் பிரவுசர், ஜி மெயில், ஆப்ஸ் போன்ற பிரிவுகளுக்கான பொறுப்பாளராக சுந்தர் நியமிக்கப்பட்டார். 2013-ல் ஆண்ட்ராய்ட் சாஃப்ட்வேருக்கான பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். ஸ்மார்ட் போன்களில் ஏற்பட்டுள்ள புதுமைகளுக்கு எல்லாம் ஆண்ட்ராய்ட் சாஃப்ட்வேர்தான் காரணம். உலகின் உள்ள செல்போன்களில் 120 கோடி போன்களில் ஆண்ட்ராய்ட் பயன்படுத்தப்படுகிறது.

1998-ல் லாரி பேஜ் மற்றும் சேர்ஜி பிரின் என்ற நண்பர்கள் இருவரும் சேர்ந்து  தொடங்கிய இந்த நிறுவனம் இப்படி பிரமான்ட வளர்ச்சிபெறும் என்று அவர்கள் நினைத்ததில்லை. தொடக்க காலத்தில்  இணைய உலகிலுள்ள தகவல்களை ஒருங்கிணைப்பதே கூகுளின் நோக்கமாக இருந்தது. அதன்பின் தேடுதல் பொறியுடன் ஜிமெயில் எனப்படும் கூகுள் மெயில், கூகுள் டாக், கூகுள் மேப்ஸ், கூகுள் நியூஸ், ப்ளாக்கர், யூ ட்யூப் போன்ற பல பிரிவுகளை அறிமுகப்படுத்தி ஒவ்வொரு பிரிவிலும் நம்பர் ஒன்னாகத் திகழ்ந்தது கூகுள்.

அந்நிறுவனத்தின் தலைவரான லாரி பேஜ் சுந்தர் பிச்சையைப் பற்றி இப்படி குறிப்பிடுகிறார். “”அவர் ஆழமான தொழில்நுட்ப அனுபவம், உற்பத்தி மீதான சிறப்பான கணிப்பு, தொழில் முனைப்பு திறமை ஆகியவற்றின் அரிய ஒருங்கிணைப்பாக இருக்கிறார்” எனப் பாராட்டுகிறார்.

ஏற்கெனவே கூகுள் ஆண்ட்ராய்ட், குரோம் மற்றும்  ஆப்ஸ் ஆகிய பிரிவுகளின் தலைமைப் பொறுப்பை வகித்து வந்த சுந்தர் பிச்சை, இப்போது கூடுதலாக கூகுள் பிளஸ், கூகுள் மேப்ஸ், காமர்ஸ், இன்ஃபிராஸ்டரக்ச்சர், கூகுள் சர்ச், சோஷியல் மீடியா, விளம்பரம் மற்றும் ஆராய்ச்சி ஆகிய பிரிவுகள் சுந்தர் பிச்சை கட்டுப்பாட்டில் வந்துள்ளன.

 

https%3A 2.bp.blogspot.com PYgBrtN19C4 VG9ONhI9tpI AAAAAAAACes iegErWfS1pQ s1600 o SUNDAR PICHAI facebook - 2026

 

கூகுளின் இன்னொரு பிரிவான ‘யூ டியூப் ‘ லாரி பேஜ் கட்டுப்பாட்டிலே இருக்கும். கூகுள் நிறுனம் அடுத்ததாக ஆண்ட்ராய்ட் கார் தயாரிக்க உள்ளது. இந்த காரிடம் நாம் எந்த ஊருக்கு செல்லவேண்டும் என்ற விவரத்தைச் சொன்னால் போதும் சேட்டிலைட் மூலமாக கூகுள் மேப்ஸ் துணையோடு தானே வழிகளைக் கண்டுபிடித்து சரியான இடத்தில் நம்மை கொண்டு சேர்த்துவிடும்.

மேலும் ஆண்ட்ராய்ட் டிவிக்களையும் கூகுள் தயாரிக்க உள்ளது.  இவற்றில் சுந்தர் பிச்சையின் பங்களிப்பு மிக அதிகமாக இருக்கும். சுந்தர் பிச்சையை மென்பொருள் உலகம் ஆண்ட்ராய்ட் ஜீனியஸ் என்று அழைக்கிறது. சுந்தருக்கு 11 வயதில் ஒரு மகள் இருக்கிறார். அவரது தந்தை சென்னை ஜிஇசி எலக்ட்ரிகல் நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றியுள்ளார்.

 

ஒரு தமிழர் இணைய சாம்ராஜ்யத்தின் இளவரசனாக முடி சூட்டியிருப்பது நமக்கெல்லாம் மகிழச்சிதானே! கூகுளின் தலைவராக சுந்தர்பிச்சை பொறுப்பேற்றிருப்பது நமக்கெல்லாம் மகிழ்ச்சியே!

யமஹாவில் பெண்கள் ராஜ்ஜியம்

பெண்களைக் கொண்டாடும் நிறுவனங்களில் யமஹா முன்னணியில் இருக்கிறது. வேலைவாய்ப்பில் 33 சதவீத இட ஒதுக்கீடு வேண்டுமென்று பெண்கள் தலைகீழாய் தண்ணீர் குடித்துப் பார்த்தார்கள். ஒன்றும் நடக்கவில்லை. நிலைமை இப்படியிருக்க சென்னையில் இருக்கும் யமஹா நிறுவனம் 50 சதவீதத்திற்கும் மேலாக பெண்களை வேலைக்கு வைத்திருக்கிறது.

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த யமஹா சென்னையை அடுத்திருக்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வல்லம் வடகல் எனுமிடத்தில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் ஒரு நிறுவனத்தை அமைத்திருக்கிறது. இந்நிறுவனம் ரூ. 1,500 கோடி முதலீட்டில் தொடங்கியிருக்கும் மூன்றவாது நிறுவனம் இதுவாகும்.

இந்தியாவில் ஏற்கெனவே உள்ள இரண்டு ஆலைகளை விட இது மிகவும் பெரியது. மற்ற இரண்டு ஆலைகளை விட பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டது. இந்த ஆலையின் செயல்பாடு சமீபத்தில் தொடங்கப்பட்டாது.

இந்த ஆலையின் செயல்பாடு, உற்பத்தி, எதிர்காலத் திட்டங்களை குறித்து யமஹா இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தகாஷி டெரபாயஷி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அதன்படி இந்த ஆலை 109 ஏக்கரில் அமைந்துள்ளது. இது ஒரு ஆண்டுக்கு 4.5 லட்சம் மோட்டார் சைக்கிளை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. தற்போது இங்கு 2 ஆயிரம் பேர் பணிபுரிகிறார்கள். இவர்களில் பாதி பேர் பெண்கள். இந்த நிறுவனம் மோட்டார் சைக்கிளையும் ஸ்கூட்டரையும் தயாரிக்கிறது.

இந்நிறுவனத்துக்கு உதிரி பாகங்கள் சப்ளை செய்யும் 9 நிறுவனங்கள் இந்நிறுவனத்தைச் சுற்றி அமைந்துள்ளன. இவை 68 ஏக்கரில் அமைந்திருக்கிறது. இந்நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக ரூ. 650 கோடியை முதலீடு செய்துள்ளன. இவற்றில் 1,300 பேர் பணிபுரிகின்றனர்.

தயாரிப்பு ஆலையும், உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் ஆலையும் ஒருங்கே அமைந்திருப்பது இங்கு மட்டும்தான். சூரிய மின்னாற்றல் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையிலான மேற்கூரை, ஒரு சொட்டு நீர் கூட விரயமாகாத பயன்பாடு ஆகியன இந்த ஆலையின் சிறப்பம்சங்களாகும்.

யமஹா ஆலையிலிருந்து ஒரு நிமிடத்துக்கு ஒரு ஸ்கூட்டர் வெளி வருகிறது. யமஹா நிறுவனத்தின் மற்ற இரு ஆலைகளின் உற்பத்தியோடு ஒப்பிடுகையில் 70 சதவீத உற்பத்தி பங்களிப்பை அளிக்கிறது சென்னை ஆலை. யமஹா ஆலையின் உற்பத்தித் திறன் அடுத்த மூன்று ஆண்டுகளில் இரட்டிப்பாக உயர்த்தப்படும். அப்போது மேலும் 2 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்கிறார் தகாஷி டெரபாயஷி. எனவே மேலும் ஆயிரம் பெண்களுக்கு வேலை நிச்சயம் யமஹா ஆலையில் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த ஆலையில் தற்போது பாசினோ ஸ்கூட்டர்களும், சல்யூடோ எனும் மோட்டார் சைக்கிள்களும் தயாரா கின்றன. உள்நாட்டில் மட்டுமின்றி வெளி நாடுகளுக்கும் இங்கிருந்து ஏற்றுமதி செய்யும் திட்டமுள்ளதாக அவர் கூறுகிறார். சீறிப்பாயும் வாகனங்களில் செல்லும் இளைஞர்கள் அதன் தயாரிப்புப் பின்னணியில் பலரது உழைப்பு குறிப்பாக பெண்களின் உழைப்பு உள்ளது என்பதையும் நினைத்துப் பார்க்கலாம்.

நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு என்பதை விட, காஞ்சிபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பள்ளிப் படிப்பை முடித்த பெண்களுக்கு வேலை வாய்ப்பை அளித்துள்ள பெண்களைக் கொண்டாடும் யமஹா நிறுவனத்தையும் பாராட்டாமல் இருக்க முடியாது.

பருவ மழை பாதிப்புக்கு நிவாரண உதவி அதிகரிப்பு: ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை:

பருவமழை பரவலாகப் பெய்து, பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான நிவாரண உதவி அதிகரிக்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. எதிர் வரும் டிசம்பர் மாதம் முடிய பருவமழை தொடர்ந்து நீடிக்கும்.

கனமழையை எதிர்கொள்ளும் வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க நான் அரசு உயர் அதிகாரிகளுக்கும், மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும், காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளேன்.

அரசு நிர்வாகம் மேற்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மீறி, பருவமழையின் போது உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் ஏற்படக்கூடும். அவ்வாறு பருவ மழையால் பாதிக்கப்படுவோருக்கு உரிய நிவாரண உதவிகளை விரைந்து வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.

பருவமழை காரணமாக ஏற்படும் உயிரிழப்பு, கால்நடை இழப்பு, சேதமடைந்த குடிசைகளுக்கான இழப்பீட்டுத் தொகை ஆகியவற்றை உயர்த்தி வழங்கிட ஆணையிட்டுள்ளேன்.

அதன்படி, மழை காரணமாக உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிவாரண உதவியாக 4 லட்சம் ரூபாய்; முழுவதும் சேதமடைந்த நிரந்தர வீடு ஒன்றுக்கு 95,100 ரூபாய்; முழுவதும் சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு 5,000 ரூபாய்; பகுதி சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு 4,100 ரூபாய்; மற்றும் 10 கிலோ அரிசி, உடை மற்றும் 1 லிட்டர் மண்ணெண்ணெய்; பசு மற்றும் எருமை மாடு உயிரிழப்புக்கு 30,000 ரூபாய், ஆடு, பன்றி உயிரிழப்புக்கு 3,000 ரூபாய்; கோழி உயிரிழப்புக்கு 100 ரூபாய்; என நிவாரண உதவித் தொகைகள் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

வெள்ளம் காரணமாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்படும் குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி, ஒரு புடவை, ஒரு வேட்டி, ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் ஆகியவற்றுடன் 1,000 ரூபாய் ரொக்கப்பணம் வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன். முகாம்களில் அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் ஆகியவையும் வழங்கப்படும்.

மழையால் பாதிக்கப்படும் நெல் மற்றும் நீர்ப்பாசனம் பெறும் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 13,500 ரூபாய்; மானாவாரி பயிருக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 7,410 ரூபாய்; நீண்டகால பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 18,000 ரூபாய் என்ற வீதத்தில் நிவாரணம் வழங்க நான் உத்தரவிட்டுளேன்.

முழுவதும் பாதிக்கப்படும் கட்டு மரம் ஒன்றுக்கு 32,000 ரூபாய் வழங்கவும், பகுதி பாதிக்கப்பட்டு பழுது பார்க்கப்பட வேண்டிய கட்டு மரங்களுக்கு 10,000 ரூபாய் வீதமும், முழுவதும் பாதிக்கப்படும் எப்.ஆர்.பி. வல்லம் ஆகியவற்றிற்கு 50 சதவீதம் மானியம் என்ற அடிப்படையில், அதிகபட்சம் 75,000 ரூபாய் வரையிலும்; பகுதி சேதமடையும் எப்.ஆர்.பி. வல்லம் ஆகியவற்றுக்கு 20,000 ரூபாய் என்ற வீதத்திலும்; முழுமையாக சேதமடைந்த இயந்திரப் படகுகளுக்கு 35 சதவீதம் மானியம் என்ற அடிப்படையில் அதிகபட்சம் 5 லட்சம் ரூபாய் என்ற வீதத்திலும்; பகுதி சேதமடையும் எந்திரப் படகுகளுக்கு பழுது பார்க்கும் செலவில் 60 சதவீதம் என்ற அடிப்படையில் அதிக பட்சமாக 3 லட்சம் ரூபாய், கட்டுமரங்களுக்கான வலை சேதமடைந்தால் 10,000 ரூபாய்; படகுகளின் வெளிப்புறம் பொருத்தப்படும் எந்திரங்களுக்கு 5,000 ரூபாய் என்ற வீதங்களில் நிவாரணம் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

பருவமழையினால் சாலைகள், பாலங்கள், இதர அரசு கட்டடங்கள் ஆகியவற்றிற்கு சேதம் ஏற்பட்டால் அவற்றை சீரமைக்க உரிய கருத்துருக்களை உடனுக்குடன் அனுப்ப அரசு அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.

முன்னாள் காங்கிரஸ் எம்.பியின் வீட்டில் மர்ம தீ: மருமகள், 3 பேரன்கள் கருகி பலி

வாரங்கல்:
தெலங்கானா மாநில காங்கிரஸ் எம்.பி.யின் வீட்டில் மர்மமான முறையில் தீ பிடித்து எரிந்து, வீடு கருகியது. இதில், அவரது மருமகள், மூன்று பேரன்கள் கருகி பலியாகினர்.

தெலங்கானா மாநில வாரங்கல் தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்.பி. சிர்சில்லா ராஜய்யாவின் மகன் அனில். கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர் தன்னுடன் பணி புரிந்த சாரிகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அபினவ் (8), அயேன், ஸ்ரீயேன் என 3 மகன்கள்.

இவர்கள் அனைவருமே ராஜய்யாவுடன் வாரங்கல்லில் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். கீழ்த் தளத்தில் ராஜய்யாவும், மாடியில் சாரிகா தன் குழந்தைகளுடனும் தங்கி இருந்தார். இந்நிலையில், அனிலுக்கும், சாரிகாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கணவர் மீது போலீசில் சாரிகா வரதட்சணை புகார் அளித்திருந்தார். மேலும் அவருக்கு பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும், தன்னைப் பிரிந்து தனியாக வேறொரு பெண்ணுடன் வசிப்பதாகவும் கூறியிருந்தார். இதே போல் மகனைக் கண்டிக்காமல் அவருக்கு ஆதரவாக இருப்பதாக மாமனார் ராஜய்யா மீதும் காங்கிரஸ் மேலிடத்துக்கு புகார் அனுப்பியிருந்தார்.

இந்நிலையில் இன்று அதிகாலையில் சாரிகாவும், அவரது 3 மகன்களும் தீயில் கருகி பிணமாகக் கிடந்தனர். அவர் தங்கி இருந்த வீடும் தீக்கிரையாகியிருந்தது.

இது குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். நள்ளிரவில் வீடு தீப்பிடித்து எரிந்ததாக ராஜய்யா போலீசில் தெரிவித்தார். ஆனால் உடனடியாக தீயை அணைக்க முயற்சி செய்யவோ, போலீசுக்கு தகவல் தெரிவிக்கவே இல்லை. இன்று காலைதான் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. எனவே சாரிகா தீ விபத்தில் பலியானாரா? அல்லது தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தீ வைத்து எரித்துக் கொல்லப் பட்டார்களா? என்பதில் மர்ம நிலவுகிறது.

தீப்பிடித்த போது கீழ்த் தளத்தில் ராஜய்யாவும், அனிலும் இருந்துள்ளனர். எனவே அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னாள் எம்.பி.யான ராஜய்யா வாரங்கல் சட்ட சபை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். நேற்று முன்தினம் அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். இன்று காலை அவர் தேர்தல் பிரசாரத்துக்குக் கிளம்புவதாக இருந்தார். இதற்காக ஏராளமான தொண்டர்கள் அவரது வீட்டில் குவிந்தனர். ஆனால் வீட்டில் மருமகள், பேரன்கள் கருகி பலியானதை அறிந்து தொண்டர்கள் கவலை அடைந்தனர்.

ராஜய்யா தேர்தலில் போட்டியிடவும், மருமகள் சாரிகா எதிர்ப்பு தெரிவித்து வந்தார். அவருக்கு தேர்தல் டிக்கெட் கொடுக்கக் கூடாது என்று காங்கிரஸ் மேலிடத்துக்கும் புகார் அனுப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வியப்பூட்டும் வித்தியாசமான தீம் ஹோட்டல்கள்

சுற்றுலாவில் மிக முக்கியமான ஒரு பங்கு ஹோட்டல்களுக்கு உண்டு. தங்குவதற்கு நல்ல இடமும், ருசியான உணவும் கிடைத்து விட்டாலே போதும் சுற்றுலாவில் பாதி நிறைவடைந்த திருப்தி ஏற்பட்டு விடும். அதிலும் நமக்கு பிடித்தமான சூழலில் ஹோட்டல் அறைகள் இருந்தால் கொண்டாட்டத்திற்கு அளவே இல்லாமல் போய் விடும். அப்படி தீம் ஹோட்டல்களை உலகம் முழுவதும் அமைத்திருக்கிறார்கள், அந்தந்த துறைகளில் விருப்பமானவர்கள். அந்த ஹோட்டல் பற்றி இங்கே…

 

1. வி 8 ஹோட்டல் – ஜெர்மனி

கார் பிரியர்களை மனதில் வைத்து வடிவமைக்கப்பட்ட 4 ஸ்டார் ஹோட்டல் இது. மொத்தம் 34 அறைகள் இருக்கின்றன. அதில் 10 அறைகள் வின்டேஜ் கார்கள், கிளாஸிக் கார்கள், ஸ்போர்ட்ஸ் கார்கள் வடிவமைப்பில் அமைக்கப்பட்டிருக்கின்றன. படுக்கைகள் ஒவ்வொன்றும் ஒரு வின்டேஜ் காரை நினைவுப்படுத்துகின்றன. வி8 என்பது கார்களில் பொருத்தப்படும் இன்ஜினின் பெயர். அதே பெயரை ஹோட்டலுக்கு வைத்து விட்டார்கள். ஹோட்டல்களுக்குள் நுழைந்தால் ஏதோ வின்டேஜ் கார் ஷோரூமுக்குள் புகுந்து விட்டது போல் கார்கள் வரிசை கட்டி நிற்கின்றன.

ஹோட்டல் அமைந்திருக்கும் இடமும் புகழ்பெற்ற கார் சந்தையான ஸ்டட் கார்டில் உள்ளது. ஜெர்மனியின் பழைய விமான நிலையம் இந்தப் பகுதியில் முன்பு இருந்ததால் பாரம்பரியமும் கொண்டதாக இருக்கிறது.

தீம் ரூம்களில் இருவர் ஓர் இரவு தங்குவதற்கு 175 யுரோ கட்டணமாக பெறப்படுகிறது. இந்திய மதிப்பில் ₹13,475. 

https%3A 3.bp.blogspot.com f fluVJgkRk VG9B6BN4tAI AAAAAAAACeM wv0sFGKenN4 s1600 V8 hotel Stuttgart 1 - 2026

 

https%3A 1.bp.blogspot.com pLHkq2SPK7g VG9B8Q5WhII AAAAAAAACeU VBebf pAbKk s1600 reception - 2026

 

 

 

2. ஜம்போ ஸ்டே- ஸ்வீடன்

கார் பிரியர்களுக்கு வி8 ஹோட்டல் என்றால் விமான பிரியர்களுக்கு ஜம்போ ஸ்டே. ஸ்வீடனில் உள்ள இந்த ஹோட்டல் 747 போயிங் ஜம்போ விமானத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. ஜம்போ நிறுவனத்தின் முதல் பிராபர்டி இது. 1972-ல் தயாரிக்கப்பட்ட இந்த விமானம் ஓய்வுக்குப் பின் ஹோட்டலாக மாற்றப்பட்டு விட்டது. மொத்தம் 29 அறைகள் இதில் உள்ளன. ஒவ்வொரு அறையும் 6 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டதாக உள்ளது. நவீன வசதிகள் கொண்டதாகவும் இருக்கின்றன.

இருவர் ஓர் இரவு தங்க கட்டணம் ₹8,505. 

 

https%3A 1.bp.blogspot.com - 2026

 

https%3A 2.bp.blogspot.com HaPaTEIymAU VG9Bwy3ltXI AAAAAAAACds Uz7j7tocjUI s1600 1162904161 - 2026

 

3. ட்ரீ ஹோட்டல் – ஸ்வீடன்

வனத்தின் நடுவே மரங்களின் மீது பறவைகள் கூடுகளில் வாழ்வது போல் ஓர் நாள் வாழ வேண்டுமா உங்களுக்காகவே இருக்கிறது ட்ரீ ஹோட்டல். பறவைகளின் கூடுகளைப் போலலே இதை அமைத்திருக்கிறார்கள். இரண்டு குழந்தைகளுடன் சேர்ந்து நான்கு பேர் கொண்ட குடும்பம் தங்கும் விதமாக இந்த ஹோட்டல் அறைகளை அமைத்திருக்கிறார்கள். 17 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட பெரிய அறைகள். ஜன்னல்கள் உண்டு. அதன்மூலம் வெளியில் இருக்கும் இயற்கையை ரசிக்கலாம். ஜன்னல்கள் இருப்பது வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்குத் தெரியாது.

ஒரு குடும்பம் ஓர் இரவு தங்குவதற்கு ₹.7,500. கட்டணம்.

 

 

https%3A 4.bp.blogspot.com nrY1ehjpUUw VG9BvtRi5iI AAAAAAAACdg i6U45SQ3p7g s1600 37 p3 - 2026

 

4. ஐஸ் ஹோட்டல் -வடக்கு ஸ்வீடன்

ஹோட்டல்கள் எல்லாமே நிரந்தரமாக இருப்பதைத்தான் பார்த்திருப்போம். ஆனால் ஒவ்வொரு வருடமும் புதிதாகக் கட்டப்படும் ஒரு ஹோட்டலைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? உலகின் முதல் ஐஸ் ஹோட்டல் இதுதான். ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதத்தில் இந்த ஹோட்டல் கட்டப்படுகிறது. இதன் கட்டுமானப் பொருள் ஐஸ் கட்டிகள்தான். அருகில் ஓடும் டோர்ன் நதி டிசம்பர் மாதத்தில் மைனஸ் 5 டிகிரிக்கு சென்று விடுவதால் ஆற்று நீர் முழுவதும் உறைந்து பனிக்கட்டியாக மாறி விடும். இப்படி மாறியவுடன் பனிச்சிற்ப கலைஞர்களுக்கு அழைப்பு விடுவார்கள். அவர்கள் வந்து விதவிதமாக அறைகளை உருவாக்குவார்கள். இந்த ஹோட்டல் ஏப்ரல் மாதம் வரை செயல்படும். அதன்பின் வெப்பம் அதிகமாவதால் பனிக்கட்டிகள் உருகி, மீண்டும் நதி ஓடத் தொடங்கும்.

பனிக்கட்டியிலேயே செய்யப்பட்ட கட்டில்கள், மேஜை, சேர்கள் இருக்கும். இதில் தங்குவது மிக வித்தியாசமான ஒரு அனுபவமாகும். ஹனிமூனைக் கொண்டாட இளம் ஜோடிகள் இங்கு வருகிறார்கள். இந்த இடம் நார்தன் லைட்ஸ் உருவாகும் இடம் என்பதால் இரவில் வானில் தெரியும் வர்ண ஜாலங்களை பார்த்து மகிழலாம்.

இருவர் ஓர் இரவு தங்குவதற்கு கட்டணம் ₹22,552-ல் இருந்து ஆரம்பமாகிறது.

 

 

 

https%3A 1.bp.blogspot.com L wUjdCXcAU VG9B4Y2LR8I AAAAAAAACeA 8QPgCX1poPs s1600 Hotel de Glace 3 yes - 2026

 

https%3A 3.bp.blogspot.com ToytN55ON7s VG9B22BIaiI AAAAAAAACd0 tPIKEKC uVo s1600 Hotel de Glace 2 - 2026

 

5. டாக் பார்க் இன் -அமெரிக்கா

அமெரிக்காவின் முக்கியமான லேண்ட் மார்க்காக டாக் பார்க் இன் ஹோட்டல் இருக்கிறது. ஒரு நாய் நிற்பது போல் கட்டப்பட்ட இந்த ஹோட்டலில் தங்குவது கொண்டாட்டத்தின் உச்சம் என்று சொல்கிறார்கள். ஹோட்டலின் வெளிப்பகுதியும் அறைகளின் உட்பகுதியும் நாய்களை நினைவுப்படுத்தும் விதமாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.

இருவர் ஓர் இரவு தங்க கட்டணம் ₹6025. 

 

 

https%3A 1.bp.blogspot.com bAI10eEaC3c VG9B4HusrbI AAAAAAAACd8 ZF1g3AMWF0c s1600 Dog Bark Park Cottonwood Idaho - 2026

 

 

ப.சிதம்பரம் குறித்து விமர்சனம்: குஷ்பு, ஹசீனா இடையே மோதல்

சென்னை:

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் குறித்த விமர்சனத்தால், அக்கட்சிக்குள் பூசல் வலுத்துள்ளது. குறிப்பாக, அக்கட்சியின் குஷ்புவுக்கும் ஹசீனாவுக்கும் இடையே வார்த்தப் போர் வலுத்து, தமிழக காங்கிரஸ் கட்சியின் வழக்கமான கோஷ்டிப் பூசலுக்கு வழி வகுத்துள்ளது.

அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை மாற்ற வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களான ப.சிதம்பரம், தங்கபாலு, குமரி அனந்தன் உள்ளிட்டோர் தில்லியில் ராகுல் காந்தியை சந்தித்து முறையிட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இளங்கோவன் தங்கபாலு மீது சரமாரியான குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு தில்லி சென்று, சோனியா மற்றும் ராகுலை சந்தித்து பேசினார். அப்போது இளங்கோவனுக்கு தனது ஆதரவை அவர் தெரிவித்தார். பின்னர் குஷ்பு கூறும் போது, ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் நடிகைகளை நம்பி காங்கிரஸ் இல்லை என்று தெரிவித்துள்ளார். ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், தங்கபாலு என தனி நபர்கள் யாரையும் நம்பி காங்கிரஸ் இல்லை. கோடிக்கணக்கான தொண்டர்களையும், நேரு, இந்திரா, ராஜீவ் போன்ற தலைவர்களின் தியாகத்தையும் நம்பியே காங்கிரஸ் கட்சி உள்ளது என்றார்.

இதற்கு காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளர் ஹசீனா சையத் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

காங்கிரஸ் கட்சிக்கு வந்து ஒரு வருடத்தை பூர்த்தி செய்கிற குஷ்பு முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தைப் பற்றி விமர்சிக்கத் தகுதியற்றவர். நீங்கள் யாரை நம்பி இருக்கிறீர்கள் யார், யாரை நம்பி இருக்கிறார்கள் என்பதை இந்த நாடறியும். நீங்கள் முன்பு இருந்த கட்சியில் இது போல் அக்கட்சியின் முக்கியத் தலைவர்களை விமர்சித்ததால் கட்சியை விட்டு வெளியே வந்த வரலாற்றை தமிழ்நாட்டு மக்கள் அறிந்தே உள்ளார்கள். கட்சிக்காக உழைத்து, உழைத்து தங்களை அர்பணித்துக் கொண்டவர்களைப் பற்றியும், தேசமே போற்றும் தேசியத் தலைவர்களைப் பற்றியும் சற்று நாவடக்கத்துடன் பேசினால் குஷ்புவுக்கு நல்லது.

யாரை நம்பியும் காங்கிரஸ் இல்லை என்று குஷ்பு குறிப்பிடுகிறார். காங்கிரஸ் கட்சி சோனியா காந்தியையும், ராகுல் காந்தியையும் இருவரின் போர்ப்படைத் தளபதிகளாம் அன்புத் தலைவர்களையும், அருமைத் தொண்டர்களையும், மக்களையும் நம்பி உள்ளது என்பதை ஆணித்தரமாக நான் பதிவு செய்ய விரும்புகிறேன்… – என்று தெரிவித்துள்ளார்.
இதனால் காங்கிரஸின் கோஷ்டிப் பூசல் தற்போது பெரிதாக வெடித்து வெளிக்கிளம்பியுள்ளது.

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பட்டாசு தீக்காய சிறப்பு வார்டு அமைப்பு

சென்னை:
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி, பட்டாசு தீக்காயத்துக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து டீன் டாக்டர் நாராயண பாபு கூறுகையில்,

தீபாவளி பண்டிகை காலங்களில் பட்டாசு வெடிக்கும் போது ஏற்படும் தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டு அமைக்கப்படும். அதேபோல், இந்த ஆண்டும் அமைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தீக்காயப்பிரிவில் 50 படுக்கை வசதிகள் கொண்ட வார்டு உள்ளது. தற்போது கூடுதலாக பெரியவர்களுக்கு 10 படுக்கை வசதிகளும், சிறியவர்களுக்கு 5 படுக்கை வசதிகளும் கொண்ட சிறப்பு வார்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் பட்டாசினால் ஏற்படும் தீக்காயங்களுக்கு தேவையான களிம்பு, ஊசிகள், மருந்துகள், கட்டுப்போடுவதற்கு பயன்படுத்தப்படும் துணிகள் அனைத்தும் வைக்கப்பட்டுள்ளன.

24 மணி நேரமும் இந்த சிறப்பு வார்டு செயல்படும். இந்த வார்டில் பொறுப்பு டாக்டர், முதுநிலை டாக்டர் மற்றும் 8 செவிலியர்கள் பணியில் இருப்பார்கள்.

அதுமட்டுமில்லாமல், தீக்காயம் ஏற்பட்டு வரும் நபருக்கு முதல் சிகிச்சை செய்வதற்காக அவசர சிகிச்சை பிரிவில் ஆண் மற்றும் பெண்களுக்கு என தலா 10 படுக்கை வசதிகள் உள்ளன.

இதில் பொறுப்பு டாக்டர்கள், முதுநிலை டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள் என 10 பேர் பணியில் இருப்பார்கள்.

பட்டாசினால் தீக்காயம் ஏற்பட்டதும், முதலில் அந்த காயத்தை வீட்டில் உள்ள குழாய் நீரில் கழுவ வேண்டும். பின்னர், துவைத்த துணியால் அந்த காயத்தை மூடி, அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.

மை, மஞ்சள், காபிதூள், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை உபயோகப்படுத்த வேண்டாம். அப்படி உபயோகப்படுத்தினால், காயத்தின் தன்மை தெரியாமல் போய்விடும்.

கடந்த ஆண்டு இதே போல் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு வார்டில் 10 பேர் சிகிச்சை பெற்று சென்றனர் – என்றார்.

தீபாவளி சிறப்பு பேருந்து நிலையங்கள் நாளை முதல் செயல்படும்

திருச்சி:
தீபாவளி பண்டிகையொட்டி அமைக்கப்பட்டுள்ள தாற்காலிக பேருந்து நிலையங்கள் வியாழக்கிழமை முதல் செயல்படும் என்று மாநகரக் காவல் ஆணையரகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மாநகரக் காவல் ஆணையர் சஞ்சய் மாத்தூர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தீபாவளி பண்டிகையொட்டி திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க காவல்துறை எடுக்கும் நடவடிக்கைகளுக்கு வியாபாரிகள், பொதுமக்கள் என அனைவரும் ஒத்துழைப்பை அளிக்க வேண்டும்.

தேசிய நெடுஞ்சாலையில் எவ்வித வாகனத்தையும் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தக் கூடாது. பேருந்துகள், வேன்கள், கார், ஆட்டோக்களை அதற்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் மட்டுமே நிறுத்தி பயணிகளை இறக்கி, ஏற்றிச் செல்ல வேண்டும்.

பொது மக்களுக்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்து கடைகளை அமைத்து வியாபாரிகள் விற்பனை கூடாது.

பட்டாசு வியாபாரம் செய்பவர்கள் அனுமதி பெற்ற இடத்தில் மட்டும் தான் விற்பனை செய்ய வேண்டும். தரைக்கடை மற்றும் தள்ளு வண்டியில் வைத்து பட்டாசுகளை விற்பனை செய்ய கூடாது. காவல்துறை அறிவித்துள்ள விதிகளை மீறுவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்

மேலும் இது பற்றிய தகவலை காவல் கட்டுப்பாட்டு அறை எண்ணான 100-லிலும், மாநகர காவல் ஆணையர் அலுவலக வாட்ஸ்அப் எண்ணான 96262 73399-க்கு தெரிவிக்க வேண்டும்.

நாளை முதல் தாற்காலிக பேருந்து நிலையங்கள்:போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டும், பயணிகளின் நலன் கருதியும் திருச்சி மாநகரில் வருகிற நவம்பர் 5-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் மதுரை மார்க்கமாக செல்லும் அனைத்து பேருந்துகளும் தாற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து இயக்கப்படவுள்ளது.

தஞ்சாவூர் மார்க்கத்தில் செல்லும் பேருந்துகள் சோனா, மீனா தியேட்டர் அருகில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகிலிருந்தும்,

புதுக்கோட்டை மார்க்கத்தில் செல்லும் பேருந்துகள் மன்னார்புரம் பழைய இலுப்பூர் சாலையிலிருந்தும், மதுரை மார்க்கம் செல்லும் பேருந்துகள் மன்னார்புரம் – மதுரை சர்வீஸ் சாலையிலிருந்து இயக்கப்படவுள்ளது.

மற்ற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகளின் வழித்தடங்களில் எந்தவித மாற்றமுமின்றி வழக்கம்போல மத்திய பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும். மத்திய பேருந்து நிலையத்திலிருந்து மன்னார்புரம் தற்காலிக பேருந்து நிலையத்திற்கு சுற்று பேருந்துகள் இயக்கவும் அரசு போக்குவரத்து கழகம் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேற்படி தற்காலிக பேருந்து நிலையங்களில் பொதுமக்களுக்கு இன்னல் ஏற்படா வண்ணம் தகுந்த காவல் துறையின் பாதுகாப்பும், மாநகராட்சி மூலம் நிழற்குடை, குடிநீர், பொதுக் கழிப்பிட வசதி, ஒலிபெருக்கி மூலம் தகவல்களை தெரிவித்தல் போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.