Home Blog Page 5975

முதலமைச்சர் ஜெயலலிதாவை பற்றி விஜயகாந்த் அவதூறு பேசியதாக வழக்கு

 
தர்மபுரி மாவட்டத்தில் நடந்த, நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில், முதலமைச்சர் ஜெயலலிதாவை அவதூராக பேசியதாக அரசு வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கில், தர்மபுரி மாவட்ட நீதிமன்றத்தில், வரும் 24ம் தேதி விஜயகாந்த் நேரில் ஆஜராக, நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கடந்த, அக்டோபர் 24ம் தேதி தர்மபுரியில் நடந்த, தே.மு.தி.க-வின், ‘மக்களுக்காகமக்கள் பணி’ என்ற நலத்திட்டம் வழங்கும் விழா நடந்தது.
 
விழாவில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், முதலமைச்சர் ஜெயலலிதாவை அவதூராக பேசியதாக, மாவட்ட குற்றவியல் அரசு வழக்கறிஞர் அசோகன், தர்மபுரி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த, 30ம் தேதி வழக்கு தொடர்ந்தார். நேற்று நடந்த வழக்கு விசாரணையில் இவ்வழக்கு தொடர்பாக, விஜயகாந்த், வரும், 24ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதி சுபாதேவி நேற்று உத்தரவிட்டுள்ளார்.

 

காங்கிரஸ் கட்சியை நம்பியுள்ள கார்த்தி சிதம்பரம் : குஷ்பு கொடுத்த பதிலடி

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் அண்மையில் நடிகைகளை நம்பி காங்கிரஸ் கட்சி இருப்பதாக வெளியிட்ட கருத்துக்கு அக்கட்சியின் செய்தித் தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்
 
புது தில்லியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை நேற்று சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் குஷ்பு கூறுகையில் காங்கிரஸ் கட்சி யாரை நம்பியும் இல்லை. கார்த்தி சிதம்பரம்தான் காங்கிரஸ் தயவை நம்பி இருக்கிறார். யாருடைய துணையுமின்றி காங்கிரஸ் கட்சி வலுவுடன் விளங்கும்’ என்றார்.
 
இதே பிரச்சனை தொடர்பாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறுகையில்அரசியல் வரலாறு தெரியாமல் சிறுபிள்ளைத்தனமாக கார்த்தி பேசுவதை நான் பொருள்படுத்துவதில்லை” என்றும் இளங்கோவன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

பூரண மது விலக்கு வேண்டி உண்ணாவிரதம் இருந்த முன்னாள் எம்.எல்.ஏ மரணம்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் குர்சரண் சாப்ரா (வயது 65). ஜனதா தள கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான அவர் ராஜஸ்தான் மாநிலத்தில் பூரண மது விலக்கு வேண்டியும், லோக் ஆயுக்தா சட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.
 
உடல்நலக்குறைவால் கடந்த சில தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர் கோமா நிலைக்கு சென்றார். நேற்று அதிகாலையில் மருத்துவமனையில் அவர் மரணம் அடைந்தார்
 
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான குர்சரண் சாப்ரா மரணம் குறித்து ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் அசோக் கெலாட் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில், மதுவுக்கு எதிரான அறப்போராளி உயிரிழந்து விட்டார், இதற்கு உணர்வற்ற ராஜஸ்தான் அரசே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

காதல் கிசுகிசுவில் சிக்கிய தமிழ் சினிமா நட்சத்திர ஜோடிக்கு திருமணம் ?

தமிழ் திரை உலகில் எந்த ஒரு ஜோடி காதல் கிசுகிசுவால் பேசப்படுகிறார்களோ அவர்கள் நிஜ வாழ்க்கையிலும் கணவன் – மனைவியாக மாறுவது ஒன்றும் ஆச்சிரியம் அல்ல .
 
ஏற்கனவே சூர்யா – ஜோதிகா, அஜித் – ஷாலினி போன்ற பலர் காதல் கிசுகிசுவால் பேசப்பட்டு பின் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.காதல் கிசுகிசுவால் சமீபத்தில் பேசப்பட்டவர்கள்தான் திரை உலகை சேர்ந்த ஜிகர்தண்டா பாபி சிம்ஹாவும், கிருமி ரேஷ்மி மேனனும்தான்.
 
இருவரும் உறுமீன் படத்தில் இணைந்து நடிக்கும்போது இவர்களுக்குள் காதல் வளர்ந்ததாக கூறப்படுகிறது.காதலர்களாகிய பாபி – ரேஷ்மிக்கும் வருகிற நவம்பர் 8 ஆம் தேதி சென்னையில் நிச்சயதார்த்தம் நடக்க உள்ளதாம்.நிச்சயதார்த்த வேலைகளை இருவரின் பெற்றோர்கள் மிக கமுகக்மாக செய்து கொண்டுள்ளனரா ம்.
 
நடைபெற உள்ள நிச்சயதார்த்தத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சிலர் மட்டுமே கலந்து கொள்கிறார்களாம்.இந்த நிலையில் பாபி சிம்ஹாவும், ரேஷ்மி மேனனும் இணைந்து நடித்துள்ள உறுமீன் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருப்பது குறிப்பிடதக்கது.

பெற்றோரின் அலட்சியத்தால் குடிநீர் அண்டாவில் விழுந்த குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு

பெற்றோரில் அலட்சியத்தால், குடிநீர் அண்டாவில் தவறி விழுந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
 
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள பூந்தோட்டம் பகுதியில் வசித்து வருபவர் ஜானகிராமன் மற்றும் கஸ்தூரி தம்பதியினர். அவர்களது மகன் பாலசுப்பிரமணியன் வயது (1). அவனது பெற்றோர்கள் அந்தக் குழந்தையை கவனக்குறைவாக வீ ட்டில் தனியாக விட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.
 
நேற்று மாலை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனைக் காணவில்லை என்று குழந்தையின் பெற்றோர் அக்கம்பக்கத்திலும், உறவினர் வீடுகளிலும் தேடியுள்ளனர். ஆனால், குழந்தை எங்கும் கிடைக்கவில்லை. இதை அடுத்து, தங்கள் வீட்டுக்குத் திரும்பி வந்து, தேடிப் பார்த்தனர். அப்போது குழந்தை குடிநீர் வைத்திருந்த அண்டாவில் விழுந்து இறந்து கிடந்தது தெரிய வந்துள்ளது.
 
எதிர்பாராத விதமாக குடிநீர் நிரப்பி வைத்திருந்த அண்டாவில் அந்தக் குழந்தை தவறி விழுந்து இறந்ததாக அப்பகுதியினர் கூறினர். சிறுவன் குடிநீர் அண்டாவில் விழுந்து பலியானதற்கு முக்கியக் காரணம் அந்தப் பெற்றோரின் அலட்சியமே என்று கூறப்படுகிறது. இதை அடுத்து, இந்தச் சம்பவம் குறித்து விருத்தாசலம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பாடகர் கோவன் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மீது தமிழக காவல்துறையினர் கொலை வெறி தாக்குதல்

 
 
திருச்சி மாவட்டத்தில் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் பாடகர் கோவன் கடந்த சில நாட்களுக்கு முன்புஅவரது வீட்டில் அதிரடியாக நள்ளிரவில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
 
மக்களுக்கான விழிப்புணர்வு பாடல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தி மக்களை தூண்டி விடுவதாக கூறி அவர் மீது தேச பாதுகாப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
மேலும் அவர் கொடைக்கானலில் உள்ள வன விலங்கு சரணாலயத்தை அழிக்க வேண்டும் என்ற நோக்கில் அங்குள்ள பழங்குடியினரை இடத்தை காலி செய்ய வேண்டும் என்று அரசு கூறியதால் அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து கோவன் பாடிய பாடல்கள் மக்களை போராடுவதற்க்கு தூண்டிவிடுவதாக கூறி அவர் மீது நேற்று இரண்டு வழக்குகள் காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
காவல்துறையினரால் கோவன் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் மக்கள் கலை இலக்கிய கழகத்தினர் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
பல்வேறு அரசியல் கட்சி மற்றும் அமைப்பினர் மதுகடைகளை இழுத்து மூட வலியுறுத்துவது குற்றமா? என்று தமிழக அரசிற்க்கு கேள்வி எழுப்பியுள்ளனர்
 
 
இந்த நிலையில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அண்ணாசிலை அருகில் மக்கள் கலை இலக்கிய கழகம் சார்பில் ஆர்பாட்டம் நடத்துவதற்கு முறைப்படி கோட்டை காவல்நிலையத்தில் அனுமதி பெற்று இருந்தனர்.
ஆனால் இன்று காலை காவல்துறையினர் தீடீர் என ஆர்பாட்டம் நடத்த கொடுத்த அனுமதியை ரத்து செய்தனர்.ஆர்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதால் காவல்துறையினருக்கும் மக்கள் கலை இலக்கிய கழகத்தினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
 
மேலும் காவல்துறையினர் அவர்களுக்கு ஒலி பெருக்கிகளை வைக்க அனுமதி அளிக்காததால் தங்களுடைய போராட்டத்தை தீவிர படுத்திய போராட்டகாரர்கள் போராட்டம் தொடர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
இதனால் ஆத்திரம் அடைந்த காவல்துறையினர்
ஆர்பாட்டகாரர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 92 பேரை குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர்.
காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் இரண்டு பேருக்கு மண்டை உடைந்தது.
 
 
 
கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் ஏன் ஆர்பாட்டத்திற்கு அனுமதி மறுத்தீர்கள் என்று காவல்துறையினரிடம் கேள்வி எழுப்பி அனுமதி மறுப்பு
மற்றும் தாக்குதலை கண்டித்து திருமண மண்டபத்தில்உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
 
 
இதனால் கோட்டை காவல்நிலைய அதிகாரிகள் போராட்டம் நடத்தி வருபவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு உள்ளனர்.
 
பாடகர் கோவன் கைது செய்ததை கண்டித்து மீண்டும் போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் எனும் கோரிக்கையை காவல்துறையினரிடம் வைத்து கைது செய்யப்பட்ட திருமண மண்டபத்திலே உண்ணாநிலையில் போராட்டகாரர்கள் இருந்து வருவதால் அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

சாவுக்கு ஜனாதிபதியே முழுப் பொறுப்பு : தமிழ் அரசியல் கைதிகள்

 
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு மரணத்தை தழுவுவோம் என்று இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர்
 
நாடு முழுவதிலும் உள்ள 14 சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 217 தமிழ் அரசியல் கைதிகள் கடந்த மாதம், சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தனர். கடந்த 12ஆம் தேதி ஆரம்பித்த தமிழ் அரசியல் கைதிகள்போராட்டம் 17ஆம் தேதி வரையில் நீடித்திருந்தது.
 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நவம்பர் 7ஆம் தேதிக்கு முன்னர் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக எழுத்துமூலமாக உறுதிப்பாட்டை அளித்ததைத் தொடர்ந்து அவர்கள் தமது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டனர்.
 
இந்நிலையில், நவம்பர் 7ஆம் நெருங்கும் நிலையில், சிறையில் உள்ள தமிழ் கைதிகள் விடுதலை தொடர்பாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் வாக்குறுதி வழங்கிய ஜனாதிபதி மௌனமாக தமிழ் அரசியல் கைதிகள் குற்றச்சாட்டியுள்ளனர்.
 
மேலும் பிணையில் விடுவது சம்பந்தமான பேச்சுகள் மட்டுமே நடைபெறுவதாகவும் அவர்களுக்கு பொதுமன்னிப்பு அளிக்க வேண்டும் என தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
 
வருகின்ற 7ஆம் தேதிக்குள் அவர்களுக்கு சாதகமான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கவிட்டால்
மீண்டும் நாம் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு சாவைத் தழுவுவோம் என தெரிவித்துள்ளனர்
 
 
மேலும் அவர்கள் சாவுக்கு ஜனாதிபதியே முழுப் பொறுப்பு என்றும் இறந்த பின்னர் அவர்கள் உடல் உறுப்புகளைத் தானம் செய்யும் பொறுப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கின்றோம் என்றும் அறிவித்துள்ளனர்.

 

2ஜி முறைகேடு வழக்கில் கனிமொழி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

 
 
2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் சாட்சிகள் விசாரணை ஏறக்குறைய முடிந்துவிட்டது. கனிமொழி குற்றவாளியா இல்லையா என்பதை விசாரணை நீதிமன்றம் இனி முடிவு செய்யும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 
இந்த நிலையில் 2ஜி முறைகேடு விவகாரத்தில் தனக்கு குற்றச்சாட்டுகளிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று இரண்டரை ஆண்டுகாலத்துக்கு முன் கனிமொழி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருந்தார்.
சுமார் இரண்டரை ஆண்டுகாலத்துக்குப் பிறகு இந்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.
 
கனிமொழி தாக்கல் செய்த மனு குறித்த விசாரணை தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, ஏ.கே.சிக்ரி, மற்றும் ரோஹிண்டன் நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு இன்று வந்தது.
 
அப்போது சாட்சி விசாரணைகள் ஏறக்குறைய முடிவுக்கு வந்தது, கனிமொழி குற்றவாளியா இல்லையா என்பதை இனி விசாரணை நீதிமன்றம் முடிவு செய்யும் என்றனர் நீதிபதிகள், .
 
“விசாரணை ஏறக்குறைய முடிந்து விட்டது. 2ஜி சிறப்பு அரசு வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் சாட்சிகள் விசாரணை நிறைவடைந்தது என்று சமர்ப்பித்துள்ளார். இறுதி வாதங்களும் முடிவுக்கு வந்தன. இந்த நிலையில் இம்மனுவை கனிமொழியின் நாங்கள் ஊக்குவிக்க விரும்பவில்லை” என்று தலைமை நீதிபதி தத்து கூறினார்.
 
ஆனால், மூத்த வழக்கறிஞர் அமரேந்திர சரண், கனிமொழியின் மனு இரண்டரை ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தினால் நிலுவையில் வைக்கப்பட்டது என்று வருத்தம் தெரிவித்தார்.
 
தனது கட்சிக்காரர் கனிமொழிமீதான சந்தேகம் ஊர்ஜிதமாகாமல் கிரிமினல் குற்றம் சுமத்தப்பட முடியாது. இந்த விவகாரத்தில் கனிமொழிக்கு எதிராக இம்மியளவுக்குக் கூட சந்தேகம் இல்லை என்று கூறினார்.
 
2ஜி முறைகேட்டில் தன் மீதான குற்றச்சாட்டுகளை எதிர்த்து கனிமொழி ஜூலை 2013-ல் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தார். கலைஞர் தொலைக்காட்சியின் இயக்குநர்கள் குழுவில் 2007 ஜூன் 6 முதல் ஜூன் 20ம் தேதி வரை இரண்டு வார காலங்களுக்கு மட்டுமே தான் இருந்ததாக மனுவில் கனிமொழி கூறியிருந்தார்.
 
மேலும் தான் எந்தக் காசோலையிலும் கையெழுத்திடவில்லை என்றும், தான் எந்தவித பண ஆதாயத்தையும் பெறவில்லை என்றும் தன் மனுவில் கூறியிருந்தார்.
 
அத்துடன், தான் 20% பங்குகளை மட்டுமே வைத்திருந்ததாகவும், எனவே நிறுவனத்தின் மீது எழும் நிதிமுறைகேடு குற்றச்சாட்டுகளுக்கு பங்குதாரரை தொடர்புபடுத்த முடியாது என்றும் கூறியிருந்தார்.
 
டிசம்பர் 2008 முதல் ஆகஸ்ட் 2009 வரை நடைபெற்றுள்ள நிதிநடவடிக்கைகள் குறித்தே தற்போது விவகாரம் எழுந்துள்ளது. ஆனால் இந்தக் காலக்கட்டத்தில் தான் ராஜினாமா செய்து 18 மாதங்களுக்கு மேல் ஆகியிருந்தது என்றும் கனிமொழி தாக்கல் மனுவில் மனுவில் கூறியிருந்தார்.

வெற்றி பெறப்போவது யார்.?

 
 
தமிழர்கள் அதிகம் வசிக்கும் லண்டன் மாநகரில் விஜய் நடித்த புலி திரைப்படம் மட்டுமே அதிக அளவிலான திரையரங்குகளில் வெளியான தமிழ் திரைப்படம்.
அந்தப்படம் லண்டனில் 58 திரையரங்குகளில் மட்டுமே வெளியாகும் என முன்னர்
கூறப்பட்டாலும் 62 திரையரங்குகளில் வெளியானது.
 
இந்த நிலையில் அஜித் நடித்துள்ள வேதாளம் திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் 10-ம் தேதி லண்டனில் 58 திரையரங்குகளில் வெளியாகும் என கூறப்படுகிறது.
 
புலி திரைப்படம் வெளியானது போல் 62 திரையரங்குகளில் வெளியாகுமா என்ற கேள்வி திரைப்படரசிகர்கள் மத்தியில்
எழுந்துள்ளது.
 
விஜய் நடித்த புலி திரைப்படம் தனியாக ஏற்கனவே வெளியான நிலையில் அஜித்தின் வேதாளம் திரைப்படமும் கமலின் தூங்காவனம் திரைப்படமும் ஒரே சமயத்தில் வெளியாவதால் எந்த திரைப்படம் அதிக நாட்களாக ஓடி வசூல் வேட்டை நடத்தி வெற்றி பெறப்போவது போகிறது? எனும் கேள்வியும் எழுந்துள்ளது.

தீபாவளி திருநாளை ஒட்டி 11,959 தமிழக அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

 
 
 
தீபாவளித் திருநாளை தங்கள் சொந்த மண்ணில் கொண்டாடுவதற்கு ஏதுவாக கடந்த நான்கு வருடங்களாக தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக்கத்தினர் சிறப்புபேருந்துகளை இயக்கி வருகின்றனர்.
 
அதேபோன்று இந்த வருடமும் தீபாவளித் திருநாளை ஒட்டி சிறப்பு பேருந்துகளை இயக்குவதற்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
 
சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் முக்கிய ஊர்களுக்கு நவம்பர் 6 ஆம் தேதி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
 
நவம்பர் 7 ஆம் தேதி 1,146 சிறப்புப் பேருந்துகளும், 8 ஆம் தேதி 825 சிறப்புப் பேருந்துகளும், 9 ஆம் தேதி 1,194 சிறப்புப் பேருந்துகளும் என மொத்தம் 4,271 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
 
இது தவிர, மாநிலத்தின் முக்கிய ஊர்களிலிருந்து பிற இடங்களுக்கு 7,688 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளதாக அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது
 
இதேபோன்று, தீபாவளிப் பண்டிகை முடிந்த பின்பு, பொதுமக்கள் மீண்டும் ஊர் திரும்பும் வண்ணம் இதே அளவிலான பேருந்துகள் நவம்பர் 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை இயக்கப்படும்.
 
மேலும், மேற்காணும் நாட்களில் சென்னை மாநகரில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் கணிசமான அளவில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
 
கடந்த வருடங்களில் மேற்கொள்ளப்பட்டது போல், 300 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் செல்லும் சிறப்புப் பேருந்துகளில் பயணிக்க விரும்புவோர் www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன் பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் கணினி மூலம் உடனடி தள முன் பதிவு செய்யும் வகையில், பொது மக்களின் வசதிக்காக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 25 சிறப்பு முன் பதிவு மையங்கள் ஏற்படுத்தப்படும் என அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது
 
ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால், அது குறித்து சென்னை, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் உள்ள அரசு விரைவு போக்குவரத்துக் கழக அலுவலக தொலைபேசி எண் 044-24794709-க்கு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். புகார்களின் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்