Home Blog Page 6016

மாவோயிஸ்டுகள் குண்டுவெடிப்பு தாக்குதல்: ஒருவர் காயம்

சத்தீஸ்கரின் டோர்னபால் பகுதியில் மாவோயிஸ்டுகள் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தி உள்ளனர். குறைந்த சக்தி கொண்ட குண்டுவெடித்ததில் மத்திய பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

ஏ. டி.எஸ்.பி. வெள்ளதுரை மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் : ஜி.ராமகிருஷ்ணன்

ராமநாதபுரம் மாவட்ட ஏ. டி.எஸ்.பி. வெள்ளதுரை அவரது கீழ் நிலையில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு
வெளிப்படையாக வயர்லெஸ் மூலம் சில நாட்களுக்கு ஒரு ஆணையிட்டார். அந்த ஆணையில் அவர் தெரிவித்தாவது..

போலீஸை பற்றி அநாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்தி எவரும் பேச கூடாது. முக்கியமாக அரசியல் வாதிகள்
எவரேனும் அநாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்தி பேசினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து உடனடியாக சிறையில் அடைக்க வேண்டும்.

போலீஸை கண்டாலே அரசியல் வாதிகளுக்கு பயம் வரும் அளவிற்க்கு நெத்தியடியாக நடவடிக்கை இருக்க வேண்டும் என வெள்ளதுரை தெரிவித்து இருந்தார். அவர் வயர்லெஸ் மூலம் பேசிய பேச்சு பதிவு செய்யப்பட்டு சமூக ஊடகங்கள் மூலம் வெளியாகி தற்போது பெரும் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இன்று 24ம் தேதி விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அரசியல் வாதிகளை பற்றி அவதுறாக பேசிய ஏ. டி.எஸ்.பி. வெள்ளதுரை மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் அவர் திருச்செங்கோடு டி.எஸ்.பி.,விஷ்ணுபிரியாவின் தற்கொலை வழக்கில் சிபிசிஐடியின் விசாரணை போதாது. சிபிஐ விசாரணை நடத்தினால் தான் சரியாக இருக்கும். கோகுல்ராஜ் கொலை வழக்கிலேயே பல சந்தேகங்கள் உள்ளன. அந்த வழக்கை விசாரித்த டிஎஸ்பி.,யும் தற்கொலை செய்து கொண்டுள்ளது சந்தேகத்தை அதிகப்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் தமிழகத்தில் 72 ஜாதி ஆவண கொலைகள் நடைபெற்றுள்ளன. இதனை தடுக்க தனி சட்டம் அமைக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

டெங்குவை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன.? : டில்லி அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

டெங்குவை தடுக்க டில்லி அரசு எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக டில்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், டில்லி அரசு உடனடியாக பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

மீண்டும் முதல்– அமைச்சராவார் ஜெயலலிதா: தமிழருவி மணியன்

வரும் சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஜெயலலிதான் மீண்டும் முதல்வராவார் என காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்தார்.பொள்ளாச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமிழருவி மணியன் நிருபர்களிடம் கூறியதாவது:–

ராகுல் காந்தியை போலவே, ஸ்டாலினும் மக்களை சந்திப்பதை போல் நாடகமாடி வருகிறார். 5 முறை ஆட்சிப்பொறுப்பில் இருந்த தி.மு.க.வுக்கு மக்கள் பிரச்சினை என்ன என்பது பற்றி தெரியும். இருந்தபோதும், மக்களை சந்திப்பதுபோல் அவர்களை ஏமாற்றும் வேலையில் ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார்.வரும் சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க. ஆட்சியை பிடிக்கவேண்டும் என்றகனவோடு இருக்கின்றனர். ஆனால், தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியாது. ஏனென்றால், ஊழலின் பிறப்பிடமே தி.மு.க. ஆட்சியில் தோன்றியதுதான். அதைத்தான் பலரும் பின்பற்றி வருகின்றனர்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்த நினைத்தால் தி.மு.க.வுடன் மற்ற அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்து செயல்பட வேண்டும். ஆனால், அது நடக்காது. காரணம், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சித்தலைவர்கள் அனைவருமே முதல்வர் கனவில் உள்ளனர். ஆகவே அவர்கள் தி.மு.க.வுடன் ஒன்றிணைந்து கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை.

ஆகவே விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் வரும் தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சியை பிடித்து மீண்டும் முதல்வராக ஜெயலலிதாவே வருவார்.தமிழகத்தில் பூரண மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த வேண்டும். பூரண மதுவிலக்கை அமல்படுத்துவது அவசியமான ஒன்றாகும் என அவர் கூறினார்.

சீர்திருத்த பள்ளியில் இருந்து 5 சிறுவர்கள் தப்பி ஓட்டம்

செங்கல்பட்டு தாலுக்கா அலுவலகம் சாலையில் சிறுவர் சீர்திருத்த பள்ளி உள்ளது. இங்கு குற்றச்செயல்களில் ஈடுபட்ட தேனி, திருச்சி, சென்னை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 14 சிறுவர்கள் அடைக்கப்பட்டு இருந்தனர்.

நேற்று இரவு சாப்பாடு முடிந்ததும் சிறுவர்கள் அனைவரும் அறையில் தூங்கினர். இரவு 10 மணி அளவில் சீர்திருத்த பள்ளி நிர்வாகிகள் கண்காணிப்பில் ஈடுபட்ட போது 5 சிறுவர்கள் மாயமாகி இருந்தனர்.

அறையில் உள்ள 2 ஜன்னல் கம்பிகள் ஆக்ஷா பிளேடால் அறுக்கப்பட்டு இருந்தது. அதன் வழியாக 5 சிறுவர்களும் குதித்து தப்பி இருப்பது தெரிந்தது.

இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சீர்திருத்த பள்ளியில் இருந்து சிறிது தூரத்தில் ரெயில் நிலையம் இருப்பதால் ரெயிலில் அவர்கள் தப்பி இருக்கலாம் என்று அவர்கள் சந்தேகிக்கின்றனர்.

இதையடுத்து அனைத்து ரெயில் நிலையங்களில் உள்ள ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் விழுப்புரம், விருத்தாசலம், ரெயில் நிலையத்தில் நின்ற ரெயிலில் போலீசார் சோதனை செய்த போது சீர்திருத்த பள்ளியில் இருந்து தப்பிய 3 சிறுவர்கள் சிக்கினர்.

தப்பி ஓடிய மற்ற 2 சிறுவர்களையும் தேடி வருகிறார்கள். அவர் தேனியை சேர்ந்தவர்கள் ஆவார். அவர்கள் சொந்த ஊருக்கு சென்று இருக்கலாம் என்று தெரிகிறது. அவர்களை பிடிக்க போலீசார் விரைந்து உள்ளனர்.

இதே சீர்திருத்த பள்ளியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பும் காவலாளியை தாக்கியும், ஜன்னல் கம்பியை உடைத்தும் சிறுவர்கள் தப்பி சென்று இருக்கிறார்கள். தொடர்ந்து நடைபெறும் இச்சம்பவத்தால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா பெற்றோரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டாக இருந்தவர் விஷ்ணுபிரியா. இவர் கடந்த 18–ந்தேதி தான் தங்கி இருந்த வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணையில் உயர் அதிகாரிகள் நெருக்கடி கொடுத்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதையொட்டி அவரது மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 5 நாட்களாக நாமக்கல் மற்றும் திருச்செங்கோட்டில் முகாமிட்டு விசாரணை நடத்தினார்கள்.

இன்று காலை 9.30 மணிக்கு சி.பி.சி.ஐ.டி போலீஸ் சூப்பிரண்டு நாகஜோதி தலைமையில் டி.எஸ்.பி. ராஜன், இன்ஸ்பெக்டர் தீபா மற்றும் 2 போலீசார் கடலூர் வந்தனர். கோண்டூரில் உள்ள விஷ்ணுபிரியா வீட்டுக்கு சென்றார்கள். அவரது தந்தை ரவியிடம் விசாரணை நடத்தினார்கள். விஷ்ணுபிரியா கடந்த 17–ந்தேதி வீட்டுக்கு வந்த போது கோகுல்ராஜ் வழக்கு தொடர்பாக எதுவும் கூறினாரா? என்று கேட்டார்கள். மேலும் ஏதாவது தகவல்களை உங்களிடம் பகிர்ந்து கொண்டாரா? என்றும் கேட்டனர். பின்னர் விஷ்ணுபிரியா குறித்து அவரது தாயிடம் விசாரித்தார்கள்.

இதையடுத்து விஷ்ணுபிரியாவின் உறவினர்களிடமும் விசாரணை நடைபெற்றது.

பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து 9வது ஆண்டாக அம்பானி

இந்தியாவின் டாப் 100 பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து 9வது ஆண்டாக தொழிலதிபர் முகேஷ் அம்பானி இடம்பெற்றுள்ளார். அவரது சொத்து மதிப்பு 18.9 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். போபர்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இந்த ஆண்டும் அம்பானி இடம்பெற்றுள்ளார். 

தங்கம் இன்று(செப்.24) சவரனுக்கு ரூ.144 உயர்வு

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று(செப்., 24ம் தேதி) உயர்வுடன் காணப்படுகிறது. சென்னை – தங்கம் வெள்ளி சந்தையில், காலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,498-க்கும், சவரனுக்கு ரூ.144 உயர்ந்து ரூ.19,984-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.200 உயர்ந்து ரூ.26,720-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 30 காசுகள் உயர்ந்து ரூ.38.10-க்கும், பார்வெள்ளி கிலோவுக்கு ரூ.290 உயர்ந்து ரூ.35,630-க்கும் விற்பனையாகிறது.

மசூதியில் குண்டுவெடிப்பு ; 15 பேர் பலி

ஏமன் தலைநகர் சானாவில் மசூதி ஒன்றில் குண்டுவெடிப்பு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. பக்ரீத் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு தொழுகையின் போது இந்த குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 15 பேர் பலியானதாக தெரிகிறது. 

தங்க நகை அடகு கடையில் கொள்ளை

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பகுதி மெயின் ரோட்டில் உள்ள நகை அடகு கடையில் இன்று 29-09-2015காலை 9:30 மணியளவில் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் கடையில் புகுந்து, அங்கு பணியில் இருந்த 6 ஊழியர்களை கட்டிப்போட்டு விட்டு, கடையில் இருந்த 5 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்றது. மக்கள் நடமாட்டம் அதிக உள்ள பகுதியில் நடந்த இந்த கொள்ளைச் சம்பவம் வத்தலகுண்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்த திண்டுக்கல் எஸ்.பி.,சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு, ஊழியர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்.