Home Blog Page 6019

சுவாமி தயானந்த சரஸ்வதி மஹாசமாதி அடைந்தார்

தயானந்த சரஸ்வதி சுவாமிகள் மகா சமாதி. கோவை ஆர்ஷ வித்யா குருகுல தயானந்த சரஸ்வதி சுவாமிகள் புதன்கிழமை இரவு மகா சமாதி அடைந்தார். கோவை, ஆனைகட்டியில் உள்ள ஆர்ஷ வித்யா குருகுல நிறுவனரும் புகழ் பெற்ற வேதாந்த ஞானியுமான சுவாமி தாயனந்த சரஸ்வதி புதன்கிழமை இரவு 10.20 மணியளவில் ரிஷிகேஷில் உள்ள அவரது ஆஸ்ரமத்தில் மகா சமாதி அடைந்தார். அவருக்கு வயது 85

வைகோ பக்ரீத் வாழ்த்து

 

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.,
உலகமெங்கும் வாழ்கின்ற கோடிக்கணக்கான மக்கள் தங்களின் நாடு நகரங்களாலும், மொழிகளாலும், நிறங்களாலும் வேறுபாடுகள் கொண்டிருந்தாலும் அனைவரும் அரபி மாதங்களில் கடைசி மாதமான துல்ஹஜ் பத்தாம் நாளில் தங்களின் புனிதக் கடமையை (ஹஜ்) நிறைவேற்றிவிட்டு இறைத்தூதர் இப்ராஹிம் (அலை) அவர்கள் தனது மகனையும் இறைவனுக்காக அறுத்துப் பலியிட முன்வந்த தியாகத்தைப் போற்றுகின்ற வகையில் உலக முÞலிம்கள் தங்களது குர்பானியை நிறைவேற்றிவிட்டு, தியாகத்தைப் போற்றிடும் தியாகப் பெருநாள்.
‘குர்பான்’ என்றால் அரபியில் ‘நெருக்கத்தை ஏற்படுத்துதல்’ ஆகும். ‘குர்பானி’ என்ற உருது சொல் ‘தியாகப் பிராணி’ என்று பொருள் தரும்.
ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக, இறைவனுக்காக தியாகத்தைச் செய்வதன் மூலம் அவனது நெருக்கத்தைப் பெற்றிட முடியும் என்று வலியுறுத்தும் இத்தியாகத் திருநாளில் தியாகத்தால் பிறந்து, தியாகத்தால் வளர்ந்து, தியாகத்தால் இயங்கி வரும் மறுமலர்ச்சி தி.மு.கழகம் சார்பில் எனது நெஞ்சார்ந்த தியாகப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்

அவையில் என் புடவையைப் பிடித்திழுத்தார்கள்: விஜயதரணி குற்றச்சாட்டு

சென்னை:

அதிமுக எம்.எல்.ஏ க்கள் சட்டசபையில் என் புடவையைப்  பிடித்திழுத்தார்கள் என விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

அதிமுக எம்.எல்.ஏ க்கள் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி இடையே நேற்று சட்டப் பேரவையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து வெளியே வந்த விஜயதரணி., அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீது பகீர் குற்றச்சாட்டைத் தெரிவித்தார்.

முதல்வர்  ஜெயலலிதா காவல்துறை மானியத்தைப் பற்றி பேசிய பிறகு, தனக்கு பேச வாய்ப்பு அளிக்கும்படி அவைத்தலைவரிடம் கேட்டேன். ஆனால்  வாய்ப்பு தரவில்லை என்று கூறினார் விஜயதரணி.

மேலும்,  சில வாரங்களுக்கு முன்பு சட்டப் பேரவை நுழைவு வாயிலில், மறியலில் ஈடுபட்டபோது என்னைத் தாக்கினார்கள். அந்த மறியல் போராட்டத்தில் தாக்குதல் எதுவும் நடக்காதது போல் முதல்வர் ஜெயலலிதா அறிக்கையை படித்தார். இதற்காக நான் எழுந்து கேட்ட போது, எனக்கு பேச வாய்ப்பு தரவில்லை. அப்பொழுது அதிமுக எம்.எல்.ஏ க்கள் என்னை கேலியும், கிண்டலுமாக பேசினர். மேலும், அடிக்க வருவது போல செயல்பட்டனர். என்னைப் பார்த்து அசிங்கம், அசிங்கமான வார்த்தைகளால் பேசினார்கள்.

மேலும், பெண் எம்.எல்.ஏ க்கள் என் புடவையைப் பிடித்து இழுத்தார்கள். எதிர்க்கட்சி பெண் எம்.எல்.ஏ க்களுக்கு சட்டசபையில் கொஞ்சம் கூட பாதுகாப்பு இல்லை. இதை மிகப் பெரிய இழுக்காகவே நான் கருதுகிறேன் – என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

நீதிமன்ற உத்தரவை அடுத்து மாயமான ஹர்திக் படேல் சௌராஷ்ட்டிராவில் சிக்கினார்

ஆமதாபாத்:

குஜராத் உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து, காணாமல் போனதாகக் கூறப்பட்ட ஹர்திக் படேல், இன்று சௌராஷ்டிரா பகுதியில் குஜாராத் மாநில போலீசார் வசம் சிக்கினார்.

குஜராத் மாநிலத்தில் வாழும் படேல் சமூகத்தினர், தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அண்மைக் காலமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்தப் போராட்டத்துக்கு ஹர்திக் படேல்(22) என்ற இளைஞர் தலைமை தாங்கி வருகிறார். கடந்த 25 ஆம் தேதி ஆமதாபாத்தில் இவர்களின் பேரணியில் வன்முறை ஏற்பட்டதால் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 8 பேர் உயிரிழந்தனர். இதனால் குஜராத் மாநிலத்தில் பல நாட்களுக்கு பதற்றம் நிலவியது. இதே கோரிக்கையுடன் ஹர்திக் படேல் தலைமையில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், நேற்று ஹர்திக் படேல் ஆமதாபாத்தில் இருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் உள்ள, அர்வாலி மாவட்டம் டெயின்பூர் என்ற இடத்தில் உரிய போலீஸ் அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தினார். அங்கே கூடியிருந்த சுமார் 2 ஆயிரம் பேர் மத்தியில் நின்று பேசினார். அவர் பேசி முடித்து அங்கிருந்து புறப்பட்டபோது, அவரை மீண்டும் கைது செய்ய போலீசார் காத்திருந்தனர். ஆனால் அவர் எவர் கையிலும் அகப்படாமல், ரகசியமாக தனது வாகன அணி வகுப்பில் இடம்பெற்றிருந்த கார் ஒன்றில் ஏறி தப்பினார். அவருடன் அவரது இயக்கத்தின் முன்னணித் தலைவர்களும் தப்பினர்.

இந்நிலையில், ஹர்திக் பட்டேலை போலீசார் சட்டவிரோதமாகக் கைது செய்து, ரகசிய இடத்தில் அடைத்து வைத்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கருதினர். இதையடுத்து, ‘பட்டிதார் அனாமத் அந்தோலன் சமிதி’ இயக்கத்தின் சார்பில் குஜராத் உயர் நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டிருந்த ஆள்கொணர்வு மனுவில், ஹர்திக் படேலை போலீசார் சட்ட விரோதமாகக் கைது செய்துள்ளனர். அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த மனுவை, அவசர வழக்காக ஏற்று விசாரிக்க வேண்டும் என குஜராத் உயர்நீதிமன்றப் பதிவாளரிடம் கோரப்பட்டது. இதையடுத்து, இன்று அதிகாலை 1.20 இல் இருந்து 2.40வரை நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் கே.ஜே. தாக்கூர் ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து, ஹர்திக் படேல் எங்கே உள்ளார்? என உடனடியாக கண்டுபிடிக்கும்படி குஜராத் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும் உடனடியாக ஹர்திக் பட்டேலை கண்டுபிடிக்குமாறும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.

மேலும், இந்த  விவகாரம் தொடர்பாக நாளை 24ம் தேதிக்குள் அரசு விளக்கம் அளிக்கவேண்டும் என்றும், மீண்டும் அன்றைய தினம் விசாரணை நடைபெறும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. இந்நிலையில், குஜராத்தின் சௌராஷ்ட்டிரா பகுதியில் ஹர்திக் பட்டேல் தங்கியுள்ளதாக குஜராத் போலீசாருக்கு ஹர்திக் பட்டேலின் வக்கீல் மூலம் தகவல் கிடைத்தது.  இதை அடுத்து அவரை அங்கிருந்து அழைத்துவந்து உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

முதல்வர் ஜெயலலிதா பக்ரீத் வாழ்த்து

சென்னை:

முதலமைச்சர் ஜெயலலிதா பக்ரீத் திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:

தியாகத்தைப் போற்றும் புனிதத் திருநாளாம் பக்ரீத் திருநாளை இறையுணர்வுடன் கொண்டாடி மகிழும் என் அன்புக்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த ‘பக்ரீத்’ திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இறைவனின் கட்டளையை ஏற்று தனது ஒரே மகன் இஸ்மாயிலை  தியாகம் செய்ய முன்வந்த இறைத் தூதர் இப்ராஹிம் அவர்களின் ஈடு இணையற்ற தியாகத்தை நினைவுகூரும் தினமே பக்ரீத் திருநாளாகும்.  இறைவனின் விருப்பத்திற்கு கீழ்ப்படிந்து வாழ்வதே சிறந்த வாழ்க்கை நெறி என்று உலகிற்கு பறைசாற்றும் பொன்னாள் இந்நாளாகும்.

இத்தியாகத் திருநாளில், பசித்தவர்களுக்கு உணவளியுங்கள், துன்பப்படுபவர்களுக்கு உதவி புரியுங்கள், அண்டை அயலாரிடம் அன்பாக இருங்கள், எளியவர்களிடம் கருணை காட்டுங்கள், சிந்தனையிலும், நடத்தையிலும், தூய்மை உடையவராக இருங்கள் என்ற  நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளை மக்கள் அனைவரும்  மனதில் நிறுத்தி வாழ்ந்தால் உலகில் அமைதி  நிலவி, வளம் பெருகும்.

உலகில் அன்பும், அமைதியும் தழைத்தோங்கிட, அனைவரும் மனிதநேயத்துடனும், சகோதரத்துவத்துடனும், தியாகச் சிந்தனையுடனும் வாழ்ந்திட வேண்டுமென்று கூறி, இஸ்லாமிய சகோதர சகோதரிகள்  அனைவருக் கும் மீண்டும் ஒரு  முறை எனது பக்ரீத்  திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.        
இவ்வாறு அதில் கூறியுள் ளார்.

மனைவிக்குத் தெரியாமல் நான்கு திருமணம்: அதிமுக கவுன்சிலரால் பரபரப்பு

சேலம்:
மனைவிக்குத் தெரியாமல், நான்கு பெண்களைத் திருமணம் செய்து கொண்ட அதிமுக கவுன்சிலர் குறித்த தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
 
சேலம் மாநகராட்சி 20 ஆவது வார்டு கவுன்சிலராக இருப்பவர் ரவீந்திரன். அ.தி.மு.க வைச் சேர்ந்த இவரின் மனைவி சுதா, சேலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், “எனக்கு திருமணமாகி 23 ஆண்டுகள் ஆகிறது. எனது கணவர் ரவீந்திரன் 20 ஆவது வார்டு கவுன்சிலராகவும், அ.தி.மு.க. செயலாளராகவும் உள்ளார். என்னுடைய கணவர், எனக்குத் தெரியாமல், சில ஆண்டுகளுக்கு முன்னர் போடிநாயக்கன்பட்டியை சேர்ந்த ஆறுமுகம்  மகள் புவனேஸ்வரி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்தார்.
 
அடுத்து, பெரியார் நகரைச் சேர்ந்த ராமநாதன் என்பவரின் மகள் புவனேஸ்வரியையும், பழைய சூரமங்கலம் பாலு மனைவி சந்தியா என்பவரையும், அதே பகுதியைச் சேர்ந்த சத்யா என்பவரையும் சேர்த்து மொத்தம் நான்கு பெண்களைத் திருமணம் செய்துள்ளார்.
 
சந்தியா, சத்யா இருவரும் அம்மா உணவகத்தில் வேலை செய்பவர்கள்.  அவர்களுடன் பழக்கம் ஏற்பட்டு அவர்களைத் திருமணம் செய்திருக்கிறார்.  இதைப் பற்றி நான் கேட்டால், இந்தப் பதவியில் இருப்பவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்றும் நீ விருப்பம் இருந்தால் என்னுடம் இரு,  இல்லையெனில் விவாகரத்து வாங்கிகொண்டு போ என்றும் கூறுகிறார்.
 
இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருந்தாலும், அவரை எதுவும் செய்ய முடியவில்லை. கேட்டால்,  “நான் கவுன்சிலர். எனக்கு அமைச்சர் மற்றும் நிறைய பேர் உதவி செய்வார்கள். உனக்கு யார் உதவி செய்வார்? பதவி இருக்கும் வரை என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது” என்கிறார்.  முதல்வர் ஜெயலலிதா, இந்தப் பிரச்னையில் தலையிட்டு என் கணவரின் கவுன்சிலர் பதவியையும், வார்டு செயலாளர் பதவியையும் உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த மனுவில் கோரியுள்ளார்.

என் பேஸ்புக் பக்கத்தைப் பார்க்கும் முதல்வருக்கு நன்றி: மு.க. ஸ்டாலின்

சென்னை :

என் பேஸ்புக் பக்கத்தைப் பார்க்கும் முதல்வருக்கு நன்றி என்று கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார் மு.க.ஸ்டாலின்!

பேஸ்புக்கில் ஸ்டாலின் வெளியிடுவது எல்லாம் அவரது சொந்தக் கருத்துக்கள்தானா என அவர் விளக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கேட்டார். இதற்கு பதிலளிக்கும் வகையில், தனது பேஸ்புக் பக்கத்தில் ஸ்டாலின், ”எனது பேஸ்புக் பக்கத்தை முதல்வர் தொடர்ந்து பார்ப்பதற்கு நன்றி. தொடர்ந்து என் பக்கத்தை பார்த்து, அதில் நான் பதிவு செய்து வரும் மக்களின் பிரச்னைகளை, தேவைகளை, குறைகளை முதல்வர் தெரிந்து கொள்ளட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் சட்ட மன்றத்தில் செப்.22 நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய முதல்வர் ஜெயலலிதா, “தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்த தகவல்களை ஸ்டாலின் பேஸ்புக் பக்கத்தில் திரித்து கூறி வருகிறார். உண்மையில் அது அவரது கருத்துக்கள்தானா என்பதை அவர் விளக்க வேண்டும். கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்திக்கு ஸ்டாலின் தனது பேஸ்புக்கில் வாழ்த்து கூறி இருந்தார். பின்னர் அது அவரது கருத்து இல்லை, ஸ்டாலினின் பேஸ்புக் பக்கத்தை பராமரிப்பவர்கள் வெளியிட்டது என திமுக தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது” என்றார்.

சட்டசபையில் முதல்வர் கூறிய கருத்துக்கு பேஸ்புக்கில் பதிலளித்துள்ள திமுக பொருளாளர் ஸ்டாலின், ” தமிழகத்தில் நடைபெற்ற குற்றங்கள் குறித்து என் முகநூலில் சொல்லப்பட்டுள்ள புள்ளி விவரங்களை மறுத்திருக்கிறார் முதலமைச்சர் ஜெயலலிதா. அந்தப் புள்ளிவிவரங்கள் தேசிய குற்ற ஆவண காப்பகத்தால் வெளியிடப்பட்டவை. ஆகவே அந்தப் புள்ளி விவரங்கள் பற்றி தேசிய குற்ற ஆவணக் காப்பகத்திடம் அவர் கேட்டுத் தெரிந்து கொள்வதுதான் பொருத்தமாக இருக்கும்.

எனினும் என்னுடைய முகநூல் பக்கத்தை முதலமைச்சர் தொடர்ந்து பார்த்து வருவதற்கு என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதிலுள்ள தகவல்களின் அடிப்படையில் அவரது கணிணி மூலம் அவர் மாநிலம் முழுவதும் சுற்றுபயணம் செய்து மக்களின் உணர்வுகளை, அவர்களது ஏமாற்றங்களை தெரிந்து கொள்ள வேண்டும். மாநிலம் முழுவதும் செல்லும் “நமக்கு நாமே” பயணத்தின் வீடியோக்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் என் முகநூலில் பதிவு செய்து வருகிறேன். ஆகவே என் முகநூல் செய்திகளை முதலமைச்சர் தொடர்ந்து படித்தால் மக்களின் தேவைகள், எதிர்பார்ப்புகள், கோரிக்கைகள், கனவுகளைத் தெரிந்து கொள்ள முடியும்.

முதலமைச்சரால் மக்களை சந்தித்து அவர்களது பிரச்சினைகளை அறிந்து கொள்ள பொறுப்புணர்வோடு கூடிய அக்கறையில்லை என்றாலும், தமிழக மக்களின் பிரச்சினைகள் பற்றி தெரிந்து கொள்ள எனது முகநூல் பக்கம் அவருக்கு பேருதவியாக இருக்கும் என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

சாதிக் கட்டை மீறிய பேத்தியின் காதல்: கழுத்தறுத்துக் கொன்ற தாத்தா

கடலூர்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி அருகே சாதிக் கட்டுகளை மீறி ஒரு மாணவனைக் காதலித்ததற்காக தன் பேத்தி என்றும் பாராமல் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொன்று போலீஸில் சரணடைந்துள்ளார் அந்தப் பெண்ணின் தாத்தா.

காட்டுமன்னார்குடியை அடுத்த ஆண்டிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமணி. இவருடைய பேத்தி ரமணிதேவி (22). காட்டுமன்னார்குடி எம்ஆர்கே கல்லூரியில் முதுகலை படித்து வந்த அவர், அதே கல்லூரியில் படிக்கும் திண்டிவனத்தை அடுத்த கருமபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சபாபதி (24) என்பவரைக் காதலித்தாராம். இருவரும் வெவ்வேறு பிரிவினர் என்று தெரிகிறது. இதனால் வீட்டில் பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், இருவரும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதுதொடர்பாக போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. அப்போது காட்டுமன்னார்குடி நீதிமன்றத்தில் இருவரும் ஆஜராகினர். அப்போது, தான் பெற்றோருடன் செல்வதாக தேவி கூறியதால், அவர் பெற்றோருடன் செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்தது.

ஆனால் வீட்டுக்குத் திரும்பியதும் சபாபதியுடன் மீண்டும் காதலைத் தொடர்ந்துள்ளார் தேவி. இதை அறிந்த அவரது தாத்தா வீராசாமி (66) தனது பேத்தியை இன்று காலை கழுத்தை அறுத்துக் கொன்றார். பின்னர் சோழத்தரம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் இது போல வெவ்வேறு ஜாதிகளைச் சேர்ந்த காதலர்கள் கௌரவக் கொலை செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. இவற்றின் பின்னால் அரசியல் கட்சிகள் உள்ளதாகவும் சாதி மாறிக் காதலித்தால் கொன்று விடுங்கள் என்று தனது சாதிக்காரர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளதால் இவ்வாறு நடப்பதாகவும் அப்பகுதி மக்கள் சொல்கின்றனர்.

மு.க.ஸ்டாலின் பேஸ்புக் பதிவுகள் அவருடைய கருத்துதானா?: முதல்வருக்கு சந்தேகம்

சென்னை:

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினின் முகநூல் பதிவுகளில் தரப்படும் தகவல்கள் அவருடைய பதிவுதானா? என்று முதல்வர் ஜெயலலிதா சந்தேகம் தெரிவித்தார்.

இந்த ஆண்டுக்கான காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கைகள் மீது சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.க்கள்நேற்று விவாதித்தனர். அவர்களுக்கு பதிலளித்து முதல்வர் ஜெயலலிதா பேசியபோது,

விவாதம் என்றாலே ஆதரவு மற்றும் எதிர்க் கருத்துகள் கூறப்படுவது வாடிக்கை. தமிழக சட்டம்-ஒழுங்கு, போலீசாரின் செயல்பாடு ஆகியவை பற்றி ஆதரவாகவும், எதிராகவும் அவையில் கருத்துகள் கூறப்பட்டன. அவை உறுப்பினர்களாக இருந்தும் அவைக்கு வராமல் அவைக்கு வெளியே சிலரால் கருத்துகள் கூறப்பட்டுள்ளன. இங்கு கூறப்பட்ட எதிர்மறை கருத்துகளை பற்றி சிந்திக்கும்போது, பிராங்க் ஹெர்பர்ட் என்ற அமெரிக்க அரசியல்வாதி தெரிவித்த கருத்துகள் ஞாபகத்துக்கு வருகின்றன. அவர், ‘‘உண்மை நிலையை மாற்றுவதே விவாதத்தின் குறிக்கோள்’’ என்றார்.

அதன்படி, உண்மையை திரித்து, மறைத்துவிடலாம் என்ற எண்ணத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை பற்றி உண்மைக்கு மாறான விமர்சனங்களை சிலர் பேச்சு, சிலர் அறிக்கைகள், சிலர் முகநூல் பதிவு போன்றவற்றின் மூலமாக கருத்து கூறுகின்றனர். சட்டமன்ற தி.மு.க. குழு தலைவர் மு.க.ஸ்டாலின் பொத்தாம் பொதுவாக சில கருத்துகளை அவரது முகநூலில் பதிவு செய்துள்ளார். அவை உண்மையிலேயே அவரது கருத்துகள்தானா? என்பதை அவர் விளக்கவேண்டும்.

ஏனென்றால், கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியின்போது மு.க.ஸ்டாலின் தனது முகநூல் மூலம் வாழ்த்து கூறியிருந்தார். ஆனால் தி.மு.க.வின் தலைமைக்கழகம் அதற்கு மறுப்பு தெரிவித்தது. அந்த இணையதளத்தை பராமரிக்கும் சில தோழர்கள் அந்த வாழ்த்தை வெளியிட்டார்கள் என்றும், அந்த வாழ்த்துச் செய்தி மு.க.ஸ்டாலின் விருப்பப்படி ஆனதில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.

எனவே, தற்போதும் சட்டம்-ஒழுங்கு பற்றி மு.க.ஸ்டாலினின் முகநூலில் வெளிவந்துள்ள பதிவுகளும் மற்றவர்களுடைய கருத்துதானோ, என்னவோ?

– என்று அவர் தனது ஐயத்தை வெளிப்படுத்திப் பேசினார்.

வாகனம் தயாரிப்பவர்களே 2 ஹெல்மெட் வழங்க மத்திய அரசு ஆணையிட வேண்டும்: உயர் நீதிமன்றம்

சென்னை:

இருசக்கர வாகனத்துடன் சேர்த்து தரமான 2 ஹெல்மெட்களை வாகன தயாரிப்பாளர்களே வழங்க மத்திய அரசு ஆணையிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க் கிழமை உத்தரவிட்டுள்ளது.

ஹெல்மெட் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி தனது உத்தரவில் கூறியதாவது:

நீதிமன்ற உத்தரவை நடைமுறைப் படுத்தியது தொடர்பான அறிக் கையை அரசு தாக்கல் செய்துள்ளது. அதில், ஹெல்மெட் அணியாததால் ஜூன் மாதம் 582 பேர், ஜூலை மாதம் 498 பேர், ஆகஸ்ட் மாதம் 571 பேர், செப்டம்பர் 1 முதல் 15-ம் தேதி வரை 289 பேர் இறந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை பார்க்கும்போது, ஜூலை மாதம் மட்டும் ஹெல்மெட் கட்டாய உத்தரவு தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்பிறகு அவ்வாறு அமல்படுத்தப் படவில்லை என்று தெரிகிறது.

நகரங்கள், சிறிய நகரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிகின்றனர். கிராமப்புறங்களில் ஹெல்மெட் கட்டாய உத்தரவு சரிவர அமல்படுத்தப்படவில்லை. ஹெல்மெட் கட்டாய உத்தரவை மாநிலம் முழுவதும் அரசு தீவிரமாக அமல்படுத்த வேண்டும். ஹெல்மெட் வடிவமைப்பு, தயாரிப்பு தொடர்பாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் மனுவாக தாக்கல் செய்ய வேண்டும்.

மோட்டார் வாகனச் சட்டப்பிரிவு 138 (எப்)-ன்படி இருசக்கர வாகன தயாரிப்பாளர்கள் வாகனத்துடன் சேர்த்து ஹெல்மெட் தரவேண்டும். பின்னால் அமர்ந்து செல்வோரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உத்தரவிட்டிருப்பதால், இந்திய தர நிர்ணய அமைப்பு நிர்ணயித்துள்ள தரத்துடன் கூடிய 2 ஹெல்மெட்டுகளை வாகனத்துடன் சேர்த்து வாடிக்கையாளர்களுக்கு இருசக்கர வாகன தயாரிப்பாளர்கள் வழங்க உத்தரவிட வேண்டும்.

இதன்மூலம் இருசக்கர வாகன ஓட்டிகள் தரமற்ற ஹெல்மெட் பயன்படுத்துவதைத் தவிர்க்க முடியும். மேலும், ஹெல்மெட்டை வைத்து பூட்டுவதற்கான வசதியுடனேயே இருசக்கர வாகனங்களை தயாரிக்க மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.

ஹெல்மெட் அணியாமல் விபத்தில் சிக்கி அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டுவரப்பட்டு இறந்தவர்கள் மட்டுமின்றி, தனியார் மருத்துவமனைகளில் இறந்தவர்கள் பற்றிய விவரங்களையும் தெரிவிக்க உத்தரவிடும்படி அரசு சிறப்பு வழக்கறிஞர் வேணுகோபால் கேட்டுக் கொண்டுள்ளார். மேற்கண்ட தகவல்களை தனியார் மருத்துவமனைகளில் இருந்து அரசு பெற்றுக் கொள்ளலாம் என்று உத்தரவிட்ட நீதிபதி கிருபாகரன், வழக்கு விசாரணையை அக்டோபர் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இந்த விசாரணையின்போது நீதிபதி கிருபாகரன் தனிப்பட்ட கருத்தாகத் தெரிவித்த போது, ‘‘ஹெல்மெட் அணியாததால் ஏற்படும் விபத்துகள், உயிரிழப்பு தொடர்பான வீடியோ காட்சிகளை ஓட்டுநர் உரிமம் வழங்கும்போது காண்பிக்கலாம். ஹெல்மெட் விழிப்புணர்வு முயற்சியில் அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் ஈடுபட்டால் நல்ல பலன் கிடைக்கும். ஹெல்மெட் கட்டாயம் என்பதை மக்கள் இயக்கமாகவே மாற்ற வேண்டும்’’ என்றார்.