Home Blog Page 6203

திருச்சி விமான நிலையத்தில் மலேசிய கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 200 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து திருச்சி விமான நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை நள்ளிரவு வந்த ஏர்-ஏசியா விமான பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் ஸ்கேனர் கருவி மூலம் சோதனை செய்தனர். அப்போது ஒருவர் அணிந்திருந்த உடை அருகே கருவி ஒலி எழுப்பியது. இதையடுத்து அதிகாரிகள் அந்த நபரை தனியாக அழைத்துச் சென்று சோதனையிட்டதில் அவரது பேண்ட் பாக்கெட்டில் 200 கிராம் தங்கக் கட்டி இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.6 லட்சம். தொடர்ந்து அவரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர் திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையம் பகுதியைச் சேர்ந்த முகமது இர்பான் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த தங்கத்தை பறிமுதல் செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சங்கரன்கோவில் அருகே இரட்டை கொலை: அக்கா, அத்தானை கொன்று மைத்துனன் தப்பி ஓட்டம்

நெல்லை: நெல்லை மாவட்டம் திருவேங்கடம் அடுத்த மைபாறையைச் சேர்ந்தவர் ஜெயராமன் (65), இவரது மனைவி தனலட்சுமி (55), தனலட்சுமியின் தம்பி முத்தாள்வார்.  இவருக்கும் சகோதரி தனலக்ஷ்மியின் குடும்பத்திற்கும் சொத்து தொடர்பான முன் பகை இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்றும் சகோதரி கணவனிடம் இதுக் குறித்து முத்தாள்வார் தகராறு செய்துள்ளார். தகாராறு முற்றியதில் முத்தாள்வார் சகோதரியையும்,அவரது கணவரையும் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடினார். உயிருக்கு போராடி சிறிது நேரத்திலேயே ரத்தவெள்ளத்தில் ஜெயராமன், தனலட்சுமி இருவரும் இறந்தனர். இது குறித்து தகவல் அறிந்த திருவேங்கடம்போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சொத்துத் தகராறில் இரட்டைக்கொலை நடந்ததாக கூறப்படுகிறது.

கொல்லிமலை அருகே கார் கவிழ்ந்து சென்னையைச் சேர்ந்த 4 பேர் பலி

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் சென்னையைச் சேர்ந்த 4 பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர். சென்னை ஆவடியைச் சேர்ந்த கண்ணதாசன்(57), படை வீரர்கள்களுக்கு சீருடை தைக்கும் பணியில் இருந்துவந்தார். இவரது மனைவி ஸ்ரீலதா(48), மகள் வைஷ்ணவி(19), மகன் ஆனந்த் விஷ்ணு(16), அவர்களூக்கு அருகே வசித்த விஜயகுமார் (60), அவரது மனைவி் ராஜலட்சுமி(47) ஆகியோர் காரில் கொல்லிமலை சென்றனர். காரை ஆவடியைச் சேர்ந்த சித்தார்த் (32) ஓட்டியுள்ளார். கொல்லிமலை அருகே அரியூர்நாடு பெரியசாமி கோயிலுக்கு சனிக்கிழமை இன்று மதியத்துக்கு மேல் சென்று சாமி கும்பிட்டு மாலை 6 மணி அளவில் மலையை விட்டு கீழே இறங்கினர். புறப்பட்ட சற்று நேரத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து, 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் கண்ணதாசன், ஸ்ரீலதா, வைஷ்ணவி, விஜயகுமார் ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த ஆனந்த் விஷ்ணு, ராஜலட்சுமி, சித்தார்த் ஆகிய 3 பேரும் நாமக்கல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து கொல்லிமலை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

பி.சீதாராமன் மாநில தேர்தல் ஆணையராக நியமனம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையராக பி.சீதாராமன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை ஆணையராக உள்ளார். சீதாராமன், இந்தப் பதவியில் இரண்டு ஆண்டுகள் இருப்பார் என தமிழக அரசு அறிவித்துள்ளது

மீத்தேன் எரிவாயுத் திட்டத்தை முழுமையாகக் கைவிட திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை: மீத்தேன் எரிவாயுத் திட்டத்தை முழுமையாகக் கைவிட மத்திய அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், காவிரிப் படுகையில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டம் ரத்து செய்யப்படவேண்டும் என அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்திப் போராடியதன் காரணமாக இப்போது அந்த ஒப்பந்தத்தை ரத்துசெய்வதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியிருப்பதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது. மாநிலங்களவையில் பேசிய அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான், “ஒப்பந்தம் செய்துகொண்ட கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற நிறுவனம் உரிய ஆவணங்களை ஒப்படைக்காத காரணத்தினாலும் பணியை தொடங்காத காரணத்தினாலும் ஒப்பந்தத்தை ரத்துசெய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” எனத் தெரிவித்திருக்கிறார். இது மத்திய அரசின் நிலையில் தெளிவற்ற தன்மையைக் காட்டுகிறது. மத்திய அரசின் அறிவிப்பைப் பார்த்தால் வேறு ஏதாவது ஒரு நிறுவனம் உரிய ஆவணங்களைத் தர முன்வந்தால் மீண்டும் ஒப்பந்தம் செய்யப்படும் வாய்ப்பு இருப்பதாகவே கருதவேண்டியுள்ளது. வாஜ்பாயி தலைமையிலான பாஜக ஆட்சிக் காலத்தில் 2001ஆம் ஆண்டில்தான் மீத்தேன் எரிவாயு திட்டத்துக்கு இந்தியாவில் அனுமதி அளிக்கப்பட்டது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் முப்பது இடங்களில் மீத்தேன் எரிவாயு எடுப்பதற்கான அனுமதியை பாஜக அரசு அப்போது வழங்கியது. மேற்கு வங்க மாநிலத்தில் ராணிகஞ்ச் என்னுமிடத்தில் மீத்தேன் எடுக்கும் திட்டம் இதே கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தால் செயல்படுத்தப்படுகிறது. அங்கு நீர்நிலைகளும் விளை நிலங்களும் பாழாவதாக விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். மீத்தேன் வாயு எடுக்கும் திட்டம் கேடு விளைவிப்பது என உலக அளவில் அறிவியலாளர்கள் தெளிவுபடுத்தி உள்ளனர். மக்கள் வாழும் பகுதிகளில், விவசாய நிலங்களில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டம் ஒப்பீட்டளவில் அதிகம் பாதிப்பை ஏற்படுத்துவதாகும். அப்படியிருக்கும்போது தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும் இந்தத் திட்டத்தை மத்திய பாஜக அரசு மக்கள் மீது திணிப்பது தமிழர் விரோதச் செயலாகும். டெல்டா மாவட்டங்களில் 667 சதுர கிலோ மீட்டர் பகுதியை ’நிலக்கரிப் படுகை மீத்தேன் எரிவாயுப் பகுதி (MG-CBM-2008/IV) என்று அறிவிப்புச் செய்திருப்பதை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டும். இனி தமிழ்நாட்டில் இந்தத் திட்டத்தை எங்குமே செயல்படுத்தமாட்டோம் என மத்திய அரசு உறுதிமொழி வழங்கவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. – என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

சுகாதார அதிகாரி தற்கொலைக்கு அமைச்சரின் மிரட்டல் காரணமா?: ராமதாஸ்

  சென்னை: சுகாதார அதிகாரி அறிவொளி தற்கொலைக்கு அமைச்சரின் மிரட்டல் காரணமா என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் சந்தேகம் எழுப்பியுள்ளார். அவர் இன்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு மருத்துவப் பணிகள் துறை இணை இயக்குனராகவும், மாநில காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கூடுதல் இயக்குனராகவும் பணியாற்றி வந்த மருத்துவர் அறிவொளியின் உடல் கடந்த பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி சென்னை மெரினாவில் கரை ஒதுங்கியது. புற்றுநோயால் அவர் பாதிக்கப் பட்டிருந்ததாகவும், அதனால் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் தொடக்கத்தில் கூறப்பட்டது. ஆனால், தற்போது வெளியாகும் தகவல்கள் அவரது மரணத்தில் ஐயத்தை எழுப்புகின்றன. மருத்துவர் அறிவொளி கூடுதல் இயக்குனராக பணியாற்றி வந்த காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட 5 பணிகளிலும், ஏற்கனவே இருந்த பணிகளிலும் 687 பணியிடங்கள் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டன. இதற்கான ஆள் தேர்வுகள் முறையாக நடைபெற வேண்டும் என்று விரும்பிய அறிவொளி, மாவட்ட வாரியாக பணியாளர்களை நியமிக்க ஊட்கங்களில் விளம்பரம் கொடுத்தார். இவரது அறிவுரைப்படி தூத்துக்குடி மாவட்ட துணை இயக்குனர் முறைப்படி நேர்காணல் நடத்தி 3 பணியாளர்களை தேர்வு செய்து பணி ஆணைகளை வழங்கினார். இந்த பணியிடங்கள் ஒவ்வொன்றுக்கும் சுமார் ரூ. 3 லட்சம் முதல் ரூ. 4 லட்சம் வரை விலை நிர்ணயித்து மொத்தம் ரூ.20 கோடி ஊழல் செய்ய சுகாதாரத்துறை அமைச்சர் முடிவு செய்திருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், தூத்துக்குடி மாவட்ட துணை இயக்குனர் முறையாக நேர்காணல் நடத்தி பணியாளர்களை நியமித்ததால் அதிர்ச்சி அடைந்த அமைச்சர், அந்த பணி நியமனங்கள் அனைத்தையும் ரத்து செய்ததுடன், சம்பந்தப்பட்ட துணை இயக்குனரை தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து திருவாரூர் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்ததாகவும் தெரிகிறது. காசநோய் திட்டத்திற்கான ஆள் தேர்வுகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டு, அனைத்து பணியிடங்களும் மாநில அளவில் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது. போட்டித்தேர்வு மற்றும் நேர்காணலில் முறைகேடு செய்து பணம் தந்தவர்களுக்கு வேலை வழங்குவது தான் திட்டம் என்று கூறப்படுகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அறிவொளி, இப்பணிக்கு அதிக அனுபவம் தேவை என்பதால், ஏற்கனவே இத்திட்டத்தில் களப்பணியாளர்களாக இருப்பவர்களில் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களை கலந்தாய்வு முறையில் நியமிக்கலாம் & மீதமுள்ள இடங்களை மற்ற மாநிலங்களில் கடைபிடிக்கப்படும் முறைப்படி நியமிக்கலாம் என்று பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது. ஆனால், அதை ஏற்காத மேலிடம் அறிவொளியை கடுமையாக மிரட்டியதாகவும், அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்றும் அவருக்கு நெருக்கமானோர் கூறியதாக ஊடகங்களில் செய்தி வந்துள்ளது. வேளாண்துறை அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்ட அதே காலக்கட்டத்தில் அறிவொளியின் தற்கொலையும் நடந்திருப்பதால் இக்குற்றச்சாற்றை முற்றாக ஒதுக்கிவிட முடியவில்லை. அறிவொளியின் மரணத்திற்குப் பிறகு கடந்த மாத இறுதியில் காசநோய் திட்ட பணியாளர் பணிக்கு போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்தத் தேர்வு முடிவடைந்த பிறகு அதில் பங்கேற்றவர்களை தொடர்பு கொள்ளும் சிலர், பணம் கொடுத்தால் வேலை உறுதி என்று கூறி வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருவதைப் பார்க்கும்போது இக்குற்றச்சாற்று மேலும் வலுவடைகிறது. ரூ.20 கோடி ஊழல் செய்வதற்கு அறிவொளி தடையாக இருந்ததால் ஆத்திரமடைந்த மேலிடம், அவரை மிரட்டியிருக்கலாம்; அதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுவதை நம்புவதற்கு ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. ஊழலுக்குத் தடையாக இருக்கும் அதிகாரிகள் எல்லாம் அமைச்சர்களின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொள்வது மிகவும் வருத்தமளிக்கும் விஷயமாகும். இத்தகைய போக்கு தொடர்ந்தால் தமிழகத்தில் நேர்மையான அதிகாரிகள் எவருமே இருக்க மாட்டார்கள்; ஊழல் அமைச்சர்களும், அவர்களுக்கு துணை நிற்கும் அதிகாரிகளும் மட்டும் தான் கோலோச்சுவார்கள் என்ற அவமானகரமான சூழல் ஏற்பட்டு விடும். காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கூடுதல் இயக்குனர் அறிவொளியின் தற்கொலைக்கு பின்னால் இருக்கும் மர்மங்களை விளக்க வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும். எனவே, இதுகுறித்து நடுவண் புலனாய்வுப் பிரிவு (சி.பி.ஐ) விசாரணைக்கு ஆணையிட வேண்டும். விசாரணை நியாயமாக நடைபெறுவதை உறுதி செய்ய வசதியாக சுகாதாரத்துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

பெருத்த ஏமாற்றத்துடன் ஓய்வு பெற்ற அப்ரிதி, மிஸ்பா!

pakistan-cricket-team பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா–உல்–ஹக், முன்னாள் கேப்டன் அப்ரிதி ஆகியோர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து பெருத்த ஏமாற்றத்துடன் ஓய்வு பெற்றனர். உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று வெளியேறியது பாகிஸ்தான். இந்தத் தோல்வியால், அவர்களது உலகக் கோப்பை கனவு நனவாகவில்லை. உலகக் கோப்பை போட்டிகளுடன் ஓய்வு பெறுவதாக இருவரும் ஏற்கெனவே அறிவித்திருந்தனர். இருப்பினும், டி20, டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அவர்கள் தொடர்ந்து விளையாடவுள்ளனர். 2002–ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில், லாகூரில் அறிமுகமானார் மிஸ்பா உல் ஹக். தற்போது 40 வயதாகும் அவர் 162 ஒருநாள் போட்டிகளில் விளையாடியும் அதிகபட்சமாக 96 ரன்னே எடுத்துள்ளார். இதுவரை அவர் ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்பது அவருக்கு மிகப் பெரிய குறை. அதே நேரம் அப்ரிதி கடந்த 5 உலகக் கோப்பை போட்டிகளிலும் தொடர்ந்து ஆடிவருகிறார். ஆனால் அவர் இடம்பெற்ற அணி ஒரு முறைகூட கோப்பையை வெல்லவில்லை. சென்ற உலகக் கோப்பையிலும் கூட, அவரது தலைமையில் விளையாடி அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி இந்தியாவிடம் தோற்றது.

“இம்மை-மறுமை-வாய்மை”

download (1) “இம்மை-மறுமை-வாய்மை” ஒரு முறை கி.வா.ஜ.அவர்கள் ‘இம்மை மறுமை’ பற்றி சொற்பொழிவாற்றச் சென்றிருந்தார். அவர் பேசும்போது மைக் தகராறு செய்யவே வேறொரு மைக் பொறுத்தப்பட்டு மீண்டும் பேசத் தொடங்கினார். அதுவும் சிறிது நேரத்தில் தகராறு செய்யவே உடனே கி.வா.ஜ. அவர்கள், “இம்மைக்கும் வேலை செய்யவில்லை…… .மறுமைக்கும் வேலை செய்யவில்லை…… எனவே வாய்மைக்கே எனக்குப் போதும்” என்று மைக் இல்லாமல் பேசி முடித்தார்

தில்லி, புதுவை போலீஸில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு

புதுதில்லி: தில்லி, புதுச்சேரி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களில், காவல் துறையில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. காவலர் முதல் உதவி ஆய்வாளர் வரை உள்ள பணியிடங்களில் 33 சதவிகிதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களை ஆண் காவலர்களிடம் கூற பெரும்பாலான பெண்கள் தயங்குகின்றனர். இதைக் கருத்தில் கொண்டு, பெண்களுக்கு காவல் துறையினரிடமுள்ள தயக்கத்தைப் போக்கி, அவர்களுக்குத் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், காவல்துறையில் அதிக அளவில் பெண்களை சேர்க்க அரசு திட்டமிட்டுள்ளது.

விசாரணைக் கமிஷன் அமைக்கத் தயாரா?: நத்தம் விசுவநாதனுக்கு கருணாநிதி சவால்

சென்னை: உடன்குடி மின் திட்ட விவகாரத்தில் காதிலே பூ சுற்ற கடுமையாக மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் போராடுகிறார் என்று கூறியுள்ள திமுக தலைவர் கருணாநிதி, இது விவகாரத்தில் விசாரணைக் கமிஷன் அமைக்கத் தயாரா என கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: உடன்குடி மின் திட்டத்தைத் தாமதம் செய்ததற்கும், ரத்து செய்ததற்கும் விசாரணைக் கமிஷன் அமைக்கத் தயாரா என்று அ.தி.மு.க. அரசிடம் 18-3-2015 தேதி என் அறிக்கையில் கேட்டிருந்தேன். அந்த துறையின் அமைச்சர் நத்தம் விசுவநாதன் உடன்குடி மின்சாரத் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்றும், பொய்யான தகவல்களை நான் என்னுடைய அறிக்கையிலே வெளியிட்டுள்ளதாகவும் கூறியிருக்கிறார். நான் வெளியிட்டுள்ள தகவல்கள் பொய் என்றால் விசாரணைக் கமிஷன் அமைத்தால், நான் கூறுவது சரியான தகவலா, அல்லது அமைச்சர் கூறியிருப்பது உண்மையா? உடன்குடி மின்சாரத் திட்டம் தாமதம் ஆனதற்கும், தற்போது அந்த டெண்டரை ரத்து செய்ததற்கும் என்ன காரணம் என்ற உண்மைகளெல்லாம் உலகத்திற்குத் தெரிந்து விடும் அல்லவா? நீங்கள் நியாயவான்கள் என்றால், உடனே நடுநிலையான நீதிபதி ஒருவரைக்கொண்டு விசாரணைக் கமிஷன் அமைத்திருக்க வேண்டியது தானே? உடன்குடி மின்சாரத் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்பது தான் அமைச்சர் அறிக்கையின் முடிவான கூற்று. கழக ஆட்சியில் அடிக்கல் நாடப்பட்ட திட்டத்தைத் தொடரக் கூடாதென்ற காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, அதை ரத்து செய்து விட்டு, புதிதாக உடன்குடியில் இந்த மின் திட்டத்தைத் தொடங்கப் போவதாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 24-2-2012 அன்று புதியதாக அறிவித்து – அதற்காக டெண்டர் விடும் பணிகள் 2013ஆம் ஆண்டு ஏப்ரலில் தொடங்கப்பட்டு – 2013ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தொழில் நுட்பப் புள்ளி ஒப்பந்தம் திறக்கப்பட்டு – அதற்குப் பின் ஆறு மாத காலத்திற்குள் திறக்கப்பட வேண்டிய விலைப்புள்ளி அவ்வாறு ஆறு மாதத்திற்குள் திறக்கப்படாமல், 12 மாதங்களுக்குப் பிறகு 2014ஆம் ஆண்டு நவம்பரில் திறக்கப்பட்டு -அதற்குப் பிறகும் நான்கு மாதங்கள் கழித்து, அந்த டெண்டரையே ரத்து செய்த நத்தம் விசுவநாதன் இன்றைய அறிக்கையில் “உடன்குடி நிலை 1 திட்டத்திற்கான புதிய ஒப்பந்தப் புள்ளிகள் விரைவில் கோரப்பட்டு இறுதி செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்படும்” என்று அறிவித்திருக்கிறார் என்றால்; அ.தி.மு.க. அரசின் செயல்பாட்டை எண்ணிச் சிரிப்பு வருகிறதா இல்லையா? “கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாதவன், வானத்தைக் கீறி வைகுண்டத்திற்கு வழி காட்டுகிறேன்” என்று கூறியவருக்கும், நத்தம் விசுவநாதனுக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா? “உடன்குடி திட்டத்திற்கு நிலக்கரி கையாளும் சுய சார்புத் துறைமுகம் அமைப்பதற்கான பணிகள் விரைவில் துவங்கும்” என்றும் அமைச்சர் பதில் அளித்திருக்கிறார். உடன்குடி திட்டத்தை முடிவு செய்யாமல், அந்தத் திட்டத்திற்குத்தேவையான நிலக்கரியைக் கொண்டு வர, முன் சுய சார்பு துறைமுகத்தைத் துவங்கப் போகிறோம் என்ற அமைச்சரின் அறிக்கை, குதிரைக்கு முன்பக்கம் வண்டியைப் பூட்டுவதைப் போல அல்லவா இருக்கிறது? நான் என்னுடைய 18ஆம் தேதி அறிக்கையில், “2013ஆம் ஆண்டில் டெண்டர் கோரப்பட்டது. அது எப்போது திறக்கப் பட்டது? திறக்கப்பட்ட பிறகு எத்தனை மாதங்களாகின்றன? ஏன் இந்தத் தாமதம்? தாமதத்திற்கு யார் பொறுப்பு? இந்தத் தாமதத்திற்கு மின் துறை அமைச்சரும், சில குறிப்பிட்ட அதிகாரிகளும் தான் காரணம் என்பது உண்மையா? தனியார் நிறுவனங்களிடமிருந்து கூடுதல் விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதில் காட்டப்படும் உற்சாகம் தான் தாமதத்திற்கும், இறுதியில் ரத்து செய்ததற்கும் காரணம் என்று சொல்லப்படுவது உண்மையா? இதனால் தமிழக அரசுக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு கோடி ரூபாய்? இந்த இழப்புக்கு யார் காரணம்? மின்சார வாரியமா? தலைமைச் செயலக உயர் அதிகாரிகளா? தி.மு. கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தை முறைப்படி அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றியிருந்தால் தமிழகத்தில் மின் பற்றாக்குறை ஏற்பட்டிருக்காது அல்லவா? அவ்வாறு மின் பற்றாக் குறை ஏற்பட்டதால் தானே, வெளிச் சந்தையில் அதிக விலை கொடுத்து மின்சாரத்தை தமிழக அரசு வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது? மக்கள் மத்தியில் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விளக்கமளித்திட தமிழக அரசு முன் வருமா? இந்த ஒரு டெண்டரில் மட்டும் நடைபெற்ற ஊழல்கள் குறித்து விருப்பு வெறுப்பற்ற விசாரணை நடத்தப்பட்டால் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும்; இந்த அரசினர் அதைச் செய்வார்களா?” என்றெல்லாம் அடுக்கடுக்கான கேள்வி களைக் கேட்டிருந்தேனே, இந்தக் கேள்விகளுக்கு நத்தம் விசுவநாதனின் நேரடியான பதில்கள் எங்கே? இதற்கெல்லாம் பதிலளிக்காமல், நான் எனது அறிக்கையில் தி.மு. கழக ஆட்சியில் 22-2-2009 அன்று “உடன்குடி பவர் கார்பரேஷன் லிமிடெட்” நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது என்று கூறியிருந்தேன். இந்தத் தகவல் உண்மை என்பதை ஒப்புக் கொண்டுள்ள அமைச்சர், கழக ஆட்சியில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி பெறவில்லை என்றும், நிலம் கையகப்படுத்தும் பணி முடியவில்லை என்றும் தெரிவித்து, அந்தத் தகவல் பொய்யானது என்று தெரிவித்திருக்கிறார். தி.மு. கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டத்தை வேண்டாமென்று கூறிவிட்டுத் தான், அ.தி.மு.க. ஆட்சியில் புதிதாக உடன்குடியில் மின் உற்பத்தித் திட்டத்தைத் தொடங்கப் போவதாக அன்றைய முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவித்து விட்டாரே, பிறகு ஏன் கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம் பற்றிப் பேச வேண்டும்? எனது அறிக்கையிலே நான் கூறியிருப்பது பொய் என்றால், ஜெயலலிதா 2012 ஆம் ஆண்டு அறிவித்த உடன்குடி மின் உற்பத்தித் திட்டம் மூன்றாண்டுகளுக்குப் பிறகு, ஒன்றுமே இல்லை என்றாகி விட்டதா? இல்லையா? இந்தத் தாமதத்திற்கு அ.தி.மு.க. ஆட்சியும், குறிப்பாக இந்தத் துறையின் பொறுப்பை ஏற்றுள்ள நத்தம் விசுவநாதனும் தான் காரணம் என்பது தவறான தகவலா? தி.மு. கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டத்திற்கு நிலம் எடுக்கப்பட்டதாக நான் கூறிய தகவலும் தவறானதல்ல; 2010-2011ஆம் ஆண்டுக்கான இந்தத் துறைக்கான கொள்கை விளக்கக் குறிப்பில் பக்கம் 29இல் “தமிழக அரசு இத்திட்டத்திற்காக புறம்போக்கு நிலத்தை ஒதுக்குவதற்கான ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின் முதல் கட்ட வேலைகள் மற்றும் சட்டப்படி தேவைப் படுகின்ற தடை நீக்கங்கள் பெறுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன”என்று கூறப்பட்டிருப்பதை இப்போதாவது அமைச்சர் எடுத்துப் படித்துப் பார்த்து உண்மையைப் புரிந்து கொள்ளலாம். கழக ஆட்சியில் மின் வாரியத்திற்கு நிலமே ஒதுக்கப்படவில்லை என்று இரண்டாவது பத்தியில் சொல்லிவிட்டு, பின்னர், “மின்வாரியத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை தனியாருக்கு தாரை வார்க்க வழி வகை செய்தது ஏன் என்பதைக் கருணாநிதி விளக்கத் தயாரா?” எந்தத் தனியாருக்கு நான் தாரை வார்த்தேன் என்பது பற்றி அறிக்கையில் எதுவுமில்லை. அவருடைய அறிக்கையைப் படிக்கும் தமிழ்நாட்டு மக்கள் அதில் இருந்தே உண்மையைப் புரிந்து கொள்ளலாம். புள்ளி விவரங்களோடு, தேதிவாரியாக நிகழ்வுகளை எல்லாம் தெரிவித்து; அ.தி.மு.க. ஆட்சியில் கோரப்பட்ட டெண்டரை மூன்றாண்டுகள் கழித்துத் தாமதம் செய்து, இப்போது ரத்து செய்ததற்கு என்ன காரணம், விசாரணைக்குத் தயாரா என்றால், இதற்கு எந்தப் பதிலும் கூறாமல், தி.மு. கழக ஆட்சியைப் பற்றி அமைச்சர் தனது அறிக்கையில் வியாக்ஞானம் செய்து கொண்டிருப்பதில் இருந்தே அவரிடம் பதில் அளிக்க எந்த அடிப்படையும் இல்லை, பதில் அளிக்காவிட்டால் பதவி பறி போய்விடும், தான் என்ன செய்ய முடியும் என்று தவிப்போடு கேட்பது தான் நாட்டிற்குத் தெரிகிறது. 29-11-2014 அன்று இதே நத்தம் விசுவநாதன் அளித்த அறிக்கையிலே, “உடன்குடி அனல் மின் திட்டம் நிறுவ, பொறியியல் கொள்முதல் கட்டுமானப்பணிக்கான ஆணை விரைவில் வழங்கப்படும்; 2018-2019ம் ஆண்டில் மின் உற்பத்தியைத் துவக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று சொன்னாரா இல்லையா? டெண்டர் முடிவு செய்திருந்தால் தானே, பொறியியல் கொள்முதல் கட்டுமானப் பணிக்கான ஆணை விரைவில் வழங்கப்பட்டிருக்க முடியும்; டெண்டர் முடிவு செய்யப்படாமலேயே அமைச்சர் பொய்யான தகவலைத் தந்திருக்கிறார் என்று தானே பொருள்? “டெண்டர் ரத்து செய்யப்பட என்ன காரணம்? “10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத இந்த டெண்டரை ரத்து செய்யவும்” என்று வலியுறுத்தல் வந்தது தான் காரணமா?” என்று எனது அறிக்கையில் தெரிவித்திருந்தேனே, அதற்கு நத்தம் விசுவநாதனின் நீண்ட பதிலில் எதுவும் கூறவில்லையே; அந்தச்செய்தி உண்மை என்பதால் அதை வசதியாக மறந்து விட்டாரா? “டெண்டரில் குறை இருந்ததால் ரத்து செய்தோம்” என்கிறார் மின் துறை அமைச்சர். 2013ஆம் ஆண்டு டெண்டர் கோரி விட்டு, மூன்றாண்டுகள் வைத்திருந்து, ஆணை பிறப்பிக்கப்படப் போவதாகவும் கூறிவிட்டு, அதற்குப் பிறகு டெண்டரில் குறை இருந்தது, ஆகவே ரத்து செய்கிறோம் என்று அமைச்சர் கூறுகிறார் என்றால், காதிலே பூ சுற்றுகின்ற வேலையைச் செய்ய கடுமையாக முயலுகிறார் அமைச்சர் என்று தானே பொருள்!” இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.