ஆந்திர சட்டசபைத் தேர்தலில் போட்டியிட சீட் வாங்கித் தருவதாக கூறி லஞ்சம் வாங்கி ஏமாற்றியதாக மூத்த காங்கிரஸ் தலைவர் ரேணுகா சவுத்ரி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினருமான ரேணுகா சவுத்திரி மீது, கம்மம் மாவட்டத்தை சேர்ந்த ராம்ஜி நாயக் என்பவரின் மனைவி கலாவதி, ஐதராபாத் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு அளித்தார். அந்த மனுவில், கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில், எனது கணவர் ராம்ஜிநாயக்குக்கு கம்மம் மாவட்டத்தில் உள்ள வைரா சட்டமன்ற தனி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் சார்பில் டிக்கெட் பெற்றுத் தருவதாக ரேணுகா சவுத்திரி ரூ.1.10 கோடி வாங்கினார். ஆனால் தேர்தலில் போட்டியிட எனது கணவருக்கு டிக்கெட் பெற்றுத் தரவுமில்லை, வாங்கிய பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. தற்போது இந்த மனவேதனையிலே எனது கணவர் மரணம் அடைந்து விட்டார். மேலும், அந்தப் பணத்தை திருப்பிக் கேட்ட என்னை ரேணுகா சவுத்திரியும், அவரது ஆட்களும் சாதி பெயரை சொல்லி திட்டினர். இதுகுறித்து கம்மம் நான் நகர போலீசில் புகார் செய்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த மனுவோடு, ரேணுகா சவுத்திரிக்கு எந்தெந்த நாட்களில் பணம் கொடுக்கப்பட்டது என்ற பட்டியலையும் அதிகார பூர்வமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததால், நிதிமன்றம் ரேணுகா சவுத்திரி மீது வழக்குப் பதிவுசெய்ய உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடுத்து அவர் மீது, மோசடி, சாதி பெயரைச் சொல்லி திட்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் கம்மம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்ததோடு, அவரது ஆதரவாளர்கள் 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே தன் மீது அரசியல் காழ்ப்பில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார் ரேணுகா சவுத்ரி. அவர், இது குறித்து ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், என் மீதான குற்றச்சாட்டுகளால் நான் பெரிதும் கவலையடைந்துள்ளேன். இது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தொடரப்பட்ட வழக்கு என்று தெரிவித்துள்ளார். ஆனால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த கலாவதியின் ஆவணங்களின் அடிப்படையிலேயே நீதிமன்றம் வழக்கு பதிவு செய்யச் சொன்னதால், ரேணுகா சவுத்ரிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
மோசடி புகார்: காங்கிரஸ் எம்.பி. ரேணுகா சவுத்ரி மீது போலீஸார் வழக்கு பதிவு
காவிரி நதிநீர் ஒழுங்குமுறை ஆணையம் உடனே அமைக்கக் கோரி பிரதமருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்
சென்னை: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணைகளை சட்டவிரோதமாகக் கட்டக்கூடாது என்று கர்நாடகத்திற்கு பிரதமர் ஆலோசனை கூற வேண்டும்; உடனே காவிரி நிர்வாக வாரியம் மற்றும் காவிரி நதிநீர் ஒழுங்குமுறை குழு ஆகியவற்றை அமைக்க நீர்ப் பாசனத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.. தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில்… காவிரி நடுவர் நீதிமன்றம் இறுதியாகப் பிறப்பித்த உத்தரவுக்கு மாறாக கர்நாடக அரசு தொடர்ந்து செயல்படுவதை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருவதற்கான இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். கர்நாடக அரசு மேகதாது அருகே புதிய அணை கட்டுவதற்கு நிதி ஒதுக்கியிருப்பதாக செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் நீர்மின்திட்டம் உட்பட எந்த திட்டத்தையும் காவிரி படுகையில் மேற்கொள்ளக் கூடாது என்று கடந்த 2.9.2013 அன்று ஜெயலலிதா மத்திய அரசுக்கு வலியுறுத்தி கடிதம் எழுதியிருந்தார். எந்த ஒரு திட்டத்துக்கும் ஒப்புதல் வழங்கக்கூடாது என்றும் ஜெயலலிதா அந்த கடிதத்தில் வலியுறுத்தியிருந்தார். அத்துடன் இதனை கண்காணிக்க காவிரி நிர்வாக வாரியம் என்ற நிரந்தர அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுகொண்டிருந்தார்.கடந்த 12.11.2014 முதல் நானும் தங்களுக்கு இதுகுறித்து ஒரு கடிதத் எழுதியிருந்தேன். மேகதாது அருகே இரண்டு அணைகளை கட்டுவதற்கு கர்நாடகா தொழில்நுட்ப ஆய்வு தொடர்பாக உலக அளவில் ஒப்பந்தத்தை கர்நாடகா அரசு கோரியிருந்தது. இது காவிரி நதிநீர் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கு எதிரானது என்றும் குறிப்பிட்டிருந்தேன். குடிநீர் திட்டம் என்ற பெயரில் எந்த ஒரு புதிய திட்டங்களை மேற்கொள்ளக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் 18.11.2014ல் ஒரு வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 5.12.2014 அன்று தமிழக சட்டசபையில் ஒரு தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. கர்நாடக அரசு புதிய அணைகள் கட்டுவதை மத்திய அரசு தலையிட்டு தடுக்க வேண்டும் என்றும் அந்த தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது. கர்நாடக அரசு, தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் தன்னிச்சையாக புதிய அணைகளை கட்டவிருப்பது காவிரி நடுவர் நீதிமன்ற இறுதி தீர்ப்புக்கு முரணானது. எனவே, மேகதாதுவில் கர்நாடகா புதிய அணைகளை சட்ட விரோதமாக கட்டக்கூடாது என்று தாங்கள் தலையிட்டு கர்நாடகா அரசுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். எந்த ஒரு திட்டத்தையும் தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் நிறைவேற்றக்கூடாது என்றும் வலியுறுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். காவிரி நிர்வாக வாரியம் மற்றும் காவிரி நதிநீர் ஒழுங்குமுறை குழு ஆகியவற்றை அமைக்க வேண்டும் என்ற எங்கள் கட்சியின் தலைவர் ஜெயலலிதா மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டும் இதுவரை அது நிறைவேற்றப்படவில்லை. எனவே, உடனடியாக காவிரி நிர்வாக வாரியம் மற்றும் காவிரி நதிநீர் ஒழுங்குமுறை குழு ஆகியவற்றை எந்த தாமதமும் இன்றி அமைக்க மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்துக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். காவிரி நதிநீர் நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு அப்பொழுதுதான் முழுமையாக செயல்படுத்த முடியும் – என்று கூறியுள்ளார்.
இலங்கையில் தமிழிலும் தேசிய கீதம்: சிறிசேன அனுமதிக்கு சுதந்திர கட்சி போர்க்கொடி
கொழும்பு: இலங்கையில் சிங்கள மொழியில் உள்ளது போலவே நாட்டின் இரண்டாவது பெரும்பான்மை மக்களான தமிழர்களின் தாய்மொழியான தமிழிலும் அந்நாட்டின் தேசிய கீதத்தை பாடுவதற்கு அதிபர் மைத்ரிபாலா சிறிசேன தலைமையிலான அரசு அனுமதி அளித்துள்ளது. இதனைக் கண்டித்து ஆளும் இலங்கை சுதந்திர கட்சி போர்க்கொடி தூக்கியுள்ளது. இலங்கையில் 1951-ம் ஆண்டில் இருந்து தமிழ் மொழியிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டு வந்தது. இதற்கு கடந்த 2010-ம் ஆண்டு ராஜபட்ச அரசு தடை விதித்தது. தற்போது ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு பழைய நடைமுறைப் படி, தமிழிலும் தேசிய கீதத்தைப் பாட அதிபர் மைத்ரிபால சிறிசேன ஒப்புதல் அளித்தார். அதிபரின் இந்த முடிவுக்கு ஆளும் இலங்கை சுதந்திர கட்சியின் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் ராணுவ கமாண்டருமான சரத் வீரசேகரா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கருத்து தெரிவித்தபோது… ‘ நமது அரசியலமைப்புச் சட்டத்தின்படி, தேசிய கீதம் நாட்டின் தாய்மொழியில்தான் இருக்க வேண்டும் என தெளிவாக கூறப்பட்டுள்ளது. மைத்ரிபாலாவின் இந்த முடிவு வெறும் 20 லட்சம் (தமிழ்) மக்கள் தொகையை திருப்திப்படுத்தும் செயலாகும். இந்தியாவில் ஆறரை கோடி தமிழ் மக்கள் வாழ்கின்றனர். ஆனால், அங்கு தமிழில் தேசிய கீதம் பாடப்படுவதில்லை’ என்றார். ஆனால், இலங்கை சுதந்திர கட்சியின் தற்போதைய செய்தி தொடர்பாளர் டிலன் பெரேரா. ‘இந்தக் கருத்து சரத் வீரசேகராவின் தனிப்பட்ட கருத்து. கட்சியின் ஒட்டுமொத்த கருத்தல்ல. தமிழிலும் தேசிய கீதம் பாடப்படலாம் என்ற அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவின் மீது நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம். இதைப்போன்ற இனவெறி மனப் போக்கினால்தான் ராஜபட்ச தோல்வியை தழுவினார்’ என்று கூறியுள்ளார்.
ஜம்முவில் மீண்டும் தாக்குதல்: பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொலை
ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று இரண்டாவது நாளாக மீண்டும் அதே சம்பா பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், இருவரும் ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனை ராணுவத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலை மூடல்
தோடா; ஜம்மு காஷ்மீரில் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. இதனால் 3 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் எங்கும் நகர முடியாமல் முடங்கிப் போயுள்ளனர். தொடாவில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள கராரா பகுதியில் நிலச்சரிவு காரணமாக பாதை மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக 400க்கும் மேற்பட்ட வாகனங்கள் நகர முடியாமல் அணிவகுத்து நிற்கின்றன.
காவிரியில் கர்நாடகம் தடுப்பணை கட்டுவதை தடுக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வலிறுத்தல்
சென்னை: காவிரியில் கர்நாடகம் தடுப்பணை கட்டுவதைத் தடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது உள்பட 3 இடங்களில் தடுப்பணைகள் கட்ட முடிவு செய்துள்ள தடுத்து நிறுத்துவது, காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதிநீர் பங்கீட்டு குழு அமைக்க வலியுறுத்துவது ஆகியவை தொடர்பாக ஆலோசிக்க தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் சார்பில் சென்னை ராயப்பேட்டையில் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட்டது. இந்தக் கூட்டத்துக்கு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் திமுக சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன், காங்கிரஸ் சார்பில் பலராமன், பாமக சார்பில் வேலு, ஜெயராமன், த.மா.கா. சார்பில் ஞானதேசிகன், பாஜக சார்பில் தமிழிசை சௌந்தர்ராஜன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் உள்பட கட்சித் தலைவர்களும் பல்வேறு தமிழ் அமைப்பு பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். மீத்தேன் திட்டத்தை எதிர்த்து அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு நின்று வெற்றி பெற்றதைப் போல், காவிரியில் நமது உரிமைகளைப் பெறவும், கர்நாடகம் தடுப்பணைகள் கட்டுவதை தடுக்கவும் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று அனைத்து கட்சியினரும் கருத்து தெரிவித்தனர். அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு வேண்டுகோளுக்கு இணங்க அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
தில்லியில் இ-ரேஷன் கார்டு அறிமுகமாகிறது
புது தில்லி : நாட்டிலேயே முதல் முறையாக அடுத்த வாரம் முதல் இ-ரேஷன் கார்டு முறையை அறிமுகப்படுத்த ஆம்ஆத்மி அரசு முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் ரேஷன் மற்றும் ஆதார் அட்டை திட்டங்கள் ஒன்றிணைக்கப்பட உள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேகதாது அணை குறித்து ஓ.பன்னீர்செல்வம் மோடிக்கு கடிதம்
சென்னை : மேகதாது பகுதியில், காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதை நிறுத்த வேண்டும் என கர்நாடகத்துக்கு பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதி உள்ளார். அந்தக் கடிதத்தில், மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு நிதி திரட்டி வருகிறது என்றும், தமிழக அரசின் அனுமதியின்றி காவிரியின் குறுக்கே அணை கட்ட அனுமதி வழங்கக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விமான நிலையத்தில் இன்றும் கண்ணாடி உடைந்து விழுந்து விபத்து
சென்னை : சென்னை விமான நிலையத்தில் இன்றும் கண்ணாடி விழுந்து விபத்து ஏற்பட்டது. இன்று 37வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்தது. மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு சென்னை விமான நிலையத்திற்கு வருவதற்கு 10 நிமிடங்களுக்கு முன் இந்த விபத்து நடைபெற்றது.
ஆளுநர் ரோசய்யாவுக்கு ஜெயலலிதா யுகாதி வாழ்த்து
சென்னை: தமிழக ஆளுநர் ரோசய்யாவுக்கு தனது யுகாதி வாழ்த்துகளை அதிமுக பொதுச் செயலரும் தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா தெரிவித்துக் கொண்டுள்ளார். இது குறித்து அதிமுக வெளியிட்ட செய்திக் குறிப்பில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், ஜெ ஜெயலலிதா இன்று (21.3.2015), ‘யுகாதி’ திருநாளை முன்னிட்டு, மேதகு தமிழ்நாடு ஆளுநர் முனைவர் கே. ரோசய்யா அவர்களுக்கு மலர்க்கொத்துடன் வாழ்த்துக் கடிதம் அனுப்பினார்கள். அந்தக் கடிதத்தின் விவரம் பின்வருமாறு:- “On the joyous occasion of Ugadi, I convey my best wishes for a very successful and prosperous new year to you, your wife and all the members of your family” தனக்கு வாழ்த்து தெரிவித்த ஜெ ஜெயலலிதா அவர்களுக்கு, தனது நன்றியினை மேதகு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் தெரிவித்துக் கொண்டார்கள். என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

