சென்னை: காணாமல் போன நபர்கள் மற்றும் அடையாளம் தெரியாத இறந்த பிரேதங்களின் விவரங்களை பொதுமக்கள் அறிய வலைதளங்கள் என போலீஸார் அறிவித்துள்ளனர். சென்னை போலீஸார் வெளியிட்ட செய்திக் குறிப்பில்… பொதுமக்கள் தங்களது உறவினர்கள் அல்லது தெரிந்த நபர்கள் காணாமல் போனால் அது குறித்து சம்மந்தப்பட்ட காவல்நிலையங்களில் புகார் கொடுப்பதன்பேரில், வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது போன்று தமிழகத்தில் காணாமல் போன நபர்களின் விபரங்கள் மற்றும் அடையாளம் தெரியாத இறந்த பிரேதங்களின் விவரங்கள் தமிழக காவல்துறையில் உள்ள அந்தந்த மாநகர காவல் ஆணையரகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் சேகரிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு தமிழக காவல்துறையினர் சேகரித்த விவரங்களை கீழ்காணும் வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். ஆகவே, பொதுமக்கள் காணாமல் போன தங்களது உறவினர்கள் மற்றும் தெரிந்த நபர்களின் விவரங்களை i. www.tnpolice.gov.in ii. https://ncrb.gov.in iii. https://eservices.tnpolice.gov.in ஆகிய வலைதளங்களில் சென்று தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் பொதுமக்கள் காணாமல் போன நபர்கள் மற்றும் அடையாளம் தெரியாத இறந்த பிரேதங்களின் விவரங்களை பார்த்து தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டம் முழுமையாக கைவிடப்பட வேண்டும்: இ.கம்யூனிஸ்ட்
சென்னை: மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டம் முழுமையாக கைவிடப்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், காவிரி பாசன மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு முந்திய ஆட்சியாளார்களால் அனுமதிக்கப்பட்டதை எதிர்த்து, காவிரி பாசன மாவட்ட விவசாயிகள், வர்த்தகர்கள், பொதுமக்கள் என அனைத்து பகுதியினரும் எதிர்த்து போராடினார்கள், திட்டத்தை அமுல்படுத்தக்கூடாது முழுமையான ரத்து செய்திட வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தார்கள். இந்நிலையில் நாடாளுமன்ற மேலவையில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுவுத்துறை அமைச்சர் மேந்திர பிரதான், டி.கே.ரெங்கராஜன் எழுப்பிய கேள்விக்கு கிரேட் ஈஸ்டர்ன் என்கிற கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்திற்கு மீத்தேன் எடுப்பதற்கு தமிழ்நாட்டில் மன்னார்குடி பகுதியில் 667 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அனுமதியளிக்கப்பட்டது என்றும், மேற்கண்ட நிறுவனம் தேவையான ஆவணங்களை இதுநாள் வரை சம்பப்பிக்க வில்லை, நினைவூட்டப்பட்ட பிறகும்கூட நிறுவனம் ஆவணங்களை சமர்ப்பிக்க வில்லை. இதற்க்கான காலம் 03.11.2013 முடிந்து விட்டது. ஒப்பந்தக் காரர் இந்த பகுதியில் மீத்தேன் எடுக்கும் நடவடிக்கைகளையும் தொடங்கவில்லை, ஒப்பந்த சரத்துக்களின்படி இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது எனத் தெரிவித்துள்ளார். ஒப்பந்தம் செய்து கொண்ட நிறுவனம், செயல்படுத்தாத காரணத்தால் செயல்படுத்த வில்லை, என்பது போன்று அமைச்சரின் பதில் உள்ளது. மீத்தேன் எரிவாயு எடுக்கப்பட்டால், காவிர் பாசன மாவட்டங்கள் பாலைவனமாகும் என்கிற பேராபாயத்தை மத்திய அரசு உணர்ந்து, திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என்று உறுதியளிக்க வேண்டும். அவ்வாற உறுதியளிக்கப்படும் வரையில் போராட்டம் தொடரும் என்பதனை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் தெரிவித்துக் கொள்கின்றோம்… என்று கூறியுள்ளார்.
மீத்தேன் திட்டத்திற்கு முழுமையாக மூடுவிழா நடத்தப்பட வேண்டும்: ராமதாஸ்
சென்னை: மீத்தேன் திட்டத்துக்கு முழுமையாக மூடுவிழா நடத்தப் பட வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை: நாடாளுமன்ற மாநிலங்களவையில் மீத்தேன் எரிவாயுத் திட்டம் குறித்த வினாவுக்கு விடையளித்த பெட்ரோலியஅமைச்சர் தர்மேந்திர பிரதான், மீத்தேன் எரிவாயு எடுப்பதற்கான ஒப்பந்தம் பெற்ற நிறுவனம் அதற்கான நிபந்தனையை நிறைவேற்றாததால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். காவிரி பாசன விவசாயிகளுக்கு ஓரளவு நிம்மதியளிக்கும் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கதாகும். அதேநேரத்தில், மீத்தேன் எரிவாயு எடுப்பதற்கான ஒப்பந்தத்தை சில தொழில்நுட்ப குறைபாடுகளின் அடிப்படையில் தான் மத்திய அரசு ரத்து செய்யவுள்ளது என்பதும், மீத்தேன் திட்டத்தை கைவிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டவுடன், மத்திய அரசின் நிபந்தனைகளை நிறைவேற்றும் சக்தி கொண்ட வேறு நிறுவனம் இத்திட்டத்தை செயல்படுத்த முன்வந்தால், மீத்தேன் எரிவாயு எடுப்பதற்கான ஒப்பந்தத்தை அந்த நிறுவனத்திற்கு மத்திய அரசு வழங்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எனவே, மத்திய அரசின் அறிவிப்பு தானாக கிடைத்த தற்காலிக நிம்மதி தானே தவிர, டெல்டா விவசாயிகளை அச்சுறுத்தும் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு அல்ல. இந்தத் தீர்வு கூட மத்திய அரசால் கிடைத்தது அல்ல; மீத்தேன் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒப்பந்த்தை பெற்ற கிரேட் ஈஸ்ட்ரன் எனர்ஜி கார்ப்பரேஷன் என்ற நிறுவனம், காவிரி பாசனப்பகுதி விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்கு பணிந்து திட்டத்தைத் தொடங்காமல் பின்வாங்கி ஓடியதால் கிடைத்தது ஆகும். தமிழக விவசாயிகளின் நலன் கருதி மீத்தேன் எரிவாயு திட்டத்தை முழுமையாக ரத்து செய்கிறோம் என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை இத்திட்டம் காவிரி பாசனப்பகுதி விவசாயிகளின் தலைக்கு மேல் கத்தியாக தொங்கிக் கொண்டிருக்கும் என்பது உறுதி. மீத்தேன் திட்டம் செயல்படுத்தப்பட்டால் காவிரி பாசன மாவட்டங்களில் 21 லட்சம் ஏக்கரில் விவசாயம் பாதிக்கப்படும். 667 கி.மீ. பரப்பளவில் செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டத்தால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படும். இவற்றைக் கருத்தில் கொண்டு, விவசாயிகளின் நலனைக் காக்கும் வகையில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும். இதுகுறித்த அறிவிப்பை அனைத்து ஊடகங்களிலும் விளம்பரமாக வெளியிட்டு மக்கள் மனதில் நிலவும் அச்சத்தை போக்க வேண்டும்.
விறுவிறுப்பான நிலையில் அரையிறுதிப் போட்டிகள்
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் அரையிறுதிப் போட்டிகள் தீர்மானமாகியுள்ளன. காலிறுதியில் வெற்றி பெற்ற நான்கு அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. அதன்படி, இதுவரை எந்த லீக் போட்டி, நாக் அவுட் போட்டியில் தோல்வியைத் தழுவாத நியூசிலாந்து, இந்திய அணிகளும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டுள்ள தென்னாப்பிரிக்க அணியும் ஆஸ்திரேலியாவும் தகுதிபெற்றுள்ளன. வரும் மார்ச் 24ஆம் தேதி முதல் அரையிறுதியில், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்க அணிகள் மோதுகின்றன. வரும் மார்ச் 26ஆம் தேதி நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன.
நியூசிலாந்து அபார வெற்றி: அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது
உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில் இன்று நடைபெற்ற நியூசிலாந்து, மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டியில், நியூசிலாந்து அணி 143 ரன் வித்தியாசத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியை வெற்றி கொண்டது. முதலில் பேட் செய்து விளையாடிய நியூசிலாந்து அணி 393 ரன் எடுத்து 394 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. பின்னர் களம் இறங்கிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி, துவக்கம் முதலே அதிரடியாக ஆடியது. ஆனால், சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. கிறிஸ் கெய்ல் அதிரடி காட்டி 33 பந்துகளில் 61 ரன் எடுத்தார். இதில் 8 சிக்ஸ்களும் 2 பவுண்டரிகளும் அடங்கும். சார்ல்ஸ் 3 ரன்னில் ஆட்டம் இழந்ததும், சிம்மன்ஸ் 12 ரன்னிலும், ராம்தின் ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து அணிக்கு பெரிய நெருக்கடியைக் கொடுத்தனர். இருந்தபோதும், இந்த அணியின் ரன் ரேட் அதிகமாகவே இருந்தது. ஓவருக்கு 8 ரன்களுக்கு மேல் எடுத்து வந்தபோதிலும், தொடர்ச்சியாக விக்கெட்களை பறிகொடுத்ததால், அணி 30.3 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 250 ரன்னுக்கு ஆட்டம் இழந்தது. இதை அடுத்து நியூசிலாந்து அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவுடன் மோதுகிறது நியூசிலாந்து.
393 ரன் குவித்து நியூசிலாந்து அணி அபாரம்
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இன்றைய 4வது மற்றும் கடைசி கால் இறுதிப் போட்டியில், நியூசிலாந்து அணியுடன் மேற்கு இந்தியத் தீவுகள் அணி மோதுகின்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட் செய்வதாக அறிவித்து களம் இறங்கியது. நியூசிலாந்து அணியில் துவக்க வீரர் மெகலம் 12 ரன்னுக்கு ஆட்டம் இழந்தார். விலியம்சன் 33 ரன்னில் ரசல் பந்திலும், டெய்லர் 42 ரன்னுக்கு ரன் அவுட் ஆகியும் ஆட்டம் இழந்தனர். ஆண்டர்சன் 15 ரன்னும் எலியோட் 27 ரன்னும் எடுத்தனர். ரோன்ச் 9 ரன்னில் ஆட்டம் இழந்தார். ஆனால், துவக்க வீரராகக் களம் இறங்கிய குப்டில் அதிரடி காட்டி ஆடினார். அவர் இன்று தனது ஒருநாள் போட்டிகளில் அதிக பட்ச ரன்னைக் குவித்தார். 237 ரன் குவித்து அதிகபட்ச ரன்னை எடுத்து சாதனை படைத்தார். அவர் 163 பந்துகள் எதிர்கொண்டு, 11 சிக்ஸர், 24 பவுண்டரிகளுடன் 237 ரன் குவித்தார். இதனால் அணியின் ரன் வேகம் அதிகரித்து 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 393 ரன் என்ற இமாலய இலக்கை அடைந்தது. இருப்பினும், குப்டில் நியூஸிலாந்துக்கு 400 ரன் என்ற அளவைக் கடக்கச் செய்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில், குப்டில் அடித்த 237 ரன் இரண்டாவது அதிகபட்ச ரன். உலகக் கோப்பை நாக் அவுட் போட்டிகளில்,இதுவே அதிகபட்ச ரன் என்பதும் குறிப்பிடத் தக்கது. இதை அடுத்து, 394 ரன் என்ற வெற்றி இலக்கை மேற்கு இந்தியத் தீவுகளுக்கு நிர்ணயித்தது நியூசிலாந்து அணி.
நோபல் விஞ்ஞானி வெங்கடராமன் ராமகிருஷ்ணன் பிரிட்டனின் ராயல் சொசைட்டி தலைவராகிறார்
பிரிட்டனின் புகழ் பெற்ற அறிவியல் கழகமான, ராயல் சொசைட்டியின் அடுத்த தலைவராக, தமிழ்நாட்டில் பிறந்த இந்திய வம்சாவளி விஞ்ஞானியான, வெங்கடராமன் ராமகிருஷ்ணன் நியமிக்கப்பட்டிருக்கிறார். சிதம்பரத்தில் பிறந்து பரோடா பல்கலைக் கழகத்தில் இயல்பியல் துறையில் பட்டம் பெற்ற இவர், பின்னர் அமெரிக்காவின் ஒஹையோ பல்கலைக் கழகத்தில் ஆய்வுப் பட்டம் பெற்றார். கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் ஆய்வாளராகப் பணிபுரியும் ராமகிருஷ்ணன் 2009ம் ஆண்டில் ரசாயனத்துக்கான நோபல் பரிசை கூட்டாக வென்றார். உடலின் செல்களில் புரதச்சத்தை உற்பத்தி செய்யும் ரிபோசோம்களைப் பற்றி அவர் செய்த ஆய்வுகளுக்காக அவர் இந்தப் பரிசை வென்றார். இப்போது அவர் லண்டனில் உள்ள ராயல் சொசைட்டியின் அடுத்த தலைவராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இவர் வரும் டிசம்பரில் இந்தப் பதவிக்கு வருவார். அடுத்த 5 ஆண்டுகள் இவர் பதவி வகிப்பார். இந்தப் பதவி பிரிட்டிஷ் விஞ்ஞான உலகில் மிக முக்கிய பதவிகளில் ஒன்று. ஈர்ப்புத் தத்துவத்தைக் கண்டறிந்த புகழ்பெற்ற விஞ்ஞானி சர் ஐசக் நியூட்டன் இந்தக் கழகத்தின் தலைவராக இருந்தவர்களில் ஒருவர்.
மோடியின் யாழ். பயணத்தில் பாதுகாப்பு குறைபாடு ஏதுமில்லை: அரசு மறுப்பு
அண்மையில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி அங்கு யாழ்ப்பாணத்துக்கு கடந்த 14-ந் தேதி சென்றார். யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்ட வீடுகளை தமிழர்களுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். நிகழ்சிக்குப் பின்னர் அவர் தமது காரில் ஏறுவதற்காக மேடையின் பின்புறமாக வந்த போது பாதுகாப்பு வளையங்களை உடைத்துக் கொண்டு 20 வயது இளைஞர் ஒருவர் அவரை நெருங்கினார். ஆனால் பாதுகாப்புப் படையினர் அவரைத் தடுத்து நிறுத்தி இலங்கை போலீசாரிடம் ஒப்படைத்தனர். பிடிபட்ட இளைஞரிடம் விசாரணை நடத்திய பின்னர் இலங்கை போலீசார் அவரை விடுவித்தனர். இந்தத் தகவலை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளும் உறுதி செய்திருந்தனர். ஆனால் இதை மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சையத் அக்பருதீன் மறுத்துள்ளார். அவர் இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், மோடி சுற்றுப்பயணத்தின் போது எவரும் பாதுகாப்பு வளையத்தை உடைத்துக் கொண்டு அவரை நெருங்கவில்லை. பாதுகாப்பு அதிகாரிகளின் சிறப்பான வளையத்தை எவரும் எளிதில் உடைத்து உள்ளே நுழைய இயலாது. பிரதமர் மோடி யாழ்ப்பாணத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சிக்கான வீடியோ பதிவுகளை பார்த்தாலே இந்தத் தகவல் தவறு எனத் தெரியும்” என்று கூறியுள்ளார்.
கோயில் விழா தகராறில் இளைஞர் வாயில் சிறுநீர் ஊற்றியதாக 6 பேர் கைது
ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே கோயில் விழா தகராறில் வாலிபரை தாக்கி வாயில் சிறுநீர் ஊற்றி கொடுமைப்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மாணவர்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த கருவானூர் கிராமத்தில் பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில் விழா கடந்த 3ம் தேதி நடைபெற்றது. அப்போது, அர்சுனன் தபசு தெருக்கூத்து நிகழ்ச்சியில் அதே ஊரைச் சேர்ந்த துரைராஜ் மகன் அரவிந்தன் (20) மற்றும் அவரது நண்பர் பெரிய கணக்கம்பட்டியைச் சேர்ந்த தினேஷ் (18) உள்ளிட்டோர் பங்கேற்றனர். கருவானூர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி, பள்ளி மாணவர்கள் 6 பேரும் விழாவில் பங்கேற்றனர். இவர்களுக்கும், அரவிந்தனுக்கும் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில், கல்லாவி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இந்நிலையில், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் உள்பட 6 பேரும் கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் சரணடைந்தனர். பின்னர், ஜாமீனில் வெளியே வந்த அவர்கள் மீது கடந்த 13ம் தேதி அரவிந்தன் கல்லாவி போலீசில் மீண்டும் புகார் ஒன்றை அளித்தார். அதில், திருவிழாவின்போது தன்னையும், நண்பர் தினேஷையும் தாக்கி வாயில் சிறுநீர் ஊற்றி கொடுமைப்படுத்தியதாகத் தெரிவித்திருந்தார். இதுகுறித்து கோட்டாட்சியர் சாந்தி உள்ளிட்ட அதிகாரிகள் நேரடி விசாரணை நடத்தினர். இதன் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து நேற்று தேவேந்திரன் (20) மற்றும் கல்லூரி, பள்ளி மாணவர்கள் உள்பட 6 பேரையும் கைது செய்து, ஊத்தங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
வாட்ஸ்-அப்பில் ப்ளஸ் 2 வினாத்தாள் அனுப்பிய ஆசிரியர்கள் 4 பேர் கைது
ஓசூர்: ஓசூரில், தேர்வு மைய அறையில் இருந்து பிளஸ் 2 வினாத்தாளை ‘வாட்ஸ் அப்’பில் அனுப்பியது தொடர்பாக 4 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். கடந்த 18-ந் தேதி கணிதத் தேர்வு நடைபெற்றபோது, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பரிமளம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் உள்ள ஒரு வகுப்பறையில் மொத்தம் 20 மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் 19 பேர் தேர்வு எழுதினர். ஒரு மாணவர் தேர்வு எழுத வரவில்லை. இந்நிலையில், தேர்வு தொடங்கிய சிறிது நேரத்தில் அந்த மையத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றிய ஆசிரியர் மகேந்திரன், தான் வைத்திருந்த செல்போன் மூலம், வினாத்தாளை படம் எடுத்து ‘வாட்ஸ் அப்’ மூலம் மற்றொரு ஆசிரியரான உதயகுமாருக்கு அனுப்பினார். அப்போது, பறக்கும் படை அதிகாரிகள் தேர்வு மையத்துக்குள் வந்து மாணவர்களிடம் சோதனை நடத்திக்கொண்டிருந்தபோது, மைய கண்காணிப்பாளரான மகேந்திரனிடம் ஒருவர் சோதனை செய்தார். அப்போது அவரது பேண்ட் பாக்கெட்டில் செல்போன் இருந்தது தெரியவந்தது. அதை அடுத்து, ஆசிரியர் மகேந்திரனின் செல்போனை அதிகாரிகள் வாங்கிப் பார்த்தனர். அதில் ‘வாட்ஸ் அப்’ மூலம், அப்போது தேர்வு நடந்து கொண்டிருந்த கணிதத்தேர்வின் வினாத்தாள் பிறருக்கு அனுப்பப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் வாட்ஸ் அப் மூலம் தனக்கு வந்த வினாத்தாளை ஆசிரியர் உதயகுமார் மேலும் 2 ஆசிரியர்களுக்கு அனுப்பியது தெரியவந்தது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணம்மாளிடம் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள், பிளஸ்-2 தேர்வு வினாத்தாள்களை ‘வாட்ஸ் அப்’பில் அனுப்பியதாக ஆசிரியர்கள் மகேந்திரன், உதயகுமார் மற்றும் கோவிந்தன், கார்த்திகேயன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். இவர்கள் 4 பேரும் ஓசூரில் பாகலூர் சாலையில் உள்ள ஸ்ரீவிஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களில் கோவிந்தன் மற்றும் மகேந்திரன் ஆகிய 2 பேரிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த மோசடியில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

