Home Blog Page 6206

மீத்தேன் திட்டம் ரத்து: விவசாயிகளின் எதிர்ப்புக்குப் பணிந்தது மத்திய அரசு

புது தில்லி விவசாயிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டம் ரத்து செய்யப்படுவதாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்தார். நேற்று மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் இது தொடர்பாக கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்து பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியபோது, தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் சங்கத்தினர், காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி பிரதமரிடம் அளித்த மனு பெட்ரோலிய துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் மன்னார்குடி பகுதியில் 667 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்துக்காக ‘கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட்’ என்ற தனியார் நிறுவனத்துக்கு உரிமம் வழங்கப்பட்டு இருந்தது. அந்த நிறுவனம் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவது தொடர்பான முக்கிய ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை. மேலும் கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் 3-ந் தேதியுடன் அந்த ஒப்பந்தத்தின் முதல் கட்டம் முடிவடைந்து விட்டது. ஆனால் அந்த பகுதியில் அந்த நிறுவனம் இதுவரை மீத்தேன் எரிவாயு எடுப்பதற்கான நடவடிக்கை எதையும் மேற்கொள்ளவில்லை. எனவே அந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ள ஒப்பந்த உரிமத்தை ரத்து செய்யும் நடவடிக்கையை பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு அமைச்சகம் தொடங்கி உள்ளது. தமிழகத்தில், இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்துக்கு (ஓ.என்.ஜி.சி.) மீத்தேன் எரிவாயு எடுக்கும் உரிமம் எதுவும் வழங்கப்படவில்லை.- என்று கூறினார்.

ஜம்மு தாக்குதல்: பள்ளித் தேர்வுகள் ரத்து

ஜம்மு : ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், சம்பா மாவட்டத்தில் சனிக்கிழமை இன்று காலை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில், வைஷ்ணவி தேவி கோயிலுக்குச் சென்று கொண்டிருந்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர் படுகாயம் அடைந்தார். அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ராணுவ முகாமுக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்தத் தாகுதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருவதால் சம்பா மாவட்ட ராணுவ பள்ளியில் இன்று நடைபெறுவதாக இருந்த 9, 10 மற்றும் 11ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஏமன் மசூதிகளில் தற்கொலைப் படைத் தாக்குதலில் 137 பேர் பலி

yemanசனா: ஏமன் தலைநகர் சனாவில் வெள்ளிக்கிழமை 2 மசூதிகளில் பயங்கரவாதிகள் நேற்று பகல் நடத்திய தாக்குதல்களில் 137 பேர் பலியாகி உள்ளனர். 357 பேர் காயம் அடைந்துள்ளன்ர். ஏமனில் நீண்ட காலமாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. அங்கு தலைநகர் சனாவை ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அண்மையில் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்துள்ளனர். இந்த நிலையில் அங்கு ஷியா பிரிவு முஸ்லிம்களும், ஹவுத்தி கிளர்ச்சியாளர்களும் அடிக்கடி வந்து தொழுகை நடத்திச் செல்கிற அல் பாதிர், அல் ஹாஸ்ஹ¨ஸ் மசூதிகளில் நேற்று பகலில் 4 தற்கொலை படை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத் தாக்குதல்களில் 137 பேர் உடல் சிதறி பலியாகினர். 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த கொடூர தாக்குதல்களுக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. இருப்பினும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் சிலர் தாங்கள்தான் தாக்குதல்கள் நடத்தியுள்ளதாக கூறி உள்ளனர்.

வங்கதேச முஸ்தபா கமால் கருத்துக்கு ஐசிசி மறுப்பு

துபாய்: உலகக் கோப்பை போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தின்போது, ரோஹித் சர்மாவுக்கு வீசப்பட்ட பந்தை நோபால் என்று அறிவித்ததால் எழுந்த சர்ச்சையின் ஒரு பகுதியாக, வங்கதேசத்தை சேர்ந்தவரும் ஐசிசி தலைவருமான முஸ்தபா கமால் விமர்சித்திருந்தார். இதற்கு ஐசிசி விளக்கம் அளித்துள்ளது. ரோகித் ஷர்மாவுக்கு நோ-பால் வீசப்பட்டதாக அம்பயர் அலீம்தார் அறிவித்ததை ஐசிசி தலைவர் விமர்சனம் செய்திருக்க கூடாது, இது துரதிருஷ்டவசமானது என்று ஐசிசி தலைமை செயல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து ஐசிசி தலைமை செயல் அதிகாரி, டேவிட் ரிச்சட்ர்சன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நடுவர் அலீம்தார் நோ-பால் என்று அறிவித்த அந்த குறிப்பிட்ட பந்தை, சிலர் நோ-பால் இல்லை என்கின்றனர். ஆனால், அதை ஆய்வு செய்து பார்த்தபோது, 50-50 வாய்ப்பு இருந்தது தெரியவந்தது. நோ-பால் என்றும் கூறலாம், அல்லது நல்லபால் என்றும் அதை கூற முடியும். எனவே இந்த விஷயத்தில் அலீம்தாரை விமர்சனம் செய்வது விரும்பத் தக்கது இல்லை. ஐசிசி தலைவர் முஸ்தபா கமால், ஐசிசி குறித்து கூறிய சர்ச்சைக்குறிய கருத்து தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். அம்பயர் எடுக்கும் முடிவே இறுதியானது. அதை அனைவரும் மதிக்க வேண்டும். உள்நோக்கத்துடன், ஐசிசி நடந்துகொள்வதாக முஸ்தபா கமால் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரம் இல்லை.

ஏஹி முதம் தேஹி ஸ்ரீக்ருஷ்ணா க்ருஷ்ணா-உடையாளுர்

https://www.youtube.com/watch?v=f0hnxGyvoSY   ஏஹி முதம் தேஹி ஸ்ரீக்ருஷ்ணா க்ருஷ்ணா- மாம் பாஹி கோபாலபால க்ருஷ்ணா க்ருஷ்ணா நந்தகோபநந்தன ஸ்ரீக்ருஷ்ணா க்ருஷ்ணா-யது- நந்தன பக்தசந்தன க்ருஷ்ணா க்ருஷ்ணா கலபகதிம் தர்சய ஸ்ரீக்ருஷ்ணா க்ருஷ்ணா-தவ கர்ணௌ சலய ஸ்ரீக்ருஷ்ணா க்ருஷ்ணா தாவ தாவ மாதவ ஸ்ரீக்ருஷ்ணா க்ருஷ்ணா- நவ்ய நவநீதிமாஹர ஸ்ரீக்ருஷ்ணா க்ருஷ்ணா விக்ரமபலம் தர்சய ஸ்ரீக்ருஷ்ணா க்ருஷ்ணா- விதி சக்ராதிஸந்துத ஸ்ரீக்ருஷ்ணா க்ருஷ்ணா சஞ்சல மணிகுண்டல க்ருஷ்ணா க்ருஷ்ணா சாரு சம்பகநாஸாமௌதிக க்ருஷ்ணா க்ருஷ்ணா பவ்யநடனம் குரு ஸ்ரீக்ருஷ்ணா க்ருஷ்ணா-பல பத்ரஸஹித ஸ்ரீக்ருஷ்ணா க்ருஷ்ணா குங்குமபங்கிலதேஹ க்ருஷ்ணா க்ருஷ்ணா-பக்த சங்கரசரண ஸ்ரீக்ருஷ்ணா க்ருஷ்ணா ஸாது ஸாது க்ருதமிஹ க்ருஷ்ணா க்ருஷ்ணா- லோக- ஸாதகஹிதாய ஸ்ரீக்ருஷ்ணா க்ருஷ்ணா நாரதாதி முனிகேய க்ருஷ்ணா க்ருஷ்ணா-ஸ்ரீமந்- நாராயணதீர்த்தவரத க்ருஷ்ணா க்ருஷ்ணா

“ரவா இட்லி செய்முறை-பெங்களுர்)

download

“ரவா இட்லி செய்முறை-பெங்களுர்)
தேவையான பொருட்கள்:
ரவா – 1 கிலோ
உளுந்து – அரை கிலோ
கடலைப் பருப்பு – 50 கிராம்
புளித்த தயிர் – 100 மிலி
பச்சை மிளகாய் – 50 கிராம்
கேரட் – 2
கடுகு, உப்பு, எண்ணெய், கறிவேப்பிலை, கொத்தமல்லி – தேவைக்கேற்ப
செய்முறை:
உளுந்தை ஊற வைத்து அரைத்துக் கொள்ளுங்கள். ரவாவை, நிறம் மாறும் பதத்துக்கு வறுத்து, உளுந்து மாவோடு சேர்த்து, உப்புக் கலந்து கரைத்துக் கொள்ளுங்கள். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, கடலைப்பருப்பு, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, கேரட் சீவலைப் போட்டுத் தாளித்து, தயிரை ஊற்றிக் கலக்கி, கரைத்து வைத்துள்ள மாவில் ஊற்றிக் கொள்ளுங்கள். விரும்பினால் முந்திரித் துண்டுகளைச் சேர்க்கலாம். பின்னர் வழக்கம் போல இட்லித் தட்டில் ஊற்றி அவிக்க வேண்டியதுதான்

“புளி மாதுளை”

295603_479182172136829_1054166438_n “புளி மாதுளை” சொன்னவர்;ஸ்வாமிநாத ஆத்ரேயன்.

தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன
(கட்டுரையில் ஒரு பகுதி)
 
பெரியவர்களுக்குப் பின்னால் கையைக் கட்டிக்கொண்டு
நிற்கும் தொண்டர் வேதபுரியை யாரோ அழைக்கிறார்கள்.
வேதபுரி முதலில் இதைக் கவனிக்கவில்லை.பெரியவர்கள்
முன்னிலையில் நிற்கும் ஒருவர் கைநீட்டி வேதபுரியின்
கவனத்தை ஈர்க்க விழைகிறார்.
 
அதற்குள் வயதான ஒரு தம்பதி வந்து- இரண்டு
தேங்காய்களையும்,ஆய்ந்த வில்வங்கள் நிறைந்த
குடலையையும் (அவர்களால் இயன்ற உயர்ந்தபட்ச
சமர்ப்பணம்.!) வைத்து வந்தனம் செய்கிறார்கள்.
 
“பெண்ணுக்குக் கல்யாணம் நிச்சயமாயிடுத்தா.?”
என்று கேட்கிறார்கள், பெரியவர்கள்.
 
“பெரியவர்கள் அனுக்ரஹத்தினால், நான் எதிர்பார்த்தபடி
வேதாத்யயனம் பண்ணின ஒரு பையன் கிடைச்சுட்டான்.
நல்ல பரம்பரை, ‘மேலே சாஸ்திரம் வாசிக்கணும். பிறகு
கல்யாணம் பண்ணிக்கிறேன்’ என்றான். அவன் தகப்பனார்
தான் என் ஸ்திதியை ஆலோசிச்சு முடிவு செய்துவிட்டார்.
மேலே படிக்கலாம்னு சொன்ன பிறகு தான் பையன்
சம்மதிச்சான். எல்லாம் பெரியவர்கள் அனுக்ரஹம்.”
 
மறுபடியும் வேதபுரிக்கு ஜாடை செய்கிறார் முன்னால்
நிற்பவர். அப்போது தான் வேதபுரி நிமிர்ந்து பார்க்கிறார்.
தன்னை யாரோ அழைப்பது புரிகிறது. நிற்பவர்கள்
பின்னாலேயே வலம்வந்து வாசற்படி அருகில் போகிறார்.
 
“அவனைக் கூப்பிடு” என்கிறார்கள் பெரியவர்கள்.
வேதபுரி திரும்பி வருகிறார். “கூடத்து முற்றத்திலே ஒரு
அம்மாள் நிற்கிறாள். அவளை அழைச்சுண்டு வா.!”
 
வேதபுரி போகிறார். முற்றத்தில் நிற்கும் அம்மாள்,
“வேதபுரி.! உன்னைத்தான் ரொம்ப நாழியாக எதிர்பார்த்துண்டு
இருக்கேன். இந்தா.! புளிமாதுளை கொண்டு வந்திருக்கேன்.
அதைப் பெரியவர்களுக்கு எப்படி உபயோகப்படுமோ,
அப்படிச் செய்துபோடு” என்கிறார்.
 
“பெரியவா உங்களைக் கூப்பிடறா”என்றார்,வேதபுரி.
 
“யாரெல்லாமோ நிற்கிறாளே.! பெரியவா வெளியே
 வரச்சே தரிசனம் பண்ணி வந்தனம் பண்ணிக்கிறேனே.!”
 
“இல்லை, உங்களை அழைச்சுண்டு வரச்சொல்றா.!
நீங்களே பழங்களைக்கொண்டு வாங்கோ.”
 
பாட்டி மாட்டுக் கொட்டகையில் நுழைகிறாள்.
பெரியவர்கள், தன் எதிரில் நிற்பவர்களைக்
கைஜாடை காட்டி ஒதுக்கிவிடுகிறார்கள்.
 
அந்தப் பாட்டி கூனிக்குறுகி தூரத்திலேயே
பழங்களை வைத்து வந்தனம் செய்கிறாள்.
 
அவள் சொல்கிறாள்.
 
அவளுடைய கணவர், மாமனார்,குமாரர்களைப்
பற்றியும் அவர்களுடைய பக்தி சிரத்தைகளைப்
பற்றியும் பெரியவாள் சொல்கிறார்கள்.
 
“எனக்கு எதுக்கோ, ஒருகாலத்திலே, புளி மாதுளை
தேவைப்பட்டது. அது உடனே கிடைக்கல்லே.எங்கோ
வெகு தூரத்திலேர்ந்து யாரோ கொண்டு வந்து கொடுத்தா.
அதைப் பார்த்துவிட்டு இந்த அம்மாளின் புருஷர்,
எங்கிருந்தோ பதியன் கொண்டு வந்தார்.கொல்லையிலே
வைத்தால் எச்சிற்பட்டு விடும்னு தன் வீட்டுக் கூடத்து
முற்றத்திலே அதை வச்சு வளர்த்தார்.அது காய்க்கக்
காய்க்க-நான் எங்கே போனாலும் அங்கெல்லாம்
கொண்டு வந்து கொடுப்பார். அவ்வளவு சிரத்தை!
அந்தக் கைங்கரியத்தை அவரோடு விட்டுவிடாமல்
இந்த அம்மாளும் கொண்டிருக்கா.”
 
“நீ பார்த்திருக்கிறாயோ, புளி மாதுளை?”
 
“இல்லை”
 
“இது மாதுளையிலே ஒரு விதம். பழுக்கிறது-முத்து விடுகிறது என்றெல்லாம் பார்க்கிறதில்லை
வயிற்றிலே புண் இருந்தால் இதை ஒரு தினுசாப் பக்குவம்
பண்ணிச் சாப்பிடறதுண்டு. ருசிக்காக இதைச் சாப்பிடறதில்லை,
பேரே புளிமாதுளை!” என்று கூறிச் சிரிக்கிறார்கள்.
 
ஈசுவர சிருஷ்டியிலே பலவிதம். மலிவாகக் கிடைத்தால்
அதற்கு அருமை பெருமை கிடையாது. அபூர்வமாகக்
கிடைத்தால் அதுக்குப் பெருமை அதிகம். பழசாப் போன,
நாலு தலைமுறைக்கு முந்திய பித்தளை ஜாடி-பாசி புடிச்சுப்
போச்சு. எத்தனை தேய்த்தாலும் அந்தப் பாசி போகல்லே.
அவ்வளவு பழசு! அதுக்கு ஆயிரக்கணக்காகப் பணத்தை
கொடுத்து வாங்கறா!   ‘நினைவுச் சின்னமாம்!’
 
குபேரன் ஐசுவர்யம் வேறே, அது அளவிலே ஜாஸ்தி.
இந்திரன் ஐசுவர்யம் வேறே அது மதிப்பிலே ஜாஸ்தி.
 
அந்த மாதிரி புளிமாதுளை அபூர்வமான வஸ்து.
 
அபூர்வமான புளி மாதுளை கொண்டு வந்த பாட்டி.
கல்யாணம் நிச்சயம் செய்து கொண்டு வந்த தம்பதி
இருவர்களும் அந்தக் கருணை வெள்ளத்தில்
திளைக்கிறார்கள்

அனைவரும் எதிர்க்கும் நிலம் கையகப்படுத்தும் மசோதா தேவையா? : மத்திய அரசுக்கு கருணாநிதி கேள்வி

valluvarkottam-dmk சென்னை: மத்திய அரசின் நிலம் கையகப் படுத்துதல் மசோதா, தமிழகத்தின் வேளாண் அதிகாரி மரணம் ஆகியவற்றைக் காட்டி, மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து இன்று திமுக சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் பேசினார் அக்கட்சித் தலைவர் கருணாநிதி. அப்போது அவர் பேசியதில் இருந்து… கடல் போன்ற இந்தப் பெரும் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள என்னுடைய உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே, இன்று சென்னையில் வள்ளுவர் கோட்டத்திற்கு அருகிலே மாத்திரமல்ல; தமிழ்நாடு முழுவதும் பல நூறு இடங்களில், திராவிட முன்னேற்றக் கழகமும், அதன் தோழமைக் கட்சிகளும் இணைந்த இது போன்ற கூட்டங்கள் – ஆயிரக் கணக்கிலே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்தக் கூட்டங்களின் எதிரொலி ஏதோ கூடினோம், கலைந்தோம் என்ற நிலைமையிலே முடிவடைய வேண்டும் என்பதல்ல; கூடினோம், நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அரசாங்கத்தை எச்சரித்தோம், எச்சரிக்கைக்குப் பிறகும் அவர்கள், பாடம் பெறாத காரணத்தால் இந்த அரசைத் தமிழ்நாட்டு மக்கள், இந்திய நாட்டு மக்கள், எங்கெல்லாம் ஜனநாயகத்திற்கு மதிப்பு அளிக்கின்ற மக்கள் இருக்கிறார்களோ, அங்கெல்லாம் தங்களுடைய ஆற்றலைக் காட்டி அரசாங்கங்களின் அகம்பாவத்தை வீழ்த்துகின்ற அந்தப் பணியை முடித்தோம் என்ற அளவுக்கு இந்தக் கூட்டங்கள் பயன்படும் என்று நான் நம்புகிறேன். காலையிலிருந்து இன்று மாலை வரையில், ஏன் மாலை முடிய நாட்டின் பல பகுதிகளிலும், ஆயிரக்கணக்கில், இலட்சக் கணக்கில் மக்கள் திரண்டு தங்கள் எண்ணத்தைப் பிரதிபலிக்கிறார்கள். இந்த மக்களுடைய எழுச்சியைக் கண்டு அரசுகள் – அது மாநில அரசாக இருந்தாலும், மத்திய அரசாக இருந்தாலும் அறிவு பெற வேண்டும் – அடக்கம் கொள்ள வேண்டும் – அராஜகத்தை விட் டொழிக்க வேண்டும் என்பது தான் இந்தக் கூட்டங்களின் பிரதான நோக்கம் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். ஜார் என்று ஒரு மன்னன் இருந்தான். அவன் யாருக்கும் அஞ்ச மாட்டேன், யாரையும் மதிக்க மாட்டேன் என்று தானும், தன்னுடைய மனைவியும் பதுங்கியிருந்த அரண்மனைக்குள்ளேயே இருந்து மிரட்டல் விடுத்தான். அவனையும், அவனைச் சார்ந்தோரையும், அவனுடைய துணைவியார் உட்பட குடும்பத்தாரையும் வேரோடுகளையெடுத்து , அந்த நாட்டை சுதந்திர பூமியாக ஆக்கி, சமத்துவ புரியாக ஆக்கி விடுவித்த அந்தப் பெரும் கைங்கரியத்தை, அந்த நாட்டிலே உள்ள சாதாரண சாமானிய ஏழையெளிய மக்கள் தான் செய்து முடித்தார்கள். அதே நிலை எந்த ஒரு அரசுக்கும் வரக் கூடாது என்று நாம் எண்ணுகிற காரணத்தால் தான் கூட்டங்களிலே விளக்க உரைகளோடு நம்முடைய தோழர்கள் காட்டுகின்ற ஆர்வத்தோடு அரசுகளுக்கு எச்சரிக்கைகளைச் செய்கிறோம். அதைப் பொருட் படுத்தா விட்டால், ஜாரின் கதி, ரஸ்புடீனின் கதி இவர்களுக்கும் ஏற்படும் என்பதை இந்த நேரத்திலே நான் வெளிப்படுத்தி, திராவிட முன்னேற்றக் கழகம் மாத்திரமல்ல, தமிழ்நாட்டிலே இருக்கின்ற எல்லா கட்சிகளும், இந்தியாவில் இருக்கின்ற பல்வேறு கட்சிகளும், நடைபெறுகின்ற அக்கிரமத்தை, அராஜகத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் பாடம் போதிக்க வேண்டுமென்று புஜம் தட்டி நிற்கிற காட்சியை இன்றையதினம் நாடு காணுகிறது. அதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? நாடாளுகின்றவர்கள் என்பதைத் தான் இந்தக் கூட்டம் கேள்விக் குறியாக மாறி அவர்களை கேட்கின்ற நிலைமையை எழுச்சி மயமாகத் தெரிவித்துக் கொண்டிருக்கிறது மத்திய அரசில், நிலம் கையகப்படுத்தும் மசோதாவை இந்தியாவிலே உள்ள எல்லா எதிர்க் கட்சிகளும் எதிர்க்கின்றன. அன்னா ஹசாரே போன்ற சமூக ஆர்வலர்களும் எதிர்க்கின்றார்கள். பீகார் மாநிலத்தின் முதலமைச்சர் நிதீஷ் குமார், இந்தச் சட்டத்திற்கு தன்னுடைய எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார். பீகார் மாநிலத்தில் இதை நான் அமல்படுத்தவே மாட்டேன் என்று உறுதி கூறியிருக்கிறார். சோனியா காந்தி தலைமையில் தி.மு. கழகம் உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட கட்சிகள் டெல்லியில் பேரணியாகச் சென்று குடியரசு தலைவரிடம் மனு கொடுத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு சட்டத்தை, நிதீஷ் குமார் போன்ற முதலமைச்சர்களின் நியாயமான வாதங்களைப் புறந்தள்ளி விட்டு நிறைவேற்றத் தேவையா என்பதை மத்திய அரசும், அந்தச் சட்டத்திற்கு ஆதரவாக உள்ள நம்முடைய மாநில அரசும் சிந்தித்துப் பார்க்க வேண்டும் இந்தக் கேள்வியைத் தான் தமிழக அரசுக்கு நான் முன் வைக்க விரும்புகிறேன்.? மத்திய அரசு நிலங்களைக் கையகப்படுத்தும் சட்டத்தைக் கொண்டு வருகிறது. கையகப்படுத்தும் நிலங்களை யாருக்குத் தரப் போகிறோம், ஏழை யெளியவர்களுக்குத் தானே தரப் போகிறோம் என்று ஒரு சிலர் பேசி, எழுதி வருகிறார்கள். நான் அவர்களை யெல்லாம் கேட்க விரும்புகிறேன், நீங்கள் பேசுவதும், எழுதுவதும் உண்மை என்றால், எதற்காக இன்றையதினம் மத்திய அரசினுடைய நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை அமல்படுத்தச் சொல்லி நாடாளுமன்றத்தில் வாக்களிக்கும் அதே நேரத்தில், தமிழகத்திலே உள்ள ஒரு அதிகாரியை மிரட்டி, அந்த அதிகாரியான முத்துக்குமாரசாமியின் தற்கொலைக்குக் காரணமாக ஆகி இப்படியெல்லாம் வேதனைப்படுத்துகிறீர்கள் என்ற இந்தக் கேள்வியைத் தான் தமிழக அரசுக்கு நான் முன் வைக்க விரும்புகிறேன்.? தமிழ் நாட்டைப் பொறுத்தவரையிலே முதலமைச்சராக இருக்கின்ற – மன்னிக்க வேண்டும் – அது யார் என்று தெரியவில்லை முதலமைச்சர் ஜெயாவா? பன்னீரா? என்ற இந்தக் கேள்விக்கு இன்னும் சரியான விடை கிடைக்கவில்லை. ஆனாலும் அவர்கள் உறுதி அளிக்கிறார்கள். இந்தச் சட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று! எப்படி ஆதரிக்கிறார்கள் தெரியுமா? அவர்களுடைய ஆதரவுக்கு என்ன காரணம் தெரியுமா? நாங்கள் இந்தச் சட்டத்தை – இது ஏழையெளிய மக்களை வாட்டு வதாக இருந்தாலும் – குடியானவர்களை, விவசாயிகளை வேதனைப்படுத்து கின்ற சட்டமாக இருந்தாலும் – நாங்கள் இந்தச் சட்டத்தை ஆதரித்து வாக்கு அளிக்கிறோம் என்று ஏன் கூறுகிறார்கள் தெரியுமா? “நாங்கள் வாக்களித்தால் தான், இந்தச் சட்டத்தை ஆதரித்தால் தான் எங்களுடைய கோடிக்கணக்கான ரூபாய் ஊழலை மறந்து விட்டு – அதனை மறைத்து விட்டு – எங்களை நீங்கள் விடுவிக்க முடியும் – எங்களை விடுவிப்பதாக இருந்தால், இந்தச் சட்டத்தை, மசோதாவை நாங்கள் ஆதரிக்கிறோம், வாக்களிக்கிறோம்” என்று ‪ஜெயலலிதா‬ கூறுகிறார் அவர்கள் பேசுகின்ற நா, அதாவது நாக்கு ஒன்றா? இரண்டா? கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு எந்தச் சட்டத்தை – ஜெயலலிதாவின் கும்பல் எதிர்த்ததோ, அதே சட்டத்தை இன்றைக்கு ஆதரித்து வாக்களிக்க வரிந்து கட்டிக் கொண்டு புறப்படுகிறது என்றால், இது தங்களுடைய தனிப்பட்ட சுய இலாபத்திற்காகத் தான் என்பதை எந்த மக்களும், அதுவும் அறிவுள்ள எந்த மக்களும் மறுக்க முடியாது, மறக்க முடியாது. ஆகவே நாட்டில் இன்றைக்கு நடைபெறுகின்ற அநியாயங்கள் ஒரு புறம் இருந்தாலுங்கூட, பொழுது விடிந்து பொழுது போனால் ஊருக்கு ஒரு கொலை, தெருவுக்கு ஒரு கொள்ளை என்ற நிலை நாட்டிலே உள்ளது. யாரை ஏமாற்றலாம் என்று பார்க்கிறாய்? எவரைக் கைது செய்து புரட்சியை அடக்கலாம் என்று கருதுகிறாய்? புரட்சி ஒரு நாளும் தோற்றதில்லை. புரட்சி தோற்பதாக இருந்தால், ரஷ்யாவிலே தோற்றிருக்கும். புரட்சி தோற்பதாக இருந்தால், பிரெஞ்சு நாட்டிலே தோற்றிருக்கும். எந்த நாட்டிலும் தோற்காத புரட்சி இன்றைக்கு தமிழ்நாட்டிலே மட்டுமல்ல, தமிழ்நாடு தழுவி அடுத்து இந்தியா முழுவதும் பரவுகின்ற அந்தப் புரட்சி மதவாதிகளுக்கு ஆதரவாக இருக்கிற கொடூர, வஞ்சக எண்ணம் படைத்த கொடுமையாளர்களை எதிர்க்கின்ற புரட்சி, அந்தப் புரட்சியை அடக்கிவிடலாம் என்று எந்தச் சட்டத்தைக் கொண்டு வந்தாலும், எந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தாலும், எந்த ஆயுதங்களைப் பயன்படுத்தினாலும், அவைகளுக்கெல்லாம் அடங்கிப் போகாது இந்த எழுச்சி என்பதை நான் அவர்களுக்கெல்லாம் தெரிவித்துக் கொண்டு, பழைய வரலாறுகளைப் படித்துப் பாருங்கள்! நடைபெறுகின்ற நிகழ்ச்சிகளையெல்லாம் ஏடுகளிலே கண்டு சிந்தித்துப் பாருங்கள்! அந்தச் சிந்தனைகளுக்குப் பிறகு, இந்த நடமாட்டங்களுக்குப் பிறகு நாடு எங்கே போகிறது? எந்த அளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது? இந்தக் கட்டுப்பாட்டை மீறினால் என்ன ஆகும் என்பதை யெல்லாம் தயவுசெய்து ஆட்சி யாளர்களே, நாம் ஆளுவது உறுதி, இன்றைக்கு நம்மை யாரும் வீழ்த்த முடியாது என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றவர்களே, தயவு செய்து பழைய வரலாறுகளைப் படித்துப் பாருங்கள்! பழைய சரித்திரங்கள் கூறுகின்ற பாடம் என்ன என்பதை எண்ணிப் பாருங்கள்! எனவே அந்தப் பாடங்களைப் படித்த பிறகாவது, அந்த அனுபவங்களை உணர்ந்து பார்த்த பிறகாவது, இனியும் தொடர்ந்து மக்களை வாட்டுவோம் என்று எண்ணாமல், புத்தி புகட்டப்பட்ட நிலைக்கு வாருங்கள்! அமைதியாக ஆட்சி நடத்த முடிந்தால், அதற்கு முன் வாருங்கள், முடியாவிட்டால், எங்களால் ஆட்சி நடத்த முடியாது என்று சொல்லி விட்டு ஓடிவிடுங்கள் என்று ஆணவம் பிடித்த ஆட்சியாளர் களுக்கு, தூங்கு மூஞ்சி ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை செய்து நாம் இந்த மக்கள் கடலுக்கு முன்னால் சபதம் எடுத்துக் கொண்டு விடைபெறுகிறேன்

கருணாநிதி உகாதித் திருநாள் வாழ்த்து

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி உகாதித் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். அவர் வெளியிட்ட வாழ்த்து: ’’தமிழகத்தில் வாழும் தெலுங்கு, கன்னட மொழிகள் பேசும் மக்கள் எமது புத்தாண்டு திருநாளாக ஆண்டுதோறும் கொண்டாடும் “உகாதித்திருநாள்” இந்த ஆண்டில் மார்ச் திங்கள் 21ஆம் நாள் எழுச்சியோடு கொண்டாடப்படுவது அறிந்து மகிழ்கிறேன். தமிழகம் வந்தாரை வரவேற்று வாழவைக்கும் மனவளம் கொண்ட மாநிலம். இந்தியாவின் எந்த ஒரு மாநிலத்தைச் சேர்ந்தவர்க்கும், இங்கு எப்போதும், யாதொரு இடர்ப்பாடும் எவராலும் நேர்ந்ததில்லை; “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்னும் மனப்பான்மை புறநானூற்றுப் பாடலில் மட்டுமல்லாமல், தமிழக மக்களிடம் இன்றும் இயல்பாக மிளிர்வதையே இது காட்டுகிறது. 2001-2006 அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் மறுக்கப்பட்ட உகாதித் திருநாளுக்கான அரசு விடுமுறையை 2006க்குப் பின் மீண்டும் நடைமுறைப்படுத்தியது தி.மு.க. ஆட்சி! தமிழகப் பள்ளிகளில் தெலுங்கு, கன்னடமொழிகள் பயில விரும்பும் குழந்தைகளுக்கு உரிய வசதிகளை ஏற்படுத்தித்தந்தது தி.மு.க. ஆட்சி! தனி வல்லுநர் குழுக்களை அமைத்து, தரமான பாடநூல்களை அவர்களுக்காகத் தயாரித்தும், அவற்றைத் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மூலம் அச்சிட்டும் வழங்கிட வகை செய்தது தி.மு.க. ஆட்சி! பெங்களூரு மாநகரில் 18 ஆண்டுகாலம் திறக்கப்படாமல் மூடிக்கிடந்த அய்யன் திருவள்ளுவர் திருவுருவச் சிலை 9.8.2009 அன்று திறந்து வைக்கப்படவும், அதனைத் தொடர்ந்து 13.8.2009 அன்று சென்னை மாநகரில் கன்னடக் கவிஞர் சர்வக்ஞர் சிலை திறந்து வைக்கப்படவும் ஆவன செய்து தமிழக, கர்நாடக மாநில மக்களிடையே நல்லுறவை வளர்ப்பதில் தனிப்பாத அமைத்தது தி.மு.க. ஆட்சி! அதேபோல சென்னைக்கு வந்து சேரும் கிருஷ்ணா நீர் தமிழக, ஆந்திர மாநிலங்களுக் கிடையிலான நல்லுறவை வலுப்படுத்திட உதவுகிறது. கழக அரசு காலத்தில் புதிதாகக் கட்டப்பட்ட சட்டமன்றப் பேரவை -தலைமைச் செயலக வளாகக் கட்டடத் திறப்புவிழா நிகழ்ச்சிக்கு ஆந்திர, கர்நாடக, கேரள, புதுவை மாநில முதலமைச்சர்களையும் அழைத்து, அண்டை மாநிலங்களுக் கிடையே நல்லிணக்க மனப்பான்மைகளை வளர்ப்பதில் புதிய பரிமாணத்தைப் படைத்தது தி.மு.க. ஆட்சி! தி.மு.க. கடைப்பிடித்து வரும் இத்தகைய உறவு மணப்பான்மையும், உணர்வும் தென்னக மாநிலங்களிடையே மேலும் மேலும் வளம்பெற வேண்டும்; வலுப்பெறவும் வேண்டும். இந்த விழைவோடு கன்னட, தெலுங்கு மொழிகள் பேசும் மக்களுக்குத் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் எனது உளமார்ந்த “உகாதித் திருநாள்” நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்

உ.பி., ரயில் விபத்து: 30 பேர் உயிரிழந்ததாக அறிவிப்பு

ரே பரேலி: உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி அருகே இன்று காலை நிகழ்ந்த ரயில் விபத்தில் 30 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. டேராடூனில் இருந்து வாராணசி சென்ற ஜனதா எக்ஸ்பிரஸ் ரயில் உத்தரப் பிரதேச மாநிலம் ரே பரேலி அருகே வச்ரவானில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பச்ரவாண் ரயில் நிலையம் அருகே சிக்னலை மீறிச் சென்றதால் இந்த விபத்து நிகழ்ந்ததாகத் தெரிகிறது. இதில், பயணிகள் ரயிலின் எஞ்ஜின் மற்றும் இரண்டு பெட்டிகள் தடம்புரண்டன. இதில் இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர். 150 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரண உதவி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரு.50 ஆயிரம் நிவாரணமும் லேசாகக் காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 20 ஆயிரம் நிவாரணமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அருகில் இருந்த கிராமங்களில் இருந்து பொதுமக்கள் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.