அடிலெய்ட்: உலகக் கோப்பை காலிறுதியில் இன்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தானை ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்யத் தீர்மானித்து களம் இறங்கியது. அந்த அணி, ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் துவக்கத்தில் திணறியது. 24 ரன்களில் முதல் 2 விக்கெட்களை இழந்ததால், அந்த அணி பின்னர் ரன் சேர்க்க முடியாமல் மெதுவாக ஆடியது. இருப்பினும் அமிர் சொஹெய்ல் 41 ரன்னும், மிஸ்பா உல் ஹக் 34 ரன்னும் எடுத்து கைகொடுத்தனர். இருப்பினும் பின்னர் வந்த வீரர்கள் சரியாக விளையாடாததால், அந்த அணி 49.5 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 213 ரன்களே எடுத்தது. 214 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி, துவக்கத்தில் பின்ச்சின் விக்கெட்டை இழந்தது. பின்னர், வார்னர் 24 ரன்னும் க்ளார்க் 8 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். இருப்பினும் பின்னர் வந்த வாட்சன் துவக்கத்தில் தடுமாறியபோதும், பின்னர் சுதாரித்து விளையாடினார். ஸ்மித் அருமையாக விளையாடி 65 ரன் எடுத்து விளையாடினார். வாட்சனும் மேக்ஸ்வெல்லும் சேர்ந்து அணியின் வெற்றிக்குத் தேவையான ரன்னை எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி 33.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 216 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இதை அடுத்து, இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதியில் மோதுகின்றன.
மாணவர்கள் காப்பி அடிக்க பெற்றோரே உதவாதீர்கள்: முதல்வர் நிதிஷ் குமார் அறிவுறுத்தல்
பாட்னா: பீகாரில் பொதுத் தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பத்தாம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் காப்பி அடிக்க பெற்றோர், நண்பர்கள், உறவினர்கள் கட்டத்தின் மீது ஏறி நின்று, ஜன்னல்கள் வழியாக பிட்களை உள்ளே எரிந்தும், புத்தகங்களின் பேப்பர்களை உள்ளே வீசியும் மாணவர்கள் தேர்வு எழுத உதவுகின்றனர். இந்நிலையில் இது குறித்த செய்தி இன்று காலை வெளியானது. இதைக் கண்டு, வருத்தப் பட்டு, பெற்றோரே மாணவர்கள் தேர்வில் முறைகேடு செய்ய உதவ வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார். “மாணவர்கள் இந்தத் தேர்வு முடிவில் வழங்கப்படும் சான்றிதழ்களைக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் அடையப் போவதில்ல, ஆனால் அவர்களின் திறமையை வைத்தே முன்னேற்றம் காண்பர்” என்று வெள்ளிக்கிழமை இன்று நடைபெற்ற மெட்ரிக்குலேஷன் தேர்வுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்துக்குப் பின்னர் பேசிய முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்தார். பின்னர் தன் பேஸ்புக் பக்கத்தில் இது குறித்து தகவல் வெளியிட்ட நிதிஷ் குமார், பீகாரில் இருந்து செல்லும் மாணவர்கள் மிகவும் திறமை சாலிகள், உலகம் முழுதும் தங்கள் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால், சில புகைப்படங்கள் அவர்களது தகுதி குறித்து குறைவாக வெளிப்படுத்தி, முறைகேட்டில் ஈடுபடுபவர்களாகக் காட்டியுள்ளது என்று கூறியுள்ளார்.
மகான் ஸ்ரீராமானுஜர் குறித்து டிவி தொடர் எழுதுகிறார் கருணாநிதி
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி கதை, வசனத்தில் மகான் ஸ்ரீராமானுஜர் குறித்த தொலைக்காட்சி தொடர் ஒன்று தயாராகிறது. ராமானுஜரின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர் இந்து மதத்திற்கு ஆற்றிய பங்களிப்பு உள்ளிட்டவற்றை சித்தரிக்கும் வகையில் இந்த தொடர் தயராகிறது. இதனை பிரபல தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர் குட்டி பத்மினி தயாரிக்கிறார். இத்தகவலை குட்டி பத்மினி தெரிவித்துள்ளார். திராவிட இயக்க தலைவர்களில் ஒருவரான கருணாநிதி, சமயத் துறவி ஒருவரின் வாழ்க்கை வரலாறு குறித்து தயாராகும் டிவி தொடருக்கு கதை வசனம் எழுதுவது வியப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார். அதில், என்ன திடீரென்று “ராமானுஜர்” மீது பக்தி ஏற்பட்டு விட்டது ? என் கொள்கை உறுதியை யாரும் ஐயுறத் தேவையில்லை! ஆமாம், உண்மை தான்! “முத்தியோ சிலரின் சொத்தென இருக்கையில் இத்தமிழ் நாடுதன் அருந்தவப் பயனாய் இராமா னுசனை ஈன்றதன்றோ? இந்நாடு வடகலை ஏன்என எண்ணித் தென்கலை ஈன்று திகழ்ந்த தன்றோ?” – என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களே, 1946ஆம் ஆண்டு திருச்சி வானொலிக் கவியரங்கில் ராமானுஜரைப் பாராட்டிப் பாடியுள்ளார். இதில் கொள்கை மாறுபாடு எதுவுமில்லை. ஒருவரைப் பாராட்டுவதாலேயே அவருடைய அனைத்துக் கொள்கைகளையும் ஏற்றுக் கொண்டு விட்டதாகப் பொருள் கொள்ளக் கூடாது. தவத்திரு குன்றக்குடி அடிகளாரையும், கிருபானந்த வாரியாரையும், மதுரை ஆதினத்தையும் – அவர்கள் எல்லாம் சிறந்த ஆன்மீகவாதிகள் என்ற போதிலும், அவர்களின் தமிழுக்காகவும், சாதி மதப் புரட்சிகளுக்காகவும் நாம் ஆதரிக்கவே செய்தோம். குன்றக்குடி அடிகளாரை மேலவை உறுப்பினராகவே நியமித்தோம். கிருபானந்த வாரியாரை எதிர்த்து திருவாரூர் கோயிலிலே கேள்வி கேட்ட நானே, அவருடைய திருவுருவச் சிலையை சேலத்தில் திறந்து வைத்தேன். எனவே “ராமானுஜரின்” வாழ்க்கை வரலாறு என்றதும் எதையெதையோ எண்ணி யாரும் குழப்பம் அடையத் தேவையில்லை என்று கூறியுள்ளார்.
லிங்கா பிரச்னைக்கு முடிவு: தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘லிங்கா’ திரைப்படத்தால் நஷ்டம் ஏற்பட்டதாக விநியோகஸ்தர்கள் எழுப்பிய பிரச்னை முடிவுக்கு வந்துள்ளதாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சங்கத் தலைவர் கலைப்புலி தாணு வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: ஒரு பெரிய தொகையை இழப்பீடாகக் கொடுத்து “லிங்கா’ திரைப்படம் தொடர்பான பிரச்னைக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இந்தத் தகவலை 10 நாள்களுக்கு முன்பே “லிங்கா’ படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் மூலம் எங்களுக்குத் தெரிவித்து விட்டார். அந்தத் தொகையும் எங்களுக்கு வந்து விட்டது. எங்களிடம்தான் உள்ளது. இந்தத் தொகையை விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் பிரித்துக் கொள்வதில்தான் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. எனவே, இனி இந்தப் பிரச்னைக்கும் ரஜினிகாந்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பிரச்னையை சுமுகமாக தீர்த்து வைத்த சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தமிழ்த் திரையுலகின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ரோஹித்துக்கு நோ பால் வழங்கிய அம்பயரின் உருவபொம்மை எரிப்பு: வங்கதேச ரசிகர்கள் மூட் அவுட்!
உலகக் கோப்பை காலிறுதி ஆட்டத்தில் ரோகித் சர்மா ஆட்டம் இழக்க வேண்டிய பந்துக்கு நோ பால் என அறிவித்து ஆட்டம் இழக்காமல் அவர் தொடர்ந்து விளையாடி சதம் அடிக்க விட்டதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கதேச ரசிகர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக அம்பயரின் உருவபொம்மை எரிக்கப்பட்டது. இந்த உலகக் கோப்பை போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் வங்கதேச அணி இந்திய அணியுடன் மோதியது. இதில் வங்கதேச அணி இந்தியாவிடம் படுதோல்வியை சந்தித்தது. இப்போட்டியில் ரோகித் சர்மா ருபெல் ஹூசைனின் ஃபுல்டாஸ் பந்தை அடித்ததில் கேட்ச் கொடுத்தார். ஆனால், நடுவர்கள் அவுட் கொடுக்காமல் அதை நோ பால் என அறிவித்தனர். பந்து இடுப்புப் பகுதிக்கு மேல் ஃபுல்டாசாக வீசப்பட்டதால் இவ்வாறு தெரிவித்தனர். நடுவரின் இச்செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கதேச ரசிகர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நடுவர்கள் இந்திய அணிக்கு சாதகமாக செயல்பட்டதாகக் கூறி நடுவரின் உருவ பொம்மையை தீயிட்டு எரித்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
குஷ்புவுக்கு தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் பதவி: மேலிடம் முடிவு?
சென்னை: தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் பதவி குஷ்புவுக்கு கொடுக்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகின. தற்போது மகளிர் காங்கிரஸ் தலைவராக உள்ள சாய்லெட்சுமியின் பதவிக்காலம் விரைவில் முடிகிறது. எனவே, புதிய நபரை அப்பதவியில் நியமிப்பது தொடர்பாக கட்சி மேலிடம் ஆலோசித்து வருகிறது. இந்நிலையில், அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த நடிகை குஷ்புவுக்கு இதுவரை கட்சிப் பதவி எதுவும் வழங்கப்படவில்லை. இந்நிலையில், மகளிர் காங்கிரஸ் தலைவர் பதவியைப் பிடிக்க குஷ்பு மட்டுமின்றி, விஜயதாரணி எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏ யசோதா, ஹசீனா சையத், ராணி வெங்கடேசன், காங்கிரஸ் தேசியச் செயலாளர் ஜோதிமணி உள்ளிட்டோரும் போட்டியில் உள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது, காங்கிரஸ் கட்சியில் கூட்டம் சேர்க்கும் நட்சத்திரப் பேச்சாளராக குஷ்பு உள்ளதால், அவருக்கே மகளிர் காங்கிரஸ் தலைவர் பதவி வழங்கப் படக் கூடும் என்று தெரிகிறது. முன்னதாக, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குஷ்புவுக்கு நிச்சயம் அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிவித்தார்.
தூத்துக்குடி டூ துபாய்: ரூ.1.81 கோடி மதிப்பு செம்மரக் கட்டைகள் பறிமுதல்
தூத்துக்குடி: தூத்துக்குடி துறைமுகம் வழியாக துபாய்க்கு கடத்த இருந்த செம்மரக் கட்டைகளை சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர். தூத்துக்குடியில் உள்ள ஒரு நிறுவனம் மூலம் தரை விரிப்புகள் ஏற்றுமதி செய்யப்படுவதாகக் கூறி சான்று பெற்று கடந்த 2 ஆம் தேதி துறைமுகத்துக்குச் சென்ற கண்டெய்னரின் சீலை உடைத்து அதிகாரிகள் சோதனை நடத்தியதில் அதற்குள் செம்மர கட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து சுங்கத் துறை அதிகாரிகள் கூறியபோது, கடந்த 2ஆம் தேதி சம்மரக் கட்டைகள் கடத்திய வழங்கில் லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார். இதில் ஈடுபடும் கும்பல் போலியாக கம்பெனிகள் பெயரில் செம்மரக் கட்டைகளை அனுப்பி வைக்கி்ன்றன. இதில் ஈடுபடும் தலைமறைவு கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் அவர்களைப் பிடித்து விடுவோம் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.
பேஸ்புக்கில் கருத்து: மாணவன் கைதுக்கு விளக்கம் அளிக்க உ.பி. அரசுக்குக் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
புது தில்லி: பேஸ்புக்கில் கருத்து தெரிவித்ததற்காக மாணவனைக் கைது செய்தது தொடர்பான வழக்கில், இன்னும் 4 வாரங்களில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உ.பி. அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆளும் சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ஆசம்கானை விமர்சித்து பேஸ்புக்கில் கருத்து வெளியிட்ட 12-ம் வகுப்பு மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் கைதுக்கான காரணம் என்ன என உ.பி. அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மனாலி சின்ஹால் இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நீதிபதிகள் அனில் தவே, ஜே.சலமேஸ்வர், குரியன் ஜோசப் ஆகியார் அடங்கிய அமர்வு முன்னர் இது விசாரணைக்கு வந்தபோது, இது தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு உ.பி. அரசுக்கு இந்த அமர்வு உத்தரவிட்டது. முன்னதாக உச்ச நீதிமன்றத்தில் இன்று காலை, கைது செய்யப்பட்ட மாணவன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “மாணவன் கைது செய்யபட்டு 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு, பின்னர் பிணையில் வெளிவந்தார். இவர் மீது 2000 ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதன் பின்னணியில் அதிகார துஷ்பிரயோகம் உள்ளது. சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்படும் கருத்து தொடர்பான கைது நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுரை குறிப்பு அனுப்பியுள்ளது. அதை மீறி இந்த கைது நடந்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டது. அப்போது உ.பி. அரசு தரப்பு வழக்கறிஞர் குறுக்கிட்டு, “மாணவன் பதிவு செய்த கருத்து தரக்குறைவானது, பதற்றத்தை ஏற்படுத்தக் கூடியது என்பதை நிரூபிக்க அரசிடம் ஆதாரம் உள்ளது. மேலும், கைது செய்யப்பட்ட குறிப்பிட்ட மாணவன் தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்” என்றார். இந்நிலையில், இவ்வழக்கில் தீர்ப்பை தள்ளிவைத்த நீதிபதிகள் 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு உ.பி. அரசுக்கு உத்தரவிட்டது.
10 வயது சிறுமிகள் பலாத்காரம்: 58 வயது ஐஏஎஸ் அதிகாரி கைது
புனே: மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே 10 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்ததாக எழுந்த புகாரின் பேரில் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநில விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எம்.ஹெச்.சாவந்த் என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு 58 வயதாகிறது. அவர் பள்ளி மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. 10 வயதுக்குட்பட்ட அந்தச் சிறுமிகள் கொடுத்த புகாரின் பேரில் ஐ.ஏ.எஸ் அதிகாரி சாவந்தை புனே போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது, குழந்தைகள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளார். அந்த அதிகாரி தங்களை தொடர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக, சிறுமிகள் ஆசிரியையிடம் புகார் அளிக்க, அவர் பள்ளி முதல்வருக்கு தெரிவித்தார். இதனால், இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் ஐ.ஏ.எஸ் அதிகாரியை கைது செய்துள்ளனர்.
ஐ.ஏ.எஸ் அதிகாரி மர்ம மரணம்: சிபிஐ விசாரணை கோரிக்கைக்கு கர்நாடகா முதல்வர் பதில்
பெங்களூரு: கர்நாடகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவி மர்ம மரணம் தொடர்பாக, மாநிலத்திலும் வெளியிலும், சிபிஐ விசாரணை கோரி பல்வேறு போராட்டங்களும் கோரிக்கைகளும் நடந்து வருகின்றன. இந்நிலையில், இது குறித்து பதிலளித்த மாநில முதல்வர், ஆளுநருக்கு அளித்துள்ள அறிக்கையில், இந்த விவகாரத்தில் மார்ச் 23ஆம் தேதி சி.ஐ.டி. அளிக்கும் இடைக்கால அறிக்கையைப் பொறுத்தே சிபிஐ விசாரணை குறித்து முடிவு எடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

