ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தேர்தல் ஆணையம். இதனை தேர்தல் அதிகாரிகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். அதன்படி, வரும் 11ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது என்றும், இதை மீறுபவர்கள் 2 ஆண்டு சிறை தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. மேலும், மண்டபங்கள், வெளியிடங்களில் தங்கியிருப்பவர்கள் குறித்தும் தேர்தல் அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அஜித்தின் என்னை அறிந்தால் முதல் நாள் வசூல் சாதனை
இந்தியாவில் பாக்ஸ் ஆபீஸ் வசூலாக அஜித்தின் ”என்னை அறிந்தால்” படம் ரூ14.05 கோடி வசூல் ஈட்டியுள்ளது. கடந்த 5ம் தேதி அஜீத் நடிப்பில் வெளியான ”என்னை அறிந்தால்” படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழகத்தில் முதல் நாளில் ரூ.10.80 கோடி வசூல் ஆகி சாதனை படைத்துள்ளது. கேரளாவில் 107 திரையரங்குகளில் வெளியாகி, ரூ.1.65 கோடி வசூலாகியுள்ளது. பெங்களூருவில் 39 திரையரங்குகளில் வெளியாகி முதல் நாளில் ரூ. 1.71 கோடி வசூலானது. ஒட்டுமொத்தமாக கர்நாடகாவில் ரூ. 2 கோடி வசூலாகியுள்ளது. ஆந்திராவில் அடுத்த வாரம் படம் வெளியாகிறது. வெளிநாடுகளிலும் இந்தப் படத்துக்கு நல்ல வசூல் வேட்டைதானாம். இருப்பினும் அண்மையில் வெளியான படங்களின் வசூல் சாதனையை என்னை அறிந்தால் படம் முறியடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ரஜினி நடிப்பில் வெளியான ‘லிங்கா’ படத்தின் முதல் நாள் வசூல் ரூ.37 கோடி, இதற்கு அடுத்து விக்ரம் நடிப்பில் வெளியான ‘ஐ’ ரூ.27 கோடி வசூல், அடுத்ததாக விஜய்யின் ‘கத்தி’ ரூ.23 கோடி வசூல் செய்துள்ளதாம்.
மெட்ரோ ரயில் திட்ட தொடக்க விழாவை தாமதப்படுத்துவதா?: ராமதாஸ்
சென்னை: மெட்ரோ ரயில் திட்ட தொடக்க விழாவை தாமதப்படுத்தக் கூடாது என்று அறிக்கை ஒன்றில் பாமக நிறுவுனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தில் கோயம்பேடு-ஆலந்தூர் இடையிலான பாதை அமைக்கும் பணிகள் முடிவடைந்ததை அடுத்து அங்கு எந்நேரமும் ரெயில் சேவையைத் தொடங்க மெட்ரோ ரெயில் நிறுவனம் தயாராக இருக்கிறது. ஆனால், இத்திட்டத்திற்கான தொடக்கவிழா தேதியை தமிழக அரசு இறுதி செய்யாததால் ரெயில் சேவை தாமதம் ஆவதாக கூறப்படுகிறது. கோயம்பேடு-ஆலந்தூர் இடையே மெட்ரோ ரெயில் சேவையை தொடங்குவதற்கான தேதியை தீர்மானிக்கும்படி கடந்த அக்டோபர் மாதமே தமிழக அரசை மெட்ரோ ரெயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டது. ஆனால், தமிழக அரசிடமிருந்து எந்த பதிலும் வராத நிலையில் கடந்த ஜனவரி மாதம் மீண்டும் இதுகுறித்து அரசுக்கு நினைவூட்டப்பட்டது. எனினும், இப்போதும் தமிழக அரசிடமிருந்து இதுகுறித்து எந்த பதிலும் வரவில்லை. இந்த நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டு முதல்வராக பதவியேற்ற பிறகு தான் திறப்பு விழா நடத்தப்படும் என்றும் தெரியவருகிறது. மக்களுக்காகத் தான் அரசு…. மக்கள் முதல்வருக்காக அல்ல… என்பதை உணர்ந்து கோயம்பேடு-ஆலந்தூர் இடையிலான மெட்ரோ ரெயில் பாதை உட்பட தமிழ்நாடு முழுவதும் நிறைவேற்றி முடிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தையும் உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு தமிழக அரசு அர்ப்பணிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திமுக முன்னாள் அமைச்சரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை
சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமியின் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து திருவொற்றியூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திமுக ஆட்சிக் காலத்தில் மீன்வளத்துறை அமைச்சராக இருந்தவர் திருவொற்றியூரைச் சேர்ந்த கே.பி.பி.சாமி. இவருடைய மகன் இனியவன் (வயது 28). இவருக்கு பிரசன்யா என்ற மனைவியும், ஆறு மாத பெண் குழந்தையும் உள்ளனர். தந்தையுடன் திருவொற்றியூர் கே.வி.கே. குப்பம் பகுதியில் கே.பி.பி. சாமி வீட்டிலேயே கூட்டுக் குடும்பமாக வசித்து வந்துள்ளனர். இனியவனுக்கு குடிப் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. நேற்றிரவு குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த அவர் மொட்டை மாடியில் உள்ள தனி அறைக்குச் சென்றுள்ளார். அவருடைய மனைவி மற்றும் குடும்பத்தினர் கீழே உள்ள அறையில் படுத்து தூங்கி உள்ளனர். இன்று காலை விடிந்து வெகு நேரமாகியும் இனியவன் எழுந்து வராததால் அவருடைய மனைவி மாடியில் உள்ள அறைக்குச் சென்று கதவை தட்டியுள்ளார். கதவைத் திறக்காததால் சந்தேகமடைந்த அவர் ஜன்னலைத் திறந்து பார்த்த போது இனியவன் தூக்கில் தொங்கியது தெரிய வந்தது. உடனே அலறியடித்தபடி கீழே வந்து குடும்பத்தினரிடம் பிரசன்யா தகவல் தெரிவித்தார். இது குறித்து வந்த புகாரை அடுத்து திருவொற்றியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். இது குறித்து, கே.பி.பி.சாமி குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தினர். கே.பி.பி. சாமி, அவரது தம்பியும் திமுக கவுன்சிலருமான கே.பி.பி.சங்கர் ஆகியோர் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்காகச் சென்றுள்ளனர். அவர்களுக்கு தகவல் அனுப்பப்பட்ட்டது.
ரேஷன் இலவச அரிசிக்கு பதில் பணம்: புதுவை முதல்வர்
புதுச்சேரி: புதுச்சேரியில் நியாய விலைக் கடைகளில் அரசின் சார்பில் வழங்கப் படும் இலவச அரிசிக்குப் பதிலாக, அவர்களுக்கு ரூ.300 மானியம் பணமாக வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார். ரேஷன் கடைகளில் இலவச அரிசி விநியோகத்தில் ஏற்படும் முறைகேடுகளைத் தடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மோடிக்கு எதிரான மனு: குஜராத் நீதிமன்றத்தில் தள்ளுபடி
ஆமதாபாத்: கடந்த 2012ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் சட்டமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி தாக்கல் செய்திருந்த பிரமாணப் பத்திரத்தில் இடம் பெற்ற விவரங்கள் குறித்து ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த தொண்டர் ஒருவர் குஜராத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அதனைத் தள்ளுபடி செய்து இன்று உத்தரவிட்டது.
பீகார்: மாஞ்சி நீக்கம்; நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராகத் தேர்வு
பாட்னா: பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளக் கட்சித் தலைவர் சரத் யாதவ்வுக்கும், அம்மாநில முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சிக்கும் இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து, அங்கே அரசியல் குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில், மாஞ்சி நீக்கப்பட்டு, மீண்டும் முதல்வராக நிதிஷ் குமார் தேர்ந்தெடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. பீகாரில் ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் இன்று மாலை நடந்தது. இதில், முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து, நிதிஷ்குமார் சட்டசபைத் தலைவராக (முதல்வராக) தேர்வு செய்யப்பட்டார். முன்னதாக, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், பீகாரில் ஐக்கிய ஜனதா தளக் கட்சிக்கு ஏற்பட்ட படுதோல்வியை அடுத்து, முதல்வர் பதவியில் இருந்து நிதிஷ் குமார் ராஜினாமா செய்தார். முதல்வராக ஜிதன் ராம் மாஞ்சியை அவர் முன்மொழிந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
ஹிந்து ஆன்மிக கண்காட்சி சென்னை-2015
[Best_Wordpress_Gallery id=”1″ gal_title=”Hindu-Spiritual-Fair-2015″] சென்னையில் நடைபெற்று வரும் 7 வது ஹிந்து ஆன்மிக கண்காட்சியில்…
நீங்கள் எல்லாருமே திருடாள்!”
“நீங்கள் எல்லாருமே திருடாள்!” “சிரிக்க வைத்தும் சிந்தனையைச் சிறக்க வைத்தும்” ரா.கணபதி. சிவபெருமான் மீது பெரும் பக்தி கொண்டவர். சிவராத்திரி தினத்தில் (2012)சிவநாமம் கூறியபடி அவர் உயிர் பிரிந்தது ஆச்சரியம் என்றனர் உடன் இருந்த அன்பர்கள்.அவரைப் போற்றும் விதமாக வரும் சிவராத்திரி ஃபிப்ரவரி 17 வரை பெரியவா கட்டுரைகள் பழசு,புதுசு தினம் இரண்டு போஸ்டாகும். கட்டுரையாளர்;ரா.கணபதி. தட்டச்சு;வரகூரான் நாராயணன். குருநாதன் முகத்தில் குறும்பு நகை.விளையாட்டுப் பிள்ளை போல் கண்களில் ஓர் ஒளி.எதிரே இருந்தவரிடம் கேட்கிறார்; “இப்போ இங்கே இருந்து போறானே,அவன் பேர் என்ன?” “ஸ்ரீகண்டன்” “இல்லை,அப்படிச் சொன்னால் ஸர்க்கார் அபிப்பிராயத்துக்கு விரோதமாயிடும்.” ஏன் என்று புரியாமல் அடியார் விழிக்கிறார். அவரை விழிக்க விட்டு சிறிது வேடிக்கை பார்த்த பின் பெரியவாள் சொல்கிறார். “திருக்கண்டன்-னு சொன்னாத்தான் ராஜாங்கத்தார் ஒப்புக்கொள்வர்.” அடியாருக்குப் புரிந்து விடுகிறது.பெரியவாளோடு சேர்ந்து அவரும் சிரிக்கிறார். ‘ஸ்ரீ’ என்று வருமிடத்திலெல்லாம் ‘திரு’ என்று மாற்றவேண்டும்; ஸ்ரீரங்கம்,ஸ்ரீபெரும்பூதூர் போன்ற பெயர்களைத் திருவரங்கம்,திருப்பெரும்பூதூர் என்றே இனி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக அன்று காலைதான் செய்தி வெளியாகியிருந்தது. அதனால் ‘ஸ்ரீகண்டன்’ என்று மட்டும் சொல்லலாமா? பெரியவாள், பெரியவாள், “இந்த இடத்திலே ஸ்ரீகண்டனை திருக்கண்டன்-னு சொல்றது தப்பு; தெரியுமோ?” என்று கேட்கிறார். அது எப்படித் தப்பு என்பதையும் விளக்குகிறார். “ஸ்ரீ என்றால் லக்ஷ்மி என்று மாத்திரம் நினைத்துக் கொண்டு,’ஸ்ரீ’யைத் ‘திரு’ ஆக்கு என்கிறார்கள். ஆனால் ‘ஸ்ரீ’ என்பதற்கு வேறே பல அர்த்தங்களும் உண்டு. பாம்பு,பாம்பின் விஷம் இதற்கெல்லாங்கூட ‘ஸ்ரீ’ என்று பெயர்.’மங்கள காரியங்களுக்கு உதவாத செவ்வாய்க் கிழமைக்கு ‘மங்களவாரம்’ என்று பெயர் வைத்த மாதிரி பாம்பை ‘ஸ்ரீ’ என்று சொல்வதுண்டு. “‘ஸ்ரீகண்டன்’ என்றால் லக்ஷ்மியைக் கண்டத்தில் (கழுத்தில்) வைத்துக் கொண்டிருக்கிற மஹா விஷ்ணு என்று அர்த்தமில்லை. மஹாவிஷ்ணு லக்ஷ்மியை வக்ஷ்ஸ்தலத்தில் (மார்பில்)தான் வைத்துக் கொண்டிருக்கிறாரே தவிரக் கண்டத்திலே அல்ல. ஸ்ரீகண்டன் என்றால் ஸரியான அர்த்தம், ஸ்ரீ என்கிற பாம்பைக் கழுத்தில் போட்டுக் கொண்டிருக்கிற அல்லது ஆலஹால விஷத்தைக் கழுத்தில் வைத்துக்கொண்டிருக்கிற நீலகண்டனான பரமசிவன் என்பதே. இப்படி அறிவுச்சுடர் தெறித்த பெரியவாளின் முகத்தில் மறுபடியும் நகைச் சுவையின் பச்சொளி மேவியது. “திருக்கண்டனோ இல்லையோ, அவன் திருடன்” என்றார். மேலும் பரபரப்பூட்டும் விதத்தில், “நீங்கள் எல்லாருமே திருடாள்!” என்றார்.
ஏர்செல்–மேக்சிஸ் வழக்கு: மாறன் சகோதரர்கள் மனு உச்சநீதிமன்றம் தள்ளுபடி
புதுதில்லி: ஏர்செல்–மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி தயாநிதி மாறன், கலாநிதி மாறன் ஆகியோர் அடுத்த மாதம் (மார்ச்) 2–ந்தேதி தில்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டார். இதை எதிர்த்து இருவரும் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அதில் ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான வழக்குகளை விசாரிக்க மட்டுமே சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. ஏர்செல்– மேக்சிஸ் வழக்கு ஸ்பெக்ட்ரம் முறைகேட்டுடன் தொடர்புடையதல்ல. எனவே சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க அதிகாரம் இல்லை. இதனால் சம்மனை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர். இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.பானுமதி, வி.கோபால கவுடா ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து தள்ளுபடி செய்தனர். ஏர்செல் – மேக்சிஸ் வழக்கில் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில்தான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகையும் திருப்திகரமாக உள்ளது. அதன் அடிப்படையில்தான் நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது. எனவே மனுவை தள்ளுபடி செய்கிறோம் என்று தீர்ப்பளித்தனர். சம்மன் அனுப்பியதை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

