நம் அறிமுகத்தின் உதயத்தில் கோளாறோ? உன் அன்பில்லா இதயத்தில் கோளாறோ? நம் பார்வைகளின் பதியத்தில் கோளாறோ? என் இளகியமனம் இதயக்கோளாறில் இப்போது நிற்குதடி! உன் வெள்ளந்திச் சிரிப்பு மின்னல் கீற்றாய்த் தாக்கிய போதெல்லாம் நான் பைத்தியமாய் நினைவழிந்தேன்! நீ நலம்குன்றி நலிந்து முகம் வெதும்பிக் கிடந்த போதெல்லாம்… நான் பத்தியத்தைக் கைக்கொண்டேன்! இரவில் கண்கூசும் சாலை விளக்குகளின் வெளிச்சம்… ஆனாலும், அழகாய்த் தலைகாட்டும் முழுநிலாவை முழுதாய் ரசித்திருப்பேன்… ஆயிரம் பெண்கள் என்னைக் கடந்து போய்விடினும் உன்னை மட்டுமே ரசித்ததுபோல்! பூத்துச் சிரிக்கும் புதுமலர்களின் நாசி துளைக்கும் வாசனை… ஆனாலும், இருவிரலில் பிடித்திழுத்து இதயத்தில் பொருத்திப் பார்க்கும் ரோஜாவை முகர்ந்திருப்பேன்… ஆயிரம் மலர்கள் கொட்டிக்கிடந்தாலும் அழகாய்க் கட்டி உன் கூந்தலில் ஏறியிருக்கும் ஒருமுழம் மல்லியை வாசம் பிடித்ததுபோல்! பார்வையின் ஆழத்தில் உன்னை ரசித்த பின்னே… உலகு பிடிக்கவில்லை! நிலவு பிடிக்கவில்லை! இரவு பிடிக்கவில்லை! மலர்கள் பிடிக்கவில்லை! உன் முகம் அன்றி வேறெதுவும் அழகாய்த் தோன்றவில்லை! ஆனாலும் பெண்ணே… நம் அறிமுகத்தின் உதயத்தில் கோளாறோ? உன் அன்பில்லா இதயத்தில் கோளாறோ? நம் பார்வைகளின் பதியத்தில் கோளாறோ? என் இளகியமனம் இதயக்கோளாறில் இப்போது நிற்குதடி!
இதயத்தின் கோளாறில் இதம்!
கவனக் களவு!
பள்ளிக்கூட வகுப்பறை! வாய்பிளந்து அமர்ந்திருந்தாலும் வாத்தியாரின் வார்த்தை மட்டும் மூளையை முழுதாய் எட்டவில்லை! கவனச் சிதறல்.. கல்லூரிக் காலம்..! பேராசிரியர் போராசிரியராய் மாறிப்போன மர்மம்! ஏழு மலைகளும் ஏழு கடல்களும் தாண்டி நீளும் எண்ண அலைகள்! எங்கோ ஒரு குன்றின் உச்சியில் கோட்டைக்குள் இருக்கும் கூண்டு! அதனுள்ளே வாசம் செய்யும் கிளி! ஏனோ என் உயிர் கிளியின் நெஞ்சில் ஊசலாடுவதாய்… எல்லாம் கவனச் சிதறல்! தியானம் செய் – என்று ஒருவர்.. மனதை ஒருமுகப் படுத்து – என்று ஒருவர்… இதோ இதைமட்டும் யோசி – என்று ஒருவர்…! கடவுள் கதைகள் ஆயிரம் சொல்லி கருத்தைச் செலுத்த கட்டளைகள்… கற்பனைக்குள் அடங்காத மனம் மட்டும் கட்டுப்படாமல் சுற்றித் திரிந்த மர்மம்!
நிமித்தம்.. நேசத்தின் வெளிப்பாடு!
உன் ஒவ்வொரு அசைவுகளையும் ரசித்துப் புதைத்தேன்! என் மனம் புதைகுழியாய்ப் போனது! நினைவுகள் மட்டுமே மீட்புப் பணியில்! அச்சென்ற தும்மல்… அசைந்தாடும் கம்மல்… சுவாசத்தின் சிக்கனத்தால் பலவீனமாய் வெளிக்கிளம்பும் இருமல் காற்று! மூக்குத்திப் பூவின் ஓரத்தில் பட்டு எதிரொளிக்கும் வெளிச்சக் கீற்று! எல்லாம் ரசனைக்குரியவை! ஆசையுடன் மனதில் மோதும்… ஆனந்த எண்ணம்! அந்தக் கணம் நீ தும்முகின்ற போதும்… எனக்கு அது ஆசியளிக்கும் ஆமோதிப்பு! உன்னருகே நானிருந்தும்… உன்னையே நினைத்திருந்தும்… உனக்கு விக்கல் எடுத்து விழி பிதுங்கும்! எனக்கோ திக்கல் திணறல் மூளை குழம்பும்! ஓ… நிமித்தங்கள் எல்லாம் நேசத்துக்கு உட்பட்டவையோ?
இதய சிம்மாசனத்தில்… கொடுங்கோன்மை!
இச்சையுடன் இதமாய்ப் பேச நச்சென்று நாலு வார்த்தை நல்லதாய் சொல்லேன் என்றாள்! அவள்.. அழகும் அமைதியும் தவழ்ந்த காட்டு ரோஜாவாய் கவர்ந்திழுத்தாள்! முட்களாகிய அரணால் என் இதயத்தில் கீறி இரத்தத்தை உறிஞ்சிவிட்டாள்! அவள்… என் முழுதுற்ற காதலின் முடிவற்ற அடையாளம்! அறிவை ஆக்கிரமித்து என் நேரத்தைத் தனதாக்கிக் கொண்டாள்! அவள்… என் கடந்தகாலத்தின் நினைவுகளை அழித்துவிட்டாள்.. என் எதிர்காலத்தின் பயத்தினையும் சிதைத்துவிட்டாள்.. அவள்… என் ராஜாங்கத்தில் சிம்மாசனமிட்டு கொடுங்கோலாட்சி புரிகிறாள்… நடப்பதை முழுதும் விரும்பியே கொடுமையான வேதனையில் என் மனம் நீடித்திருக்கிறதே..!
மறக்கவோ..? நினைக்கவோ..?
பிரிவும் கோபமும் ஒருவரை மறப்பதற்கு அல்ல… அவர்களை அதிகமாக நினைப்பதற்கே..! உணர்வின் உச்சத்தில் உயிர்த்தெழுந்த வார்த்தைகள்! உன்னிடம் இன்று பேசக்கூடாது! உன்முகம் இன்று பார்க்கக்கூடாது! உன்குரல் இன்று கேட்கக்கூடாது! உன்நிழல் இன்று படக்கூடாது! தீர்மானத்தின் சத்தியத்தை தீர்க்கமாய்க் காத்துவிட்டேன்! ஆனால்… உன்னையே அன்று முழுதும் நினைத்தபடி இருந்த மனசை கட்டுப்படுத்தத் தவறிவிட்டேன்! அட… ஆமாம்! பிரிவும் கோபமும் ஒருவரை மறப்பதற்கு அல்ல… அவர்களை அதிகமாக நினைப்பதற்கே..!
செல்வாக்கு இழப்பு !
உன் பார்வை வீச்சில்… பல நாள்கள் பகற்கனவு கொண்டிருந்தேன்! எத்திக்கில் திரும்பினாலும் தித்திக்கும் உந்தன்முகம் வசீகரித்துக்கொண்டே இருக்கும்! நீ புன்னகைத்துப் பார்க்கையில் விழும் கன்னக் குழியில் விழுந்துகிடந்தேன்! தன்னுணர்வின் அச்சத்தால் எழ முயன்று களைத்துவிட்டேன்! கைதூக்கி விடவும் காதல் கனியவில்லை! கவன ஈர்ப்புக்காய் கடத்திய காலங்கள்… காலனின் கயிற்றுக்கு அருகே கொண்டு சென்றுவிடுமோ? கிடப்பில் வைத்ததால் செல்லரித்த காகிதமாய் என் காதல்! மருந்தாகி நோய் தீர்க்கும் என்னை மறுத்து ஒதுக்கிவிட்டாய்! அதன் பயன்பாடு காலாவதியாகி விஷமாகிப் போன தன்மை! இப்போதெல்லாம்… என்னில் இருக்கும் உன் செல்வாக்கை நீ இழந்துவருகிறாய்! என்னுள் இருக்கும் உன் இடம் நிரப்பப்பட்டு வருகிறது! உன் வசீகரிக்கும் குரலை ஐபேடில் அசத்தல் இசை பிடித்துக் கொண்டது..! உன்னைத் தழுவும் இன்பக் கனவை தலையணைகள் ஆக்கிரமித்தன! என் தூக்கத்தைக் கொன்று நீ பிடித்திருந்த இடத்தை நேற்றிரவு ஓர் எலியும்கூடப் பிடித்துக் கொண்டது.. ஆனாலும்… உன்னைச் சுற்றியே உழலும் நினைவுகளை ஆக்கிரமித்து அகற்றிக்கொள்ள வழி தெரியாமல் தவிக்கிறேன்…!
மழைக்குக் காத்திருந்த நிலம்!
மழைக்குக் காத்திருந்த நிலம்போல் வறண்டு கிடந்தது என் உள்ளம்… மழைக் காலமாய் நிலம் குளிர்ந்த வசந்த காலம் வீசிச் சென்றது… அணைகளில் தேக்கிவைத்த நீரெல்லாம் உடைப்பெடுக்கும் உருவகத்தை வழங்கின! உபரிநீராய் வழிந்தோடியது என்னுள்ளே உணர்ச்சிப் பெருக்காய் அன்பின் ஆறு! உணர்வுகளைக் கசக்கிப் பிழிந்தெடுத்த சாறு சொட்டுச் சொட்டாய் கண்ணில் கசிகிறது! குன்றின் மேல் நின்றுகாணும் யானைப் போர் தெருக்களில் குரைத்துத் திரியும் நினைவுகளாய்… உயிரிருக்க வழியுண்டு உவகைக்கு இடமுண்டு எஜமானன் என்றொரு ஜீவனும் உண்டுதான்! வாலாட்டும் மட்டும் வாயில்லா ஜீவனாம்நான் நாவொடு நக்கும்வரை நன்றாய் கவனிப்பும்தான்! எந்தப் பாவி இடையில் வந்தானோ? கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் காலன்போலே! சாளரத்தின் வழியேநான் சாய்ந்துபார்ப்பேன்… சகபாடிகளின் சன்ன ஈனக் குரலும் கேட்பேன்… குளிருக்குள் அடங்கிக்கொண்டு சிறைப்பட்டேன் குதூகலிக்கும் நட்புகளின் சுதந்திரம் கண்டேன்! எத்தனைநாள் உணர்வுப் பிழியலில் உயிர்வாழ்வது? சாளரத்தின் உள்ளுக்குள் சமைந்து போவது? கதிரவனின் அறுபொழுது வெய்யில் காணாமல்! கதைபலவும் அவிழ்த்துவிட்டு வாழ்தல் தகுமோ?
அன்பின் ஒப்படைப்பு!
காலைக் கண்விழிப்பு உன் கனவுகளுடனே! என் தலையணையில் ஏறியது உன் கூந்தலின் வாசம்! காப்பியின் சுவை நாக்கில் தொடும்போது… உன் வார்த்தைக் கசப்பு நெஞ்சைச் சுடுகிறது! வாசலில் விழுந்த செய்தித்தாளின் நாசியைத் துளைக்கும் வாசனை… கண்கள் தேடும் அன்றைய ராசிபலனை! எனக்கு ராசியாகிப் போன உன் ராசியின் பலனை உடனே மேயும்! நல்லதாய் இருந்தால் என் மனம் துள்ளும்! எதிர்மறை என்றால்.. எப்படி சமாளிப்பாய் என சஞ்சலம் கொள்ளும்! என்னைப் பற்றி என்ன கவலை? என்னை உன்னிடம் ஒப்படைத்த பின்னே!
ராதையாய் நான்…
கண்ணனைக் கண்டிடவே நானும் கடுந்தவம் செய்துவந்தேன்! சொப்பனத்தில் வந்து நின்றான் கண்டு சொக்கித்தான் போனேனடி! சட்டெனவே தோன்றிடுவான் பார்த்தால் சடுதியிலே ஒளிந்திடுவான்! கைகூப்பி வேண்டிநின்றால் சற்றே திரைவிலக்கி வெளிவருவான்! சுட்டுவிரல் காட்டிநின்றேன் மனச் சுமைகளை இறக்கிவைத்தேன்! சிரிக்கின்ற அழகுகண்டு நானும் சித்திரமாய் நின்றேனடி! சந்தனமும் பூசிவிட்டேன் முகமும் சந்திரனாய் ஒளிர்ந்ததடி! சூரியனாய்ச் சுட்டெரிக்கும் என்விழிகள் அவனால் சுடர்விளக்காய் மாறுதடி! சங்கெடுத்து முழங்கிநின்றான் நல்லார் சங்கடங்கள் தொலைந்ததடி! சக்திகொண்டோர் தவறிழைத்தால் கையில் சக்கரத்தை எடுத்திடுவான்! சுற்றுகின்ற உலகைஉண்டு வாயில் சூசகமாய்க் காண்பித்தான்! தூண்டில்விழி கண்டபின்னே என்மனத் துயரங்கள் மறைந்ததடி! கண்விழித்து எழுந்துநின்றேன் கனவோ கலைந்தே போனதடி! இக்கனா மீண்டும்காண மனமோ ஏக்கத்தில் தவிக்குதடி! என்ஏக்கம் தீர்த்திடவே கண்ணன் என்னருகில் வருவானடி! கனவினிலே வந்தஅவன் ஒருநாள் காட்சியிலும் நிறைவானடி!

