Home Blog Page 6345

கம்பனைப் பாடுவோம் !

Kambar கம்பநாட் டாரே கவிதயின் வேந்தே எம்மவர் எளியவர் எவருமே போற்றும் பாரதப் புகழைப் பறைசாற் றிடும்ஓர் வீரத் திருமகன் வீரிய வித்தகன் பார்முழு தேத்தும் பாரதப் புதல்வன் பார்ப்பதற் கெளியன் பரதனின் தமயன் எம்குல இறைவன் ராமனின் வாழ்வை வளமாய் வழங்கிய தேவே! வெண்ணெய் நல்லூர் வள்ளல் தயவால் மண்ணது சிலிர்க்கும் மகிமைக் கதையால் தெய்வத் தீந்தமிழ் தேனாய்ப் பாய்ந்திட உய்வு பெற்றே உயர்ந்ததும் தமிழே! கலைமகள் அருளைக் கவிவழி பெற்றே சிலைபோல் சமைந்த சிறியரும் தமிழ்க்கவித் திறத்தில் சிறந்து தழைக்க சரஸ்வதி அந்தாதி தந்த தேவே! கம்பன் என்றால் கற்பனைக் களஞ்சியம் நம்போல் பலரும் நவில்வது கேளீர் முப்பெரும் வேந்தரும் முழுதாய் விரும்பும் ஒப்பிலா வித்தகர் ஒளிர்வது கவியில்! அன்றலர் மலர்க்கு அண்ணல் விழிதனை சொன்னதே போதும் சோற்றுக் கொருபதம் காவிரிப் பெருக்கு அடங்க பாவிரித் தருளிப் பாடிய தேவே! ராமனின் கதையை ரங்க நாதனின் தாமரை விழியாள் சந்நிதி முன்னே அரங்கேற் றிடும்முன் அற்புதக் கவியாய் அரவில் துயிலும் அரங்கன் சொல்லால் நம்மாழ் வாரை நயமுடன் போற்றி அம்பாய் வந்தது அந்தா தியுமே! கம்பநின் ராம பக்தியில் எம்மவர்க் கொருதுளி தந்திடும் தேவே!!

சிறை மீட்க வாராயோ..?

cellrender04 அன்று…! தனிமைத் தவம் அன்று…! ஆரவாரம்! கூச்சல்! அமைதியின்மை! சத்தங்களினிடையே சந்தம் பழக்கினேன்… தனிமையைத் தேடி ஏங்கியது மனம். தனிமை கிடைத்தபாடில்லை! தவம் தொடங்கியபாடில்லை! இறைவனை இருத்தி இயங்க வேண்டும்! இறைஞ்சிக் கிடந்தே இருக்கத் தொடங்கினேன்! ஆனாலும்… தனிமை கிட்டிய பாடில்லை! தவமும் முட்டிய பாடில்லை! இன்று..! செல்லரிக்கும் தனிமைதான்! அமைதி தவழும் பூக்காடு மனசு மரத்துவிட்ட மயானத் தோற்றம்! தனிமை தவிர்க்க தவியாய்த் தவித்தேன்! ஆரவாரத்தை நோக்கி அலைந்தது மனம்! நன்றாய்த்தான் முகம் காட்டினாள்! நாள்கள் சிலநூறு கடந்து விட்டது! நாணமும் சிலநாளில் நகர்ந்து விட்டது! அவள்… நன்றாய்த்தான் முகம் காட்டினாள்! நாணலாய் நானும் வளைந்து கொடுத்தேன்! அன்பை போதிக்கும் ‘டீச்சர்’ என எண்ணி..! ஆனாலும்… ஒவ்வொரு நொடியும் ‘டார்ச்சர்’ தான்! சிந்தையில் புகுந்து துவம்சம் செய்கிறாள்! நான் செய்த குற்றம்… இதயவாசல் கதவு திறந்து இருத்தி வைத்தேன் உள்ளுக்குள்! எனக்கான தண்டனை..! தனிமைச் சிறையில் கைதியானேன்..! நாட்கள்தான் நகர்கின்றன… சிறைமீட்க வருவாளோ..? சிந்தையை மீட்டுத் தருவாளோ…?

கொள்ளல் – கொல்லல்

piclady கொள்ளலும் கொடுத்தலும் எள்ளலும் ஏந்தலும் அன்புடையோர் இலக்கணம்! “என்னைக் கொள்” என் அன்பே…! பல முறை பகன்றாலும் பலன் மட்டும் இல்லவே இல்லை! உதடுகள் ஒட்டாத தன்மை உயிரோட்டம் இல்லாத வெறுமை! நாவுக்கும் உதட்டுக்குமே ஒட்டுறவு இல்லையே! என்னால் மனத்தில் நிறுத்த முடியாது – என்னை! என்னாள் மனத்தில் புகுத்த முடியாது – தமிழை! என்னாழ் மனத்தில் விலக்க முடியாது – அவளை! ல-வுக்கும் ள-வுக்கும் வேறுபாடு காட்டின் லவ்வுக்கும் ளவ்வுக்கும் போகும் எண்ணம்! அட… ‘என்னைக் கொள்’ என் அன்பே! நாள்கள் நகர்ந்தாலும் நால்கல் மாறவில்லை! ல் என்றே இயம்பி என்னை இல்லாமல் ஆக்குகிறாள்… கொன்று தின்னும் சாகசமோ?

ஈரமிலா மண்ணும் மனிதனும்!

courtallamwall நீரின்றி அமையாது உலகு சொல்லி பயன் என்? வரண்ட பூமி வற்றிய கிணறு ஏற்றக் கலனில் கரையான் கலன்பிடித்த தோள்களில் ஏக்கம் குளம்பு தேய்ந்த நிலையில் நுரைதள்ளிய காளைகள் பாளம் விட்ட நிலத்தில் இரைதேடும் நாரைகள் பசுந்தாள் தலையசைத்த நினைவு பாசத்தால் தலைகுனிந்த நனவு! அத்தியாவசியத் தேவைப் பட்டியலில் முதல் தேவை இங்கிருந்துதான் பூர்த்தியாகும்! உணவு…! உணவு..! உணவு..! இனி  எல்லாம் கனவு..! கனவு..! கனவு..! மூன்றாம் தேவையை முடித்துவைக்க முண்டியடித்து வருகிறார்கள் இதோ… உறைவிடமாம்! இல்லை இல்லை.. காசை வீசி நிலத்தை தரிசாய்ப் போட்டுவைக்க … காரேறி வருகிறார்கள்… இதோ… ரியல் எஸ்டேட்காரர்கள்! பாளம் பாளமாய் வெடித்த பூமி பிளாட்டு பிளாட்டாய் தரிசாகிப் போகும்! சந்ததிக்கும் சுகத்துக்கும் பெண்ணைத் தேடி பந்தம் விதைக்கும் மானிடா… பயிருக்கும் நிலத்துக்கும் பந்தத்தை அறுத்து பணத்தாசை கொண்டாயே! நெஞ்சமதில் ஈரமிலா மனிதர்தாம் பஞ்சத்தால் ஈரமிலா மண்ணும்தான்!

கவிஞர் வாலியின் நினைவு நாளில்…

vali ‘மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்… பொய் ஒன்று சொல் கண்ணே… என் ஜீவன் வாழும்’ – வாலியின் கற்பனை வரிகள் ! ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நான் தான் என்று அந்த சொல்லில் உயிர் வாழ்வேன் – வாலியின் பாதிப்பில் வைரமுத்துவின் வரிகள்! “நான் உன்னை நேசிக்கிறேன்” என்று நீ ஒரு பொய் சொன்னாலே போதும்… என் நாசிக்காற்று சூடாகி இதயம் குளிரும்.. என் உயிர் சுவாசம் உன்னிலிருந்து வெளிப்படும் அந்த ஒற்றைச் சொல் காற்று! – இருவரிடமும் கடன் பெற்று என்னில் எழுந்த வரிகள்! வாலியின் முதலாம் ஆண்டு நினைவு நாள்! என் கவிதாஞ்சலியும் சேர்ந்து..!

நான்… வெறுக்கிறேன்!

isai நான்… தீமையை வெறுக்கிறேன்… தீமை செய்தவர்களை அல்ல.. நான்… தவறுகளை வெறுக்கிறேன்… தவறு செய்பவர்களை அல்ல… நான்… பாபத்தை வெறுக்கிறேன்… பாபம் செய்தவர்களை அல்ல… நான்… தீச்சொற்களை வெறுக்கிறேன்.. தீச்சொற்கள் உதிர்த்தவர்களை அல்ல… ஆத்மா… புனிதமானது; அன்பு மயமானது. இன்று தீமை செய்பவர்கள் நாளை நன்மை செய்யலாம்… அன்றும் நான்… நன்மையைக் கொண்டாடுவேன்… நன்மை செய்தவனை அல்ல!

உன்னிலும் என்னிலும் பிரதிபலிக்கும் ஆடி !

rain_window நீயும் நானும்… அன்பால் வளர்த்த காதலைவிட… நம் கோபங்கள் நமக்குள் வளர்த்த காதல் அதிகம்! உனக்கும் எனக்கும் விருப்பத்தால் மனசு ஒட்டியதை விட நம் வெறுப்புகளால் நமக்குள் வளர்ந்த காதல் அதிகம்! காதலின் இலக்கணமாய்.. எப்போதும் உழலும் உன் நினைவுகள்… ராதையும் மீராவுமாய் இல்லாமல்… கம்சனும் சிசுபாலனுமாய்! கோபமும் வெறுப்பும்கூட உன்னையே என் நெஞ்சில் உழலவைத்துக் கொண்டிருக்கிறது! அட.. இதென்ன காதல்?! என்னில் உன்னையும் உன்னில் என்னையும் பிரதிபலிக்கும் கண்ணாடியாய்… கோபம்!

விடியலும் வீணே !

kavithai1 களைத்த கண்கள்… துளைத்த பார்வை இளைத்த இடை சளைத்த நடை கனவிலும்கூட இப்படியே காட்சியும் தருவாயோ? காலை விழித்தும் என் கண்கள் சோர்வாய்… கதிரவன் விரைவாய்க் கடந்தும் என் உற்சாகத் துள்ளல் தொலைய… விடியல் வீண் என விருப்பமின்றிக் கிடக்கின்றேன்!

எனைவிட்டு விலகாத என் காதலியே!

fone முகத்திரை விலக்கி உன் மேனியின் துகில் கலைக்கிறேன். நீ துயில் கலைந்து ஒளிர்ந்தாய். உன் மெல்லிய மேனியில் என் கை விரல்கள் கோலம் போட… என் ரகசியங்களை எனக்கே தெரிய வைத்தாயோ? என் பார்வை எப்போதும் உன் மீதடி… உன் வசீகரிக்கும் ஒளியால் என் கண்ணொளி காணாமல் போகுதடி என் கண்மணியே…. என் மனம் எப்போதும் உன் குரலுக்காக ஏங்கிக் கிடக்குது பார்! மௌனத்தின் வலியை நீ அறியாயோ? சகியே.. எனை வதைகின்றாய் ..! மின்சாரத் தழுவல் … சூடேற்றும் சேமிப்புக்கலன்… நினைவலைகள் உன்னாலே நெஞ்சத்தில் மோதுதடி.. விரல்கள் பரபரத்து உன் மேனியில் உரசிப் பார்க்க… விளங்காத உலகத்தை விளக்குகிறாய்… எனை விட்டு என்றும் விலகாத அடி என் ஸ்மார்ட்ஃபோன் பெண்ணே!

கருணை மழை !

rain_window உனக்காக ஏங்கித் தவித்தேன்.. வருகையை முழக்கத்துடன் தெரிவித்து வான் விட்டு இறங்கி வந்தாய்… சன்னமாய்த் தூறியபோது சன்னலின் கதவுகள் திறந்தே கிடந்தன… வரவேற்காது கிடந்தேனோ? வலிமையைக் காட்டிவிட்டாய்! என் பார்வையில் சன்னலுக்கு வெளியே கொட்டியபடி நீ! உன் பார்வையில் சன்னலுக்கு உள்ளே ஒட்டியபடி நான்! கண நேரம்தான்… கருணைமுகம் காட்டி கனமழையாய் நீ கதவைத் தட்டும்போது… பாராமுகத்துடன் நான் பதுங்கியிருக்கலாமோ? கதவு திறந்து வெளியில் வந்தேன்… கருணைமுகம் காட்டினாயோ? உன் கனத்தை என் மீது இறக்காமல்… விருட்டென்று வெறிச்சோடிவிட்டாயே ! மழையே… !