
அதிமுக பிளவு, சசிகலா தண்டனை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு புதிதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் எனும் கட்சியைத் தொடங்கினார் தினகரன். தனது ஆதரவாளர்களுடன் அதில் மன்னனாக இருந்த தினகரன் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் ஆளும்கட்சி, திமுக ஆகியவற்றைத் தோற்கடித்து கட்சிக்கு நம்பிக்கை சேர்த்தார்.

அதன் பின்னர் அடுத்தடுத்து எடுத்த நடவடிக்கைகளால் அவரது கட்சியினரே அதிருப்தியில் உள்ளனர். பலர் கட்சியை விட்டு விலகி வேறு கட்சிகளுக்கு சென்றுவிட்டனர். மக்களவை மற்றும் இடைத்தேர்தல் முடிவுகள் அமமுகவுக்குப் பேரிடியாக விழுந்துள்ளது.

டிடிவி தினகரன் மேல் எழுந்த அதிருப்தியால் செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன், இசக்கி சுப்பையா ஆகியோர் கட்சி மாறிய நிலையில் இது அமுமுகவின் பெறும் சரிவாக பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் கீழ்மட்டத்தில் உள்ள தலைவர்கள் மற்றும் தொண்டர்களும் கட்சியில் இருந்து விலகி மற்றக் கட்சிகளில் சேர்ந்து வருவதால் கட்சியே காணமால் போய்விடும் போல் தெரிகிறது. இப்போதைக்கு தினகரனின் கையில் எஞ்சியிருப்பது வெற்றிவேல், பழனியப்பன், பெங்களூரு புகழேந்தி என வெகுவே வெகு சிலர் மட்டுமே. இவர்களில் புகழேந்தி கடந்த சில நாட்களாக பிசிறு அடிக்கும் வகையில் பேசி வருகிறார்.

இந்நிலையில், தருமபுரி பழனியப்பன் தனது வீட்டு நிக்ழ்ச்சிக்கு திமுக மற்றும் அதிமுகவினரை அழைத்து உபசரித்ததாக தினகரன் காதுகளுக்கு செய்தி சென்ற நிலையில், கட்சி மாறும் யோசனையில் அவர் இருப்பதாகவும் தினகரனுக்கு தகவல் கூறியுள்ளனர்.

இதைக் கேள்விபட்டவுடனே தினகரன் கொஞ்சமும் தாமதம் செய்யாமல் தருமபுரி பழனியப்பனை அழைத்து இது குறித்து விசாரித்தாராம், “அரசியல் வேறு, பர்சனல் வேறு தானே தலைவரே. நான் மாற்றுக் கட்சியில் இருந்தாலும் சொந்த பந்தங்களை அழைத்து நிகழ்ச்சி நடத்துறதுதானே குடும்பத்துக்கு அழகு” என்று பொதுவாக பதில் தந்துவிட்டாராம்.இருந்தாலும் பழனியப்பன் மீது ஒரு கண் வைக்க்கும்படி அறிவுறுத்தியுள்ளாராம் தினகரன்.



