
சென்னையிலிருந்து வியாழக்கிழமை மதுரை வந்த விமானம் தரை இறங்காமல் மீண்டும் வானத்தில் பறந்து, சுமார் 15 நிமிடங்கள் வட்டமடித்துவிட்டு தாமதமாக தரையிறங்கியதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
சென்னையிலிருந்து பயணிகள் விமானம் ஒன்று வியாழக்கிழமை இரவு 9.30 மணிக்கு மதுரை வந்தது. விமான நிலையத்தில் தரையிறங்கும் வேளையில் அந்த விமானம் தரையிறங்காமல் மீண்டும் மேலே சென்று வட்டமடித்து 15 நிமிட தாமதத்திற்கு பின் விமான நிலையத்தில் தரையிறங்கியது.
இந்நிகழ்வால் விமானத்தில் வந்த பயணிகள் அனைவரும் அச்சமும்அதிர்ச்சியும் அடைந்தனர். விமானத்தில் நடிகரும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார், நடிகை ராதிகா, முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் செய்தியாளர்களிடம் இதுகுறித்து கூறியது: சென்னையிலிருந்து புறப்பட்ட விமானம் மதுரை வந்து தரையிறங்கும் நேரத்தில், மீண்டும் சுமார் ஆயிரம் அடிக்கு மேல் உயர பறந்துவிட்டு. சுமார் 15 நிமிடம் தாமதமாக தரையிறங்கியது.

இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டேன். விமானம் தரையிறங்கும்போது விமான ஓடுதளத்தில் (ரன்வே) இருந்து சற்று விலகியதால் மீண்டும் மேலே செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்றனர்.
இந்த விஷயத்தில் விமானியின் சமார்த்தியத்தை பாராட்டு்வதாகவும்,
அதேசமயம் இது விமானியின் தவறா, அல்லது ஏடிசி டவர் மீது தவறா என தெளிவுப்படுத்த வேண்டும் என்றும் கூறினார்..



