
கேரள முதல்வர் பினராயி விஜயன், முதன்முறையாக குருவாயூர் கிருஷ்ணன் கோயிலுக்கு வந்தார்.
கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூர் கோயில் அருகே, கட்டப்பட உள்ள போலீஸ் ஸ்டேசனுக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
விழாவில் முதல்வர் பினராயி விஜயன் பங்கேற்றார்.
தொடர்ந்து கோவிலுக்கு வர வேண்டும் என குருவாயூர் தேவசம்போர்டு தலைவர் கே.பி. மோகன்தாஸ் அழைப்பு விடுத்தார்.
இதனை ஏற்று, குருவாயூர் கோவிலுக்கு, பினராயி விஜயன் முதன்முறையாக வருகை தந்தார்.
முதல்வரை, கோவில் யானைகளான பத்மநாபன், கேசவன் மற்றும் இந்திர சமன் வரவேற்றன.

முதல்வர் வருகையின் போது, ” உதய சமஸ்தானா பூஜை” நடந்து கொண்டிருந்தது.
முதல்வருடன், தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், கே.பி.மோகன்தாஸ் உடன் வந்தனா்.
கோவிலை சுற்றிப் பார்த்த முதல்வர் விஜயன், கோவிலில் நடக்கும் அன்றாட பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
கோவிலில் செய்யப்பட்டிருந்த பிரகாசமான அலங்காரங்களை பார்த்து, இது தான் கடவுள் கிருஷ்ணரின் சன்னதியா என கேட்டார்.
மேலும் முதல்வர் கூறுகையில், இது போன்ற கோவில்கள் கேரளாவில் அரிதாக உள்ளன.

இது போன்ற கோவில்கள் மீது மக்கள் வைத்துள்ள, நம்பிக்கையை பார்த்து, கோவிலுக்கு அதிக பாதுகாப்பு வழங்க அரசு உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்தார்.
கோவில் பக்கத்தில் உள்ள மேல்பத்தூர் அரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியிலும் முதல்வர் விஜயன் பங்கேற்றார்.
இதனிடையே, கோயிலில், முதல்வர் விஜயனுக்கு யானைகள் மூலம் வரவேற்பு கொடுக்கப்பட்டதற்கு, விலங்கின ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கோவில் திருவிழாக்களின் போதே, யானைகள் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது உச்ச நீதிமன்ற உத்தரவு.
ஆனால், முதல்வர் விஜயன் கோவிலுக்கு சென்ற போது, விழாக்கள் ஏதும் நடக்கவில்லை.
இதனால், யானைகள் மூலம் வரவேற்பு கொடுக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவை மீறியதாகும்.
இது குறித்து கவர்னர் மற்றும் மத்திய அரசிடம் புகார் அளித்துள்ளதாக அந்த அமைப்பினர் கூறியுள்ளனர்.
ஆனால், கோயில் நிர்வாகம் இந்த குற்றசாட்டை மறுத்துள்ளது.
இதற்கிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவரும் கடவுள் மறுப்பாளருமான பினராயி, கிருஷ்ணன் கோயிலுக்கு வந்தது பலவித விவாதங்களை கேரளாவில் ஏற்படுத்தி உள்ளது.



