இடி விழுந்ததில் 150 செம்மறி ஆடுகள் பலியாயின.
ஊமைப் பிராணிகள் கூட்டமாக உயிரிழந்த சம்பவம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதோடு ஆடு வளர்ப்பவர்களுக்கு பெரிய நஷ்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
குண்டூர் மாவட்டம் பாபட்ல மண்டலம் மத்திப்பாலம் கிராமத்தைச் சேர்ந்த வீரய்யா, சிவா, முசலய்யா, பாஜி, சீனிவாசராவ் ஆகியவர்களுக்குச் சொந்தமான செம்மறி ஆடுகளை ஆடு மேய்ப்பவர்கள் அக்டோபர் 9ஆம் தேதி மாலை ரயில்வே ட்ராக் அருகில் இருந்த புல்வெளியில் மேய்த்துக் கொண்டிருந்தார்கள்.
அன்று இரவு இடி மின்னலோடு பெரிய மழை பெய்ய தொடங்கியது. ஒரு பேரிடியில் ஒரே இடத்தில் கூடி இருந்த 150 ஆடுகளும் துடிதுடித்து உயிரிழந்தன.
இதன் மூலம் சுமார் 7 லட்ச ரூபாய் நஷ்டமடைந்த ஆட்டு மந்தைகளின் உரிமையாளர்கள் கண்ணீர் விட்டு கதறினர்.
இரவு முழுவதும் புல்வெளியில் அவைகளை மேய விடுவது வழக்கம். அதே போல் செவ்வாய் இரவு அவற்றை மேயவிட்டு புதன் காலை சென்று பார்க்கையில் மந்தையிலிருந்த ஆடுகள் அனைத்தும் இறந்து கிடந்தன. ஆடுகள் இன்சூர் செய்யப்படாததால் அதற்கான இழப்பை ஈடுகட்ட இயலாமல் சொந்தக்காரர்கள் கலங்கி நிற்கின்றனர்.
இதற்கு முன் கிருஷ்ணா மாவட்டத்தில் அக்டோபர் 3ம் தேதி 55 வயதான விவசாயத் தொழிலாளி நாகேஸ்வரராவ் இடி தாக்கி பலியானார். நாகேஸ்வரராவ் வேலை முடிந்து வீடு திரும்பும்போது பெருமழையோடு கூடிய இடி தாக்கியதால் அங்கேயே விழுந்து இறந்து போனார்.
மேலும் இடி மின்னலோடு கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.



