- தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.
- ஆன்லைன் மூலம் மதுபானங்களை விற்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!
தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக் கடைகளை மூடுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், ஆன்லைன் மூலமாக மட்டும் மது வகைகளை விற்றுக் கொள்ளலாம் என்று அனுமதி அளித்தது.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக 3வது முறையாக வரும் 17 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மே 7ம் தேதி முதல் சென்னை தவிர்த்து மற்ற அனைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக் மதுக் கடைகள் திறக்கப்பட்டன.
ஆனால், மதுக்கடைகளை திறக்க அரசு உத்தரவிட்டதை எதிர்த்து பல்வேறு தரப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில், ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகளை திறப்பதால் நோய் தொற்று அதிகரிக்கும் என்று குறிப்பிட்டு இருந்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் வினித் கோத்தாரி, புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் அடங்கிய அமர்வு, பல்வேறு நிபந்தனைகளுடன் மதுக்கடைகளை திறக்க அனுமதி அளித்து இருந்தது. குறிப்பாக, சமூக இடைவெளிகளை முறையாக பின்பற்ற வேண்டும், மது வாங்க வருவோரிடம் ஆதார் அட்டை தகவல்களை பெற வேண்டும், மொத்தமாக விற்க கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.
இருப்பினும், உயர் நீதிமன்றத்தின் உத்தரவை தமிழக அரசு முறையாக செயல்படுத்தவில்லை என்று கூறி, மதுக்கடைகளை மூட உத்தரவிடவேண்டும் என்று மீண்டும் ஒரு வழக்கு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டது. வழக்கறிஞர் ராஜேஷ், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்டவர்களின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதிகள் வினித் கோத்தாரி, புஷ்பா சத்தியாநாராயணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மதுக்கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டனர். மேலும், ஆன்லைனில் மட்டும் மது விற்பனை செய்து கொள்ள அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.
டாஸ்மாக் மதுபான விற்பனை முதல் நாளில் ரூ.172 கோடி என்றும், இரண்டாவது நாளில் ரூ.125 கோடி என்றும் தகவல்கள் வெளியாகின. எனவே இரு நாட்களில் மட்டும் சுமார் 300 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனை ஆன நிலையில், உயர் நீதிமன்றம் மது விற்பனைக்கு திடீர் தடை போட்டிருக்கிறது.