
இரண்டு சக்கர வாகனத்தை அரசு மருத்துவமனைக்குள் அனுமதிக்க மறுத்த காவலாளி மீது தாக்குதல் நடத்திய சம்பவம் கடலூர் மருத்துவமனை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது முதல் கடலூர் அரசு மருத்துவமனைக்குள் வாகனங்கள் ஏதும் அனுமதிக்கப்படுவது கிடையாது. மருத்துவர்களின் வாகனங்கள் மற்றும் அவசர சிகிச்சைக்காக வரும் ஆம்புலன்ஸ்கள் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலையில் இரண்டு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் மருத்துவமனைக்கு வெளியே நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடலூர் அரசு மருத்துவமனைக்கு வந்த 2 பேர் காவலாளியிடம் இரண்டு சக்கர வாகனத்தில் உள்ளே அனுமதிக்க வேண்டும் என கோரியுள்ளனர். அதற்கு வாகனங்கள் அனுமதி கிடையாது என கூறிய காரணத்தினால் இரண்டு பேரும் சேர்ந்து அந்தக் காவலாளியை கடுமையாகத் தாக்கினர்.
மேலும் அந்தக் காவலாளியை துரத்திக் கொண்டு ஓடி அவரை கடுமையாக தாக்கிய நிலையில் அவர் அதே அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் மருத்துவமனை இயக்குனர் இது குறித்து கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் புகார் செய்ததை தொடர்ந்து தாக்கிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.
அரசு மருத்துவமனை காவலாளியை தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.