
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் 11 வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வரும் அக்.26, 27, 28 ஆகிய தேதிகளில் 13 தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னை, புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மத்திய கிழக்கு அரபிக்கடல், கர்நாடக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
இதனிடையே, சென்னையில் கொட்டித் தீர்த்த மழையில் பல இடங்களில் நீர் தேங்கியது.
சென்னை மின்ட் பகுதியில் அமைந்துள்ள மின்ட் பஸ் டெர்மினஸ் மேற்கூரை அமைக்கப்பட்டு சில மாதங்களே ஆன நிலையில் இன்று மழை பெய்தபோது ஆங்காங்கே தண்ணீர் அருவி போல் கொட்டத் தொடங்கியது. இதனால் சிறுவர்கள் அந்த திடீர் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். பஸ் பயணிகள் முழுவதும் நனைந்து நின்றனர். இதை அரசு உடனே சரி செய்யுமா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். மழைக்காலம் வருவதை முன்னிட்டு, அரசு சார்பில் பல இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகின்றன.