“இரண்டாம் குத்து” படத்தின் டீசரை சமூக வலைதளம் உள்பட, அனைத்து ஊடகங்களில் இருந்தும் நீக்க வேண்டும் என்று, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இரண்டாம் குத்து படத்துக்கு நிரந்தர தடை விதிக்கக் கோரி வழக்கு தொடரப் பட்டது. இந்த வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
இந்த விசாரணையின் போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் 32 கட்களுடன் “இரண்டாம் குத்து” படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வசனங்கள், காட்சிகள் ஆபாசமானதாக, இரட்டை அர்த்தம் கொண்டவையாக இருப்பதாகவும், எவ்வித நாகரீகமும், நன்னெறியுமின்றி படத்தில் காட்சிகள் உள்ளதாகவும் சுட்டிக் காட்டினர். குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில் இது போன்ற காட்சியை அனுமதிக்க முடியாது என நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
மேலும் இந்த வழக்கில் பதிலளிக்க தமிழக அரசு மற்றும் படத்தின் இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமாருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை டிசம்பர் 3 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.