சுபாஷிதம் | ஸ்பூர்த்தி பதம்
வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பி.எஸ்.சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
32. நேரத்தின் அருமை!
செய்யுள்:
காவ்ய சாஸ்த்ர வினோதேன காலோகச்சதி தீமதாம்|
வ்ஸனேன ச மூர்காணாம் நித்ரயா கலஹேன வா ||
— ஹிதோபதேசம்.
பொருள்:
காவியங்களையும் சாஸ்திரங்களையும் படிப்பதில் நேரத்தைச் செலவிட்டு மனதை மகிழ்ச்சியாக வைத்திருப்பர் அறிவாளிகள். மூர்க்கர்கள் தீய பழக்க வழக்கங்களிலும் தூக்கத்திலும் சண்டை சச்சரவு களிலும் காலத்தைக் கழிப்பர்.
விளக்கம்:
காலட்சேபம் என்ற சொல்லை நாம் அடிக்கடி கேட்கிறோம். ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாக நேரத்தைச் செலவிடுவர். அறிவுடையோர் எவ்விதம் காலம் கழிப்பர்? முட்டாள்கள் எவ்விதம் பொழுது போக்குவர் என்பதை விளக்கும் ஸ்லோகம் இது. நல்ல பொழுதுபோக்கு என்றால் என்ன?
நேரத்தை வீண் பொழுது போக்காமல் ஞானம் பெறுவதையே இலக்காகக் கொண்டு நல்ல இலக்கியங்களைப் படிப்பதில் மகிழ்வார்கள் அறிவுடையவர்கள். நல்ல விஷயங்களைப் படித்தும் கேட்டும் சத்சங்கத்தில் ஈடுபடுவது அவர்களின் தினசரி பொழுதுபோக்கு.
அதன் மூலம் நல்ல பண்பாடு வளர்ந்து வாழ்க்கை ஆனந்தமயமாகும். நேரத்தின் மதிப்பை அறியாமல் உண்பதும், உறங்குவதும், பிறரோடு கலகம் செய்வதும், சண்டை சச்சரவுகளில் ஈடுபடுவதும், தீய பழக்கங்களுக்கு ஆளாவதுமாக பொழுதைப் போக்குவர் முட்டாள்கள்.
கடந்து போன காலம் திரும்ப வராது. அதனால் நேரத்தின் மதிப்பை அறிந்து நடந்து கொள்ள வேண்டும். நல்ல பழக்கவழக்கங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். நல்ல நண்பர்களோடு பழக வேண்டும் என்பது இதன் உட்பொருள்.