
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்டில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடிய சுப்மான் கில் பலரது பாராட்டுகளையும் பெற்றார்.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட ‛பார்டர் – கவாஸ்கர் டிராபி’ டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வென்றது.
இதை அடுத்து இரண்டாவது டெஸ்ட் ‛பாக்சிங் டே’ போட்டியாக மெல்போர்னில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 195 ரன்கள் எடுத்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 326 ரன்கள் எடுத்தது. இதை அடுத்து ஆஸ்திரேலிய அணி 131 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கியது. 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுக்கு 133 ரன்கள் எடுத்திருந்த ஆஸ்திரேலிய அணி இன்று 4ஆம் நாள் ஆட்டத்தில் ஓரளவு ரன் சேர்த்தது!
ஆஸ்திரேலிய அணியில் ஏழாவது விக்கெட்டுக்கு 57 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், கம்மின்ஸ் (22) பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். சிராஜ் ‛வேகத்தில்’ கேமரான் கிரீன் (45), நாதன் லியான் (3) ஆட்டமிழந்தனர். ஹேசல்வுட் (10) அஸ்வில் பந்தில் போல்டானார்.
இதை அடுத்து ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 200 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் சிராஜ் 3, பும்ரா, அஷ்வின், ஜடேஜா தலா 2, உமேஷ் ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
70 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணியில், மயங்க் அகர்வால் (5), புஜாரா (3) சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இருப்பினும் சுப்மன் கில், தன்னுடைய டிராவிட் பாணி ஸ்ட்ரோக்களால் பவுண்டரிகளாக அடித்துத் தள்ளினார். இதை அடுத்து இந்திய அணி, 15.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 70 எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதை அடுத்து டெஸ்ட் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. சுப்மன் கில் 35 ரன்னும்,, ரகானே 27 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். சுப்மான் கில்லுக்கு டிவிட்டர் வாசிகள் பாராட்டு மழை பொழிந்தனர்.