
திருச்செந்தூர் தேரோட்டம் தடுத்திட சதி நடப்பதாகவும், தமிழக முதல்வர் தலையிட்டு திருச்செந்தூர் தேரோட்டம் சிறப்பாக நடைபெற ஆவன செய்ய வேண்டும் என்றும் இந்து முன்னணி வேண்டுகோள் விடுத்திருக்கிறது!
இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கையில்…
திருச்செந்தூரில் மாசி மக திருவிழா மிகவும் பிரசித்திப்பெற்ற, பாரம்பரியமானது ஆகும். இந்த மாசிமகத் திருவிழா தேரோட்டம் பக்தர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் ஒரு விழாவாக இருந்து வருகிறது. இது பல நூற்றாண்டுகள் பாரம்பரியமாக நடந்து வரக்கூடியது.
இந்தாண்டு, திருச்செந்தூரில் தேரோட்டம் நடைபெறாது என்று அறநிலை துறை அறிவித்து இருக்கிறது. கோவில் இணை ஆணையாளர் அவர்களிடம் இது பற்றி பேசியபோது, திருச்செந்தூர் தேரோடும் ரத வீதியான தெற்கு ரத வீதியில் சாலை போடும் பணி தொடங்கி அரைகுறையாக 8 மாதங்களாக நின்று போயிருக்கிறது. நாங்கள் தேரோட்டம் நடத்த தயாராக இருக்கிறோம். ஆனால் பேரூராட்சி சாலை போட தயாராக இல்லை எனக் கூறினார்.
எட்டு மாதங்களாக ஒரு ரதவீதி சாலை போட முடியாது போனதற்கு காரணம் அரசின் அலட்சியமான நிர்வாகமா? இல்லை தேர்த்திருவிழா தடுத்து நிறுத்தவேண்டும் என்ற உள் நோக்கத்துடன் அதிகாரிகள் யாரேனும் செயல்படுகிறார்களா? என்ற கேள்வி பக்தர்களின் மனங்களில் எழுகிறது.
எனவே மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், உடனே இந்த விஷயத்தில் தலையிட்டு தேரோடும் விதமாக சாலையை செப்பனிட்டு தரவும் துரித கதியில் வேலை நடைபெறவும் உத்தரவிட வேண்டுகிறோம்.
கொரோனா ஊரடங்கால் கடந்த ஓராண்டாக திருவிழா நின்றிருந்த நிலையில், தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையிலும், திருவிழா நடத்த வேண்டிய தருணத்தில் இதுபோன்ற முட்டுக்கட்டைகளால் தடைபடுவது வேதனைத் தருகிறது.
இந்த தேர் திருவிழா நின்று போகாமல் நடத்திடவும் தேர் திருவிழா நின்று போனதால் கொதித்துப் போன மக்களின் மனதில் பால் வார்த்திடவும் தமிழக முதலமைச்சர் தகுந்த நடவடிக்கை எடுத்து, திருச்செந்தூர் மாசி தேரோட்டம் சிறப்பாக நடைபெற ஆவன செய்ய வேண்டும் என இந்து முன்னணி சார்பில் வேண்டுகிறேன்… என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.