
- மதுரையில் கொரோனாவுக்கு கொள்ளை லாபம் பார்க்கும் தனியார் மருத்துவமனை…
- இறந்த உடலைத் தர மீதி பணத்திற்கு பத்திரம் எழுதி வாங்கிய பரிதாபம்…
மதுரையில் நாளுக்குநாள் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வந்த வண்ணம் உள்ளது. நேற்று ஒரே நாளில் 477 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் தொற்றினால் சிகிச்சை பலனின்றி 16 பேர் இறந்துள்ளனர்.
கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு இதுவரை 4444 பேர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, தோப்பூர் அரசு மருத்துவமனை மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக விடுதி ஹாலில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுபோக,, 40க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் மதுரை அழகர்கோவில் ரோட்டில் உள்ள புதூர் பகுதியில இருக்கும் தனியார் மருத்துவமனையில் நாகேந்திரன் அவரது மனைவி சத்யா, மகள் காவியா ஆகியோர் தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
நாகேந்திரனின் மனைவி மற்றும் மகள் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.
நாகேந்திரனுக்கு மட்டும் தொற்று பாதிப்பு அதிகமானதால் மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க பேக்கேஜ் சிஸ்டம் எனக் கூறி மருத்துவமனை நிர்வாகம் நோயாளிக்கு சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி முன்பணமாக 2 லட்ச ரூபாய் பெற்றுக்கொண்டு சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி நாகேந்திரன் உயிரிழந்தார்.
உடனடியாக மருத்துவமனை நிர்வாகத்தினர், இறந்தவரின் உடலைத் தர வேண்டும் என்றால் மீதி பணம் ஒன்றரை லட்சம் ரூபாய் செலுத்தினால் தான் தருவோம் என கறாராக பேசினர்.
பணம் கட்ட தற்போது பணம் இல்லை என இறந்த நாகேந்திரனின் உறவினர் கூற மீதி பணத்திற்கு ஒரு மாத தவணையில் கட்டுவதாக 100 ரூபாய் பத்திரத்தில் எழுதிக் கொடுங்கள் உடலை தருகிறோம் என கூறி பத்திரத்தை எழுதிக் கையெழுத்திட்டு வாங்கிக் கொண்டு உடலைக் கொடுத்தனர்.
அதோடு உடலைக் கொண்டு செல்ல தாங்கள் சொல்லும் ஆம்புலன்சில் தான் செல்ல வேண்டும் எனக் கூறி அவர்கள் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் கறந்துள்ளனர்.
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனை அரசு அனுமதி அளித்த நிலையில் கொரோனா
தொற்றை வைத்து கொள்ளை லாபம் சம்பாதிக்கும் தனியார் மருத்துவமனைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என தன்னார்வலர்கள் கூறி வருகின்றனர்.
இதுகுறித்து, மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்ட போது உயிரை பணையம் வைத்து நோயாளிகளை காப்பாற்றி வருகிறோம். தற்பொழுது, மதுரையில் ஆக்சிஜன் சரியாக கிடைக்காததால் மற்ற மாவட்டங்களில் இரு மடங்கு விலை கொடுத்து ஆக்சிஜன் வாங்கி வந்து நோயாளிகளைக் காப்பாற்றி வருகிறோம். பதினான்கு நாட்களும் மருத்துவமனைக்கு உறவினர்கள் யாருமே வராத சூழ்நிலையில் நாங்களே அனைத்து உதவிகளும் செய்து சேவைகள் செய்து வந்தோம். மீதி பணத்தை கட்ட கூறியதும் இறந்தவரின் உறவினர்கள் தகாத வார்த்தையில் பேசினர்… என்று கூறினார் ஒரு மருத்துவர்.