
ஆன்லைன் மூலம் விபச்சாரம்; சபலத்தை பயன்படுத்தி பணமோசடி என இதுபோன்ற குற்றங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன.
பணம் பறிக்கும் கும்பல் இதற்கு முதலீடாக பயன்படுத்துவது நமது சபலத்தைதான். நமது அலைபேசிக்கு ‘ஜாலியாக இருக்கலாம்; ரகசியம் காக்கப்படும். இந்த எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்’ என ஒரு எஸ்.எம்.எஸ்., அனுப்புவர்.
அதில் தொடர்பு கொண்டால் கொஞ்சும் ஆங்கிலத்திலோ, தமிழிலோ பேசி ஆசையை துாண்டி ‘துாண்டில்’ போடுவர்.
இப்படிதான் மதுரை தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்த 24 வயது குமாருக்கு ஒரு எஸ்.எம்.எஸ்., வந்தது. அதில், ‘நான் நிஷா. என்னை தொடர்பு கொள்ளுங்கள். ஒரு நாள் முழுவதும் உங்கள் கனவு நிறைவேற்றப்படும்.
அதுவும் ஜாலியாக. இன்றைய வாழ்க்கையை கொண்டாடுங்கள். ரகசியம் காக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுபோன்று அடிக்கடி எஸ்.எம்.எஸ்., வந்ததால், அதில் இருந்த எண்ணில் தொடர்பு கொண்டார்.
மறுமுனையில் பேசிய பெண், ‘உங்கள் பெயர் என்ன, எந்த ஊர்’ என்ற விபரங்களை எல்லாம் கேட்டு ஒரு ஆணிடம் அலைபேசியை கொடுத்தார். அந்த நபரும் ‘இது ஒரு நல்ல தொழில். ‘உங்களுக்கு ‘கால் பாய்’ (ஆண் விபச்சாரம்) இருக்க ஆசையா. விருப்பம் இருந்தால் இணையலாம்’ என கேட்க, அதிர்ச்சியடைந்த குமார், ‘எனக்கு விருப்பமில்லை’ என இணைப்பை துண்டித்தார் .
ஒரு மணி நேரத்திற்கு பின் மீண்டும் அந்த பெண் தொடர்பு கொண்டு, ‘நீங்கள் ‘கால்பாய்’ ஆக இருந்தால் பல சலுகைகள் கிடைக்கும்’ என சபலத்தை துாண்டினார்.
அப்போதும் குமார் மறுத்துவிட, அடுத்தடுத்து தொந்தரவு வருவதை தடுக்க அந்த எண்ணை தற்போது ‘பிளாக் லிஸ்டில்’ வைத்துவிட்டார்.
அவர் கூறுகையில், ”என் அலைபேசி எண் எப்படி அவர்களுக்கு கிடைத்தது என தெரியவில்லை. இது ஒரு வகையான மோசடி என அறிந்து தொடர்ந்து அவர்களிடம் பேசுவதை தவிர்த்து இணைப்பை துண்டித்துவிட்டேன். அவர்கள் தில்லி, மும்பையைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம்” என்றார்.
சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது: இதுபோன்று அழைப்பு வந்தால் போலீசில் புகார் செய்யலாம். சிலர் சபலத்தில் தொடர்ந்து பேசும்போது, ‘உங்கள் போட்டோவை அனுப்புங்கள்.
ஆடை இல்லாமல் அனுப்புங்கள்’ என நம்மை மூளைச்சலவை செய்கின்றனர். அப்படி கிடைத்த போட்டோவை ‘மார்பிங்’ செய்து பணத்தை பறிப்பார்கள்.
நமக்கு தெரியாத எண்ணில் இருந்து எஸ்.எம்.எஸ்., வந்தால் அதை பொருட்படுத்த வேண்டாம். இதுபோன்று எஸ்.எம்.எஸ்., வந்தால் 155260 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம், என்றனர்.