
சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் அருகே தூக்கில் பிணமாக தொங்கிய 9 வயது சிறுமியின் இறப்புக்குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்டது கச்சுப்பள்ளி கிராமம். இங்குள்ள கோவலன்காடு, நடுவளவு பகுதியைச் சேர்ந்த கணேசனின் மனைவி பிரியா (33), இத்தம்பதிக்கு சாருநிதி (9) என்ற பெண்குழந்தை உள்ளது.
கடந்த சில வருடங்களுக்கு முன் கணேசன் இறந்து விட்ட நிலையில், பிரியா தனது மகள் சாருநிதியுடன் அப்பகுதியில் வசித்துவந்தார். பிரியா அங்குள்ள பருத்தி அரைவை ஆலையில் பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் சனிக்கிழமை பிரியா வழக்கம் போல் வேலைக்கு சென்றதால், சாருநிதி வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
வேலை முடிந்த மாலையில் பிரியா வீடு திரும்பியபோது, அங்கு சாருநிதி வீட்டில் பிணமாக தூங்கில் தொங்கியதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து பிரியா கூச்சலிட்ட சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அங்கு வந்து காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதனை அடுத்து நிகழ்விடம் வந்த கொங்கணாபுரம் காவல்துறையினர், சாருநிதியின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் 9 வயதே ஆன பள்ளி சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பு குறைவான நிலையில், அச்சிறுமி தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது அவரை யாரேனும் கொலைசெய்து தூக்கில் தொங்க விட்டனரா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் நல்லசிவம் உள்ளிட்ட உயர் காவல் அலுவலர்கள் அப்பகுதியில் முகாமிட்டு விசாரணையினை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
9 வயதே ஆன பள்ளி சிறுமி தூக்கில் சடலாமாக தொங்கிய நிகழ்வு அப்பகுதியில் பெற்றோர்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.