
சகோதர சகோதரிக்கிடையேயான உறவு பந்தத்தை மென்மேலும் இணைக்கவும், பலப்படுத்தும் பண்டிகையாகக் கொண்டாடப்படுவது தான் ‘ரக்ஷாபந்தன்’.
ஷ்ரவன் (ஆவணி) மாதத்தில் வரும் முழு நிலவு(பௌர்ணமி) நாளில் கொண்டாடப்படுகிறது.
இப்பண்டிகையை, ‘ராக்கி’ என்றும் அழைப்பர். இத்திருநாளில், சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் மணிக்கட்டில் ஒரு புனிதமான மற்றும் மங்களகரமான கயிறைக் கட்டுவர். ரக்ஷா பந்தன் என்றால் ‘பாதுகாப்பு பிணைப்பு’ என்றும், ‘பாதுகாப்பு பந்தம்’ என்றும் பொருள். இந்த விழா, தீய விஷயங்கள் மற்றும் காரியங்களிடமிருந்து சகோதரர்களைக் காப்பாற்றவும், அவர்களது நல்வாழ்வு மற்றும் நீண்ட ஆயுளுக்காக சகோதரிகள் பிரார்த்தனை செய்வதற்காகவும் கொண்டாடப்படுகிறது.

ரக்க்ஷாபந்தன்: இந்த தினத்தில் ஒரு பெண், தன்னுடைய சகோதரன் அல்லது சகோதரனாகக் கருதக்கூடியவருக்கு ராக்கி எனும் புனித நூல் கட்டுவார்கள். இதை ஏற்றுக் கொண்ட அந்த சகோதரன், சகோதரியின் வாழ்க்கையில் எப்போதும் பாதுகாப்பாகவும், எந்த சூழலிலும் உறுதுணையாக இருப்பேன் என உறுதி கூறுவதாக கூறப்படுகிறது.
இது ஒரு மதம் பண்டிகையாக பார்க்காமல், சமுதாயப் பண்டிகையாக கொண்டாடப்பட வேண்டியது அவசியம்.
கிருஷ்ணர் – திரெளபதி சகோதர உணர்வு :
கிருஷ்ணர் – திரெளபதி இடையே ஒரு அருமையான அண்ணன், தங்கை பாசத்தை சிறப்பாக எடுத்துரைக்கிறது.
போர்க்களத்தில் கிருஷ்ணருக்கு மணிக்கட்டில் ஏற்பட்ட காயத்தைப் பார்த்த திரெளபதி தன் புடவையின் ஒருபகுதியை கிழித்து, கிருஷ்ணரின் மணிக்கட்டில் கட்டினார். இந்த நிகழ்வு கிருஷ்ணரின் மனதைத் தொட்டது. அன்று முதல் திரெளபதியை தன் சகோதரியாக ஏற்றுக் கொண்டு, எந்த ஒரு சூழ்நிலையிலும் உன்னை கைவிட மாட்டேன், உன் பிரச்சினைகளிருந்து மீட்டு, உனக்கு கை கொடுப்பேன் என உறுதியளித்தார்.

அவரது உறுதிமொழியைக் காப்பாற்றும் விதமாக பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்று, திரிதராஷ்டிரனின் நீதிமன்றத்தில் திரெளபதியின் துகிலுரிய முயன்றபோது, கிருஷ்ணர் நீண்ட புடவை அருளி அவரின் மானத்தைக் காத்தார்.
கிருஷ்ணரின் கையில் திரௌபதி புடவையைக் கிழித்துக் கட்டிய நிகழ்வை குறிக்கும் விதமாக, ரக்ஷாபந்தன் விழா கொண்டாடப்படுகிறது.
கர்ணாவதி ராணி – ஹுமாயுன் பாசம் :
மற்றொரு வரலாற்று நிகழ்வாக, ராஜஸ்தான் மாநிலத்தின் சித்தூர் நாட்டை ஆண்டு வந்தார் கர்ணாவதி என்ற ராணி. சித்தூர் நாட்டைக் கைப்பற்றும் விதமாக குஜராத்தை ஆண்ட சுல்தான் பகதூர் ஷா சித்தூர் மீது போர் தொடுத்தார்.
இதை அறிந்து கொண்ட கர்ணாவது, முகலாய பேரரசர் ஹுமாயுனுக்கு ‘ராக்கி’ எனும் புனித நூலை அனுப்பினார். தனக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார். இதனால் பாச உணர்வு கொண்ட ஹுமாயுன், கர்ணாவதி ராஜ்ஜியத்தைக் காக்க முற்பட்டான். ஆனால் அதற்குள் ராணியை வென்று, பகதூர் ஷா வெற்றிக்கொடி நாட்டினார்.
அலக்ஸாண்டர் மனைவி – போரஸ் மன்னர் சகோதர உணர்வு :
கிமு 326ல் மாவீரன் அலெக்ஸாண்டர் இந்தியா மீது படையெடுத்து, ஏறக்குறைய வட இந்தியா முழுவதையும் கைப்பற்றினார். பின்னர் போரச் மன்னரிடம் போரிட்டார்.
போரஸ் மன்னரின் வலிமையை அறிந்த அலெக்ஸாண்டரின் மனைவி ரோக்ஷனா, போரில் தன் கணவரின் உயிருக்கு எந்த ஒரு தீங்கும் ஏற்படுத்தக்கூடாது என்று ஒரு புனித நூலை அனுப்பினார்.
பாசத்தால் உருகிய போரஸ் மன்னன், ரோக்ஷனாவை சகோதரியாக ஏற்றுக் கொண்டார். இதனால் போரில் அலெக்ஸாண்டரைக் கொல்ல நேரடியாக வாய்ப்பு கிடைத்தும் அவரை உயிருடன் விட்டு விட்டார்.
புராணத்தின் படி, பகவான் விஷ்ணுவின் தீவிர பக்தனான அரக்கன் பாலியின் தவத்திற்கு செவி சாய்த்த விஷ்ணுவிடம், தனது சொந்த உறைவிடமான வைகுண்டத்தை விட்டுவிட்டு, அவரது ராஜ்ஜியத்தைப் பாதுகாக்கும்படி வேண்டினார்.

பக்தர்கள் எது கேட்டாலும், கொடுக்கும் பகவான் இதற்கு ஒப்புக்கொண்டார். பகவான் விஷ்ணு வரும் வரை தனது இருப்பிடத்திற்குத் திரும்ப விரும்பாத கலைமகள் லக்ஷ்மி தேவி, ஒரு சாதாரணப் பெண் வேடம் பூண்டு, தனது கணவர் வரும் வரை அடைக்கலம் தேடி அலைந்தார்.
ஷ்ரவன் பூர்ணிமா கொண்டாட்டங்களின் போது, லட்சுமி, ராஜா பாலியின் கையில் ‘ராக்கி’ என்னும் புனிதக்கயிறைக் கட்டினார். அப்போது ராஜா, அவரது அடையாளத்தையும், புனிதக் கயிறைக் கட்டியதற்கான நோக்கத்தைக் கேட்ட போது, அவர் தனது உண்மையான ரூபத்தை வெளிப்படுத்தினார்.
இந்நிகழ்வு ராஜாவின் மனதைத் தொட்டதால், இறைவனுக்காகவும், அவர் மீது மிகவும் ஈடுபாடு கொண்ட அன்பான மனைவி லக்ஷ்மிக்காகவும் தனது அனைத்து செல்வங்களையும் தியாகம் செய்தார். பகவானிடம் ராஜா பாலி கொண்ட அதீதப் பற்றை அனைவரும் அறியும் விதமாக, இவ்விழா ‘பாலிவா’ என்றும் அழைக்கப்படுகிறது.
இந்நிகழ்வுக்குப் பின்னரே, ஷ்ரவன் பூர்ணிமா தினத்தன்று, சகோதரர்கள் சகோதரிகளை அழைத்து, ‘ராக்கி’ கட்டும் ஒரு பாரம்பரியம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்று கூறப்படுகிறது
தன்னுடைய சகோதரனின் மணிக்கட்டில் ராக்கி கயிறு கட்டி நெற்றியில் சிகப்பு நிற திலகம் இட்டு, இனிப்பு வழங்குவார். அவர்களுக்கு ஆரத்தி எடுப்பார்கள்.
புனித கயிற்றை எற்று கொண்ட அந்த சகோதரன், தன் பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக ஏதேனும் ஒரு பரிசுப் பொருளை வழங்குவார்.
திருமணமானப் பெண்களின் பிறந்த வீட்டு சொந்தத்தை மென்மேலும் பலப்படுத்தவும், இணைக்கும் பாலமாக இருக்கிறது. ஒரு உலகளாவிய மனிதாபிமான வடிவம் எடுத்திருக்கும் இத்திருநாளில், உடன்பிறவாவிட்டாலும், சகோதர அன்பைத் வெளிப்படுத்தும் நோக்கமாக பெண்கள், பாதுகாப்பு வீரர்கள், சிறையிலிருக்கும் கைதிகள் மற்றும் கைவிடப்பட்ட சமூக தரப்பினருக்கும் அன்பு செலுத்தும் விதமாக அவர்களுக்கும் ‘ராக்கி’ கட்டுகின்றனர்.
மேலும், நாட்டின் பிரதமர் பாதுகாப்பு உறுதிமொழி எடுக்க வேண்டுமென்பதைக் குறிக்கும் விதமாக, அவரது மணிக்கட்டிலும் அவர்கள் ‘ராக்கி’ கட்டுகின்றனர். குறிப்பாக, வடக்கு மற்றும் மேற்கிந்தியாவில், சகோதரிகளே இல்லாத ஆண்களை ‘காட் பிரதர்ஸ்’ (God Brothers) என்று குறிக்கும் விதமாக, அவர்களுக்குப் பல பெண்கள் ராக்கி கட்டுவார்கள்.

முதலில், பட்டு நூலில் வந்த ராக்கி, இப்போது ஒவ்வொரு ராக்கியும் ஒவ்வொரு விதமாக, அதாவது தங்கம், வெள்ளி மற்றும் சந்தனம் போன்ற நூலிலைகளால் செய்யப்பட்டு விற்பனையாகிறது.
அது மட்டுமல்லாமல், சிறுவர்களுக்குப் பிடித்தமான கார்ட்டூன்களைக் கொண்டும் சிறிய குழந்தைகளுக்காகவும் ராக்கி விற்பனை செய்யப்படுகிறது.
ரக்ஷா பந்தன் கொண்டாட்டம்
ரக்ஷா பந்தன் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டாலும், முக்கியமாக வட இந்தியாவில் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில், பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து, தங்களது அன்பைப் பரிமாறிக் கொள்வர்.
இந்தியக் கலாச்சாரத்தின் மிக முக்கிய பகுதியாகவே மாறிவிட்டது, இப்பண்டிகை. இத்திருநாள், குடும்பத்தைப் பாசப் பிணைப்பில் இணைக்கிறது. உறவின் பெருமை, மதிப்பு, மற்றும் உணர்வுகள் இத்திருவிழாவின் சடங்குகளோடு இணைக்கப்பட்டிருப்பதால், நல்வாழ்விற்குத் தேவையான நல்லிணக்கம் மற்றும் சமாதானம் என்ற பாடத்தைப் பரப்பி வருகிறது, இப்பண்டிகை.



