ஐரோப்பாவின் பெபிகொலம்பு திட்டம், சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் புதன் கோளின் முதல் படங்களை அனுப்பியுள்ளது.
புதன்கோளின் மீது அதிவேகமாக பறந்த போது, வெறும் 200 கிலோ மீட்டர் (125 மைல்) உயரத்தில் இந்த படங்களை எடுத்தது அந்த விண்கலம்.
விண்கல கட்டுப்பாட்டாளர்கள் இது போல ஐந்து முறை புதன் கோளுக்கு அருகில் பறக்க திட்டமிட்டுள்ளனர். ஒவ்வொரு முறையும் புதன் கோளின் ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி, விண்கலத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
பெபிகொலம்பின் வேகம் குறைக்கப்பட்டு, புதன் கோளைச் சுற்றி தனக்கென ஒரு நிலையான சுற்றுவட்டப் பாதையை உருவாக்கிக் கொள்வது தான் அதன் நோக்கம். இத்திட்டம் 2025ஆம் ஆண்டின் இறுதிக்குள் நடக்க வேண்டும்.
பெபிகொலம்பு திட்டத்தின் பக்கவாட்டிலுள்ள குறைந்த தெளிவுத்திறன் கொண்ட கண்காணிப்பு கேமராக்களால் புதன் கோளின் முதல் படங்கள் எடுக்கப்பட்டன.
பெபி தன் உயர் தெளிவுத்திறன் கொண்ட அறிவியல் கேமராக்களைப் பயன்படுத்தவில்லை.
பெபிகொலம்பு அடிப்படையில் இரண்டு விண்கலம். ஒரு பகுதியை ஐரோப்பிய விண்வெளி நிறுவனமான யூரோப்பியன் ஸ்பேஸ் ஏஜென்சி உருவாக்கியது. மற்றொரு பகுதியை ஜப்பானிய விண்வெளி நிறுவனமான ஜாப்பனீஸ் ஸ்பேஸ் ஏஜென்சி (ஜாக்ஸா) உருவாக்கியது.
இந்த இரண்டு பகுதிகளும் ஒன்றோடு ஒன்று இணைந்துள்ள நிலையில் ஐரோப்பிய விண்கலத்தின் உயர் தெளிவுத் திறன் கொண்ட அறிவியல் கேமராக்கள் இரண்டு விண்கலப் பகுதிக்கும் நடுவில் மாட்டிக்கொண்டுள்ளன.
பொறியியல் அல்லது செல்ஃபி கேமராக்கள் கோளின் மேற்பரப்பில் அடையாளம் காணக்கூடிய அம்சங்களை எடுக்க போதுமானவையாக இருக்கின்றன.
இந்த பொறியியல் கேமராக்கள் எடுத்த எளிய கருப்பு – வெள்ளை புகைப்படங்கள் சனிக்கிழமை பூமிக்கு வரத் தொடங்கின. எல்லா படங்களும் வந்து சேர்ந்த பின், ஐரோப்பிய விண்வெளி முகமை அனைத்து படங்களையும் தொகுத்து ஒரு குறும்படத்தை உருவாக்கி, அதை திங்கட்கிழமை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிட்டனின் திறந்தவெளி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டேவ் ரோத்தேரி, பெபியின் புதன் கோள் புகைப்படங்களைக் கண்டு மகிழ்ச்சியடைந்ததாக தெரிவித்தார்.
புதன் கோளை அதிவிரைவாக கடக்கும் போது எடுக்கப்பட்ட மகிழ்ச்சிகரமான படங்கள் இவை, இருப்பினும் புதன் கோளின் அற்புதமான பார்வை நமக்கு கிடைத்திருக்கிறது என பிபிசியிடம் கூறினார் அவர்.
“நீங்கள் ஒரு பள்ளமான மேற்பரப்பைக் காண்கிறீர்கள், இருப்பினும் எரிமலை குழம்பு வழிந்தோடிய வழுவழுப்பான தளங்களையும் காண்கிறீர்கள். அதே போல கடந்த காலங்களில் எரிமலை வெடிப்புகள் ஏற்பட்ட ஒளிமயமான பகுதியையும், இன்று காணாமல் போய்க் கொண்டிருக்கும் மேற்பரப்பு பகுதிகளையும் உங்களால் பார்க்க முடியும்.
“நாம் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்த பின், உண்மையிலேயே உயர் தெளிவுத் திறன் கொண்ட படங்களைப் பார்க்கும் போது, புதன் கோளின் மேற்பரப்பின் மேல் 10 முதல் 20 மீட்டர் அளவுக்கு விண்வெளியில் காணாமல் போவதைப் பார்க்க முடியும், அந்த வெற்றிடத்தை ஹாலோ என்று நாங்கள் அழைக்கிறோம்.”
பெபிகொலம்பு உண்மையாகவே அறிவியல் ஆராய்ச்சி செயல்பாடுகளைத் தொடங்குவதற்கு நீண்ட காலம் இருந்தாலும், சில ஆய்வுக் கருவிகள் புதன் கோளை நெருங்கிச் செல்லும் போது இயக்கப்படுகின்றன.
“எங்களுக்கு அது தொடர்பான தரவுகள் வந்து சேரும்,” என்று பிரிட்டனில் இருக்கும் லீசெஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர் சுசி இம்பர் கூறினார். “புதன் கோளுக்கு அருகில் பறக்கும் ஃப்ளை பை நடவடிக்கைகளின் நோக்கம் (மொத்தம் ஆறு ஃப்ளை பைகள் திட்டமிடப்பட்டுள்ளன), பெபிகொலம்புவின் பாதையை மெல்ல மெல்ல மாற்ற உதவுவதுதான்.
“இறுதியில், டிசம்பர் 2025ல், நமது விண்கலமும் புதன் கோளும் ஒரே இடத்தில் இருக்கும், ஒரே திசையில் செல்லும். இறுதியாக, நமது விண்கலத்தை பிரித்து சுற்றுப்பாதையில் செல்லலாம்.” என்றார் அவர்.