1915ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளிவந்த ஞானபானு இதழில் பின்வருமாறு ஒரு விளம்பரம் வெளியானது.
ரூ 5!
தனித் தமிழில் / தூய தமிழில் உங்களால் எழுதமுடியுமா?
உங்களால் முடியுமானால், எழுதுங்கள்.
தூய தமிழில் 8 பக்கங்களுக்கு மிகாமல் எழுதுவோருக்கு தமிழ் காதலர் ஒருவர் ரூ 5 பரிசாக வழங்க இருக்கிறார்.
இந்தக் கட்டுரை தமிழின் தொன்மை, மேன்மைப் பற்றியோ திருவள்ளுவ நாயனார் பற்றியோ இருக்க வேண்டும்.
இந்த விளம்பரத்தை வெளியிட்டவர் தனித் தமிழ் இயக்கம் நடத்திய, ஆன்மீக அன்பர், விடுதலைப் போராட்ட வீரர், வீர முரசு திரு சுப்ரமணிய சிவம்.
அருமையான பேச்சாற்றல் கொண்டவர். திரு சிதம்பரம் பிள்ளை அவர்களுடன் திருநெல்வேலி, திருவிதாங்கூர் சமஸ்தானங்களில் விடுதலை வேட்கையை எழுப்பியவர். சுதேசி கப்பலுக்காக அயராது உழைத்தவர். மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பாட்டுக்களை தன் வெண்கலக் குரலில் பாடி மக்களை தேசம் பக்கம் திருப்பியவர்.
பாரதியார் பாண்டிச்சேரியில் இருந்த காலத்தில், அவரின் கட்டுரைகளை ஞானபானுவில் வெளியிட்டு மக்களின் சுதந்திர தாகம் அணையாமல் காத்தவர்.
தேச விடுதலைக்காக பேசியதற்காக உழைத்ததற்காக நான்கு முறை கடுமையான சிறை தண்டனை பெற்றவர்.
சிறையில் இருந்த வண்ணம் 1911, சேலம் ஜெயிலில் இருந்தபடியே சச்சிதானந்த சிவம் என்ற நூலை வெளியிட்டவர். சிறை தண்டைனையாக தோல் பதனிடும் வேலை செய்து தொழுநோயால் பாதிக்கப் பட்டவர்.
இதனால் ஆங்கிலேய அரசு அவர் ரயிலில் பயணம் செய்வதற்கு தடை விதித்தது. தமிழ் நாடு, ஆந்திரா பகுதிகளில் நடந்தே சென்று தேசத் தொண்டாற்றியவர். இளைஞர்கள், தொழிலாளர்கள், பெண்கள் முன்னேற்றத்திற்காக கடுமையாக போராடியவர்.
30க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர்.
பாப்பாரப்பட்டியில் பாரத மாதா கோயில் கட்ட இடம் வாங்கி சித்தரஞ்சன் தாஸை வைத்து அடிக்கல் நாட்டியவர்.
41 வது வயதில் இன்னுயிர் துறந்தவர், வீர முரசு சுப்ரமணிய சிவம். இவர் ஒரு பார்ப்பனர்.
- ஜயந்தி ஐயங்கார்