
ஏடிஎம் கார்டு தொலைந்து போனால் புதிய கார்டு விண்ணப்பிக்க ஹோம் பிராஞ்ச் அதாவது சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு செல்ல வேண்டியதில்லை என எஸ்பிஐ நிர்வாகம் அறிவித்துள்ளது
இது தொடர்பாக ராய்ப்பூரை சேர்ந்த ஒருவர் கேட்ட கேள்விக்கு எஸ்பியை வங்கியின் நிர்வாகம் அதிகாரப்பூர்வ டிவிட்டரில் பதில் அளித்துள்ளது.
உலகம் டிஜிட்டல் மயமாகிவிட்டது. ஒரு காலத்தில் பணம் எடுக்கவும், செலுத்தவும் வங்கிகளில் கால்கடுக்க நின்று டோக்கன் பெற்று பணப் பரிவர்த்தனை செய்ய குறைந்தது 30 நிமிடங்கள் ஆகும்.
நாளடைவில் வளர்ந்த தொழில்நுட்ப வளர்ச்சியால் பணம் எடுக்கவும், செலுத்தவும் ஏடிஎம் இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன.
இதனால் 30 நிமிடம் என்பது 3 நிமிடம் ஆனது. அதே சமயம் இணையதளத்தின் அபார வளர்ச்சியால் ஒருவருக்கு பணம் தருவதற்கு எங்கும் அலைய வேண்டியதில்லை.
வீட்டில் இருந்தபடியே செல்போனிலேயே யுபிஐ எனப்படும் கூகுள், போன்பே, பேடிஎம் போன்றவை மூலம் பணம் கொடுத்துவிடலாம். அதிக மதிப்புள்ள தொகை என்றால் வங்கியின் இணையதளத்திற்கே சென்று ஆன்லைனில் பணம் செலுத்திவிடலாம்.

இதனால் டிடி எடுப்பது, ஏடிஎம் கார்டுக்கு விண்ணப்பிப்பது, முகவரி மாற்றம், லாக்கர் சேவை போன்றவற்றிற்கு மட்டுமே பொதுமக்கள் வங்கிக்கு செல்ல வேண்டிய அவசியம் உள்ளது.
பெரும்பாலான வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு இதுபோன்ற வசதிகளை வழங்குவதால், வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்து கொண்டே தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றனர்.
இதனால் வங்கிக்கே செல்ல வேண்டிய அவசியம் இல்லை. கொரோனா பரவலின்போது மக்கள் வீட்டை விட்டு வெளியே கூட வர முடியாத நிலையில், வங்கிக்குச் செல்வது என்பது பெரிய சவாலாக இருந்தது.
பெரும்பாலான வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நடமாடும் ஏடிஎம் சேவை மூலம் வீட்டிற்கே சென்று அவர்கள் தேவையை பூர்த்தி செய்தன. எந்நேரத்திலும் பணம் தேவைப்படலாம்.
இதற்காக வங்கிக்கு சென்று படிவத்தை பூர்த்தி செய்து பணம் எடுப்பது இயலாத காரியம் என்பதால்தான் மக்கள் ஏடிஎம் கார்டுகளை வாங்கி பயன்படுத்துகின்றனர்.
இதுநாள் வரை உங்களது ஏடிஎம் கார்டு திடீரென தொலைந்துவிட்டாலோ அல்லது பிளாக் செய்யப்பட்டாலோ நீங்கள் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு சென்றுதான் விண்ணப்பிக்க வேண்டும்.
உதாரணத்திற்கு நீங்கள் கேரளாவில் உள்ள வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தால் சென்னையில் உள்ள வங்கியில் சென்று விண்ணப்பிக்க முடியாது.
இதனாலேயே வெளிமாநிலம், வெளியூர் செல்பவர்கள் தங்களது ஏடிஎம் கார்டை கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வந்தனர்.
இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டும் வகையில் எஸ்பிஐ ஒரு புதிய விளக்கம் அளித்துள்ளது. அதாவது இந்தியாவில் எந்த மாநிலத்தில், எந்த நகரத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தாலும் வாடிக்கையாளரின் ஏடிஎம் கார்டு விண்ணப்பிக்க எந்தவொரு கிளையையும் நாடலாம் என்பதுதான் அது.
அதாவது காஷ்மீரில் எஸ்பிஐ வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவரின் ஏடிஎம் கார்டு தொலைந்து போனால் கன்னியாகுமரியில் உள்ள எஸ்பிஐ வங்கியில் புதிய கார்டிற்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த விளக்கத்தை பாரத ஸ்டேட் வங்கி (SBI) தனது வாடிக்கையாளர் ஒருவரின் கேள்விக்கு டிவிட்டர் மூலம் பதில் அளித்துள்ளது.
சமீபத்தில், வாடிக்கையாளர் ஒருவர் SBI வங்கியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் டேக் செய்து, எந்த மாநிலத்தின் எஸ்பிஐ கிளையிலும் புதிய ஏடிஎம் கார்டுக்கு விண்ணப்பிக்கலாமா என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பாரத ஸ்டேட் வங்கி ட்வீட் மூலம் பதிலளித்துள்ளது. அதாவது எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் எந்த கிளையிலிருந்தும் புதிய ஏடிஎம் கார்டிற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது.
எனவே இனி எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் உங்கள் வங்கியின் கிளை எங்கிருந்தாலும் டென்ஷன் ஆக வேண்டியதில்லை. நீங்கள் எந்த கிளைக்கும் சென்று ஏடிஎம் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு உங்கள் ஆவணங்கள் மட்டுமே தேவைப்படும்.