
ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. நவம்பர் ஓய்வூதியத்துடன், ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர்கள், உயர்த்தப்பட்ட அகவிலை நிவாரணத்தில் பயனடைய முடியும்
இதுமட்டுமின்றி, 4 மாத நிலுவைத் தொகையும் கிடைக்கும், இதனால் பயனாளிகளின் ஓய்வூதியம் அதிகரிக்கும்.
ஜூலை 1 முதல் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 31 சதவீதமாக உயர்த்தப்பட்ட பின்னர், நவம்பர் மாதம் ஓய்வு பெற்ற ஊழியர்களின் ஓய்வூதியத்தில் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாத நிலுவைத் தொகையும் சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ முடிவு இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனினும் விரைவில் இந்த அறிவிப்பு வெளியாகும் எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பிடத்தக்க வகையில், அகவிலை நிவாரனம், அடிப்படை சம்பளத்தில் கணக்கிடப்படுகிறது. எனவே, ஓய்வுபெற்ற ஊழியரின் ஓய்வூதியம் ரூ.20,000 எனில் அவர்களது சம்பளம் ரூ.600 அதிகரிக்கும். அதிகரிக்கப்பட்ட 3 சதவீத அகவிலை நிவாரண அடிப்படையில் இந்த உயர்வு வழங்கப்படும்.
7வது ஊதிய கமிஷன் கணக்கீட்டின் படி, அதிகாரி தர சம்பளத்தில் குறிப்பிடத்தக்க உயர்வு இருக்கும். ஒருவரின் அடிப்படை சம்பளம் தற்போது ரூ.31,550 எனில், இதுவரை 28% அகவிலைப்படியாக ரூ.8,834 பெறுகிறார்கள்.
ஆனால் இப்போது, 3 சதவீதம் அதிகரித்த பிறகு, தற்போது அவர்களுக்கு ரூ.9,781 அகவிலை நிவாரணமாக கிடைக்கும்.
இதே போல, ஆபீசர் கிரேடு சம்பளத்தின் அடிப்படையில் கணக்கிட்டு பார்த்தால், மாதத்திற்கு ரூ.947 டிஆர் உயர்வு இருக்கும்.
அதாவது நான்கு மாதங்களுக்கான நிலுவைத் தொகை ரூ.3,788 ஆக இருக்கும். நவம்பரில் உயர்த்தப்பட்ட அகவிலைப்படியையும் சேர்த்தால், ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.4,375 கிடைக்கும்.