
பொங்கல் திருநாள் நெருங்குவதையொட்டி, பனங்கருப்பட்டி, அச்சு வெல்லம், நாட்டு சர்க்கரை தயாரிக்கும் தொழிற்சாலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கு உணவுப் பாதுகாப்பு ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் கலப்பட பொருட்கள் வாங்குவதை தவிர்க்கும் வகையில் மக்கள் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
மாவட்ட ஆட்சியர்களுக்கு உணவுப் பாதுகாப்பு ஆணையர் செந்தில்குமார் எழுதியுள்ள கடிதத்தில், பனங்கருப்பட்டி, அச்சு வெல்லம், நாட்டு சர்க்கரை தயாரிக்கும் தொழிற்சாலைகளில் கலப்படம் செய்யப்படுவதை கண்காணிக்கவும்,
உற்பத்தி செய்யப்படும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தபட்டுள்ளதா என்பதை உறுதி செய்யவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பனங்கருப்பட்டி, அச்சு வெல்லம், நாட்டு சர்க்கரை மற்றும் அது சார்ந்த பொருட்களில் கலப்படம் செய்வதைத் தடுப்பதற்கான மாநில அளவிலான குழுக் கூட்டம் கடந்த ஜூன் மாதம் 25 ஆம் தேதி நடைபெற்றது.
ஏற்கனவே வெல்ல தயாரிப்புகள் குறித்து ஒழுங்குமுறை தரநிலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் சந்தையில் கலப்பட வெல்லம் விற்பனை செய்யப்படுவதாக பல்வேறு புகார்கள் வந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக பனங்கருப்பட்டி, அச்சு வெல்லம், நாட்டு சர்க்கரை ஆகியவற்றில் ரசாயனங்கள் கலப்படம் செய்யப்பட்டுள்ளதாக புகார்கள் வந்துள்ளதாகவும், மைதா, சர்க்கரை, சூப்பர் பாஸ்பேட், சோடியம் பை கார்பனேட், கால்சியம் கார்பனேட் மற்றும் செயற்கை நிறமூட்டிகள் உள்பட பல ரசாயனங்கள் கலப்படம் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலப்படமற்ற வெல்லம் பொதுவாக அடர் பழுப்பு நிறத்தில் இருக்கும். ஆனால் கலப்படம் செய்யப்பட்ட வெல்லம் வெளிர் பழுப்பு அல்லது மஞ்சள் அல்லது வெளிர் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறங்களில் இருக்கும்.
இதுகுறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால், பழுப்பு நிறத்தில் உள்ள வெல்லத்தை விட மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்தில் உள்ள வெல்லம் சிறந்தது என பொதுமக்கள் நினைக்கின்றனர்.
சந்தை தேவையின் அடிப்படையில் கவர்ச்சிகரமான விற்பனைக்காக இவ்வாறு உற்பத்தி செய்யப்படுவதாக தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.
எனவே, இது போன்ற கலப்படத்தை தடுக்க பொதுமக்களுக்கும், வெல்லம் உற்பத்தியாளர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், வெல்லம் உற்பத்தி நிலையங்களை கண்காணிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டு மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த கலப்படங்களைத் தடுக்க, ஏற்கனவே மாவட்ட அளவிலான 8 அதிகாரிகள் மற்றும் பங்குதாரர்கள் கொண்ட மாநில அளவிலான கண்காணிப்புக் குழு உணவுப் பாதுகாப்பு ஆணையரால் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழு, விவசாய வயல்களுக்கு அருகிலேயே சிறிய அளவிலான இடங்களில் தயாரிக்கப்படுவது, மற்றும் முழு உற்பத்தி செயல்முறையையும் கண்காணிக்கவும், அனைத்து உற்பத்தியாளர்களும் அந்த நடைமுறையை கடைப்பிடிப்பதை உறுதிசெய்யவும், தயாரிப்பில் கலப்படம் உள்ளிட்ட புகார்கள் இருந்தால் அதுகுறித்து நடவடிக்கை எடுக்கும் பணிகளையும் மேற்கொள்ளும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது