spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?ஹிந்து ஆலய விதிகளும்... அரசியலின் விதிமீறல்களும்!

ஹிந்து ஆலய விதிகளும்… அரசியலின் விதிமீறல்களும்!

- Advertisement -

இந்துக்கள் அல்லாதோர் கோயிலுக்குள் வரக்கூடாது என்ற விதிமுறைப்படி, மு.க.ஸ்டாலின், வீரமணி, சுப.வீ, கமல், திருமா போன்றோர் கோயிலுக்குள் அனுமதிக்கப் படுகிறார்கள். ஆனால், அப்துல் கலாம், யேசுதாஸ், மனோ, சாலமன் பாப்பையா, அரிஃப் முகமது கான் (கேரள ஆளுனர்) போன்றோர் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இது என்ன நியாயம்? இந்த விதிமுறை தவறு என்கிறார் தம்பி Sreenivasan Ravichandran. பரதநாட்டிய கலைஞரும் திமுக குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவருமான ஜாகிர் உசேன் ஸ்ரீரங்கம் கோயிலில் அத்துமீறி நுழைய முயன்று தடுக்கப்பட்ட சர்ச்சையின் பின்னணியில் இவ்வாறு கூறுகிறார். இந்த விதிமுறை அர்த்தமற்றது, அதை மாற்றவேண்டும்; கோயிலுக்குள் வரவேண்டும் என்றால் அதிகாரபூர்வமாக தாய்மதம் திரும்பி, இந்துவாகி வாருங்கள் என்று சொல்வது அராஜகமானது என்கிறார். அந்த விதிமுறை சரியானதே. குறிப்பாக தமிழக சூழலில் அதை எவ்வகையிலும் மாற்றக்கூடாது என்பதே என் கருத்து.

முதலாவது – அவர் குறிப்பிட்ட இரண்டாம் பட்டியலில் உள்ள இந்துமதத்தின் மீது நல்லெண்ணமும், இந்து தெய்வங்களின் மீது பக்தியும் கொண்ட இஸ்லாமிய, கிறிஸ்தவ நபர்கள் யாரும் எந்தக் கோயிலிலும் என்னை உள்ளே விடு என்று அடாவடி செய்யவில்லை. எந்தெந்த கோயிலிலும் மடங்களிலும் அவர்களுக்கு அனுமதி கிடைத்ததோ அங்கு சென்றார்கள். யேசுதாஸ் பலமுறை சபரிமலையில் தரிசித்தார். குருவாயூரில் உள்ளே விடமாட்டோம் என்றதும் கொஞ்சம் புலம்பினார். பின்பு தனது அன்றாட, குடும்ப செயல்பாடுகளில் பூஜை, ஆராதனை என்று இந்துமத வழக்கங்களை சகஜமாக செய்து வருகிறார். அப்துல் கலாம் திருப்பதியில் இதற்கென்று உருவாக்கியுள்ள பதிவேட்டில் சுவாமி மீது நம்பிக்கை உள்ளது என்று கையெழுத்திட்டுச் சென்றார். சுவாமி நாராயண் மரபைச் சேர்ந்த பிரமுக் சுவாமி மகராஜிடம் சிஷ்ய பாவத்துடன் அமர்ந்து கற்று, அவருடன் இணைந்து ஒரு புத்தகத்தையும் எழுதினார். ஜனாதிபதி பதவி என்ற பெரிய பதவி இருந்தபோதும் எங்கும் அதைப் பயன்படுத்தி உள்ளே நுழைய முயலவில்லை. இதையெல்லாம் கவனிக்க வேண்டும்.

இரண்டாவது – அவர் கொடுத்துள்ள முதல் பட்டியலில் உள்ள நபர்கள் கடவுள் மறுப்பாளர்கள். இந்து வெறுப்பு, இந்து விரோத அரசியல் செய்பவர்கள் என்பது சரிதான். ஆனால், அவர்கள் அதிகாரபூர்வமாக இந்துக்களாகவே நீடிக்கிறார்கள். மதத்தை மாற்றிக்கொள்ளவில்லை. இது மிக மிக முக்கியமானது. எவ்வளவு தான் நாத்திகமும் விரோதமும் பேசினாலும் அந்த இழை அறுபடாதவரை, அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் சந்ததியினருக்கும் மீட்சி உண்டு. அதற்கான திறப்புகளும், வெளியும் அவர்களுக்குக் கிடைக்கவும் வேண்டும். ஒரு 30 வருடம் முன்பு தீவிர தி.க, கம்யூனிஸ்டு ஆக இருந்தவர்கள் இப்போது பக்தி, ஆன்மீகம், இந்துப் பண்பாடு என்று திரும்பி வந்து விட்டார்கள். இப்படி நிகழ்ந்துள்ள பற்பல குடும்பங்களையும் தனிநபர்களையும் நாம் உதாரணம் காட்ட முடியும். இதற்கான ஒரே காரணம் – என்னதான் இந்து வெறுப்பரசியல் செய்தாலும் மதம் மட்டும் மாறிவிடாமல் இந்து என்று நீடித்தது தான். மதம் மட்டும் மாறியிருந்தால் அவர்கள் சர்ச், மிஷன், மௌல்வி, ஜமாத் என்று அந்த அந்த மத அதிகார இடுக்குகளில் முற்றிலுமாக சிறைப்பட்டிருப்பார்கள். அது திரும்பி வருவதற்கு மிகமிகக் கடினமான, அனேகமாக சாத்தியமே இல்லாத படுகுழியாக ஆகிவிட்டிருக்கும். மீளாச்சுழல் என்று நண்பர் Java Kumar குறிப்பிடுவார். அப்படியும் சில குடும்பங்களை, தனி நபர்களை நாம் உதாரணம் காட்ட முடியும். நமது சூழலில் அரசியல் சித்தாந்தம் என்பது இன்று வரும், நாளை போகும், ஆனால் மதத்தின் பிடி அப்படியல்ல, மிகவும் இறுக்கமானது. இந்த வித்யாசத்தை உணரவேண்டும்.

மூன்றாவது – இந்தக் குறிப்பிட்ட நபரான ஜாகிர் உசேன் சும்மா ஏதோ ஒரு முறை கோயிலுக்கு வந்து பார்த்துவிட்டுப் போகிறேன் என்று சொல்லக் கூடியவராக இல்லை. இவருக்கு இந்துக்கலையான பரதநாட்டியம் வேண்டும், இந்துக்கோயில்களில் அனுமதி, மரியாதை, கௌரவம் எல்லாம் வேண்டும். அங்கு இவர் சொற்பொழிவு செய்து அதை இந்துக்கள் கேட்கவேண்டும். ஆனால் அதிகாரபூர்வமாக இந்துவாக மாறத் தயாராக இல்லை, “முஸ்லிம்” என்றே இருப்பேன் என்று கூறினால், அதில் ஏதாவது சாரம் இருக்கிறதா? “இஸ்லாமிய” நெறிமுறைகள், கடமைகள் எதையாவது இவர் கடைப்பிடிக்கிறாரா? நமாஸ் படிக்கிறாரா, தாடி குல்லா உண்டா, மெக்கா போகிறாரா, காஃபிர்களைக் கொன்று, அவர்களது கோயில்களை இடித்து ஜிகாத் செய்கிறாரா? மாறாக இஸ்லாமில் முற்றாக தடைசெய்யப்பட்ட சிலை வழிபாடு, காஃபிர்களின் “பொய்” கடவுள்களை கும்பிடுவது, நாட்டியம், சங்கீதம் இதையெல்லாம் தானே செய்துகொண்டிடுக்கிறார்? பிறகு எந்த *&$%க்கு இவர் தன்னை முஸ்லிம் என்று கூறிக்கொள்கிறார்? முக்கியமாக, முஸ்லிம் என்று கூறிக்கொணடு இப்படிப்பட்ட விஷயங்களை செய்பவர்களை இஸ்லாமிய மௌல்விகளும் அமைப்புகளும் வெளிப்படையாக மிரட்டுவார்கள், தாக்குவார்கள், ஃபத்வா கொடுப்பார்கள். கோவையில் தீவிர பெரியாரியரான ஃபாரூக் என்பவரை “இஸ்லாமுக்கு எதிராக செயல்பட்டதால்” முஸ்லிம் அமைப்புகள் படுகொலை செய்தது நினைவிருக்கலாம். இந்த நபர் விஷயத்தில் அந்த அமைப்புகள் எந்த எதிர்ப்பும் செய்யாமல் சும்மா இருப்பது ஏன்? இதுவும் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

நான்காவது – கோயிலில் “காலடி எடுத்து வைப்பதற்கு” கூட இந்துவாக மாற வேண்டுமா? என்று கேட்கிறீர்கள். உண்மையில் அது அல்ல பிரசினை. நடைமுறையில், ஊருக்கு ஊர் கோயில் இருக்கும் தமிழ்நாடு போன்ற இடத்தில் தொடர்ந்து பிற மதத்தவர்கள் இந்துக்கோயில்களுக்குள் வருவது நடந்துகொண்டே தான் இருக்கிறது. சிலர் வேடிக்கை பார்க்கவும், சிலர் சாமி கும்பிடவும், சிலர் ஜோசியம் கேட்கவும் எல்லாம் வந்துகொண்டே தான் இருக்கிறார்கள். வன்முறை சம்பவம், அசம்பாவிதம் நடக்காதவரை அதைத் தடுக்கவேண்டும் என்று யாருக்கும் தோன்றுவது கூட இல்லை. மற்றபடி இவர் பிரபலம் என்பதாலும் இது சர்ச்சையாகி இருப்பதாலும், இவர் தனது நிலைப்பாட்டை மிகவும் தவறான முறையில் நியாயப் படுத்துவதாலும் இந்த விஷயத்தைப் பேச வேண்டியிருக்கிறது. இது ஒரு மனிதனுடைய அடிப்படை நேர்மை, அவனது சுய தேர்வு, மத அடையாளம், சமூக அங்கீகாரம் ஆகியவை குறித்த பிரசினை. இந்தக் கேள்வியே “இந்துமதம் எப்போதும் (போல) பலவீனமான நிலையிலேயே இருக்க வேண்டும், ஆபிரகாமிய மதங்கள் அதன்மீது ஜாலியாக ஏறி மிதித்துக் கொண்டே இருக்கவேண்டும்” என்பது போன்ற மனநிலையில் இருந்து வருகிறது.

  • ஜடாயு, பெங்களூர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe