
வாட்ஸ் அப்-பில் ஃபைல் ஷேரிங் செய்வதோடு மட்டுமல்லாமல் பணப் பரிமாற்றம் செய்து கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு வெகு நாட்கள் ஆகிறது.
இருப்பினும், திரளான பயனாளர்களை இதுவரையிலும் சென்றடையவில்லை. குறிப்பாக, பேடிஎம், கூகுள் பே மற்றும் ஃபோன் பே போன்ற பேமெண்ட் ஆப்-களை பயன்படுத்தும் அளவுக்கு, வாடிக்கையாளர்கள் வாட்ஸ் அப் பேமெண்ட் சேவைக்கு வரவில்லை.
இத்தகைய சூழலில், இந்தியாவில் 100 மில்லியன் பயனாளர்களை இணைத்துக் கொள்ள வாட்ஸ் அப் நிறுவனம் அனுமதி பெற்றுள்ளது. இதனால், நாட்டில் ஏற்கனவே உள்ள யூபிஐ சேவை நிறுவனங்களுக்கு மிகுந்த சவால் எழுந்துள்ளது.
இந்தியாவில் வாட்ஸ் அப் பேமெண்ட் சேவையை நோக்கி வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் எண்ணற்ற சலுகைகளை வழங்குவதற்கு அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் ஒரு சில வாரங்களில் இந்தச் சலுகைகள் அறிமுகம் செய்யப்படலாம் எனத் தெரிகிறது.
வாட்ஸ் அப் பேமெண்ட் சேவையில் தனிநபர்களுக்கு இடையே நடைபெறும் பரிவர்த்தனைகளுக்கு சலுகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோன்று, வியாபார ரீதியாக மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கும் சலுகை வழங்கப்படும் என தெரிகிறது.
வாடிக்கையாளர்கள் வாட்ஸ் அப் சேவையை பயன்படுத்தி பரிவர்த்தனை செய்யும்போது அவர்களுக்கு ரூ.33 வரையில் கேஷ்பேக் வழங்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் பல கோடிக்கணக்கான பயனாளர்கள் வாட்ஸ் அப் பயன்படுத்தி வருகின்றனர். பெரும்பாலான நிறுவனங்கள் யூபிஐ சேவையில் நுழையும்போதே வாடிக்கையாளர்களுக்கு கேஷ்பேக் கொடுத்து தான் அதிக மக்களை கவருகின்றனர்.
பயனாளர்கள் மேற்கொள்ளும் பரிவர்த்தனை என்பது ரூ.1 என்ற மதிப்பை மட்டுமே கொண்டிருந்தாலும் கூட, அவர்களுக்கான கேஷ்பேக் சலுகையை வழங்க வாட்ஸ் அப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், இந்தப் பரிவர்த்தனை நேர்மையானதாக இருக்க வேண்டும் என்பதை வாட்ஸ் அப் உறுதி செய்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஏனென்றால் சில ஆண்டுகளுக்கு முன்பாக கூகுள் பே பயன்பாட்டிற்கு வந்தபோதும் இதேபோல கேஷ்ப்பேக் வழங்கப்பட்டது.
அந்த சமயத்தில் பயனாளர்கள் பலர் கேஷ்பேக் பெறுவதற்காக தங்களுக்கு தெரிந்த நண்பர்கள், உறவினர்களுக்கு ரூ.1 அனுப்பி, கேஷ்பேக் தொகையை பெற்றுக் கொண்டனர்.
யூபிஐ பேமெண்ட் சேவைகளில் ஏற்கனவே கோலோச்சி வரும் கூகுள் பே, ஃபோன்பே, பேடிஎம் போன்ற சேவைகளுக்கு கடும் போட்டியை ஏற்படுத்துவதாக வாட்ஸ் அப் அமையும் என்று கருதப்படுகிறது.
முன்னதாக, குறிப்பிட்ட சில பயனாளர்களுக்கு ரூ.100 கேஷ்பேக் வழங்கும் சலுகையுடன் வாட்ஸ் அப் பேமெண்ட் வசதி அறிமுகம் செய்யப்பட்டது.
வாட்ஸ்அப் பே பயனர்கள் போர்ட்டல் வழியாக பணம் அனுப்பினால் அல்லது பெற்றால், பயனர்களுக்கு மூன்று முறை வரை ரூ.11 வழங்கும். குறைந்தபட்ச பரிவர்த்தனை தொகை தேவையில்லை. ஆனால் பல வெகுமதிகளுக்கு பயனர்கள் குறைந்தது மூன்று வெவ்வேறு பயனர்களுடன் பரிவர்த்தனை செய்ய வேண்டும்.
கேஷ்பேக் பெறுவதற்கான நிபந்தனைகளை வாட்ஸ்அப் பட்டியலிட்டுள்ளது. தகுதியான பெறுநருக்கு பணம் அனுப்பும்போது, பயன்பாட்டில் உள்ள விளம்பர பேனரையோ அல்லது பரிசு ஐகானையோ பயனர்கள் பார்க்க வேண்டும்.
அவர்கள் குறைந்தது 30 நாட்களுக்கு வாட்ஸ்அப் பயனராக இருந்திருக்க வேண்டும். வாட்ஸ்அப் பிசினஸ் இந்த விளம்பரத்திற்கு தகுதியற்றது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாட்ஸ்அப் பே கேஷ்பேக் பெறுவது எப்படி?
படி 1: வாட்ஸ்அப் பே- ஐ அமைக்கவும்
வாட்ஸ்அப் பேவை அமைக்க, பயனர்கள் தங்கள் செயலியை சமீபத்திய பதிப்பிற்கு புதுப்பித்து, தனிப்பட்ட சாட்டிற்கு செல்லலாம் மற்றும் இணைப்பு ஐகானுக்கு அடுத்ததாக கீழே தோன்றும் ரூபாய் சின்னத்தை கிளிக் செய்யலாம். இது பயனர்களை வாட்ஸ்அப் பே பக்கத்திற்கு கொண்டு செல்லும்.
பயனர்கள் அடுத்த பக்கத்தில் ‘ஏற்றுக்கொள் மற்றும் தொடரவும்’ (Accept and continue) என்பதை அழுத்தி, தாங்கள் இணைக்க விரும்பும் வங்கிக் கணக்கைத் தேர்ந்தெடுக்க தொடரலாம்.
இந்த வங்கிக் கணக்கிற்கான பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் உங்கள் வாட்ஸ்அப் எண்ணாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.
படி 2: வாட்ஸ்அப் பே இல் ஒருவருக்கு பணம் அனுப்ப, அவர்களும் வாட்ஸ்அப்பில் இருக்க வேண்டும். உங்கள் வாட்ஸ்அப் பே அமைக்கப்பட்டதும், எந்தவொரு தொடர்பின் சாட்டிற்கும் சென்றால், அவர்களை பிளாட்ஃபார்மைப் பயன்படுத்த அழைக்க முடியும். தளத்தைப் பயன்படுத்த உங்கள் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் அல்லது பிற தொடர்புகளை அழைக்கவும்.
படி 3: கேஷ்பேக் தகுதியைச் சரிபார்த்து மூன்று பரிவர்த்தனைகளைச் செய்யவும்
நீங்கள் தகுதியுடையவராக இருந்தால், நீங்கள் கேஷ்பேக்குகளுக்குத் தகுதியானவர் என்று குறிப்பிடும் பேனரைக் காண்பீர்கள். இல்லையெனில், பயனர்களுடன் பரிவர்த்தனை செய்தாலும் உங்களுக்கு ரூ.11 கிடைக்காது.