
அண்மையில் ப்ளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேஷன் என்ற நிறுவனம் வெளியிட்ட ‘மோடியும் அம்பேத்கரும்’ என்ற புத்தகத்தில் இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை ஒன்றை எழுதியிருந்தார்.
அதில், பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும், சமூக நீதி விஷயத்தில் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார் என்றும், அம்பேத்கரும், மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள், என பிரதமர் மோடியை அவர் புகழ்ந்து எழுதியிருந்தார்.
அவரது இந்தப் பேச்சுக்கு எதிராகவும், ஆதரவாகவும் பல்வேறு கருத்துக்கள் வெளியாகின. இருப்பினும், தனது சொந்தக் கருத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று இளையராஜா திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். இது திராவிட இயக்கங்கள் மற்றும் கட்சிகள் இடையே கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து, இயக்குநர்கள் கே.பாக்யராஜ், பேரரசு உள்ளிட்ட பலரும் பிரதமர் மோடிக்கு ஆதரவாகவே அடுத்தடுத்து கருத்துக்களை கூறினர். பாஜகவை தமிழகத்திற்குள் நுழைய விடக்கூடாது என்று திராவிடக் கட்சிகள் கங்கனம் கட்டி வரும் நிலையில், தமிழ் திரையுலக பிரபலங்களின் இந்தப் பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக ஆளும் திமுக எந்தவிதமான கருத்தையோ, கண்டனத்தையோ பதிவு செய்யவில்லை.
இப்படியிருக்கையில், பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு இசையமைப்பாளர் இளையராஜா பேசியதில் எந்த தவறுமில்லை என்று நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநர் மற்றும் நடிகருமான எஸ்.ஏ. சந்திரசேகர் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரபல ஆன்லைன் செய்தி சேனலுக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியிருப்பதாவது :- எனக்கு தெரிந்ததைத்தான் பேசுவேன். தெரியாததை தெரிந்தது போல நடிக்கத் தெரியாது. அம்பேத்கர் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர். அதேபோல, திரையுலகம் பற்றி பேசவில்லை. மோடியை பற்றி கேட்டால், அவரும் மக்களும், நாடும் முன்னேற வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுகிறார்.
இன்னும் 10 அல்லது 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்பதை நல்ல எண்ணத்தில் செயல்படக் கூடியவர் பிரதமர் மோடி. தனிப்பட்ட முறையில், அம்பேத்கரையும், பிரதமர் மோடியையும் ஒப்பிடுவதில் எந்த தவறுமில்லை, என்றார்.
விஜய் உடன் இருப்பவர்களுக்கு அரசியல் தெரியவில்லை. சரியான அஸ்திவாரம் இல்லாததே கமல், சிரஞ்சீவி போன்ற நடிகர்களின் அரசியல் தோல்விக்கு முக்கிய காரணம்.
அதுபோன்ற, ஒரு அஸ்திவாரத்தை தான், விஜய்க்கு நான் போட நினைத்தேன். என்றார்.
அம்பேத்கருடன் மோடியை ஒப்பிடுவதில் எந்த தவறும் இல்லை.
— Krishna Kumar Murugan (@ikkmurugan) April 29, 2022
தொலைநோக்கு பார்வையுடன் நாட்டு மக்களின் நலனுக்காக மோடி உழைக்கிறார். pic.twitter.com/0bGAtLSNDl